கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்/மதங்களும் வழிபாடுகளும்
கடவுள்கள் மனிதர்களைப் படைத்தார்களா அல்லது மனிதர்கள் கடவுள்களைப் படைத்தார்களா என்ற ஆராய்ச்சிக்கு நாம் போக வேண்டியதில்லை. இதில் இறங்கி விட்டு, குழம்பியவர்களும், மயங்கியவர்களுமே அதிகம். தெளிவடைந்தவர்களே இல்லை.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.
கடவுள்களுக்கும் மனிதர்களுக்கும் உணர்ச்சி மயமான உறவுகள் உண்டு. விட்டு விலகிப் போய் விட முடியாத சொந்தம் உண்டு. பந்தம் உண்டு. இரண்டுமே இரண்டறக் கலந்து போன இனமாக இருக்கிறது என்பதை யாரும் மறுக்கவே முடியாது.
கடவுள்களை மக்கள் மிகவும், மரியாதையோடு மட்டுமல்லாது, உயிராகப் பாவித்து வணங்குகின்றார்கள் என்பதை அறிந்து கொண்ட மன்னர்கள். பக்தி விஷயத்தில் தங்கள் இஷ்டம் போல் வணங்க வேண்டும் என்று மக்களைக் கட்டாயப்படுத்திய போதும், அவர்கள் அந்தக் கட்டளைக்கு மசிய வில்லை. தண்டனை என்ற சட்டம் போட்டும் அவர்கள் பணிய வில்லை என்பதற்கு எத்தனையோ சான்றுகள் உள்ளன.
கி.மு. 14ம் நூற்றாண்டில், எகிப்தை ஆண்ட மன்னர்களில் அதிகம் பிரசித்தம் வாய்ந்தவனாக விளங்கியவன் பரோவா அகேந்தேன் என்ற மன்னன். தன் ஆட்சிக்கு உட்பட்ட மக்கள், கண்ட கண்ட கடவுள்களை வணங்குவதைக் கண்டு கோபமடைந்த மன்னன், இந்த இழிந்த வழக்கத்தை விட்டு விடுங்கள். சூரிய கடவுளை மட்டும் வணங்குங்கள் என்று கட்டளையிட்டுப் பார்த்தான். வேலியிட்டு, வழக்கத்தைத் தடுத்துப் பார்த்தான். மன்னனின் வேண்டுகோளும், கடுமையான சட்டமும் மக்கள் மனதை மாற்ற முடியவில்லை, எகிப்து மக்களின் கடவுள்கள் நம்பிக்கை இப்படி இருந்திருக்கிறது.
நமது தமிழ் நாட்டில் மத மாற்றங்கள் செய்ய, உயிர்த் தியாகங்கள் செய்த கதைகள் நிறையவே இருக்கின்றன. திருநாவுக்கரசரை சுண்ணாம்புக் காள்வாயில் வைத்துக் கல்லோடு கட்டி கடலில் போட்டதும், கேட்பாரையும் கலங்க வைக்கும் கதையாகும், மதவெறி காரணமாக, கழுவேற்றப்பட்ட பக்தர்கள் கதையும் பதை பதைக்கச் செய்வனவாகும்.
சில சமயங்களில், மன்னனே, கடவுள் அவதாரம் என்று போற்றப்பட்டும், கோயில் எடுக்கப்பட்டும் கௌரவம் பெற்ற நிகழ்ச்சிகளும் சரித்திரங்களில் இருக்கத்தான் இருக்கின்றன.
நமது தமிழ் மரபில் இந்தக் கருத்து உண்மையாகக் காணலாம். மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம் என்ற பாடலைப் பாருங்கள். மன்னனை இறை என்று அழைத்ததும், மன்னன் வசிக்கும் இடத்தை கோயில் என்று அழைத்ததும், இந்தக் கருத்துக்கு ஏற்புடைத்தாக இருப்பதைப் பாருங்கள்.
கி.மு. 27ம் ஆண்டு முதல் கி.பி. 14-ம் ஆண்டு வரை, ரோம் சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்தவன் அகஸ்டஸ் என்ற மன்னன்.
இவனது ஆட்சி காலத்தில், இவன் செய்த பெரிய காரியம், ரோமானிய மதத்தை சீரமைத்துத் தந்ததுதான். இவன் மதத்தைக் காட்டி, மக்களைப் பயப்படும்படிச் செய்து தன் ஆட்சியை நிலை நாட்டிக் கொண்டான்.
இவனைக் கண்டு மக்கள் அஞ்சவும் செய்தார்கள். அன்பு காட்டவும் செய்தார்கள். மக்களுக்கு அமைதியான நல்வாழ்வு அளித்ததன் காரணமாக, நாடழிக்க வந்த பகைவர்களை வெற்றி கண்டு, மக்களையும் நாட்டையும் காத்ததன் காரணமாக, அகஸ்டஸ் கடவுளாகக் கொண்டாடப்பட்டான். பெரிய கோயில் ஒன்று அவனுக்காக கட்டப்பட்டது. அவன் உயிரோடு வாழ்ந்த காலத்திலேயே அவன் ஆண்டவன் ஆனான். அவனுக்காக கோயில். அவனுக்காக வழிபாடு. இப்படி மனிதன், மகேசனாக மாறிய கதையும் உண்டு.
சில நாடுகளில், மக்களின் மதவெறியை, மன்னர்கள் தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொண்டிருந்திருக்கின்றார்கள். கடவுள்களுக்கும் மக்களுக்கும் மத்தியில், மன்னர்களே இருந்து, மதங்களையும் வளர்த்து, தங்களையும் உயர்த்திக் காத்துக் கொண்டனர்.
மண்ணை ஆண்ட மன்னர்கள், மதங்களில் உள்ள வலிமை மிக்க வழிபாட்டுக்கும், பிரார்த்தனைக்கும் முக்கியத்துவம் தந்து, தங்களை தலைமை பூசாரிகளாகவும் ஆக்கி, பொறுப்பேற்றனர்.
வழிபாடுகளில் அவர்கள் வழக்கமாகப் பங்கு கொள்ள முடியாத காரணத்தால், அவர்களின் பிரதி நிதிகளாக உதவி பூசாரிகள் பலரை அரசர்கள் நியமித்தனர்.
இந்த தருணங்களைப் பயன்படுத்திக் கொண்டு, தங்களையும் கடவுளாகக் கும்பிட வேண்டும் என்று மக்களை வணங்க வைத்தனர். கோவில்களை கடவுள்களுக்காகக் கட்டுகிறபோது, தங்கள் பெயரால் தான் அவை கட்டப் படவேண்டும் என்று கட்டுப் பாட்டை விதித்தனர். சில கோவில்களில், தங்களது சிலைகளையும் மன்னர்கள் வைத்து, வணங்கச் செய்தனர்.
தஞ்சை நகரில் பெருங்கோயில் தனைக் கட்டுவித்த பேரரசன் இராச இராச சோழனின் பெயரையும், அவன் திருவுருவச் சிலை, கோயிலில் இடம் பெற்றிருப்பதையும், இங்கே நாம் ஒரு சான்றாகக் கூட கொள்ளலாம்.
கடவுளும் வழிபாடும்
மதங்கள் விளையாட்டுக்களை எப்படி உண்டாக்கின என்கிற ஆராய்ச்சிக்கு உதவுகிற, முக்கியமான குறிப்பு ஒன்றை இங்கே நாம் காண்போம்.
கடவுள் நம்பிக்கை உடைய மக்கள் எல்லோருக்கும், கோவில்களுக்கு உள்ளே சென்று, வழிபட வாய்ப்புக் கிடைக்கவில்லை. பொதுமக்களில் பலர், கோவிலுக்குச் செல்ல முடியாமல் தடை இருந்தது. அதனால், வாசலுக்கு வெளியே சென்று வணங்கி மகிழ்கிற வாய்ப்பு மட்டுமே கிடைத்தது.
தெய்வச் சிலையை நேரில் தரிசிக்க முடியாத நிலையில் திகைப்படைந்த மக்களை, திருப்திபடுத்த, மன்னர்கள் பலர் ஒரு புது முறையைக் கொண்டு வந்து மகிழ்வித்தார்கள்.
அதாவது, விழாக் காலத்தில் தெய்வச் சிலையைத் தூக்கிக் கொண்டு வெளியே உலாவரச் செய்த போது, மக்கள் தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
தெய்வச் சிலைகள் திரு உலா வருவதற்காக, தேர்கள் வந்தன, பல்லக்கு, சப்பரம் என்று பல முறைகள் தோன்றின.
அலங்கரிக்கப்பட்ட ஆபரணங்களை அணிந்த அழகு நிலையில், ஆண்டவன் திருக் கோலம் கண்டு, மக்கள் மகிழ்ச்சிப் பெருக்கில் திகைத்த சான்றுகளை, எல்லா நாட்டு புராணங்களும் இதிகாசங்களும், பெருவாரியாக பிரபலமாக விவரித்திருக்கின்றன.
தெய்வத் திருச்சிலை, திருவுலா வந்தபோது, மக்கள் தரிசித்தது மட்டுமின்றி பிரார்த்தனைப் பொருட்களைப் படைத்து, பூஜித்தனர். வீதியெல்லாம் ஆடம்பரம் விமரிசையாக நடந்தேறியது.
வீடுகளும் வீதிகளும் விழாக்கோலம், தெய்வத்தரிசனத்தால் தங்கள் தேக அசௌகரியங்கள் எல்லாம் தீர்ந்து போகும், துன்பங்கள் யாவும் தொலைந்து போகும் என்ற தொலையாத நம்பிக்கையை, மக்கள் மனதிலே ஊட்டின. இப்படி கோவிலுக்கு வெளியே வந்தன திருச்சிலை உலாக்கள்.
தங்களுக்கு துன்பங்களும் நோய்களும் வந்து சேர்வது, கடவுள் தங்களுக்கு வழங்குகிற தண்டனைகள் என்றே மக்கள் அன்றும் நம்பினர். இன்றும் நம்புகின்றார்கள். ஆகவே, தங்கள் பாவங்களை, தெய்வச்சிலைகள் முன்னே அறிக்கையிட்டு, வேண்டிக் கொண்டார்கள்.
இப்படித்தான், திருவிழாக்களும் வழிபாடுகளும் கடவுளை வணங்குகிற மரபுகளும் மாறிக்கொண்டே வந்தன.
விரதமும் வழிபாடும்
இஸ்ரேல் நாட்டில் மதவிழாக்கள் இப்படித்தான் ஆரம்பமாயின. அந்தந்த விளைச்சல் காலங்களில் தான், மதவிழாக்கள் விமரிசையாக இடம் பெற்றன.
புதிதாக வீட்டுக்கு வந்த விளைபொருட்களை, தெய்வத்திற்குக் காணிக்கையாகப் படைத்து, வணங்கி வழிபட, அந்தக் காலங்களே வசதியாக இருந்தது போலும். விழாக்கள் எல்லாமே, நிலங்களில் நிறைய விளையச் செய்த ஆண்டவனுக்கு நன்றி சொல்லும் வகையிலே தான் அமைந்திருந்தன. அவற்றை அவர்கள் அறுவடைத் திருநாள் என்று போற்றினர். நம் தமிழர்களோ, பொங்கல் திருநாள் என்று சாற்றினர்.
அடிக்கடி நடைபெற்ற திருவிழாக்கள் எல்லாம், மக்களை ஒன்று கூட்டவும், உள்ளத்தால் ஒன்று படவும் உதவின. மகிழ்ந்த மக்கள், விருந்துகள் நடத்தி, ஒருவருக்கொருவர் உபசரித்து, வைபவமாகக் கொண்டாடவும், விழாக்கள் உதவின.
மக்கள் ஆண்டவனை நோக்கி வணங்கி, தங்களை சமர்பிப்பது போல விரதமும் இருக்க ஆரம்பித்தனர். தேசம் முழுவதும் ஒரு நாளைக் குறித்து, உண்ணா விரத நாளாக சுட்டிக் காட்டி, தேசிய விரதம் இருக்கவும் செய்தனர். நம் நாட்டில் அமாவாசை விரதத்தை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.
தேசத்தின் திருப்புமுனை
விரதமும், விழாக் கோலமும், நாட்டு மக்களிடையே பிரபலமாயின, சில சமயங்களில், நாட்டில் நடைபெற்ற முக்கிய சரித்திர நிகழ்ச்சிகளை நினைவு படுத்தவும், விழாக்கள் நடைபெற்றன.
நாடு பகைவர்களால் முற்றுகையிடப்பட்ட நிகழ்ச்சி, அல்லது தங்கள் நாடு அன்னியர்க்கு அடிமையாக்கி, அதிலிருந்து விடுதலைபெற்ற நிகழ்ச்சி, நாட்டுத் தலைவரின் தியாக மரணம். போன்ற நிகழ்ச்சிகளை மக்கள் நினைவில் வைத்துக் கொண்டு போற்ற வேண்டும். இதய எழுச்சியைப் பெற வேண்டும் என்பதற்காகவும், விழாக்கள் எடுக்கப்பட்டன.விரதமும் வேட்கையும்
விழா நாட்கள் என்ற போது கொண்டாடி மகிழ்ந்தனர். விரத நாட்களில் மக்கள் எதையுமே சாப்பிடவில்லை. தாகம் எழுந்தபோது கூட தண்ணீரும் குடிக்கவில்லை. அந்த விரத நாள் முழுவதும், பிரார்த்தனையும், உண்ணா நோன்புமே பேரெழுச்சியாக இடம் பெற்றிருந்தன.
அதிகபக்தி கொண்ட மக்களில் சிலர், ஆவேச வெறி கொண்டவர்களாகி, தாங்கள் அணிந்திருந்த ஆடைகளைக் கிழித்துக் கொண்டனர். சிலர் கோணிப் பைகளில் உடைகளைத் தைத்து அணிந்து கொண்டனர், சிலர் தங்கள் முடிகளை வாரிக் கொள்ளாமல், அலங்கோலமாக, அவிழ்த்து விட்டுக் கொண்டனர். இன்னும் சிலர் தங்கள் தலை மீதும், தேகத்தின் மீதும், புழுதியையும் சாம்பலையும் பூசிக் கொண்டனர். சிலர்தேகத்தை அழுக்காக்கி அருவெறுப்புடன் பார்த்துக் கொண்டனர்.