குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3/ஒரே ஆன்மீக ராகம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

46. ஒரே ஆன்மீக ராகம்

இனிய செல்வ,

நமது முன்னோர்கள் வேற்றுமைகளுக்கிடையே ஒற்றுமை கண்டார்கள். ஒற்றுமையையே கண்டார்கள். வேற்றுமைகளை அவர்கள் பார்த்ததில்லை. பார்க்க விரும்பவும் இல்லை.

"வேறுபடு சமயமெல்லாம் புகுந்து பார்க்கின்
விளங்குபரம் பொருளேநின் விளையாட் டல்லால்
மாறுபடுங் கருத்தில்லை”

என்றார் தாயுமானவர். "வேறுபாடுகளைக் காண்பதுதான் நமது இடும்பைகளுக்கெல்லாம் காரணம்" என்றார் விவேகானந்தர். இந்த அற்புதமான வாழ்வியல் நாகரிகத்திற்கு ஊடே குறுக்குச்சால் ஒட்டினவர்களும் இல்லாமற் போகவில்லை; ஆனால் அந்த அருளார்களின் கருத்து சென்ற நூற்றாண்டுகளில் எடுபட வில்லை. இனிய செல்வ, வரலாற்றை மறுத்து எழுதப் பேனா துடிக்கிறது. ஆம்; மதச்சண்டைகள் வரலாற்று ஏடுகளில் நிறைய பக்கங்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன என்பதை யார்தான் மறக்க

தி.25. முடியும்? இனிய செல்வ, பாலைவனம் பரப்பளவில் கூடுதல் தான்; பசுஞ்சோலை பரப்பளவில் குறைவுதான். பசுஞ்சோலைதானே நினைவுக்கு வருகிறது. அதுபோல, நமக்கு ஒற்றுமை. ஒருமைப்பாடு என்பதே நினைவு. ஆனால் இன்று நமது நாடு எங்கே போகிறது: மக்கள் வேறுபாடுகளையே காண்கிறார்கள்: இல்லை, வேறுபாடுகளைத் துருவித்துருவிக் கண்டு பிடிக்கிறார்கள். வேறுபாடுகளைப் பற்றியே பேசுகிறார்கள். வேறுபாடுகளை வளர்த்துத் தலைவர்கள் ஆகிறார்கள்:

இனிய செல்வ, "சகோதர ஒற்றுமை, அயலார் அன்பு, தம்பதிகள் இணக்கம் ஆகியன அழகானவை; பயன்தரத்தக்கவை” என்பது மூசானாரின் முதுமொழி, இனிய செல்வ, இவை மூன்றும் இன்று எப்படி அமைந்துள்ளன? சகோதர அன்பு-ஒற்றுமை ஆகியன இன்று அரிதாகிக்கொண்டு வருகின்றன, கடந்த பல ஆண்டுகளாக நம்முடைய வாழ்க்கைப் போக்கில் பணிப் பாங்கில் சகோதரர்களுக்கிடையில் சமாதானம் செய்து வைத்துச் சொத்துப் பிரிவினை செய்ய நேரிட்டது. இப்பொழுது உடன் பிறந்த சகோதரர்களுக்கிடையில் சமரசம் பேசிக் கொண்டிருக்கிறோம். சகோதர ஒற்றுமை அன்பு, சமரசம் இவையெல்லாவற்றையும் பின்தள்ளிவிட்டுச் சொத்துப் பிரிவினை உணர்ச்சியே தலை தூக்கி நிற்கிறது. இனிய செல்வ, அயலார் அன்பு-இன்று நமது நாட்டில் அருகிப்போன நிலையில் காணப்படும் ஒன்று. இந்த அயலார் அன்பை அரசியல் சொத்துரிமை பொய்மையான தலைமை உணர்ச்சி ஆகியன கெடுத்து வருகின்றன. இனிய செல்வ, அடுத்தது தம்பதியரிடத்தில் ஒற்றுமை; இதுபற்றி நாம் எழுத வேண்டுமா? நாள்தோறும் நமது நாட்டுச் செய்தித்தாள்களில் வரும் செய்திகள் மூலம் தம்பதியரிடத்தின் அன்பைவிட, தியாகத்தைவிட, “வரதட்சணையே" ஆட்சி செய்கிறது என்பது புலனாகவில்லையா? இப்படிச் சமுதாயத்தில் மூன்று நிலைகளிலும் வேற்றுமையே கோலோச்சுகின்றது!

இனிய செல்வ, இன்று இந்தியாவுக்குத் தேவை ஒற்றுமை! ஒருமை; ஆனால் நாளும் நடப்பதென்ன? நமது நாட்டுப் படத்தை எடுத்து சாதி, வகுப்பு மதக்கலவரங்கள் நடக்கும் பகுதியை அடையாளமிட்டுக் காட்டு என்றால் எந்த மாநிலம் இந்த அடையாளத்தைப் பெறாமல் தப்பிக்க இயலும்? இனிய செல்வ, ஏன் இந்த அவலம்? நாம் கூட உண்மையாகச் சொல்கின்றோம் - நாம் "இந்தியராக” இருக்க ஆசைப்படுகின்றோம்; "இந்து”வாக இருக்க ஆசைப்படுவதில்லை. ஏன்? அதனாலேயே சைவத்தை எடுத்துக்கொண்டு வலியுறுத்தி, சைவமாக வாழ ஆசை; ஆம்; "எந்நாட்டவர்க்கும் இறைவா பேற்றி?" என்பது சைவ வாழ்வு. இன்று நமது சமுதாயத்தில் எண்ணற்ற சாதிகள்; இவைகளுக்கிடையே ஆரோக்கியமில்லாத போட்டிகள் இந்து-முஸ்லீம் சண்டைகள்; இந்து-கிறிஸ்துவச் சண்டைகள், இனிய செல்வ, பாரதி கூறியது போல, "ஒரு பரம் பொருள்” தான் முக்கியம் ‘ஏகம் ஸத்விப்ரா பஹீதா வதந்தி’ இருப்பது ஒன்றே. மகான்கள் அதற்குப் பல பெயரிட்டு அழைக்கிறார்கள். அப்படியானால் முஸ்லீம்கள் தொழும் அளவற்ற அருளாளனும், கிறிஸ்தவர்கள் போற்றி வணங்கும் பரமண்டலத்திலுள்ள பரமபிதாவும் இந்துக்கள் தொழும் பல்வேறு திருநாமங்கள் கொண்ட கடவுளும் ஒருவரே; ஒருவரே; அப்படியானால் கலகம் ஏன்? சண்டை ஏன்? அதுதான் புரியாத புதிர்; மதங்கள் பழக்க வழக்கங்களைச் சார்ந்தவை. இவை மாறுபடலாம்; மறுக்கப்படலாம். அதனால் குடி ஒன்றும் கெட்டுவிடாது. அதிலும் நமது தமிழ்நாட்டு மக்களுக்குப் பொறுப்பு மிகுதியும் உண்டு. காரணம் ஒருமையைப் பற்றி அதிகமாகப் பேசப்பட்ட நாடு தமிழ்நாடு; இனிய செல்வ, நமது திருவள்ளுவர்.

"ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்"

(214)
என்று அருளியுள்ளார். இங்கு "ஒத்தது” என்றது ஒத்துப் போகக்கூடிய பண்பாட்டை மட்டுமன்று; அளவையும் கூடக் கூறியதாக ஏற்கவேண்டும். அதாவது பலவற்றில் ஒத்துப் போக இயலவில்லையா? கவலைப்படாதே; ஏதாவது ஒரு செய்தியில்-ஒரு கருத்தில் ஒத்தகருத்து இருக்கிறதா? அது போதும். உறவினை வளர்த்துக் கொள்ள, நட்பினை வளர்த்துக் கொள்ள; காலப்போக்கில் இந்தக் குறைந்த அளவான-இல்லை, ஒரே ஒரு உடன் பட்ட செய்தியில் தொடங்கிய உறவு வளரும். பழகும் நட்பு உருவாகும். மேலும் பல முனைகளில் கருத்தொருமைப்பாடு தோன்றும் வேற்றுமைகள் குறையும். மேலும் பலவற்றில் உடன்பாடான கருத்துக்கள் தோன்றும். இதுவே வாழும் முறைமை, இனிய செல்வ, எண்ணிப்பார்; இன்று பலர் கூடுகின்றனர்; கூடுகின்றோம் ஆயினும். ஒற்றுமையில்லை. வெளியே ஒற்றுமை இருப்பதாகத் தெரிகிறது; உள்ளே பல்குழு மனப்பான்மை; குடுமிபிடிச் சண்டைகள்; ஏன்? பொதுக் குறிக்கோள் இல்லை; அந்தக் குறிக்கோளை அடைய தற்சார்பை, தற்பெருமையைத் தியாகம் செய்ய மனமில்லை; இந்தியா ஒன்றுபட வேண்டுமானால் ஒரே ஆன்மீக ராகம் இசைக்கப்பட வேண்டும். இந்த நிலை நீடித்தால் இன்னும் பல நூறு ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மாற்றமும் ஏற்படாது; வளர்ச்சியும் இராது. அடுத்து எழுதுவோம்.
இன்ப அன்பு
அடிகளார்