குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-12/அவாவை நீத்தல் எப்படி?

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


23 அவாவை நீத்தல் எப்படி?


முன்னுரை

வாழ்க்கை வாழ்வதற்கே! வாழ்க்கையின் தேவைகள் நிறைவேறினாலே வாழமுடியும். தேவைகள் ஆசைகள் இல்லாமல் நிறைவேறுமா? ஆசைகளை நீக்கி வாழ எல்லாரும் என்ன துறவிகளா? துறவிகளில்கூட ஆசையை விட்டவர்கள் இன்று யார்? இன்றைய துறவிகள் விளம்பரம், பெருமை, இவற்றில் சராசரி அரசியல் வாதிகளை விடக் கூடுதலாகவே ஆசைப்பட்டு அலைகிறார்கள்; திரிகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் ஆசையை அகற்றுவது எப்படி? இப்படி ஒர் உரத்த சிந்தனை! -

வாய்த்துவிட்டது வாழ்க்கை ! வாழ்ந்தேயாக வேண்டும்! தப்பித்து ஓடுதல் இயலாது. இயன்று ஓடினாலும் கோழைத் தன்மையாகும். தற்கொலை செய்து கொள்ள மனம் இல்லை. ஒரோவழி மனம் வந்தாலும் அறநெறி ஏற்காது; ஆட்சியின் காவலும் ஏற்காது. ஆதலால் வாழத் துணிதலே புத்திசாலித்தனம்; நன்றும் கூட!

வாழ்வதற்குப் பொருள்கள் தேவை. “பொரு ளில்லார்க்கு இவ்வுலகமில்லை!” என்பது திருக்குறள் வாழ் வாங்கு வாழ எண்ணற்ற நுகர்பொருள்கள் தேவை. பொருள்களை விரும்பி அடைந்து அனுபவித்து வாழ்வதுதானே வாழ்க்கை பொருள்களை விரும்புவது அவாவா? ஆசையா? பொருள் இல்லையாயின் வாழ்க்கையே இல்லையே! அப்படியானால் அவற்றை விரும்புவது தவறா? இல்லை! இல்லை! தேவைக்கு விரும்புவது ஆசையல்ல. எந்தப் பொருளையும் தேவைக்கு விரும்புவது ஆசையல்ல. தேவைக்காக அல்லாது சொத்தாக ஆக்க விரும்புவது ஆசை.

பொருள், வாழ்க்கையை நடத்த ஒரு தேவை. தேவைக்காக விரும்புவது - தேடுவது அறம். வாழும் நெறியும் கூட! அங்ஙனம் இன்றி - துய்ப்பனவும் உய்ப்பனவும் இன்றிச் சேமித்தலுக்காகப் பொருள்களைத் தேடுதல் ஆசை குற்றம். இத்தகு ஆசை அறவே தீது, பொருள் ஒரு கருவியேயன்றி வேறுதகுதி அதற்கு இல்லை.

இந்த உலகம் பரந்தது. பலரிடம் பல பொருள்கள் இருக்கலாம். அவை, அவர்களின் தேவையாக இருக்கலாம். அல்லது ஆரவாரத் தோற்றத்திற்காகவும் வைத்திருக்கலாம். நமக்கு அப்பொருள்கள் தேவையில்லை. நமக்கு ஏன் அப்பொருளின் மீது ஆசை? அப்படியே ஆசைப்பட்டாலும் அப்பொருளை அடைவதற்குரிய தகுதியும் நம்மிடம் இல்லை. ஏன் ஆசை?

பொருள்கள் நுகர்வுக்காக, நுகர்வுக்காக மட்டுமே! அங்ஙனமின்றி மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்று சிலர் பொருள்களின்மீது ஆசைப்படுவானேன்? ஆளுமை இல்லாத பொருள் சார்ந்த பெருமை எதற்குப் பயன்படும்? ஒன்றுக்கும் ஆகாது.

ஆசை, எரியும் நெருப்புப் போன்றது. குடி, பிறப்பு, மானம் எல்லாவற்றையும் அழிக்கும். ஆசைக்கு வெட்கம் இல்லை! நாணம் இல்லை. ஆசை எப்போதும் தற்சார்பானது. பிறர் நலம் நாடும் பாங்கு ஆசைக்கு இல்லை. எவருடைய நலனையும் பலியிட்டு ஆசை அடைய முயலும்.

ஆசை - பேராசை இவ்விரண்டக்கும் இடையே அப்படியொன்றும் பெரிய வேறுபாடு இல்லை. ஆசையே எரியும் தீ நாக்குப் போன்றதுதான். உலக வழக்கில் மனம் நிறைவு பெறாத ஆசையைப் பேராசை என்று கூறுகின்றோம். ஆசையின் இயல்பு. ஆசைப்பட்டதை எப்படியும் அடைய வேண்டும் என்பதேயாம். ஆசை நன்மை - தீமை, நீதி - அநீதி, நியாயம் - அநியாயம், இன்பம் - துன்பம் ஆகிய எவற்றைப் பற்றியும் நோக்காது. ஆசைப்பட்டதை அடைந்தே தீர்வது என்று வாழ்வதே ஆசையில் இயல்பு.

ஆசைப்படாமல் வாழ முடியமா? முடியாது. ஆனால், விரும்பி ஏற்கத்தக்க ஆசை எது? விரும்பி ஏற்க இயலாத - வெறுக்கத்தக்கது எது? வாழ்க்கையை இயக்குவது ஆசையே! ஆயினும் தேவையை விரும்பி அடைய முயற்சி செய்தல் நியாயமான ஆசை! அதேபோழ்து தேவைகள் கட்டுப் படுத்தப்பட்டிருக்க வேண்டும். பிறருக்குப் பயன்படுவனவற்றை அவர்ளுக்குப் பயன்படாமல் தன்னிடம் முடக்கும் ஆசை தவறு! தவறு!

ஆசை, அலைகடலின் அலைகளைப் போல வளரும். எண்ணெய் வசப்பட எரி நெருப்புப் போலப் பற்றி எரியும். “ஆரா இயற்கை” என்றது திருக்குறள். நலத்துடன் வாழ்வதற்குரியன தவிர விரும்பாமை வேண்டும். வாழ்வின் தேவைகள் கூட வேண்டாமையே! வாழ்தல் வேறு; சுகம் வேறு.

எந்த ஒன்றின்மீது ஆசை வருகிறதோ, அந்தப் பொருளின்றி, வாழமுடியாதா என்று எண்ணினால் ஆசைப்படுபவை வேண்டாம் என்றே அடிமனம் கூறும். எவ்வளவுக் கெவ்வளவு பொருள்களிலிருந்து விலகுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு துன்பம் குறையும்.

“யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்” — குறள்.

அடுத்து, அவாவை நீக்குதலுக்குரிய வழி! பொருள்கள் வாழ்க்கையில் தேவை என்ற அளவில் மட்டுமே கருதுதல். அதற்குமேல் அந்தப் பொருள்கள் மேல் அளவு கடந்த மதிப்பைக் கூட்டி அப்பொருள்களுக்காக வாழ்தல் இல்லை அல்லது அப்பொருள்கள் இன்றேல் வாழ்க்கை இல்லை என்று கருதாமல் வாழ்வதும் அவாவை நீக்குதற்குரிய வழி.

அடுத்து, மனிதர்களிடத்தில் ஆசை வைப்பது. மனிதர்களிடத்தில் ஆசை வைக்கவேண்டும். ஏன்? நாம் ஆசை வைக்கும் மனிதர்கள் மீது நமக்கு ஏன் ஆசை? நமக்கு வேண்டுவன செய்வார்கள் என்று எண்ணி ஆசைப்படுவது தவறு! மற்றவர்களை அவர்களுடைய நன்மைக்காக ஆசைப்படுவது தவறல்ல. இன்று பலர், நண்பனை நேசிக்கிறார்கள். நண்பனுக்காக அல்ல. தனக்காகவே மனைவியை நேசிக்கிறார்கள். மனைவிக்காக அல்ல. தனக்காகவே நேசிக்கிறார்கள்; ஆசை காட்டுகிறார்கள். இது தவறு. பிறரிடம் பிறர் நலங்கருதி ஆசை காட்டத் தொடங்கினால் ஆசை அகலும். ஏன் திருமூலர்.

“ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்”

என்றருளிச் செய்த பாங்கு அறிக. எத்தை ஈசனிடம் ஆசை காட்டுவோர் இன்று யாருளர்; அவரவர் விருப்பங்களை நிறைவேற்றுபவர்களிடம் ஆசை காட்டிச் சென்று பேரம் பேசுவோர் பலர். அன்புநிறைந்த கண்ணப்பரைப் போல, ஈசனிடமே ஆசை காட்டுவோர் சிலரே! பிறர் நலம் எண்ணுந் தொறும் ஆசை அகலும்” அவா அகலும்!