குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3/சலுகையின் எல்லை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

25. சலுகையின் எல்லை

இனிய செல்வ!

நல்வாழ்த்துக்கள்! திருக்குறள் 2000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. ஆயினும் மானிட இயல்பினை நன்றாகத் தெரிந்து, தெளிந்து இயற்றப்பெற்ற நூல். உளஇயல் கற்பதற்கு ஏற்ற நூல் திருக்குறள். இன்றைய வரலாற்றைக் கூர்ந்து நோக்கின் திருக்குறளின் அறிவுரைகளின் அருமைப்பாடு புரியும். சான்று இன்றைய செய்தித்தாள்களில் தொடர்ந்து வரும் செய்திகளாகும். ‘ஆதி திராவிடர் பேரணி’, 'வன்னியர் போராட்டம்', 'யாதவர் மாநாட்டுக்கோரிக்கை', 'பிராமணர்கள் உண்ணாவிரதம்', 'தேவர் பேரவை மாநாடு' என்பன போன்ற செய்திகளேயாம், எங்குப் பார்த்தாலும் சாதி வழிப்பட்ட இயக்கங்கள். இனிய செல்வ! அரசியல் கட்சிகளுக்குள்ளும் கூட சாதீய சக்திகள் ஊடுருவி விட்டன, இனிய செல்வ, குறிப்பாகச் சொன்னால் இன்றைய தமிழகத்தில் தமிழர்கள் இல்லை; இந்தியாவில் இந்தியர்கள் இல்லை. அதாவது ஒருமைப்பாட்டுணர்வுடன் கூடிய சமுதாயம் காலூன்றவில்லை மனிதப்படைப்பு இயற்கை செய்தது! இல்லை - இயல்பான பரிணாம வளர்ச்சி! சாதீயப்படைப்புகள் மனிதன் செய்தவை. இனிய செல்வ, இந்தப் பொல்லாதபுன்மையுடைய சாதி, குல, கோத்திர வேற்றுமைகளை எதிர்த்துத் தமிழர்கள் - நாயன்மார்கள் தொடர்ந்து போராடி வந்திருக்கிறார்கள். இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்” என்று ஆற்றுப்படுத்தினார்கள். பனம்பாரனார் காலம் முதல் பாரதிதாசன் காலம் வரை தொடர்ந்து போராடி வந்துள்ளனர். அது போலவே சமய உலகிலும் அப்பரடிகள் முதல் அண்ணல் காந்தியடிகள் வரை போராடி வந்துள்ளனர். வள்ளல் பெருந்தகை சாதிகளைக் கடுமையாகவே சாடினார். ஆயினும் பயன் கிடைக்கவில்லை. ஏன்? இனிய செல்வ, "புரியாதபுதிர் என்கிறாயா? அப்படியெல்லாம் ஒன்றும் புரியாதது அல்ல. நோயும் தெரிகிறது. நோயின் காரணமும் தெரிகிறது. ஆனால் மருத்துவம் செய்யும் துணிவு தான் இல்லை. ஒருபுறம் பழைமைப்பிடிப்பு தடையாக இருக்கிறது. மறுபுறம் தேர்தல் தடையாக இருக்கிறது. இவற்றுள்ளும் பழைமைப் பிடிப்பாளர்கள் கை தளர்ந்து வருகிறது. பழைமைப் பற்றாளர்கள் சமுதாய மேலாண்மை உடையவர்கள் அல்ல. அரசியல், தேர்தல் வெற்றி-தோல்வி உணர்வுகள் வழிப்பட்ட அச்சம் பெரிதும் தடை! இனிய செல்வ, இந்தத் தவற்றுக்கு நாம் அனைவரும் மதிக்கும் பெருந்தலைவர்கள் கூட இரையாகின்றனர். என்ன செய்வது? நாட்டின் ஊழ்வினை அதுவோ?

ஆதி திராவிட மக்கள் - ஹரிஜன சமுதாயத்தினர், சமுதாய அமைப்பின் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்கள். இது நூற்றுக்கு நூறு உண்மை. அவர்கள் இந்துமத சாத்திரங்கள் அடிப்படையில் மிகவும் கேவலமாக, விலங்கினும் மோசமாக நடத்தப்பட்டார்கள். இவர்களை மனிதர்களாக்க வேண்டியது உடனடியான பணி! தலையாய கடனும் கூட; இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய மேதைகள் இதற்குரிய பரிகாரத்தை அரசியல் சட்டத்திலேயே கண்டுள்ளனர். இந்த உணர்வும் செயல்முறையும் வரவேற்கத்தக்கன! பாராட்டத்தக்கன! ஆனாலும் தீண்டாமையை பின் தங்கிய நிலையைப் பிரதானப்படுத்தி ‘சாதிகளை’ விட்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமா? என்று எண்ணத் தோன்றுகிறது. இனிய செல்வ, சாதிகளை மறக்கடிப்பதற்குரிய முயற்சி இது. தீண்டாமையிலும் பின் தங்கிய நிலையிலும் அல்லலுறுவதைக் குடும்ப அடிப்படையில் கணக்கெடுத்துத் தீர்வுகாண வழிவகை கண்டிருந்தால் இன்று பரவலாக அந்தப் பயன் சென்று சேர்ந்திருக்கும். இன்று இந்தப் பயனை அடைந்திருப்பவர்கள் இந்தத் தொகுதியில் கொஞ்சம் வளர்ந்த வல்லாண்மையுடையவர்களேயாம். கடை கோடி மனிதனுக்கு ஒன்றுமே கிடைக்க வில்லை. நாமும் சுதந்திரம் பெற்ற நாற்பதாவது ஆண்டு விழாவைக் கொண்டாடி விட்டோம். இன்று ஆதி திராவிடர்களுக்குரிய மேம்பாட்டுப் பணிகள் ‘சாதியின்’ பெயராலேயே செய்யப் பெறுவதால் சாதிகளை மறக்க முடியவில்லை. மாறாகச் சலுகைகளை அடைய சாதிகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயமும் தோன்றி விட்டது. இனிய செல்வ, இன்றுள்ள மனப் போக்கு வளர்ந்தால், நமது நாட்டின் தீண்டாமை போகாது. ஆதி திராவிடர்கள் என்ற சமுதாய அமைப்பு நீங்கி எல்லோரும் ஒர் குலம் என்ற நிலை உருவாகாது. இது தொடர்பாக நிறைய உனக்கு எழுத வேண்டியுள்ளது. அடுத்த கடிதத்தில் விரிவாக எழுதுகின்றோம்.

அதற்குள்ளாக,

"நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை”

என்ற திருக்குறளைப் படித்து வைத்துக் கொள்! பயன் தரும்! மற்றவை பின்.
இன்ப அன்பு
அடிகளார்