கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்/எல்லீசர்

விக்கிமூலம் இலிருந்து

4. எல்லீசர்

ஆங்கில நாட்டிலே தோன்றினார் எல்லீசர் என்னும் நல்லறிஞர் ; இந்திய துரைத்தனத்திற்குரிய கலைகளைக் கற்றுத் தேறினார். அவர் சிறந்த மதிநலம் வாய்ந்தவர் : எப்பொருளையும் ஆராய்ந்து மெய்ப்பொருள் காணும் மேதை.

அரசியலாளர் அவரைச் சென்னை [1]நிலவரி மன்றத்தின் செயலாளராக முதலில் நியமித்தனர்; எட்டாண்டுகள் அவர் அம்மன்றத்தில் சிறந்த பணி புரிந்தார் ; அக்காலத்தில் தென்னாட்டுக் [2]காணியாட்சி முறைகளைக் கருத்தூன்றிக் கற்றார்; காணியாளருடைய கடமையையும் உரிமையையும் தெள்ளத் தெளியச் சென்னை அரசியலாளருக்கு உணர்த்தினார். மிராசு முறையைக் குறித்து அவர் எழுதிய நூல் இன்றும் ஆதாரமாகக் கொள்ளப்படுகின்றது.

பின்னர், பத்தாண்டுகள் எல்லீசர் சென்னைக் கலெக்டராக இருந்தார் ; அப்போது இந்திய நாட்டு மொழிகளைக் கற்றுணர ஆசைப்பட்டார் ; நல்லாசிரியர்களின் உதவி பெற்று வடமொழியும் தென்மொழியும் வருந்திக் கற்றார். தென்னாட்டில் வழங்கும் மொழிகளுள் தமிழ் மொழியின் செம்மையும் தொன்மையும் அவர் உள்ளத்தைக் கவர்ந்தன ; சென்னையில் சிறந்த தமிழ்ப் புலவர்களாக விளங்கிய சாமிநாத பிள்ளை, இராமச்சந்திரன் கவிராயர் முதலியோருடன் ஏட்டுச் சுவடிகளில் அமைந்த தமிழ் நூல்களை நாள் தோறும் மெய்வருத்தம் பாராது கற்றார். பழந்தமிழின் பண்புகளைப் பளிங்குபோற் காட்டும் திருக்குறளை மேலே நாட்டாரும் அறிந்து பயனுற வேண்டும் என்பது அவரது பேராசை. அந்நோக்கத்தைக் கொண்டு திருக்குறளுக்கு ஆங்கிலத்தில் விளக்கமான விரிவுரை யொன்று எழுதத் தொடங்கினார். ஆனால் அப்பணி முற்றுப்பெறாது போயிற்று. அடியும் முடியுமின்றி அது அரைகுறையாக அச்சிடப்பட்டிருக்கின்றது. அந்நூல். ஒன்றே எல்லீசரது தமிழ்ப் புலமைக்கு அழியாத நினைவுச் சின்னமாக நிலவுகின்றது.

அந்நூலில் திருக்குறட் பாக்களின் ஆங்கில் மொழி பெயர்ப்பை முன்னே தருகின்றார் எல்லீசர். பரிமேலழகர் உரையைப் பின்பற்றிய விளக்கவுரை பின்னே வருகின்றது. அதைத் தொடர்ந்து சங்கத் தமிழ் இலக்கியங்களிலிருந்தும், பிற்காலத் தமிழ் நூல்களிலிருந்தும் பொருத்தமான மேற்கோள்கள் ஆங்கில மொழிபெயர்ப்புடன் காட்டப்படுகின்றன. இறுதியாக இலக்கணக்குறிப்பு எழுதப்பட்டுள்ளது. தொல்காப்பியம், நன்னூல், தொன்னூல் முதலிய இலக்கணங்கள் நன்கு எடுத்தாளப்படுகின்றன. -

எல்லீசரது புலமைத் திறத்தையும், நடுவு நிலைமையையும் அறிந்து கொள்வதற்கு ஒரு சான்று போதியதாகும்.

"அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

என்னும் குறளில் உள்ள அறவாழி, பிறவாழி பதங்களை விளக்குகின்றார் எல்லீசர். பரிமேலழகர் அறவாழி என்பதற்கு அறக்கடல் பொருள் உரைத்து, "பலவேறு வகைப்பட்ட அறங்கள் எல்லாவற்றையும் தனக்கு வடிவாக உடையனாகலின் அறவாழி அந்தணன் என்பது கடவுளைக் குறிப்பதாயிற்று“ என விளக்ககம் கூறியுள்ளார். இக்கருத்தை எல்லீசர் ஏற்றுக் கொண்டார்; ஆயினும் சமண சமயத்தார் கூறும் உரையையும் விரிவாகத் தருகின்றார். அறவாழி என்னும் பதத்திற்குத் தரும சக்கரம் பொருள் கூறுவர் சமணப்புலவர்கள். பழைய நிகண்டுகளில் அறவாழி அந்தணன்? என்னும் பெயர் அருக தேவனுக்கே உரியதாக ஆளப்பட்டிருத்தலை எடுத்துக் காட்டி எல்லீசர் ஆராய்ச்சிக்கு ஒரு தூண்டுகோல் அளிக்கின்றார்.[3]

இனிப் பிறவாழி என்னும் சொல்லுக்குப் பொருட் கடலும் இன்பக் கடலும் என்று உரை கூறினார் பரிமேலழகர். அக் கருத்தை ஆதரித்து ஆங்கிலத்தில் சில அறிஞர் மொழி பெயர்த்துள்ளார்கள்.[4] இன்னும், பிறவாழி என்பதனப் பிறவு ஆழி எனப் பிரித்துப் பிறப்பாகிய கடல் என்று பொருள் கொள்வாரும் உளர். எல்லீசர் வேறு ஒரு பொருள் கூறுகின்றார், அறமே உருவாய இறைவனை அறவாழி என்றமையால், அறத்தின் மாறுபட்ட பாவக்கடல் 'பிறவாழி' என்னும் பதத்தால் குறிக்கப்பட்டது என்பது அவர் கருத்து[5]. இவ்வாறு சில குறட்பாக்களுக்குப் புதியவுரை கண்டுள்ளார் எல்லீசர்.

தென்னாட்டு மொழிகளில் துரைத்தனத்தார்க்கு முறையாகப் பயிற்சியளிக்கும் வண்ணம் சென்னை அரசாங்கத்தார் கல்விச் சங்கம் ஒன்று நிறுவினர்.[6] அச் சங்கத்தை அமைப்பதற்குப் பெருமுயற்சி செய்தவர் எல்லீசரேயாவர். அதனை நேரில் அறிந்த தமிழறிஞர் ஒருவர் அவர் பெருமையை மனமாரப் புகழ்ந்துள்ளார். கொழு கொம்பில்லாது அலைகொடி போலும், கொழுநன் இல்லாக் குலக்கொடி போலும், ஆதாரமின்றித் தேய்ந்து கிடந்த ஆரியம், தெலுங்கு, மலையாளம் முதலிய இத்தேச மொழிகளில் தேர்ந்து, தமிழ் இலக்கண இலக்கியத்தை ஒருங்குணர்ந்து, சென்னையில் கல்விச் சங்கம் நாட்டுதறகு வேண்டும் முயற்சி செய்தமைத்து, அப்பல்கலைச் சங்த்தைப் பாண்டியனைப் போலும் பாதுகாத்தார். எல்லிசு துரை என்பது அவர் அளித்த பாராட்டுரை.

அக் கல்விச் சங்கத்தின் மானேசராக இருந்த முத்துசாமிப் பிள்ளை என்பவர் சிறந்த தமிழ் அறிஞராகவும் விளங்கினார். ஏசு மதத்தின் சார்பாகத் தத்துவ போதகர், வீரமாமுனிவர், சாங்கோ பாங்கர் முதலிய துறவோர் எழுதிய நூல்களை அவர் நன்கு கற்று, அவற்றில் அமைந்த கருத்து நுட்பங்களையும் கட்டுரை நயங்களையும் யாவரும் கேட்டு வியக்கும்வண்ணம் சொற்பொழிவு செய்து வந்தார். புதுச்சேரி அன்பர் ஒருவரால் சுருக்கமாக எழுதப்பட்டிருந்த குறிப்புகளை ஆதரவாகக் கொண்டு, முதன் முதல் வீரமாமுனிவரது சரித்திரத்தை விளக்கமாக எழுதி வெளியிட்டவர் அவரே. அப்பணியில் அவரை உய்த்து ஊக்குவித்தவர் எல்லீசர். வீரமாமுனிவர் தொண்டு செய்த இடந் தொறும் சென்று அவர் இயற்றிய நூல்களைச் சேகரிக்கும் பணியை எல்லீசர் அவரிடம் ஒப்புவித்து, அதற்கு வேண்டிய பொருளும் தாராளமாக உதவினார். இங்ஙணம் முத்துசாமிப் பிள்ளை சேகரித்த நூல்களுள் சிறந்தது தேம்பாவணிக் காவியம்.

வீரமாமுனிவர் தாமே எழுதிய தேம்பாவணிக் கையெழுத்துச் சுவடி ஆவூர் என்ற சிற்றூரில் அகப்பட்டது. அந்நூலைக் கண்டு அகமகிழ்ந்தார் முத்துசாமிப் பிள்ளை: அச்சுவடிக்குரியவராகிய நாயக்கரை எல்லீசரிடம் அழைத்துச் சென்றார். அவர் அதனை மிக்க ஆசையோடு ஏற்றுத் தக்கவிலை கொடுத்துப் பெற்றுக் கொண்டார். அருந்தமிழ்ச் சுவடிகளைச் சேகரிப்பதிலும், பாதுகாப்பதிலும் எல்லீசர் சிறந்த ஆர்வமுடையவராயிருந்தார் என்பதற்கு இது ஒன்றே போதிய சான்றாகும்.

எல்லீசர் தமிழ்ச் செய்யுளும் இயற்றியதாகத் தெரிகின்றது. அவற்றுள் நமக்குக் கிடைத்திருப்பது நமசிவாயப் பாட்டேயாகும். நமசிவாயத்தைப் பற்றி ஐந்து பாட்டுப் பாடியுள்ளார் எல்லீசர்.

"சர்வ வல்லமையுள்ள தெய்வமே! பேரானந்த வடிவாய பெருமானே! பரந்த உலகமெல்லாம் பற்றியாளும் பரமனே ! இம்மண்ணுலகத்தையாளும் சிற்றரசர்கள் தம் குடிகளைக் கண்டித்தும் தண்டித்தும் வரிப்பணம் வாங்குவர். ஆனல் அரசர்க்கெல்லாம் அரசனாய் விளங்கும் நீயோ ஒன்றையும் திறையாகப் பெறுதல் இல்லை. ஆதலால் வாக்காலே திறையளக்கும் வழக்கத்தை விட்டு, என் உள்ளத்தில் ஊறி எழுகின்ற அன்பினையே உனது திருவடியிற் காணிக்கையாகச் சொரிகின்றேன்“ என்ற கருத்தை யமைத்து எல்லீசர் பாடினார்.[7]

"நமசிவாய என்னும் ஐந்தெழுத்து சைவ சமயத்தார் போற்றும் தாரகமந்திரம் ஆயிற்றே! அதனை எவ்வாறு கிருஸ்தவராகிய எல்லீசர் எடுத்தாளலாம்“ என்ற கேள்வி எழுந்தது. அதற்கு விடை கூறும் வாயிலாக முத்துசாமிப் பிள்ளை நமசிவாயப் பாட்டுக்கு விருத்தியுரை யொன்று இயற்றிய எல்லீசர் கருத்தை விளக்கிக் காட்டினார் என்பர். "என்றென்றும் நிற்கும் ஏக கடவுட்கு நன்றென்று இதோ புரிந்தேன் நமஸ்காரம்“ என்பதே நமசிவாய என்ற சொல்லின் பொருள் என்பது முத்துசாமியார் கொள்கை. சிவம் என்ற சொல்லுக்கு நன்மை என்னும் பொருள் உண்டு. அது பற்றியே "நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே“ என்ற திருவாக்கு எழுந்தது. அருக தேவனைச் 'சிவகதி நாயகன்' என்று சிலப்பதிகாரம் குறிக்கின்றது. நற்கதியளிக்கும் நாயகனையே சிவகதிநாயகன் என்றார் இளங்கோவடிகள். எனவே, எந்நலமும் தரும் இறைவனேயே சிவ நாமத்தால் எல்லீசரும் குறித்தார் என்பது இனிது விளங்குவதாகும்.

தமிழ் மொழியின் செம்மையையும் தொன்மையையும் குறித்துப் பல ஆராய்ச்சிக் குறிப்புகள் எழுதி வைத்திருந்தார் எல்லீசர். ஆயினும் அவற்றை முறையாக வகுத்தும் தொகுத்தும் நூல் வடிவத்தில் எழுதுமுன்னமே முத்தமிழ் வளர்த்த மதுரைமா நகரைக் கண்ணாக் கண்டுவர விரும்பினர் ; அரசியலாரிடம் விடுமுறை பெற்று மதுரைக்குச் சென்றார். அங்கு கலெக்டராயிருந்த பெற்றி என்பவர் மனையில் விருந்தினராக அமர்ந்து, மதுரை மாநகரைப் பன் முறை சுற்றிப் பார்த்தார். "பாண்டி மன்னர் அரசு வீற்றிருந்து அருந் தமிழை ஆதரித்த நகரம் இதுவன்றோ ? கலை பயில்தெளிவும், கட்டுரை வன்மையும் வாய்ந்த புலவர் பல்லாயிரவர் சங்கத்தின் வாயிலாகத் தமிழ் வளர்த்த தலைநகரம் இதுவன்றோ ?

"புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி
வையை என்ற பொய்யாக் குலக்கொடி“

என்று இளங்கோவடிகள் பாடிய ஆற்றின் கரையில் அமைந்த அழகிய நகரம் இது வன்றோ ? என்று எண்ணி எண்ணி விம்மிதமுற்றார் ; கடைச் சங்கப் புலவர்களில் தலைசிறந்து விளங்கிய நக்கீரரைத் தனிக் கோயிலில் அமைத்து வழிபடும் மதுரைத் தமிழரது ஆர்வத்தைப் போற்றினார்.

இங்ஙணம் மதுரையம்பதியைக் கண்டு புதியதோர் ஊக்கமுற்ற எல்லீசர் ஒருநாள் இராமநாதபுரம் என்னும் மூதூரைக் காணச் சென்றார். அங்கு தாயுமானவர் சமாதி அடைந்த இடத்தைக் கண்டு நெஞ்சுருகி நின்றார். "இன்றைக்கிருந்தாரை நாளைக்கிருப்பர் என்றெண்ணவோ திடமில்லையே“ என்ற பாட்டை உருக்கமாகப் பாடினார். பின்பு அவ்வூரில் காணத்தக்க இடங்களை எல்லாம் கண்டு, நண் பகலில் தம் இருப்பிடம் போந்து உணவருந்தினார். சிறிது நேரத்தில் அவ்வுணவிலே கலந்திருந்த நஞ்சு அவர் குடலை அறுப்பதாயிற்று. மாற்றுக் கொடுக்கவல்ல மருத்துவர் யாவரும் அவ்வூரில் அகப்படவில்லை. எல்லீசர் துயருற்றுத் துடித்து உயிர் துறந்தார்.

சென்னையிலும் மதுரையிலும் இருந்த அவர் உடைமைகளை அரசாங்கத்தார் நியமித்த அதிகாரி ஒருவர் ஏலமிட்டார். பெற்றியின் பங்களாவில் எல்லீசரின் ஆராய்ச்சிக் குறிப்பமைந்த பொதிகள் ஓர் அறையில் குவிந்திருந்தன. அத்தமிழ்ப் பொதிகளை அதிகாரி ஏலம் கூறினார். பாண்டியர் தமிழ் வளர்த்த பழம்பதியில் அவற்றைத் தீண்டுவார் யாருமில்லை. பெற்றியின் பங்களாவில் அடுப்பாரும் எடுப்பாரு மின்றி அவலமாய்க் கிடந்த ஆராய்ச்சித் தாள்களை அவர் சேவகர் பலநாள் அடுப்பெரித்து இடத்தைக் காலி செய்தாராம். [8]"யாரறிவார் தமிழ் அருமை. “.........................................." மதுரை முதூர் நீர் அறியும் நெருப்பறியும்“ என்று பாடிய புலவர் வாக்குப் பலித்ததே !


குறிப்புகள்

  1. நிலவரி மன்றம்—Board of Revenue.
  2. காணியாட்சி–Land Tenure.
  3. The title அறவாழி அந்தணன் though assigned by R. C. J. Beschi in the orgsgårrá to the Supreme Being, is in all other Tamil Dictionaries given to
    அருகன்—Ellis.
  4. The Stormy seas of wealth and Sense-delights cannot be traversed except by those who cling to the feet of the Sage who is the Ocean of Righteousness,
    —V. V. S. Iyer
  5. அறவாழி the sea of virtue occuring at the beginning of the couplet as an epithet of the Deity. பிறவாழி the other sea signifies consequently that which different from virtue, that is, the sea of vice: thiru- valluvar uses this term பிற to designate of some quality or thing previously mennoned
    Ellis—p.14
  6. In 1812 Government created the Boards for the College of Fort St. George. The Colleg besides training the Civil servants in the vernaculars of the Province supervised the instruction of mmshisa and of persons who were to be appointed as law officers and pleaders in the Provincial Courts. This College had a very useful career.
    History of Madras—P. 216.
  7. "சிற்றிறைவர் இவ்வுலகுள் சிறியோரின் சிறுபொருளில்
    வற்றிறையை வாங்குவரே வல்லமையும் மகிழ்ச்சியுள்ள
    பற்றிறைவன் நீதிறையை வாங்காயே ஆனதினால்
    சொற்றிறைவிட்டுட்டிறையைச் சொரிவேனே நமசிவாய“

    என்பது அப்பாடல்.

  8. “Arriving in India as a young civilian in 1796, he early devoted himself to the study of the languages, history and antiquities of the land in which his lot was cast. When his task was almost completed he undertook a journey to Madura, the Athens of the South, for the elucidation of some minor details and resided for sometime with Mr. Rous Petre, the Collector of the District. During a short excursion to Ramnad, he accidentally swallowed some poison and died on March 10, 1819. His ordinary tangible property was sold by auction at Madura and Madras under instructions from the Administrator-General, but all his papers were lost or destroyed. It used to be currently reported that they served Mr. Petre's cook for months to kindle his fire and singe fowls ”.
    — Indiam Antiquary Vo. IV. p. 220.