குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3/“நாமும் நமதும்” - வேண்டும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
45. “நாமும் நமதும்” - வேண்டும்

இனிய செல்வ;

இன்றைய மனிதகுலத்தில் எல்லாரிடமும் இருப்பது "செருக்கு” என்ற தீய குணமாகும். “எனது நாடு" "எனது மொழி” “எனது இனம்” “எனது சமயம்” “எனது சொத்து” என்பன போன்றவை. பாவேந்தன் பாரதிதாசன் நாட்டுப்பற்றினால் அடுத்த நாட்டினை அழிக்கின்றான்-என்று கூறுகிறான்.

தென்னையுள்ளம் ஒன்றுண்டு தனது நாட்டுச்
சுதந்தரத்தால் பிறர் நாட்டைத் துன்புறுத்தல்;

என்பது பாரதிதாசன் பாடல்.

ஆதலால் நாடுகளுக்கிடையே உள்ள எல்லையை எடுக்கச் சொல்கிறான்.

"நாட்டொடு நாட்டை இணைத்து மேலே ஏறு",

என்பது பாவேந்தன் பாடல் வரி. ‘எனது’ என்ற சொல்லினைப் பாவேந்தன் வெறுக்கிறான்.

"இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
‘இது எனது’ என்னுமோர் கொடுமையைத்
தவிர்ப்போம்!”

என்று பாடுகின்றான்.

‘எனது’ என்ற சொல்லும், அந்தச் சொல் தோன்றுதற்குரிய பின்னணியும் ‘நான்’ என்ற அகந்தையை உருவாக்குகிறது. பணமும் அதிகாரமும் படைத்தவர்கள் ‘நான்’ என்ற சொல்லை அதிகமாகப் பயன்படுத்துவர். இனிய செல்வ, இந்த ‘எனது’ சென்ற காலத்தில் விளைவித்த துன்பமும் மிகுதி. இன்று தரும் இன்னல்களும் அதிகம். இனிய செல்வ என்ன செய்வது? யாரிடம் சொல்வது? இருக்கன் குடி கடவுள் சந்நிதியில் கூட ‘நான்’ தான் வம்புக்குக் காரணம். திருச்சி மாவட்டம் வி.களத்துார்க் கலகத்திற்கு "எனது மதம்” என்ற உணர்ச்சியே காரணம் ஏன்? காவிரி நடுவர் மன்றத்திற்குப் போகிறது? கர்நாடகத்துடன் நமக்குள்ள காவிரி நீர்ச் சிக்கல்கூட ‘நான்’ ‘எனது’ தானே! யாருக்குத் தண்னீர் தேவை? என்பதல்ல விவாதத்தின் அடிப்படை! உரிமை உணர்வே அடிப்படை. ‘எனது’ ‘உனது’ என்ற சொற்கள் வழக்கிற்கு வந்த பின்தான் சண்டைகள் ஏற்படுகின்றன. இன்று எங்கும் உரிமைச் சண்டைகள்! இந்த உரிமைச் சண்டைகள் வந்த பிறகு மனித குலம் சமூக உணர்விலிருந்து நீண்ட தூரம் விலகிப் போய் விட்டது. சுதந்திரம் வந்து 43 ஆண்டுகள் ஆன பிறகும் இந்தியாவில் "இந்தியர்கள்" தோன்றவில்லை. இனிய செல்வ, பாரதி ‘நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம்!” என்று பாடினான். இன்று ‘நாமும் இல்லை; நமதும் இல்லை’. எங்கு நோக்கினும் ‘என்னுடையது’ என்ற உணர்ச்சி! இந்த உணர்ச்சி மிருகத்தனமாக வளர்கிறது என்பதன் அடையாளங்கள் பலப்பல. ‘ராமஜன்ம பூமி-பாபர் மசூதி’ எண்ணப் போக்குகள் என்ன? மத நம்பிக்கைகளா? இல்லை! இல்லை! ‘என்னுடைய மதம்’ என்ற உணர்ச்சிமிக்க ஆரவாரச் சந்தடியில் கடவுள் காணாமல் போய் விட்டார்! 'சிவசேனை' என்ன சொல்கிறது? இன்னும் எண்ணற்ற உதாரணங்களைக் காட்ட முடியும்.

இனிய செல்வ, விருப்பங்கள் - ஆர்வங்கள் செருக்குகளாக வளரக் கூடாது. செருக்கின் இயல்பென்ன? செருக்கு மற்றவர்களை மதிக்காது! மற்றவர் கருத்தை மதிக்காது! மற்றவர்கள் உரிமைகளுக்குப் பாதுகாப்பு இல்லை! தான் நினைப்பதே சரி! அதுவே வேதம் என்று கூறும்.

இனிய செல்வ, ‘யான்’ ‘எனது' என்ற செருக்கு அறவே கூடாது! ஏன்? இனிய செல்வ, ‘நான்’ என்பது அற்ற நிலையே இன்பநிலை! இன்ப அன்பு நிலை! இந்தியாவிற்கு இந்த ஞானோதயம் என்று வரும்! இன்றைய இந்தியாவின் போக்கு எப்படி இருக்கிறது? இன்றைய இந்தியாவில் சாதி, மதச் சண்டைகள் நடவாத மாநிலம் இல்லை. எங்கும் கலகத் தீ. மைய அரசு அலுவலகங்களில் தீ!

இனிய செல்வ இன்றைய இந்தியா எங்கு போகிறது? கி.பி.2000 இல் இந்தியா வலிமை பெற்ற ஒரு நாடாக விளங்க வேண்டாமா? ஆம்! நம் ஒவ்வொருவரையும் விட இந்தியா பெரிது! இந்தியா வலிமை பெற்றிருக்க வேண்டும். அப்படியானால் ‘நான்’ ‘எனது’ என்ற செருக்குகளை அறவே விட்டொழிக்க வேண்டும். அல்லது நாட்டின் நலன், மனிதகுல நலன் என்ற ஆதார சுருதிக்கு அடங்கியாவது வாசிக்கவேண்டும். இனிய செல்வ, இதுவே இன்றை தேவை! அடுத்து எழுதுகின்றோம்.
இன்ப அன்பு
அடிகளார்