குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3/இந்தியனாகச் சிந்திப்போம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
62. இந்தியனாகச் சிந்திப்போம்

இனிய செல்வ,

மனிதன் நடுநிலையாளனாக இருத்தல் அரிது. அரிதினும் அரிது. சார்புகளே மனிதனைப் பிடித்தாட்டும் தன்மையன. மனிதனை மனிதனின் ஆன்மாவை, ஆன்மாவின் அறிவுப் புலனை, உணர்வைத் தொட்டு ஆட்டிப் படைக்கும் ஆற்றல் சார்புகளுக்கு உண்டு. இனிய செல்வ, சார்பு என்றால் என்ன? தன்னயப்பு முதற்சார்பு. "தான்” என்ற உணர்வின் அடிப்படையில் தன்னையும் தனது நலன்களையும் முதனிலைப்படுத்தி மற்றவர்களை ஒரு பொருட்டாக எண்ணாதவர்களுடைய உணர்வு எப்பொழுதும் அவர்களைப் பற்றியே வட்டமிடும். அவர்கள் தங்களுடைய விருப்பங்களையே முதன்மைப் படுத்துவர். தங்களுடைய தவறுகள் அவர்களுக்குத் தெரியவே தெரியாது. தெரிந்து கொள்ளவும் முயற்சி செய்ய மாட்டார்கள். யாராவது எடுத்துக் கூறினாலும் ஏற்க மாட்டார்கள்; மாறாகக் கோபம் கொள்வார்கள்.

இனிய செல்வ, அடுத்து இனம், சாதி, மொழி, சமயம், கொள்கை, கோட்பாடு, பற்று ஆகியனவும் முறையே சார்புகளாக அமைவது உண்டு. இவையெல்லாமே மனிதனை, மனிதனின் சுதந்திரத்தை, மனிதனின் விரிந்த பரந்த நிறை நிலையைக் குறைப்படுத்துவன சார்புகளேயாம். இனிய செல்வ, அப்படியானால் இவை வாழ்க்கையில் எடுத்துக் கொள்ளத் தக்கவையல்லவா என்று கேட்கிறாய்! நல்ல கேள்வி! நாம் இனம், மொழி, சமயச் சார்பின்றி வாழ்தல் வேண்டுமா? வாழ்தல் இயலுமா? ஒருக்காலும் இயலாது. ஆயினும் இவைகளின் மீது நாம் விருப்பங்கொள்ளுதலும் இவற்றை ஏற்றுப் போற்றுதலும் வாழ்க்கையில் கடைப் பிடித்தலும் தவிர்க்க இயலாதன மட்டுமல்ல; கடமையும் கூட! ‘ஒருவன் அவனை நேசித்தல் தவறன்று. ஆனால், அதுபோல மற்றவர்களுக்கும் வாழ உரிமை உண்டு’ என்றும் மற்றவர்களும் வாழ்தல் வேண்டும் என்றும் எண்ணுவது சார்பற்ற நிலை. மற்றவர்கள் வாழ்வதற்காகத் தன்னுடைய அறிவறிந்த ஆள்வினையை அர்ப்பணிப்பது நோன்பு. மற்றவர்கள் நலனுக்காகத் தன்னுடைய வாழ்க்கையையே அர்ப்பணிப்பது தியாகம். இது ஆன்மாவின் பரிணாம வளர்ச்சி. தியாக நிலையை அடைந்த ஆன்மாக்கள் தான் புகழ்பட வாழுவன; புவியை நடத்துவன; இன்ப அன்பு நிலையை எய்துவன. இனிய செல்வ, இது போலத்தான் பிற சார்புகளும் கூட! அவரவர் மொழியைப் போற்ற வேண்டும்; விரும்பிக் கற்க வேண்டும். அது போலவே, மற்றமொழிகளை மதித்து விரும்பிக் கற்க வேண்டும். அம்மொழிகளின் நலன்களை எடுத்துக் கொள்ள வேண்டும். நாட்டுப் பற்றுக் கூட அளவை மீறும் பொழுது சுரண்டலையும் சண்டைகளையும் தோற்றுவிக்கின்றன. ஆதலால் நாட்டுப்பற்று தேவை. ஆனால் நாட்டுப் பற்று உலகந்தழீஇய உறவுக்குத் தடையாக அமைந்து விடக் கூடாது. இது போன்ற நிலைகளில் வளர்வதுதான் சார்பற்ற நிலை.

இனிய செல்வ, காவிரி நீர்ச் சிக்கல் ஏற்பட்டபின் நீ பார்த்த காட்சிகள், நீ கேட்ட செய்திகள் இந்தியா என்றொரு நாட்டினைத் தழுவிய இயல்புக்கு ஏற்றனவாக இருந்தனவா? கவனத்துடன் எண்ணுக. அகில இந்தியக் கட்சிகள் என்ற ஆல வட்டத்தின் கீழ் இயங்கும் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் கூட இந்தியராக எண்ணவில்லை; இந்தியராகப் பேசவில்லை. தமிழ்நாடு; கர்நாடகம் என்ற சார்பு வட்டங்களுக்குள்ளேயே நின்றுதான் பேசினார்கள்; எழுதினார்கள். இனிய செல்வ, கன்னடன், தமிழன் என்ற இனவழிச் சார்புகளே மோலோங்கி நின்றன; இந்தியராக எவரும் நடந்து கொள்ளவில்லை. இவ்வளவு பரந்த நாட்டில்

தி.28. இந்தியராக ஒருவர் கூட வளர்ந்து உயர்ந்து நின்று கன்னடர்களின் எண்ணம், தமிழர்களின் எண்ணம் இவ்விரண்டையும் சீர்துரக்கி ஆய்வு செய்து எழுத வில்லை; பேசவில்லை! இனிய செல்வ, ஏன் நடுவு நிலை ஒழுக்கமாக வளரவில்லை. சார்புகளுக்கு அப்பாற்பட்டுச் சிந்திக்கும் பழக்கம் வளரவில்லை. ஒரோ வழி சிந்தித்துக் கூறினாலும் மக்கள் மன்றம் ஏற்குமா? இது ஐயப்பாடு! குறுகிய பற்றுக்கள் மூலம் உணர்ச்சியூட்டி மக்களை இயக்குவதன் மூலம் ஒரு கூட்டத்தை வைத்துக் கொள்ள விரும்பும் 'தலைவர்கள்’ இன்று மிகுதி, இன்று நாட்டின் தலைவர்களாக யாரையும் காணோம். சாதிகளின் தலைவர்களாக மதங்களின் தலைவர்களாக, மாநிலங்களின் தலைவர்களாக கட்சிகளின் தலைவர்களாகத்தான் பலரும் விளங்குகின்றனர். இது வளரும் சமுதாயத்திற்கு நல்லதன்று. சார்புகள் இருக்கலாம். சார்புகளை வளர்க்கலாம். தவறில்லை. ஆனால் சார்புகள் வழிப்பட்ட நிலையில்தான் எண்ணுவது, சிந்திப்பது செயற்படுவது என்றால் இது மனித குலத்திற்கு நலம் தராது; பயன் தராது; இனிய செல்வ, சார்புகள் காலூன்றி நிற்கும் இடமாகப் பயன்படலாம். ஆனால், சார்புகள் வாழ்க்கையாக மாறி விடுதல் கூடாது. சார்புகள் வழி சிக்கித் தவிக்கும் சமுதாயம் நோய்வாய்ப்படும், வளராது. சிறு சிறு கலகங்களால் சீரழியும். இனிய செல்வ சார்புகளைக் கடந்த நடுநிலை காக்கும் சிலர் இன்று நமக்குத் தேவை. தமிழனாக மட்டுமல்லாமல் இந்தியன் என்ற மனப்பான்மையில் சிந்திக்கும் இயல்பு தேவை. இந்த இயல்பு வளர்ந்தால் இந்தியா இருக்கும். இல்லையென்றால் சோவியத்துக்கு நேர்ந்த கதிதான் இந்தியாவுக்கும் ஏற்படும்.

"சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தராச் சார்தரும் நோய்!”

இன்ப அன்பு
அடிகளார்