குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-12/ஆன்மிகம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


22


ஆன்மிகம்

சமயம் 4-2-95

ஆன்மிகம்! இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் மக்களிடத்தில் பரவலாகப் பேசப்பெறும் ஒரு செய்தி! நமது மாண்புமிகு முதலமைச்சர், தமிழ்நாட்டுத் திருக்கோயில்களில் ஆன்மிகக் கல்வி தரப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். அந்த ஆன்மிகக் கல்வியில் பிரபந்தங்கள், புராணங்கள் கற்பிக்கப்பெறும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். முதலமைச்சர் அவர்களின் நல்லெண்ணத்தை, ஆன்மிகத்தில் உள்ள ஈடுபாட்டைப் புரிந்துகொள்ள முடிகிறது. நன்றி! பாராட்டு! வாழ்த்துக்கள்!

ஆனால், இன்று ஆன்மிகம் எப்படி இருக்கிறது? ஆன்மிகம் என்றால் என்ன? இவை எல்லாவற்றையும் ஆராய வேண்டும். தேவாரம், திவ்வியப் பிரபந்தங்கள், புராணங்கள் கல்வி எல்லையைக் கடந்தவை. அவை பழுத்த மனத்தடியார் அனுபவிக்கத்தக்கவை. இவைகளைக் கற்கும் கல்வித்தரத்திற்குக் கொண்டுவருவது கடினம்.

மானிட சமுதாயத்தை இரண்டு கத்திகள் உந்திச் செலுத்தி வந்திருக்கின்றன. அவற்றுள் ஒன்று பலவந்தம். மற்றொன்று மதம். ஆனால், இப்போது இரண்டுமே பலவீனமடைந்துவிட்டன. மதம், அனுட்டிப்போராலும் முறையாக அனுட்டிக்கப்படுவதில்லை. தனக்கு மக்களிடத்தில் உள்ள பிடிப்பை - சக்தியை இழந்துகொண்டு வருகின்றது. இந்த இழப்பு உள்ளிட்டழிவாகும். வெளிப் பார்வையில் மதம் செழித்து வளர்வது போலத்தான் தெரிகிறது. பல ஆலயங்களில் குடமுழுக்கு விழாக்கள் நடைபெறுகின்றன. நாளும் புதிய புதிய கோயில்கள் தோன்றுகின்றன. ஏன்? நாளும் புதுப்புது சாமியார்களும் தோன்றுகின்றனர். கிரிமினல் வழக்குகளும் வளர்கின்றன. மதத்தை எதிர்ப்போர் மதத்தின் உள்ளடக்கத்தைக் காணத் தவறுகின்றனர். அதனால் எதிர்த்து அழிக்க முற்படுகின்றனர்.

ஆயினும் மதத்தின் குறிக்கோள்கள் வளராது போனாலும் எப்படியோ மதம் வளர்கிறது. ஆண்டு தோறும் பல்லாயிரம் கணக்கானவர்கள் ஐயப்பன் மலைக்குப் போகின்றனர்; பழநிக்குப் பாதயாத்திரை போகின்றனர். மதம் சடங்காக உடலோடு கூடிய பழக்கமாக வளர்ந்து நிற்கும் நிலையில் பொய்மையானவை அழிக்கப்படவும் இல்லை; திருத்தப்படவும் இல்லை. உண்மையை - மத நெறியைக் காணும் முயற்சியும் காணப்படவில்லை. உண்மையான மதத்திற்கு நேர் எதிராக வெகுதூரம் விலகிப்போன நிலையில் சான்றோர்கள் ஆன்மிகம் என்ற சொல்லைக் கண்டனர்.

ஆன்மிகம் என்ற சொல் காரல்மார்க்ஸ், லெனின் சித்தாந்தங்களிலும் கூடப் பயன்படும் ஒரு சொல். ஆன்மிகம் என்பது ஆன்மாவின் - உயிரின் தரத்தை வளர்த்துக் கொள்ளுதல். நான், உள்ளம், ஞானம் என்ற மூன்றும் இணைந்து வளர்ந்த ஒன்றே ஆன்மிகம்.

உயிர் இயங்கவேண்டும். இயங்கிக்கொண்டேயிருக்க வேண்டும். ஓர் உயிர் இயங்கினால்தான் பெரும் பேறடைய “மடியும் மனித உடலுக்குள் உள்ள உயிர் அல்லது ஆத்மா பூரண வளர்ச்சி பெறவேண்டும் என்பதே ஆன்மிகத்தின் குறிக்கோள். இன்று இந்த ஆன்ம வளர்ச்சியை - பூரண வளர்ச்சியைச் சிந்தனை செய்கின்றவர்களே அருகிவிட்டனர். எங்கும் பிரார்த்தனைகள் கூடத் தன்னலத் தொடர்புடையதாகவே நடத்தப்படுகின்றன. இலாபம் பார்த்தல், இவறிக்கூட்டுதல் ஆகியன இன்றைய மனித உலகத்தின் இலட்சியங்களாகவிட்டன. இதன் காரணமாகப் பலர், பல ஆன்மாக்கள் அழகு உணர்ச்சி, அன்பு செய்தல், ஈதல் ஆகிய நற்பண்புகளை இழந்துவிட்டு வெறும் ‘அகந்தை’யுடையவர் களாகவே காட்சியளிக்கின்றனர். சூரபதுமன் வரலாறு முடிந்ததாகத் தெரியவில்லை; தொடர்கிறது.

இன்று எங்கும் நிலவி வரும் உணர்வு, ஒருமைநிலை உணர்வு அல்ல. “நாம் வேறு; பிறர் வேறு” என்ற உணர்ச்சியே வளர்ந்து வருகிறது. சாதி, மதம், இனம், அரசியற் கட்சிகள் இவற்றுக்கு இடையில் வளரும் வேற்றுமை உணர்வுகளையும் அவைகள் மனிதத்தை, மனிதப் பண்பாட்டை அரிமானம் செய்து வேற்றுமைப்படுத்தி வரும் அநாகரிகத்தையும் காண, கேட்க நெஞ்சு பொறுக்கவில்லையே! ஆத்திரம்தான் வருகிறது. மனிதன் இன்றுள்ளதுபோல என்றுமே வேற்றுமைப் பட்டதில்லை; அந்நியப்பட்டதில்லை. ஒரோவழி, மனத்தாலும் உடலாலும் துன்புறுத்தி இணைப்பை ஏற்படுத்தினாலும் அஃதொரு வழிப்பட்ட அடிமைத்தனமாகவே இருக்கிறது; விளங்குகிறது;

இன்றைய மனிதன் விருப்பப்படி நடப்பதுதான் சுதந்திரம் என்று அறிந்து வைத்துள்ளான். பாவேந்தன் கூறியதைப்போலத் தன் பெண்டு, தன் பிள்ளை என்ற கடுகுப் புத்தியுடையவர்கள் எண்ணிக்கை மிகமிக உயர் நிலையிலிருந்து அடிமட்டவரையில் பெருகி வளர்ந்து வருகிறது. இதைக் காட்டுமிராண்டித்தனம் என்று கூடக் கூறலாம்.

தாங்களே முக்கியம். தாங்களே வாழவேண்டும். தங்களுக்குச் சமூகத்தில் எந்தவிதப் பொறுப்பும் இல்லை என்று வாழ்பவர்களின் எண்ணிக்கை பெருகி வளர்கிறது. இவர்கள் மக்கள் அல்லர் மாக்கள்! மனித உருவில் நடமாடும் விலங்குகள். இத்தகைய மனிதர்கள் மனம் மாறி மனித சமுத்திரத்திற்குள் குதித்து ஒருவரையொருவர் புரிந்து கொண்டு இருவரும் அல்லது பலரும் கைகோத்துக் கரையேறுவதே வாழ்க்கையின் சுதந்திரம்; இலட்சியம். ஆன்மா - உயிர் இத்தகைய பரிபக்குவத்தை அடைதலே ஆன்மிகம். சுதந்திரம் என்பது தூய்மையானது. அதாவது நம் ஒவ்வொருவருடைய சுதந்திரமும் ஆன்ம சுதந்திரமும் சமுதாயத்தையே சார்ந்து நிற்கிறது; வளர்கிறது. உலக வரலாற்றைக் கூர்ந்து நோக்கின் ஒவ்வொரு சுதந்திர வரலாறும் இந்த உண்மையைக் கூறுகிறது. மனித சமூகத்தையே பரம்பொருளாக விசுவ புருஷனாகக் கண்ட பெரியவர்கள் உண்டு. மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பது முக்கியமல்ல. மக்களுக்கு நன்மை செய்வதே உண்மையான இலட்சியமாக இருக்கவேண்டும். மனிதன் மக்களுக்கு நன்மை செய்வதன் மூலமாவே தான் மிருகமல்ல; மனிதன் என்பதை உணர்த்துகின்றான்.

மனிதன், தனிமனிதனாக வாழும் வரை முன்னேற்றம் இல்லை. அவனுடைய ஆன்மாவும் முன்னேறாது. மனிதன் சமூகத்தில் கலக்கவேண்டும். மானிட சமுத்திரத்தில் சங்கமமாக வேண்டும். நீர்த் திவலைகள் கடலுடன் கலந்து ஒன்றாகியிருக்கும்போதே கடல் என்ற மதிப்புக் கிடைக்கிறது. அதுபோலத்தான் மனிதனும் சமூகத்திற்குள் கலந்து சமூகத்தில் ஓர் உறுப்பினனானால் அவனது ஆன்மா முழுமை பெறுகிறது.

ஆன்மாவின் அறிகருவிகள் நான்கு அவை மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியன. இவற்றுள் மிகவும் சக்தி வாய்ந்தது மனம், மனம், தண்ணீரைப்போல எப்போதும் சலனமாக அசைந்துகொண்டேயிருக்கும். உடல் தயவில்லாமல் கூட பயணம் செய்து கொண்டேயிருக்கும். “சென்ற விடத்தால் செலவிடாது”, “மனத்துக்கண் மாசிலன் ஆதல்”, “மனமே உனக்கென்ன வாய்?” என்ற ஆன்றோர் வாக்குகளை எண்ணுக நெருப்பை எண்ணெய் விட்டு அணைக்க முடியுமா? அதுபோலத்தான் ஆசைகளிலும் கெட்ட எண்ணங்களிலும் உழலும் மனத்தை அடக்கமுடியாது. ஏன்? மனித வாழ்க்கையில் எந்தப் புலனையும் பொறியையும் சராசரி மனிதனால் அடக்கவே இயலாது. அறிவார்த்த நிலையிலும் பூரண ஞானத்துடன் பொருந்தாத கட்டுப்பாடு, உண்மையான கட்டுப்பாடு ஆகாது. பாசி படர்ந்த தண்ணீரில் விழுந்த கல், சற்றே பாசியை விலக்கியதை ஒத்ததுதான்! பூரண கட்டுப்பாடுகள் வராமையின் காரணமாகத்தான் நமது மதப் பழக்க வழக்கங்களில் மடமைத்தனம் அதிகமாயுள்ளன. வேதங்களையும் உபநிடங்களையும் தேவாரங்களையும் திவ்வியப் பிரபந்தங்களையும் படிக்கின்றோம். ஆனால் அவைகள் காட்டும் திசையில் நமது வாழ்க்கையை நாம் நடத்துவதில்லை. எப்படியோ மீண்டும் மீண்டும் பழக்கம் வழக்கம் என்ற அடிப்படையில் மடமைத் தனங்கள் ஆட்கொண்டு வருகின்றன.

ஆத்மா “அகத்தை”ச் சுழல வைத்துக்கொண்டிருக்கிறது. அகத்தையுடைய மனிதன், மற்றவர்களையும் வாழ்விட மாட்டான். அகத்தைப் பரிபூரணமாக நீங்கிய வாழ்க்கையே ஆன்மிக வாழ்க்கை அகந்தைக்கு மாற்று அன்புதான்! தாழ்வெனும் தன்மையோடு தொண்டு செய்து எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தினால்தான் வாழ்வு நிறைவாகும். அன்பு, ஒன்று தான் துன்பங்களையும் துயரங்களையும் எல்லைகளையும் கடந்து நிற்கும். தியாகங்கள் செய்ய அன்பு தேவை. இந்த அன்புக்காக ஏங்கிய கடவுளர் கூட வைகுந்தத்தையும் சொர்க்கத்தையும் துறந்துவிட்டு மண்ணுக்கு வந்தனர். நாம் தொழும் கடவுள்கள் கூட மனிதர்களாக நடமாடினர். மனிதனின் ஆன்மா, ஆண்டவனின் தீப ஒளியாய் விளங்க வேண்டும். இத்தகைய ஆன்மிகக் கல்வியை, ஆன்மிக ஞானத்தை அல்லது ஆன்மிகத்தில் சிறந்தாரைத் தேடித்தான் காணவேண்டும்.

ஆதலால், ஆன்மிகக் கல்வி என்ற பெயரில் தேவார, திவ்வியப் பிரபந்தங்களையும் புராணங்களையும் முதல் நிலையில் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த இயலாது. இவை உயர்ந்த ஞான அனுபவத்தின் பொழிவுகள். இவற்றை அனுபவிக்க தனி ஞானம் வேண்டும்.

இப்போதே பள்ளியில் உள்ள பாடப் புத்தங்களில் தமிழ், ஆங்கிலப் பாடங்களில் ஆன்மிக வளர்ச்சிக்குரிய பாடங்கள் உள்ளன. அவற்றை முறையாகக் கற்றுக் கொடுத்தலே ஒரு நல்ல பணி பள்ளிகளில் நீதிபோதனைக்கு என்று ஒரு வகுப்பு ஒதுக்கப்பெற்றுள்ளது. அந்த வகுப்பு இப்போது நடப்பதே இல்லை. அந்த நீதி போதனை வகுப்பை முதலில் ஆன்மிகக் கல்விக்குப் பயன்படுத்தலாம். திருக்குறள், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலிய நூல்களும் மார்க்கஸ் அரோலியஸ், ஜேம்ஸ் ஆலன், சோக்ரதர், விவிலியம், குர்-ஆன், கீதை முதலியனவும் முதலில் ஆன்மாவைப் புரிந்து கொள்ள உதவி செய்யும், ஆன்மாவை மெள்ளத் தன்னிலையில் உய்த்துச் செலுத்திப் பழக்கும். அதோடு பள்ளியாக இருப்பதால் ஆன்மிகக் கல்வியை ஒழுக்கமாக்கிக் கொள்ள நிறைய வாய்ப்புக்கள் உண்டு. ஆன்மிகம் என்பது ஆன்மாவின் தரத்தை உயர்த்தவதேயாகும். இந்த முயற்சியை, ஆன்மிகப் பண்ணைகளாக விளங்கும் திருக்கோயில்களில் தொடங்குவதைவிடப் பள்ளிகளிலேயே தொடங்குவது நல்லது. அதற்குத் தேவையான நிதி உதவிகளைத் திருக்கோயில்கள் செய்யலாம். இதனை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சிந்தனையில் கொள்ளவேண்டும் என்பது நமது விருப்பம்.