குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3/எனைத்தானும் நல்லவை கேட்க!

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

36. எனைத்தானும் நல்லவை கேட்க!

இனிய செல்வ,

மானுட சாதி சுவைத்து மகிழும் சுவைகள் பலப்பல. இலக்கியத் துறையில் ஒன்பது சுவை. உணவுத் துறையில் அறுசுவை. இனிய செல்வ, அறுசுவையைப் பற்றி உனக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லையல்லவா? ஆம்! அறு சுவையறியாதார் யார் உளர்? ஆனால் இலக்கியத் துறையைச் சேர்ந்த ஒன்பது சுவையை அறிந்தவர்கள் மிகமிகச் சிலரே. அவருள்ளும் இந்தச் சுவைகளை அனுபவித்தவர்களை - அனுபவிக்கின்றவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இன்று நமது நாட்டில், கேட்கும் பொறிகளாகிய செவிகளுக்கு, நிறைய வேலை கிடைக்கின்றன.

வலியக் கூடக் கொண்டு வந்து தருகிறார்கள்! கேட்க வேண்டாதவைகளைக் காலங்கெட்ட காலத்திலும் கூடத் தர முயற்சி செய்கிறார்கள். இதனால் எங்கே நமது காது கேட்க வேண்டிய நேரத்தில் கேட்க வேண்டியதைக் கேட்க இயலாத நிலை உருவாகி விடுமோ என்ற அச்சமும் தோன்றுகிறது.

இன்று மேடைகள் வளர்ந்து வருவது உண்மை. நூற்றுக்கணக்கான பேச்சாளர்கள் தோன்றியிருப்பதும் உண்மை. ஆனால் எத்தகைய செய்திகள் மேடைகளில் பேசப்படுகின்றன? இலக்கியம் பேசப்படுகிறதா? இல்லை! இலக்கியத்தின் பெயரால் துக்கடாச் செய்திகளே பேசப்படுகின்றன. அந்தத் துக்கடாச் செய்திகளும் கூடத் தரம் குறைந்தவையே. ஊரெலாம் அரசியற் கட்சிக் கொடிகள்! நாளும் அரசியல் மேடைகள்! ஆனால், எந்த மேடையிலாவது அரசியல் பேசப்படுகிறதா? எங்கே? இனிய செல்வ, உண்மையைச் சொல் பார்க்கலாம்! எங்குப் பார்த்தாலும் எரிந்த கட்சி-எரியாத கட்சி பற்றியே பேச்சு! மதசம்பந்தமான மேடைகளிலோ அமைதியும் இல்லை; சாந்தமும் இல்லை. நேர்மாறாக வெறுப்பு-விருப்புகளையே பேசுகின்றனர்! மதப்பிரசாரகர்கள், மதம்பிடித்துப் போய் அலைகின்றனர்! இதில் எந்த மேடையில் மானுடத்தின் ஆக்கத்திற்குரிய செய்திகள் கிடைக்கப் போகின்றன? ஐயகோ, பாபம் பரிதாபநிலை!

செவிச் சுவை! ஆம், செவிச்சுவைமிக்க இலக்கியச் சிந்தனைகளே வாழ்வளிக்கும்! அன்புச்சுவை நிறைந்த செய்திகள்! ஆழ்ந்த அறிவியல் சார்ந்த சிந்தனைகள்! பெருமிதம் தரும் செய்திகள்! நாளும் உயிர் ஓம்பி வளர்க்கும் உயர் சிந்தனைகள்! இவைகளைப் பரப்புகிறவர்கள் தரம் உயர் சிந்தனையாளர்கள்! அறிஞர்கள்! உயிர் குலத்தின் செவிகளுக்குச் சுவையாகவும் வாழ்வளிப்பனவாகவும் பேசப் படும் பேச்சே, பேச்சு!

இனிய செல்வ! பலர் சென்ற காலத்தின் புகழினைப் பற்றியே பேசுவர். இதனால் விளையும் பயன் என்ன? சென்ற கால நிகழ்வுகளின் விவரங்கள் இன்றைய சமூகத்திற்குத் தேவையில்லை. சென்றகால சமுதாயத்தின் தவறுகளுக்குத் தீர்வுகள் தேவை. முடிவுகள் தேவை. அங்கிருந்து இன்றைய வாழ்வு தொடங்கப்படுகிறது; எதிர்காலத்திற்குரிய முயற்சி கால் கொள்ளப்படுகிறது; எனவே, எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை தேவை. இத்தகைய பேச்சு தேவை. செவிக்குச் சுவை, கேட்கத் தூண்டுகிற அளவுக்குச் சிறிது தேவை. ஆனால், மிகுதியும் தேவை உயிர் செழித்து வளரக் கூடிய செய்திகள்! இத்தகைய பேச்சு, ஒரோவழி கசப்பாக இருந்தாலும் விளைவு வாழ்க்கையில் இன்பச் சுவையேயாம். பயனிலாதன சுவையுடையன அல்ல. இன்றைய மேடைகள் பல நோய்களைப் பரப்புகின்றன. மேடைப் பேச்சாளர்கள் பலர் நோய் பரப்பும் கிருமிகளாகவே உள்ளனர். சந்துகளிலும், திண்ணைகளிலும் தேநீர் கடைகளிலும் உந்து வண்டிகளிலும் சாலை ஓரங்களிலும் இன்று எங்கும் பேச்சு! என்ன பேச்சு? நோயைப் பரப்பும் பேச்சுக்களேயாம். சமுதாயப் பகைமையை வளர்க்கும் நச்சுப் பேச்சுக்கள்! இன்று நஞ்சு பாம்பிடத்தில் இல்லை. மனிதனின் பற்களில்தான் இருக்கிறது.

இனிய செல்வ, சமுதாய மாற்றங்கள் ஏற்படச் செவிச்சுவை தேர்ந்து கேட்க வேண்டும். 'எனைத்தானும் நல்லவை’ கேட்க, வேண்டும். வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருக்கக்கூடிய புதியவற்றைக் கற்க வாய்ப்பில்லை. கற்றார் வாய் கேட்கக் காமுறுதல் வேண்டும். பழகும் வட்டத்தை விரிவாக்கிக் கொள்ள வேண்டும், தரத்தை உயர்த்திக் கொள்ளுதல் வேண்டும். அப்போதுதான் செவிக்குச் சுவையான செய்திகள்; உணர்வுகளுக்கு இனிய செய்திகள், உயிர்க்கு இனிய செய்திகள்; அறிவார்ந்த செய்திகள் கிடைக்கும்! நமது வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும்! வளர்ச்சியும் கை கூடும்! இனிய செல்வ, எல்லா உணவும் உணவல்ல! எல்லாப் பேச்சும் பேச்சல்ல! இனிய செல்வ, நச்சுணவை விரும்பாததுபோல, நச்சுச் செய்திகளையும் கருத்துக்களையும் கேட்காதே! அறிவியல் அறிஞர்களை நாடித் தேடுக! அவர்கள் கூறுவதையே கேட்க! அடுத்து எழுதுகின்றோம்.

இன்ப அன்பு
அடிகளார்