குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3/குறள் வாழ்வு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

2. குறள் வாழ்வு

தமிழகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றி இன்றும் வழக்கில் உள்ளது-போற்றிப் பாராட்டப் பெறுகிறது என்பது திருக்குறளுக்குரிய சிறப்பாகும். இந்நூல் உண்மையிலேயே சிறப்புடையதா? அல்லது, காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு என்ற பழமொழியின்படி நாம் அதைச் சிறப்பிக்கிறோமா என்பதை ஆராய வேண்டும்.

திருக்குறளின் கருத்து காலஎல்லைக்கு உட்பட்டதல்ல. காலங்கடந்த தத்துவங்களையுடையது அந்நூல். திருக்குறள் சாதி, இன, மொழி, நாடு வரையறைகளைக் கடந்து உலகம் தழீஇய பொதுநூல். அது மனித குலத்தின் நீதி நூல்.

வள்ளுவத்தில் அதிசயங்கள் அற்புதங்கள் கிடையாது. அன்று வள்ளுவர் சொன்னதை நாம் இன்று கையாள முடியவில்லையென்றால், அது நூலின் பிழையன்று; நாம் மனித தன்மையிலிருந்து-மனிதப் பண்பிலிருந்து நெடுந்தூரம் விலகிச் சென்றிருப்பதே காரணமாகும். கல்விக்கும் வாழ்க்கைக்கும் இன்றுள்ள உறவு அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் உள்ள உறவைப்போல் இருக்கிறது. நமது வாழ்க்கைப் போக்கில் வள்ளுவத்தின் நிழல் படியவில்லை. மனிதர்களின் வாழ்க்கையை அகத்தாலும் புறத்தாலும் வளப்படுத்துவதே கல்வி. சராசரி மனிதனால் நடை பயிலக்கூடிய அறநெறியையே கூறினார் அவர். வாழ்க்கை முறை பற்றிச் சமுதாயத்தின் சாதாரணப் படியில் உள்ள சராசரி மனிதனுக்குச் சொல்ல விரும்பியே அளவில் சுருக்கமாக-தனித்தனியே-உரிய முறையில் கூறினார்.

வாழ்க்கையின் பல்வேறு அனுபவங்களையும் அவர் பேசுகின்றார். அனைத்தும் அனுபவித்த ஒருவர் கூறுவது போலவே பேசுகின்றார். திருக்குறளே அனுபவ விளக்கமாகக் காட்சியளிக்கிறது. திருவள்ளுவர் சமுதாயத்தின் பல்வேறிடங்கட்கும் சென்று பல்வேறு தரப்பினரையும் பார்த்து, நாட்டில் பலர் பேசிய-வழக்கில் இருந்த பல்வேறு செய்திகளையும் கருத்துக்களையும்கூட நினைவில் வைத்துக்கொண்டு நூல் செய்திருக்கிறார். மிகச் சிறந்த பொற்கொல்லர் போல, வள்ளுவர் சொற்களுக்கு மெருகேற்றி யிருக்கிறார். அவர் ஒரு கைவந்த சொல்தச்சராகவே விளங்குகிறார்.

இன்று, அள்ளித் தெளித்த தெல்லாம் கோலம் என்பது போல பலர் வாழ்க்கை நடத்துகின்றனர். வரலாற்றைப் படிப்பதிலே நாம் அவ்வளவு அக்கறை காட்டவேண்டிய தில்லை. நாம் ஒரு புதிய வரலாற்றை உருவாக்க முயற்சிக்க வேண்டும். நமக்கு முன் வாழ்ந்தவர்கள் செய்த தவறுகளை நாமும் செய்து வீழ்ச்சியடையக் கூடாது.

தொடக்கத்தில் மனிதன் கண்களால்தான் பேசியிருக்கிறான். உள் உணர்வுகளுக்குத் தக்கபடி கண் ஆடும். மனிதன் கண்களைக் கட்டுப்படுத்தி வாழ முடியாது. இதனால்தான், இறைத் தோற்றத்தில்கூட அப்பரடிகள் முதன் முதலில் குனித்த புருவத்தைப் பற்றிப் பேசுகிறார்.

வள்ளுவர் காலத்தில் நம் மக்களிற் பலர் எண்ண-சிந்திக்க விரும்பாமலேயே வாழ்ந்தார்கள். எனவே வள்ளுவர் எண்ண வேண்டும்-சிந்திக்க வேண்டும் என்று வற்புறுத்தினார், எண்ணிச் சிந்தித்துச் செயற்படுவதன் மூலமே உலகத்தை வெற்றி பெறமுடியும்.

புறத்துறையில் புரட்சி செய்தவர்கள் ஏராளம்; ஆனால் அகப்புரட்சி செய்தவர்கள் மிகச் சிலரேயாவர். அந்த அகப்புரட்சியும்கூட ஆற்றொழுக்காக இல்லாமல் இடையிடையே தடைப்பட்டுத் தளர்வுற்று வந்திருக்கிறது. மனிதன் அகவளர்ச்சியில் தேய்ந்து கொண்டே வந்திருக்கிறான். மனிதன் வாழத்தானே புதிய புதிய சாதனங்கள் எல்லாம் என்பதை, அவன் எண்ணிப் பார்க்கக்கூட மறந்து விட்டான்.

குடிப்பிறப்புச் சிறப்பு மனிதனுக்கு இன்றியமையாதது. திருவள்ளுவர், அப்பரடிகள் ஆகியோரின் குடிப்பிறப்பு சிறப்பு இன்று நம்மிடம் இருக்கிறதா?

'நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்'

என்று, வீட்டுக்குள்ளே அடங்கிக் கிடப்பவனைப் பார்த்து குடும்ப வாழ்க்கையில் செழுமை யில்லாதிருப்பவனைப் பார்த்துப் பேசினார்.

'உலகத்தோடு ஒத்து வாழு; ஒதுங்கி வாழாதே’ என்று பேசுகிறார் திருவள்ளுவர். நீ சென்று குடியேறிய நாட்டை உன் நாடாக எண்ணிப் போற்று; அதனை உன் நாடாக ஆக்கிக்கொள். அதற்கு அந்நாட்டு மொழிகளையெல்லாம் கற்றுக்கொள் என்கிறார். உலகத்தை உன்னிடத்தே இழுக்க முயற்சிக்காதே; உலகம் தங்கும் இடத்தில் நீ தங்கிவிடு' என்கிறார். வள்ளுவம் அருமையானதொரு வாழ்க்கை இலக்கியம்.

இன்று உலகச் சந்தையில் அந்நியர் கருத்துக்கள் வந்து மலிந்து கிடக்கின்றன. அவற்றின் தோற்றத்தையோ, கவர்ச்சியையோ கண்டு ஏமாறாமல், மெய்ப் பொருளைக் கண்டு பயன்பெற வேண்டும்.

‘எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு'

'எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பெருள் காண்ப தறிவு'

என்றும் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர்.

இலட்சம் செங்கல் கொட்டிக்கிடந்தாலும் அது கட்டிடமாவதில்லை. அவற்றை அடுக்கிச் சந்து பதிந்துதான் சுவரை எழுப்ப வேண்டும். உடைந்த செங்கலையும் முழுச் செங்கலையும் இணைத்து இடைவெளி ஏற்பட்ட இடத்தில் முழுச் செங்கலையும் கூட உடைத்துப் போட்டுச் சந்து நிரப்புவது போல, மனிதனும் தனது சொந்த மதிப்பையும் சுகத்தையும் குறைத்துக் கொண்டாவது சமுதாயச் சுவரை எழுப்ப முற்படவேண்டும். உடைந்த செங்கலையும் முழுச் செங்கலையும் இணைத்துச் சுவரை எழுப்புபவர் கொத்தனார்; சமுதாயத்தில் உள்ள வலிமையுடையவனையும் வலிமையற்றவனையும் இணைத்து ஒருசேர அழைத்துச் செல்லுபவரே சமுதாயத் தலைவராவார்.

சோஷியல் (Social) என்ற ஆங்கிலப் பதமே விருப்பு வெறுப்புக்களைக் கடந்து உள்ளம் ஒன்றிப் பழகும் பண்பைக் குறிப்பது. இதைத்தான் திருவள்ளுவர் ‘ஒப்புரவு' என்று குறிப்பிடுகிறார். மற்றவர்களோடு சேர்ந்து பழகும்போது அப்படிச் சேர்ந்து பழகுவதனால் ஏதேனும் கேடுகள் விளையுமானால் அவற்றையும் பொறுமையோடு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார். ‘ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான்’ என்கிறார் வள்ளுவர். ஒத்தது அறிதல் என்பதற்குப் பொருள், மற்றவர்களுக்கும் ஒத்ததறிந்து என்பதேயாகும். அப்படி மற்றவர்க்கும் ஒத்ததறிந்து வாழ்பவனே உயிர் வாழ்பவன்.

பழகிய நண்பரிடத்துக் குற்றம் கண்டவிடத்தும் பொறுத்துக்கொள் என்கிறார் திருவள்ளுவர். மனிதனையும் மாமனிதனையும் இணைத்துச் சமுதாயக் கட்டிடத்தை எழுப்ப இந்தப் பொறுமைப் பண்பு இன்றியமையாதது.

சமயம், கடவுள் நம்பிக்கை ஆகியவற்றில் மிக தெளிவான கருத்துடையவர் திருவள்ளுவர். வீடுபற்றி அவர் பேசிய அளவிற்கு வேறு யாரும் பேசியதில்லை.

'புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.

என்ற குறட்பாவின்மூலம் திருவள்ளுவர் வீடுபேற்றின் மேன்மையை விளக்கி யிருக்கிறார்.

நாகரிகம் என்பதற்கே புதியதொரு விளக்கம் தந்தவர் திருவள்ளுவர். நண்பர். ஒருவர் நஞ்சு கலந்த பாலைக் கொடுத்தாலும் அதை வாங்கிக் குடித்து விடு-நஞ்சு கலந்தது என்று நினைக்காமல் குடித்துவிடு என்று கூறுகிறார். நஞ்சு கலந்தது என்று நாம் நினைத்தால் நமது முகத்தில் மரணக்குறி படரும்; நஞ்சு கலந்தது என்பதை நாம் அறிந்து கொண்டோம் என்பதை அந்த நஞ்சு வைத்த நண்பர் உணர்ந்தால் அவர் வருந்துவார். அந்த வருத்தத்தைக் கூட அவருக்குக் கொடுக்கக்கூடாது என்கிறார். நஞ்சு என்று நினைக்காமல் குடித்தால் அது நம்மைக் கொன்றுவிடாது. நஞ்சையும் மாற்றும் வல்லமை தூய செங்குருதிக்கு உண்டு. சாக்கிரடீசுக்கு நஞ்சு கொடுத்தார்கள். அவர் நஞ்சு என்று தெரிந்து-நஞ்சைச் சாப்பிடுகிறோம் என்று அறிந்து அதைச் சாப்பிட்டார்; செத்துப் போனார். அப்பரடிகளுக்கும் நஞ்சு கொடுக்கப்பட்டது. அந்த நஞ்சை அப்பரடிகள் உண்டும் சாகவில்லை.

'பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்'

என்று நயத்தக்க நாகரிகம் பேசிய வள்ளுவர் பிறந்த நாடு அன்றோ நமது நாடு? குறள்வழி, நஞ்சினையுண்டும் வாழ்ந்தார் நமது ஞானத் தலைவர் அப்பரடிகள்.

மனிதன் ஒரு சொரிசிறங்கு பிடித்தவன்போல; அரிப்பு ஏற்பட்டபோது சொரிந்து கொள்வான்; சொரியும்போது சுகமாக இருக்கும். பின்னர் எரிச்சல் ஏற்படும்; அவ்வாறு எரிவெடுத்ததும் இனிமேல் சொரியக்கூடாது என்று தனக்குள் எண்ணிக்கொள்வான். பின்னர் ஊரல் ஏற்படும்போது அதை மறந்து சொரிய ஆரம்பித்து விடுவான். அதுபோலவே பலர் அன்பு, அருள் என்று படிக்கும்போது அன்பும் அருளும் காக்க வேண்டும் என்று எண்ணிக்கொள்வார்கள்; அடுத்த நேரமே அவற்றை மறந்துவிடுவார்கள். இத்தகைய பண்பு, வாழும் மனித சமுதாயத்திற்கு நல்லதல்ல. நாம் கற்க வேண்டும்; கற்றநெறியில் நிற்க வேண்டும். வாழ்க்கையில் வழுக்கலும், இழுக்கலும் ஏற்படும்போது ஊன்றுகோல் போல நின்று உதவுவது திருக்குறள். வீட்டிலும், நாட்டிலும் குறள் மணம் கமழ வேண்டும்; குறள் வாழ்வு மிளிர வேண்டும்.