குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-4

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

இந்த புத்தகத்தை Mobi(kindle) fileஆக பதிவிறக்குக. இந்த புத்தகத்தை EPUB fileஆக பதிவிறக்குக. இந்த புத்தகத்தை RTF fileஆக பதிவிறக்குக. இந்த புத்தகத்தை PDFஆக பதிவிறக்குக. இவ்வடிவில் பதிவிறக்குக




குன்றக்குடி அடிகளார்

நூல்வரிசை

 

தொகுதி - 4

 

திருக்குறள்

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
CC-Zero-badge.svg Blank.jpg CC-logo.svg
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community ( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

குன்றக்குடி அடிகளார்
நூல்வரிசை

தொகுதி - 4
திருக்குறள்


முதன்மைப் பதிப்பாசிரியர்
தவத்திரு பொன்னம்பல அடிகளார்




விற்பனை உரிமை :
மணிவாசகர் பதிப்பகம்
31, சிங்கர் தெரு, பாரிமுனை,
சென்னை-600108.

முதல் பதிப்பு : செப்டம்பர், 2001
திருவள்ளுவர் ஆண்டு : 2032
உரிமை : திருவண்ணாமலை ஆதீனம்
விலை : ரூ. 75-00

பதிப்பாசிரியர் குழு

தமிழாகரர் தெ. முருகசாமி
நா.சுப்பிரமணியம்
குன்றக்குடி பெரியபெருமாள்
க. கதிரேசன்

மரு.பரமகுரு


செயலர் :
பதிப்புச்செம்மல் ச. மெய்யப்பன்


கிடைக்குமிடம் :
மணிவாசகர் நூலகம்
12-B, மேல சன்னதி, சிதம்பரம் - 608 001.
31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை - 600 108.
110, வடக்கு ஆவணி மூல வீதி, மதுரை - 625 001.
15, ராஜ வீதி, கோயமுத்தூர் - 641 001.
28, நந்தி கோயில் தெரு, திருச்சி - 620 002.


தொலைபேசி :
சிதம்பரம் : 30069
சென்னை : 5361039
மதுரை : 622853
கோயமுத்துார் : 397155
திருச்சி : 706450


அச்சிட்டோர் : பவர்மேன் பிரிண்டர்ஸ், சென்னை-1.

5243591, 5248342

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-4.pdf
தமிழ் மாமுனிவர்
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
1925 - 1995

தமிழ்மாமுனிவர் அருள்நெறித் தந்தை
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
வாழ்க்கைக் குறிப்புகள்
ஆண்டு நிகழ்வுகள்
1925 தோற்றம்
பூர்வாசிரமம் : தந்தையார் : திரு. சீனிவாசம் பிள்ளை
தாயார் : திருமதி. சொர்ணத்தாச்சி
பிள்ளைத் திருநாமம் : அரங்கநாதன்
தோற்றம் பெற்ற ஊர் : தஞ்சை மாவட்டம், திருவாளப்புத்துர் அருகேயுள்ள நடுத்திட்டுக் கிராமம்.
1931- சிதம்பரம் அண்ணாமலை நகரில் வாசம்.
1936 சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை, நாவலர் நாட்டார், சுவாமி விபுலானந்தர் ஆகியோர் தொடர்பு.
1937- தமையனார் திரு. கோபாலகிருஷ்ன பிள்ளை வீட்டில்
1942 கடியாபட்டியில் வாழ்தல்.
பள்ளியிறுதித் தேர்வு எழுதுதல்.
1942 விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு.
வினோபா பாவே படிப்பகம் தொடங்கி நடத்துதல்.
1945 தருமபுரம் ஆதீனம் 25ஆவது குருமகாசந்நிதான்ம் கயிலைக் குருமணி அவர்களிடம் கந்தசாமித் தம்பிரான் என தீட்சாநாமத்துடன் தம்பிரானாதல்.
தருமபுரம் தமிழ்க் கல்லூரியில் பயிலுதல்.
1947-
1948 சீர்காழிக் கட்டளைத் தம்பிரான் - திருஞான சம்பந்தர் திருமடம் தூய்மைப் பணி; திருமுறை வகுப்பு, விழா நடத்துதல்.
1949 குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனத்தின் இளவரசு பட்டம் ஏற்பு. திருநாமம் ஶ்ரீலஶ்ரீ தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாசாரிய சுவாமிகள்.
1951 காரைக்குடிக் கம்பன் விழாவில் புதரிடைமலர்' என்ற தலைப்பில், அறிஞர்களின் நெஞ்சம் கவர்ந்த சொற்பொழிவு.
1952 குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனத்தின் 45ஆவது குருமகா சந்நிதான்மாக எழுந்தருளல்.
அருள்நெறித் திருக்கூட்டம் தோற்றம்.
‘மணிமொழி’ என்னும் பெயரில் இயக்கப் பத்திரிகை வெளியிடல்.
1953 ஆதீனத்தின் அருளாட்சியிலுள்ள பிரான்மலைத் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவின்போது (சங்க கால வள்ளல் பாரி வாழ்ந்திருந்த மலையில்) வள்ளல் பாரி விழாத் தொடங்குதல்.
பல்லக்கில் பட்டணப் பிரவேசம் வருதலைத் தவிர்த்தல்.
இலங்கைப் பயணம் - இரண்டு வாரம் சுற்றுப் பயணம்.
1954 இராசாசி தலைமையில் தேவகோட்டையில் அருள்நெறித் திருக்கூட்ட மாநாடு.
திராவிடர் கழகத் தலைவர் பெரியார் சந்திப்பு.
தாய்லாந்து, இந்தோசீனா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் (3 திங்கள்)
1955 அருள்நெறித் திருப்பணி மன்றம் தொடங்குதல்.
‘தமிழ்நாடு’ நாளிதழ் தவத்திரு குன்றக்குடி அடிகளார் என்ற பெயரை அறிமுகப்படுத்துதல்.
1956 அறிஞர் அண்ணா குன்றக்குடி திருமடத்திற்கு வருகை
ஆச்சார்ய வினோபா பாவே திருமடத்திற்கு வருகை.
1958 குன்றக்குடியில் உயர்நிலைப்பள்ளி தொடங்குதல்.
1959 ஆ தெக்கூரில் பள்ளிச் சீரமைப்பு மாநாடு நடத்துதல்.
பாரதப் பிரதமர் நேரு மாநாட்டிற்கு வருகை.
1960 மத்திய அரசு சேமநலக் குழு உறுப்பினராதல்.
1962 சீனப்போரின்போது தங்க உருத்திராட்ச மாலையைத் திருவொற்றியூர்க் கூட்டத்தில் ஏலம் விட்டு ரூ. 4000 தருதல்
மதுரை அருளமிகு மீனாட்சியம்மன் திருக்கோயிலில் திருமுறைத் தமிழ் அருச்சனை தொடங்குதல்.
1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம்; அரசு வழக்கு தொடர்தல்.
1966 தமிழ்நாடு தெய்வீகப் பேரவைத் தோற்றம்.
1967 திருப்புத்தூர்த் தமிழ்ச் சங்கம் தோற்றம்.
திருக்கோயில் கருவறைக்குள் சீலமுடைய அனைவரும் சாதி வேறுபாடின்றி திருமுறை நெறிப்படி - போதொடு நீர் சுமந்தேத்தி வழிபாடு செய்வதெனத் திருப்புத்துர்த் தமிழ்ச் சங்கம் தீர்மானம் நிறைவேற்றுதல்.
1968 இரண்டாம் உலகத் தமிழ்மாநாடு - திருக்குறள் உரைக்கோவை நிகழ்ச்சி தொடக்கவுரை நிகழ்த்தல் - திருக்குறள் இந்திய நாட்டின் தேசிய நூலாக வேண்டுமென்று இம்மாநாட்டில் வலியுறுத்தல்.
இலங்கைப் பயணம். இரண்டு வாரங்கள், இலங்கை யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் திருக்கோயில் நுழைவுக்காக உண்ணா நோன்பிருத்தல்.
கீழ வெண்மணித் தீவைப்பு நடந்த இடத்தைப் பார்வையிட்டுப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுதல்; புத்தாடை வழங்குதல்.
1969 பாபநாசம் பொதிகையடி திருவள்ளுவர் தமிழ்க் கல்லூரி ஏற்பு;
கலைஞர் மு. கருணாநிதி பாரி விழாவிற்கு வருகை
கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் விருப்பத்தின் வழி தமிழ்நாடு சட்டமன்ற மேலவை பொறுப்பேற்றல்
தமிழ்நாடு தெய்விகப் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெறல்.
1970 சட்டமன்ற மேலவையில் இந்து அறநிலையத் திருத்த மசோதா - சாதி வேறுபாடின்றி அனைவரையும் அர்ச்சகராக நியமனம் செய்தல் பற்றிப் பேசுதல்.
1971 தமிழ்நாடு சமாதான்க் குழுத் தலைவராதல்.
சோவியத் பயணம்; 22 நாள் சுற்றுப் பயணம்.
1972 பாபநாசம் பொதிகையடி திருவள்ளுவர் தமிழ்க் கல்லூரி, திருவள்ளுவர் கலைக் கல்லூரியாக உருவாதல்.
சென்னை, மயிலாப்பூர் திருவள்ளுவர் திருக்கோயில் திருப்பணிக்குழுத் தலைவராக நியமனம். வள்ளுவர் கோட்டம் திருப்பணித் தலைவராக நியமனம்.
குன்றக்குடித் தருமைக் கயிலைக் குருமணி உயர்நிலைப் பள்ளிக்குப் புதிய இடத்தில் கட்டடம் கட்டித் திறத்தல்.
1973 திருக்குறள் பேரவைத் தோற்றம்.
திருச்சியில் தமிழ்நாடு தெய்விகப் பேரவை இரண்டாவது மாநில மாநாடு நடத்துதல்.
“கோயிலைத் தழுவிய குடிகளும் குடிகளைத் தழுவிய கோயிலும்” என்ற முழக்கம் நாட்டளவில் வைக்கப்பெற்றது.
குன்றக்குடி கிராமத்தைத் தன்னிறைவுக் கிராமமாக ஆக்கும் திட்டம் உருவானது.
1975 நாகர்கோவிலில் தமிழ்நாடு தெய்விகப் பேரவை மூன்றாவது மாநில மாநாடு நடைபெறல்.
சென்னைப் பல்கலைக் கழகத்தில் சொர்ணம்மாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு.
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஏ.பி.சி. வீரபாகு சைவசித்தாந்த அறக்கட்டளைச் சொற்பொழிவு.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சொர்னம்மாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு.
இராமநாதபுரம் இனக் கலவரம் - அமைதிப்பணி.
1982 குமரி மாவட்டம் மண்டைக்காடு கலவரம் - அமைதிப் பணியாற்றல்.
மண்டைக்காடு அமைதிப்பணி பற்றிச் சட்ட மன்றத்தில் முதல்வர் மாண்புமிகு எம்.ஜி.ஆர். பாராட்டுதல்.
திருவருட்பேரவை தொடங்குதல்.
மலேசியா, கொரியா, ஹாங்காங், ஜப்பான், செஞ்சீனா முதலிய நாடுகளில் சுற்றுப்பயணம்.
புளியங்குடி இனக்கலவரம் - அமைதிப்பணி.
1984 பாரதத் தலைமை அமைச்சர் திருமதி. இந்திராகாந்தி அவர்கள் குன்றக்குடிக் கிராமத் திட்டக்குழுவின் பணிகளைப் பாராட்டல்.
1985 நடுவணரசு திட்ட ஆணைக்குழுப் பிரதிநிதிகள் குன்றக்குடி வருகை, கிராம வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிட்டுப் பாராட்டுதல்.
பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டம் வளர்ச்சிப் பணிக்குத் திட்டக்குழு அமைத்தல்.
மணிவிழா
1986 தமிழ்நாடு அரசின் முதல் திருவள்ளுவர் விருது பெறுதல்
இந்திய அரசு திட்டக்குழு குன்றக்குடித் திட்டப்பணியைப் பாராட்டி “Kundrakudi Pattern” என்று அறிவித்தது.
1989 இவர் எழுதிய ‘ஆலயங்கள் சமுதாய மையங்கள்’ என்னும் நூல் தமிழ்நாடு அரசின் முதற்பரிசு பெற்றது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் (D.Litt) பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
1991 இந்திய அரசின் அறிவியல் செய்தி பரப்பும் தேசியக்குழு, தேசிய விருது வழங்கிச் சிறப்பித்தது.
இலண்டன், அமெரிக்கா சுற்றுப்பயணம்.
அரபு நாடுகள் பயணம்.
1993 மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழ்ப் பேரவைச் செம்மல் விருது வழங்கிச் சிறப்பித்தது.
1995 இறைநிலையடைதல்.

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-4.pdf
அடிகளாரின் குறள் பணிகள்
பதிப்புச்செம்மல் ச.மெய்யப்பன்
நிறுவனர் : மெய்யப்பன் தமிழாய்வகம்

தமிழ்மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமிழ்கூறு நல்லுலகில் சமய மறுமலர்ச்சிக்கு வழிகண்டவர். அடிகளார் பூர்வாசிரமத்தில் செட்டிநாட்டில் எங்கள் ஊராகிய இராமச்சந்திரபுரத்தில் உயர்நிலைக் கல்வி பயின்றார்கள். எங்கள் தந்தையார் குங்கிலியம் பழ. சண்முகனார் அவர்களும், அடிகளாரின் அண்ணன் அவர்களும் விநோபா பாவே வாசகசாலையைத் தொடங்கினர். அடிநாள் தொட்டு அடிகளரை நான் நன்கறிவேன். அடிகளார் திருவண்ணாமலை ஆதீனத்தில் பொறுப்பேற்ற பின்னர் சிறந்த சொற்பொழிவாளராக விளங்கினார்கள். முதன்முதலில் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களும் அடிகளார் அவர்களும் நாங்கள் நடத்திய தமிழர் திருநாள் திருக்குறள் விழாவில் ஒரே மேடையில் பேசினர். அப்பொழுது ஆத்திகமும் நாத்திகமும் ஒரே மேடையில் சந்திக்கின்றன என்ற செய்தியை வியப்புடன் நாளிதழ்கள் வெளியிட்டன.

50, 60களில் அடிகளார் தமிழ்மேடைக்குத் தம் பேச்சால் புதிய வலிமை சேர்த்தார்கள். தமிழகம் முழுவதும் அடிக்கடி பயணம் செய்யும் நான் அடிகளாரின் நூற்றுக்கு மேற்பட்ட பொழிவுகளைச் செவிமடுக்கும் நல்வாய்ப்பைப் பெற்றேன். அடிகளார் நூல் பலவற்றைப் படிக்கும் பேறு பெற்றேன். அப்பொழுதெல்லாம் அடிகளார் சிந்தனைகள் அனைத்தையும் ஒருசேரத் தொகுத்துப் பார்க்க வேண்டும் என்ற வேணவா என்னுள்ளத்தில் முகிழ்த்தது. அது இன்று கைகூடுகிறது.

புகழ்மிக்க அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அடிகளார் அவர்களுக்கு டாக்டர் பட்டம் (D.Litt) வழங்கிய போது அவர்களிடம் வாழ்த்துப்பெற்று, அடிகளார் நூல் வரிசைத் திட்டத்தை விரிவாக விளக்கினேன். "நல்ல திட்டமாக இருக்கிறது. செய்யலாம்" என்று சொல்லி இசைவளித்தார்கள். அடிகளார் எழுதிய 50-க்கு மேற்பட்ட நூல்களையும் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டேன்.

தவத்திரு பொன்னம்பல அடிகளார் அவர்களை நேரில் சந்தித்து ஆசிபெற்று நூல்வரிசைத் திட்ட அறிக்கையைப் பணித்தேன். மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்த்தி இசைவு தந்தார்கள். பதிப்புக் குழுவை உருவாக்கினார்கள். கட்டுரைகளை வகைப்படுத்தும் பணி தொடங்கிற்று.

ஒவ்வொரு தொகுதியும் 400 பக்கங்கள் கொண்ட 10 தொகுதிகளாக வெளியிடும் திட்டத்தில் ஏற்கனவே முதல் மூன்று தொகுதிகள் வெளிவந்துள்ளன. இன்று நான்காவது தொகுதி வெளிவருகிறது.

  1. திருக்குறள்
  2. இலக்கியம்
  3. சமயம்
  4. சமுதாயம்
  5. பொது

என 5 நிலைகளில் இவை வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மறைமலை அடிகளுக்குப்பின் 1960-90களில் சைவ உலகில் அடிகளார் பெரும்புரட்சி செய்தவர். சைவ சமய மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தவர். சமயக் காழ்ப்பின்றி சைவசமயத்தின் கோட்பாடுகளை, தத்துவக் கூறுகளை பொதுமக்களும் உள்ளம் கொள்ளும்படி விளக்கியவர் தமிழ்மாமுனிவர். சைவ சமயத்தை நடைமுறைச் சமயமாக்கவும், சீர்திருத்தக் கருத்துக்கள் செயற்படவும் அல்லும் பகலும் அயராது உழைத்து, புதியதொரு விடியலைக் கண்டார்கள். பெரியாரும் போற்றும் வண்ணம் பெருமிதமாக வாழ்ந்தார்கள். தமிழ்நாட்டில் பெரிய சைவத்திரு மடங்கள் 18 இருந்த போதிலும் குன்றக்குடி ஆதீனமே மக்களால் பெரிதும் அறியப்பட்டிருந்தது. தமிழ் மறுமலர்ச்சியின் ஒரு கூறாகிய சமய எழுச்சி, திருமுறை எழுச்சி, திருக்குறள் இயக்கம் முதலியவற்றின் வாயிலாக, எழுச்சி மிக்க புதிய தமிழகத்தை உருவாக்கினார்கள். அடிகளார் அவர்களை

புரட்சித்துறவி

சிந்தனையாளர்

நூலாசிரியர்

சொற்பொழிவாளர்

நிறுவனர்

என ஐந்து நிலைகளில் வைத்து அடிகளாரின் பங்களிப்பை நாம் விளக்கலாம்; மதிப்பீடு செய்யலாம்.

புரட்சித்துறவி : தத்துவ தரிசனங்கள் அனைத்தையும் கற்றதோடு மார்க்சியமும் கற்றவர். சமூக இயலில் ஆழங்கால் பட்டவராதலால் தமிழ்ச் சமூக மாற்றத்திற்கு சைவ சமயம் வழியாக எவ்வாறு மேம்பாடு காணலாம் என உழைத்தார். தமிழ்வழிபாடு, ஆட்சிமொழி, பயிற்றுமொழி, இந்திஎதிர்ப்பு முதலிய அனைத்து இயக்கங்களுக்கும் தலைமையேற்று தமிழகத்திற்கு வழிகாட்டினார். அவருடைய எழுத்திலும், பேச்சிலும், புதுமைகள் பூத்துக் குலுங்கின. திருமடத் தலைவர்கள் பல்லக்கில் பவனிவந்தபோது பட்டி தொட்டிகளுக்கெல்லாம் அடிகளார் சைக்கிளில் சென்று சமயம் பரப்பினார். புரட்சித் துறவி அடிகளாரின் புரட்சிச் சிந்தனைகளை இந்த 10 தொகுதிகளிலும் நாம் காணலாம். நடைமுறைக்கு ஒத்துவராத சமயக் கருத்துக்களைத் துணிவோடு எடுத்துக்காட்டிய சமயப் புரட்சியாளர்.

சிந்தனையாளர் : தமிழ்ச் சிந்தனைக்குப் புதுவளம் சேர்த்தவர். திரு.வி.க. நெறியில் சமுதாய நோக்கில் சமயச் சிந்தனைகளை வழங்கியவர். பன்னூற் பயிற்சியும், பேரறிஞரின் நட்பும், தொடர்ந்த மேடைப்பொழிவுகளும், பட்டறிவும் அவருக்குப் பல்வேறு புதிய சிந்தனைகள் தோன்ற வாய்ப்பளித்தன. துறவியாய், தமிழறிந்த சான்றோராய் மட்டுமல்லாமல் மானுடம் மேன்மையுற வேண்டும் என்ற வேனவாவினால் எவர்க்கும் அஞ்சாமல், எதனையும் எதிர்பாராமல் புதிய சிந்தனை விதைகளைத் தூவினார்கள். அவை இன்று பூத்துக் குலுங்குகின்றன. அவரின் சிந்தனைகள் தனி நூலாகத் தொகுக்கப் பெற்றுள்ளன.

நூலாசிரியர் : பல்வேறு காலங்களில் பல்வேறு இதழ்களில் அடிகளார் எழுதிய கட்டுரைகள் நூல்வடிவம் பெற்றுள்ளன. சென்னை, அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களில் அவர் ஆற்றிய அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் அறிஞர் பெருமக்களால் பெரிதும் மதித்துப் போற்றப்படுகின்றன. சிறியனவும், பெரியனவுமாய் 54 நூல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. அவற்றில் அடிகளாரின் சிந்தனைத் தெளிவும் விளக்கும் திறமும், விரித்துரைக்கும் வகையும் நூலாசிரியர் இயல்புகளாய் அமைந்துள்ளன. ஒவ்வொரு கட்டுரையிலும் ஒவ்வொரு நூலிலும் சமூகப் பார்வையுடன் கூடிய புதிய சிந்தனை, புதிய செய்தி ஒன்று இருக்கும்.

சொற்பொழிவாளர் : 1960-90 களில் தலைசிறந்த சொற்பொழிவாளர் ஐவரைச் சுட்டினாலும், மூவரைச் சுட்டினாலும் அடிகளார் பெயர் முதல் வரிசையில் நிற்கும். புதுமைச் சிந்தனையாலும், புரட்சிக் கருத்துக்களாலும் தமிழக இளைஞர்கள் மத்தியில் பாராட்டப் பெற்றவர்.

நிறுவனர் : அருள்நெறித் திருக்கூட்டம் : அடிகளார் தொடங்கிய இந்த இயக்கம் தமிழ்ச்சைவ உலகில் புத்தார்வத்தையும், புத்துணர்ச்சியையும், புத்தெழுச்சியையும் உண்டாக்கியது. சிற்றூர்களில், பேரூர்களில் கிளைகள் முகிழ்த்தன. திருமுறைகள் வழிபாட்டில் சிறப்பிடம் பெற்றன. ஊர்தோறும், திருக்கோயில் தோறும் உழவாரப்பணி ஊக்குவிக்கப் பெற்றது. நாள்வழிபாடு ஒழுங்கு செய்யப்பெற்றது. வார வழிபாட்டுக்கூட்டம் வளர்ந்தோங்கியது.

தெய்விகப் பேரவை : தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையின் வழி தொடங்கப் பெற்ற இந்த அமைப்பு பேரியக்கமாகப் பெருஞ்செல்வாக்குப் பெற்றிருந்தது. சமய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இறைஉணர்வு நாளும் பெருக நல்லதொரு இயக்கமாக வளர்ந்தது.

திருக்குறள் பேரவை : தமிழ்மாமுனிவர் தோற்றுவித்த அமைப்புக்களில் இன்றும் இளமை குன்றாது மாநாடுகள் நடத்திவரும் பேரியக்கம் இது. தமிழறிந்தோர் எல்லோரும் திருக்குறள் அறிந்திடுதல் வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் திருக்குறள் கருத்தரங்கு நடைபெறுதல் வேண்டும். ஆண்டுதோறும் மாநில மாநாடுகள் நடத்துதல், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் திருக்குறள் மாநாடு நடத்துதல் முதலியன இதன் செயல்திட்டங்கள்.

திருக்குறளைத் தேசியநூல் எனப் பிரகடனப்படுத்த வேண்டும் என்று அடிகளார் எழுப்பிய குரல் இன்று நாடு முழுவதும் ஒலிக்கிறது.

அணிந்துரை
டாக்டர் வா.செ. குழந்தைசாமி

திருக்குறள் வகுப்பறையில் பாடமாகவும், அறிஞர்கள் மன்றில் விவாதப் பொருளாகவுமே நீண்ட காலம் இருந்து வந்திருக்கிறது. ‘வாழ்வியல் நூல்’ என்ற அணுகு முறையொடு அதை யாரும் மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் செல்லவில்லை. சைவர். வைணவர், சமணர் போன்ற ஒவ்வொரு சமயத்தினரும் கொண்டாடினாலும் அடிப்படையில் சமயச் சார்பற்ற அந்நூலின்மீது சமய அடிப்படையில் எந்தச் சமயத்தினரும் ஆழ்ந்த ஈடுபாடு காட்டவில்லை. தேவாரம் போலவோ, திவ்வியப் பிரபந்தம் போலவோ குறள் சொற்பொழிவுப் பொருளானதில்லை. சமய உலகத்தவருள், குறளை மக்கள் மன்றத்திற்கு முதன் முதலாக எடுத்துச் சென்றவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார்தான்.

பெரும்பாலும் குறளை ஒரு நீதி நூலாக மட்டுமே தமிழறிஞர்கள் பார்த்து வந்தனர். ஆங்காங்கு சில குறள்களில் அவர்கள் இலக்கிய நயம் காண்பதுண்டு. ஆனால் குறள் தமிழர் தம் தத்துவப் பார்வையைப் பிரதிபலிக்கும் வாழ்வியல் நூல் என்பது அவ்வளவாக உணரப்படவில்லை; மக்கட்கு உணர்த்தப்பட வில்லை. "திருக்குறள் சமயம் கடந்த வாழ்வியல் நூல்; தமிழ்ச் சமுதாயத்தினர் தங்கள் வாழ்க்கையை அதன் எல்லாக் கட்டங்களிலும் நெறிப்படுத்திக் கொள்ள உதவும் வழிகாட்டி - என்ற பிரகடனத்தைத் தோளில் சுமந்து கொண்டு கால் நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழகத்தில் வலம் வந்தவர்; பின்னர் இப்பணியில் ஈடுபட்டுள்ளோர்க்கு முன்னோடியாக இருந்தவர் தவத்திரு அடிகளார்தான். இயற்கையாகவே அடிகளாருக்கு அமைந்திருந்த x-கதிர் (X-ray) போன்ற பார்வை, ஒவ்வொரு பொருளிலும் உள் நுழைந்து உண்மை தேடும் அணுகுமுறை, திருக்குறளின் அடிப்படைக்கு ஏற்றதாக, ஒத்ததாக இருந்தன. எனவே குறளின் அகலமும் ஆழமும் கொண்ட கருத்துகள் விரிந்து அவர் பார்வையின் முன் பரந்த வானில் முழுப் பிரகாசத்தொடு ஒளிவீசும் தாரகைகள்போல விளங்கி நின்றன.

குறள் மக்கள் இலக்கியமாக மலரவில்லை: ஆனால் அறிஞர்கள் மத்தியில் தொடர்ந்து பயிலப்பட்டு வந்த நூல். பல உரைகள் கண்ட நூல். பல மொழிபெயர்ப்புகளைக் கொண்ட பெருமையுடைய நூல். இவ்வளவு நீண்ட கால, ஆழ்ந்த ஆய்வுக்குப் பின்னரும் பல குறள்கட்கு அடிகளார் முந்தையவர்களினின்றும் வேறுபட்ட விளக்கங்களைக் காண்கிறார். அவரது ஒவ்வொரு விளக்கமும் குறளின் வாழ்வியல் கூறுபாட்டை மேலும் கூர்மையுடைய தாக்குகிறது. குறள் வழி நிற்பதற்கு வழி காட்டுகிறது. சில சான்றுகள் பார்ப்பது பொருந்தும்.

அழுக்காறு விலக்கப்பட வேண்டிய உணர்ச்சி. அழுக்காறாமை என வள்ளுவர் ஒரு அதிகாரமே வைத்திருக்கிறார். அழுக்காறாமை எனும் பண்பை அடைதல் எவ்வண்ணம் என்னும் கேள்வியை எழுப்பி, அடிகளார் ஏறத்தாழக் கணிதச் சூத்திரம்போல் சுருக்கமாகப் பதில் சொல்கிறார்:

‘மற்றவர்கள் வாழத் தம் வாழ்க்கையின் தேவைகளைக் கூட விட்டுக் கொடுத்தல்; குறிப்பாகச் சொன்னால் ‘வாழ்தலை விட வாழ்வித்தலில் ஆர்வம் காட்டுதல்’. (21)

என்கிறார். நாம் வாழ்க்கையில் கடமைகள் பற்றிப் பல வகையான வழியில் கருத்துக் கூறுகிறோம். கடமைகளை எப்படி அணுக வேண்டும் என்பதற்கு அடிகளார் கூறும் தத்துவம்,

கடமைகளும் பொறுப்புகளும் சுமைகள் அல்ல; அவை மாந்தனை வளர்க்கும் வாயில்கள் (24).

எனவே நமது நலனுக்காகவும் நாம் கடமைகளைச் செய்ய வேண்டும்.

வள்ளுவரின் வாழ்க்கைத் துணைநலம் என்ற அதிகாரம் பற்றிப் பேசும் பொழுது ‘வாழ்க்கைத் துணை’ என்ற சொல்லே, அவர்கட்குச் சம உரிமை வேண்டும் என்ற கருத்தை உள்ளடக்கியிருக்கிறது எனப் பொருள் காண்கிறார்.

துணையாக அமைவது: எல்லா வகையாலும் தம் அளவுக்கு வளர்ந்ததாக, தம்மினும் கூட வலிமை சார்ந்ததாக அமைந்தால்தான் துணையாக அமைய முடியும். இதனால் பெண்கட்குக் கல்வி முதலிய உரிமைகளும் சம நிலைப் பாங்கும் வேண்டும் என்று கூறியதாயிற்று (32).

என்கிறார். பெண்கள் சமத்துவத்திற்கு அடிகளாரைப் பொருத்தவரை, நீண்ட வாதம் தேவைப்படவில்லை. ஆண் மகன் தனது நலன் கருதியே சமநிலையை ஏற்க வேண்டும் என்கிறார் (32).

'கற்பு’ என்பது தமிழ்ப் பண்பாட்டைப் பொருத்தவரை மிக முக்கியமான இடம் பெற்றுள்ள சொல். 'கற்புடைப் பெண்டிர் பிறர் மனம் புகார்’ என்பதில் இருந்து 'கற்பெனப்படுவது அறம்திறம்பாமை’ என்பது வரை கற்புக்கு வகுக்கப்பட்டுள்ள இலக்கண வரைவுகள் பல. ஆனால் அடிகளார்

காதலர்களிடையே நிலவ வேண்டிய மாறாத அன்பைக் கற்பு என்று சிறப்பித்துக் கூறுதல் மரபு

என்று கூறி, வாழ்வில் அது இன்றியமையாத தேவை என்பதாக்கி மேலும் அது இருவருக்கும் பொது என்பதையும் உறுதிப்படுத்தி விடுகிறார் (36).

தெய்வம் தொழாஅள்; கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

என்ற குறள் வாதத்திற்குரிய ஒன்றாக இருந்து வருகிறது. பெண்ணியவாதிகள் அதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். பெண்களை அடிமைப்படுத்தும் வாக்கு என்கிறார்கள். இக்குறளுக்கு அடிகளார் பின்வருமாறு பொருள் காண்கிறார்.

உறக்கத்தில் இல்லாளுக்கு உணர்வு இல்லை. உறக்கம் தெளிந்தவுடன், உணர்வுகள் திரும்பியவுடன் தன் தலைவனை, கணவனை நெஞ்சத்தால் தொழுது, வாழ்த்தி எழுதல் வேண்டும்.

இதனால் மறவாது நினைந்து வாழும் திறன் வளரும். இங்ஙனம் வாழும் பெண் தன் கணவருக்கும் பெய்யென வேண்டும்போது பெய்து உறுதுணையாய் அமையும் மழை போல் துணையாயமைவள். (37)

கணவனை மனத்தால் தொழும் கடமையொடு கணவனை வாழ்த்தும் பெருமையையும் கொடுத் திருக்கிறார். இங்கு பெண்களைத் தாழ்த்துவது என எதுவும் இல்லை. இயற்கைக்கு எதிரான கூறுபாடு எதுவும் இல்லை.

அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை

என்ற குறளில் ‘மறத்திற்கும் அஃதே துணை’ என்ற பகுதி பல வகைகளில் பொருள் கொள்ளப்படுகிறது. பகைமை காரணமாக உள்ளத்தில் மறம் நிகழ்ந்தும், அவன் மேல் அன்பு செய்யவும் அது நீங்கும். எனவே மறத்தை நீக்குதற்குத் துணை அன்பு என்பார் பரிமேலழகர். இதற்கு அடிகளார் கூறும்பொருள் ஆழ்ந்து எண்ணத்தக்கது.

....தீமைகளைக் கண்டும் பொறுத்துக் கொள்ளுதல் அன்பு அல்ல. பொறுத்துக் கொள்ளாது அறிவுறுத்தல், கண்டித்தல், தண்டித்தல் முதலிய அன்பிலாமை போலத் தோற்றமளிக்கும் மறச் செயல்களை மேற்கொள்ளுக. இத்தகு மறச்செயல்கள் நேரிடையான அன்பு இல்லை. ஆனால் விளைவு அன்பேயாம்”. (51)

பொதுவாகத் தீமையை ஒழிப்பதும் அன்பின் பட்டதேயாம். தனி மனிதரைக் கண்டித்து அல்லது தண்டித்துச் சமுதாயத்தைக் காப்பதும் அன்பே யாகும். ஜான் டூயி (John Dewey) என்ற அமெரிக்கத் தத்துவ அறிஞர், “நல்ல மனிதர்கள் என்பவர்கள் தீமையை எதிர்க்க வேண்டும்” என்பார். பாரத மாதாவைப் பற்றிப் பாட வந்த பாரதி,

நாவினில் வேத முடையவள் கையில்
நலந்திகழ் வாளுடையாள் - தனை
மேவினர்க் கின்னருள் செய்பவள் தீயரை
வீட்டிடு தோளுடையாள்

என்கிறார். வேதம், வாள் இரண்டும் சமமாகவே அவற்றின் பயன் பொருத்து நல்ல கருவிகளாகின்றன. இக்குறளுக்கு அடிகளாரின் மேலே கூறப்பட்டுள்ள விளக்கம் எண்ணி, எண்ணி மகிழத்தக்கது.

சிறுமையுள் நீங்கியஇன் சொல் மறுமையும்
இன்மையும் இன்பந் தரும்

என்ற குறளுக்கு விளக்கம் கூற வந்த அடிகளார்,

நல்லதுக்குத் தானே சொல்கின்றேன் என்று ஏசக் கூடாது. திட்டக் கூடாது. பழி தூற்றக் கூடாது. (65)

என்று கூறுவது நம்மில் பலருக்கும் பயன்படும் அறிவுரை.

நமது சமுதாயத்தில் நாம் பல வகை நோன்புகளைக் கடைப்பிடிக்கிறோம். உண்ணா நோன்பு, பேசா நோன்பு (மெளன விரதம்) முதலியன நாம் காண்பவை. நோன்புகட்கு அடிகளார் ஓர் அடிப்படையான விளக்கம் தருகிறார். விரும்பி நுகர்பவைகள் தேவைகளாக மாறிவிடாமல் தடுக்க, இடையிடையே நோன்புகளின் பெயரால் நுகர்வுகட்கு ஓய்வு தருதல் நல்லது. (85)

தீவினையச்சம் என்ற அதிகாரத்தில் இடம் பெற்றுள்ள குறள்கட்கு விளக்கம் கூறவந்த அடிகளார்.

“தீயவினைகள் செய்யாமையை முற்றாகத் தவிர்க்கும் பொழுது ‘ஏமாளி’, ‘கோழை’ என்ற ஏளனப் பேச்சுகள் கிடைக்கும். கவலற்க; இழிவை விரும்பாமை போலவே புகழையும் விரும்பாதிருத்தல் உயர் பண்பாகும். (116)

என்கிறார். இக்கருத்து ஆய்தற்குரியது. பொதுவாகத் தமிழ்ப் பண்பில் சிறந்து நிற்பது ‘இசைபட வாழ்வது’

புகழெனின் உயிரும் கொடுக்குவர்
பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்

என்பது பாண்டிய மன்னன் கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதியின் பிரகடனம்.

ஈதல், இசைபட வாழ்தல் அல்லாது உயிருக்குப் பயன் தருவது வேறு இல்லை என்பது வள்ளுவம்.

மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறுவித்தாம் மாய்ந்தனரே

என்பார் பெருந்தலைச் சாத்தனார். இந்தப் பின்னணியில் புகழ் விரும்பாமை ஓர் உயர் பண்பு எனக் கூறுவது எந்த அளவுக்கு ஏற்கத்தக்கது என்ற கேள்வி எழக்கூடும்.

வீடும் வேண்டா விறலினர்

என்பதில் வீடு மிகவும் விரும்பத்தக்கது என்றாலும் அதுவும் வேண்டாத வலிமை பாராட்டத்தக்கது என்பது போல, ‘பெரிதும் விரும்பத்தக்க புகழையும் விரும்பாமை’ என்று பொருள் கொள்ளலாம். ஆனால் அடிகளார் உரைகேட்கும் சாமானியக் குடிமகனுக்கு இவ்வறிவுரை எந்த அளவு பொருந்தும் என்ற கேள்வியும் எண்ணப்பட வேண்டும்.

அடிகளார் அவர்களே ‘புகழ்’ என்ற தலைப்பின் கீழ் தொடங்கும் பகுதியில் (134) புகழ்பட வாழ வேண்டிய தேவையை ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் வலியுறுத்தி இருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

இன்றைய வாழ்வில் துறவு வேடம் பூண்டு சமுதாயத்தில் நடமாடும் துறவிகளின் நடைமுறை அடிகளாருக்கு ஏற்புடைத்தாக இல்லை. அதைப் பற்றி மனம் நொந்து பின்வருமாறு கூறுகிறார்:

துறவுக்குப் புகழ் உரிய தன்று. துறவு, புகழ் பழிகளைக் கடந்தது. ஆனால் இன்றோ இல்லறத்தாரை விடத் துறவிகளே புகழ் வேட்டையாடுகின்றனர். துறவி களிடத்தில் புகழ் வேட்டை தலையெடுத்ததுடன் விளம்பர மன நிலையும் பொய்யும் நடிப்பும் மிகுந்து வளர்ந்து வருகின்றன. (134)

இந்நிலையைப் புகழ் தேடுவது என்பதை விட, பின்னர் குறிப்பிட்டிருப்பது போல ‘விளம்பர வேட்கை’ என்று கூறுவது பொருந்தும். மற்றவர்கள் கூறத் தயங்கும், கூற அஞ்சும் சில கருத்துகளை அடிகளார் அவர் தம் மனச் சான்றிற்குப் பணிந்து துணிவாகவே சமுதாயத்தின் முன் வைத்திருக்கிறார்.

திருவள்ளுவர் காட்டும் அரசு பற்றிய அத்தியாயம் மிகச் சிறப்பான ஒன்று. ஆழமான கருத்துகளைக் கொண்டது. திருவள்ளுவர் பேசுவது மன்னர் ஆட்சி பற்றியே என்றாலும் ஒரு குடியாட்சிக்கு வேண்டிய உயர் பண்புகள் அனைத்தும் கொண்ட கூறுபாடுகளுடைய ஆட்சியை வள்ளுவர் படம் பிடிக்கிறார் என்பதைத் தெளிவாக விளக்குகிறார்.


செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கு முலகு

என்ற குறளுக்கு,

நீ அரசை நீண்ட நாட்களுக்கு நடத்த வேண்டு மென்றால் தரம் குறைந்த வார்த்தைகளினாலே செவிக்குக் கேட்கும் படியாகச் சொன்னால் கூடக் கவலைப் படாதே (194)

என அடிகளார் உரை கூறியிருக்கிறார். இது இந்தக் குறளுக்கு மற்ற உரையாசிரியர்கள் கூறியிருக்கும் கருத்தில் இருந்து மாறுபடுகிறது. தனது ஆட்சியைப் பற்றி அரசன் தனது அமைச்சர் போன்றார் கூறும் கசப்பான விமர்சனங்களைப் பொறுத்துக் கொண்டு கேட்கும் பண்புடையவன் என்பதே பொதுவாகக் கூறப்படும் பொருள். அடிகளார் கூட இதே பொருளில்தான் இக்குறளை ஒரு முறைக்கு மேலாக மேற்கோள் காட்டுகிறார். ஆனால் இங்கு கூறியுள்ள விளக்கம் மட்டும் சற்று மாறுபடுகிறது. இது ஆய்வுக் குரியது.

உலகின் அன்றாட வாழ்க்கையில் நாம், ‘வினை’ என்ற சொல்லை ‘விதி’ என்று தொனிக்கும் வகையில் ‘அது அவனவன் வினை’ என்று கூறுகிறோம். இங்கு அடிகளார் ஒரு கருத்தைத் தெளிவாக எடுத்து வைக்கிறார்.

‘மீண்டும், மீண்டும் கூறுகிறேன். ஒன்றைத் தயவு செய்து மறந்து விடக்கூடாது. வினை, விதி என்று சொன்னால் ஏதோ நமது மூளையிலே ஒரு பயங்கரமான பீதி உண்டாக்கி இருக்கிறார்களே, அது போன்ற ஒரு பீதியை நாம் கொள்ளக் கூடாது. ‘வினை’ என்றாலே ‘செயல்’ என்றுதான் பொருள். ‘வினையே ஆடவர்க்கு உயிர்’ என்று தமிழ் இலக்கியம் பேசும். ஓர் ஆண் மகன் என்று சொன்னால் செயல் செய்வதுதான் அவனுக்கு இயற்கை செய்வது தான் அவனது உயிரியற்கை. செய்யாமல் இருந்தால்தான் தவறு. எனவே செயல்கள் செய்யாமல் சோம்பி இருப்பது வாழ்க்கையன்று. (207)

வாழ்க்கையின் இன்றையச் சாதனைகள், முன்னேற்றங்கள் அனைத்திற்கும் மனித முயற்சிதான் காரணம். எனவே வள்ளுவர் மனித முயற்சியைப் பலபடப் பாராட்டுகிறார். முயற்சி, ஊழையும் புறங்காணும் என்கிறார். அவனன்றி ஓரணுவும் அசையாது என்று நம்பும் சமயஉலகின் தலைமகன் ஆயினும் அடிகளார் முயற்சியின் மாண்பு பேசுவதில், மகத்துவம் கூறுவதில் வள்ளுவரொடு முழுமையாக ஒன்றிவிடுகிறார்.

சிறந்த முறையில் எண்ணி ஊக்கத்தோடு செயல்பட்டால் காரியம் கை கூடினாலும், கூடாது போனாலும் அந்த எண்ணத்திற்கும் ஊக்கத்திற்கும் பயனுண்டு. வாழ்க்கைப் போராட்டங்களில்தான் நற்பண்பு தங்கி இருக்கிறது. வெற்றியிலல்ல என்னும் அனுபவ உரை எண்ணி இன்புறத்தக்கது (242)

என்பது அடிகளார் பிரகடனம். அடிகளார் வள்ளுவரின்

தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

என்ற குறளை ஓர் இடத்திற்கும் மேலாகக் கையாளுகிறார். இக்குறளுக்குப் பொருள் கூற வந்த பரிமேலழகர்:

தம் மக்களதறிவுடைமை, பெரிய நிலத்து மன்னா நின்ற உயிர்கட் கெல்லாம் தம்மினுமினிதாம்

என்கிறார். அடிகளார் இவ்விளக்கத்தை ஏற்கவில்லை. ‘தம்மை விடத் தமது மக்கள் அறிவுடையராயிருத்தல் உலக மக்கட் கெல்லாம் இனிமை பயப்பது’ என்றே பொருள் கொள்கிறார். பலரும் இவ்வாறே பொருள் கொண்டுள்ளனர். ஆனால் அடிகளார் இக்குறளில், உலகில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் மாற்றத்தின், அந்த மாற்றத்தின் அடிப்படையாக உள்ள பரிணாம வளர்ச்சியின் வித்து வள்ளுவர் சிந்தனையில் இடம் பெற்று இருப்பதாகக் காண்கிறார்.

மேலும் அறிவு என்பது வளர்ந்து கொண்டே இருக்கக் கூடிய ஒன்று. அஃது நிலைபெற்ற தன்மையுடைய தல்ல. இன்றைய அறிவு, நேற்றைய அறிவை விட வளர்ச்சி யுடையதாக இருக்க வேண்டும். இன்றைய அறிவை விட நாளைய அறிவு வளர்ச்சியுடையதாக இருக்க வேண்டும். இது உலக நியதி. (245)

என்கிறார். மேலும்,

(i) மனித வாழ்க்கையின் வளர்ச்சிக்கும் ஏற்றத்திற்கும் அறிவு இன்றியமையாதது. (ii) அறிவு உலகியலில் யதார்த்த நடப்புக்கு ஒத்திருக்க வேண்டும். (iii) அறிவு. வளர்ச்சி அடையக் கூடியது

என்னும் மூன்று கருத்துகளும் சோஷலிச சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கைகள். அக்கருத்தினையே இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு தோன்றிய திருவள்ளுவர் குறள்பா வடிவில் எடுத்துக் காட்டியுள்ளதை எண்ணுகிறபொழுது பெருமித உணர்ச்சி மேலிடுகிறது. (245)

என்கிறார். இத்துடன் நில்லாது,

உலகம் என்றால் உயர்ந்தோர் நிகழ்கால அறிவை விடச் சென்ற கால அறிவு சிறந்தது என்பது போன்ற கருத்துகளே பரவி வருகின்றன. அதனாலேயே தமிழினம் வளர்ந்து, வீழ்ந்து இருக்கிறது. (246)

எனக் கூறி, கண்ணை மூடிக் கொண்டு பழமை பாராட்டுவோரை இடித்துரைக்கிறார் (245, 246). அடிகளார், செயலை மதிப்பவர்; செயலை ஊக்குவிப்பவர். இந்நூல் முழுவதிலும் ஆங்காங்கு செயலின் முக்கியத்துவத்தைத் தொடர்ந்து பேசுகிறார். ஓர் இடத்தில் முத்தாய்ப்பு வைத்தது போல,

அறிவு ஆற்றல் இவை பெருகி வளரும் வாயில் செயற் படுதலே யாம் (259) என்ற அருமையான தத்துவத்தை முன்வைக்கிறார். அடிகளார் சமய உலகம் தந்த சமுதாயச் சீர்திருத்தவாதி. சமுதாயப் புரட்சியாளர். தன்னம்பிக்கையின் பெருமை பேசவந்த அவர்,

தன்னுடைய அறிவையும், ஆற்றலையும் நம்பாது ஜோசியத்தை நம்புவது. இராசிப் பலனைப் படித்து மயங்குவது, ஆகிய கெட்ட பழக்கங்கள் ஊக்கக் கிளர்ச்சிக்கு எதிரானவை (250)

என்கிறார். ஜோசியம் பார்ப்பது தவறு என்று மட்டும் கூறவில்லை. ‘கெட்ட வழக்கம்’ என்கிறார். மானிட உள்ளத்தின், உளத்திண்மையின் சிறப்புப் பற்றிப் பேச வந்த அடிகளார்.

இந்த உலகத்தின் வேறுபட்ட வரலாற்று நிகழ்ச்சிகளுக்கும் இன்று நம் முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளுக்கும் மூலமும் முதலும் உள்ளமேயாகும். ஏன்? கோயிலில் கடவுளும் மனிதன் படைப்பேயாகும் (263)

என்று அறுதியிட்டுக் கூறும் அடிகளார் ஓர் அரிய அறிவுரையும் வழங்குகிறார்.

உள்ளமோர் விந்தையான பொருள்..... உள்ளத்தை ஒரு பொழுதும் ஓயவிடக்கூடாது. அதற்கு ஒழுங்காக முறை வைத்து வேலை கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும் (264)

நாம் குடியரசு நாட்டில் வாழ்கிறோம். அது வெற்றியடைய ஆட்சி பற்றிய நமது அணுகு முறை தெளிவுடையதாக இருக்க வேண்டும். ‘வாக்காளர்களுக்கு வள்ளுவரின் அறிவுரைகள்’ என்ற தலைப்பில் வள்ளுவர் கண்ட அரசு பற்றிய சில சிந்தனைகளை முன் வைக்கிறார். வாக்குச் சீட்டுப் பற்றிய தமது கருத்தைக் கூற வந்த அடிகளார்,

நமது நாட்டில் கட்சி ஆட்சி முறைதான் இருக்கிறது. ஆதலால் தனி ஒருவர் தேர்தலில் கணிப்புக் குரியர் அல்லர். கட்சியின் அமைப்பு, கட்சியின் கொள்கை, கட்சியின் தலைமை, கட்சியின் சென்ற கால வரலாறு, ஆகியனவே கவனத்திற்குரியன ஆய்வுக்குரியன (278) என்கிறார். அவருடைய இன்னொரு அறிவுரையும் கவனத்திற் கொள்ளத்தக்கது.

நாட்டை வளப்படுத்தும் முயற்சியில் ஈடுபடும் - பொழுதும், நல்லாட்சி நடத்தும் பொழுதும் சில தனி நபர்கள் பாதிக்கப்படலாம். அவர்கள் பெரியவர்களாகவும் கூட இருக்கலாம். ஆயினும் தயக்கம் கூடாது. நாட்டின் நலனுடன் சம்பந்தப்பட்ட காரிய சாதனையே குறிக்கோளாக அமைய வேண்டும். (279)

என அறுதியிட்டுக் கூறுகிறார். ஆட்சியாளர்கட்கு இது சில சமயங்களில் ஏற்படும் மயக்கம் தீர்க்கும் மருந்து. இருளசுற்றும் கை விளக்கு.

வாழ்க்கைத் துணை நல வாழ்த்து என்ற அத்தியாயத்தில் அடிகளார் ஒரு கருத்தை முன் வைக்கிறார்.

தமிழர் மரபில் கூட்டுக்குடும்பம் கிடையாது. கூட்டுக் குடும்ப முறை அயல் வழக்கு.

தி.IV.2. என்கிறார். இது ஆய்வுக்குரியது. அடிகளார் சமயப் பற்றுள்ளவர் என்பது மட்டுமன்றி ஒரு சமய நிறுவனத்தின் தலைவர். அந்தப் பீடத்தில் அமர்ந்து கொண்டும் அவர் சமயத்தால் நேர்ந்த நன்மை தீமைகளைப் பகுத்தறிவுக் கண்கொண்டு பார்க்கத் தவறவில்லை. பார்க்கும் துணிவு அவருக்கிருந்தது. ஏன் எனில், அவர் அடிப்படையில் சமுதாயப் பற்றாளர். சமுதாயத்திற்காகத் தான் சமயம் என நம்புபவர். சாதி பற்றிப் பேச வந்த அடிகளார் சாதிகளின் தோற்றத்திற்குச் சமயம் காரணமல்ல என்று கூறுவாரேனும்

வரலாற்று அடிப்படையில் நோக்கினால் நிலப் பிரபுத்துவத்தில் பிறந்து வளர்ந்தது தான் சாதி. இந்தச் சாதி முறையை நிலப் பிரபுத்துவத்திற்கு அனுசரணையாக அங்கீகரித்த பாவத்தை மதம் செய்தது உண்மை (303)

என ஒப்புகிறார். மதம் செய்த ‘பாவம்’ என்றே தயக்கமின்றிக் கூறிவிடுகிறார்.

பொதுவாக நமது புலவர்கள் குறளை ஒரு நீதி நூலாகவே பார்த்து வந்தனர். ஆங்காங்கு இலக்கியப் படைப்பாகவும் பார்த்தனர். ஆனால் அடிகளார் குறளின் முழுப் பரிமாணத்தையும் தமிழ்ச் சமுதாயத்தின்முன் பின்வருமாறு பிரகடனம் செய்கிறார்.

.....சமயச் சார்பற்றது, வள்ளுவரின் சமயம் தனித் தன்மையுடையது. சமயக் கணக்கர் வழி சாராதது. குறளியம் நாடு, மொழி, இனங்களைக் கடந்தது. குறளியத்தின் நெறி புது நெறி, பொது நெறி; குறளியம் உலகந் தழீஇயது; நம்பிக்கைக்குரியது. எளிதில் பின்பற்றத்தக்கது. இது வரையில் தோன்றியுள்ள அனைத்து நூல்களிலும் திருக்குறள் உயர்ந்தது. வையகத்தை வாழ்வாங்கு வாழ வழி நடத்துவது. குறளியத்தில் தத்துவங்கள் உண்டு. மெய்ப் பொருள் சிந்தனைகள் உண்டு. பொருளியல் கோட்பாடுகள் உண்டு. சமுதாய நெறிகள் உண்டு. துறவும் உண்டு. ஆக குறளியம் ஓர் பொதுமறை; தமிழ் மறை; குறளியத்தில் அறநெறி அடையாளம் காட்டப்படுகிறது; பொருள் நெறி போற்றப் படுகிறது. குறள் நெறியில் ஆள் வினையாளர்களும் அருளாளர்களும் சமுதாயத்தை வழிநடத்தும் உறுப்புகளாவர். குறள் நெறி நிலமிசை நீடுவாழ வழிகாட்டுகிறது. (307)

அடிகளாரின் எழுத்துகள், சொற்பொழிவுகள் ஆகியன குறள் பற்றிய மேற்கண்ட அவரது இந்தத் தீர்ப்பை நியாயப்படுத்துவனவாக, மெய்ப்பிப்பனவாக அமைந்துள்ளன. வருங்காலத் தமிழ்ச் சமுதாயம் அடிகளார் அவர்களை ‘குறள் நெறி பரப்பிய குன்றக்குடி மகா சன்னிதானம்’ என நினைவில் நிறுத்தும்.

அடிகளார் அவர்களின் குறள் பற்றிய கட்டுரைகளை, சொற்பொழிவுகளை, ஒரு நூலாக அன்றி, ஒரு நூல் வரிசையாக வெளியிட மணிவாசகர் பதிப்பகம் முன்வந்திருப்பது பாராட்டுதலுக்குரிய தமிழ்ப்பணி என்பதில் ஐயமில்லை. பயன் நிறைந்த இப்பனுவல்களைத் தமிழகம் மனமுவந்து வரவேற்கும். படித்துப் பயன்பெறும் என்பதிலும் ஐயமில்லை.

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-4.pdf
தவத்திரு
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

முன்னுரை
தவத்திரு பொன்னம்பல அடிகளார்

அருள் நெறித் தந்தை, தமிழ்மாமுனிவர் இருபதாம் நூற்றாண்டின் அப்பரடிகள், மனிதநேய மாமுனிவர், காவி உடுத்திய கார்ல் மார்க்ஸ் எனப் பலவாறு அழைக்கப்பெற்ற நம் குருமகாசந்நிதானம் அவர்கள் எழுதிய பல்வேறு நூல்கள் இன்று தொகுப்பு நூலாக வெளிவந்துள்ளது. திருக்குறளைப் பற்றிய பல்வேறு சிந்தனைகள் இன்று செறிவாகச் சீர்செய்யப்பட்டு, சிறப்புடன் நமது கரங்களில் தவழ்கின்றது. பேச்சே வாழ்க்கை, வாழ்க்கையே பேச்சு என்று உலக உபதேசியாக மட்டும் இராமல் பேசியதை வாழ்வில் நடைமுறைப்படுத்திச் சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளியில்லாத செயற்கரிய செயல்களை ஆற்றிய அருந்தவ வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

உலக உயிர்கள் நலம்பெற உபதேசித்த அப்பர் அடிகளும், சுவாமி விவேகானந்தர் பெருமானும், வள்ளலார் பெருந்தகையும் எந்த அடைப்புக் குறிகளுக்குள்ளும் தம்மைச் சிறைவைத்துக் கொள்ளவில்லை. மடங்கள் என்ற நிறுவனங்களில் தங்களைச் சிறைவைத்துக் கொள்ளாமல் சுதந்திர வானில் சுடர் விட்டுப் பிரகாசித்தார்கள். பட்டு, பீதாம்பரங்களை அணிந்துகொண்டு பல்லக்கில் பவனிவரும் - காலத்திற்கு ஒவ்வாப் பரம்பரை மரபுகளை மறுதலித்துவிட்டு, தம் கடமைக்குரிய மரபுகளை வழுவாது நிறைவேற்றி, தம் பாதங்கள் நோகப் பாலைவனத்தில் பயனம் செய்து பாமர மனிதனின் வாழ்வை வளப்படுத்தச் சிந்தித்துச் செயலாற்றிய சமய சமுதாய உலகில் முதல் திருமடத்தின் தலைவர் நம் அருள்நெறித் தந்தையேயாவார். சுவாமி விவேகானந்தர் பெருமானும், வள்ளலார் பெருந்தகையும் மடாதிபதிகளாய் இருக்கவில்லை! திருமடத்தின் பொற்கூண்டுக்குள் மரபுகள் எனும் கத்திரிகள், சுதந்திரச் சிறகுகளை வெட்டிய பொழுதும் அதையும் தாண்டி, உலக மக்களின் ஆன்ம விடுதலைக்கு வித்திட்டு, வேதம் புதுமை செய்த மடாலயத் தலைவர் தாம் நம் மகாசந்நிதானம்! வளர்ந்து வருகின்ற உலகில் பேச்சும் எழுத்தும் வாழ்க்கை வாணிகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பொழுது, சமுதாய மாற்றங்களுக்கு விதைக்கின்ற நாற்றங்காலாக அவற்றை மாற்றிக் காட்டினார்கள். உருவமும், கோலமும் அடையாளமும் மட்டும் அல்ல துறவு நெறி! எண்ணும் எண்ணதால் நினைக்கும் உள்ளத்தால், வாழும் வாழ்க்கை முறையால் வாழ்வதுதான் உண்மைத் துறவு நெறி என்று துறவிகளிடம் மிக்க கண்டிப்பாக இருந்த திருவள்ளுவப் பெருந்தகையின் குறள்நெறியை, குவலயம் எங்கும் பட்டிதொட்டி எங்கும் பரப்பும் பணியில் ஈடுபட்டு, குறள்நெறிக்கு இயக்கம் கண்ட முதல் துறவி நம் மகாசந்நிதானமே ஆவார். குறள்நெறி பற்றிய அறக் கட்டளைச் சொற்பொழிவுகள், ஆய்வுச் சிந்தனைகள், வானொலிச் சொற்பொழிவுகள், கருத்தரங்கங்களில் மலர்ந்த மலர்கள்தான் இன்று திருவள்ளுவர் சிந்தனை பற்றிய நூல் தொகுப்பாக மலர்ந்து மனம் பரப்புகின்றது.

சீனத்தில் கன்பூஷியஸ், கிரேக்கத்தில் சாக்ரட்டீசு, பிரெஞ்சு தேசத்தில் ரூஸ்ஸோ, சோவியத்தில் மார்க்சியம் புரட்சியை - மாற்றத்தை விளைவித்ததைப் போலத் தமிழ் மண்ணில் தமிழ் நிலத்தில திருவள்ளுவப் பெருமானின் சிந்தனைகள் ஏன் புரட்சியை, மாற்றத்தைத் தோற்றுவிக்கவில்லை? என்ற நியாயமான வினாவினை மகாசந்நிதானம் எழுப்புகின்றார்கள். சிந்தனையைக் கிளறும் இந்த ஆழமான வினாவிற்கு அற்புதமான விடையையும் தருகின்றார்கள். "தமிழ் நிலத்தை, தமிழ் மண்ணை ஆண்ட அரசர்கள் அருளரசர்களாக இருந்தார்கள். ‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ என்று புறநானூறு பாடும். ‘உயிரெலாம் உறைவதோர் உடம்புமாயினான்’ என்று கம்பன் தசரதனைப் பாடுவான்! முடி ஆட்சிக் காலத்தில் மன்னன் உடம்பாகவும் மக்கள் உடம்பை இயக்குகின்ற உயிராகவும் வாழுகின்ற ஆட்சிமுறை இருந்தது. புறாவிற்காகத் தன் தசையை அறுத்த சிபிச் சக்கரவர்த்தியும், கன்றை இழந்த பசுவிற்காகத் தன் மகனைத் தேர்க் காலில் இட்ட மனுநீதிச் சோழனும், அநீதி இழைக்கப்பட்ட அபலைப் பெண்ணிற்காக உயிர்நீத்த பாண்டியன் நெடுஞ்செழியனும், கொழுகொம்பின்றி வாடிய முல்லைக்குத் தேர் ஈந்த பாரி வள்ளலும், தண்தமிழுக்குத் தலைஈந்த குமணவள்ளலும் போன்ற அருளரசர்கள் ஆண்டமையால் உயிர்க்குலம் துன்பத்தைச் சந்திக்கவில்லை! நலம் செய்யாத அரசுகள் சில வாய்த்தபோதிலும் அவை மனிதகுலத்திற்குத் தீங்கு இழைக்கவில்லை. நலம் செய்யாததோடு தீங்கிழைக்கும் அரசுகளை நோக்கித்தான் புரட்சிகள் தோன்றும். இடையிடையே இருள் கவிந்தாலும் வள்ளுவர் வழித்தோன்றியவர்கள் இலக்கிய மாணவர்களாகவே அமைந்துவிட்டோம்! பரிமேலழகர் காலம் முதல் இன்றைய உரையாசிரியர்கள் வரை பாட்டுக்குப் பொருள்வரையும் உரையாசிரியர்களாக வளர்ந்துவிட்டோம். திருக்குறள் நெறிக்கு எழுத்தில் உரை கூறுகின்றோம். வாழும் வாழ்க்கையில் உரைசெய்யத் தவறிவிட்டோம்! திருவள்ளுவரை வழிபாட்டுக்குரிய பொருளாக மாற்றிவிட்டோம்!” என்று அருள்நெறித் தந்தை திருக்குறள் வாழ்வியல் நூலாக வெற்றி பெறாமைக்குக் கூறும் விளக்கம் எண்ணி எண்ணிப் போற்றத்தக்கது.

பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர்
தொகுத்துவற்றுள் எல்லாம் தலை

என்ற திருக்குறள், கொல்லாமை எனும் அதிகாரத்தில் ஏன் வைக்கப்பட்டுள்ளது? என்ற வினாவினை எழுப்புவார்கள்! ஈகையில் வைக்கப்பட்டிருக்கலாம், ஒப்புரவறிதலில் வைக்கப்பட்டிருக்கலாம், விருந்தோம்பலில் கூறி இருக்கலாம். கத்தி எடுத்துக் கொன்றால் மட்டும் கொலை என்பதன்று. பெற்ற செல்வத்தைப் பலருக்கும் பங்கிட்டுக் கொடுத்து, பலரையும் பேணி வளர்க்காமல் சோறிட்டு மருந்து முதலியன வழங்கிப் பலரையும் பேணி வளர்த்துப் பாதுகாக்காமல் சாகடித்தலும் கொலைக் குற்றமே என்பதனை உணர்த்தவே இந்தக் குறள் கொல்லாமை அதிகாரத்தில் அமைந்திருக்கின்றது என்ற அரிய விளக்கம் அருமையானது.

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்

என்னும் குறளுக்கு அறிவியல் பார்வையில் தருகின்ற விளக்கம் அற்புதமானது. ஊர் நலம் போற்றுபவனின் விளைநிலம் உரிமையால் தனி மனிதனுடையதாக இருப்பினும் நிலம் பேணப்படுவதில் பொதுவுடைமையாகப் போற்றிப் பேணப்படும். உரிமையாளர் விவசாயம் செய்ய மறந்திருந்தால்கூட ஊரார் அவருக்காக வேளாண்மை செய்து விளைச்சலை வீடு கொண்டுவந்து சேர்ப்பர் என்ற விளக்கம் பாராட்டுக்குரியது.

அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை
பொறுத்தானோ(டு) ஊர்ந்தான் இடை

என்பதற்கு, சமய ஞானியாய் இருந்துகொண்டு கூறும் விளக்கம் அடிகள் பெருமான் சமய உலகின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட புரட்சித்துறவி என்பதனைப் பறைசாற்றுகின்றது.

மரபு வழிப்பட்ட சமயவாதிகள் வறுமைக்கும் ஏழ்மைக்கும் காரணமான பழியை, பரம்பொருள் மீதும் விதி - ஊழின் மீதும் போட்டுத் தப்பித்துக் கொள்ளும் பொழுது, ‘ஊழையும் உப்பக்கம் காண்பர்’ என்று வாழ்க்கை வழித்தடத்தில் உரை கூறிய வள்ளல் பெருமான்தாம் நம் அடிகள் பெருந்தகை!

அறிவு என்பது செய்திகளின் தொகுப்பு அல்ல! நூல்களின் இருப்பிடம் அல்ல. கற்றதைத் திரும்ப, கூறியது கூறும் கிள்ளிப்பிள்ளை மொழி அல்ல! துன்ப நீக்கத்திற்குரிய மருந்து! நேற்றையத் துன்பத்தை இன்றைய இன்பமாக மாற்ற உதவும் கருவிதாம் அறிவு என்ற விளக்கம் புதுமையானது; உலகம் முழுமைக்கும் பொதுமையானது.

வள்ளுவ மருத்துவர் உயிரைத் தேடுகின்றார். வாழ்பவனை எல்லாம் அவர் உயிர் உள்ளவனாக ஏற்றுக் கொள்ளவில்லை. இடுகாட்டில் எரியும் பிணங்கள்! நடுவிட்டில் நடைபோடும் பிணங்கள் என்று கூறுகின்றார். சுவாசிப்பதாலும் இதயம் துடிப்பதாலும் உடல் இயங்குவதாலும் உயிர் இருப்பதாக ஒத்துக் கொள்வதில்லை. இயந்திரங்களும் தான் இயக்கினால் இயங்குகின்றன. கடிகாரமும் பெண்டுலம் அசைந்தால் ஓடுகின்றது. இயந்திர மனிதனும்தான் இன்று இயங்குகின்றான். இதயம் இல்லா மனிதனும் இயங்குகின்றான். எவன் இதயத்தில் அன்பு துடிக்கின்றதோ அவனே உயிர்த் துடிப்புடைய மனிதன் என்று வகைப்படுத்துவது இதுவரை உலகம் எண்ணிப் பாராத சிந்தனை ஆகும்.

நட்பு, காதல், ஒப்புரவில் இன்றைய இருபதாம் நூற்றாண்டின் நிறைவுப் பகுதியில் காணுகின்ற வாழ்க்கைப் போக்கோடு எண்ணிப் புதிய சிந்தனையைத் தந்திருப்பது எண்ணி எண்ணிப் போற்றத்தக்கது.

குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்

என்ற குறள் நெறிக்கு, பொது வாழ்வில் - பொது நன்மைக்குப் போராடும் பொழுது மான அவமானம் பார்க்கத் தேவை இல்லை என்ற விளக்கம் சிந்திக்கத்தக்கது. இந்தக் குறளுக்கு வாழும் வாழ்க்கையால் உரை சொன்னவர் பேரறிஞர் அண்ணா என்பதைச் சுட்டிக்காட்டி இருப்பது இளைய தலைமுறைக்கு வழிகாட்டுவதாகும்.

வள்ளுவம் கடவுளை நம்புகின்றது. அது ஆணும் அல்ல; பெண்ணும் அல்ல. வள்ளுவம் காட்டும் கடவுளுக்குக் கோபுரங்கள் - கோட்டைகள் இல்லை. வள்ளுவம் காட்டும் கடவுளுக்குக் கணக்கும் இல்லை; வழக்கும் இல்லை; அது பேரறிவு! தூய்மையான அறிவு! குணங்களின் திரு உரு! இன்பத்தின் திரு உரு! அன்பின் திரு உரு! அறத்தின் திரு உரு! என்ற வரிகள் உண்மையான, போலித்தனம் இல்லாத சமய உலகை அடையாளம் காட்டுகின்றது.

திருக்குறள் ஒரு சமயத்திற்காகத் தோன்றிய நூல் அன்று! அது சமயச் சார்பற்ற நூல். ஆயினும் மனித குலத்தைச் சிந்தனையில் - அறிவியலில் - வாழ்க்கையில் வழிநடத்தும் நூல். திருக்குறள் கொள்கை சமயமாக உருப்பெறுகின்றது. அறிவின் வழிப்படும் பொழுது அன்பு கருக்கொண்டு அருள் உருப்பெறுகின்றது என்ற வைர வரிகள் சமயம் உறைந்துள்ள இடத்தை நமக்கு அடையாளம் காட்டுகின்றது.

முறை செய்து காப்பாற்றும் மன்னவனுக்குச் செவிகைப்பச் சொற் பொறுக்கும் பண்பும் அறிவுறுத்தும் நல் ஆலோசகர்களும் தேவை என்கிறார். உயிர்க்குலம் துன்புறும் போரை, விரும்பாத போக்கும் எதிர்பாராத தாக்குதலும் எதிரிகளால் ஏற்படலாம். எனவே நல்ல படை பலமும் தேவை என்கிறார்.

ஆண்டவன் வரம் கொடுத்தாலும் பணப் பெட்டியின் மீது பித்துக்கொண்ட பூசாரிப் புரோகிதர்கள் எனும் நந்திகள் சமய வாழ்க்கையைச் சடங்குத் தன்மையுடையதாக மாற்ற வல்லார்க்குச் சாமரம் வீசுகின்றனர்.

‘நியாயம் வழங்க வேண்டிய அரசியல், வாய்ப்புடையார் வாயிலில் காத்துக்கிடக்கும் சேவகத் தொழிலாக மாறிவிட்டது. எங்கு நாட்டின் நீதியியலை முறைப்படுத்தி நிர்வகிக்கின்ற அரசு தோன்றவில்லையோ அங்கு அரசை ஆட்டிப்படைக்கின்ற தனியார் நிதிக் குவியல் தோன்றும்’ என்ற சிந்தனைக்குரிய வாக்கு நினைவிற்கொள்ளத்தக்கது. திருவள்ளுவ நெறிவழி மனிதகுலத்தை மேம்படுத்துவதற்கு அக வாழ்விலும் புற வாழ்விலும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கக் கூறுகளை ஆழமாகச் சிந்தித்து. அற்புதமாக நமது மகாசந்நிதானம் தமிழ்ச் சமுதாயத்திடம் ஒப்படைத் துள்ளார்கள். இந்தச் சிந்தனைப் பெட்டகத்தைச் செயலாக்க வேண்டியது நமது கடப்பாடு.

பல குழுக்களாக விரவிக்கிடக்கின்ற தமிழ் இனத்தை ஒருமைப்படுத்த திருவள்ளுவப் பெருமான் முயன்றதைப் போல, பல பொழிவுகளாக விரவிக்கிடந்த கருத்துப் பெட்டகங்களைத் தொகுப்பு நூலாக மாற்றும் முயற்சியில் மணிவாசகர் பதிப்பகம் வெற்றி கண்டுள்ளது. பதிப்புக் கலையில் முத்திரை பதித்த வித்தகர் மெய்யப்பன், இதிலும் முத்திரை பதித்துள்ளார்.

இந்நூல் எழுத்துக் கருக்கொண்ட நாள் முதல் இன்றுவரை அல்லும் பகலும் அயராது உழைத்த பெருமை நம் ஆதீனக் கவிஞர் மரு. பரமகுருவைச் சாரும். பல வகைகளில் இந்நூல் தொகுக்கும் களத்தில் கடமை ஆற்றிய இராமசாமி தமிழ்க் கல்லூரி முதல்வர் தெ. முருகசாமி, பேராசிரியர் நா. சுப்பிரமணியம், ஆதீனப் புலவர் க. கதிரேசன், எழுத்துச் செம்மல் பெரியபெருமாள் போன்றவர்களின் பணிகள் அளப்பரியன; எண்ணி எண்ணிப் போற்றும் கடப்பாட்டுக்குரியன.

இந்நூலுக்கு அரியதொரு அணிந்துரை நல்கிய முனைவர் வா.செ. குழந்தைசாமி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

இவ்வரிய நூலின் கருத்துக்களை, சிந்தனைப் பெட்டகங்களைச் செயலாக்க மகாசந்நிதானம் திருநாமத்தைச் சிந்தித்துப் பயணம் செய்வோம்!

இந்நூலை வாசிப்பதோடு நிறுத்திவிடாது அருள்நெறித் தந்தையின் சிந்தனைகளைச் செயலாக்குவதே, இந்நூலுக்கு அணிவிக்கின்ற பொன் அணியாகும். அருள் நெறித் தந்தையின் கனவு, நனவாகக் கற்றவழியில் கடமை ஆற்றுவோம்.