குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3/நதிகள் இணைப்பு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
61. நதிகள் இணைப்பு

இனிய செல்வ,

நம்முடைய நாட்டு அரசின்-பாரத நாட்டு அரசின் செயற்பாட்டைப் பார்த்தாயா? ஏன் இவ்வளவு பெரிய காலக்கொலை? 1974-இல் காவிரி ஒப்பந்தத்தின் காலம் முடிகிறது. 1974-இல் புதுப்பிக்கப்படுதல் வேண்டும். புதுப்பிப்பதில் போதிய விரைவு காட்டாமல் காலந் தாழ்த்தியதன் விளைவாக இன்று நாட்டில் உள்நாட்டுச் சண்டை! ஆம்! கர்நாடக மக்களும் தமிழர்களும் மோதிக் கொள்கிறார்கள்? ஏன் இந்த அவலம்? குற்றம் செய்பவர்களை விட, குற்றத்தை அனுமதிப்பவர்கள் முதல் குற்றவாளிகளாவார்கள் என்பது அரசியல் நியதி. இந்திய அரசு ஏன் இவ்வளவு காலம் தாழ்த்தியது? இந்திய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் எதற்காக இருக்கிறது? இந்திய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் ஆண்டுதோறும் கூடியதே, என்ன பேசினார்கள்? என்ன செய்தார்கள்? இந்திய மக்கள் தங்களுக்குள் ஏற்படும் தாவாக்களைப் பேசித் தீர்த்துக் கொள்ளாத அளவுக்கு; சிந்தனை முரடு தட்டிப் போகும் அளவுக்கு ஓர் அரசு-அதுவும் மக்கள் அரசு அனுமதிக்கலாமா? இந்திய நாட்டை ஆண்டு வந்த அரசுகள் தேர்தல் சுரத்திற்கு இரையாகி முடிவு எடுக்கத் தயங்கினவா? அல்லது தாட்சண்யத்திற்குப் பலியாகினவா? அல்லது நடுவண் அரசு எடுக்கும் முடிவுகளை மாநில அரசுகள் கேட்குமா என்ற அச்சமா? இனிய செல்வ, இவற்றுள் எதுவாக இருந்தாலும் ஒரு சிக்கலுக்குத் தீர்வு காணாமல் ஒத்தி வைத்துப் பின்விளைவாகப் பலப்பல சிக்கல்களை வரவழைத்துக் கொள்வதை எங்ஙனம் வரவேற்க இயலும்?

இனிய செல்வ, எப்போதும் நாடு தழுவிய, உலகந்தழீஇய நிலையில் திருத்தங்களும் செயல்முறைகளும் காண்பது நல்லது. விரிந்த நிலையில் எண்ணும்பொழுது சிக்கல்கள் அதிகம் எழா! ஒரோவழி எழுந்தாலும் வெப்பம் குறைந்திருக்கும். ஒரு நாடு என்றால் என்ன? இந்த நாட்டின் இயற்கை வளங்கள் இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் உரிமையுடையன அல்லவா? இந்திய அரசு, மாநிலங்களை இணைக்கும் சாலைகளை, தேசீய நெடுஞ்சாலையாக்கி உரிமைப்படுத்திக் கொண்டுள்ளது. இரயில்வேயை இணைத்து இந்திய இரயில்வேயாக ஆக்கியுள்ளது. ஆனால் இனிய செல்வ, இந்திய நதிகளை இணைக்கும் முயற்சியை மேற்கொள்ளாதது ஏன்? இது புரிந்து கொள்ள முடியாத புதிர்! இனிய செல்வ, இந்த நிலையில் நம் தமிழ் நாட்டின் முதல்வர் புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள் தென்னிந்தியாவின் நதிகளையாவது முதலில் இணையுங்கள் என்று கேட்டுக் கொண்டார். உடனே ஆந்திர முதலமைச்சர் மறுத்து விட்டார். இனிய செல்வ, இந்திய நாட்டின் நீர் வளத்தில் ஒரு பகுதி கடலில் போய்க் கலந்து வீணாவதை யாராலும் மறுக்க இயலுமா? ஒரு சிக்கலுக்குத் தீர்வு காண்பதில் காலங் கடத்துவதனால் தோன்றும் எதிர் விளைவுகள் பற்றி நமது அரசியல் தலைவர்கள் சிந்திக்க மறுப்பது ஏன்? இனிய செல்வ, எதையும் உரிய காலத்தில் செய்யவேண்டும் என்பது திருக்குறளின் கோட்பாடு.

"அருவினை என்ப உளவோ கருவியால்
காலம் அறிந்து செயின்"

என்பது குறள்.

கர்நாடகத்திற்கும் தமிழகத்திற்கும் இடையே உள்ள காவிரி நதி நீர்ச் சிக்கல் அப்படியொன்றும் கடுமையான தல்ல. ஆனால், நடுவண் அரசு கால தாமதம் செய்வதன் மூலம் பிரச்சனையைக் கடுமையானதாக்குகிறது என்பதே உண்மை; உடலுக்கு நோய்வரின் உடன் விரைந்து மருந்து தேடுவதைப்போல மனித உறவுக்குத் தீங்கு ஏற்படக்கூடிய செய்திகளுக்கு விரைந்து தீர்வு காணவேண்டும். அப்படியல்லாது காலந்தாழ்ப்பின் அநியாயங்கள் பழக்கப்பட்ட தனால் நியாயம் அந்நியமாகி, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையைக் கெடுத்து விடும். இனிய செல்வ, 1974-இல் காவிரி ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டிருக்கவேண்டும். இடையில் பதினெட்டு ஆண்டுகள் ஓடிவிட்டன! கர்நாடக மாநிலத்தில் பல அமைச்சரவைகள் வந்து போய்விட்டன. இது மிகவும் பெரிய தவறு. இப்போது மாநில அரசுகளிடமிருந்து காவிரி நீர்ப்பிரச்சனை மைய அரசுக்குப் போய்விட்டது. இது நமது பிரதமர் நரசிம்மராவுக்கு ஒரு நல்ல வாய்ப்பு. இந்த வாய்ப்பு எளிதில் அமையாது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, காவிரி நதி நீர்ச் சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டும். சார்பின்றி நியாய அடிப்படையில் சிந்தித்துத் தீர்வு காணவேண்டும்; நிலையான தீர்வாகவும் இருக்க வேண்டும். காவிரி நதி நீர்ச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதன்மூலம் கர்நாடக-தமிழ் மக்களிடையே உடன் தழீஇய உறவினையும் வளர்க்க வேண்டும், பிரதமர் செய்வாரா?

இனிய செல்வ, செய்தால்தான் இந்திய நாட்டின் இந்தியரின் பிரதமர், உடனடியாகத் தீர்வு காணவேண்டும். அது மட்டுமல்ல. இந்திய ஆறுகளை நாட்டுடைமை ஆக்க வேண்டும். காலந்தாழ்த்தாது செய்ய வேண்டும். இனிய செல்வ, தமிழ் நாட்டு முதல்வர் ஆலோசனைப்படி முதலில் தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும். பின் கங்கையைத் தமிழகத்திற்குக் கொண்டு வர வேண்டும். மிகப் பெரிய காரியம். தொடங்கினால் தான் சில்லறைச் சச்சரவுகள் குறையும். இனிய செல்வ, பொதுமை ஒரு வேள்வி! இந்திய ஆறுகளை இணைப்பது இயற்ற வேண்டிய வேள்வி! இந்தத் தலைமுறையில் இயற்ற வேண்டிய வேள்வி! இந்த வேள்வியைத் தொடங்கிய பெருமை புதிய பிரதமர் நரசிம்மராவுக்குக் கிடைக்குமா! பொறுத்திருந்து பார்ப்போம்!
இன்ப அன்பு
அடிகளார்