குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3/உலகம் தழீஇயது ஒட்பம்!

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
7. உலகம் தழீஇயது ஒட்பம்!

மானுடத்தின் வெற்றி பொருந்திய வாழ்க்கைக்கு தேவை அறிவு. திருக்குறள், அறிவைக் கருவியென்று இனங் காட்டுகிறது. அறிவு என்பதற்குத் தெளிவான இலக்கணத்தைத் திருக்குறள் எடுத்துக் கூறுகிறது. அறிவு, எல்லைகளைக் கடந்தது; மொழி, இனம், சமயம், நாடு முதலிய சிறைகளைக் கடந்தது! சிந்தனை சிறைப்பட்ட இடத்தில் அறிவு ஆக்கம் பெறுவதில்லை. ஆதலால், அறிவுக்கு மொழியெல்லையில்லை. அறிவு வளர்ச்சிக்கு மொழி முதலியவை தடையேயாம். பல மொழிகள் கற்பதும் பல நாடுகள் காண்பதும் உலகமாந்தருடன் கலந்துறவாடுவதும் அறிவு வளர்ச்சிக்குத் துணை செய்யும் வாயில்கள். உலகம் தழுவிய நிலையில் வாழும்போதுதான் அறிவு விரிவடைகிறது; வளர்கிறது.

"உலகம் தழீ இயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு”

என்பது குறள்.

"உலகம் தழீஇயது ஒட்பம்" என்பதற்கு "உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு” என்ற வாக்கின் அடிப்படையில் உயர்ந்தோர் என்று பொருள் கொண்டு அத்தகு உயர்ந்தோரிடத்தில் உறவு கொள்ளும் நல்லறிவும் அவ்வுறவில் மலர்தலும் கூம்பலும் இல்லாமல் பேணுதலும் என்று பொருள் கொள்வாரும் உளர். மானுடத்தை உயர்ந்தார் - தாழ்ந்தார் என்று பிரிவினை செய்தல் இற்றைத் தலைமுறைக்குப் பொருந்துவதல்ல. உலகத்தில் மிகப் பெரிய மானுடத்தைப் படைத்து வளர்ந்து வரும் ஜப்பான் நாடு, மனிதனை அவன் உள்ளபடியே அங்கீகரித்தல், வளர்த்தல், உயர்த்துதல் என்ற வழியிலேயே அணுகுகிறது என்பது எண்ணத்தக்கது.

வாழ்க்கை, மானிடர் அனைவர்க்கும் பொது. அது போலவே அனுபவங்களும் பொதுவேயாம். அறிவும் பொதுவேயாம். ஆதலால், மானிடப் பரப்படன் உறவு கலந்து வாழும்போதுதான் அறிவு தலைப்படுகிறது. மானிட உலகத்துடன் கொள்ளும் நட்புறவு நிலையானது. இந்த உறவில் ஏதாவது அடிப்படையில் மலர்தலும், பிறிதொரு வகையில் சுருங்குதலும் கூடாது. இன்று பலர் ஏதாவது ஒர் எல்லைக்குள் தம்மைச் சுருக்கிக் கொண்டு அல்லது சிறைப்படுத்திக் கொண்டு அதற்கு ஏற்பப் பழகுகின்றனர். இது வரவேற்க இயலாத முறை. மானிடர் அனைவரையும் முதலில் மாந்தர் என்ற நிலையில் அங்கீகாரம் செய்ய வேண்டும். எந்த ஒரு காரணமும் ஒருவரிடத்தில் உறவு கொள்ளத் தடையாக அமையக்கூடாது. உறவு கொண்டபின் விருப்பு - வெறுப்புகள் தலையெடுக்கக்கூடாது. நட்புறவு என்பது விருப்பங்களையும் வெறுப்புகளையும் கடந்தது.

இன்றைய மானுடம் இந்த நிலையில் வாழவுமில்லை; வாழ விரும்பவுமில்லை. வளர்ந்த விஞ்ஞானக் கருவிகள் மூலம் பூத பெளதிக உலகங்கள் இணைக்கப் பெற்றுள்ளன. ஆனால் மானிடரிடையில் இதயங்கலந்த நட்புறவுகள் கால்கொள்ளவில்லை. அதனால் இன்னமும் "மானுடம்” முழுமையடையாத கச்சாப் பொருளாகவே விளங்குகின்றது. இன்றைய மானுடம் பொதுமையை நாட மறுக்கிறது. அவரவரும் அவரவருடைய உணர்ச்சிகளின் வயப்பட்டே வாழ்கின்றனர். சரியான அடிப்படையில் அமையாத மானுடம் துன்புறும்; கெட்ட போரில் ஈடுபடுவோர் அழிப்பர்; அழிவர். இதுவா அறிவின் பயன்? ஆதலால், உலக மாந்தரொடு கலந்து பழகி நட்புறவினை வளர்த்துக் கொண்டு வாழ்தலே "அறிவு”. எல்லாவித எல்லைகளையும் கடந்து நேசக்கரங்களை நீட்டி வாழ்வதே அறிவு.

நாடு, மொழி, இனம், சமயம் ஆகியன வாழ்வியலில் இடம் பெற்றுள்ளன; இவை அவசியமும்கூட! ஆனால் இவற்றின் மீது காட்டும் ஆர்வம் அளவுக்குக் கட்டுப்பட்ட தாக இருக்கவேண்டும். கூவலாமை, குரை கடலாமையைக் கேட்ட கதை போல் ஆகிவிடக்கூடாது. எந்த ஒன்றும் வாழ்வுக்குரிய சாதனமேயாம். சாதனங்களையே சாத்தியங்கள் என்று நம்புவதும் அதற்காகவே வாழ்வதும் அறிவுடைமையாகாது, ஆதலால் நாட்டுப்பற்று வேண்டும். ஆனால் வெறி கூடாது. அதேபோழ்து நாட்டிற்கும் நாட்டிற்குமிடையே உள்ள எல்லைகளை எடுத்துவிட்டு உலகப் பேரரசு காணும் விழைவு வேண்டும்.

சாதிகளின் பெயரால், மதங்களின் பெயரால் இன்று எங்கும் புன்மை வளர்க்கப் பெறுகிறது. ஏன், ஓரணிக் குள்ளேயே பல அணிகள் உள்ளன. அதனாலேயே திருவள்ளுவர், மதங்கள் பற்றி பேசவில்லை; யாதொரு அதிகாரமும் இயற்ற வில்லை, திருக்குறள் நாடு, மொழி, மதம் முதலியன பற்றி யாதொன்றையும் குறிப்பிட்டுப் பேசவில்லை. திருக்குறள் பொது நூல்; ஒருமை நூல்; திருக்குறள் நெறி, உலக நெறி; பொது நெறி.

தன்னலம் விலங்கின் தன்மையது. ஒரு சரக்குப் பேருந்து சாலையில் வரும்பொழுது தாழான ஒரு பன்றிகூடத் தற்காத்துக் கொள்ள ஒடி ஒளியும். ஆனால் மற்றப் பன்றிகளைப் பாதுகாக்கும் உணர்வு அந்தப் பன்றிக்கு இருக்காது. மனிதனும் தன்னலம் சார்ந்தவனாகவே வாழ்கின்றான். தன்னலம் செறிந்த வாழ்வு, உலகந்தழீ இயதுமல்ல; ஒட்பமும் அல்ல, இந்த உலக இயக்கத்தின் நடைமுறைகளைக் கூர்ந்து கவனித்தால் இந்த உலகம் பொதுமையில் வளர்கிறது. வாழ்கிறது. உலக மாந்தர் இனம் தோன்றவேண்டும். உலகப் பேரரசு தோன்ற வேண்டும்.

இத்தகு பொது நெறி தோன்ற மானுடம் சில நெறி முறைகளைப் பின்பற்றவேண்டும். முதலாவது, பல மொழிகளைக் கற்கவேண்டும். மொழிகள் உறவுகளின் கதவுகளைச் திறந்துவிடும் இயல்பின. சொல்வன சிலவாகவும் கேட்பன பலவாகவும் இருக்கவேண்டும். மொழிகளின் வாயிலாகத் தான். கருத்துப்பரிமாற்றங்கள் நிகழமுடியும்; நிகழும் மொழிகள் வாயிலாகத்தான் கலாச்சாரப் பரிவர்த்தனைகள் நடைபெற இயலும். இன்றைய மானுடத்திற்குப் பன்மொழிப் பயிற்சிக்கு வாயில் அமைந்தால் உலகந்தழீஇய ஒட்பம் பெறும்! இந்த உலகந்தழீஇய ஒட்பத்தை மலர்தலும் கூம்பலும் இல்லாத அறிவை மானுடம் பெறுதலைப் பொருத்தே மானுடத்தின் தலைவிதி அமையும்!