குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3/திருக்குறளும் காந்தியடிகளும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
4. திருக்குறளும் காந்தியடிகளும்

சராசரி வாழ்க்கையைக் கடந்தவர்களின் வாழ்க்கையோடு திருக்குறள் கருத்துக்கள் பொருந்துவது இயல்பு. மனிதனால் செய்யக்கூடிய காரியங்களைப் பற்றித்தான் திருக்குறள் பேசும். எனவே நமது தேசத்தந்தை காந்தியடிகளின் வாழ்க்கையோடு திருக்குறள் பொருந்தி வருவது சாலப் பொருத்தமானதாகும்.

திருக்குறள் "கடவுள் போல", நாடு இன மொழி வேறுபாடுகளைக் கடந்து விளங்கும் நூல். நாத்திகர்களும் கூடத் திருக்குறளைத் தங்கள் நூல் என்று போற்றுகிறார்கள். காந்தியடிகள் எவரின் ஆதிக்கத்தை எதிர்த்தாரோ, அந்த ஆதிக்கத்தினரும் அவரை மதித்துப் போற்றினார்கள்.

திருக்குறட் கடவுள் வாழ்த்தினை வள்ளுவர்தான் செய்தாரோ? அவர் கடவுள் வாழ்த்துச் செய்திருப்பாரா? என்று சிலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். நிச்சயமாகத் திருக்குறட் கடவுள் வாழ்த்து திருவள்ளுவர் செய்ததுதான்.

திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்து, அறிவுக்கும் அனுபவத்திற்கும் மிக ஒத்தது. திருவள்ளுவர் புனைந்துரையாக எழுதவில்லை.

கடவுளை நம்பிச் சிந்தித்து வாழ்த்த, நாம் என்ற உயிர் ஒன்று உண்டு என்று உணர வேண்டும். ‘உயிர்’ இல்லை என்பார் சிலர்; உயிரும் கடவுளும் ஒன்று என்பார் சிலர். 'உயிர் தனியானது’ என்பதை ‘நீடுவாழ்வார்’ என்ற சொற்றொடர் மூலம் ஒத்துக் கொண்டிருக்கிறார் திருவள்ளுவர். உயிரின் இயல்புகளைப் பற்றி வள்ளுவர் அழகாகப் பேசுகின்றார். ‘மன்னுயிர்’ என்கிறார். ‘மன்’ என்றால் நிலைபெற்றது என்பது பொருள். இப்படி அவர் கூறியதன் மூலம், ‘உயிர் என்றும் உள்ளது; அது என்றைக்கும் வாழும்; அது தோன்றியது மில்லை அழிவதுமில்லை’ என்ற நமது சித்தாந்தத்தைத் திருவள்ளுவர் ஒத்துக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாகிறது. உயிர்கள் வினைகளின் வழிப்பட்டபயனை அனுபவிப்பதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார். ‘இருள் சேர் இருவினை’ என்று பேசுகின்றார். இருவினைப் பயன்கள் மன மொழி மெய்யால் செய்யப்படுகிற செயல்களால் விளைவன.

ஒலிப்பதிவு நாடாவில்-டேப் ரிக்கார்டரில் நாம் ஒலிப்பதிவு செய்ததையே மீண்டும் கேட்கிறோம். புதிதாகக் கேட்க முடிவதில்லை. அப்படிப் புதியது கேட்க விரும்புவோமானால் அழித்து விட்டுப் புதுப்பதிவு செய்யவேண்டும். அது போல நம் உயிரின் ஒலிப் பெட்டியில் நாம் எண்ணியனவும் சிந்தித்தனவுமே பதிகின்றன. அவையே நம்மை நிழல்போல் தொடர்கின்றன. நாம் ஒன்றைச் செய்யும்போது, ‘நான் செய்கின்றேன்’ என்ற எண்ணத்தோடு செய்யக்கூடாது. தான் செய்வதாகக் கருதும் தன்முனைப்புக் கூடாது என்பது திருவள்ளுவர் கருத்து.

நமது காந்தியடிகள் ‘நான் சொல்லுகிறேன்' என்று என்றுமே சொல்லியதில்லை. என்னுடைய அந்தராத்துமா சொல்லுகிறது என்றுதான் எப்பொழுதும் கூறினார். அவர் கொஞ்சமும் தன் முனைப்பு இல்லாதவராக வாழ்ந்தார். அவர் பகைவனிடத்தும்கூடக் காழ்ப்புக் கொண்டதில்லை. எனவே அவர் இருள் சேர் இருவினையும் தன்னைப் பற்றாமல் காத்துக் கொண்டார்.

பிறவியுண்மை நமது சமயத்திற்கு மிகவும் முக்கியமானது. இன்றைய உழைப்பின் பயனை நாளை அனுபவிக்க வேண்டும் என்ற உணர்வு இருந்தால்தான் உயிர்நலத்தில் நாட்டம் ஏற்படும். பிறவிப் பெருங்கடலை நீந்த வேண்டும் என்று திருவள்ளுவர் விரும்பினார். காந்தியடிகளும் பிறவித்தளை நீங்க வேண்டும் என்று விரும்பினார்.

இருவினைகளிலிருந்தும் விடுதலை பெற, பொய்தீர் ஒழுக்கநெறி நிற்க வேண்டும். காந்தியடிகள் மிக எளிய உணவையே உண்டுவந்தார்-மிக்கெளிய தோற்றம் உடையவராகத் திகழ்ந்தார்-மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தார். அவர் திறந்த மேனியராக வாழ்ந்தது போலவே, திறந்த உள்ளத்தினராகவும் வாழ்ந்தார். எனவே காந்தியடிகள் ஐம்பொறிகளையும் அடக்கி வாழ்ந்தார் என்பதைக் காட்டிலும், ஐம்பொறிகளும் தாமே அடங்கின என்பது சாலப் பொருந்தும். அவர் வாழ்க்கையில் இரகசியம் என்பதே கிடையாது. அவர் தம்மால் முடிந்ததை ஒழுக்கமாக ஏற்றுக் கொண்டார். இடையே தொய்வே ஏற்படாமல் பாதுகாத்து வாழ்ந்தார்-பொய்தீர் ஒழுக்கநெறி நின்றார்.

"பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடு வாழ்வார்”

என்றார் திருவள்ளுவர். அதன்படி காந்தியடிகள் வாழ்ந்தார். எனவே கர்ந்தியடிகள் அன்று வாழ்ந்தார்-இன்று வாழ்கிறார் - என்றுமே வாழ்வார்.

காணப்பட்ட உலகத்தின் மூலமாகக் காணப்படாத இறைவனைக் காட்டுகிறார் திருவள்ளுவர். ‘அகரமுதல எழுத் தெல்லாம்’-என்பது குறட்பா. இறைவனைக் காட்டுகின்ற மிகப்பெரிய புத்தகம் இயற்கை ‘கடவுள் பிரார்த்தனை இல்லாமற்போனால் நான் செத்துப் போவேன்’ என்கிறார் காந்தியடிகள். ‘என்னுளே உயிர்ப்பாய்ப் புறம்போந்து இயங்கினான்’ என்று அப்பரடிகள் பேசுகிறார்.

'கடவுள் உண்டு என்பதை நீங்கள் நம்புகிறீர்களா' என்று காந்தியடிகளைக் கேட்டபோது, ‘நீங்களும் நானும் இருப்பது உண்மையானால், நமது பெற்றோர்கள் வாழ்ந்தது உண்மையானால், நமது பிள்ளைகள் இருக்கப்போவது உண்மையானால் கடவுளும் உண்டு’ என்று அவர் கூறினார். அவர் குண்டடிபட்டு விழுந்த போதும்கூட ‘ராம்ராம்’ என்றுதான் கூறினார். இராமனே அவரது உயிர்நிலையாக விளங்கியமையை உணர்கிறோம். எனவே காந்தியடிகளின் கடவுள் நம்பிக்கை மாசற்றது-உறுதியானது.

திருவள்ளுவர் கடவுளை மிக எளிய முறையிலே பார்த்தார். யார் யார் எந்த வடிவோடு நினைக்கிறார்களோ அந்த வடிவில் அவர்கள் உள்ளத்தில் இறைவன் வந்து சேர்வான் என்பது திருவள்ளுவர் கருத்து. காந்தியடிகள் ஏழை மக்களுக்கும், ஒதுக்கப்பட்டவர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் சேவை செய்வதில் கடவுட் காட்சியைக் கண்டார்.

திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்து வேறு. காந்தியடிகளின் வாழ்க்கை வேறு அல்ல. எனவே, காந்தியடிகள் காட்டிய அன்பு நெறியை-அறநெறியை-கடவுள் நெறியை நாம் கடைப்பிடித்து வாழ்வோமாக!