குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3/இகலின்றி வாழ்தல் இனிது

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

22. இகலின்றி வாழ்தல் இனிது

இனிய தமிழ்ச் செல்வ!

உலகம் அபாய கட்டத்திலிருந்து தப்பித்துவிட்டது! ஆம் அபாயத்திலிருந்து தப்பித்துவிட்டது! ஆனாலும் இன்னமும் பாதுகாப்பு கிடைக்கவில்லை. ஆம்! இனிய செல்வ! அமெரிக்க-சோவியத் நாடுகளின் தலைவர்கள் மாஸ் கோவில் கூடினர்; கலந்து பேசினர். மானிட சமுதாயத்தை அழிவிலிருந்து பாதுகாப்பதற்குரிய ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை இருவரும் செய்து கொண்டுள்ளனர். ஏவுகணைகள் அதாவது கண்டம் விட்டுக் கண்டம் சென்று தாக்கும் ஏவுகணைகள் 50 விழுக்காட்டுக்கு மேல், உற்பத்தி கட்டுப்படுத்தப் பெறும். அணு ஆயுத சோதனைகள் பரஸ்பர கண்காணிப்பின் கீழ் நடைபெறும். இதுவே ஒப்பந்தத்தின் சாரம்.

இனிய செல்வ! உலகத்தைக் காப்பாற்ற இந்த உடன் படிக்கை போதாது. போர் ஆயுதங்களையே நாடுகள் உற்பத்தி செய்யக்கூடாது. படைகள் உலக நாடுகளின் பேரவையிடம் மட்டும் தான் இருக்க வேண்டும். நாடுகளுக்குரியது, போலீசு படை மட்டும்தான் என்ற நியதி உருவாக வேண்டும். இத்தகையதொரு நியதி எதிர்காலத்தில் உருவாகத்தான் போகிறது. மண்ணகம் அமைதி தழுவிய வாழ்க்கையை ஏற்பது என்பது வரலாற்றின் கட்டாயமாகும். அமெரிக்க-சோவியத் நாடுகள் இரண்டு சித்தாந்தங்களின் பிரதிநிதிகள். ஒன்று முதலாளித்துவம். பிறிதொன்று பொதுவுடைமை. இனிய செல்வ, இவ்விரண்டு நாடுகளுமே வளர்ந்து எழுகின்றன. இவ்விரண்டு நாடுகளுக்கிடையில் இருந்து வந்த கசப்புணர்வு அளவற்றது. ஆயினும் அண்மைக் காலமாக இரண்டு நாடுகளின் தலைவர்களும் சந்திக்கின்றனர்; கலந்து பேசுகின்றனர்; மானுடம் வாழ்வதற்குரிய நெறிமுறைகளை ஆய்வு செய்கின்றனர். இது உலக வரலாற்றிற்கு ஒரு புதுமை போல! இனிய செல்வ, இன்றைய சோவியத் ஒன்றியத் தலைவர் கார்பொச்சேவ் அற்புதமான மனிதர்! சிந்தனையாளர்! சமாதானத்தின் காவலர்! இவர் முதலில் அமெரிக்காவுக்குச் சென்றார்! அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ரீகனும் நல்ல மனிதர், இவ்விரு தலைவர்களும் இன்று திருக்குறள்

தி.21. வழியில் இணைந்து நடைப்பயிலத் தொடங்கியுள்ளனர். ஆம்! திருவள்ளுவர் வழியில் நடக்கின்றனர்.

திருவள்ளுவர் படை வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். ஆனால் அந்தப் படை போர் செய்வதற்காக அல்ல! எதிரியை அச்சுறுத்துவதற்காகத் தான். படை. அரண் முதலியன பற்றிப் பேசிய திருவள்ளுவர், மிகுந்த பகை ஆகாது என்றும் கூறியுள்ளார். "பகைமாட்சி" என்று ஒர் அதிகாரமே இயற்றியுள்ளார். “இகல்” என்னும் ஒர் அதிகாரம் இயற்றி உள்ளார். இனிய செல்வ! இந்த அதிகாரத்தில் உள்ள பத்துக் குறள்கள் எல்லோரும் படிக்கத்தக்கன. இந்த அதிகாரத்தில் பகை கொண்டு பொருதுவதால் வலிமை கெடுகிறது என்று வள்ளுவம் கூறுகிறது. பிற உயிர்களுடன் கூடிக் கலந்து வாழாமல் பகை வழிப்பட்டு வாழும் குற்றம் பொருந்திய வாழ்க்கை தகாது என்று குறள் கூறுகிறது. இனிய செல்வ! சிலர் வலியப் பகைமைக் குணங்கொண்டு மோதவருவர் என்று வள்ளுவம் கூறுகிறது. இன்றைய வல்லரசு நாடுகள் இந்தத் திருக்குறள் நெறிக்குப் புத்துயிர் கொடுத்துள்ளன. செல்வ! மீண்டும் ஒரு திருக்குறள். இதோ படித்துப்பார்!

இகலான் ஆம் இன்னாத எல்லாம் நகலான் ஆம்
நன்னயம் என்னும் செருக்கு.

(860)

எவ்வளவு அற்புதமான திருக்குறள்! ஒருவன் மாறுபாடு கொண்டு வாழ்வானாகில் பொல்லாதன பல உண்டாகும். இதற்கு மாறாக நட்புக் கொண்டொழுகின் செல்வம் உணடாகும.

இனிய செல்வ! இன்றைய உலக வல்லரசு நாடுகளாகிய அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் பகைமை பாராட்டாது நேச நாடுகளாக விளங்குவது உலகத்திற்கு நல்லது. ஏன், நமக்கும் நல்லது. இனிய செல்வ, உலகப் பேரரசுகள் கூட ஒன்று சேர்கின்றன! ஆனால்! ஆனால்...! நம்முடைய நாட்டு மக்கள், குறிப்பாகத் தமிழர்கள் பகையாளிகளாக வாழ்வது வெட்கக்கேடு. ஆம்! யாழிடைப் பிறந்த இசைபோல, நமக்குத் திருக்குறள் விளங்குகிறது என்று கூறினால் தவறல்ல. சமாதானம் செய்து வைப்பவர் பாக்கியவான்கள். நமது நாட்டு வாழ்க்கையில் அமைதியும் சமாதானமும் திருக்குறள் வழி வருவதாகுக! உலகம் அமைதியுற வள்ளுவர் காட்டும் வழியே வழி!
இன்ப அன்பு
அடிகளார்