குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3/தக்காரைத் தேர்வு செய்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

19. தக்காரைத் தேர்வு செய்

இனிய செல்வ!

தமிழகத்தில் நடக்கக் கூடாதது நடந்து விட்டது.

"பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்”

என்ற நெறியைப் போற்ற வேண்டிய தமிழகச் சட்டமன்ற உறுப்பினர்கள் முறைகேடாக நடந்து கொண்டார்கள். சட்டமன்றத்தில் கலகம், அடிதடிச் சண்டை! இந்தச் செய்திகள் தமிழர்க்குத் தலைகுனிவைத் தரத்தக்கன.

இனிய செல்வ, மக்களாட்சி-ஜனநாயகம் என்பது ஒர் உயர்ந்த வாழ்க்கை முறை. தேர்தல்களினால் மட்டும் ஜன நாகரிகம் சிறந்துவிடா. இருவேறு கருத்துக்களைச் சமநிலையில் கேட்டல், ஆய்வு செய்தல், ஏற்பன ஏற்றல், ஏற்புக் குரியனவல்லாதனவற்றைத் தொடர்ந்து விவாதித்துச் செழுமைப்படுத்தி ஏற்றல் முதலியன ஜனநாயகத்தின் அடிப்படையாகும். இதனை வள்ளுவம்:

"சமன் செய்து சீர்துரக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி”

என்று கூறும். இன்று இந்தப் பண்பு நம்முடைய ஜனநாயகத்தில் காணக்கிடைக்கவில்லை. மாறுபட நினைப்பது ஒரு குற்றமாகக் கருதப் பெறுகிறது. இனிய செல்வ, அது மட்டுமா? பகையும் காட்டுகின்றனர். அதன் காரணமாக இன்று பல அநியாயங்களைக் கண்டும் காணாமல் போகவேண்டியிருக்கிறது; வாயிருந்தும் ஊமையாக இருக்க வேண்டியிருக்கிறது. இதனை எப்படி மக்களாட்சி என்று கூறமுடியும்? இனிய செல்வ, மக்களாட்சியில் நாட்டை ஆள்பவர்களைத் தேர்வு செய்து பொறுப்புத் தரவேண்டும். எப்படி ஆள்பவரைத் தேர்ந்தெடுப்பது? நாட்டை ஆளுதல் என்பது பொறுப்புள்ள பணி. ஆட்சிப் பொறுப்பு துன்பந்தருவது என்றார் இளங்கோவடிகள். இன்றோ ஆட்சிப் பொறுப்பேற்பது ‘சுகம்’ ஆகி விட்டது. மறைமுகமாக அதுவே ஒரு சொத்து ஆகிவிட்டது. என் செய்வது? இரங்கத்தக்க நிலை, இனிய செல்வ, நமது திருக்குறள் ஆள்பவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறையைப் பற்றிக் கூறுகிறது.

"இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்”

என்ற திருக்குறளை நன்றாகப் படி! சிந்தனை செய்க!

ஆட்சிக்குரிய தலைவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற்றவர்கள் ஒரிடத்தில் கூடுதல் வேண்டும். கும்பலாக அல்ல; ஒருமை உணர்வுடையவர்களாகக் கூட வேண்டும். ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் ஒருமையுளராகச் சேர்ந்து உலகியலை நடத்த வேண்டும். இனிய செல்வ, ஆட்சிப் பொறுப்பை ஏற்பவரின் முன் உள்ள கடமைகள் என்ன? நாடு எப்படி இருக்கிறது? இன்றுள்ள நிலையில் நாட்டை ஆளும் தகுதி, திறமை யார் மாட்டு இருக்கிறது என்று ஆய்வு செய்து தகுதியுடையவரைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும். இதுவே திருக்குறள் காட்டும் தேர்தல் முறை. இனிய செல்வ, தேர்ந்தெடுக்கப் பெறுபவரின் தகுதியே தேர்வுக்கு அளவுகோல். மற்றபடி பணமில்லை! பணம், வாக்களிப்பில் தூண்டு ஆற்றலாக அமையின் நாடு தகுதியில்லாதாரைத் தேர்வு செய்து அழிவைத் தேடிக்கொள்ளும்! இன்று தமிழகத்தில் நடந்தது என்ன? ஒரே அணியில் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் விலை, வன்புதுன்புகள் ஆள் தூக்கல் முதலிய அனைத்துக் கேடுகளும் நடந்து விட்டன. இதுவா மக்களாட்சிமுறை! தலைவர் தேர்தல் தகுதி அடிப்படையில் நடைபெற வேண்டும். இனிய செல்வ, உலக மகாயுத்தத்தின் போது இங்கிலாந்தின் தலைமையமைச்சர் பொறுப்பில் இருந்த வின்ஸ்டன் சர்ச்சிலைப் போரில் மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்த சர்ச்சிலை அடுத்து வந்த பொதுத் தேர்தலில் இங்கிலாந்து மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கவில்லை. அப்போது சர்ச்சில்,

"என்னுடைய பணி இப்போது தேவை இல்லை" என்று கூறி விளக்கினார். ஆதலால் இன்றைய தமிழ்நாட்டின் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு தலைவரைத் தேர்ந்தெடுப்பதே முறை. இதில் வேட்பாளரின் ஆர்வத்தை விட வாக்காளர்களுக்கே ஆர்வம் கூடுதலாக இருக்க வேண்டும். இன்றைய நடைமுறையில் மக்களாட்சியின் தோற்றங்கள் உள்ளனவே தவிர உணர்வுகள் இல்லை. இன்றைய ஜனநாயக முறை, சூதாட்டம் போன்ற ஒன்றாகி விட்டது.

இன்ப அன்பு
அடிகளார்