குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3/இட ஒதுக்கீட்டுக் கொள்கை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

88. இட ஒதுக்கீட்டுக் கொள்கை

இனிய செல்வ,

புஸ்வானம் வந்துவிட்டது! வெடித்து விட்டது! அது என்ன என்கிறாயா? அதுதான் சமூகநீதி என்ற பெயரில் இட ஒதுக்கீட்டுக் கொள்கை! 69 விழுக்காடு இட ஒதுக்கீடு!

'சமூகம்’ - என்ற சொல் சாதியைத்தான் குறிக்கும். 'சமுதாயம்’ என்ற சொல் பொதுவாக மக்கள் சமுதாயத்தைக் குறிக்கும். சாதிமுறை அமைப்பும், அதனால் ஏற்பட்ட தாழ்வுகளும் நாடறிந்தவை. அதனாலேயே வள்ளுவமும், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று கூறியது. மனிதரில் பள்ளத்தில் கிடக்கிறவர்களை மேலே தூக்கிக் கொண்டு வரவேண்டியது அவசியம்., கடமையும் கூட! பள்ளத்தில் கிடப்பவர்களில் சாதி பார்த்துச் சிலரைத் தூக்குவது, சிலரைப் பள்ளத்திலேயே போட்டு விடுவது என்பது எப்படி நீதியாகும்? பள்ளத்தில் கிடப்பவர்களிலும் கூடச் சிலர் புறக்கணிக்கப் படுகின்றனர் சாதியின் பெயரால்!

இனிய செல்வ! அதுகிடக்கட்டும்! குறிப்பிட்ட சாதிகளில் கூடப் பள்ளத்தில், படுகுழியில் கிடப்பவர்கள் மேலேறவில்லை. அவர்களிலும் தமது இயல்பூக்கத்தினால் கையை மேலே நீட்டி ஏற முயற்சி செய்கிறார்களோ அவர்களுக்குத் தான் இட ஒதுக்கீட்டுக் கொள்கை சென்ற காலத்தில் பயன்பட்டிருக்கிறது. இனிய செல்வ! சுதந்திரம் வந்து 47 ஆண்டுகளுக்குப்பிறகு பிற்பட்டோர் பட்டியல், மிகவும் பிற்பட்டோர் பட்டியல் என்று பட்டியல் நீண்டு கொண்டே போவது ஏன்? இனிய செல்வ, ஒரே பாராளுமன்றத்தொடரில், இடஒதுக்கீட்டுக் கொள்கையின் சட்ட வரைவாக்கம் நாடாளுமன்றத்தில் தீர்மானம் வருகிறது. அதே பாராளுமன்றத்தில் நமது நிதியமைச்சர் தனது அலுவலகத்தில் மத்திய அரசில் வேலை பார்ப்போர் எண்ணிக்கையில் சற்றேறக்குறைய 38,500 பேர் வேலை நீக்கம் செய்திருப்பதாக அறிவித்துள்ளார். அதாவது வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார். இன்னும் 8,000 பேருக்குச் சீட்டுக் கிழிக்கப் போகிறாராம். நமது மாநில அரசிலும் 10 ஆண்டுகளாகக் காலி ஏற்றப்பட்ட பணியிடங்கள் சற்றேறக்குறைய 27,000 காலியாக உள்ளன. ஒரு நடுநிலைப்பள்ளியில் மூன்றே ஆசிரியர்கள் பணி செய்கின்றனர். இப்போது ஆசிரியப் பணியிடங்கள் நிரப்ப இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் முழுவதும் அல்ல, அறை குறையாக, பொறுத்திருந்து பார்ப்போம்.

இனிய செல்வ, அரசுப் பணிமனைகளில் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை, ஆண்டு தோறும் 1 விழுக்காடு தான் வேலை வாய்ப்பு உருவாக்கப்படுகிறது. இனிய செல்வ, வேலையில்லாத் திண்டாட்டம் 300 விழுக்காடுக்கும் மேலாக வளர்ந்து வந்திருக்கிறது. வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 1989க்கு முன் பதிவு செய்தவர்களின் எண்களையே இப்போது அனுப்பி வருகின்றனர். எவ்வளவு தேக்கம் பார்! இந்த நிலையில் ஆட்குறைப்பும் நடைபெற்று வருகிறது, இந்த நிலையில் 69 விழுக்காடு ஒதுக்கீடு என்ன பயன் தரும்?

இட ஒதுக்கீட்டுக் கொள்கை ஒரளவு கல்விக்குப் பயன்படும். அதுவும் குறிப்பாகத் தொழில் கல்விக்குப் பயன்படும்.

இனிய செல்வ, போதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யாத போது மாணவர்கள் எதைக் கற்பார்கள்? பட்டப் படிப்புக்களும், வேலை வாய்ப்புக்களும் ஒத்திசைந்து போக வில்லை. இஃது ஒரு தீய சுழற்சி வட்டம்! இனிய செல்வ. இந்தியக் குடிமகனின் பாதுக்ாப்பு, நீதித் துறையேயாம். நீதித்துறையை விஞ்சி அரசியல் சட்டத்தைத் திருத்துவது இன்று நல்லதாக இருக்கலாம். ஆனால் நெடிய கால நோக்கில் பார்த்தால் மக்கள் அவலப்படுவார்கள். மக்கள் விருப்பம், ஆட்சியாளர்கள் விருப்பம் நீதித்துறை இவைகளுக்கிடையில் மோதல் ஏற்படுமாயின், மாறுபாடுகள் தோன்றின், உடன் அந்தக் குறிப்பிட்ட செய்திபற்றி மக்கள் கருத்தறிய, கருத்துத் தேர்வு நடத்தலாம். அல்லது முத்தரப்பினரும் அடங்கியவர்களின் குழு ஒன்று நியமித்து, மக்கள் கருத்தறிந்து, அறிக்கை தரச்செய்து நடைமுறைப்படுத்தலாம். அப்படித்தான் அம்பா சங்கர் அவர்கள் ஒரு நபர் கமிஷன் நியமிக்கப்பட்டது. அவர் அந்த அறிக்கை தயார் செய்து தந்தார். அந்த அறிக்கை ஆட்சியாளருக்குப் பிடிக்காததால் அதை வெளியிடவும் இல்லை; நடைமுறைப் படுத்தவும் இல்லை.

இனிய செல்வ, நமது நாட்டு ஆட்சிமுறை மூன்று அமைப்புக்களைக் கொண்டது. முதல் அமைவு பாராளுமன்றம், சட்டமன்றம், அமைச்சரவை ஆகியன. இவை அரசியல், சமூக, பொருளாதாரக் கொள்கைகளை நிர்ணயிக்கும். இரண்டாவது நிர்வாக இயந்திரம்-அதிகார வர்க்கம், இந்த அமைவின் பொறுப்பு அமைச்சரவையின் கொள்கைகளையும், திட்டங்களையும் நடைமுறைப் படுத்துவது; நிறைவேற்றுவது! மூன்றாவது நீதித்துறை! இதன் பணி முதல் இரண்டு அமைவுகளின் செயற்பாடுகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு நீதி வழங்குவது. இந்த மூன்று அமைவுகளுக்கும் தனித்தனியே கடமைகளும், அதிகார வரம்புகளும் நிர்ணயிக்கப் பெற்றுள்ளன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இரண்டாவது, மூன்றாவது அமைவுகளின் உரிமைகள், அத்து மீறல் செய்யப்படுகின்றன. முதல் அமைவே சர்வமும் ஆகத் துடிக்கிறது. இனிய செல்வ, இந்தப் போக்கு ஜனநாயகத்தின் அடித்தளத்தையே தகர்த்து விடும். நமது நாட்டில் வளர்ந்து வரும் கட்சி மனப்பான்மை மிகவும் கசப்பாக இருக்கிறது. கட்சிகளுக்கிடையில் சண்டைகளே நடக்கின்றன. ஆளும் கட்சியைச் சாராதவர்களை அந்தியர் களைப் போல நடத்தும் மனப்போக்கு மெள்ள மெள்ள வளர்கிறது; வளர்ந்து வருகிறது. காங்கிரஸ் தோற்றதற்குக் காரணம், காங்கிரஸ் கொள்கைகளை ஏற்காதவர்கள் கூட அதன் உறுப்பினர், செயற்குழு உறுப்பினர்கள், சலுகைகளையும் பெற்றனர். சலுகையும் முடிந்தது. கட்சியைக் கைவிட்டு விட்டனர். ஆதலால் ஆளும் ஆட்சி முறையில் கட்சி வாசனை தலைக்காட்டக்கூடாது.

இனிய செல்வ, இட ஒதுக்கீட்டுக் கொள்கை வெற்றி பெறட்டும்! நமது வாழ்த்துக்கள்! பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்! இட ஒதுக்கீட்டில் வேலை வாய்ப்புக்கள் விரிவாக்கப்படுமா? அடுத்த நூற்றாண்டிலாவது எல்லோரும் எல்லாம் பெறுவார்களா?
இன்ப அன்பு
அடிகளார்