குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3/தமிழ்மொழிவழிக் கல்வி-2

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

7. தமிழ்மொழிவழிக் கல்வி-2

இனிய தமிழ்ச் செல்வ, நல்வாழ்த்துக்கள்!

உனது மடல் கிடைத்தது. நன்றி. வள்ளுவர் வழியைப் படிப்பதிலும் சிந்திப்பதிலும் உனக்கு இருக்கிற ஈடுபாடு மகிழ்வைத் தருகிறது. இதழாசிரியர் தே. கண்ணன் அவர்கள் மிக மிக மகிழ்வார்.

ஆம்! சென்ற கடிதத்தில் திருக்குறளை எடுத்துக் காட்டவில்லை! இது தவறுதான்! ஆனாலும் மடல் தொடர்கிறது, முடியவில்லை என்பதை நினைவில் கொள்க!

திருவள்ளுவர் 'கற்க’ என்று பொதுவாகத்தான் கூறினார். திருக்குறள் மானிட சமுதாயத்திற்காக இயற்றப் பெற்றது. அதனால் தாய்மொழிக் கல்வி பற்றி எழுதப் பெறவில்லை. கல்வி மானிடத்திற்குப் பொது. உலக மானிடர் பேசும் மொழிகள் அனைத்தும் மானிடர்க்கு உரிமையுடைய மொழிகளேயாம். அனைத்து மொழிகளையுமே கற்பது மானிடரின் கடமைதான்! இலக்கியத் திறனோடு கற்காது போனாலும்-ஆய்வு நிலை மனப்பாங்குடன் கற்காது போனாலும் அனைவருடனும் உறவு கொண்டு பழகும் அளவிலாவது மற்ற மொழிகளைக் கற்பது வரவேற்கத் தக்கது. திருக்குறள் கற்றலை வற்புறுத்துவதைப் போல - இல்லை, அதைவிட முதன்மையாக-அறிவுடைமையை வலியுறுத்துகிறது.

"அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்"

என்பது திருக்குறள்.

அறிவு, தாய்மொழிக் கல்வி வாயிலாகத்தான் எளிதில் வந்தமையும். மொழியின் பயன் மற்றவர்களுடன் இணக்கமான உறவை வளர்த்துக் கொள்ளுதல். அறிவின் பயன், பெற்ற உறவைத் தாழாது பேணல். அடுத்து, உலகியற்கையைத் தனக்கும் தன்னுடைய சமுதாயத்திற்கும் பயன்படுமாறு ஆக்கிக் கொள்ளல். இனிய செல்வ, இக்குறிக்கோள்கள் நிறைவெய்தா விடின் வளர்ச்சி இல்லை; வாழ்வு இல்லை; அமைதி இல்லை. ஆதலால், ஒரு மொழியின் காரணமாக நமது உலகியல் நலன்களை இழந்து விடுவோம் எனில் அந்த மொழியை எதிர்க்கலாம். தவறில்லை! எதிர்க்கவும் வேண்டும். ஆதிபத்தியம், வல்லாண்மை சார்ந்த மேலாண்மை எங்கும் எப்போதும் எதிர்க்கக் கூடியது. ஆனால், அந்த மொழியினைச் சார்ந்தோருடைய ஆதிபத்திய உணர்வை - வல்லாண்மையையே எதிர்த்துப் போராட வேண்டும். அதற்குத் துணையாக அந்த மொழி அமையாமல், பாதுகாக்கத் தக்க வகையில் அந்த மொழியையும் எதிர்க்கலாம். ஆனால் அந்த மொழியை விரும்பிக் கற்கக் கூடாது என்று தடை செய்வது மனித இயலுக்கு முரணானது. இந்தியின் ஆதிபத்தியத்தை எதிர்ப்பது வேறு; இந்தியை எதிர்ப்பது வேறு.

இனிய செல்வ, இன்று நாம் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தி, இந்தியாவின் அலுவல் மொழியாக இருப்பதை எதிர்க்கவில்லை. நாம் எதிர்ப்பதெல்லாம் இந்தி படிப்பதையே! ஆம்! "இந்தியைத் திணிக்காதே!” என்பது நமது கோரிக்கை! அவர்களின் வழக்கமான விடை, "இந்தியைத் திணிக்கமாட்டோம்” என்பதுவேயாம். இந்தி, இந்தியாவின் அலுவல் மொழியாக இருக்க ஒத்துக் கொண்ட பிறகு, கற்கப் பெற வேண்டிய அவசியத்தை உணராது போனால் நடுவண் அரசில் நாம் பெறக்கூடிய பங்கு குறைந்து போகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? இனிய செல்வ, அது மட்டுமல்ல! அமரர் நேரு பெருமகனாருடைய உறுதி மொழியைக் காப்பாற்ற வேண்டும் என்பது நமது கோரிக்கை! அமரர் நேருவின் உறுதி மொழி என்ன? "இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பி ஏற்கும் வரையில் ஆங்கிலம்-இணை ஆட்சி மொழியாக இருக்கும்” என்பதேயாகும். இனிய செல்வ, நேரு மகனாரின் உறுதி மொழியை நன்றாகப் படி! சிந்தனை செய்! “இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பி ஏற்கும் வரையில் ஆங்கிலம் இணை ஆட்சி மொழியாக இருக்கும்" என்பதில் உள்ள "விரும்பி ஏற்கும் வரை" - என்ற சொற்கள் உணர்த்தும் பொருள் என்ன? இந்தி பேசாத மாநில மக்கள் இந்தியை விரும்பிக் கற்க வேண்டும் என்பது பெறப்படுகிறது. விரும்புகிற காலம் தான் முடிவு செய்யப் பெறவில்லை! விரும்பி ஏற்கும் காலத்தை முடிவு செய்யும் பொறுப்பு, இந்தி பேசாத மாநில மக்களிடம் விடப் பெற்றது. இதுவே உண்மை. இந்தியை என்றாவது ஒரு நாள் விரும்பி ஏற்க வேண்டும் என்ற நியதியை ஏற்றுக் கொண்ட பிறகு கற்க மறுப்பதில் என்ன பொருள் இருக்கிறது? அல்லது கற்கும் காலத்தைத் தள்ளிப் போடுவதில் என்ன பயன் விளையப்போகிறது?

இனிய செல்வ, நேரு பெருமகனாரின் உறுதிமொழி இந்தி பேசாத மாநிலங்களைக் குறித்தது. இன்று இந்தி பேசாத மாநிலங்களின் நிலை என்ன? தமிழ் நாட்டைத் தவிர அனைத்து மாநில மக்களும் மூன்று மொழித் திட்டத்தை ஏற்றுக் கொண்டு மூன்றாவது மொழியாக இந்தியைத் தொடர்ந்து கற்று வருகின்றனர். இந்தச் சூழ் நிலையில் நமது நிலை என்ன? இனிய செல்வ, அது மட்டுமல்ல! ஓர் உண்மை உனக்கு தெரியாமல் இருக்க முடியாது. அதாவது தமிழ் நாட்டிலும் உலகியல் தெரிந்து தெளிந்த உயர்குடியினர் - எதிரதாக் காக்கும் உயர் குடியினர் இன்று இந்தியைக் கற்கத் தொடங்கிவிட்டனர். நாடு முழுவதும் பரவிக் கிடக்கும் ஆங்கிலப் பயிற்று மொழிப் பள்ளிகளில் இந்தியை மூன்றாவது மொழியாக விரும்பி கற்று வருகின்றனர். பின் தங்கிய நமது சமூகம் தான் இந்த மொழிச் சிக்கலில் சிக்கித் தவிக்கிறது. நமது நிலையில் தாய்மொழி வாயிலாகத் தொடர்ந்து படிக்க இயலவில்லை.

ஆங்கிலம் கற்க வேண்டிய ஒரு மொழியேயாம். இதில் இரண்டு கருத்து இருக்க இடமில்லை. ஆனால், ஆங்கிலம் பயிற்றுமொழியாக இருக்கத் தகுதியற்றது. ஆங்கிலம் பயிற்று மொழியாக நீடிப்பதால் தமிழர்கள் அறிஞர்களாக முடியாமல் தடை செய்கிறது. இன்றைய நிலையில் ஆங்கிலம் வாயிலாகப் பயிற்றும் கொள்கை தமிழ் வளர்ச்சிக்கு முற்றாகத் தடை. இனிய செல்வ, இது தமிழ் நாட்டில் தொடர்ந்து உயர் குடியினராக ஒரு சிலரையும் இரண்டாம் தரக் குடிமக்களாகப் பலரையும் ஆக்குகிறது. இது வரவேற்கத்தக்கதல்ல.

இந்தியாவில் மட்டுமல்ல, தமிழ் நாட்டிலும் கூட எண்பது விழுக்காட்டு மக்களுக்கு ஆங்கிலம் ஒரு புதிய மொழியேயாம். உலக நாடுகளிலும் ஆங்கிலம், கற்போர் சிலரே! அதுவும் ஆய்வுக்காகக் கற்பதேயாம். இங்கிலாந்து, இங்கிலாந்தைச் சேர்ந்த நாடுகள், காமன் வெல்த் நாடுகள் அமெரிக்கா முதலியவைகளில் மட்டுமே ஆங்கிலப் புழக்கம்! மற்றபடி சோவியத் ஒன்றியம், சீனா, சப்பான் போன்ற நாடுகளில் அந்தந்த நாட்டுத் தாய்மொழிகளே பயிற்று மொழி! ஆட்சிமொழி.

"உலகத் தோடொட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்"

"எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு"

"யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு"

என்ற குறள்கள் நமக்குக் கற்றுத்தரும் பாடம் என்ன? என்பதைச் சிந்தனை செய்து எழுது.
இன்ப அன்பு
அடிகளார்