குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3/தாய்மொழிவழிக் கல்வி-5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

10. தாய்மொழிவழிக் கல்வி-5

இனிய தமிழ்ச் செல்வ,

மொழிப்போர்-இல்லை, இந்தி எதிர்ப்புப்போர் தீவிரமாகிறது! இதில் தீவிரமாக ஈடுபட்டுத் துன்பங்களை ஏற்று அனுபவிக்கும் அனைவருக்கும் நமது பாராட்டுதல்கள்! அவர்களுடைய கொள்கையில் நமக்கு முரண்பாடு இருக்கலாம்! இருக்கிறது! ஆனால் அவர்களுடைய உணர்வை நாம் மதிக்கின்றோம்! அதற்கு மாசு கற்பிக்க நாம் விரும்பவில்லை! நாம் மாறுபடுவதெல்லாம் தமிழுக்கு உடனடியான பகை இந்தியன்று; இந்தி இருக்கவும் முடியாது என்பதுதான். ஆனால் தமிழுக்கு உடனடிப்பகையாக இன்று இருப்பது ஆங்கிலந்தான்! தமிழ் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக இருப்பதும் ஆங்கிலம் தான்! தமிழனின் அறிவு வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதும் ஆங்கிலம் தான்! இது நம்பிக்கை மட்டும் அல்ல! நாட்டின் நிகழ்வுகள் தரும் படிப்பினை!

இனிய செல்வ, திருக்குறள்,

"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்"

(948)
என்று கூறுகிறது. "நோய்க்கு மருத்துவம் செய்வதை விட நோயின் முதலை-நோயின் காரணத்தை மாற்று!” என்பதே திருக்குறள் கொள்கை. இன்று தமிழினம் வளராததற்கு-தமிழ் வளராததற்குக் காரணம் ஆங்கிலம் பயிற்று மொழியாக நீடித்தலேயாம். நமது வீட்டில், நமது பல்கலைக் கழகங்களின் வளாகங்களில், நமது தமிழ் நாட்டில் எந்த மொழி ஆட்சி செய்ய வேண்டும் என்பதில் அக்கறை தோன்ற வேண்டாமா? ஆங்கில மொழியின்பால் ஈடுபாடு வளர்ந்து வருகிறது. இதற்குக் காரணம் ஆங்கிலத்தை அனைத்துக் கொண்டதுதான்! உலக மாந்தரொடு தொடர்பு கொள்ள ஆங்கிலம் வேண்டாமா என்று கேட்பர். நமது நாட்டு மாந்தரொடு தொடர்பு கொள்ள ஒருமொழி வேண்டாமா? கூடாதா? இனிய செல்வ, ஆங்கிலத்தின் மூலம் உலகத் தொடர்பு என்பது இன்று சாத்தியமில்லை! உலக நாடுகள் அனைத்திலும் அந்தந்த நாட்டு மொழிகளே பயிற்று மொழிகள்! ஆட்சி மொழிகள்! ஆதலால் ஆங்கிலம் உலக மொழியல்ல! ஆனால் எல்லா நாடுகளிலும் ஆங்கிலம் ஒரு மொழியாகப் பயிலப்பெறுகிறது. அவ்வளவுதான்! ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு சோவியத்தில், ஜப்பானில் பயணம் செய்தல் இயலாது. இந்தியாவிலும் இயலாது. ஆதலால் ஒரு மனிதன், உலக மனிதனுடன் தொடர்பு கொள்ளவேண்டின் உலக மனிதனாக உயர வேண்டும் எனில் பல மொழிகள் கற்க வேண்டும். முயன்றால் கற்கவும் இயலும்.

இனிய செல்வ, இந்தி இந்தியாவின் அலுவல் மொழி என்றாலும் தேசிய மொழிகளின் ஆர்வங்களுக்கு ஏற்ப நாட்டு மொழிகளை, தேசிய மொழிகளை இந்திய அலுவல்களில் வேண்டிய அளவுக்குப் பயன்படுத்துதல் வேண்டும் என்ற நிலை ஏற்பு செய்யப் பெற்றுள்ளது. இந்த முடிவின்படி மைய அரசு அலுவலகங்கள் மாநில மக்களுடன் தொடர்புகொள்ள மாநில மொழிகளையே பயன்படுத்த வேண்டும் என்பது நடைமுறை! இனிய செல்வ, மிகச் சிறந்த ஏற்பு, மைய அரசின் பணிகளுக்குரிய தேர்வுகளை அவரவர் தாய் மொழியிலேயே எழுதலாம் என்ற முடிவு! அமரர் அறிஞர் அண்ணா அவர்கள் கருத்து மைய அரசின் தேர்வுகளில் இந்தியைத் தாய்மொழியாகவுடைய மாணவர்களுடன் மற்ற மாநில மாணவர்கள் போட்டியிட முடியாது என்பதேயாகும். இன்று மைய அரசின் தேர்வுகளை அவரவர் தாய் மொழியிலேயே எழுதலாம். இந்தி மொழி மாநில இளைஞர்கள் இந்தியிலேயே எழுதுகின்றனர். நமது தமிழ் நாட்டு இளைஞர்களோ ஆங்கிலத்திலேயே எழுதுகின்றனர். தாய் மொழியில் எழுதும் இந்தி மாநில இளைஞர்கள் வெற்றி பெறும் அளவுக்குத் தாய்மொழியல்லாத ஆங்கிலத்தில் எழுதும் தமிழ்நாட்டு இளைஞர்கள் வெற்றியைப் பெறமுடிய வில்லையே! ஏன்? தமிழ் நாட்டு இளைஞர்கள் தமிழ் வழி கற்காததே காரணம்! ஆங்கிலம் தாய்மொழியாக அமையாததால் திறமை நிறைவுபெறவில்லை! இதுவே காரணம்.

இனிய செல்வ, இந்தியத் தலைநகரில் எந்த மொழி என்பதை முடிவு செய்வதற்குமுன்பு தமிழ் நாட்டில் எது பயிற்று மொழி? தமிழ் நாட்டில் எது ஆட்சி மொழி? என்பதை முடிவு செய்ய வேண்டும். இந்த முடிவுகளிலிருந்து தான் மைய அரசின் மொழிக் கொள்கையில் நாம் எடுக்கும் முடிவுகள் சரியாக அமையும்! அவர்களும் ஏற்கத் தக்கதாக முடியும்! இந்தத் திசையில் பாராட்டுதலுக்குரிய கலைஞரும் மாண்புமிகு தமிழக முதல்வரும் சிந்தனை செய்ய வேண்டும் என்பது நமது விருப்பம்.

மொழி வழிப்பட்ட இயக்கங்கள் உணர்ச்சி பூர்வமானவை. இதற்குத் தீர்வு காண்பதில் நிதானம் மிகுதியும் தேவை. தீர்வு காணும் முயற்சிகளில் மக்களாட்சி மரபுகள் மீறப்படுதல் கூடாது என்பதையும் நாம் அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும். இனிய செல்வ, அடுத்து எழுதுகின்றோம்.

இன்ப அன்பு
அடிகளார்