குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3/தொடரும் துன்பம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
11. தொடரும் துன்பம்

இனிய செல்வ!

தாய்மொழி வழிப் பயிற்சி பற்றி எழுதினோம். அறிவு தேவை! அறிவு, சிந்தனையைச் சார்ந்தது! ஒழுக்கமாக உருக்கொள்வது! அறிவு, தாய்மொழிக் கல்விவழிதான் இயலும்! தாய்மொழியின் இலக்கணப்பகுதி அன்றாட வாழ்க்கையிலேயே கற்றுக் கொள்ளப்படுகிறது! அறிவு முயற்சிக்குத் தடையாக மொழிச்சிக்கல் இருக்காது! தாய் மொழிக் கல்வி அறிவூற்றுக்குத் துணையாய மையம்! உலக நாடுகள் அனைத்திலும் தாய்மொழியே பயிற்றும் மொழி! நமது தமிழ் நாட்டில் தான் ஆங்கிலம் பயிற்று மொழி! ஏன்? திருவள்ளுவர்,

"நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும்"

என்று கூறுகிறார். இந்தத் திருக்குறளுக்கு ஊழின்பாற் பட்ட பொருள் கூறுவர். அஃது அவ்வளவு ஏற்புடையது அல்ல! வாழ்க்கை ஊழின்பாற்பட்டது என்றால் அப்புறம் ஏன் வாழ்க்கை? கல்வி, கேள்வி ஏன்? இனிய செல்வ, திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்று மூன்று பாலாக அமைந்தது ஏன்? மரபு வழிப்பார்வையை நீக்கிவிட்டு இந்த அமைப்பு முறையைப் படித்துப் பார்! புதிய பார்வை கிடைக்கிறதா? இனிய செல்வ, திருவள்ளுவர் எல்லோரையும் போல அறம் செய்யவே நினைத்தார்! அறத்துப்பால் செய்தார்! அறத்துப் பாலின் முடிவு ஊழ்! ஊழ் இயல் வந்தவுடன் திருவள்ளுவர், ஊழ்வழிப்பட்டு மானுடத்தின் வாழ்க்கை தேக்கமுறுதல் கூடாதென்று நினைக்கிறார்! ஊழினை எதிர்த்து முறியடித்து விட்டு நேர்பட வாழவைக்க வேண்டும் என்று நினைக்கிறார்! மானுடம் ஊழினை வெற்றிகண்டு வாழ்வியலை இயக்கவே பொருட்பாலை இயற்றுகின்றார்! ஊழினை எதிர்த்துப் போராடும் மானுடத்திற்கு அறிவறிந்த ஆள்வினையைத் துணையாகச் சேர்க்கிறார். பெரியாரையும் துணையாகச் சேர்த்து விடுகின்றார்! ஆனால், பொருட்பால் இயக்கத்தில்-சமுதாயத்தில் முரண்பட்ட இயல்புகளைக் காண்கின்றார்! பெரியார் துணையை நாடினால் அது கிடைப்பது இல்லை. சிற்றினமே வந்து சேர்கிறது! நல்ல நட்பைநாடினால் தீ நட்பேவந்து பொருந்துகிறது. செங்கோலை நாடி ஓடினால் அது கிடைப்பதில்லை! கொடுங்கோன்மைதான் கிடைக்கிறது! இத்தகு முரண்பாடுகளை திருவள்ளுவர் சிந்திக்கின்றார்! இனிய செல்வ, அதனாலேயே பொருட்பாலின் முடிவு கயமையாயிற்று. கயமை அதிகாரம் திருவள்ளுவரின் மனநிறைவு இன்மையைக் காட்டுகிறது! அது மட்டுமல்ல! திருவள்ளுவருக்கே தாங்க முடியாத ஆற்றாமை மீதுார்கிறது. இதனை,

"ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஓ மளவுமோர் நோய்"

என்று வெளிப்படுத்துகின்றார். ஆம்! திருவள்ளுவர் சொல்லியும் கேட்கவில்லை! ஆம்! ஆம்! ஆம்! இனிய செல்வ, இதில் உனக்கென்ன ஐயம்! திருவள்ளுவர் சொன்னதை அவர் வாழ்ந்த காலத்திலும் யாரும் கேட்கவில்லை! ஏன் இன்று வரையிலும் கூட யாரும் கேட்கவில்லை! எங்கோ இங்கொருவர் அங்கொருவர் திருக்குறள் கற்றவர்கள் இருக்கலாம்! அவர்களும் திருக்குறளை நம்புகிறார்களா? திருக்குறள் நெறியில் வாழத் தலைப்படுகிறார்களா என்று கேட்பின் இல்லை என்பதே விடை! இனியசெல்வ, திருவள்ளுவர் சொன்னதைத் தான் கேட்க வில்லை. அதிமேதாவிகள்; அவர்கள் தாங்களாகவே பட்டறிவிலிருந்து அறிவு, கொள்முதல் செய்தார்களா? விழுந்த இடத்தில் விழாமல் எழுந்து நடந்தார்களா? அதுவும் இல்லை! இனிய செல்வ, இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாகத் தமிழ் இனத்தின் வாழ்க்கையில் ஒரு தேக்கம். நம் முன்னோர் பெற்ற வெற்றிகளைத் தோல்விகளாக்குகின்றனர். துன்பங்கள் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வருகின்றன; ஆனால் ஆரவாரத்திற்குப் பஞ்சமில்லை! இனியசெல்வ தொடர்ந்து எழுதுவோம்!
இன்ப அன்பு
அடிகளார்