குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3/குடியாண்மை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

78. குடியாண்மை

இனிய செல்வ,

நாடு விடுதலை பெற்று 47 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆயினும் வறுமை அகன்றபாடில்லை. ஏழ்மை நீங்கவில்லை. ஏன்? தலைக்குமேல் கூரை இருக்கிறதோ இல்லையோ வறுமைக்கோடு இருக்கிறது. இன்று நமது நாட்டில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் 58.9 விழுக்காடு. இந்த அவலம் எப்போது அகலும்?

இனிய செல்வ, இன்று நம்மிடையில் குடியாண்மை குடிகொள்ளவில்லை! அப்பட்டமான நிர்வாணச் சுயநலம்! நமக்குத் தெரிந்த அறிமுகமான ஒருவர் பணப் பிசாசுதான்! பணம் என்றால் பலவும் செய்வார். பணம் பெறுகிற வரையில் நன்றாகப் பழகுவார். அப்புறம் தேடி அலைந்து தான் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு வழியிலா, பல வழிகளிலும் பொருள் ஈட்டுவார். பெறுவதோ அரசுச் சம்பளம். அரசின் வேலை செய்வதே இல்லை! சொந்தத் தொழில்கள் பலப்பல! ஐயோ, இவர்களுக்குச் சமூக உணர்வு பற்றிக் கவலை இல்லை. இத்தகைய பணப்பூதங்கள் நடமாடுவதால் ஒப்புரவாண்மை கெடுகிறது.

இனிய செல்வ, மனிதன் சமுதாயத்தில் ஒரு உறுப்பினன். குடியில் பிறந்து சிறந்து விளங்கும் இயல்வு தேவை. எந்த நாட்டில் குடியாண்மை அதாவது தாம் பிறந்து வளர்ந்த குடியை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வலர்கள் இல்லையோ, அந்த நாட்டில் வறுமை குடிகொள்ளும். இனிய செல்வ, நமது நாடு வளமான நாடு! ஆனால், நமது நாட்டு மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள்! இந்த நாட்டில் தான் இலர் பலர்; உடையவர் சிலர். ஏன் இந்த அவலநிலை! நோற்பவர் சிலர், நோலாதவர் பலர். ஆம்! பிறர் நலத்துக்கென முயல்வது நோன்பு. இந்த நோன்பு நோற்பார் யார்? நோற்பவர்களைப் பைத்தியக்காரர்களாக ஆக்குபவர்களே இன்று மிகுதி. இங்ஙணம் நோற்பதை-வாழ்வதை ஒப்புரவு என்று திருக்குறள் கூறுகிறது. இனிய செல்வ, திருக்குறள் கூறும் குடியாண்மை நம்மிடத்தில் இருந்தால் நமக்குச் சுற்றம் தழீஇய வாழ்க்கை வந்தமையும். இன்று இது இல்லை! ஏன் இல்லை! சுயநலமே காரணம். இந்த உலகில் ஏராளமான உணவுப் பண்டங்கள்! இந்த உலகத்து மக்கள் அனைவரும் உண்டு வாழலாம்! ஆனாலும் உணவுப் பஞ்சம் இருக்கிறது! ஏன்? ஓரிருவர் குவித்து வைத்துக்கொண்டு கொள்ளை லாபத்துக்கு விற்கின்றனர். இனிய செல்வ, அப்படி விற்பதிலுங் கூடக் கலப்படம்! மற்றவர் வேதனையைப் பற்றிக் கவலைப்படாத பிறவிகள்! இவர்கள் இந்த நிலக்குப் பொறையாவர்.

இங்ஙனம் சமுதாயம் சீர் கெட யாது காரணம்? விழிப்புடன் இருந்து புல்லுருவிகளை அகற்றாமையே காரணமாகும். இனிய செல்வ, தமிழ்க் குடியில் வறுமை குடியேறிப் பலநூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. பசிக்குத் தேடிக் கையேந்தி வாங்கி உண்டு பிழைத்திருக்கின்றனர். திருவள்ளுவர் காலத்திலேயே இரந்து வாழும் வாழ்க்கை வந்து விட்டது. அது மட்டுமா? பல் குழுவாகப் பிரிந்து பாழ் செய்யும் உட்பகையால் கலகம் செய்து கொண்டு செத்துள்ளனர். இந்த அவலம் எப்போது அகலும்? நமது தமிழ்க்குடி மரபினர் என்று வறுமையிலிருந்து மீட்டெடுக்கப்படுவர்? நமது தமிழ்க்குடியில் எவன் ஒருவன் தன் சோம்பலை உதறித் தள்ளிவிட்டு ஆளுமையுடன் குடி செயற்பணிக்கு முன்வருகிறானோ அப்போது குடியாண்மை உருவாகும்; குடியாண்மை வளரும். தமிழ்க்குடியில் உள்ள குற்றங்களும் நீங்கும்!

இனிய செல்வ, சோம்பலால் குடி கெடுகிறது. அதனால் தானே புறநானூற்றுப் புலவர் "எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே” என்றார். இன்றைய தமிழகத்திற்குக் குடியாண்மையுடையோர் தேவை.

"குடி மடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட வுற்றி லவர்க்கு

(604)
இன்ப அன்பு
அடிகளார்