குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3/ஆட்சிமொழிச் சிந்தனை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

27. ஆட்சிமொழிச் சிந்தனை

இனிய செல்வ! -

நல்வாழ்த்துக்கள்! தேர்தல் நெருங்குகிறது. தேர்தல் யுத்திகளுக்குக் கட்சிகள் அலைமோதுகின்றன. வழக்கம் போலத் தேர்தல் யுத்திகளில் இந்தி எதிர்ப்பு முக்கிய இடத்தை வகிக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம், தமிழகத்தில் இந்தி நுழையாமல் பாதுகாப்பது திராவிட முன்னேற்றக் கழகமே என்று உரிமை கொண்டாடுகின்றது. இனிய செல்வ! அண்மைக்காலத்தில் தோன்றிய தேசிய முன்னணியில் தி.மு.க. சேர்ந்தது. தேசிய முன்னணியில் உள்ள கட்சிகள், இந்தி இந்தியாவின் அலுவல் மொழி என்ற கொள்கையில் தீவிரக் கருத்துடையவை. ஆதலால், இந்தத் தேசிய முன்னணியில் சேர்ந்துவிட்டதால், இந்தி எதிர்ப்பைத் தி.மு.க. கைவிட்டு விட்டது என்று பரவலாகப் பேசப் படுகிறது. இஃது இன்றைய அரசியல் நிலைப்படி சரியான கருத்து அல்ல. காங்கிரஸ் வகுப்பு வாதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சி. அதே காங்கிரஸ், கேரளாவில் குறிப்பிட்ட மதப் பிரிவைச் சேர்ந்த முஸ்லீம் லீக்குடன் கூட்டு வைத்திருக்கிறது. இதனால் காங்கிரஸ் மதச் சார்பின்மையை வகுப்புவாதக் கொள்கையைக் கைவிட்டு விட்டதாகக் கூற முடியுமா? ஒருக்காலும் முடியாது. இனிய செல்வ! இந்திய அரசியலில் எந்த ஒரு கட்சியும் பலம் வாய்ந்த மக்கள் கட்சியாக இல்லை. ஆதலால் கூட்டணிகள் சேர்கின்றன. கூட்டணி, கொள்கை அடிப்படையில் அல்ல. தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமே நோக்கம் அல்லது நாட்டில் இருக்கும் கட்சிகளுள் பெரியதாகிய காங்கிரசை எதிர்ப்பதே நோக்கம். காங்கிரசை எதிர்ப்பது என்ற பொது உணர்வில் கட்சிகள் முன்னணியில் நிற்கின்றன. இந்த மனப்போக்கு இப்பொழுது வளர்ந்து, சிறிய, சிறிய கட்சிகளிடையே கூட மேலோங்குகிறது. அ.தி.மு.க-தி.மு.க.விற்கும் இடையே உள்ள பகைமை அத்தகையது. இவர்களுக்கிடையில் உள்ள பகைமை காங்கிரசுக்கு இலாபமும் கூட இனிய செல்வ! இது கிடக்கட்டும், அரசியல்! நாமும் மற்றவரைப் போலத் தமிழை விட்டு விடக் கூடாதல்லவா?

இனிய செல்வ! நமது நாட்டின் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் திருச்சி மாவட்டம் பெரம்பலூரில் அக்டோபர் 24ஆம் நாள் பேசுகையில் “தமிழ் உணர்ச்சி இருக்கலாம்; வெறி இருக்கக் கூடாது” என்று பேசியுள்ளார். இது நூற்றுக்கு நூறு உண்மை வரவேற்கத்தக்கது. ஆனால் உண்மை என்ன என்பது பாரதப் பிரதமர் ராஜீவ் காந்திக்குத் தெரியாமல் இருந்திருக்கிறது. தமிழர்களுக்கு இன்று தமிழ் உணர்ச்சியே இல்லை என்பதே உண்மை! "விடுதலை பெற்று நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் தமிழகத்தின் ஆட்சியில் முழு நிலைத் தகுதியில் தமிழ், ஆட்சி மொழி ஆகவில்லை. தமிழ் துறைதோறும் பயிற்றுமொழியாக வளரவில்லை. தமிழ், அறிவியல் தமிழாக வளம் பெறவில்லையே!” என்று நாளும் நினைந்து நினைந்து துடிக்கிறார் அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி. தமிழ் பேசத் தெரியாத தமிழ் ஆர்வலர் பேராசிரியர் விஞ்ஞானி கை.இ.வாசு அவர்கள் தமிழில் அறிவியலைக் கொணர ஓயாது உழைக்கிறார். ஆயினும் எங்கும் ஆங்கிலம் வாயிலாகக் கற்கும் பள்ளிகள்; கல்லூரிகளில் ஆங்கிலம் பயிற்று மொழி! இந்த நிலையில் தமிழருக்குத் தமிழில் வெறி இருப்பதாகப் பாரதப் பிரதமர் கூறியது முற்றிலும் உண்மை அல்ல. இனிய செல்வ! இந்தத் தேர்தலில் தமிழகத்தில் ஒரு புதிய செய்தியைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அதாவது, நமது பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் அக்டோபர் 26ஆம் நாள் திருமங்கலத்தில் பேசும்பொழுது, "இந்தி வெறியர்களைத் தமிழ்நாட்டுக்குள் நுழைய விடாதீர்கள்" என்று பேசியுள்ளார், தி.மு.கவின் தேசிய முன்னணி இணைப்பை எதிர்க்கும் முகத்தான் இப்படிப் பேசியுள்ளார். "இந்தி வெறி” என்பதை, காங்கிரஸ் ஒத்துக் கொள்கிறதா? அப்படியானால் இந்தியைப் பற்றிய காங்கிரசின் கொள்கை மாறியிருக்கிறதா? என்ற கேள்விகளுக்கு எல்லாம் விடை கண்டாக வேண்டும். இந்தியாவின் மொழிக் கொள்கை ஓரிடத்தில் முற்றுப் புள்ளியாகவும் ஓரிடத்தில் காற்புள்ளியாகவும் நிற்கிறது. இனிய செல்வ! இந்தி, இந்தியாவின் அலுவல்மொழி என்பது முடிந்த முடிவு. இது முற்றுப் புள்ளி உள்ள இடம், "இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பி ஏற்கும் வரையில் ஆங்கிலம் இணை ஆட்சி மொழியாக நீடிக்கும்" என்பது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பெற்ற தீர்மானம். இது அரசியல் சட்டத்தில் இடம் பெறவில்லை; அந்தத் தீர்மானத்தில் உள்ள "இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பி ஏற்கும் வரையில்" என்ற இடத்தில் காற்புள்ளிதானே இட முடியும்! என்றாவது ஒரு நாள் விரும்ப வேண்டும் என்பது தானே இதன் பொருள். இந்தக் காற்புள்ளியையே முற்றுப் புள்ளியாக நினைத்துச் சிலர் மகிழ்ந்தனர்; வெற்றிவிழாவும் கொண்டாடினர். ஆயினும் இந்தத் தீர்மானம் இந்தி வராது என்பதற்குரியதன்று.

இனிய செல்வ! இன்றுள்ள நிலை என்ன? இந்தி தமிழ்நாட்டில் வந்திருக்கிறதா? இல்லையா? இந்தி தமிழ் நாட்டில் வந்துவிட்டது என்பதே உண்மை. ஆங்கிலம், பயிற்று மொழியாகக் கற்பிக்கப்படுகின்றது. இந்தப் பள்ளிகளில் இந்தி இரண்டாவது அல்லது மூன்றாவது மொழியாகக் கற்பிக்கப்பெறுகிறது. இந்தி வகுப்புகள் நாடு முழுவதும் பரவலாக நடைபெறுகின்றன. இந்திய அரசாங்கப் பணியில் இருக்கும் அரசு அலுவலர்கள் பொது நிறுவனங்களில் அலுவலர்கள் ஆகியோர் நாளும் இந்தி படித்துத் தேறி ஊதிய உயர்வும் பெறுகின்றனர்; உயர்நிலையும் பெறுகின்றனர். சந்தடியே இல்லாமல் இந்தி தமிழகத்தில் வளர்கிறது. ஆயிரக்கணக்கானவர்கள் இந்தி கற்கின்றனர். எதிர்காலத்தைப் பற்றி உய்த்தறியும் ஆற்றல் மிக்க சமுதாயத்தினர் இந்தியைப் படிக்க ஆரம்பித்து விட்டனர். கிராமபுறத்தில் வாழும் தமிழர்கள் தான் இன்று இந்தி கற்கவில்லை. அவர்களுக்கு ஆங்கிலம் கற்கும் வாய்ப்பும் இல்லை. ஏன்? கிராமத்து மக்கள் இரண்டாம் தரத்தினர்! அவர்கள் தமிழில் தொடர்ந்து கற்கவும் முடிவதில்லை. இனிய செல்வ! ‘தமிழ் ஆர்வம்' ‘இந்தி எதிர்ப்பு’ ஆகிய இவை வரலாறாக இல்லை; வாழ்வாக இல்லை. இதுவே உண்மை. இத்தகு உண்மையைச் சிலர் ஏற்க மறுக்கலாம். ஆயினும் திருக்குறள் நெறிப்படி.

'உலகத்தா ருண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப்படும்’

என்பதே உண்மை. இன்ப அன்பு

அடிகளார்