குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-4/அருளும் துறவும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

12
அருளும் - துறவும்

மனிதன் பெறக்கூடிய இணையற்ற செல்வம், அருளுடைமையாம். அதாவது, மகவெனப் பல்லுயிரையும் ஒக்கப் பார்த்து ஒழுகும் அருளொழுக்கமாகும். வார்த்தைகளால் எளிமை போலத் தோன்றினும் அருளுடையராதல் அரிதினும் அரிது. எளிய சாதனமாகிய அன்பு நெறியிலேயே இன்னமும் மனிதன் தட்டுத் தடுமாறிக் கொண்டேயிருக்கிறான். அதாவது தனக்குப் பயன்படுவோருக்குத் தானும் மீண்டும் அவ்வண்ணமே பயன்படவேண்டும் என்ற உணர்வின்றி, அடித்தும், கெடுத்தும், எடுத்தும் விலங்கினைப் போலத் தின்று வாழ்ந்து கொண்டிருக்கிறான். அன்பிலும் முதிர்ந்தது அருள். அன்பு தாய்; அஃதீன்ற சேய் அருள் என்பர் வள்ளுவர். இந்த உலகில் யார்மாட்டும் எதன் மாட்டும் அன்புகாட்டி வாழ்வித்து வாழும் உணர்ச்சியே அருள் உணர்ச்சி. அருள் உணர்ச்சி உள்ள இடத்தில் தன்னலம் இல்லை; தன்னயம் இல்லை; தன் நுகர்வு இல்லை. அருளுணர்ச்சி யுடையாருக்கு இன்பமென்பதே பிறர் இன்புறுவதேயாகும். இத்தகு அருள் உணர்வு திடீரென ஒருநாளில் தோன்றி விடுவதில்லை; அதற்கு இடையறாத பயிற்சி தேவை.

அருள் உணர்வுக்கு இடர் விளைவிப்பது மனிதனுடைய புலன் உணர்வு. எதையாவது ஒன்றைத் துய்த்து மகிழ வேண்டுமென்ற அவா, புலன்களினுடைய இயற்கை. அவ்வியற்கையுணர்வு, முதலில் பெரும்பாலும் தான் துய்த்து மகிழ வேண்டுமென்றே தொடங்கும். அவ்வியற்கையுணர்வைத் தடுத்து மடை மாற்றிப் பிறரைத் துய்ப்பிக்கச் செய்தல் மூலம் தான் துய்த்ததாகவே கருதி மகிழ்கின்ற உணர்வைத் தோற்றுவித்து வளர்த்துக் கொள்ளவேண்டும். இங்ஙனம் புலன் நுகர்வைப் பக்குவப்படுத்திப் பழக்கும் பொழுது ஒன்றைவிட்டு ஒன்றைப் பக்குவப்படுத்துவதில் பயனில்லை. அதனால், ஆன்ம சக்தியே வீணாகும். ஒரு விடுபற்றி யெரியும் பொழுது ஒரு பக்கத்தில் மட்டும் தண்ணீர் விட்டு அனைத்து என்ன பயன்? ஆதலால், ஐம்புலன் நுகர்வு வேட்கையைத் தன்வழிப்படுத்திக் கொள்ளாமல் பிறர் வழிப்படுத்தும் பொழுது, துறவு கால் கொள்கிறது. தொண்டுணர்வு கருக்கொள்கிறது.

துறவு, மிகமிக உயர்ந்த இயல்புடையது. துறவு நெறி வெளிப்படுவது தோற்றத்தில் அல்ல. உள்ளடங்கிக் கிடக்கும் உள் உணர்விலேயே துறவு முகிழ்க்க வேண்டும். என்னுடையதென்று யாதொன்றும் வைத்துக் கொள்ளாதவரும் இஃதன்றி முடியாது என்ற வாழ்க்கைப் போக்கு இல்லாதவருமே உண்மைத் துறவியாக வாழ முடியும்.

‘உற்ற உறவினர்க்கு உடம்பும் மிகையே’

என்பது ஆன்றோர் வாக்கு. இத்தகு துறவுநெறி இந்த வையகத்தில் எங்கிருக்கிறது? என்று கேட்கக் கூடிய நிலையிலிருக்கிறது. ஒருவகையினர், எண்ணில் செவ்வத்திற்குரிய துறவிகளாக நம்மிடையே வாழ்கின்றனர். மற்றொரு வகையினர், வயிற்றுப் பிழைப்புக்கு வேறு வழியின்றிப் பிச்சை எடுக்கும் திருக்கோலமாகத் துறவுக் கோலம் பூண்டு நடமாடுகின்றனர். அவர்களிடத்துத் தோற்றத்திலேயே துறவு காணப்படுகிறது. முதல் வகையினரின் வாழ்க்கை முறையில் அந்த வாடையும் இல்லை. இருந்திருந்தால், துறவி கைப்பட்ட பொருள் இந்த நாட்டு மக்களது வாழ்க்கைக்கு உணவாக கல்வியாக, மருந்தாகப் பயன்பட்டிருக்கும். அப்படிப் பயன்படாமல் வீணான ஆடம்பரங்களுக்கே அப்பொருள் பயன்பட்டு, இழக்க வேண்டிய ‘யான்’, ‘எனது’ என்ற இரண்டும் ஏற்றமுடன் கொலுவிருப்பதைக் கண்டால், வள்ளுவர் தப்பிப் பிழைக்க விடுவாரோ?

‘வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று’.

273

என்ற திருக்குறள் சிந்தனைக்குரியது.

துறவு என்பது எங்கோ இருக்க வேண்டியவர்களுக்கு இருக்கின்ற இயல்பல்ல. சராசரி ஒவ்வொரு மனிதனுக்கும் கூடத் துறவுணர்வு தேவை. காதல் வாழ்க்கைக்கும் கூட ஓரளவு துறவு தேவை. காதலன் காதலி மகிழ்வுக்காகச் சிலவற்றைத் துறக்கிறான். காதலி தாயான பின்பு தனது குழந்தைக்காகச் சிலவற்றைத் துறக்கிறாள். இங்ஙனம் வேண்டியாங்கு வேண்டியவாறு துறவு மனப்பான்மை தலைகாட்டாத குடும்ப வாழ்க்கை இன்பம் தராது. ஊரொடு தழுவி வாழும் இயல்பற்ற குடும்ப வாழ்க்கை இன்பம் பெருக்காது. துன்பமே சூழும். குடிகளைத் தழுவாத கோயில்கள் திருவருள் திருவோலக்கம் இருக்கும் கோயில்கள் அல்ல. சைத்தான் குடியிருக்கும் கோயில்களேயாகும். மன்பதைகளைத் தழுவிக் காக்காத மடங்கள் மடங்களல்ல. புலனுகர்வைத் திசைமாற்றி விடுதலில் துறவும், துறவில் அருளும் தோன்றுகிறது. இந்த அருளுணர்வே வையகத்தை வாழ்விக்கும் அமுது.