குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3/விருதுபெறும் வித்தகர்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

72. விருதுபெறும் வித்தகர்

இனிய செல்வ,

நமது வள்ளுவர் வழி - இதழாசிரியர் அருமை நண்பர் தே.கண்ணன் அவர்கள் ‘திருவள்ளுவர் விருது' பெற்றிருக்கிறார்; ஆம்! நீ சொல்வது நூற்றுக்கு நூறு சரி! திருக்குறள் ஆர்வலர்கள் அனைவரும் மகிழக் கூடிய செய்தி! இந்த விருதை நமது தே.கண்ணன் பெற்றிருக்கிறார்! எத்தனை ஆண்டுகள் உழைப்புக்குப் பிறகு பெற்றிருக்கிறார்-தெரியுமா? திருவாளர் தே.கண்ணன் அவர்கள் தமிழ்நாடு அரசின் வணிக வரித்துறையில் பணியாற்றியவர். மாவட்ட வணிக வரி அலுவலர் பதவி வரை அரசுப் பணியில் வளர்ந்து உயர்ந்தவர்.

இனிய செல்வ, வணிக வரித்துறையில் பணி செய்தும் அவர் என்றும் போலத்தான் இருக்கிறார். இனிய செல்வ, புரிகிறதா? இந்த உலகத்தில் கல்லை. தே.கண்ணன் போன்றவர்கள் விசித்திரமானவர்கள்; கல்லை, தே.கண்ணன் அவர்களுடன் நமக்கு உறவு ஏற்பட்டு முப்பது ஆண்டுகளுக்கு மேலாயிற்று! அவர் அன்றைய சேலம் மாவட்டத்தில் கிருஷ்ணகிரியில் பணி செய்தபோது முதலில் உறவு ஏற்பட்டது! அந்த நாள்முதல் இந்த நாள் வரையில் தலை நாள் காட்டிய பரிவையே காட்டி வருகிறார்! குறியொன்றும் இல்லாத பரிவு-தியாகம்.

அந்தக் காலத்தில் கல்லை, தே.கண்ணன் அவர்களுடைய அழைப்பின் பேரில் சேலம் மாவட்டம் கிருஷ்ணகிரி வட்டப் பயணம் ஏற்றுக் கொள்ளப் பெற்றது. அப்பொழுது கிருஷ்ணகிரியில் பலர் வீடுகளின் முகப்பில் திருக்குறள். அலுவலகங்களில் திருக்குறள்! இப்படி இடம் பெற வைத்திருந்தார்! ஒருவரை ஒருவர் சந்தித்தால் எலுமிச்சம்பழம் பெறுவதுதான் மரபு! கல்லை தே.கண்ணன் அவர்கள் ஒரு புது மரபை உருவாக்கினார். நாம் கிருஷ்ணகிரி சென்றவுடன் திருக்குறள் பதித்த அட்டையைக் கொடுத்து வரவேற்றார். இவர் திருக்குறள் பதித்த அட்டைகள் எப்பொழுதும், அவர் கைவசம் இருக்கும்.

இனிய செல்வ, கல்லை. தே.கண்ணன் அவர்கள் நல்ல திருக்குறள் அறிஞர்; 1965-ல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்த போது ‘தமிழ்க் காப்பு மாநாடு’ ஒன்று குன்றக்குடியில் கூட்டப்பெற்றது. அந்த மாநாட்டில் முத்தமிழ்க் ‘காவலர், சிலம்புச் செல்வர், தமிழ் மறவர் சி. இலக்குவனார் ஆகியோருடன் பலர் கலந்து கொண்டனர். மாநாட்டின் பங்கேற்பாளர்கள் நூறு பேர்; மாநாடு நன்றாக நடந்தது; இடையில் சி. இலக்குவனார் மாநாட்டிலிருந்து வெளிநடப்புச் செய்துவிட்டார்! இனிய செல்வ, ஏன் அவசரப்படுகிறாய்? சொல்ல வந்ததை முழுதும் சொல்லாமல் விட இயலுமா? இந்தி எதிர்ப்புணர்ச்சிக்குக் காட்டும் ஆர்வத்தைத் தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும் என்பது மாநாட்டின் முடிபு. இந்த மாநாட்டில் கல்லை, தே.கண்ணன் அவர்களும் கலந்து கொண்டார். மாநாட்டுப் பேராளர்கள் வருவதற்கு இடையூறாக தமிழ்நாடு அரசு ஒற்றர் பிரிவைச் சேர்ந்த காவலர்கள் வந்து மடத்தைக் கண்காணித்தனர். இதனால், கல்லை, தே.கண்ணன் அவர்கள் சில தொல்லைகளுக்கும் ஆளானார்; ஆனால், கடுமையாகப் பாதித்து விடவில்லை.

இனிய செல்வ, கல்லை. தே.கண்ணன் அவர்கள் தாம் ஒய்வு பெற்ற பிறகு "வள்ளுவர் வழி” இதழைத் தொடங்கி நடத்தி வருகிறார். இந்தக் காலத்தில் ஒர் இலக்கிய இதழை இழப்பில்லாமல் நடத்த முடியுமா? மிகுந்த இடர்பர்டுகளுக்கிடையில் நடத்தி வருகிறார். அவரே இதழ்களை மடித்து அஞ்சல் செய்து வருகிறார். இனிய செல்வ, நாமெல்லாம் முயன்று அவருடைய இழப்பை ஈடு செய்ய வேண்டும். இது நமது கடமை! இனிய செல்வ, கல்லை, தே.கண்ணன் அவர்கள் திருக்குறள் விருதினைப் பெற்றுள்ளார்.

"நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு"

என்ற திருக்குறள் நெறிதான் இந்த விருதினைப் பெறத்துணை செய்தது; கல்லை. தே.கண்ணன் அவர்கள் நீதியை விரும்புபவர். அறத்தையும் 'அறம்' என்றே சிறப்பித்துக் கூறப்பெறும் திருக்குறளையும் விரும்புவர். அது மட்டுமா? பல ஆண்டுகளாகத் தமக்கும் பிறர்க்கும் பயன்பட வாழ்ந்தவர். அதனால் அவரை உலகு பாராட்டியுள்ளது. நாமும் பாராட்டுவோம் வள்ளுவர் வழியை எண்ணி!
இன்ப அன்பு
அடிகளார்