குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-4/குறள் நூறு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

16
குறள் நூறு

1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

1

எழுத்துக்களுக்கு அகர முதலாதல் போல, இந்த உலகத்திற்கு இறைவன் முதலாவான்.

பொருள்

முதல் என்பது இறைவன் உலகத்திற்குக் காரணம் என்பதும் முதல்வன் என்பதும் கருத்து.

2. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

3

நினைப்பவர் மனத்தின்கண் கோயில் கொண்டருளும் இறைவனின் திருவடிகளை நினைத்து தொழுபவர் நிலத்தின் கண் நீண்ட காலம் வாழ்வர்.

பொருள்

வழிபாட்டின் பயன் மறுமை நலன் மட்டுமன்று; இம்மை நலனும் ஆம்.

3. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல்.

4

இறைவன் வேண்டுதலும் வேண்டாமையும் இல்லாதவன்; அவன் திருவடியை நினைப்பவர்க்கு எக்காலத்திலும் துன்பம் இல்லை.

பொருள்

துன்பத்திற்குக் காரணம் விருப்பும் வெறுப்புமே. விருப்பு வெறுப்பற்ற கடவுளை நினைப்பதால் விருப்பு வெறுப்புகள் நீங்கி விடுகின்றன. துன்பத்திற்குரிய காரணம் நீங்கி விடுவதால் துன்பமில்லை.

4. நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு.

20

தண்ணீரின்றி உலகியல் இல்லை. வான் மழையின்றித் தண்ணீரில்லை. தண்ணீரில்லாத வழி ஒழுக்கமும் இல்லை.

பொருள்

உயிர்களின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் தண்ணீர் இன்றியமையாதது: தண்ணீரைத் தரும் வான்மழை பொய்ப்பின் வளம் குன்றும்; அதனால் ஒழுக்கம் கெடும்.


5. குணம்என்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

29

தீய இயல்புகளைக் கடந்து வளர்ந்து நற்குணங்களைப் பெற்று உயர்ந்து நிற்போர், வெகுளியை ஒரு நொடியும் தம் நெஞ்சத்தில் நிலைபெறச் செய்யமாட்டார். பொருள்

வெகுளியுடையவர் நற்குணமுடைய சான்றோரல்லர். இதனால், சாபம் வழங்குகின்ற முனிவர்கள் சான்றோர் அல்லர் என்பது பெறப்படும்.

6. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.

34

மனத்தின்கண் தூய்மை யுடையவராக வாழ்தலே அறம். மனத்தின்கண் தூய்மையின்றிச் செய்யப் பெறும் எவையும் அறமாகா. அவை ஆரவாரத் தன்மையுடையன.

பொருள்

மனத்தின் கண் தூய்மை காத்தலே அறம் அஃதின்றிச் செய்யப் பெறுவன யாவும் அறமாகா.

7. அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.

49

அறம் என்று சிறப்பிக்கத் தக்கது இல்வாழ்க்கையே. அந்த இல்வாழ்க்கையும் பிறரால் பழிக்கத் தக்கதாக இல்லாதிருப்பின் மேலும் நல்லது.

பொருள்

இல்லறம், பொதுவாக அறமே. ஆயினும் அது பிறர் பழிக்கத் தக்கவாறில்லாமல் அமைந்தால்தான் நல்லது.

8. தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

56

கற்பில் தன்னைக் காத்துக் - கொள்பவளும், தன் கணவனைக் கற்பு நிலையினின்று விழாதிருக்கும்படிப் பேணுபவளும் புகழைப் பேணுபவளும், சோர்விலாது பணிகளை மேற் கொள்பவளுமே சிறந்த பெண்.

பொருள்

சிறந்த வாழ்க்கைத் துணை, தன் கணவனின் ஒழுக்கச் சிறப்பிற்கும் துணையாயிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

9. பெறும்அவற்றுள் யாம்அறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற.

61

பெறக் தகுந்த பேறுகளில் அறிவார்ந்த உணர்விற் பெறும் மக்கட்பேறே சிறந்தது. மற்றப் பேறுகள் நம்மால் மதிக்கத் தக்கன அல்ல.

பொருள்

நல்லறிவு உணர்விற்பெறும் மக்கட்பேறின்றி, பெறக்கூடிய பெரும் பேறு வேறெதுமில்லை.

10. அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போ டியைந்த தொடர்பு.

73

ஆருயிருக்கு, எலும்பொடு கூடிய உடல் இயைத் திருப்பது, அன்போடு பொருந்தி வாழும் வழக்கத்திற்கே.

பொருள்

அன்பு, உயிர்க்குப் புதியதன்று; அன்பு செய்தல் உயிரின் வழக்கம். அவ்வழக்கத்தைச் செயல் முறைப்படுத்தவே உடம் போடு உயிர் கூடிற்று.

11. வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.

85

விருந்தோம்பி எஞ்சியதை உண்ணும் இயல்புடையவன், நிலத்திற்கு விதையும் விதைக்கவேண்டுமோ?

பொருள்

விருந்தோம்பி எஞ்சியதை உண்ணும் இயல்புடையவன் விளைநிலத்தின் விளைவு, பொது நலத்திற்குப் பயன்படுவதால், அவன் ஒரு கால், அந்த நிலத்தில் விதைக்கத் தவறினாலும் மற்றவர்கள் விதைக்க முன் வருவர்.

12. பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.

95

வணக்கமுடைமையும், இன்சொல் வழங்கும் இயல்புமே ஒருவனுக்குச் சிறந்த அணிகள். பிற அணிகள் அணிகளாகா!

பொருள்

தம்மினும் தாழ்ந்தவரிடத்தும் பணிவுடையவராய்ப் பழகுவதும், எப்போதும் இன்சொல் வழங்குதலும் வேண்டும்.

13. கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

109

முன்பு உதவிய ஒருவர், தமக்குக் கொலையினை ஒத்த துன்பம் செய்தாராயினும், அவர் முன்பு செய்த ஒரு நன்மையினை எண்ணும் பொழுது பின் செய்த அக் கொடுந் துன்பம் கெடும்.

பொருள்

பழகிய ஒருவர் இன்று கொலையினை ஒத்த துன்பம் செய்தாலும், அவருக்கு எதிர்த் துன்பம் தராமல் அவர் முன்னொருகால் செய்த நன்மையினை எண்ணி அமைக! அவ்வழி, நன்றி மறத்தல் என்னும் குற்றம் வராதிருக்கும். எதிர்த்துன்பம் செய்யாமையால் அவரும் மனம் மாறித் துன்பம் செய்தலைத் தவிர்ப்பர்.

தி.ιν.23.

14. சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.

118

நிறுவைக்கு முன் சமநிலையில் நின்று, பொருள்களை இட்டும் நிறுக்கும் பொழுது, பொருளின் அளவை வரையறுத்துக் காட்டும் துலாக்கோல் போல் ஒரு பக்கமாகச் சாராமல் நடுநிற்றலே சான்றோர்க்கு அழகு.

பொருள்

கருத்தறிவதற்கு முன்பு சமநிலையில் நின்று, இரு பாலாரின் கருத்தினை அறிந்த பிறகு, அக்கருத்தின் தரத்திற்கு ஏற்றவாறு நிற்பதே சான்றோர்க்கு அழகு. கருத்தின் தரத்தைத் தேரும் பொழுது ஒருபாற் சாய்தற்குக் காரணமாகிய இனம், மொழி, சமயம், கட்சி, சாதி, நட்பு ஆகியன வழிசார்தல் கூடாது.

15. எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

325

பெருமை பாராட்டிக் கொள்ளாமல் அடக்கமாக நடந்து கொள்வது எல்லார்க்குமே நல்லது; அவ்வாறு அடங்கி ஒழுகுதல் செல்வர்க்கு மேலும் ஒரு செல்வம் ஆகும்!

பொருள்

“செல்வம் உடையம்யாம்” என்னும் செருக்கு, பெருமை பாராட்டிக் கொள்ளும் எழுச்சியைத் தரும். அவ்வெழுச்சி வழி ஆட்படின் நல்லோர் பகையும் வந்தமையும். வீணே புகழ்ந்து, செல்வத்தைக் கொள்ளை கொள்ளும் சிற்றினமும் வந்து சாரும். அவ்வழி செல்வம் கெடும். அதனால் செல்வமுடையவர்க்குப் பணிவுடைமை பெருஞ்செல்வமாகும்!

16. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.

132

இம்மைக்கும் மறுமைக்கும் துணையாய் அமையக் கூடியது ஒழுக்கம்; எனவே, எந்நிலையிலும் எப்பாடு பட்டேனும் அதனைக் காப்பாற்றிக் கொள்க.

பொருள்

உடைமைகள் தொடர்ந்து நலம் செய்யா. உயிரினைச் சார்ந்த ஒழுக்கமே இம்மையிற் புகழையும், மறுமையில் நிலையான இன்பத்தையும் தரும்.

17. ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.

133

தம்மோடு வாழும் மனித குலத்திற்கு இசைந்தவாறு ஒழுகுதலே குடிமைப் பண்பு. அங்ஙனம் ஒழுகத் தவறுதல் மனிதப் பிறப்பில் இழிந்ததாகிவிடும்.

பொருள்

குடிமைப் பண்பு என்பது மக்களாட்சி முறையில் குடிமை இயல்பு என்று (citizenship) என்று குறிப்பிடப்படுகிறது. தம்மொடு வாழ்பவருடன் ஒத்திசைந்து வாழ்தலே குடிமைப்பண்பு.

18. அறன்இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன்இயலான்
பெண்மை நயவா தவன்.

147

மாற்றான் மனைவியின் பெண்மையை நாடாதவனே அறநெறி நின்று இல்லறம் வாழ்பவன் என்று பாராட்டப் பெறுவான்.

பொருள்

அறநெறி என்பது உரிமை பூண்டவர்களிடத்தில் ஒன்றிய அன்பு செலுத்துவது; பிறர்க்குரியவளின் பெண்மையை நயத்தல் மூலம், அவள், தன் கணவனுக்குச் செய்யும் அன்பில் இடையறவு ஏற்படுகிறது. தன் மனைவியிடத்தில் தான் காட்ட வேண்டிய அன்பிலும் குறையேற்படுகிறது. அதனால், அறநெறி மாறுபடும்!

19. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.

160

பிறர் கூறும் கடுஞ்சொற்களையும் வெகுளாது பொறுத்தாற்றிக் கொள்பவர். உண்ணாது தவம் செய்வாரினும் உயர்ந்தவர்.

பொருள்

உண்ணாது நோற்பது பழக்கத்தால் எளிதில் அமையும். பிறர் கூறும் இன்னாச்சொற்களைப் பொறுத்துக் கொள்ளுதல் எளிதில் அமையாத பண்பாடு. ஆதலின் முன், பின்னாக வைக்கப்பெற்றது.

20. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்
தழுக்கா றிலாத இயல்பு.

168

நெஞ்சத்தே அழுக்காறு வராமல் காப்பதை ஒழுக்க நெறியாகக் கொள்க.

பொருள்

ஒழுக்கக் கேடுகள் அனைத்தும் அழுக்காற்றினின்றே விளைகின்றன. அதனால், அழுக்காறின்மையை ஒழுக்காறாக் கொள்க என்றார்.

21. வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் வினைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.

177

பிறர்பொருளைக் கவரும் வழி உளதாகும் ஆக்கத்தை விரும்பாது ஒழிக! அவ்வாறான ஆக்கம் பெருமை தருவ தன்று!

பொருள்

பிறர்பொருளைக் கவர்ந்து பெற்ற ஆக்கத்தால் கவர்ந்த குற்றத்திற்குரிய இம்மை, மறுமைத் தண்டனையை எண்ணிக் கவலைப்பட நேரிடும். கவர்ந்தவழி, அப்பொருளை இழந்தவர் இவரிடமிருந்து திரும்பக் கவர முயல்வர். அவ்வழியும் காவல் துன்பம் மிகும். ஆதலின் கவர்ந்த பொருள். துய்க்கப்படும் பொழுது இன்பப் பயனையும் பெருமையையும் தராது.

22. அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்.

185

புறம் சொல்பவனின் நெஞ்சம் நன்மையுடையதல்ல என்பதனைப் புறங்கூறும் அவனது புன்மையினாலே அறியலாம்.

பொருள்

புறங்கூறுதல் அறநெறிக்கு மாறுபட்டது. அறத்தினைக் கூறுபவன் நேரிலேயே கூறலாம். புறம்கூற வேண்டியதில்லை. எனவே, புறங்கூறுபவன் நோக்கம் அறமன்று; பழி தூற்றுவதேயாம்!

23. நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.

197

சான்றோர், கேட்பார்க்கு விருப்பமில்லாத சொற்களைச் சொன்னாலும் சொல்லுக. பயனற்ற சொற்களைச் சொல்லாதிருப்பது நல்லது.

பொருள்

ஒருவர் விரும்பும் சொற்களையே சொல்லுதல் என்பது சான்றோராலும் இயலாதது. விருப்பம், மனப்பான்மையைப் பொறுத்தது. ஒருவர் விரும்பும் சொற்களைக் கூறுவதைவிட, அவர்க்கு நன்மை பயக்கும் சொற்களைக் கூறுதலே சான்றோர் கடமை. பயனிலாத சொற்களைக் கூறுவதால் பயனுக்கு மூலமாக இருக்கின்ற நேரமும் கெடும். அதனால் பயனற்ற சொற்களைக் கூறக்கூடாது.

24. தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.

202

தீயவை தீமையையே தருவதால், நன்மையும் தீமையும் கலந்து தரும் தீயினும் அஞ்சப்படும்.

பொருள்

தீ, உணவு ஆக்குவதற்குத் துணைசெய்கிறது. தீமையோ எட்டுணையும் நன்மை செய்வதில்லை. ஆதலால் தீயினும் தீமை அஞ்சப்படும்.

25. புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதிே
ஒப்புரவின் நல்ல பிற.

213

தேவருலகத்தும் இந்நிலவுலகத்தும் ஒருவருக்கொருவர் உதவி புரிந்து வாழ்வதற்கு ஒப்புரவைப் போன்றதோர் உயர் பண்பைக் காண்பதரிது.

பொருள்

ஒருவர் எல்லாருக்காகவும், எல்லாரும் ஒருவருக்காகவும் என்ற கூட்டுறவு வாழ்வியலே ஒப்புரவு. அதனிற் சிறந்த அறம் எங்கும் இல்லை.

26. ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.

214


உயிர் நலமறிந்து பிறர்க்குதவியாக ஒப்புரவு நெறி நின்று ஒழுகுபவனே உயிர் வாழ்கின்றவன். அங்ஙனம் வாழாதவன் இறந்தவரோடு இணைத்து எண்ணப்பெறுவான்.

பொருள்

உயிரின் இயற்கை அன்பு காட்டுதலே; அவ்வழி ஒழுகா விடின், உயிரின் அடையாளம் இன்மையாகும்.

27. ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.

225

பசியைப் பொறுத்துக் கொண்டு, உண்ணாமல் தவம் செய்வாரின் ஆற்றலைவிட உயிர்க்குலத்தின் பசிக்கு, உணவு முதலியன வழங்கி அதை மாற்றுவாரின் ஆற்றல் சிறப்புடையது.

பொருள்

பசியைப் பொறுத்துக் கொண்டு தவம் செய்தல் தற்சார்புடையது; அஃது எளிதில் கூடும். உயிர்க்குலத்தின் பசியை மாற்றுதல் பிறர் நலம் பேணும்பணி. ஆதலின் இப்பணியே சிறப்புடையது.

28. தோன்றிற் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

236

பலர் முன் தோன்றும் பொழுது, புகழோடு தோன்றுக. அஃது இயலாதாயின் தோன்றா திருத்தலே நல்லது.

பொருள்

புகழோடு விளங்கமுடியாத துறையில் தோன்றாதிருத்தல் நல்லது.

29. வலியார்முன் தன்னை நினைக்கத்தான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து.

250

அருளின்மையின் காரணமாகத் தன்னிலும் மெலியாரைத் துன்புறுத்த விரும்பிச் செல்லும் பொழுது, தன்னை விட வலியார் ஒருவர் தன்னைத் துன்புறுத்த வரும்பொழுது தான் அஞ்சி நிற்கும் நிலைமையினை எண்ணுக.

பொருள்

துன்பத்திற்கு அஞ்சுபவர் பிறர்க்குத் துன்பம் செய்வானேன்?

30. தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறி தூன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.

251

தம் உடம்பைக் கொழுக்க வைப்பதற்காக மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவனிடம் எங்ஙனம் அருளுணர்வு குடிகொள்ள முடியும்?

பொருள்

தன் உடம்பைக் கொழுக்க வைத்தல் என்பதே குற்றமுடைய தன்னலம். அதற்காகப் பிறிதின் ஊனை உண்பது மோசமான குற்றம். இவ்விரண்டுமுடையார் அருளுடையராதல் அரிது.

31. இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.

270

இந்த உலகத்தில் செல்வர்கள் சிலரானது பிறர்க்கென முயலும் தவம் செய்வார் சிலரேயானமையால்தான்.

பொருள்

பிறர்க்கென முயலும் தவமிக்க தாளாண்மையுடையவர்கள் பலரானால், செல்வம் உடையாரும் பலராவர்.

32. மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.

280

தவம் செய்வார், தவத்திற்கு எதிரான-பழிக்கத் தக்க குற்றங்களில்லாமல் இருந்தாலே போதும். தலைமயிரை மழித்தலும், சடையாக்கலுமாகிய செய்முறைகள் வேண்டா.

பொருள்

தவத்தின் முயற்சியில் மழித்தலும் நீட்டலும் இயல்பாக நிகழுமாயின் குற்றமில்லை. கோலம் கருதி, முயன்று மழித்தலும் நீட்டலும் வேண்டாம்!

33. உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தாற் கள்வேம் எனல்.

282

பிறன் பொருளைக் களவினாலே கவர உள்ளத்தால் நினைத்தலும் தீது.

பொருள்

தீமை, களவு செய்தால் மட்டுமன்று. களவாட நினைக்கும் பொழுதே களவின் குற்றம் வந்தடைகிறது.

34. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை யிலாத சொலல்.

291

வாய்மை எனப்படுவது யாதொரு தீமையும் பயவாத சொல்லேயாம்.

பொருள்

பிற நூலார் உண்மை என்று கூறுவது வாய்மையன்று. உயிர்க்குத் துன்பம் செய்யாத சொல்லே வாய்மைக்கு இலக்கணம்.

35. உள்ளிய வெல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.

மனத்தினால் கோபத்தை நினையாதிருப்பின் நினைத்தன வெல்லாம் உடன் வந்தெய்தும். பொருள்

வெகுளி, அறிவையும் உணர்வையும் ஆள்வினைத் திறனையும் கெடுக்கும். முயற்சிக்குத் துணையாயிருப் போரைரும் பகைவராக்கிவிடும். ஆதலால், எண்ணியதை இனிதே நிறைவேற்ற நினைப்போர் மனத்தாலும் வெகுளக் கூடாது.

36. எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.

317

யார்க்கும், எப்போதும், ஒரு சிறிதும் மனத்தினால் தீமை செய்யாதிருப்பதே தலையாய அறம் ஆகும்.

பொருள்

அறம், செய்யப்படுவதன்று: ஒழுகப்படுவது. எந்தச் சூழ்நிலையிலும் பகை-உறவு வேறுபாடின்றி எவருக்கும் எத்தகைய துன்பத்தையும் செய்யாதிருப்பதே தலையாய அறம் ஆகும்.

37. பகுத்துண்டு பல்உயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

322

பசித் உயிர்களோடு உணவினைப் பங்கிட்டு உண்பதன் மூலம் பல உயிர்களையும் பாதுகாக்கும் அறம், நூல்கள் பலவாகச் சொன்ன அறங்களுக்கெல்லாம் தலையாயது.

பொருள்

பசித்த உயிர்க்கு உணவளிக்காமல் அதனைச் சாகவிடுதல் கொலைக் குற்றமாகும். எனவே இது கொல்லாமை அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.

38. நாள்என ஒன்றுபோல் காட்டி உயிரீரும்
வான துணர்வார்ப் பெறின்.

334

உயிர் வாழ்க்கையைக் காலம், நாள் என ஒன்று போல எண்ணிக்காட்டி அறுத்து அழிப்பதை அறிவுடையார் உணர்வர்.

பொருள்

வாழ்நாள் முழுமையாக அழிவதில்லை; இன்று, நாளை என்று நாட்கணக்கில்தான் அழிகிறது.

39. யான் என தென்னும் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்.

346

‘நான்’ என்ற தன் முனைப்பின் வழியும், ‘எனது’ என்ற உடைமைப் பற்றின் வழியும் வரும் செருக்கை நீக்குவார். வானோர் உலகினும் உயர்ந்த உலகத்தை அடைவர்.

பொருள்

‘நான்’ என்ற அகப்பற்றும், ‘எனது’ என்ற புறப்பற்றும் நீக்குதற்குரியன.

40. காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.

360

காமம், வெகுளி, மயக்கம் என்னும் குற்றங்கள் முற்றாகக் கெடின் பிறவித்துன்பம் கெடும்.

பொருள்

காமம், வெகுளி, மயக்கம் ஆகிய குற்றங்கள் பெயரளவில் இருந்தால்கூடத் தீமையே செய்யும். ஆதலால் ‘நாமம் கெடக்கெடும் நோய்’ என்றார்.

41. வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
யாண்டும் அஃதொப்ப(து) இல்.

363

இவ்வுலகில் வேண்டாமையை ஒத்த சிறப்புடைய செல்வம் வேறில்லை; அதற்கு ஒப்பான ஒன்று எங்குமில்லை.

பொருள்

ஆசையே துன்பத்திற்குக் காரணம். ஆசை எல்லையில்லாதது. அதனால், செல்வம் பெற்றோம் என்ற மனநிறைவு ஆசையின் வழியில் இல்லை. வேண்டாமையே விழுமிய செல்வம்.

42. நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்.

379

ஊழால் நல்லன விளையும் பொழுது மகிழ்ந்து துய்ப்பவர், அதே ஊழால் துன்பம் விளையும் பொழுது வருந்துவது ஏன்?

பொருள்

முன் செய்த ஊழால் விளைவனவே இன்பமும் துன்பமும். ஊழின் வழி விளையும் இன்பத்திற்கு மகிழ்தலும் துன்பத்திற்கு நோதலும் மீண்டும் ஊழுக்கு வித்தாகும்.

43. காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.

386

காண்பதற்கு எளியவனாய்-கடும் சொல் கூறாதவனாய் இருக்கும் மன்னனுடைய நாட்டை உலகு புகழும்.

பொருள்

நாடாள்வோன் மக்களால் எளிதில் காணத்தக்கவனாகவும், குடிமக்களின் அச்சத்தினை நீக்குவதற்குக் கடுஞ்சொற் கூறாதவனாகவும் இருத்தல் வேண்டும்.

44. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

391

ஒருவன் தன் மனக்குற்றம் நீங்குவதற்குரிய நூல்களைத் தேர்ந்தெடுத்து, குற்றம் நீங்குகிற வரையில் கற்க வேண்டும். குற்றம் நீங்கிய நிலையில் நிலைத்து நிற்க வேண்டும்.

பொருள்

மனக்குற்றம் நீங்கக் கற்பதே கல்வி.

45. அரங்கின்றி வட்டாடி யற்றே, நிரம்பிய
நூலின்றி கோட்டி கொளல்.

401

அறிய வேண்டுவனவற்றையெல்லாம் அறிதற்குரிய நூல்கள் பலவற்றையும் கற்காமல், அவையிடத்து நின்று ஒன்றைச் சொல்வது, சதுரக்கோடின்றி வட்டாடியதை யொக்கும்.

பொருள்

வட்டாடுவதற்கு அரங்கு தேவை; அவையிலே பேச அறிவு தேவை.

46. எனைத்தானும் நல்லவை கேட்க: அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.

416

அளவிற் சிறிதானாலும் நல்லனவற்றைக் கேட்க வேண்டும். கேட்ட அளவிற்கு நல்லவை நிறைந்த பெருமையைத் தரும்.

பொருள்

அரிதின் முயன்று நல்லனவற்றைக் கேட்பது, பெருமை பெறுதற்குரிய வழியாகும்.

47. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

423

எவ்வெவரிடத்து எந்தப் பொருளைக் கேட்டாலும், அப்பொருளின் மெய்த் தன்மையை அறிந்து கொள்வதே அறிவு.

பொருள்

சொல்பவர் எவ்வளவு பெரியவரானாலும் சிறியவரானாலும், பகைவரானாலும் நண்பரானாலும் அவர் கூறியவற்றை நன்கு ஆய்ந்து தெரிந்து மெய்த்தன்மையைக் கண்டு கொள்ளுதலே அறிவு.

48. அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.

427

அறிவுடையார் ஆக வேண்டியதை அறிந்து செயல்படுவர்; அறிவில்லாதவர் அதனை அறிய மாட்டார்கள்.

பொருள்

எதிர்காலத்தை அறிந்து தொழிற்படுதல் அறிவுடைமை.

49. தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு.

436

நாடாளும் மன்னன் தன் குற்றத்தை முன்னதாக நீக்கிப் பின்னர் மற்றவர் குற்றத்தைக் காண்பனாயின் அரசனுக்கு ஏது குற்றம்?

பொருள்

மன்னனிடமுள்ள குற்றத்தின் வழியே மக்களிடத்துக் குற்றம் கால் கொள்கிறது. மன்னன் குற்றம் நீங்கிய வழி மக்களிடத்துக் குற்றம் நில்லாது.

50. அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல்.

பெரியவர்களைப் போற்றித் தமக்குச் சுற்றத்தார்களாகக் கருதித் தழுவிக் கொள்ளுதல், அரசன் பெறுதற்கரிய பேறுகள் அனைத்திலும் அருமையாகும்.

பெரியார் சுற்றத்தாராதல் மூலம், அருமையானவற்றை யெல்லாம் அடையலாம்.

51. மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.

455

சார்ந்தொழுகும் இனத்தூய்மையின் வழி, மனத்தூய்மையும் செய்யும் செயலின் தூய்மையும் வந்தமையும்.

பொருள்

மனத்தூய்மைக்குரிய சிந்தனையும் பழக்கங்கட்குரிய செயல் தூய்மையும் சேர்ந்தொழுகும் நட்பின் வாயிலாக அமைவதால் இனத்தூய்மையைக் காத்தல் வேண்டும்.

52. செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.

466

செய்யத்தகாத செயல்களைச் செய்தாலும் கேடுவரும்; செய்யவேடியவற்றைச் செய்யாமையாலும் கேடு வரும்.

பொருள்

செய்யத்தக்கனவற்றைச் செய்து தகாதனவற்றை விலக்க வேண்டும்.

53. ஆற்றின் அளவறிந் தீக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி.

477

கொடுக்கும்பொழுது பொருளின் அளவறிந்து கொடுத்தல், பொருளைப் போற்றி வாழும் நெறியாகும்.

பொருள்:

மாற்றார்வலி தம்வலியினும் மிகாதவாறு காத்துக் கொள்ளத் தக்கவகையில் ஆட்சியாளரின் கொடை அமைய வேண்டும்.

54. காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.

485

உலகத்தைத் தன்பாற் கொள்ளக் கருதுகின்றவர்கள், அதை அடைவதற்குரிய துன்பங்களைப் பற்றி எண்ணிக் கலங்காமல் உலகத்தைக் கொள்ளுதற்கரிய காலம் கனிகின்ற வரை காத்திருப்பர்.

பொருள்

எந்த ஒன்றை அடைவதற்கும் உரிய காலம்வரும் வரை காத்திருக்க வேண்டும்.

55. தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.

481

தொடங்கும் செயலை முழுதாக முடித்தற்கு உரிய காலத்தின் இயல்பறிந்து தொடங்குக; இடையில் எச்செயலையும் எளிதென்று எண்ணற்க.

பொருள்

எச்செயலையும் முடித்தற்குரிய வழிகளை அறிந்து தொடங்க வேண்டும்.

56. குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.

504

ஒருவரின் குணங்களையும் குற்றங்களையும் ஆராய்ந்து மிகுதியானவை பற்றி அவரைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பொருள்

குணமும் குற்றமும் எவர்க்கும் உரியன. ஆதலின் மிகுதி காண வேண்டும். குணம் குற்றங்களின் மிகுதி எண்ணிக் கையைப் பொறுத்ததன்று; ஏற்படும் பயனைப் பொறுத்தது.


57. செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.

516

ஒரு செயலைச் செய்கின்றவனுடைய தன்மையையும் செயலின் தன்மையையும் ஆராய்ந்து அச்செயலுக்குரிய காலத்தையும் அறிந்து செயல்படுக.

பொருள்

ஒரு செயலில் முழுதாக வெற்றிபெற வேண்டுமானால், அச்செயலைக் செய்தற்குரிய தகுதியுடையவனும் அச்செயல் நிறைவேறுதற்குரிய காலமும் ஒத்திசைந்து அமைதல் வேண்டும்.

58. பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத் தில்.

526

அள்ளி வழங்குபவனாகவும் சினமில்லாதவனாகவும் ஒருவன் விளங்கினால், உலகில் வேறு யாரையும் விடச் சுற்றத்தாரை அதிகம் பெறுவான்.

பொருள்

கொடையிருந்து சினமிருந்தாலும், பொறுமையிருந்து கொடையில்லாமற் போனாலும் சுற்றம் சூழாது.

59. அரியனன் றாகாத இல்லைபொச் சாவாக்
கருவியாற் போற்றிச் செயின்.

537

மறவாக் கருவியாகிய மனத்தால் எண்ணிச் செயற்பட்டால், செய்தற்கு அரிய ஏதும் இல்லை.

தி.IV.24.

பொருள்

மனத்தினால் எண்ணிச் செய்தல், மறதியைத் தவிர்க்கும் வழி; மறவாமை வந்த விடத்து எக்காரியமும் எளிதில் நிறைவேறும்.

60. குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.

544

குடிகளைத் தழுவி ஆட்சி செலுத்தும் மன்னனின் அடிகளைத் தழுவி உலகு நிற்கும்.

பொருள்

செங்கோலுக்கு அழகு குடிகளைத் தழுவி நிற்றலே.

61. அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீர்அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.

555

முறையாக ஆட்சி செய்யாத அரசனின் செல்வத்தைக் கொடுங்கோன்மையால் துன்ப முற்று அழுத குடி மக்களின் கண்ணீரே தேய்த்து அழிக்கும்.

பொருள்

கொடுங்கோன்மையுடைய அரசனை அழிக்கப் படை தேவையில்லை. ஏழையர் அழுத கண்ணீரே போதும்.

62. கடிதோச்சி மெல்ல ஏறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்.

562

பன்னெடுங் காலத்திற்கு ஆக்கத்துடன் விளங்க விரும்புவர், மிகுந்த தண்டனை செய்வார் போலத் தொடங்கிக் குறைந்த தண்டனையை வழங்க வேண்டும்.

பொருள்

தவற்றுக்குப் பெரிய தண்டனை கிடைக்கும் என்ற அச்ச உணர்வும் தண்டிக்கும் போது அழிவு நேராவண்ணம் தண்டிக்கப்படுதலும் ஆக்கத்திற்குப் பாதுகாப்பாகும்.

63. கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு.

578

தத்தமது கடமை கெடாமல் கண்ணோட்டம் செய்ய இயலுமாயின், அவர்க்கு இந்த உலகம் உரிமையாகும்.

பொருள்

கடமைக்கு இடையூறு இல்லாத கண்ணோட்டமே வரவேற்கத் தக்கது.

64. வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வ தொற்று.

584

தம்தொழிலைச் செய்கின்றவர், சுற்றத்தார், பகைவர் என்ற வேறுபாடு இன்றி அனைவரையும் ஆராய்ந்து அறிவதே ஒற்று எனப்படும்.

பொருள்

சுற்றத்தார் தோற்றத்தில் பகைவரும் இருக்க இயலும். எனவே வேறுபாடின்றி ஆய்க.

65. உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.

592

பொருளுடைமைக்குக் காரணமாகிய ஊக்கமே நிலையான உடைமை. பொருளுடைமை நிலைத்து நிற்பது நீங்கிப்போகும்.

பொருள்

ஊக்கம் உள்ளவழி, பொருளுண்டாம். ஊக்கமில்லாத வழி, பொருளுடைமை ஓர் உடைமையே அன்று.

66. மடிமடிக் கொண்டாழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தள்ளினும் முந்து.

603

சோம்பலை ஒழிக்காமல் அதனைக் கொண்டொழுகுவோன் அறிவற்றவன். அவன் கெடுவதற்கு முன்பே அவன் பிறந்த குடியும் கெடும்.

பொருள்

சோம்பல் அஃது உடையவனை மட்டுமின்றி, அவனது குடியையும் கெடுக்கும் தன்மை வாய்ந்தது.

67. அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.

611

எந்த ஒரு செயலையும் செய்து முடித்தற்கு அரிய தென்று கருதித் தளர்ச்சியடையக் கூடாது. அச்செயலை முடித்தற்குரிய முயற்சி பெருமையைத் தரும்.

பொருள்

அருமையான முயற்சிகளை மேற்கொள்ளுதல் பெருமை தரும்.

68. இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில்.

621

துன்பம் வரும்பொழுது கலங்காமல் நகுதல் வேண்டும்; அங்ஙனம் நகுதலே, அத்துன்பத்தை எதிர்த்து வெற்றி கொள்ளுதற்குரிய சிறந்த வழி. பொருள்

துன்பத்திற்குக் காரணமாகிய தன்குற்றம் நோக்கி நகுதல் குற்ற நீக்கத்திற்கும் உதவி செய்யும்.

69. செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்
தியற்கை அறிந்து செயல்.

637

நூல் நெறியாற் செய்யுந் திறனை அறிந்திருந்தாலும், உலகத்தின் இயற்கையறிந்து செய்தல் வேண்டும்.

பொருள்

நூல்நெறியே ஆனாலும் உலகியலுடன் ஒத்து வராதன பயன்தரா.

70. வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்.

646

பிறர் கேட்க விரும்புமாறு சொல்லுவதும், பிறர் சொல்லும் சொற்களின் பயனைக் கொள்ளுதலும் குற்றமற்றார் கொள்கை.

பொருள்

கூறும்போது விரும்பத்தக்கவாறு கூறுதலும், அமைச்சியலுக்குரிய பெருமையின் காரணமாகச் சொல்லினிமை நோக்காது பயன் நோக்கிக் கேட்டலும் வேண்டும்.

71. என்றும் ஒருனவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.

652

புகழோடு அழகும் தராத செயல்களை ஒரு போதும் செய்யாமல் விலக்க வேண்டும். பொருள்

செயல், புகழினைத் தந்து, அவ்வழி அறத்தினைப் பெறுதற்குரிய செயல்முறைப் பண்ணையேயாம். பயன்தராத செயலைத் தவிர்த்திடுக.

72. எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்.

666

எண்ணிய வினையிடத்து உறுதி உடையராயின் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.

பொருள்

எண்ணியவற்றை அடைவதற்கு எண்ணத்திலும் முயற்சியிலும் உறுதி வேண்டும்.

73. தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.

672

காலத்தாழ்த்திச் செய்ய வேண்டியவற்றைக் காலத்தால் பிந்திச் செய்க; காலத் தாழ்த்தாது செய்ய வேண்டியவற்றை, உடனே செய்க.

பொருள்

செய்தற்குரிய பணிகளைத் காலத்தோடிசைந்து செய்க.

74. அகலா தணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.

961

தீயினிடத்துக் குளிர் காய்வார் போல, நாடாள் வோரிடமிருந்து அகலாது ஒழுகுக; மிக அணுகி ஒழுகாமலும் இருக்க.

பொருள்

குளிர் காய்வோர் தீயிடமிருந்து நெடுந்தொலைவிற்கு விலகினால் குளிரும். அதுபோல நாடாள்வோரிடமிருந்து நெடுந்தொலையில் விலகினால் பகைவர் வருத்துவர். ஆள்வோரை மிகமிக நெருங்கினால் அவர் தம் விருப்பு வெறுப்புத் துன்பம் தரும்.

75. குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.

703

தன் குறிப்பறிந்து செயலாற்ற வல்லாரை, எது கொடுத்தேனும் உறுப்பாக்கிக் கொள்க.

பொருள்

குறிப்பறிந்து செயல்படுவோரைப் பெறுக.

76. அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.

711

சொற்களின் விளைவறிந்த தூய்மை உடையோர், தாம் சொல்லப் புகுகின்ற அவையின் தகுதிப்பாடறிந்து அங்குச் சொல்லத்தக்கன இவையென அறிந்து சொல்லுக.

பொருள்

சொல்லப்படும் செய்திகளைவிடச் சொல்லும் இடம் நோக்கிச் சொல்லுதல் இன்றியமையாதது.

77. ஆற்றின் அளவறிந்து கற்க அவைஅஞ்சா
மாற்றம் கொடுத்தற் பொருட்டு.

725

அவையில் அஞ்சாது விடை சொல்லுதற்குரிய நெறியும், சொல்லத்தக்க அளவு முறையும் அறிந்து கற்க.

பொருள்

தொடுக்கும் வினாக்களுக்கு விடைசொல்ல முடியாத கல்வி, பயனற்றதாகும்.

78. ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.

740

எல்லா வளங்களும் நிறைந்த நாடாயினும், செங்கோல் முறையற்ற நாடு பயனுடையதன்று.

பொருள்

நல்லாட்சி இல்லாத நாட்டில் வளங்கள் பேணப் படுவதில்லை. அதனால் பயனில்லை.

79. எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்ல தரண்.

750

எத்தகைய பெருமையுடைய அரணாயினும் செயற் சிறப்பில்லாரிடத்து இவ்வரணின் பெருமை நில்லாதொழியும்.

பொருள்

அரணின் பெருமையைக் காப்பது செயலின் திறனே.

<poem>80. செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்

எஃகதனிற் கூரிய தில்.</poem
>
759

தொழில் செய்து பொருளை ஆக்குக. பகைவரின் செறுக்கறுக்கும் பொருட் சேர்க்கையினும் கூரிய வாள் வேறில்லை.

பொருள்

பொருளுடையார்க்குப் பகைவர் அடங்குவர். பொருள் என்பது, மனிதகுலத்தின் உயிர்வாழ்க்கைக் குரியதுவே.

81. சிறுமையும் செல்லாத் துணியும் வறுமையும்
இல்ஆயின் வெல்லும் படை.

769

இழிவைத் தரும் சிறிய செயல்களும் மாறாப் பிணக்கும் வறுமையும் இல்லையானால் பகைவரைப் படை வென்று விடும்.

பொருள்

வெற்றிக்குப் பெரும் படைமட்டும் போதாது. படை வீரர்க்கு ஊதியம் வழங்க இயலா வறுமையும், ஆட்சி உறுப்புகளுக்கிடையே பிணக்கும், அவ்வழி சிறியன செய்தலும் இல்லா திருத்தல் வேண்டும்.

82. புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்க துடைத்து.

780

காத்த தலைவன், கண்ணீர் சொரிய எய்தும் மரணம், இரந்தும் பெறத்தக்க பெருமையுடையது.

பொருள்

பேணிக்காத்த தலைவன் வீழ்வதற்கு முன் வீழ்வது பெருமைக்குரியது. செய்ந்நன்றி அறமும் சேர்ந்ததாகும்.

83. நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.

783

நல்ல நூல்களைக் கற்குந்தோறும் இன்பம் பெருகுதல் போல, நற்குணமுடையோர் நட்பு இன்பத்தரும்.

பொருள்

நல்ல நூல்கள், பயில்தோறும் அறிவினைத் தந்து இன்பம் தரும். நல்லோர் நட்பு அன்பினைப் பெருக்கி இன்பம் தரும்.

84. அழச்சொல்லி அல்ல திடித்து வழக்கறிய
வல்லார்நட் பாய்ந்து கொளல்.

795

அறநெறியல்லாத செயலைச் செய்யக் கருதியவழி இடித்துத் திருத்தி, அறநெறியில் நிறுத்துதற்குரிய வல்லாரின் நட்பை அறிந்து கொள்க.

பொருள்

நட்பின் பயன் நன்னெறி நிறுத்துதலேயாம்.


85. நட்பிற் குறுப்பு கெழுதகைமை மற்றதற்
குப்பாதல் சான்றோர் கடன்.

802

நட்பிற்கு உறுப்பு, நட்டாருக்கு உரியவற்றை உரிமை யாற் செய்தல். அங்ஙனம் செய்த செயலுக்கு உடன்பட்ட வராதல் சான்றோரின் கடமை.

பொருள்

நட்புடையார் உரிமையுடன் செய்த செயல்முறைகளுக்கு உடன்பாடுடையராயிருத்தலே இனிமைதரும் நட்பு.

86. எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றிற் பழிப்பார் தொடர்பு.

820

தனியே மனைக்கண் இருந்தவிடத்து இனிமையாகப் பழகி, பலர்கூடிய மன்றில் பழி கூறுவார் உறவை அறவே விலக்க வேண்டும்.

பொருள்

பழகியோரிடத்தில் குற்றம் கூறுவார் உறவு தீது.

87. சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.

827

வில்லின் வணக்கம் ஏற்றவர்க்குத் தீமையே செய்யும். பகைவரின் சொல் வணக்கமும் தீமை தருதலையே குறிக்கும்.

பொருள்

பகைவர் மனத்தினால் வணங்குதல் இல்லை. சொல்லினால் வணங்குதல் தீமைசெய்யும் குறிப்புடையதே என்பதை அறிக.

88. பேதமை என்பதொன் றியாதெனின் ஏதம்கொண்
டூதியம் போக விடல்.

831

அறியாமை என்பது யாதெனில் தனக்குக் கேடு பயப்பனவற்றைக் கைக்கொண்டு செல்வம் வருவனவற்றைக் கைவிடுதல்.

பொருள்

அறியாமை என்பது அழிவைத் தழுவிக்கொண்டு, ஆக்கத்தை இழத்தல்.

89. வெண்மை எனப்படுவது யாதெனில் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.

844

தம்மைத் தாமே நல்லறிவுடையேம் என்று செருக்கிக் கொள்ளுதல் புல்லறிவாண்மை யாகும்.

பொருள்

அறிவு வளர்தலுக்குரியது; ஆதலின், அறிவு உடையோம் என்று எண்ணுதல் தவறு.

90. பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை.

852

ஒருவன் தன்னோடு கூடாமையைக் கருதி அன்பில்லாதவற்றைச் செய்தாலும், அவனோடு மாறுபட்டு அவனுக்குத் துன்பம் செய்யாதிருத்தல் சிறந்தது.

பொருள்

கூடாதவரைக் கூடும்படி செய்தலே நல்வாழ்க்கை. அஃதின்றிப் பகைகாட்டித் துன்பம் செய்தால் பகை வளரும்; அவ்வழி அழிவு வரும்.

91. பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற் றுலகு.

874

தமது பகையைத் தணித்து நட்பாகக் கொண்டொழுகும் பண்புடையாளரின் பெருந்தன்மைக்கண் உலகம் அடங்கும்.

பொருள்

பகையை நட்பாக மாற்றிக் கொள்ளுதல் பண்பு நெறி.

92. வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.

882

வாள் போல் வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை. ஆனால், உறவினரைப் போல இருந்து மறைந்து பகை செய்பவரைக் கண்டு அஞ்சுக.

பொருள்

முகத்தில் உறவும் அகத்தில் பகையும் உடையாரை அஞ்சி விலகிடுக.

93. ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.

891

எடுத்துக் கொண்ட பணிகளை இனிதே முடிக்க வல்லாரின் ஆற்றலை இகழாதிருத்தல் தலையாய காப்பாகும்.

பொருள்

ஆற்றலுடையவரை இகழாதிருத்தல் தலைசிறந்த தற்காப்பு.

94. மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி உணின்

942

முன் உண்ட உணவு செரித்ததறிந்து பின் உண்ணின் உடம்பினைப் பேண மருந்தென்று ஒன்று வேண்டியதில்லை.

பொருள்

உண்ட உணவு செரித்தபின் உண்டால் பிணி வராது.

95. நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகைஎன்ப வாய்மைக் குடிக்கு.

953

வாய்மையில் வழுவாத நற்குடியில் பிறந்தார்க்கு முகமலர்ச்சி, ஈதல், இனியன கூறுதல், இகழாமை ஆகிய பண்புகள் உரிமையுடையன.

பொருள்

உயர்குடிப் பிறந்தாரின் இலக்கணம் கூறியது.

96. பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.

963

செல்வப் பெருக்கத்தில் பணியுடையராதல் வேண்டும். சிறுமையுடைய வறுமை வந்தடைந்த பொழுது தாழ்வு உணர்வில்லா உயர்வு மனப்பான்மை கொள்ளவேண்டும்.

பொருள்

செல்வப் பெருக்கத்தில் பணிவதால் பெருமையும் செல்வச் சுருக்கத்தில் உயர்வதால் பெருமையும் உண்டு.

97. பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.

979

பெருமைக்குரிய பண்பானது செருக்கின்றி வாழ்தல். சிறுமையென்பது தருக்கித் தற்பெருமை பாராட்டல்.

பொருள்

செருக்கினால் பெருமை வராது.

98. கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.

984

தவம் என்பது எந்த உயிரையும் கொல்லாத நலமுடையது. சான்றாண்மை யென்பது பிறர் குற்றத்தைச் சொல்லாத நலமுடையது.

பொருள்

தவத்தினும் சிறந்தது கொல்லாமை, சால்பிற்குப் பிறர் குற்றம் சொல்லாதது சிறப்பு.

99. நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.

994

நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறர்க்குப் பயன்பட வாழ்வோரின் பண்பை உலகு பாராட்டும்.

பொருள்

மற்றவர் பயன்பெற வாழ்தல் பாராட்டத்தக்க பண்பு.

100. குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.

1023

தான் பிறந்த குடியினை உயரச் செய்யும் பணிகளில் ஈடுபட்டு முயன்று பணி செய்வார்க்குத் தெய்வம் ஆடையைக் தற்றுக்கொண்டு தானே துணை செய்ய முன் வந்து நிற்கும்.

பொருள்

தெய்வம் வாளா வேண்டுதலுக்குத் துணைசெய்ய முன்வராது. முயற்சியினை மேற்கொண்டாருக்கு அவர் வேண்டாமலே வந்து துணை செய்யும்.


தமிழ்மாமுனிவர்
தவத்திரு


குன்றக்குடி அடிகளார்
நூல்வரிசை


திருக்குறள்
இலக்கியம்
சமயம்
சமுதாயம்
பொது