குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-4/குறளியம் முன்னுரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

9
குறளியம் முன்னுரை

“குறள்” திருக்குறளைக் குறிக்கும் என்பதற்கு விளக்கம் தேவையில்லை. “இயம்” என்பதற்கு “இயக்கம்” அல்லது “கருவி” என்று பொருள் கொள்ளலாம். கருவி இயக்கத்தின் வழி விளக்கமுறுவது. ஆதலால் இயக்கம் பற்றி ஆராய்ந்தாலே கருவியின் இயல்பும் புலப்படும். திருக்குறள் தோன்றிய பிறகு, தமிழக வரலாற்றை முன்னும் பின்னும் இயக்கும் ஆற்றலை, திருக்குறள் தனக்கே உரிமையாகக் கொண்டது. திருக்குறள் தோன்றிய பிறகு தோன்றிய தமிழகத்து அறிஞர்களின் கருத்து ஊற்றத்திற்கு, சிந்தனைக்குத் துணையாகத் திருக்குறளே அமைந்து விளங்கியிருக்கிறது. திருக்குறளைத் தழுவாத அறிஞர்கள் நீரினின்றும் பிரிந்த மீனைப்போல் சமுதாய வரலாற்றின் நினைவில் இல்லாமலே மறைந்து போயினர். ஒரோ வழி ஒரு சிலர் திருக்குறளின் முகவரியில் ஒவ்வாத கருத்துக்களைச் சொல்லியும் ஊடுருவல் செய்துள்ளனர். ஆயினும் திருக்குறள் தனித் தன்மையுடையதாக இன்றும் விளங்குகிறது.

திருக்குறள் ஓர் இலக்கியம்; சமயநூல்; சமயச் சார்பற்ற நூல்; நீதி நூல் என்றெல்லாம் பலபடப் பாராட்டுவர். இப்பாராட்டுரைகள் புனைந்துரையல்ல; ஆனால் முழுமையான திறனாய்வுமல்ல. மனித குலத்தின் வாழ்க்கை அனைத்தும் முறையாகத் தழுவப் பெற்றுச் செய்யப்பெற்ற ஒரு முழுநூல் திருக்குறள். திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் ஒரு புதிய சமுதாய வாழ்வியலை அறிமுகப் படுத்தியுள்ளார். அது திருக்குறள் தோன்றிய காலத்தில் நிலவிய பல்வேறு வாழ்வியல் நெறிகளை மறுத்திருக்கிறது. சில நெறிகளை உடன்பட்டும் இருக்கிறது. ஆதலால் திருக்குறளே ஒரு வாழ்வியல் நூலாக, மக்கட் சமுதாயத்தின் வாழ்வை இயக்கும் கருவியாக, மக்களின் வாழ்வியக்கமாக இருந்தது-இருக்க வேண்டியது என்ற அடிப்படையில்தான் குறளியம் என்ற இயக்கம் தோன்றியுள்ளது. அவ்வியக்கத்தின் குரலாக ‘குறளியம்’ ஒலிக்க இருக்கிறது; மனித குலத்தின் இயற்கையைக் குறளியத்தின் வழி இயக்குவதென்பது தலையாய நோக்கம். குறளியம் அனைத்து வாழ்வியல் நெறிகளையும் ஆராயும்; ஒப்புநோக்கும்; ஏற்பனவற்றை ஏற்கும்; மறுப்பனவற்றை மறுக்கும். குறளியத்துக்கு, திருக்குறளை வைதிகமாக்குவது நோக்கமன்று. அங்ஙனம் செய்வதைத் திருவள்ளுவரும் உடன்படார். ‘அறிதோறறியாமை’ என்பது வள்ளுவம். குறளியத்துக்குப் பின் தோன்றியவைகளிலும் உண்மையில் குறளியத்தைவிடச் சிறந்தவையிருக்குமானால் அவற்றை ஏற்பதில் குறளியம் மகிழ்ச்சியுறும். ஏன்? அந்தக் கருத்துத் தோன்றுமளவுக்குக் குறளியம் அவர்களை அழைத்து வந்திருக்கிறது என்பது பொருள். இது குறளியம் தொடர்ந்து திருக்குறளை வாழ்வியலாக்கும் வழிவகைகளை ஆராயும்.

இன்று நாவலந் தீவில் (இந்திய நாட்டில்) பல்வேறு வாழ்வியற் சட்டங்கள் தோன்றியுள்ளன. அதுபோலவே மனிதகுல வாழ்க்கையை வழிநடத்துவனவாகப் பல்வேறு நூல்களும் விளங்குகின்றன. மார்க்சீயமும் இன்று இந்த வரிசையில் அணிபெற அமைந்துள்ளது. இச்சூழ்நிலையில் குறளியத்தை மையமாகக் கொண்ட வாழ்வியல் எது? என்று அறிவது வையகத்திற்கு மிகுதியும் பயன்தரும்.

இன்றைய வாழ்வியல் உலகம் தழீஇயதாக வளர்ந்து வருகிறது. ஆயினும் முரண்பாடுகள் நீங்கியபாடில்லை. எங்கும் காழ்ப்பும் கலகமும் தலைவிரித்தாடுகின்றன. எல்லா நாடுகளும் படைகளுக்குரிய செலவைக் கூட்டிக் கொண்டே போகின்றன. சிறைக் கூடங்களும் எண்ணிக்கையில் பெருகி வளர்கின்றன. இந்தச் சூழ்நிலையில் குறளியம் வையகத்திற்கு எத்தகைய வழியைக் காட்டுகிறது? குறளியம் காட்டும் வழி சமயச் சார்புடையதா? இல்லை, சமயச் சார்பற்றது. வள்ளுவத்தின் சமயம் தனித்தன்மையுடையது; சமயக் கணக்கர் வழிசாராதது. குறளியம் நாடு, மொழி, இனங்களைக் கடந்தது. குறளியத்தின் நெறி புது நெறி; பொதுநெறி. குறளியம் உலகந்தழீஇயது; நம்பிக்கைக்குரியது; எளிதில் பின்பற்றத்தக்கது. இதுவரையில் தோன்றியுள்ள அனைத்து நூல்களிலும் திருக்குறள் உயர்ந்தது; வையகத்தை வாழ்வாங்கு வாழ வழிநடத்துவது. குறளியத்தில் தத்துவங்கள் உண்டு; மெய்ப்பொருள் சிந்தனைகள் உண்டு; பொருளியல் கோட்பாடுகள் உண்டு; சமுதாய நெறிகள் உண்டு; அரசியல் கொள்கைகள் உண்டு; காதல் உண்டு; துறவும் உண்டு; ஆக, குறளியம் ஒரு பொது மறை; தமிழ்மறை: குறளியத்தில் அறநெறி அடையாளம் காட்டப்படுகிறது; பொருள்நெறி போற்றப்படுகிறது. குறள்நெறியில் ஆள்வினையாளர்களும் அருளாளர்களும் சமுதாயத்தை வழி நடத்தும் உறுப்புகளாவார். குறள்நெறி நிலமிசை நீடுவாழ வழி காட்டுகிறது; உயர்ந்த உலகத்தையும் உய்த்து உணர்த்துகிறது. குறளியத்தில் அரசியல் உண்டு; ஆனால் அரசியல் வாழ்க்கை ஒரு பகுதியாக உணர்த்தப்படுகிறது. குறளியத்தில் நீதி வற்புறுத்தப்படுகிறது. குறளியம் உணர்த்தும் நீதி மிக்குயர்ந்தது; பகுதியின் பாற்பட்டொழுகாதது. குறளியம் மனித உலகத்தை அச்சத்திலிருந்து விடுவிக்கிறது. குறளியம் கடவுளை ஒத்துக் கொள்கிறது. ஆனால் பொய்த் தேவர்களை மறுக்கிறது. இது குறளியத்தின் முன்னுரை.

தமிழகத்தின் வாழ்வியக்கமாகக் குறளியம் இடம் பெற்றாக வேண்டும். தமிழினத்தின் வாழ்வியலாகக் குறளியம் இடம் பெறும் பொழுதுதான் சாதி வேற்றுமைகள் நீங்கும். வாழ்க்கை வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்கும். மனித உலகத்தின் முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாக இருக்கும் வைதீகக் கொள்கைகள் நீங்கும். நாளையும் கோளையும் வழிபடும் மூடப்பழக்கங்கள் தொலையும். மருட்டுகின்ற மதத் தலைவர்களின் கொட்டம் ஒடுங்கும். பொய்யும் கற்பனையும் போயகலும்; வாய்மை வந்தடையும். இத்தகு குறளியத்தினுடைய அருமையை அறிந்த ஆன்றோர்கள் ஏற்றுப் போற்றியுள்ளனர். மெய்கண்ட நூல் "மெய்வைத்த சொல்" என்று போற்றியது. சங்க காலம் 'அறம்' என்று போற்றியது. புதிய சிந்தனையாளன் ஆல்பர்ட் சுவைட்சர், "திருக்குறள் போன்ற நீதி நூல் உலக இலக்கியத்திலேயே வேறு இல்லையென்று கூறலாம்” என்று போற்றியுள்ளார்.

தமிழினம் தனது தனித்தன்மையைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடிக் கொண்டிருக்கிறது. தமிழினம் தனது தனித்தன்மையைப் பாதகாத்துக் கொள்ளவும், உலகம் தழுவி வாழவும் அதன் வாழ்வியல் வரிச்சட்டமாகக் குறளியமே இடம் பெற வேண்டும். இந்த நோக்கம் நிறைவேறுமானால் குறளியம் வெற்றி பெற்றதாக அமையும். என்றைக்கு மனித குலம் அறிவறிந்த ஆள்வினையுடையதாக, அன்புற்றமர்ந்த வழக்கமுடையதாக, அருளாளும் நெஞ்சினதாக ஒப்புரவு நெறி நின்று ஒழுகுவதாக நயத்தக்க நாகரிகமுடையதாக வாழ்கின்றதோ அன்றே குறளியம் உண்மையில் வெற்றி பெற்றதாக அமையும். இந்நெடிய பாதையில் குறளியம் சிறப்பாகத் தமிழகத்தை வழிநடத்தும்; பொதுவாக உலகியலை வழிநடத்தும்; கற்றல், கேட்டல் உடைய பெரியோர்களும் குறளிய ஆர்வலர்களும் தொடர்ந்து வரும்படி அழைக்கின்றோம்.