குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3/கல்விமொழியும்-தமிழ்ப்பணியும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

93. கல்விமொழியும்-தமிழ்ப்பணியும்

இனிய செல்வ,

1-1-95 முதல் 5-1-95 முடிய உலகத் தமிழ் மாநாடு சிறப்பாக நடந்து முடிந்தது. மாநாட்டில் தமிழகத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் கொடுத்த நற்செய்தி நான்காம் தமிழ் பற்றியது. அதுதான் அறிவியல் தமிழ்! மாண்பமை முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி. இனிய செல்வ, தமிழ் பயிற்று மொழிக் கல்வி இயக்கம் 1962-லிருந்து நடந்து வருகிறது, தொடக்க காலத்தில் கோவை டாக்டர் மு.அறம், பேராசிரியர் அ.தேவராசன் ஆகியோர் முன்னின்று உழைத்தனர். பேராசிரியர் அ.தேவராசன் இத்துரையில் அடிக்கடி கருத்தரங்குகள் நடத்தினார். நாம் பல் கருத்தரங்குகளில் கலந்து கொண்டதுண்டு. அதுபோது கல்வி அமைச்சர் தமிழைப் பயிற்றுமொழியாக்க ஒத்துக் கொண்டார். ஆனால் கலைப் (Arts) பாடங்களுக்கு முதலில் சம்மதித்தார். காலப்போக்கில் அறிவியல், தொழிற் கல்வி முதலியவற்றில் தமிழை அறிமுகப்படுத்தலாம் என்றார். அதோடு தமிழ் வழிக் கல்வி மட்டும் அல்லாமல் ஆங்கில வழிக்கல்வியும் ஒரு வகுப்பு இருக்கும் என்றார். அது தான் வினையாயிற்று. அப்போது தமிழ்நாட்டில் தீவிரப் பிரச்சாரம் ஆங்கிலத்தை அகற்றினால் இந்தி வந்துவிடும் என்பதாகும். தமிழ்வழிக் கல்வி கற்கும் மாணவர்களுக்கு நிதி உதவியும் செய்ய அரசு முன்வந்தது. ஆயினும் நல்ல புத்திசாலி மாணவர்கள் ‘தமிழ் வழிக்கல்வி’ கற்க முன்வரவில்லை. இந்த நிலையைக் கண்டு டாக்டர் கலைஞர் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பில் தமிழ்வழிக் கற்றோருக்கு முன்னுரிமை கொடுத்து ஆணை பிறப்பித்தார். இனிய செல்வ, அந்த ஆணையத் தமிழ்நாட்டு மாணவர்கள் எதிர்த்தார்கள்; போராடினார்கள். பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுக்கிடந்தன. இந்நிலையில் பலருடைய வற்புறுத்தலின் காரணமாக அந்த ஆணையை அரசு திரும்பப்பெற்றது. இன்றும் சரி! ஆங்கில வழிக் கல்வி விரும்பப்படுகிறது. ஏன்? 'எல்லாரும் சமம்’ என்பது உறுதிசெய்யப்படவில்லை. சமூக மேலாதிக்கம் அதற்குக் காரணம்.

தமிழில் ‘அறிவியல் தமிழ்’ என்ற தமிழைத் தந்த பெருமை விஞ்ஞானி வா.செ.குழந்தைசாமி அவர்களுக்கே உரியது. அறிவியல் தமிழ் என்ற வழக்கைத் தமிழுலகுக்கு அறிமுகப்படுத்தியவர் அவர்தான். அதன்பின் பேராசிரியர் கை.இ.வாசு என்ற சிறந்த விஞ்ஞானி; காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தில் அவர் இயக்குநராகப் பணி செய்யும்போது சுதேசி விஞ்ஞான இயக்கத்தைத் தொடங்கினார். அந்த இயக்கத்தில் நமக்குப் பொறுப்பு ஏற்படுத்தித் தந்தார். சுதேசி விஞ்ஞான இயக்கம் கிராமங்கள்-சிற்றூர் வரையில் அறிவியல் கண்காட்சிகள் நடத்துவது மூலமும் தமிழில் அறிவியல் கருத்தரங்குகள் நடத்துவது மூலமும் அறிவியல் தமிழைப் பரப்பி வருகின்றது; வளர்த்து வருகின்றது. இனிய செல்வ, கடந்த மூன்றாண்டுகளாக அறிவியல் தமிழ்ப் பேரவை மாநாடு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதிலுமிருந்து விஞ்ஞானிகள் வந்து குவிகின்றனர். தமிழிலேயே அறிவியல் கட்டுரை எழுதிப் படிக்கவேண்டும்; வாசிக்கவேண்டும்; விவாதிக்க வேண்டும். அண்மையில் பாண்டிச்சேரிப் பல்கலைக் கழகத்தில் நடந்தது. 420 கட்டுரையாளர்கள். 300 பார்வையாளர்கள் வந்திருந்தனர். அறிவியல் தமிழில் புத்தகங்கள் நிறைய வந்துவிட்டன. நியூசெஞ்சுரி புக்ஹவுஸ் நிறைய வெளியிட்டுள்ளது. ஆதலால், அறிவியல் தமிழ் வளர்ந்துள்ளது. இருக்கும் குறை கல்லூரி மாணவர்கள் படிப்பதில்லை என்பதுதான்! இனிய செல்வ, தமிழ்வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பெற்றால் தான் அறிவியவில் தமிழ் வளரும். தமிழும் ஆட்சி மொழியாக இயலும்.

இனிய செல்வ, தமிழும் ஆங்கிலமும் கல்வி மொழி என்ற நடைமுறை ஒத்துவராது. தமிழே-தமிழ் மட்டுமே கல்வி மொழியாக இருத்தல் வேண்டும். ஆங்கிலம் ஒரு மொழிப் பாடமாகக் கற்பிக்கப் பெறுதல் வேண்டும். இந்திய நாட்டிற்கு மும்மொழித் திட்டமே ஏற்புடையது. மும்மொழித் திட்டம் இல்லாது போனால் தமிழ்நாட்டில் வாழும் பிறமொழியாளர் தமது தாய் மொழியைக் கற்கும் வாய்ப்பை இழப்பர். ஏன்? இந்தியா முழுதும் பரவி வாழும் தமிழர்கள் தமது தாய்மொழியாம் தமிழ் மொழியைக் கற்கும் வாய்ப்பை இழப்பர் என்பதை நினைவிற் கொள்ளவேண்டும். ஆதலால் மூன்றாவது மொழியாக இந்திய மொழிகள் ஒன்றை எடுத்துப்படிக்க வேண்டும். இதுதான் சிறந்த நடைமுறை. இந்தியா உருவாவதற்குரிய நடைமுறை.

இனிய செல்வ, உலகத் தமிழ்ச் சங்கம் என்பது ஒன்று இப்போது அவசியமா? தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், உலகத் தமிழ்ச்சங்கம் செய்யக்கூடிய பணிகளைச் செய்யலாம்; செய்யக்கூடும். புதிய புதிய நிறுவனங்கள் தோன்றுவதைவிட இருக்கும் அமைப்புகளை வலிமைப்படுத்துவதும் அதன் பணிகளை விரிவடையச் செய்வதும் நல்லது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்குத் தமிழ் ஆய்வு, தமிழ் மொழி பெயர்ப்பு ஆகிய பணிகளைச் செய்வதற்குரிய கருவிகள், அமைப்புக்கள் அனைத்தும் இப்போதே அமைந்துள்ளன. சில கோடி ரூபாய் செலவு செய்தாலே போதும்! சங்கம் என்பதை விடப் பல்கலைக்கழக அமைப்புக்கே உலகில் வரவேற்புக் கிடைக்கும். பழைய மரபில் அமைந்த சங்கங்கள்தான் காலப்போக்கில் பல்கலைக்கழகங்களாயின. மதுரையில் இன்றும் நான்காம் தமிழ்ச் சங்கம் ஒன்று செயற்படுகிறது; தமிழ்க் கல்லூரி ஒன்று நடத்துகிறது. இனிய செல்வ, அவசியம் எனில் இத்தமிழ்ச் சங்கத்தினைப் பழைய மரபுப்படி அமைந்தது என்று உதவி செய்யலாம். இன்று தமிழ்நாட்டில் பல தமிழ்ச் சங்கங்கள் சிறப்பாக இயங்கி வருகின்றன. ஆதலால் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தையே வளர்த்தால் அதிகப் பயன்தரும்.

தமிழினத்திற்கு எழுச்சியும் விழிப்புணர்வும் தர உலகத் தமிழ் மாநாடு நடத்திய மாண்பமைந்த தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி! பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் பிறமொழி இலக்கியங்கள், அறிவியல் நூல்கள் உடனுக்குடன் தமிழில் மொழி பெயர்த்து அச்சிட்டுத் தரவேண்டும். தமிழ் இலக்கியங்களைப் பிற மொழிகளில் மொழி பெயர்த்து அச்சிட்டு உலகிற்கு வழங்கவேண்டும். தமிழில் தொடர்ந்து ஆய்வுகள் நிகழ்த்தப் பெறுதல் வேண்டும். அறிவியல் புலத்தின் வாயிலாக அறிவியல் நூல்கள் கொண்டு வரவேண்டும். உலகம் முழுதும் வாழும் தமிழ் மக்களுக்குத் தமிழ் கற்பிக்க ஆசிரியர்களைத் தயார் செய்து அனுப்ப வேண்டும். உலகம் முழுதும் வாழும் தமிழர்கள், தமிழ் மொழியைக் கற்பதற்குரிய வசதி செய்து தரவேண்டும்.

தமிழ், வளர்ந்தமொழி, இலக்கியம், இசை, கலை, பரதம், மருத்துவம், ஒவியம், சிற்பம் முதலிய பல துறைகளிலும் வளர்ந்த மொழி. அந்தத் துறைகளையும் வளர்க்க வேண்டும்; பேணிக் காக்கவேண்டும். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமே இவற்றைச் செய்ய இயலும்; செய்யவேண்டும். இனிய செல்வ, அடுத்து எழுதுகின்றோம்.
இன்ப அன்பு
அடிகளார்