குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3/சலுகையின் எல்லை - 2

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

26. சலுகையின் எல்லை - 2

இனிய செல்வ,

நல்வாழ்த்துக்கள்! சென்ற கடிதத்தைக் கவனமாகப் படித்திருப்பாய் என்று நம்புகின்றோம். இந்தக் கடிதம் எழுதுவதற்குள் ஒரு புதுச்செய்தி! கிறிஸ்தவர்கள் மாநாடு நடத்தியுள்ளனர்; தார்மீக மாநாடு நடத்தியுள்ளனர். அதில் மதம் மாறிய கிறிஸ்தவ ஹரிஜனங்களுக்கும் இந்து ஆதி திராவிடர்களுக்கு வழங்குவது போலச் சலுகை கொடுக்கத் தக்கவகையில் அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இது பற்றிப் பின் விரிவாக எழுதுகின்றோம்.

முன் கடிதத்தின் தொடர்ச்சியாகச் சில செய்திகள்! - இந்தியாவில் சாதிகள் தோன்றியது ஆரிய நாகரிகத்திற்குப் பிறகுதான். கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகரும் சாதியைக் கண்டித்திருக்கிறார். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பரடிகளும் சாதி வேற்றுமைகளைச் சாடி இருக்கிறார். சற்றேறக் குறைய 1500 ஆண்டுகளாகத் தமிழறிஞர்கள், சான்றோர்கள் சாதிமுறைகளை மறுத்து வந்தாலும் சாதி முறைகள் போகவில்லை. அது மேலும் மேலும் இரத்தப்புற்று நோயாக வளர்ந்து கொண்டு வருகிறது. சாதி முறைகள் மதத் தொடர்புடையனவாக இருந்த வரையில் அது சமூகத் தீமையாக இருந்து வந்தன; ஒரளவு பொருளியல் தீமையாகவும் விளங்கின. இட ஒதுக்கீடுகள் வந்த பிறகு, சாதி வேற்றுமைகள் சமூகத் தீமையாக மட்டுமல்லாமல் அரசியல் தீமையாகவும் உருப் பெற்று விட்டன.

இனிய செல்வ, உன்னுடைய கேள்வி நியாயமானதே! பின் தங்கியவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறியவர்களுடன் சம நிலைக்கு வரச் சலுகைகள் தேவையே! தேவை மட்டும் அல்ல, அவசியமும் கூட! ஒதுக்கீடு தேவை என்பதில் இரண்டு கருத்து இல்லை! எவ்வளவு காலத்திற்கு ஒதுக்கீடு தேவை? ஒதுக்கீட்டு முறையை நடை முறைப்படுத்துவது எப்படி என்பவற்றில் தான் கருத்து வேறுபாடு. மிகச் சிறந்த அறம் கூடச் செய்யும் முறையால் பயன்தராமல் போவதுடன் மட்டுமன்றி எதிர்விளைவையும் உண்டாக்கி விடுமே! மருந்து நல்லதாக இருந்தால் மட்டும் போதாது; மருந்தைக் கையாளும் முறையும் நல்லதாக அமைய வேண்டும். ஒரு மருந்து அனுபானத்தால் முரண்பட்ட பலன்களைத் தரும் என்பதை நினைவிற் கொள்க.

தீண்டாமையால் அல்லற்படுபவர்களுக்குக் குடும்ப அடிப்படையில் 25 ஆண்டுகள் அவசியமானால் மேலும் 10 ஆண்டுகள் சலுகை, என்று ஒரு கோட்பாடு வகுத்துக் கொண்டால் சாதிகள்-சாதியின் உட்பிரிவுகள் சிக்கல் தோன்றாது. குறிப்பிட்ட கால வரையறையிருப்பதால் விரைவுணர்வுடன் பணிகள் நடைபெறும் காலத் தவணைப் படி முறைகள்படி வளர்ந்த குடும்பங்கள் அந்தப் பட்டியலிலிருந்து நீக்கப் பெறுவதால் கடைகோடி மனிதனுக்கும் வாய்ப்புக் கிடைக்கும். என்றாவது ஒரு காலத்தில் இந்தியாவில் தீண்டாமை இல்லை என்ற சாதனையை அடையலாம்; அடையமுடியும். இப்போதுள்ள நடை முறையில் என்றுமே தீண்டத்தகாதவர்கள் இருப்பார்கள். வாயடி, கையடிக்காரர்கள் சலுகையைத் திரும்பத் திரும்பப் பெற்றுப் பயனடைவர். இதில் என்ன சமூக நீதி இருக்கிறது? இதனால் தீண்டாமை சமுதாயத்தில் நிலைப்பட்டுப் போகுமே என்ற கவலை தோன்றுகிறது.

இனிய செல்வ, சிலர் தமது தலைமைப் பதவிகள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகச் சாதிகளைக் காப்பாற்றப் போராடுவர். இது நல்லதா? யோசித்து எழுதுக! இதே நிலைதான் பிற்பட்டோர் நிலையிலும் கூட! இந்த ஒதுக்கீட்டுப் பேச்சு தலை தூக்கி நிற்பது அரசுப் பணிகளுக்குத் தான்! கல்வி, அறிவு பெறுவதற்கே! கல்வியையும் வேலை வாய்ப்பையும் ஒன்றாக்கினால் என்றும் அறிவு வளராது; தற்சார்பு நிலை உருவாகாது; தன்னம்பிக்கையும் ஏற்படாது. அரசைச் சார்ந்தே வாழும் ஒட்டுண்ணியாக மக்கள் மாறுவர் - வளர்வர். இது நன்றன்று. இந்தியாவில் கற்ற அனைவரும் அரசுப் பணியில் இடம் பெறுவது என்பது நடை முறைச் சாத்தியமல்ல. ஆதலால் ஆங்காங்குப் படித்த இளைஞர்களும் தொண்டு நிறுவனங்களும் தொழிற்சாலைகளை நிறுவி வேலை வாய்ப்புக்களைத் தோற்றுவித்து வழங்க வேண்டும். இந்த நூற்றாண்டின் அறம், வேலை வாய்ப்பு வழங்குவதேயாம். ஆதலால் சாதிகளை நினைவில் வைத்துக் கொண்டாக வேண்டிய கட்டாயத்திலிருந்து சமுதாயத்தை மீட்டாக வேண்டும். சாதிகளை மறப்பதற்குரிய செயல்முறைகளை நடைமுறைப்படுத்தியாக வேண்டும். இஃதோர் அவசர அவசியத் தேவை.

தீண்டப்படாத நிலையும், மிகப் பின் தங்கிய நிலையுமே அளவுகோலாக அமைய வேண்டும். சாதிப் பெயர்கள் அளவு கோலாகத் தொடர்ந்து இருக்கக் கூடாது. இரத்தினகிரியில் 11-10-80இல் நடந்த திருக்குறள் பேரவை மாநில மாநாட்டின் தீர்மானங்களைப் படித்திருக்கிறாயா? இல்லையெனில் உடனடியாக எடுத்துப் படிக்கவும். சாதிப் படை நோய் நீங்க அத்தீர்மானம் ஒரு சரியான மருந்து என்பதை நினைவிற்கொள்க. அதேபோழ்து,

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”

என்ற திருக்குறளையும் நினைவிற் கொள்க. இன்னமும் எழுத வேண்டிய செய்திகள் உள்ளன. நாட் காலை 4 மணி வந்து விட்டது. திருக்கோயிலுக்குச் செல்ல அழைப்பு விடுக்கிறார் பரிவு மிக்க தொண்டர் சித. பேச்சிமுத்தன். ஆதலால் இத்துடன் நிறுத்திக் கொள்கின்றோம்!

மற்றவை அடுத்த கடிதத்தில்.
இன்ப அன்பு
அடிகளார்