குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3/பலர் கூடிக் காண்டல் ஞானம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

21. பலர் கூடிக் காண்டல் ஞானம்

இனிய செல்வ,

சொல்வது சொல்; பலர் கேட்பது சொல். இன்றைய மனித உலகம் தனது காலத்தையும் சக்தியையும் மிகுதியாகச் செலவழிப்பது சொற்களிலேயாம்! எங்கும் பேச்சுக் கச்சேரி நடப்பதைப் பார்க்கிறாய் அல்லவா? மேலும் கருத்தரங்குகள் - கவியரங்குகள் - பட்டி மன்றங்கள் - மாநாடுகள் என்றெல்லாம் அமைத்துக்கொண்டு பேசித் தீர்க்கிறார்கள். இன்றைய சமுதாயத்தில் சொற்பொழிவாற்றுவது ஒரு தகுதியாகிவிட்டது. மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து பேசிக் காண்பதே அறிவியல்! ஆய்வை முடிவு செய்யக்கூட சிலர் தேவை! மாநாடுகள் என்றால் பலர் கூடி ஆய்வு செய்து முடிவு எடுக்கும் அற்புதமான அறிவியலாக இருக்கும்; இருக்க வேண்டும். ஜப்பான் தேசத்தில் ‘ஷக்சி’ (Shuchi) என்ற சொல், வழக்கில் இருக்கிறது. இந்தச் சொல்லுக்குப் பொருள் ‘பலர் கூடிக் கண்ட ஞானம்' (Shuchi is “the wisdom of the many" or collective wisdom"), என்பது பொருள். ஒருசிலர் கூடினால் நல்லறிவு காணும் பேச்சு நடக்கவேண்டும். பலர் கூடினால், பெரும்பயன் தரக்கூடிய பேச்சு வேண்டும். இனிய செல்வ, நீ சொல்வது உண்மை! இன்று படித்ததைச் சொல்கிறார்கள். அதையும்கூட ஆன்ம அனுபவத்திற்கு உள்ளாக்காமல் அப்படியே ஒப்பிக்கிறார்கள்; பகடை பேசுகிறார்கள். குற்றங்களைக் கூறுகிறார்கள்; பழி தூற்றுகிறார்கள். இதற்காகவா ஆற்றல் மிக்குடைய சொற்கள் பயன்பட வேண்டும். இனியசெல்வ, நமது நிலை இரங்கத்தக்கது.

அண்மையில் ஏப்ரல் 22, 23, 24-இல் சென்னை மறைமலை நகரில் காங்கிரஸ் (இ) மாநாடு நடைபெற்றது. மாநாடு நடந்தது புதிய நகரத்தில்! புதிய புகைவண்டி நிலையத்திற்கு அருகில் புதிய பொலிவுடன்! புதிய விளம்பர உத்திகளுடன் நடந்தது! ஆம். இந்த நாட்டை ஆண்டவர்கள், ஆள்பவர்கள், ஆளப்போகிறவர்கள் மாநாடு நடத்தினார்கள். காங்கிரசுக்கு மகத்தான வரலாற்றுப் புகழ் உண்டு! சென்ற காலத்தில் காங்கிரஸ் செய்த சாதனைகள் பலப்பல!

சுதந்தரத்தை வாங்கிக் கொடுத்து நம்மை மனிதர்களாக்கியதே காங்கிரஸ்தான்! திட்டமிட்ட திசையில் அழைத்துச் சென்றதும் காங்கிரஸ்தான். சென்ற தலைமுறை வரை காங்கிரஸ் துடிப்புடன் செயலாற்றல் மிக்குடைய இயக்கமாக விளங்கிய அத்தகைய துடிப்பை இன்று மறைமலை நகரில் கூடிய கூட்டத்தில் காணமுடியவில்லை. ஏன்? மாநாட்டுப் பேச்சுக்களில் எழுச்சியில்லை! புதிய வேகத்தைக் காணோம். பொருளாதாரத் தீர்மானத்தின் மீது சூடான விவாதம் நடந்திருப்பது உண்மை. அந்த விவாதத்தைச் செய்தித்தாள்கள் தரவில்லை. ஏன்? தொலைக் காட்சியும் வானொலியும் கூட தரவில்லை. நமக்கு நல்லூழின்மையே; இனிய செல்வ, திருவள்ளுவர், மாநாடுகளில் கூடுபவர்கள் "அரும்பயன் ஆயும் அறிவினார்” களாக இருக்கவேண்டும் என்று கூறுகின்றார்.

இனிய செல்வ! அன்றாடம் நாம் நடத்தும் வாழ்க்கையிலேயே பயன்கள் தென்படுகின்றன. ஆனால், வரலாற்று நுண்ணறிவும் ஆய்வு செய்யும் மனப்பாங்கும் இல்லாததால் இவை அறிதற்கு அரிய பயனைக் காணத் துணை செய்வதில்லை. அறிதற்கு அரிய பயனைத் தேடுபவர்களே மானிடர். அத்தகையோர் பலர் கூடி ஆய்வு செய்வதே மாநாடு. இத்தகைய மாநாடுகளில் செய்திகளை ஆய்வு செய்து பெரும் பயனளிக்கக் கூடிய சொற்களையே சொல்வர். மறைமலை நகர் மாநாடு நம்முடைய நாட்டை முன்னேற்றத் திசையில் உய்த்துச் செலுத்தும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் அந்த ஆவேசம் கிடைக்கவில்லை. ஏன்? மாநாட்டில் கூடியோர் அறிதற்கரிய பயனை - பெரும்பயனை அறியும் ஆர்வமுடையராக இல்லை. ஏதோ மரபுக்காகக் கூடினர், கலைந்தனர் போல் தெரிகிறது. இது வருந்தத்தக்கது.

இனிய செல்வ,

நம்முடைய திருக்குறள் பேரவையினர் எதிர்வரும் மே 20, 21, 22ஆம் நாட்களில் வட ஆர்க்காடு இரத்தினகிரியில் கூட இருக்கின்றனர். இனிய செல்வ, நீயும் உனது நண்பர்களும் இரத்தனகிரிக்கு வருவது உறுதியான செய்தி; இரத்தினகிரியில் கூடப் போகிறவர்கள்.

"அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்”

என்ற திருக்குறள் நினைவொடு வருக! மற்றவை அடுத்த மடலில்
இன்ப அன்பு
அடிகளார்