குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3/நாடுக நடுநிலை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

52. நாடுக நடுநிலை

இனிய செல்வ,

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது நமது திருக்குறள். அன்றே மானிட சமுதாயம் நம்பிக்கையுடனும் நல்லெண்ணத்துடனும் அமைதி வழியில் நடைபோட நடுவுநிலைமைப் பண்பு தேவை என்றார் திருவள்ளுவர். மனிதன் சார்புகளில் சிக்கித்தவிப்பவன்; உழல்பவன் அவனுடைய சுபாவங்கள் இயல்பாகவே சார்புகளைச் சார்ந்தே அமையும். ஒரோவழி சார்புகளிலிருந்து விடுதலை பெற்றாலும் ‘உலகம்’ பைத்தியக்காரன் என்று ஏசும்! வாழவிடாது. இதுவே சென்ற கால வரலாறு.

இனிய செல்வ, நடுவுநிலை என்பது சார்புகளினின்று நீங்கிய குணம். நடுவு நிலைமைப் பண்பு நன்மையை, உண்மையை, நேர்மையை மையமாகக்கொண்டு வளரும் பண்பு. நடுவு நிலைமைக்கு விருப்பும் இல்லை; வெறுப்பும் இல்லை. நடுவுநிலைப்பண்பு கற்றறிந்த அறிஞர்களுக்கே உரியது. புலனழுக்கற்று யார்மாட்டும் அருள்புரிந்தொழுகும் சீலமுடையோரே நடுவுநிலை நெறி நிற்பர். இனிய செல்வ, நடுவுநிலையின் இலக்கணத்தைத் திருக்குறள் விளக்குவதை அறிவாயாக!

"சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி"

(118)

இனிய செல்வ! கடைக்குள் பண்டங்கள் வாங்கச் சென்றிருக்கிறாயா? அங்குப் பண்டங்களை நிறுத்துக் கொடுக்கும் தராசு பார்த்திருக்கிறாயா? பழைய காலத்தில் அந்தத் தராசை முதலில் தூக்கி, தராசு சமநிலையில் இருப்பதைக் காட்டுவர்! அதாவது தராசில் கோளாறு இல்லை என்பதைக் காட்டுவர்! பின் நிறுப்பர்! முதலில் தராசின் வேறுபாடற்ற-பழுதற்ற சமன் நிலையைக் காட்டு தலை, “சமன்செய்து” என்றார் திருவள்ளுவர். இனிய செல்வ, ஒரு சிக்கலுக்குத் தீர்வு செய்பவர் முதலில் சார்பின்றி, சமநிலையில் இருதரப்பார் செய்திகளையும் உற்றறியும் தகுதியுடையவர்களாக இருக்கவேண்டும். அவர்களே சான்றோர்! இனிய செல்வ, இன்று நாம் சான்றோரைக் காண முடிகிறதா? இல்லை! ஏன்? எல்லாரும் சாதி, மதம், எனது, உனது, புகழ்ச்சி, இகழ்ச்சி ஆகியவற்றில் சிக்கிக் கொண்டவர்களாகவே விளங்குகின்றனர்.

இனிய செல்வ, உலக நாடுகள் பேரவை ஐ.நா. சபை அமைந்திருக்கிறது. ஆனால் ஐ.நா. சபையில் இடம் பெற்றிருப்போர் சான்றோர்களா? உலக சமாதானத்தைப் பேணி, உலகத்தை ஆக்கவழியில் உய்த்துச் செலுத்த வேண்டிய ஐ.நா. சபை ஓரஞ்சார்ந்து நடைபோடுவது போலத் தெரியவில்லையா? அமெரிக்காவின் கை. ஐ.நா சபையில் ஓங்கியிருப்பதுபோல் இல்லையா? இனிய செல்வ! வளைகுடாப் போர் வந்துவிட்டதே! ஏன்? ஈராக் அதிபர் சதாம்உசேன் மட்டுமா காரணம்? இல்லை! ஐ.நா., சபையும் காரணம்.

இனிய செல்வ, செய்தித் தாள்களில் இஸ்ரேல் - பாலஸ்தீனம் என்ற பெயர்கள் அடிக்கடி அடிபடுவதைப் பார்த்திருப்பாய்! பாலஸ்தீனத்தின் எல்லைச் சிக்கல் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து இருந்து வருகின்றது. யூதர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே ஏற்படும் மோதல்களால் மேற்கத்திய வல்லரசுகள் அடிக்கடி தம் போக்கிற்கேற்ப, இந்த நாடுகளின் எல்லையை மாற்றிக் கொண்டே வந்துள்ளன. இனிய செல்வ, கடைசியாக 1967-இல் இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையையும் காசாஸ்டியையும் 6 நாள் போரில் ஆக்கிரமித்துக் கொண்டது. இந்த ஆக்கிரமிப்பினால் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான அராபியர்கள் நாடற்றவர்கள் ஆயினர். இந்த ஆக்கிரமிப்புக்கு நாடற்றவர்களான அராபியர்களுக்கு இதுவரையில் என்ன தீர்வு என்றே தெரியவில்லை. ஐ.நா. பாதுகாப்பு சபை மெளனம் சாதிக்கிறது. அப்படியானால் குவைத்துக்கு மட்டும் என்ன அவசரம் வந்தது? இராக் அதிபர் சதாம் உசேன் என்ன கேட்கிறார்? பாலஸ்தீன ஆக்கிரமிப்புக்கு நீதி கேட்கிறார்! இதற்குப் பதிலே இல்லை! இதுதான் ஐ.நா. சபையின் குறிக்கோளாக இருப்பின் ஐ.நா சபையே ஒரு பஞ்சாயத்துப் படையை அனுப்பி மீட்கலாமே! ஏன் பன்னாட்டுப் படைக்கு அனுமதி வழங்கவேண்டும்? இவையெல்லாம் புரியாத புதிர்! இனிய செல்வ, குவைத்தை மீட்பதுதான் அமெரிக்காவின் நோக்கமா? ஐ.நா. சபையின் நோக்கமா? அப்படியானால் ஈராக்கின் மீது குண்டு மழை பொழிவானேன்? ஈராக் மக்கள் என்ன தவறு செய்தார்கள்? இனிய செல்வ, அமெரிக்காவுக்கு, போர்க் கருவிகள் செய்வதும் விற்பதுமே ஒரு பெரிய தொழில். கடன் கொடுப்பதும் கடன் வாங்கிய நாடுகளின் வாக்குகளை ஐ.நா. சபையில் பெறுவதும் அமெரிக்காவின் சாகசம்.

இனிய செல்வ, வீட்டிலும் நாட்டிலும் நடுவு நிலைமை தேவை. உலகிலும் நடுவு நிலைமை தேவை. அதுவும் ஆளுவோருக்கு இன்றியமையாத தேவை நடுவுநிலைப்பண்பு. நடுவுநிலைமை போற்றும் இயல்பு வளர்ந்தாலே சமூகம் வளரும்! வாழும்! சான்றோர் வீதிதோறும் காணப்படுதல் வேண்டும். வளைகுடாப் போர் அமைதியாக இனிதே முடியவேண்டும். ஈராக் அதிபர் சதாம் உசேன் போரினை நிறுத்த முன்வர வேண்டும். இது நமது விருப்பம்! உலக மக்கட் சமுதாயத்தின் விருப்பம். இனிய செல்வ, பொறுத்திருந்து பார்ப்போம்! மீண்டும் எழுதுகின்றோம்.
இன்ப அன்பு
அடிகளார்