குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3/வாழ்வாங்கு வாழ்க

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

7
அடிகளார் மடல்

1. வாழ்வாங்கு வாழ்க

இனிய தமிழ்ச் செல்வ! வாழ்த்துக்கள்! உனது கடிதம் கிடைத்தது. செய்திகள் அறிய வந்தன. உலக அரங்கில் இரண்டு அணியினர். ஓர் அணியினர் மானுட வாழ்க்கையை மறுப்பவர்; துன்பச் சுமையென வெறுத்து ஒதுக்குபவர். பிறிதோர் அணியினர் வாழ்க்கையை ஏற்பவர்; ஏற்று மகிழ்ந்து வாழ்தல் வேண்டும் என்ற கொள்கையினர். நாம் இரண்டாவது அணியினர். நமது கருத்து, மானுட வாழ்க்கை உயர்ந்தது. வாழ்க்கை வாழ்வதற்கே என்பது, ஆம்!

இனிய செல்வ! வாழ்க்கையை மறுக்கும் அணியினர் பேச்சை அன்புகூர்ந்து கேட்க வேண்டாம்! அந்தவழியில் செல்ல வேண்டாம்! அது நமது வழியன்று. நமது வழி, வாழ்வதே!

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்”

என்பது நமது குறள். இத்திருக்குறள் காட்டும் வழியே வழி. நில உலகில் வாழ்வதே வாழ்க்கை. வாழ்க்கை என்பது ஒருகலை; அது நுண்ணிய அருமைப்பாடுகள் உடையது. பிறந்தவர்கள் எல்லாம் வாழ்ந்து விடுவதில்லை. இம்மண்ணில் பலர் பிழைப்பையே நடத்துகின்றனர்; வாழ்கின்றார் மிகச்சிலரே. வாழ்க்கையென்பது கட்டி முடிக்கப் பெற்ற மாளிகையல்ல. ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் சிந்தனையால், எண்ணத்தால், உணர்வால், செயல்களால் தமது வாழ்க்கையைக் கட்டிக் கொண்டிருக்கின்றார்கள். பலர் இதனையறியாமல் வறிதே பொழுது போக்குகின்றனர். வெளியே சொல்ல முடியாதவற்றையெல்லாம் எண்ணுகின்றனர். அவர்கள் எண்ணம்போல வாழ்க்கை அமைந்து விடுகிறது. இத்தகு வாழ்க்கை துன்பம் நிறைந்ததாக அமையும். துன்பத்தைத் தாங்க இயலாது நோகின்றனர். ஏன்? வாழ்வாங்கு வாழ்ந்திருந்தால் வாழ்க்கை முழுதும் நன்றாக அமையும்; மகிழ்வாகவே அமையும். அதுமட்டுமா? வாழ் வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வம்போல் வையகத்தில் மதிக்கப்படுவார்கள்; போற்றப்படுவார்கள்.

இனிய செல்வ! வாழ்வாங்கு வாழ வழி காட்ட வேண்டும் என்ற குறிக்கோள் நோக்கியே திருக்குறள் எழுதப் பெற்றது. நமது திருக்குறள் வாழ்வாங்கு வாழ வழிகாட்டும் நூல்; திருக்குறள் வழியே வாழும் வழி. இனிய செல்வ, திருக்குறள் வாழ்க்கையின் பருவங்கள் தோறும் வழிகாட்டி அழைத்துச் செல்லத் தக்கதாக இயற்றப் பெற்றுள்ளது. நாள் தோறும் திருக்குறள் படி! அந்தந்தச் சூழ்நிலையில் தக்க வழியை, குறள் காட்டும்! செய்ய வேண்டிய நெறிகளையும் புலப்படுத்தும், அன்றாடம் காலையில் எழுந்தவுடன் நேற்றைய வாழ்க்கையின் நிகழ்வுகளை எண்ணுக! குற்றம்-குறை-குணங்களை ஆய்வு செய்க! குற்றங்களைக் களைக! குறைகளை நீக்கிடுக! குணங்களை எடுத்துக் கொள்க! இன்று எப்படி வாழ்வது என்று எண்ணுக! திட்டமிடுக! வாழ்க! இதுவே வாழ்வாங்கு வாழும் வழி!

எந்தச் சூழ்நிலையிலும் வாழ்ந்து சேர்த்த குணங்கள் என்னும் முதலினை இழந்துவிடாதே! வாழ்க்கையை நொந்து அழாதே! விழிப்பாக இரு வாழ்வாங்கு வாழ்க! ஓயாது உழைத்திடுக! முதலில் நம்பிக்கையைப் பெற்றுக் கொள்! மகிழ்ச்சியாக இரு! வாழ ஆசைப்படு! அடுத்து எழுதுகிறோம்.

இன்ப அன்பு
அடிகளார்