குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3/ஊழல் பிரச்சனைக்குத் தீர்வுகாண

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

87. ஊழல் பிரச்சனைக்குத் தீர்வுகாண....

இனிய செல்வ,

நமது நாட்டு அரசியலில் - அதுவும் மைய அரசியலில் பங்குபத்திர ஊழல், சர்க்கரை இறக்குமதி ஊழல் ஆகிய செய்திகள் தீ பற்றி எரிவதைப்போல் எரிந்து கொண்டிருக்கின்றன. நாடாளுமன்றம் சென்ற சில நாள்களாகக் கூடியும் நடைபெறவில்லை! எதிர்க் கட்சியினர் பல நாள்கள் உள்ளே போராடி விடை காணமுடியாமல் எய்த்துக் களைத்துப்போய் பாராளுமன்றக் கூட்டுக் குழுவிலிருந்து ராஜிநாமா செய்திருக்கிறார்கள். பாராளுமன்றத்திற்கு வெளியே வந்து பாராளுமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணித்துவிட்டு மறியலும் ஆர்ப்பாட்டமும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இனிய செல்வ, எதிர்க்கட்சிகள் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று கேட்கிறாயா? ஊழல்களில் சம்பந்தப்பட்ட அமைச்சர்களை அமைச்சரவையிலிருந்து நீக்கவேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை! இதைச் செய்ய நமது பிரதமர் யோசிக்கிறார்! ஏன்? காங்கிரஸ் கட்சியில் பல குழுக்கள் உண்டு! இதில் யார் மீதாவது நடவடிக்கை எடுத்தால் காங்கிரஸ் கட்சி உடையும்! நாடாளுமன்றத்தில் பலம் இழக்கக்கூடும்! அதனால் ஆட்சி கவிழும் அபாயம் உண்டு! ஆதலால் பிரதமர் நரசிம்மராவ் தயங்குகிறார். எதிர்க்கட்சிகளும் பிடிவாதத்தைத் தவிர்க்க முன்வரவில்லை.

இனிய செல்வ, பழைய காலத்தில் ‘ஊழல்’ என்று பேச்சு அடிப்பட்டாலே அமைச்சர்கள் ராஜிநாமாச் செய்தனர். டி.டி.கே, ஆர்.கே.சண்முகம் ஆகியோர் ராஜிநாமாக்கள் முன்னுதாரணங்கள்! ஆனால் இன்றோ போராட்டங்கள் நடத்தியும் பயனில்லை.

இனிய செல்வ, நாட்டு மக்கள் பெருவாரியான வாக்குகள் மூலம் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்தியிருக்கிறார்கள். பிரதமராக நரசிம்மராவைத் தேர்ந்தெடுத் திருக்கிறார்கள். மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.

"தேரான்தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறம்
தீரா இடும்பை தரும்"

என்ற திருக்குறள் நெறிப்படி பார்த்தால் பிரதமர் நரசிம்மராவுக்கு இடையூறில்லாமல் காங்கிரஸ் ஆட்சியை நீடிக்க அனுமதிப்பது எதிர்க்கட்சிகளின் கடமை. எதிர்க்கட்சிகளால் ஆட்சியும் அமைக்க இயலவில்லை! எதிர்க் கட்சிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லை! காங்கிரசை எதிர்ப்பதில் மட்டும் தான் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபடுகின்றன! கூட்டாக ஆட்சி அமைக்கவும் இயலவில்லை. இனிய செல்வ, நமது நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் விவாதிக்கலாம் என்று திரும்பத் திரும்ப அழைக்கிறார். ஆனால், எதிக்கட்சிகள் எடுத்துக்கொள்ள தயாராய் இல்லை; நாடாளுமன்றம் மக்களுடைய மன்றம். மக்கள் வாக்களித்து, பாராளுமன்றத்துக்குச் செல்கிறார்கள். அதனால் பாராளுமன்றக் கூட்டத்தைப் புறக்கணிப்பது என்பது மக்கள் இட்ட கட்டளையைப் புறக்கணிப்பது போலாகும்.

இனிய செல்வ, அதனால் உயர்ந்த ஜனநாயக மரபுப்படி பாராளுமன்றத்தில் எந்த ஒரு சிக்கலையும் விவாதித்துத்தான் முடிவு எடுக்கவேண்டும். அல்லது ஆளுங்கட்சித் தலைவர்களும் எதிர்கட்சித் தலைவர்களும் கூடிப் பேசி - மனம்விட்டு பேசி ஒரு முடிவுக்கு வந்து அந்த முடிவைப் பாராளுமன்றத்தின் ஏற்புக்கு வைக்கலாம். இனிய செல்வ, அமரர் ஜவகர்லால் நேரு இப்படி ஒரு சிக்கல் வரும் என்று உய்த்துணர்ந்ததால் உடன் எதிர் கட்சித் தலைவர்களைத் தமது இல்லத்திற்கு விருந்திற்கு அழைத்து விருந்து மேசையிலேயே பல ராஜதந்திர முடிவுகள் எடுக்கப் பெற்றதாக அறிந்தோர் கூறுவர். சிக்கலுக்குத் தீர்வு காணும் பொழுது பாராளுமன்ற நடவடிக்கைகளில்-பாராளுமன்ற ஜனநாயகத்தில் நாட்டு நலனை மையமாகக் கொண்டே விவாதிக்க வேண்டும்.

ஒரு கொள்கை அல்லது கோட்பாடு பலர்கூடி விவாதித்து ஒரு முடிவுக்கு வரவில்லையென்றால் அதற்குக் காரணம் சிக்கலின் கடுமையல்ல. விவாதத்தில் ஈடுபடுவோர் ஜனநாயகப் பண்புகள் நிறைந்தவர்களாக இருக்கமாட்டார்கள். அல்லது கடின சித்தமும் பிடிவாதமும் உடையவர்களாக இருப்பர். இனிய செல்வ, எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சிலர், சிக்கல் தீர்ந்துவிட்டால் தனக்குப் பேசப் பொருள் கிடைக்காது, தனது பெருமை பாதிக்கும் என்று நினைத்தும் சிக்கலை வளர்ப்பர். மனிதர்களில் பலவிதம்! இதற்குள் முங்கிக் கரையேறுவதுதான் ஜனநாயகத்திற்குரிய தேர்வு! இத்தேர்வில் வெற்றி பெறுவோர் சிலரே!

அரசியல் ஆதாயம், கட்சி-பிரதி கட்சி மனோபாவம் இம்மியும் இருக்கக்கூடாது. இன்று இதுதான் இல்லை. ஆட்சி எந்திரமே அரசியல் கட்சியாக-அரசியல் கட்சியின் அதிகார பீடமாக மாறிவரும் அபாயம் வளர்ந்து வருகிறது. இது நாட்டுக்கு நல்லதல்ல. நாட்டு மக்களில் 80 விழுக்காட்டு மக்கள் அரசியல் கட்சிகளைக் சார்ந்திருக்கவில்லை. விரும்பிய கட்சிக்குத் தங்களுடைய வாக்கை அளிக்கிறார்கள். வாக்களித்தவர்களை மறந்துவிடக் கூடாது. கட்சிக்காரர்களையே சுற்றக்கூடாது. நாட்டுமக்களை, சுதந்திரம் இழந்து கட்சியாளர்களைச் சுற்றும்படி செய்யக்கூடாது. நாட்டு மக்களுக்குத் தாங்கள் விரும்புகிற அரசியலைப் பின்பற்றுகின்ற - வாக்களிக்கின்ற உரிமை உண்டு. அந்த உரிமை பாதுகாக்கப் பெறுதல் வேண்டும்.

பாராளுமன்ற எதிர்க் கட்சிகள் பாராளுமன்றத்தைப் புறக்கணிப்பதைக் கைவிட வேண்டும். ஆளுங்கட்சியும் பெரும்பான்மையை நம்பி ஆட்சி செய்யக்கூடாது. எதிர்க்கட்சி வாக்கு ஒன்று, ஆள்கின்ற அரசுக்கு விரோதமாகிறது என்றால் அதைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு தமது கொள்கையை-கோட்பாட்டை-அணுகுமுறையை ஆய்வு செய்ய வேண்டும். ஒரு சிக்கலுக்கு ஆளுங்கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் ஒத்த நிலையில் ஒரு முடிவு காண இயலாமற் போயின் பாராளுமன்ற நடவடிக்கைகளை அடையாளமாக ஒரு மணிநேரம் வேண்டுமானால் புறக்கணிக்கலாம். இனிய செல்வ, வெளி நடப்புச் செய்யாமல் இதில் தீர்வு காணாமல் பிரச்சினை இறுக்கமாகி விட்டால் என்னசெய்வது? என்று கேட்கிறாய்; ஒரேவழி பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியை இராஜிநாமா செய்துவிட்டு மக்கள் மன்றத்திற்கு வந்து விளக்கமளிப்பதுதான் செய்யக்கூடியது.

"செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்!”

இன்ப அன்பு
அடிகளார்