குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3/அளவறிந்து ஆற்றுக

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
24. அளவறிந்து ஆற்றுக

இனிய செல்வ!

நல்வாழ்த்துக்கள்! நமது தமிழகத்தில் ஒரு போராட்டம் இப்போது நடந்து முடிந்திருக்கிறது. ஆம்! ஆசிரியர், அரசு அலுவலர்கள் போராட்டம் தான்!

இந்தப் போராட்டத்தை நடத்திய நண்பர்களது குறிக்கோளில் நாம் ஐயப்படவில்லை! ஆயினும், குறிக்கோளை அடையும் வகையில் உள்ள தடைகளைக் கண்டறிய வேண்டும் என்பது நமது விருப்பம்.

மைய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் ஊதியம் வேண்டும் கேட்பதில் தவறில்லை, நடைமுறைச் சாத்தியம் என்ன? இந்தியா ஒரு பெரிய நாடு. பலர் சொல்வதைப்போல இஃது ஒரு துணைக் கண்டம். இந்நாட்டில் மைய-மாநில அரசுகள் தனித்தனி வரவு செலவுத் திட்டமுடையன; தனித்தனி நிதி ஆதாரங்களும் உடையன. மைய அரசு, அதன் நிதி ஆதாரத்தில் சில கோட்பாடுகளின் அடிப்படையில் மாநில அரசுகளுக்கு நிதி தந்து உதவுகிறது. இந்த நிதி உதவி பெரும்பாலும் திட்ட அடிப்படையினாலான செலவுகளுக்காகவே அமையும். மைய அரசு பணிகளிலும் மாநில அரசுப் பணிகளிலும் எல்லோரும் சேர்தலுக்குரியவர். ஆனால் பலர் மைய அரசுப் பணிகளை விரும்பி நாடுவதில்லை. ஏன்? இவர்களுக்கு இந்திய நாட்டளவில் மாற்றங்கள் நிகழும். மாநில அரசைப் பொருத்தவரையில் மாநில அளவுதான். இரண்டு அரசு ஊழியர்களுக்கும் ஒரே ஊதியம் என்றால் மைய அரசுப் பணிக்கு யாரும் விரும்பிப் போகமாட்டார்கள். இந்திய நாட்டளவில் பணி மாற்றங்களை ஏற்றுக்கொண்டு பணி செய்வது என்பதூஉம், ஒன்றல்ல. ஒரு தன்மையுடையதுமல்ல. மைய அரசு ஊதியம் பெற விரும்புபவர் மைய அரசுப் பணியில் சேர்வதுதான் முறை.

மைய, மாநில அரசுகளின் நிதி வேறு. வேறானவை. அதுபோலவே நிதிப் பயன்பாட்டு முறையிலும் மாநில அரசுகள் சுதந்திரமுடையன, இந்தியா முழுவதற்கும் ஒருங்கு படுத்தப்பட்ட - மையப் படுத்தப்பட்ட நிதியில் ஒழுங்கு தோன்றினால் ஒரே மாதிரி ஊதியம் பற்றிச் சிந்திக்க இயலும். மாநிலத்திற்கு மாநிலம் அரசின் நிதி - ஆதாரங்க்ள், தனி நபர் வருவாய், நிதியைப் பயன்படுத்தும் வகை ஆகியவற்றில் நாடு தழுவிய நிலையில் கண்ணோட்டம் இல்லை. இந்தச் சூழ்நிலையில் மைய-மாநில அரசுகளில் ஒரே ஊதியம் வாங்குவது சாத்தியமா?

இனிய செல்வ, நமது மதிப்பிற்குரியவர்கள் ஆசிரியர்கள்! நமது அரசு அலுவலர்கள்! இவர்களுக்குக் கூடுதல் ஊதியம் வழங்குவது நல்லதுதான். யார்தான் மறுப்புக் கூற இயலும்? ஆனால் நம்முடைய தமிழகத்தின் பொருளாதார நிலை என்ன? நமது நிதிநிலை நெருக்கடிக்கு ஆட்பட்ட நிலை. நமது நாட்டில் கடந்த பல ஆண்டுகளாகவே நிதியில் ஒழுங்குகள் கடைப்பிடிக்கப் பெறவில்லை. திட்டமிலாத செலவு மிகவும் கூடுதல். தனி நபர் வருமானம் மிகவும் குறைவு. வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்கள் எண்ணிக்கையும் கூடுதல்தான். ஓர் அரசு தன்னுடைய பொருளாதார அடிப்படையைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அள்ளிக்கொடுக்குமானால் நாட்டின் செல்வம் கெடுமாம். இது திருவள்ளுவர் கூறும் கருத்து.

"உளவரை துரக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்"

(480)

என்பது திருக்குறள். மைய அரசைப்போல ஊதியம் வழங்க வேண்டுமானால் நமக்குச் சற்றேறக்குறைய 370 கோடி ரூபாய் செலவாகும். இந்தச் செலவை அரசு எப்படி ஈட்டுவது என்று வழிவகை காண வேண்டும். இல்லையானால் அரசின் நிதிநிலை கெடும். நாம் அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டாமா?

விலைவாசி ஏற்றத்தைக் காட்டி ஊதிய உயர்வு கேட்கப் பெறுகிறது. விலைவாசி ஏறியிருப்பது உண்மை. ஆனால் ஊதிய உயர்வு, விலைவாசி ஏற்றத்திற்குப் பரிகாரமாக இயலுமா? ஊதிய உயர்வின் மூலம் அதிகப் பணப்புழக்கம் ஏற்படுகிறது. உடனே விலையும் ஏறிவிடுகிறது. விலை ஏற்றமும் ஊதிய உயர்வும் நச்சுச் சுற்று வளையம் போல் சுற்றி வருகிறது. சுற்றி வந்து கொண்டே இருக்கிறது. இதற்குத் தீர்வுகாண ஒரே ஒரு வழிதான் உண்டு. ‘விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்துக' என்று மைய மாநில அரசுகளைக் கேட்பதுதான்! சீனா போன்ற நாடுகளில் தொடர்ச்சியாகப் பத்து ஆண்டுகள் கூட விலை ஏற்றம் இன்றி ஒரே நிலைப்பாட்டில் நிற்கிறது. நாமும் நமது அரசுகளை விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தும்படி கேட்கலாம். இப்படிக் கேட்பது கடமையும்கூட விலை, கட்டுப்படுத்த பெற்றால் நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்லது. ஒருக்கால் அரசால் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாது போனால் உற்பத்திப் பண்டங்களை வழங்கியும் உற்பத்திச் செலவைக் குறைத்தும் விலையைக் கட்டுப் படுத்தலாம். இத்தகு கோரிக்கைகளை வைத்துப் போராடுதல் நல்லது.

இந்தியாவில் மாநிலத்திற்கு மாநிலம் வாழ்க்கைச்செலவுப் புள்ளியும் மாறுபடுகிறது. ஆதலால் ‘ஒரே ஊதியம்’ என்ற கொள்கையைவிட "சீரான வாழ்க்கைக்குரிய ஊதியம்” என்ற கொள்கை வரவேற்கத்தக்கது. ஆனால் இதைக் கணித்து நடைமுறைப்படுத்துவது, எளிதான செயலன்று. அதனால் நாடு முழுவதும் கட்டுப்படுத்தப் பெற்ற விலை-ஒரே வாழ்க்கைச் செலவுப்புள்ளி என்ற நிலை உருவானால் நல்லது. இந்த அடிப்படையிலேயே ஊதிய ஏற்றத் தாழ்வுகளைக் கணிசமாகக் குறைக்கலாம். குறைத்துவிட முடியும். ஊதிய உயர்வுகளைக் கேட்டு "காகித நோட்டுக்களின்" புழக்கத்தை அதிகப்படுத்தி நாட்டின் நிதி நிலையைக் கெடுக்காமல் நியாய விலையில்-கட்டுப்படியாகும் விலையில் நுகர்வுப் பொருள்கள் கேட்பது, எல்லாமட்டத்திலும் இலவசக்கல்வி கேட்பது இலவசமருத்துவம் கேட்பது போன்றவைகள் வரவேற்கத் தக்கன. இந்த இனங்கள் புதிய நிதிச் சுமையைக் கொண்டுவராது. அதேபோழ்து சீரான வாழ்க்கைக்குத் துணை செய்யும்.
இன்ப அன்பு
அடிகளார்