குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3/திருக்குறட் கொள்கை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

4
திருவள்ளுவர் காட்டும் அரசியல்

1. திருக்குறட் கொள்கை

தமிழின் சிறப்பு

தமிழ் காலத்தால் மூத்தது; கருத்தாலும் மூத்தது, தமிழ் வாழ்க்கையோடு இயைந்து வளர்ந்த மொழி. வாழ்க்கையை வளர்த்த மொழி. தமிழினம் உலகின் வரலாற்றுக் காலந்தொட்டே சீருடனும் சிறப்புடனும் வாழ்ந்து வந்திருக்கிறது. தமிழினத்தின் கருத்துக்கள் நம்பிக்கை, நல்வாழ்க்கை இவைகளுக்கு இயைபுற அமைந்தன. வரட்சித்தன்மையுடைய கற்பனைகளோ, இசைவான நடைமுறைகளுக்கு அப்பாற்பட்டவைகளோ, தன்னிச்சையான மனப் போக்குகளின் படைப்புகளோ தமிழில் இல்லை.

தமிழ், மொழியாக மட்டும் வளரவில்லை. நாகரிகம், பண்பாடு, சமயம் ஆகியவற்றையும் தழுவி வளர்ந்திருக்கிறது. தமிழ் வாழ்க்கையை ஏனோ தானோவென்று கணிக்கவில்லை. வாழ்க்கையை வாழ்க்கையாகவே பார்க்கிறது. ஏன்.? வையத்துள் வாழ்வாங்கு, வாழ்தல் தமிழ்தந்த பாடம். இன்றா? நேற்றா? இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயாம். உலகமொழி என்று பாராட்டப்படுகின்ற ஆங்கிலத்திலும் மொழி பேசும் மக்களின் வாழ்க்கைக்கு இலக்கணமில்லை. இந்திய நாட்டின் இணைப்பு மொழியாக செயற்கைக் கோலம் தாங்கும் இந்தியிலும் வாழ்க்கைக்கு இலக்கணமில்லை. ஏன்? இந்திய நாட்டின் சமயத்திற்குரிய மொழி என்றும், பாசம் ஒன்றின் காரணமாகவே சிலரால் பாராட்டப்பெறும் சமஸ்கிருதத்தில் கூட வாழ்க்கைக்கென்று முறையான இலக்கணமில்லை. தமிழில் எழுத்து, சொல், பொருள் என்ற அமைப்பில் இலக்கணத்தை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியர் இயற்றித் தந்துள்ளார். தமிழிலக்கிய வழக்கில் பொருள் என்றால் பயன் என்றே கொள்ளப் பெறும். மொழியின் பயன் நல்வாழ்க்கையேயாம். ஆதலால் தொல்காப்பியர் பொருளதிகாரத்தில் தனிமனிதன், வாழ்க்கைத் துணையுடன் கூடி வாழும் மனையற வாழ்க்கைக்குரிய நெறிமுறைகளை அகத்திணை இயலிலும், அவனே சமுதாயத்துடன் தொடர்பு கொண்டு வாழ்வதற்குரிய நெறிமுறைகளை புறத்திணை இயலிலும் இலக்கணமாக வகுத்துச் செய்துள்ளார். இத்தகு சிறப்புடை மரபில் உலகுபுகழ் திருக்குறள் தோன்றிற்று.

திருக்குறளின் சிறப்பு

திருக்குறள் பயில் தொறும் இன்பந்தரும் நூல். ஒரு முழுதுறழ் அறநூல். இனிய தமிழ், எளிய நடை, மனம் கொளத்தக்க குறுகிய அளவு. இருபொருள் படாத தெளிந்த நடை. ஐயத்தின் நீங்கிய துணிபு, இனம், மொழி, மதம் சார்பற்ற தன்மை, காலவெள்ளத்தில் அழியாத நீதி, ஓரின ஒழுக்கம் பேசாமல் உலக ஒழுக்கம் பேசிய ஒட்பம், வீட்டையும், நாட்டையும் பிணைத்த பெட்பு, இருவகைக் காதலையும் எடுத்துக் காட்டிய இனிய சால்பு. குற்றங் காட்டுதல்-குற்றம் கடிதல், நன்றின்பால் உய்த்தல் ஆகியன நிகழ்த்தும் ஆற்றல், இப்படி எத்தனை எத்தனையோ சிறப்புகள், விரிப்பின் பெருகும்; தொகுப்பின் எஞ்சும்.

திருக்குறள் வளர்க்கும் முறை

தனிமனிதன் குடும்பம் சமூகம் சமுதாயம் உலகு என்ற முறைவைப்பை வரலாற்றுப் போக்கு காட்டுகிறது. இந்த முறைவைப்பின் பல்வேறு படிகளில் உள்ள பாத்திரங்களை முறைப்படி வளர்த்து, ஒன்றுக்கும் பிறிதொன்றுக்கும் இடையில் தொய்வில்லாமல், ஒன்று பிறிதொன்றின் நலனுக்கு இடையூறு இல்லாமல் வளர்த்து வழி நடத்தும் பெருமை திறக்குறளுக்கே உரியது. திருக்குறள் தனிமனிதனை நம்புகிறது; முற்றிலும் முழுதும் நம்புகிறது. அவனே மனித சமுதாயத்தை வரலாற்றை இடையீடின்றி எழுதும் பாத்திரம் என்று நம்புகிறது. அவனை அகத்தாலும் புறத்தாலும் வளர்த்து உறுதிப்படுத்த-நிலைநிறுத்த திருவள்ளுவர் முயற்சி செய்கின்றார்.

சிற்பிக்குச் சிலை வடிப்பதே நோக்கம். உழவனுக்குக் காடுகளைக் கழனியாக்குவதே நோக்கம். திருவள்ளுவருக்கு மனிதனை-மனித சமுதாயத்தை வளர்ப்பதே நோக்கம். திருக்குறளில் இலக்கிய இன்பம் உண்டு கவிதை நலமுண்டு; எதுகை மோனைகள் ஏராளம்; அணியின்பங்கள் ஆயிரமாயிரம். எனினும் இவை யனைத்தும் மனிதனை முழுமைப்படுத்துகின்ற குறிக்கோளுக்குத் துணையேதவிர அவையே மேம்பட்டு விளங்கவில்லை. மனிதனை வளர்க்கும் நோக்கமே திருக்குறளில் நிறைவுற்று வெளிப்பட்டுக் காட்சி அளிக்கிறது. தனிமனிதனைத் தம்நிலை ஒழுக்கத்தில் ஈடுபடுத்தி, வளர்த்து, துணையுடன் கூட்டி, அவ்வழி உலகுடன் இணைத்து, அவ்வழி இறையின்பத்துடன் இணைத்துப் புகழ் உண்டாக்குகிறது.

உயிர்க்குறுதி

தமிழ்மரபு உயிர் உண்மையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. இன்று வரையில் பிறமொழி இலக்கியங்கள் உயிரைப்பற்றித் தெளிவாக விளக்க முடியாமல் அல்லற்படுகின்றன. திருக்குறள் உயிர் உண்மையை ஒத்துக் கொள்கிறது. உயிர் தோற்றமும், அழிவும் இல்லாத நிலையான ஒன்று என்பது திருக்குறள் முடிபு. இதனை “மன் உயிர்" என்னும் சொல்லாட்சியால் உணரலாம், இதனை மேலும் அரண் செய்ய எழுபிறப்பு உண்மை துணை செய்கிறது. அது துன்பத் தொடக்கிலிருந்து விடுதலை பெற்று நல்லின்ப வாழ்க்கை பெறுதற்குறியதென்று காட்டுகிறது. உயிர் அறிவுப் பொருள் என்றும் நம்புகிறது. ஆனால் இயல்பான அறிவன்று. உயிர் அறிவுபெற்று விளங்குதற்குரிய பொருள். அறிவே உயிர்க்கு முதல்துணை என்பது திருக்குறள் முடிபு. அதனால் "அறிவுடையார் எல்லாம் உடையார்” என்று பேசுகிறது. இந்த அறிவினைப் பெறுதற்குரிய வழி வகைகளையும் ஐயத்திற்கு இடமின்றி அறிவுறுத்தலோடு ஆணையாகவும் கூறுகிறது.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

என்பது குறள். இத் திருக்குறள் திறனாய்வுக்குறிய நிறைந்த செய்திகளைக் கொண்டது. உடல் நலமில்லார் மருத்துவரிடம் காட்டுவர். மருத்துவர் உடலினைச் சோதனை செய்து உடலில் நலம் விளைவித்தற்குரிய இன்னின்ன உயிர்ச்சத்துக்கள் இல்லை என்று எடுத்துக் கூறுவர். நலம்பெற விரும்புவோர் தம் உடலில் இல்லாத உயிர்ச்சத்துக்களைப் பெறுதற்குரிய உணவுப் பொருள்களையும் மருந்துகளையும் தேடி உண்பர். நலம்பெறும்வரை உண்பர். அதுபோல ஒவ்வொருவருக்கும் இயல்பாகவே சில உயிர்க்குறைகள் (குணக்குறைகள்) உண்டு. இந்த உயிர்க்குறைகளை இன்னவை எனத் தெளிந்து அக்குறைகளை நீக்கி நலந்தரக் கூடிய நல்ல நூல்களைக் கற்க வேண்டும். அக்குற்றங்கள் நீங்கி நலம் பெறும் வரை கற்க வேண்டும். இக்கருத்தினைக் “கசடறக் கற்பவை" என்ற சொற்களின் மூலம் விளக்குகின்றார்.

மனிதன் புறத்துறுப்பால் காணப்படுபவன் மட்டுமல்லன் புறத்துறுப்பால் மட்டும் மக்கள் போல் தோற்றம் அளிப்பவர்களை "மக்களே போல்வர்" என்று கிண்டலும் கேலியும் செய்கிறது. இந்த இரு சொற்களில் திருவள்ளுவர் வெளிப்படுத்தும், வேதனை கலந்த போலி மனிதனை விமர்சனம் செய்யும் உணர்வு வால்டேர், இங்கர்சால் போன்றவர்களின் உணர்வைவிட விஞ்சி நிற்கிறது என்பதை மறுக்க முடியாது.

"புறத்துறுப்பெல்லாம் எவன் செய்யும்?" என்பது திருக்குறளின் வினா. புறத்துறுப்புக்களைப் பொருளுக்கு உரியனவாகவும் புகழுக்குறியனவாகவும் ஆக்குதல் அகத்தியல் வளமையேயாம். உடல் வளத்திற்கு அடிப்படை உணவு, செரித்தல், வலிமை ஆதல்; அகத்தியல் வளத்திற்கு அடிப்படைக் கருத்து அனுபவமும், ஒழுக்கமுமாம்.

அன்புடைமை

அறிவைத் திருவள்ளுவர் கருவியாகவே கருதுகிறார். "அறிவு அற்றங் காக்கும் கருவி" என்பது குறள், அறிவின் உயிர்ப்பும் பயனும் அன்பேயாகும்.

அறிவினா லாகுவ துண்டோ பிறிதின்நோய்
தன்னோய்போல் போற்றாக் கடை

என்பது குறள். திருவள்ளுவர் உயிரை எல்லாவற்றிலும் சிறந்ததாகக் கருதுகிறார். "உயிரினும்" என்று குறிப்பிடுவதே இதற்குச் சான்று. இந்த உயிர் தங்கியிருந்து இயங்குவது உடலிலேயாம். இதனை "உடம்போடுயிரிடை நட்பு" என்று கூறும். ஆயினும் உயிர் அமைப்பாலும் தோற்றத்தாலும் உடம்பிடைத் தங்கி இருந்தாலும் அன்பினில் உயிர் நிலையைப் பொருத்திக் கொள்ளுமாறு வள்ளுவம் வழி நடத்துகிறது. உடலிடை மட்டும் உயிர் தங்கிக் கிடக்க வாழ்தல் விலங்கியல் வாழ்க்கை. அன்பினில், குறிக்கோளில், சால்பில் உயிரை நிறுத்தி வாழ்தல் வாழ்வாங்கு வாழும் வாழ்க்கையாகும்.

அரசியல் நீதியில் உயிரை நிறுத்தி வாழ்ந்த பாண்டியன் நெடுஞ்செழியனும், தெய்வக் கற்பில் உயிரை நிறுத்தி வாழ்ந்த பாண்டிமாதேவியும், இன்ப நட்பில் உயிரை நிறுத்தி வாழ்ந்த பிசிராந்தையாரும், கொடையில் உயிரை நிறுத்தி வாழ்ந்த குமணனும் தமிழன நாகரிகத்தின் காப்பில் உயிரை நிறுத்தி வாழ்ந்த அப்பரடிகளும் எண்ணத்தக்கவர்கள். ஆதலால், உயிருடைமைக்கும் இன்மைக்கும் அடையாளம் உண்ணலும் ஓடித்திரிதலும் அன்று.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு

என்பது திருக்குறள், எலும்பு போர்த்த உடம்பு யாதொன்றிற்கும் பயன்படாது. அதுமட்டுமின்றி நாற்றத்தால் மற்றவர்க்கும் கேடு செய்யும். ஏன்? தோற்றத்தாலேயே கண்டாரை வெருட்டும். அதுபோல அன்பில்லாத மனிதர்களால் அவர்களுக்கும் மனித உலகத்திற்கும் பயனில்லை. பயனில்லாத தோடன்றித் தீமையும் விளைவிக்கும்.

உடைமையியல்

இன்றைய மனித சமுதாயத்தில் உடைமை உணர்வு மிகுதியும் மேலோங்கி நிற்கிறது. அதாவது நிலம், பொன், பொருள் ஆகியவைகளைத் தனிமனிதர்கள் தத்தம் உடைமையாக்கிக் கொள்ளப் போரிடுகின்றனர். வெற்றி பெற்ற பின்பு உழைப்பின் வழி வாழாமல் உடைமைகளையே சார்ந்து வாழத் தலைப்படுகின்றனர். மனிதனுக்கு ஏவல் செய்ய வேண்டியன உடைமைகள். ஆனால் உடைமை களுக்கே மனிதர்கள் அடிமைகளாகி விடுகின்றனர். இங்ஙனம் மனிதகுலத்தின் ஆற்றலை, பண்பை அரித்து அழிக்கும் உடைமைகள் மீது சான்றோர்களுக்கு வெறுப்பு ஏற்படுவது இயற்கை. இந்தவகையில் கார்ல் மாக்ஸ் மாமுனிவரின் சிந்தனை ஏற்றுக்கொள்ளத் தக்கது. பாராட்டத்தக்கது. அவர் "உழைக்காதவனுக்கு உண்ணவும் உரிமையில்லை" என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றார். ஆனால் இதே கருத்தினை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருக்குறள் கூறியது என்று எண்ணி மகிழ்வாரில்லை.

உடைய ரெனப்படுவது ஊக்கம் அஃதிலார்
உடையார் உடையரோ மற்று.

உள்ள முடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.

என்பன போன்ற திருக்குறள்கள் புதுமையும் புரட்சியும் நிறைந்த கருத்துக்களைத் தாங்கி நிற்கின்றன.

பொருளியல்

உலகியல், பொருளியல் வலையில் பின்னப் பெற்றுச் சுற்றி சுழன்று வருகிறது. உலகியலே பொருளியல், ஏன்? பொருளியலே உலகியலும்கூட "பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை" என்ற பிறிதொரு கருத்துக்கு இடமின்றித் தெளிவாகத் திருக்குறள் பேசுகிறது. ஆனால் எது பொருள் என்பதில் கருத்து வேறுபாடு உண்டு. இன்றையச் சூழலில் பலர் பொருள் என்றால் நேரிடையாக நுகர்வதற்குப் பயன்படாமல் நாணயமாக, பொன்னாக, மணியாக இருப்பனவற்றையே பொருள் என்று கருதுகின்றனர். நுகர்வதற்குரியவை அல்லாதவை எங்ஙணம் பொருளாக முடியும்? துய்த்தற்குரியவையே பொருளாகும். "யாஅம் இரப்பவை பொன்னும் பொருளும் போகமும் அல்ல" என்ற பரிபாடல் அடி பொன்னையும் பொருளையும் பிரித்து உணர்த்துவது உணரத்தக்கது. தீ ஏதாவது ஒரு பொருளை பற்றுக்கோடாகக் கொண்டே இயங்குகிறது. அதுபோல உயிர் யாதானும் ஓர் உடம்பினைப் பற்றுக் கோடாகக் கொண்டே இயங்கும். உடலினுக்கு எரிபொருள்களாக உணவு முதலிய பண்டங்கள் தேவை. அஃதின்றேல் உடலியக்கம் ஒடுங்கும். இதனைப் "பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை” என்று தெளிவாகத் திருக்குறள் எடுத்துக் கூறுகிறது. இப்பொருள்களை உற்பத்தி செய்வதற்குப் பயன்படுவதாலும், கால வெள்ளத்தில் அழியாமல் பொருள்களின் மதிப்பைத் தாங்கித் திரும்ப அப்பொருள்களைப் பெறுதற்குக் கருவியாக இருப்பதாலும் உபசார வழக்கில் பொன்னையும் பொருளெனப் போற்றினார்கள்.

இத்தகு வாழ்க்கைக்குப் பயன்படும் பொருளியலைப் பற்றித் திருக்குறள் தெளிவான கருத்தை மேற்கொண்டிருக்கிறது. இன்றைய பொருளியல் சாத்திரங்கள் பக்கம் பக்கமாக விரித்துரைக்கும் பொருளியல் சித்தாந்தங்களைத் திருக்குறள் மிக எளிமையாக நான்கைந்து சீர்களில் விளக்குவதில் வெற்றிபெற்று நிற்கிறது.

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு

இந்த ஒரு திருக்குறள் பொருளியல் தத்துவத்தின் சிறந்த விளக்கமாக அமைந்திருக்கிறது. உலகம் வளர்ந்து கொண்டிருக்கிறது. மனித எண்ணிக்கையால் மட்டுமன்று. தேவைகளின் பட்டியல்களும் வளர்ந்து கொண்டிருக்கின்றன. வளரும் தேவைகளை ஒரு வழித்துறையில் முற்றிலும் அடைய முடியாது. ஆதலால் தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காகப் புதிய புதிய பொருள் நுட்பத்திற்குரிய புதிய வழிகளைக் காணவேண்டும். இதனை "இயற்றலும்" என்ற சொல் மூலம் காட்டுகிறார் திருவள்ளுவர். அதாவது திட்டமிட்டுத் தொழில் புரட்சிகளைச் செய்து புதிய வருவாய்த் துறைகளைக் காணுதல் என்பதாகும். இயற்றலைத் தொடர்ந்து ஈட்டுதல், பின் பொருள் சிறு திவலைகளாகச் சிதறிக் கிடக்குமாயின், அங்ஙனம் சிதறிக்கிடக்கும் பொருள் மீண்டும் பொருள் உற்பத்திக்குப் பயன்படும் ஆற்றலை, தகுதியை இழந்து விடுகிறது. ஆதலால், ஈட்டப்படுகின்ற பொருள்கள் மூலதனமாக வளர்ச்சியடைகின்ற வரையில் காக்கப் பெறுதல் வேண்டும், பின் முறையான பங்கீடு அல்லது விநியோக முறை வேண்டும். இன்றைய நம்முடைய பொருளாதாரத்தில் உள்ள சிக்கல் பெரும்பாலும் முறையான பங்கீடு இன்மையே யாகும். இவ்வளவு தெளிவாகப் பொருளியலைக் கண்டுணர்த்திய திருக்குறளின் பெருமைக்கு ஈடுண்டோ!

சமுதாய உறவு

திருக்குறள் தனி மனிதனைச் சமுதாயப் பொது மனிதனாக வளர்ப்பதில் நிறைய அக்கறை காட்டுகிறது, அவனுடைய சமுதாய உறவுகளை வளர்ப்பதிலும் பக்குவப்படுத்துவதிலும் திருக்குறள் முழுக்கவனம் செலுத்துகிறது. தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இருக்க வேண்டிய நல்லுறவைத் தடுத்துக் கெடுக்கும் தடைகளைப் பற்றியும் தெளிவாக வரையறுத்துக் காட்டுகிறது. இந்த உறவினை வளர்த்துக் கட்டிக் காப்பதற்காகப் பற்பல குறள்களைத் திருவள்ளுவர் இயற்றியுள்ளார். மற்றவர்களைச் சார்ந்து நலம் செய்து வாழ்வதால் கேடுவருமாயினும் ஏற்றுக்கொள் என்று ஆணையிடுகிறார்.

ஒப்புரவி னால் வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து

என்பது திருக்குறள்.

மனித உறவை வளர்ப்பதில் பொறையுடைமைப் பண்பிற்குச் சிறந்த பங்குண்டு. ஆனால், பொறையுடைமை என்பதை இன்று பலர் கருதுகிற பார்வையில் திருவள்ளுவர் கருதவில்லை. கோழைத்தனத்ததினாலும் அச்சத்தினாலும் பொறுத்தாற்றுதலுக்குத் திருவள்ளுவர் உடன்படார். பொறையுடைமை என்றே ஓர் அதிகாரம் செய்துள்ளார். அதில் மிகவும் சிறந்த திருக்குறள்,

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை

பொறையுடைமைக்கு எடுத்துக் காட்டும் உவமை எண்ணி எண்ணி இன்புறத்தக்கது. மலையையும் உடைத்துக் கல் எடுக்கிறோம். அது பொறுமையாகவே இருக்கிறது. அணைகளும் மாளிகைகளும் கட்ட கற்களைத் தருகின்றது. நன்னூல் ஆசிரியர் போன்றவர்கள் நிலைதளராத முனிவர் பெருமக்களுக்கு மலையை உவமையாகக் கூறுவர். ஆனால் திருவள்ளுவர் பொறுத்தாற்றும் பண்பிற்கு நிலைத்தை எடுத்துக்காட்டாகக் கூறுவானேன்? மலை, உடைப்போரைப் பெரும்பாலும் எதிர்த்துத் தாக்குவதில்லை. ஒரே வழி எதிர்த்துத் தாக்குதலும் உண்டு. அது மட்டுமன்று; அது உடைக்க உடைக்க அழிந்து போகிறது. அதனாலேயே மலையை ஒதுக்குகிறார் திருவள்ளுவர். நிலம், உழுவோர் தரும் துன்பத்தைத் தன் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொண்டு வளர்கிறது. நிலம் உழ உழ வளம் பெறும். பயன் பெருக்கித் தரும். உழுவோருக்கே தரும். பயன்படும் வகையால் தன் மதிப்பினை உயர்த்திக் கொள்ளும். ஆதலால் உழுபவன் நிலத்தினுடன் உரிமையும் உறவும் கொள்கிறான். அது போலவே பகைவர்கள் துன்பங்கள் தருவார்களானால் அத்துன்பங்களை உரமாக்கிக் கொண்டு வளர்தல் வேண்டும். அப்படி வளர்ந்தால் துன்புறுத்தியவர்களும் உறவும் உரிமையும் கொண்டாடுவர், என்ற மிகச் சிறந்த கருத்து எண்ணி எண்ணி இன்புறத்தக்கது. இறைநிலை

திருவள்ளுவர் கடவுள் நம்பிக்கை உடையவர். திருக்குறள் கடவுள் வாழ்த்துப் பாடுகிறது. ஆயினும் திருவள்ளுவர் நம்பிக்கைக்கும் நல் வாழ்க்கைக்கும் இசைவில்லாத வெற்றுச் சடங்குகளைச் சார்ந்த சமய நெறிகளில் நம்பிக்கை இல்லாதவர், தூய தெளிவான வாழ்க்கை யோடியைந்த மெய்ந்நெறியில் நம்பிக்கை யுடையவர். இவருடைய சமயம் உலகியலில் அழுந்துவது மன்று; அப்பாற்பட்டதுமன்று. இவர் வாழ்த்தும் கடவுள், கோலம் குறிகளுக்கு அப்பாற் பட்டவர்; வேண்டுதல் வேண்டாமை இல்லாதவர்; தனக்குவமை இல்லாத தலைவர். இத்தகு தூய "அருள்நெறியே” இந்த நூற்றாண்டிற்கும் ஏன்? இனிவரும் நூற்றாண்டுகளுக்கும் ஏற்ற நெறியாகும்.

திருக்குறளும் தமிழ் இனமும்

தமிழினம் முன்னர்க் குறிப்பிட்டது போல கடந்தகால வரலாற்றுச் சிறப்புடையதாயினும் இடைக்காலத்தில் அதற்கேற்பட்ட வீழ்ச்சி மறைக்கவோ மறுக்கவோ முடியாத ஒன்று. பிறமொழி நுழைவு தமிழின் தூய்மையைக் கெடுத்தது. ஆயினும் சிறந்த தமிழ்ச் சான்றோர்கள் தமிழின் துய்மையைக் காப்பாற்றி வந்தனர். அயலினத்தாரின் நுழைவால் ஓரினமாக வாழ்ந்த தமிழினம் பலநூறு சாதிகளாகப் பிரிக்கப் பெற்றது. தமிழினத்தையே சார்ந்த ஒரு சாதியினர் பிறிதொரு சாதியினரிடம் ஓரினம் என்ற அடிப்படையை மறந்து காழ்ப்புக் கொண்டனர்; பகை பாராட்டினர். இந்த இன்னாத சூழ்நிலையை அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.

ஊக்கத்தையும் உழைப்பையும் மையமாகக் கொண்டு வளர்ந்த தமிழினம், நாளையும் கோளையும் அவ்வழிப்பட்ட அத் திட்டத்தையும் நம்பத் தலைப்பட்டது. ஊழையும் உப்பக்கம் காணும் கொள்கை கண்ட இனம் தலைவிதி என்ற தத்துவத்தின் காலடியில் சிக்கிச் சீரழிந்தது. உயர்ந்த திருக்குறளைப் பயிலாமல் ஒரு குலத்திற்கொரு நீதி உரைக்கும் நூலையும், நடுவாக நன்றிக்கண் தங்காமல் அநீதிக்கும் நீதிக்கும் சமரசம் செய்துவைக்கும் நெறியல்லா நெறியை நெறியெனக் காட்டிய நூலையும் பயின்று வீழ்ச்சியுற்றது. இந்த வீழ்ச்சியிலிருந்து தமிழகத்தை எடுத்து நிறுத்த இந்த நூற்றாண்டில் சிறந்த சான்றோர் அடுத்தடுத்து முயன்று வந்துள்ளனர்-வருகின்றனர்.

புறப்புற இருள்நெறி கடிந்து தமிழ் ஞாயிறு எழுகின்றது. இந்த எழுச்சி தமிழக வரலாற்றில் முன்னைப் பழமையைப் புதுப்பிக்கும். புதிய புதுமைகளைச் சேர்க்கும்.

ஒர் உலகம்

இன்று எங்கும் ஓர் உலகம் பற்றியே பேச்சு. இன்று நம்மிடையில் ஒர் உலக அமைப்பாக உலக நாடுகள் பேரவை (ஐ.நா.சபை) தோன்றியிருக்கிறது. இந்த ஓர் உலக அமைப்பு நல்லெண்ணத்துடனேயே தோன்றியிருக்கிறது. அதாவது மனித குலத்தினிடையில் கொண்டும் கொடுத்தும் கூடிக் கலந்து இன்ப அன்புடன் வாழ்கின்ற பண்பாட்டை உருவாக்குவதே இந்தப் பேரவையின் நோக்கம். பேரவை தோன்றிய நோக்கமும் பேரவையின் பயனும் போற்றுதலுக்கு உரியவையேயாம். ஆயினும் இப்பேரவையின் தோற்றத்திற்குக் காரணமாக இருந்த துன்பச் சூழலை வரலாறு மறைக்க முடியாது. இரண்டு உலகப் போர்களின் படிப்பினையாகவே உலக நாடுகளின் பேரவை தோன்றிற்று. உலக நாடுகளின் பேரவை தோற்றத்தில் அச்சமும் பங்கு பெற்றிருக்கிறது. அதனால்தான் போலும் அந்தப் பேரவையால் உலகத்தை மானிட சாதியை முற்றிலும் போர்ப் பயத்திலிருந்து விடுதலை செய்ய இயலவில்லை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் ஓர் உலகக் கருத்தைக் கண்டு காட்டினார். இவர்தம் நூலே ஓர் உலகக் கருத்தை மையமாகக் கொண்டு விளங்குகிறது. இவர்தம் ஓருலகக் கருத்து அச்சத்தில் விளைந்ததன்று: அன்பில் விளைந்தது. பெரும்பாலும் நூல்கள் தன் நாடு, தன் மொழி, தன் இனம், தன் சமயம் ஆகியனவற்றைச் சிறப்பித்தே எழுதப்பெறும். ஒரோ வழி தம்முடையதைச் சிறப்பித்தும், மற்றையதை இழித்தும் எழுதப்பெறுவதும் உண்டு. திருக்குறள் இந்தக் குறைகளின்று முழுதும் நீங்கிய நூல், திருக்குறளில் தமிழ் என்ற சொல் இல்லை. தமிழன் என்ற சொல்லும் இல்லை. பெயர் குறிப்பிட்ட காடு, மலை, ஆறு, நாடு ஆகியவை பற்றிய செய்திகளும் இல்லை. எந்தக் கடவுளின் பெயரும் இல்லை. எந்தச் சமயச் சின்னங்களும் இல்லை. ஆதலால், திருக்குறள் இனச் சார்பற்ற நூலாக, நாடும் எல்லையும் கடந்த நூலாக, மனித குலத்தின் பொது நெறி நூலாகத் திகழ்கிறது.

இன்றையத் தேவை மனிதகுல ஒருமைப்பாடு. இதனைச்சமயச் சான்றோர் ஆன்மநேய ஒருமைப்பாடு என்று கூறுவர். இத்தகு ஒருமைப்பாட்டைக் காணுதலும் வளர்த்தலும் அருமையான முயற்சி. ஆயினும் இன்பம் பயக்கும். ஆனால் உண்மையான ஒருமைப்பாட்டைக் காணல் வேண்டும். ஒற்றுமையே ஒருமைப்பாடென மயங்கிவிடுதல் கூடாது. ஒற்றுமை, கட்டாயம், தேவை ஆகியவை கருதியும் தோன்றலாம். கலகம் செய்வதற்கு ஆற்றல் இன்மையின் காரணமாகவும் ஒற்றுமை இருக்கலாம். இது நெடிய பயனைத் தராது. ஒருமைப்பாடு என்பது சிந்தனையினால் உணர்வினால், குறிக்கோளால், வாழ்க்கை அமைப்பால் ஒன்று கலந்து இருப்பதாகும். இத்தகு ஒருமைப்பாட்டை அரசுகளால் தோற்றுவிக்க முடியாது. அறநெறியினாலேயே முடியும். அதனாலன்றோ கார்லைல் என்ற பேராசிரியர் "மக்களை இணைத்துப் பிணைக்க வலிமை பெற்ற ஒரு தேசிய இலக்கியம் வேண்டும்" என்று குறிப்பிடுகின்றார் இன்றைய உலகத்தை இணைக்க உலகப் பேரிலக்கியமாகத் திகழ்வது திருக்குறளேயாம். பாரதியும் "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்று பாடிப் பரவுகின்றார்.

இந்தியப் பேரரசு இந்திய ஒருமைப்பாட்டைப் பெரிதும் விரும்புகிறது. விரும்பி வற்புறுத்துகிறது. இந்திய ஒருமைப்பாட்டை வலிமை பொருந்திய மத்திய ஆட்சியின் அதிகாரத்தாலும் இந்தி மொழியாலும் காணமுடியும் என்று நம்புகிறது. இது வெறும் கானல் நீரே. இந்திய நாட்டின் இணையற்ற தேசீய இலக்கியமாகத் திருக்குறளை, ஏற்றுக் கொண்டு, இந்திய நாட்டு மக்கள் அனைவரையும் திருக்குறள் சிந்தனையிலும் திருக்குறள் நெறி வாழ்க்கையிலும் ஈடுபடச் செய்தால் இந்திய ஒருமைப்பாடு தானே உருவாகும். இந்திய நாட்டின் தேசிய இலக்கியமாகவும், உலகப் பேரிலக்கியமாகவும் திருக்குறள் விளங்கி அமையும் நாளே, மனித சமுதாயத்தின் இனிய வரலாறு தொடங்கும் நாள்.

கடமைகள்

திருக்குறள் இலக்கியமே. ஆயினும் அதன் நோக்கம் இலக்கிய இன்பம் தருவதன்று. வாழ்க்கையில் இருள் நீக்கி இன்பந் தருவதேயாகும். திருக்குறளை மையமாகக்கொண்டு இலக்கியத்திறனாய்வு செய்யலாம். துறைதோறும் இன்பந்தரும். பல நூற்றாண்டுகளுக்குத் திறனாய்வு செய்யலாம். ஆயினும் திருக்குறளை மனிதகுலச் சிறப்பிற்குரிய ஒழுக்கத்துறைகளில் நடை முறைப்படுத்தித் திறனாய்வு செய்வதே பாராட்டுதற்குரியது; அதுமட்டுமன்று; கடமையுமாகும்.

மனிதராய்ப் பிறந்தோர் அனைவரும் நாள்தோறும் திருக்குறள் கற்றலும் கேட்டலும் கடமையெனக் கொள்ள வேண்டும். தமிழராய்ப் பிறந்தோர் இதனைக் கடமையாக மட்டுமல்லாமல் ஒழுக்கமாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்றையத் தமிழக அரசு திருக்குறளுக்கு உரிய இடத்தை மக்கள் மன்றத்திலும், அரசிலும் அளிக்க ஆர்வத்துடன் முன்வந்திருக்கிறது. இது நன்றி உணர்வுடன் என்றும் பாராட்டுதலுக்கு உரியதாகும். இந்த இனிய சூழலை முழுவதும் பயன் படுத்திக்கொள்ள வேண்டியது நம்முடைய பொறுப்பாகும். எங்கும் முத்தமிழ் முழங்கவேண்டும். திருவள்ளுவர் எழுப்பிய திருக்குறள் ஒலி நாற்புறமும் ஒலிக்கச் செய்ய வேண்டும். தமிழர் இல்லங்களைத் திருவள்ளுவர் திருவுருவம் அணிசெய்ய வேண்டும். தமிழர்தம் நெஞ்சங்களில் திருக்குறள் கருத்துக்கள் தங்கவேண்டும். தமிழினத்தின் வாழ்க்கையில் திருக்குறள் ஒழுக்கநெறி கால்கொண்டு அமையவேண்டும். இந்த உயரிய குறிக்கோளோடு நம் அனைவரும் இனிய இன்ப உலகத்தைக் காண முயற்சிப்போமாக.