குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3/இரண்டு சக்கரங்கள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

71. இரண்டு சக்கரங்கள்

இனிய செல்வ,

இன்று உலக முழுவதும் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா முதலிய நாடுகளில், மற்ற நாடுகளில் மக்களாட்சி அமைவதற்கு முன்பே அரசியற் கிளர்ச்சி நடந்து மக்களாட்சி முறை அமைத்துவிட்டனர். இங்கிலாந்தில் அரசர் பரம்பரை இருந்தாலும் பாராளுமன்ற ஆட்சி முறை அமைந்துள்ளது. இந்த வேலை முடிந்தபிறகு, அந்த நாடுகளில் அரசியல் இயக்கங்கள் தங்களுடைய வேகத்தைத் தணித்துக் கொண்டு நாட்டின் முன்னேற்றப் பணிகளில் கவனம் செலுத்துகின்றன. அதனால் அந்த நாடுகள் வளர்கின்றன.

நமது நாட்டு வரலாறு வேறு மாதிரியாகச் செல்கிறது. நமது நாட்டிலும் சுதந்தரப் போராட்டம் நடந்ததுண்டு. அப்போது அதில் ஈடுபட்டவர்களுடைய எண்ணிக்கை அளவில் கூடுதல் என்று சொல்ல முடியாது. நமது சுதந்தரப் போராட்டம் மக்கள் போராட்டமாக நடந்ததா என்பதே ஆய்வுக்குரிய செய்தி! ஆனால், சுதந்தரத்துக்குப் பிறகுதான் நமது நாட்டில் அரசியல் சூடுபிடித்திருக்கிறது. புதிய புதிய கட்சிகள் தோன்றுகின்றன; தலைவர்கள் தோன்றுகின்றனர். ஊர்தோறும் கட்டப்பெற்றுள்ள கொடிகளை எண்ணினால் நமது நாட்டுக் கட்சிகளை எண்ணிச் சொல்லிவிடலாம்! இனிய செல்வ, அக்காலத்தில் ஒரு சிற்றூரில் ஒரு குடும்பம் அல்லது இரண்டு குடும்பங்கள் அரசியலில் ஈடுபட்டன. இக்காலத்தில் அரசியலில் ஈடுபடுவோர் எண்ணிக்கை கூடியிருக்கிறது. இது தவறன்று. மேலும் கூடக்கூடலாம்; கூடவேண்டும்! ஆனால், மக்களாட்சி முறைக்குரிய நெறி முறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

இனிய செல்வ, திருவள்ளுவர் முடியாட்சிக் காலத்தில் இருந்தவர். அவர் இந்தக் காலத்துக்குடியாட்சி முறையை அறிமுகப்படுத்தியுள்ளார். அரசன் இருக்கலாம்; அரசுகள் இருக்கலாம், அரசுகளுக்கு அதிகாரம் இருக்கலாம். ஆயினும் அந்த அதிகாரம் அரசனின் விருப்பை-வெறுப்பைச் சார்ந்ததாக இருக்கக்கூடாது. அரசு, பொது; நாட்டு மக்கள் அனைவருக்கும் பொது; ஆள்வோரின் பகைவருக்குக்கூட உரிமையுடையது. ஆள்வோர் விருப்பு-வெறுப்பு உடையவராக இருத்தல் கூடாது. ஆள்பவர்கள் வழிவழியாக வந்துள்ள முறைகளையும், சட்ட நூல்கள் வகுத்துக் கூறும் முறைகளையுமே கருவியாகக் கொண்டு ஆட்சி நடத்த வேண்டும்; நீதி செலுத்த வேண்டும். இதுதான் ஆட்சிமுறை.

மக்களாட்சி முறை நாடுகளில் சட்டங்களே ஆள்கின்றன; ஆளவேண்டும். ஆளுங் கட்சியும், எதிர்க் கட்சியும் ஒரு வண்டியின் இரண்டு சக்கரங்கள் போன்றவை. அல்லது அண்ணா கூறியது போல, "எதிர்க்கட்சி, ஆளுங்கட்சிக்கு மூக்கணாங்கயிறு போன்றது”. இனிய செல்வ, மூக்கணாங்கயிறு, மாட்டின் மூக்கை அறுக்கவும் கூடாது; வண்டியையும் தன்போக்கில் போகவிடாமல் மாடுகளை இழுத்துப் பிடிக்கவும் பயன்படவேண்டும். இன்று ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் எதிரிகளாக நடந்து கொள்கின்றன. ஒரு சிலர் மையொட்டித் தாளைப்போல நடந்து கொள்கிறார்கள். இவ்விரண்டு முறையுமே தவறு.

எதிர்க்கட்சிக்கு என்று சில கொள்கைகள் உண்டு. அந்தக் கொள்கைகளை ஆளுங்கட்சி ஏற்காது. ஆனால், பொதுவாக மக்களுக்கு நலன்கள் செய்யும் ஆட்சிக்கு உற்ற துணையாக எதிர்க்கட்சிகள் இருக்க வேண்டும். ஆளுங்கட்சி மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபடும்பொழுது எதிர்க்கட்சிகள் அவைகளை நிகழவொட்டாமல் தடுக்க வேண்டும். இனிய செல்வ, நீ கேள்வி கேட்பது புரிகிறது. இன்று நாடு தழுவிய நிலையில் மக்களாட்சி முறை. முறைபிறழ்ந்து விட்டதால் மக்கள் நலம் நாடும் பணி குறைந்து வருகிறது. நடைபெறும் சில பணிகளும் கூட குழுஉ மனப்பான்மையில் அவரவர் கட்சியினருக்கே அமைகிறது. இனிய செல்வ, எதிர்கட்சிகளைக் கண்காணித்தல், ஓட்டுக் கேட்டல் போன்றவைகள் நிகழ்கின்றன. ஏன்? சில சமயங்களில் பொதுவிதிகள் கூட மறுக்கப்படுகின்றன. இவையெல்லாம் மக்களாட்சி முறைக்கு உடன்பாடானவை அல்ல. திருக்குறள்

"முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்”

என்று கூறியது.

முறை செய்தலாவது தன் ஆட்சிக்குட்பட்ட அனைவரையும், மகவெனப் பல்லுயிரையும் ஒக்கப் பார்த்து நலம் செய்ய வேண்டும். யார்மாட்டும் வெறுப்புக் காட்டக் கூடாது; விருப்பமும் காட்டக்கூடாது. ஆட்சிக்கு அடிப்படை ஆள்பவர்களின் விருப்பங்களும் அல்ல; வெறுப்புகளும் அல்ல, "முறை”கள்தான்!

அரசு, தம் மக்களைக் காப்பாற்றுதல் என்றால் என்ன பொருள்? பகைமைகளிலிருந்தும் பாதுகாப்பது என்றுதான் பொருள். உழைப்பாளர்கள் உற்பத்தி செய்து பொருளைக் குவிக்கின்றனர். ஆயினும் அவர்கள் வாழ்க்கையில் செழிப்பு இல்லை! நாளுக்குநாள் வறுமைக்கோடு வளர்கிறது! இந்தச் சுரண்டல்முறைப் பொருளாதாரத்திலிருந்து மக்களைக் காப்பாற்றுவது வழிவழி வளர்ந்து வந்துள்ள அறநெறிமுறை! இந்த முறையை அரசுகள் தவறாது காப்பாற்ற இது வேண்டும்!

மக்களுக்குள் பகைமை வருவது இயல்பு. ஆனாலும், ஒருவன் தன் பகைவனை அழிக்க அரசு இடம்கொடுக்காமல் காப்பாற்றவேண்டும். அதுதான் முறை!

இனிய செல்வ, இந்த முறை சார்ந்த அரசுகளாலேயே மக்களைக் காப்பாற்ற இயலும்!
இன்ப அன்பு
அடிகளார்