குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-12/ஆன்மிகமும் அறிவியலும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
18


ஆன்மிகமும் அறிவியலும்

மதுரை வானொலி ஒலிபரப்பு: 18-1-93


அறிவியல் துறைகள் பலப்பல. அறிவியல் துறைகளில் ஆன்மிக அருளியல் அடங்கும். “ஆன்மிகம், சமயம் என்பவை அறிவியல் தொடர்பு இல்லாதவை, வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் தோன்றி நிற்பவை; சமயம், மூடப்பழக்க வழக்கங்களை மையமாகக் கொண்டு அமைந்தது” - என்று கூறுவது தவறு. சமய நெறிகளுக்கும் அறிவியலே அடிப்படை “நான் யார்? என் உள்ளம் ஆர்? ஞானங்கள் ஆர்?” என்ற ஆராய்ச்சியிலே பிறந்து வளர்ந்து விளக்கம் பெறுவதே சமயநெறி.

கடவுள் நம்பிக்கை அறிவியலை அடிப்படையாகக் கொண்டது. “இந்த உலகத்தில் ஓர் ஒழுங்கும், முறைபிறழா நிகழ்ச்சியும் இருப்பது உண்மை. இதற்கு எது காரணம்? நிச்சயம் அது மனிதனை விட மேம்பட்டதாக இருத்தல் வேண்டும். அது எது, கடவுளைத் தவிர ?” என்று உரோமானிய அரசியல் ஞானி சிசரோ சொன்னதை அறிக. அது போலவே “இயற்கை கடவுளின் மறுபெயர்” என்று கிரேக்கத் தத்துவஞானி கூறுவார். இதனால் மணம், சுவை, உயிர்ப்பு தர, மனிதனால் இயலவில்லை. இவற்றைத் தருவது கடவுள் என்று உணர்கிறோம்.

கடவுள்நம்பிக்கை என்பது நம்பிக்கையின் பாற்பட்டதல்ல. அறிவுசார்ந்த ஒரு கருத்தேயாம். ஆன்மாவிற்குப் புலனாதல் என்பதற்குப் பலவாயில்கள் உள்ளன. கண்களுக்குக் காட்டி வழிப்புலனாதல், உணர்வுவழிப் புலனாதல். கடவுள் உயிர்க்கு உயிரதாக உணர்வு வாயிலாகப் புலனாதலே தத்துவக் கொள்கை.

சிந்தனையில் உணர்வில் அனுபவித்த கடவுட் காட்சியைப் பொறிகளாலும் அனுபவிக்கத்தான் திருவுருவ வழிபாடு தோன்றியது. சிந்தனையால் வழிபடுதல் ஞானிகளுக்கே உரியது. ஆன்மா, உள்ளம் ஏதாவது ஒன்றைச் சிந்திக்கப் பற்றுக்கோடாக ஓருருவம் தேவைப்படுகிறது. சூன்யத்தைச் சிந்திப்பது சராசரி மனிதர்களால் இயலாது. இந்த அடிப்படையில் தான் திருவுருவ வழிபாடு கால் கொண்டது. உருவவழிபாட்டில் உளவியல், அறிவியல் அடிப்படை அமைந்துள்ளது. நமது சமயம் உருவவழிபாட்டை ஏற்றுக்கொண்டாலும் அருவநிலையில், உருவமற்றநிலையில் வழிபாடு செய்வதை மறுத்துவிடவில்லை. திருவுருவம் - கடவுள் அல்ல. அருள்பாலிக்கும் கடவுள், திருவுருவத்தை இடமாகக் கொண்டு அருள்கின்றான்.


“இது அவன் திருவுரு இவன் அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்”

என்ற திருவாசக அடிகளைச் சிந்தனை செய்க, திருக்கோயில் உள்ளிருக்கும் சிவன்தன்னைச் சிவன் எனவே காணவேண்டும்.

இந்த உலகில் ஒன்று பிறிதொன்றாக மாறுகிறது. மாறும் பொழுதெல்லாம் மூலப் பெயர் மறைந்து போகிறது. மாறிய நிலையின் பெயரே நிலைபெறுகிறது. தொழில்நுட்பம தெரிந்தவன் இரும்பை எடுத்து ஒலியைப் பெருக்கித்தரும் கருவியாக அமைத்து “ஒலிபெருக்கி” என்று பெயர் சூட்டு கிறான். அது ஒருபெருக்கி என்றே சொல்லப் பெறுகிறது. அதுபோல் கல், செம்பு முதலியவற்றை எடுத்துத் திருவுருவங்கள் செய்து, இறைவனை எழுந்தருளச் செய்து கடவுட்பெயர் சூட்டுகின்றனர். நாம் அனைவரும் கடவுள் என்று கூறுவதே மரபு முறையும்கூட! ஒலிபெருக்கி மூலம் கேட்க முடிகிறதே என்பர். ஒலிபெருக்கியாலும் காதுகேளாதவர்களைக் கேட்பிக்க முடியாது. கடவுட்காட்சியும் அனுபவ இதயம் உள்ளவர்களுக்கே கிடைக்கும். மனிதனுடைய இருதயம் பேச இயலாததாக இருந்தால் கடவுள் காதுகேளாதவர் ஆகியன போலத்தானே!

திருக்குறள் முழுவதிலும் அகரமுதல எழுத்துக்கள் உள்ளன. அதனால் திருக்குறளை அரிச்சுவடி என்று யார்தான் கூறுவர்? குழந்தைகளின் பார்வையில் திருக்குறளில் அகரமுதல எழுத்துக்கள்தான் தெரியும். மாணவர்கள் பார்வையில் ‘அகர முதல’ என்ற வாசகம் தெரியும். பேராசிரியர்களுக்குத் திருக்குறள் இலக்கியம். சமய அறிஞர் களுக்குத் திருக்குறள் அறநூல். ஒரே திருக்குறள் வயது, அனுபவங்களுக்கு ஏற்ப, அனுவிக்கப் பெறுவதைப் போலத் தான் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள கடவுள் திருமேனிகளையும் முறையே கல், உருவம், சிற்பம், கடவுள் என்றெல்லாம் அனுவ முதிர்ச்சிக்கு ஏற்ப, அனுபவிக்கிறார்கள்.

திருவுருவங்களைக் கருங்கல், செம்பு இவைகளால் மட்டுமே அமைந்தனர். கல், ஒரு ஆற்றலை வாங்கிக் கொள்ளும், எளிதில் விடாது என்பதால் கருங்கல்லில் இறைவனை எழுந்தருளச் செய்தனர். ஆற்றல் கடத்திகளில் செம்பு முக்கியமானது. விரைந்தும் செய்யக்கூடியது. கடவுளின் ஆற்றலை வாங்கிவைத்துக் கொண்டு நமக்குத் தரும் ஆற்றல் செம்பு உலோகத்திற்கு உண்டு என்பதால் செப்புத் திருமேனிகள் அமைந்தனர். திருவுருவ அமைப்பில் அறிவியல் அணுகுமுறை அமைந்திருப்பதை எண்ணி மகிழ்க!

கடவுளை எங்கும் தொழலாம். எதிலும் தொழலாம்! எப்படியும் தொழலாம்! அப்படியாயின் ஏன் திருக்கோயில்? சமூகவியல் விஞ்ஞானம் (Sociology) “மனிதன் ஒரு சமூகப் பிராணி” என்று கூறுகிறது. தனிமனிதன், மற்ற மனிதர்களுடன் சார்ந்த வாழத்தலைப்பட்டு, சமூக அமைப்பு உருவம் பெறுகிறது. சமூக அமைப்பு இயங்கத் திருக்கோயில் தேவைப்படுகிறது. இல்லை, அவசியமும் கூட! திருக்கோயில் சமூகத்தின் சின்னம். பழங்காலத்தில் திருக்கோயிலை மையமாகக் கொண்டே சமுதாயம் இயங்கியது. வளர்ந்தது! பழங்காலத்தில் திருக்கோயில்கள் குடிகளைத் தழுவி வளர்ந்தன. குடிகளும் கோயிலைத் தழுவி வளர்ந்தன. அதனால்தான் “கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்றனர்.

விண்ணளந்து காட்டி வினைமறைக்கும் கோபுரங்களைக் கொண்ட திருக்கோயில்கள் நிறைந்து புகழுடன் விளங்கும் நாடு, தமிழ்நாடு. திருக்கோயில் கோபுரம் உயரமானது. ஆம்! வாழ்க்கையின் இலட்சியமும் கோபுரம் போல் உயர்ந்ததாக இருக்கவேண்டும். சந்திரனைக் குறியிலக்காகக் கொண்டால் ஒரு விண்மீனையாவது அடித்து வீழ்த்தலாம். கவனத்தில் கொள்க. கோயிலின் மதிற்கவர்கள் ஓங்கி உயர்ந்து நிற்கின்றன. ஏன்? களவிலிருந்து காக்க அல்ல! தூசி, புழுதி இல்லாத காற்று கிடைப்பதற்காகத்தான்! புறத்தே உள்ள ஒலி அலைகளும் தாக்காமல் இருப்பதற்காகத்தான்! நாள்தோறும் ஒரு மணிநேரம் நல்ல காற்றைச் சுவாசிக்க ஒரு ஏற்பாடு! நாள்தோறும் ஒலி இரைச்சலிலிருந்து மீள ஒரு ஏற்பாடு!

உடல், உழைப்புக்காக உருவாகியது. உழைப்பு இல்லாத உடல், நோய்க்கு இரையாகும். திருக்கோயிலுக்குச் செல்லும் பழக்கத்தை மேற்கொண்டால் உடலுக்கு உழைப்புக்கிடைத்து விடும். பழங்காலத் திருக்கோயில்கள் நீண்டும் அகன்றும் உள்ள பிரகாரங்கள் உடையவை. மூன்று பிரகாரங்களையும் மூன்று தடவை வலம் வந்து கருவறையில் எழுந்தருளியுள்ள கடவுளை வழிபடச் செல்லவேண்டும். இங்கனம், மூன்று பிரகாரங்களையும் மூன்று தடவை வலம் வருவதால் சற்றேறக் குறைய மூன்று கிலோ மீட்டர் நடந்த பயன்கிடைக்கிறது. ஒருமுறை சுற்றினாலும் ஒரு கிலோமீட்டர் நடந்த பயன் கிடைக்கும் இது மட்டுமா?

மனிதனுக்குச் சிந்தனை மாற்றங்கள் எளிதில் வாரா என்பது உளஇயல் அடிப்படை உலகியலில் கிடந்துழுலும் மனிதர்களின் மனம் மடைமாற்றம் பெறத் திருவருட்சிந்தனை பெரிதும் உதவும். மூன்று பிரகாரங்கள் வலம் வரும் பொழுது மெள்ள மெள்ள உள்ளம் மடை மாற்றம் பெற்று, கடவுள் எழுந்தருளியுள்ள கருவறைஅண்மையில் செல்லும் பொழுது ஆன்மா - ஆன்மாவின் உள்ளம் உணர்வு எல்லாம் திருவருட் சிந்தனையில் தோயும். இதனால், உளம்தோய்ந்த பக்தியில் ஆன்மா ஈடுபட முடியும்; ஞானமும் பெறும்!

இறைவன் சந்நிதியில் வழிபாடு செய்து கொள்ளுதல் நல்ல உள்ளப் பயிற்சி; சிந்தனைப்பயிற்சி; ஓர் ஆன்மா, எண்ணவும் சிந்திக்கவும் திறன்பெற்றுவிட்டால் வாழ்க்கையில் முன்னேறுவது உறுதி!

வழிபாடு முடிந்தவுடன் கடவுள் சந்நிதியில் நிலமிசை வீழ்ந்து வணங்குதல் வேண்டும். இங்ஙனம் நிலமிசை வீழ்ந்து வணங்குதல் தாண்டால் எடுப்பது போன்ற முயற்சி. நிலமிசை வீழ்ந்து வணங்கிய பிறகு, கைகளைத் தலைமீது உயர்த்தித் தொழுதல் வேண்டும். இதுவும் கைகளுக்குப் பயிற்சி. அடங்குதல், தாழ்தல் போன்ற நல்லியல்புகள் ஆன்மாவிற்குச் சித்திக்கும்.

கருவறையில் எழுந்தருளியுள்ள கடவுளுக்கு வழிபாடு. கருவறை அகலம் குறைவானது; குறுகிய வாயிற்படி உடையது. வேண்டிய அளவே ஒளி இருக்கும். அதாவது, கூர்ந்துகாண வேண்டிய அளவே ஒளி இருக்கும். இத்தகு கருவறையில் எழுந்தருளியுள்ள கடவுளை வழிபாடு செய்தால் கூர்ந்து கவனித்தல் பயிற்சி, கண்களுக்குக் கிடைக்கிறது. குறுகிய வாயில்வழி காட்சி நிகழ்வதால் ஒருமைப்படுதல், ஒன்றுதல் முதலிய நல்லியல்புகள் ஆன்மாவுக்குக் கிடைக்கின்றன.

திருக்கோயில் வழிபாடு முடிந்தவுடன் மூன்றாவது சுற்றில் உள்ள மண்டபத்தில் சமூகத்தினருடன் உட்கார்ந்து கலந்து பேச வேண்டும். இங்ஙனம் கலந்து பேசுவதால் மனக் கவலைகள் பறக்கின்றன; உறவுகள் வளர்கின்றன. சும்மாவா உட்கார்ந்து பேசுகின்றோம்? திருக்கோயில் பிரசாதங்களைச் சாப்பிட்டுக் கொண்டே பேசுகின்றோம். உறவுகலந்து உண்ணும் இனிய வாய்ப்புக் கிடைக்கிறது. திருக்கோயில் பிரசாதங்கள் நல்லசத்துள்ளவை; புரதச்சத்துள்ளவை. இதனால் உடல் உரம் பெறுகிறது.

இவ்வளவுக்கும் பிறகும் ஆன்மா பக்குவப்படக் களிப்பும் மகிழ்ச்சியும் தேவை. களிப்பும் மகிழ்ச்சியும் கிடைக்கும்படி பண்டையத் திருக்கோயில் கலைகள் உள்ளன. சிற்பம், ஓவியம், இசை முதலியவை உள்ளன. நல்ல இசை கேட்பதால் ஆன்மாக்கள் நைந்துருகிப் பக்குவப்பட முடிகிறது.

நம்முடைய திருக்கோயில்கள் சமுதாய நலன்களை மையமாகக் கொண்டே தோன்றின; வளர்ந்தன. சுற்றுப்புறச் சூழல் அடிப்படையிலேயே திருக்கோயில் அமைந்துள்ளது. திருக்கோயில் தோறும் திருக்குளம் வெட்டப்பட வேண்டும். நீரின்றி அமையாது உலகு! அடுத்துத் திருக்கோயில், மரங்கள் அடர்ந்த சூழலில் அமைந்த நிலை பழைய ஏற்பாடு. அரசவனம், கடம்பவனம் முதலிய வழக்குகளை நோக்குக! தலங்கள் தோறும் மரங்கள் வைத்து வளர்க்கப் பெறுதல் வேண்டும். மரங்கள் வளர்வதால் சுற்றுப்புறச் சூழ்நிலை பாதுகாக்கப்படுகிறது.

திருக்கோயில் வழிபாடு, அறிவியலில் தோன்றியது. திருக்கோயில் வழிபாடு அறிவால் வளர்ந்தது. திருக்கோயில்கள் அறிவியல் துறைகள் பலவற்றையும் வளர்த்து வந்துள்ளன; வளர்த்துக் கொண்டிருக்கின்றன. திருக்கோயில் வழிபாடு அறிவியல் சார்ந்த தொழில் நுட்பத்திற்கு எடுத்துக் காட்டு! வாழ்க, திருக்கோயில்கள்! வளர்க, திருக்கோயில் வழிபாடு!