குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3/நடந்தாய் வாழி காவேரி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

56. நடந்தாய் வாழி காவேரி

இனிய செல்வ,

மானுடத்தை உந்திச்செலுத்தி வரலாறு படைக்கும் திசைநோக்கி நகர்த்துவது மனிதரின் எண்ணங்களேயாம். மனிதனின் எண்ணங்களுக்கு அளப்பரிய ஆற்றல் உண்டு. இனிய செல்வ, திருக்குறள்,

"எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்"

என்றது. ஒரு மனிதர் தாம் எண்ணியவாறே எண்ணியவற்றை அப்படியே அடைவர் என்பது திருக்குறள் கருத்து. ஆம்! உண்மை!

இன்று பலருக்கு என்ன செய்யவேண்டும் என்று எண்ணும் பழக்கமே இல்லை! கேட்டதைச் செய்கிறார்கள்! சொல்வதைச் செய்கிறார்கள்! கைக்கு வந்ததைச் செய்கிறார்கள். ஆழ்ந்த எண்ணத்திலிருந்து செயல்கள் முகிழ்க்காத தன் காரணமாக, செயல்கள் செய்வதில் துணிவான, ஆர்வம் செறிந்த இலக்கு உணர்வுடன் கூடிய துடிப்பு இருப்பதில்லை. அதன் காரணமாகப் பயனும் விளைவதில்லை. இலக்குடன் கூடிய வாழ்க்கைக்கு எண்ணங்களே வித்துக்கள்! எண்ணங்கள்தான் முளைத்துச் செடியாகி மரமாகிப் பயன் தருகின்றன. எண்ணம் போல வாழ்வு என்ற பழமொழியை உணர்க!

எண்ணினால் மட்டும் போதாது. எண்ணத்தை அடையும் செயற்களத்தில் போர்க்குணத்துடன் போராட வேண்டும். தடைகளுக்கும் துன்பங்களுக்கும் அஞ்சி தயங்கிப் பின்னடைவாக நின்று விடக்கூடாது. எண்ணத்தில் திண்மை வேண்டும். இனிய செல்வ, கொட்டகை போடும் தொழிலாளர் கொட்டகை போடுதற்குக் குழிதோண்டிக் காலூன்றுவார். காலை ஊன்றி மண்இட்டு மூடியபிறகு தூணாக நிற்கும் கம்பை ஆட்டி அசைத்துப் பார்ப்பார். ஆட்டம் இல்லையானால் கொட்டகைக் காலின் உறுதிப்பாட்டை அறிந்து கொண்டு கொட்டகை போடுவார். அதுபோல வாழக்கை பற்றிய - வாழ்க்கையின் இலக்கு பற்றிய எண்ணம் வேண்டும். உறுதியாக எண்ண வேண்டும். அப்போது எண்ணியதை அடையலாம்.

இனிய செல்வ, "காவிரி போற்றுதும்! காவிரி போற்றுதும்" என்று போற்றிப் புகழப்பட்ட காவிரியின் நீர்ப்பிரச்சினை பற்றி 100 ஆண்டுகளாக விவாதம் நடந்து கொண்டே வருகிறது; காரியம் ஒன்றும் ஆகவில்லை. இன்று தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கும் புரட்சித்தலைவி அவர்கள் காவிரி நீர் தாவாவுக்குத் தீர்வுகாண வேண்டும் என்று எண்ணினார். உறுதியாக எண்ணினார். இன்று காவிரி நீர் தாவாவைப் பற்றி எல்லாரும் பேசுகின்றனர். மத்திய மாநில அரசுகள், இந்திய உயர்நீதி மன்றங்கள், பாராளுமன்றம், சட்டமன்றங்கள் இப்பிரச்சினை பற்றிப் பேசத் தலைப்பட்டுள்ளன; விவாதிக்கத் தலைப்பட்டுள்ளன; செய்தித்தாள்கள் பலமான விவாதத்தை நடத்துகின்றன. இது ஒரு நல்ல அறிகுறி! இங்ஙணம் காவிரி நீர் தாவாவை நாடுதழுவிய நிலையில் விவாதிப்பது விரைந்து முடிவுக்கு வரத் துணையாக அமையும்.

இனிய செல்வ, இது மட்டுமா? தமிழக மக்களாகிய "நாமும் காவிரியில் தண்ணீர் தேவை! ஆடி பதினெட்டு விழாவிற்குத் தண்ணீர் தேவை, தஞ்சையின் நஞ்சைகள் பழையகாலம் போல் நெற்களஞ்சியமாக வேண்டும்” என்று எண்ணினோம்; திண்ணமாக எண்ணினோம். அந்த எண்ணத்தின் ஆவேசம் இயற்கையைக் கூட இயக்கியிருக்கிறது! ஆம்! பருவ மழை காலத்தில் பெய்யத் தொடங்கியிருக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணையின் கொள்ளளவு போக எஞ்சிய தண்ணீர் கொள்ளிடம் வழியாகக் கடலுக்கு அனுப்பப்படுகிறது! ஆடிப் பதினெட்டாம் பெருக்கு நாளன்று நாம் மகிழ்ச்சிப் பெருக்குடன் கொண்டாடினோம். கர்நாடக மாநிலத்தார் தண்ணீர் தர மறுத்ததாலும் இயற்கை - இயற்கையையே திருமேனியாகக் கொண்டுள்ள இறைவன் தமிழக மக்களின் எண்ணத்திற்கு வெற்றியைச் சேர்த்துள்ளான்.

"எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்”

இன்ப அன்பு
அடிகளார்