குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-12/சிந்தனைச் செல்வம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
13


சிந்தனைச் செல்வம்

சமயங்களும் மன வளர்ச்சியும்


னித மனம் சிந்திக்கும் இயல்புடையது. சிந்தனைக் குரியது. ஆனால் வெற்றுச் சூன்யத்தைப் பற்றிச் சிந்திப்பது அரிது; இயலாது. சிந்தனைக்குப் பற்றுக்கோடு தேவை. அப்பற்றுக்கோடு பருப்பொருளாகவும் அமையலாம். நுண் பொருளாகவும் அமையலாம். சில பொழுது நிகழ்வுகளாகவும் அமையலாம். இங்ஙனம் தோன்றி வளர்ந்த சிந்தனைகளின் வடிவங்களே சமயங்கள். அவை தம்முள் மாறுபடு கின்றன என்பது உண்மை. அங்ஙனம் மாறுபடுவதுதான், சமய நெறிகள் சிந்தனையின் அடிப்படையில் வளர்ந்து மாறிவருகின்றன என்பதற்கு அளவுகோல். ஆதலால், சமயம் சிந்தனைக்கு மாறுபட்டதன்று.

சமயம் பெரிதும் முகிழ்த்துத் தோன்றிய களம் சமுதாய உறவு நிலைகளேயாம். சமயம், மனித சமுதாயத்தைக் குறிப்பிட்ட நன்னெறியில் நிறுத்த அச்சத்தையும் கருவியாகக் கொண்டது. ஒரு செயலை அல்லது ஒழுக்கத்தை ஊக்குவிக்க, தண்டனை வரும் என்ற அச்சத்தையும் பரிசுகள் கிடைக்கும் என்ற உவப்பு வழி வரும் ஊக்கத்தையும் தருதல் என்ற நெறிப்படுத்தும் வகையிலேயே மோட்சம்-நரகம் என்ற கொள்கைகள் தோன்றின. இவைகளில் உள்ள உயர்வு நவிற்சிகளைப் பெரிதுபடுத்திக் கொள்ள வேண்டியதில்லை.

சமய நெறியின் தோற்றத்திற்கு அடிப்படை, பயம் என்பது மேற்றிசை நாட்டுக் கொள்கை. தமிழ்க் கொள்கை அஃதன்று. தன்னினும் மிஞ்சிய அறிவை, ஆற்றலை அவாவும் நெறியிலேயே சமய நெறி தோன்றிற்று என்பது தமிழ்க் கொள்கை.

மேலை நாட்டில் விஞ்ஞானம் வளர்கிறது. நமது நாட்டில் விஞ்ஞானம் வளரவில்லையே என்றும் இங்கு விஞ்ஞானம் வளராததற்குக் காரணம் சமய நம்பிக்கைதான் என்றும் சிலர் கூறுகின்றனர். இது வரலாற்று உண்மைக்கு மாறானது. கடவுள் நம்பிக்கையில்லாத உலகாயதம் நெடிய நாட்களாகவே இந்நாட்டில் இருந்து வந்துள்ளது. உலகாயதம் என்ற ஒரு கொள்கையையே மதம் என்ற பட்டியலில் சேர்த்தவர்கள் நம்மவர்கள்தாம்.

கடந்த அரை நூற்றாண்டாக மத நம்பிக்கையில்லாத -மத நம்பிக்கையை எதிர்த்து இயக்கங்கள் மேலோங்கி வளர்ந்தன நமது நாட்டில், ஆனால், இந்த இயக்கங்களைச் சேர்ந்தவர்களும்கூட சமய எதிர்ப்பு இயக்கம் நடத்தியவர்களே தவிர, விஞ்ஞான வளர்ச்சியில் ஈடுபடவில்லை. விஞ்ஞான வளர்ச்சியில் ஈடுபடக்கூடிய அளவுக்கு, அவர்களுக்கு நாட்டமும் இல்லை. ஒன்றை எதிர்ப்பதனாலேயே இன்னொன்று வளர்ந்துவிடாது என்ற உலக நியதியின் உண்மை அறிய தக்கது. அறிவியல், அருளியல் என்பன இரட்டைக் குழந்தைகள், ஒன்றோடொன்று முரண்பட்டது என்று கூறுவது எந்த ஒன்றும் ஆராய்ந்து அறியாதவர்கள்.

“பித்தா! பிறைசூடி!” என்ற பாடலைச் சிலர் கேலி செய்கின்றனர். கேலி செய்வதற்குப் பதில் அதிலுள்ள விஞ்ஞான உண்மைகளை விரிவாக்க நினைத்திருந்தால் நாமும் விஞ்ஞானிகளாகியிருக்கலாம். “பிறைசூடி” என்பதனாலேயே பிறை-நிலா கடவுள் அல்ல என்பதும் அதனை அடைந்து அனுபவிக்கலாம் என்பதும் பெறப்படவில்லையா? இக்கருத்து வழி அடுத்த தலைமுறையின் செயலாக்கம் நடந்திருக்குமானால் நிலாவுலகத்திற்கு முதலில் தமிழன்தான் சென்றிருப்பான். பாரதியும்தான் பாடினான், “சந்திரன் இயல் கண்டு தெளிவோம்” என்று. நாம் என்ன, அந்த முயற்சியிலா ஈடுபட்டிருக்கிறோம்? கதாகாலட் சேபத்தை யார் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்? இன்றோ? நாளையோ? என்று நாளை எண்ணுபவர்க்கும் சிரிப்பதன் மூலம் சிறு குடலுக்குப் பயிற்சி கொடுக்கும் ‘துர்ப்பாக்கிய"த் துக்கு ஆளானவர்களும் கதாகாலட்சேபம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் தொகையில் அவர்கள் ஒரு சிறு பகுதியினர் என்பதை நாம் அறிய வேண்டும்.

கிரேக்கச் சிந்தனையாளன் சாக்ரட்டீஸ் பல கடவுள்கள் வழிபாட்டை எதிர்த்து, ஒருகடவுள் வழிபாட்டை வற்புறுத்தியதாகவும், அதைச் சமயவாதிகள் எதிர்த்ததாகவும் சிலர் கூறுகின்றனர். இச்செய்தியில் உதிர்ந்துள்ள உண்மையை ஆராய வேண்டும். சாக்ரட்டீசும் ஒரு கடவுளை நம்மச் சொன்னார்; வழிபடச் சொன்னார். ஆதலால் அவரும் ஒரு சமயவாதியே என்பதில் மறுப்பு இருக்க முடியாது.

சாக்ரட்டீசை மறுத்தவர்களும் சமயவாதிகளே! ஆம்! உண்மைதான்! சாக்ரட்டீஸ் சமய நெறியாளர்; சமயத்தை வாழ்க்கையோடு இசைவித்தவர். அவர் கருத்தை மறுத்தவர்கள் சமயப் புரோகிதர்களும், சமயத்தைப் பிழைப்பாகக் கொண்டவர்களுமேயாவர். இந்த இடைவெளி வேறுபாட்டை அறிய வேண்டாமா? சமயமும், கடவுள் வழிபாடும் என்றைக்குப் புரோகிதர்களிடையே சிக்கியனவோ அன்றே புரோகிதர்களிடையே ஏற்பட்ட தொழிற் போட்டியின் விளைவாகப் பல கடவுள்கள் தோன்றின. பின் அப்படிப் படைக்கப்பட்ட கடவுள்களிடையே போட்டிகள் ஏற்படுத்தபட்டன. இவை சிறுபிள்ளைத் தனமான விளையாட்டு என்பதை ஆழ்ந்த சமய இயலாளர்கள் உணர்கின்றனர்; உணர்ந்ததோடன்றி எடுத்துக் கூறியும் இருக்கின்றனர்.

பெளராணிகர் சமயம் மிகப் பிற்காலத்தது. சமய நெறியாளர்களின் நெறி தவறுதல் பூர்த்தியடைந்த பிறகு, அந்த நெறி தவறிய நிகழ்ச்சிகளை நியாயப்படுத்துவதற்குத் தோன்றிய புராணங்களும் உண்டு. அவற்றைச் சான்றுகளாகக் கொண்டு ஆராயக் கூடாதென்பது ஓர் ஆராய்ச்சி முறை. பெளராணிக வழக்குகளுக்கும், முன்னே கூறியதை இழக்க முடியாமையின் காரணமாகத் தத்துவச் சாயங் கொடுத்த அறிஞர்களும் உண்டு. அந்தத் தத்துவச் சாயங்களின் வாயிலாக இந்தச் செய்திகளைப் பார்க்கும்பொழுது அவை அவ்வளவுக்கு மோசமானவை அல்ல என்பதையும் அறியக் கூடும். இப்படிக் கூறுவதால் நாம் அவற்றை அப்படியே நம்பும்படி கூறுவதாகக் கருத வேண்டாம். கதைகளைவிடக் கதைகளின் கருப்பொருளே நம்புதற்குரியன என்பது திறனாய்வுக்குரிய அடிப்படை.

பாவமன்னிப்பை எல்லாச் சமயங்களும் ஏற்றுக் கொள்வதாகவும், கழுவாய்களைக் காட்டிப் பாவங்களைச் செய்யத் துரண்டுவதாகவும் சிலர் குற்றம் காட்டுகின்றனர். நமக்கும் தெரிந்தவரையில் மெய்ப்பொருளியல் வழிப்பட்ட எந்தச் சமயமும் பாவங்களுக்குரிய கழுவாய்ச் சடங்குகளை ஏற்றுக் கொள்ளவில்லை.

பாவங்களை நினைந்து வருந்தி அழுது, பாவங்களுக்குரிய காரணங்களிலிருந்து விடுதலை பெற்றாலே பாவத்தினின்றும் விடுதலை பெறமுடியும் என்பது சமயநெறிகளில் முடிவு. நல்லொழுக்கத்திற்குச் சமயம் ஓர் ஊன்றுகோல், ஆனால், நல்லொழுக்கத்திற்கு வித்து உயர்வுற உயர் நலம் உடையவனாகவும் எல்லா உலகமுமாகவும் இருக்கின்ற கடவுள் சார்பேயாம். அப்போதுதான் ஒழுக்கம் வளமுடையதாகவும் உறுதியானதாகவும் இருக்க முடியும். சமய அடிப்படையில் அமையாத ஒழுக்க நெறிகள் இசைக் கலையைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் முன் அமர்ந்து இசைபயிலும் மாணாக்கன் கையை அசைக்கிறானே, அந்த அசைவு போன்றதே யாரும்.

சமயச் சண்டைகள் பற்றியும் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. ஆம்; உண்மைதான்! மனித குலத்தில் நடந்த போர்களில் சரிபாதி விழுக்காடு சமயங்களின் பெயரால் நடந்த போர்கள்தாம். இந்த வரலாற்று உண்மையை யார் தான் மறுக்கமுடியும்? ஆனால், அவை சமயச் சண்டைகளா என்பதை அன்புகூர்ந்து உள்ளவாறு ஆராய வேண்டும். சமயம் அனுபவத்தின் வழிபட்டது; அரவணைக்கத் தக்கது. அஃது அன்பின் கடல், அஃது எங்ஙனம் போரைத் துாண்ட முடியும்? சமயம் தத்துவமாக, வாழ்வியலாக இல்லாமல் நிறுவனங்களாக மாறி, புரோகிதர்களிடமும், சமயத் தலைவர்களிடமும் சிக்கிய பிறகு, யாருக்கு ஆதிக்கம் என்ற அடிப்படையில்தான் போர்கள் நிகழ்ந்தன. தெளிவாகச் சொன்னால் ஆதிக்க வெறியர்கள், மக்களிடத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த சமயத்தை, பசுத்தோல் போர்த்திய புலியென ஆதிக்க வெறியாட்டம் ஆடினர்.

ஒருவரின் சமய நெறி அனுபவத்தில் இன்னொரு அனுபவமுடையவர் வலிந்து ஆதிக்கத்தைப் பயன்படுத்தித் தன் சமயத்தைத் திணிப்பது நியாயமுன்று; நீதியுமன்று. இயல்பில் மனிதர்களுக்கு அமைந்த-வாய்ந்த சமய அனுபவ உரிமைகளைப் பாதுகாக்க அப்பரடிகள் அரசையே எதிர்த்துப் போராடினார். சமயச் சண்டைகள் என்று கூறப்படுபவை சமயச் சண்டைகள் அல்ல. சமயத்தின் பெயரால் நடந்த ஆதிக்கச் சண்டைகளே! எந்தவொரு தத்துவமும் ஆதிக்கத்தை மையப்படுத்திய நிறுவனமாக மாறி விட்டால் இத்தகைய விபத்துக்கு ஆளாவதைத் தவிர வேறு வழியில்லை. ஆதலால்தான் சமயங்களில் மிகப் பிற்காலத்தில் தோன்றிய இசுலாமிய சமயம் மதத்தலைவர்களை, புரோகிதர்களை மேலதிகாரமுடையவர்களாக ஏற்றுக் கொள்ளாமல் இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க.

மனித மன வளர்ச்சிக்குச் சமயங்கள் உதவியுள்ளன. சமயத்தின் பெயரால் சில நிறுவனங்கள், சில நாடுகள், சில இனங்கள் தவறுகள் இழைத்திருக்கக் கூடும். வரலாற்று நிகழ்வுகளில் உண்மையை ஓர்ந்து தெளியும் மனப்பாங்கு இல்லாது போனால் காலப்போக்கில் உண்மையே இராது.

சமயநெறி சாதி, இன வேறுபாடுகளைக் கடந்தது. ஆற்று வெள்ளம் வையகத்தை வாழ்கிக்கும், பயன்படுத்து மாறு பயன்படுத்தினால்! அதில் வீழ்ந்து தற்கொலை செய்து கொண்டால் என்ன செய்வது?

மதம் அல்லது சமயம் உலகத்தில் மனிதனுடைய இடத்தை நிர்ணயிக்கிறது, உறவுகளின் விளைவை உணர்த்திக் காட்டுகிறது வாழ்க்கையில் அனைத்து இன்பங்களையும் பெற்று இன்புற்று வாழ வழி நடத்துகிறது. உலகம் கடவுள் விருப்பின் வழியது. கடவுள் விரும்புவது உலகத்தின் இன்ப விருப்பின் வழியது. கடவுள் விரும்புவது உலகத்தின் இன்ப வைப்பு. நீ அந்த உலகத்தின் உறுப்பினன். ஆதலால், உலகம் உயரப் பணியாற்று! கடவுள் விரும்பும் அனைத்துயிர் இன்பத் திற்கும் தொண்டு செய்! என்றெல்லாம் சமயம் கற்பித்து வழி நடத்துகிறது.

சைவத்தின் உயிரியற் கொள்கையும், பெளத்தத்தின் இரக்க உணர்ச்சியும், சமணத்தின் புலனடக்கமும், கிறித்த வத்தின் தொண்டும், இசுலாமியத்தின் கடவுள் நம்பிக்கையும் ஒருங்கிணையுமானால், புதிய விதி செய்ய முடியாதா? செய்ய முடியும். ஆதலால், வரலாறுகளில் நிகழ்ந்த தவறுகளை மறப்போம்! சமய அனுபவங்களின் வழி வளர்ந்துள்ள விரிவார்த்த அனுபவங்களை ஏற்போம்! மதிப்போம்! முழு உலகத்திற்கு எதிரிகளாக இருக்கிற முனைப்புகளை மழுக்கி ஒருமையுணர்வை வளர்த்து இந்த உலகம் இன்புற்று வாழ, வளரப் பொதுமையான-வள்ளளார் வழியில் சமயங்கடந்த பொது நெறி கொண்டோ, புதியவிதி சமைப்போம்!

புதிய தளிர்களைப் பெற்றுக் குலுங்கும் மரத்தின் அடிவேர் பழமையானதுதான்! புதிய தளிர்களைப் பெறாத மரம் பழமையல்ல; பட்டுப்போனது. சமய நெறிகள் பட்டுப்போனவை அல்ல; உயிர்ப்புள்ளவை; புதிய தளிர்களைத் தாங்கும் இயல்பின! ‘முள்ளைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியதாய்’ என்ற மாணிக்கவாசகரின் பாடல்வழி பொதுவிதி சமைத்து மனித மனவளர்ச்சிக்கு சமயத்தை உரியதாக்குவோம்.