குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-4/சிந்தனைச் செல்வம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

14
சிந்தனைச் செல்வம்


உலக முதல்வன்!

சிறப்புடைய காட்சிகள் நான்கு. கண்ணுக்குப் புலனாகும் காட்சி ஒன்று. அறிவுக் காட்சி பிறிதொன்று. உணர்வுக் காட்சி மற்றொன்று. நான்காவது காட்சி கடவுட் காட்சி; முதற்காட்சி, உயிர்க்குலம் அனைத்துக்கும் பொது. விலங்குகள், பறவைகள் கூட கண்களால் காணவும், தனக்குச் சார்பான ஒன்றை அணுகவும், பொருத்தப் பாடில்லாதனவற்றைக் கண்டு விலகவும் காண்கின்றோம்! எனவே, கண்களால் காணப்பெறும் காட்சி அளவில் உயிர்க் குலத்தினிடையில் வேறுபாடு இல்லை!

வளர்ந்த மானிடப் பிறப் பெய்தியவர்கள் கண்களால் காணப்பெறும் காட்சியை வாயிலாகக் கொண்டு படிப்படியாக நோக்கி வளர்ந்து, மிகுதியும் பயன்பெறுவர். மனிதன், கண்களால் மட்டும் பார்க்கும் காட்சியே பார்த்தல்; அப்பார்வையின் வழி, காட்சிப் பொருளின் உள்ளீடுகளையும் கூர்ந்து நோக்கி ஆராய்வதை நோக்குதல் என்பர். வளர்ந்த அறிஞர்கள் கண்களை வாயிலாகக் கொண்டு காணாதன எல்லாம் காண்பர். ஏன் அக் கண்களுக்கே கூட காட்சியைப் படைத்தும் கொடுப்பர்.

கண்ணால் காணப்பெறும் காட்சியிலிருந்து வளர்வது அறிவுக் காட்சி! எந்த ஒன்றையும் அதன் இருப்பையும் உள்ளீட்டையும் பண்பாடுகளையும் அறிவுப் பார்வையில் அணுகுவது அறிவுக் காட்சி. சில சமயங்களில் அறிவுக் காட்சி அப்பட்டமான உண்மைகளைக் கூறும். அது கணிதத்தைப் போல் சுவையற்றதாக இருக்கும்.

அறிவு நிலையிலிருந்து உணர்வு நிலைக்கு வளர்ச்சி அடையும் நிலையில் நெஞ்சம் கலந்த அனுபவங்கள் கிடைக்கும்; உணர்வு சிறக்கும்; புலன்கள் செப்பமடையும்; பொறிகள் செழிக்கும்; புண்ணியத்தின் பயனையடையும். இங்ஙனம் உணர்வுக் காட்சியில் வளர்ந்தவர்கள் நன்னிலையையே காண்பர். நன்மையையே சொல்லுவர்; நன்மையையே செய்வர்!

உணர்வுக் காட்சியிலும் சிறந்தது கடவுட் காட்சி! ஏன்? உணர்வுக் காட்சிகளில் கூட ஒரோவழி உயிர்க்குல வேறு பாடுகள் தலைக்காட்டலாம். சுற்றம், உறவு என்ற வட்டங்கள் தோன்றலாம். இந்த உணர்வுகள் குறை உடைய - அல்லாது போனாலும் வளர்ந்த-முழுமையான நிறையாகாது. கடவுட் காட்சியில்தான் எல்லைகள் கரைகின்றன. வேறுபாடுகள் தலைகாட்டுவதில்லை. எங்கும் எல்லாவற்றிலும் ஒருமைப்பாட்டினைக் காட்டும் காட்சி கடவுள் காட்சி!

திருவள்ளுவர், ஞானப் புதல்வர்! திருவள்ளுவர் தந்த திருக்குறள் உலகப் பொதுமறை. திருவள்ளுவர் கடவுள் காட்சியில் திளைத்த பேரருளாளர்; பெருஞானச் செல்வர். திருவள்ளுவர் தாம் கண்ட கடவுட் காட்சியைக் காணாத மக்களுக்கு, ஞானாசிரியராக அமர்ந்து விளக்குகிறார்.

எழுத்துக்கள் உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து, ஆய்த எழுத்து என நான்குவகை. இந் நான்கு

தி.IV.22. வகை எழுத்துக்களுக்கும் அடிப்படையாகவும் உள் நின்று ஒலிக்கும் ஒலியாகவும் விளங்குவது ‘அ’ என்ற உயிர் எழுத்து. ‘அ’ என்ற எழுத்தின் அடிப்படையும் ஒலிக் கலப்பும் இல்லாது எந்த எழுத்துக்கும் ஒலி வடிவமும் இல்லை; வரி வடிவமும் இல்லை.

ஆயினும் எல்லா எழுத்தொலிகளிலும் அகரம் இருப்பது வெளிப்படையாகத் தெரியாது; கேட்காது. இவ்வுண்மையை இலக்கண நுண்ணறிவோடு கூர்ந்து நோக்கினால் தெரியும். இந்தக் காட்சியைக் கடவுட் காட்சிக்கு ஒப்பிடுகிறார் திருவள்ளுவர். காணப்படும் உலகம் ‘அவன், அவள், அது’ என்று மூன்று நிலையினதாக இயங்குகிறது. மூன்று நிலையினதாக இயங்கும் இவ்வுலகத்திற்கு முதலாக-இயக்கும் ஆற்றலாக ஒன்றாகியும் உடனாகியும் வேறாகியும் நின்று, இயக்கும் ஆற்றலாகக் கடவுள் இருக்கிறார்.

என்பது திருவள்ளுவர் கருத்து.

காணும் காட்சியின் வாயிலாகக் காணாதனவற்றையும் காண்டதுதான் அறிவுடைமை. ஆதலால், இவ்வுலக இயக்கத்திற்கு இறைவன் முதலாக இயக்கும் ஆற்றலாக இருக்கிறான் என்பது பொருள்.

உலக இயக்கத்திற்கு அடிப்படையாக இருக்கும் கடவுளுக்கு ஆற்றல் மிகுதியும் தேவை. தமிழகச் சமய வரலாற்றில் கடவுளை, அம்மையப்பனாகப் போற்றி வழிபடுதல் மரபு. அம்மையப்பன் வழிபாடு என்பது பொருள், பொருளின் ஆற்றல் என்று பகுத்துக் கண்டுணர்ந்து வழிபடுதலாகும். பொருள் சிவம்; ஆற்றல் அம்மை. ஆதி சக்தியைப் பங்கில் உடையவன் என்பது பொருள். உலகத்திற்கு முதலாக இருப்பவன் அம்மையப்பன்.

எழுத்துக்கள் தோன்றுவதற்குக் காரணமாயிருக்கிற ஒலிக்கு முதற்காரணம் நாதம். இந்த நாதம் தோற்றக்களத்தில் அகர வடிவில் இயங்குகிறது. ‘அ’ என்ற வரிவடிவத்தைக் கூர்ந்து நோக்குங்கள்! ‘அ’ என்ற எழுத்தின் ஆரம்பம் ஒரு வட்டம். வட்டத்தில் தொடங்கும் ‘அ’ எழுத்து வளைந்து கீழ் நோக்கி வருகிறது. திரும்ப மேலேறி வளைவின்றி நேராக வளைவைக் கடந்து வெளியில் சென்று ஒரு நேர்கோட்டு வடியில் முடிகிறது. ‘அ’ எழுத்தில் தொடங்கும் வட்டம் கடவுளின் நிறைநலம். கடவுள், உயிர்களை ஆட்கொள்வதற்காக இறங்கிவரும் நிலைகள் வளைந்த பகுதி. தொடக்க நிலையில் உயிர்கள் தன்முனைப்பாகக் கடவுளைப் பற்றிக் கருதாது முன்னே செல்லும்! வாழ்க்கையில் பல்வேறு, படிப்பினைகளைக் கண்ட பிறகு, உயிர்க்குத் தெய்வம் என்பதோர் சிந்தனை உண்டாகும்.

அதுபோதுதான் உயிர் கடவுளை அறிந்து அவன் வழி காட்ட அவன் பின்னே செல்வதை விளக்கும் பகுதி ‘அ’ வில் முன்னோக்கிச் செல்லும் நேர்க்கோடு. கடவுளை அறிந்து அவ்வழி நின்று ஒழுகும் உயிரின் நேர் நிலையை உணர்த்தும் பகுதி ‘அ’ எழுத்தின் வடிவுகளைக் கடந்து வலப்பக்கத்தில் நிமிர்ந்து நிற்கும் நேர்க்கோடு. நேர்மை என்பது ஒரு தூய்மையான அறநெறிப்பட்ட பண்பு!

எல்லா உயிர்களுக்கும் ஒப்ப நினைத்துச் செய்தலே நேர்மை என்ற அறம்! இதனை விளக்குகின்ற வகையில் அகர வடிவம் அமைந்திருப்பது ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது.

‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.’

1
யாருடன் போர்

மனித குல வாழ்வியலில் பகை, முற்றாக ஒதுக்கத் தக்கதுமன்று. அதனால் பகை, அறம் என்று ஏற்கத் தக்கதுமாகாது. பகை, மருந்து போல ஏற்றுப் போற்றப்படுகின்றது. அதாவது பகை கொள்ளும் இடம், பொருள், விளைவு ஆகியன பற்றிப் பகை, அறமாகிறது-அல்லது மாறாகிறது. தீயவற்றோடு பகைகொண்டு எதிர்த்துப் போராடுதல் வாழ்வின் நோக்கமாய் அமைதல் வேண்டும்.

வெண்ணெய்க்கும் சுண்ணாம்புக்கும் சமாதானம் செய்வித்தல் போலச் சிலர் தீமையோடும் சமாதான்ம் செய்து கொள்வர். தீமையையும் செய்துவிட்டுப் பிராயச்சித்தம் - கழுவாய் செய்வர். இது அற நெறியன்று.

அதனால், மனித குல வரலாற்றில் தீமையை எதிர்த்துப் போராடிய போராட்டங்களைவிட ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்ள அரசர்கள் நடத்திய போராட்டங்களே மிகுதி. மனிதத் தீமையை எதிர்த்துப் போராடியவர்கள் தீர்க்க தரிசிகள்-ஞானிகள். கொடிய ஆதிக்க வெறி பிடித்த, குடிநலம் பேணாத அரசர்களை எதிர்த்துப் போராடியவர்களும் அரசியலில் ஞானிகள் என்றே பாராட்டப்பட வேண்டியவர்கள்.

பிரெஞ்சுப் புரட்சியும், அமெரிக்காவில் நீக்ரோ விடுதலைக்காக நடந்த புரட்சியும், சோவியத் புரட்சியும், இந்திய விடுதலைப் புரட்சியும் ஆதிக்கத்தை எதிர்த்து நிகழ்ந்தவை. புத்தரும், ஏசுவும், முகம்மது நபியும், அப்பரடிகளும் நிகழ்த்திய போர் மனித குலத் தீமையை எதிர்த்த போர்! இந்தப் போர்க் களங்கள் வேள்விக் கூடங்களைப் போலப் புனிதமானவை; அவைகளினும் விஞ்சிய புனிதமானவை.

பகை, எளிதில் கொள்ளக் கூடாது. தேர்ந்து தெளிந்து கொள்ள வேண்டும். பகைதானே என்று அற்பத்தின்மீது பகை கொள்ளக்கூடாது. நம்முடைய பகைவரும் மாட்சிமை மிக்குடையராக இருத்தல் வேண்டும். நம்முடைய பகைவருக்கு மாட்சிமை இல்லாது போனால் எதிர்ப்போர்க்கும் இழிவு. அதனாலன்றோ கம்பன், ஒப்புமையில்லாத இராமனின் பகைவனாகிய இராவணனை ஒப்பாரும் மிக்காருமில்லாத் தலைவனாகக் காட்டுகின்றான்.

அறுமுகச் செவ்வேள் பகைமேற்கொண்டு சென்ற சூரபதுமனும் ஒரு நிகரில் தலைவனே! மாட்சிமை மிக்குடைய ஒருவனையே பகைவனாகக் கொள்ள வேண்டும். மாட்சிமையில்லாதார் வலிய பகை மேற்கொண்டு வந்தாலும் ஒதுங்குதலும் ஒதுக்கித் தள்ளுதலும் பெருமை பொருத்திய ஆண்மைக்கு அழகேயாம். தம்மொடு பொருதற்குத் தகுதியில்லாதார் மாட்டுப் பொருதாது ஒதுங்குதல் கோழைத்தனமாகாது.

பகை மேற் கொள்ளும்பொழுது, மாட்சிமை மிக்க பகைவனிடத்திலேயே பகை கொள்ள வேண்டும். ஆயினும் தம்மின் வலியாரிடத்துப் பகை கொள்ளுதல் வாழும் நெறியன்று. அறிவின் ஆக்கமும் அன்று. தம்மின் வலியாரிடத்து மோதுதல், கல் மலையைக் கையினால் அடித்து நொறுக்கும் முயற்சி மேற் கொள்ளுதலை ஒத்தது. இதனால் கைக்கே வலி ஏற்படும். மலை உடையாது. ஆதலால், வலியாரோடு பகை கொள்ளுதல் தற்கொலைக்குச் சமம்.

தம்மின் வலியாரோடு பகை கொள்ளற்க என்றதனால் தம்மின் மெலியாரோடு பகை கொள்ளலாம் என்பது பொருளன்று. தம்மின் மெலியார்மேற் பகை கொள்ளுதல் ஆண்மைக்கும் மதிப்பிற்கும் இழுக்கைத் தரும். புகழைக் கொல்லும். இவற்றை இழந்த பின் வாழ்வதும் வாழ்வோ?

மெலியார் மேல் மோதுதல் நீதியுமன்று-நெறியுமன்று; ஆண்மையுமன்று-அழகுமன்று; புகழுமன்று. தம்மில் மெலியார் மேல் மோதுதல் மூலம் மோதுவார்க்கு இகழ்ச்சியும், மோதி அழிக்கப் பெற்ற மெலிய பகைவர்க்குப் புகழும் கிடைக்கும்.

வள்ளல் பாரியின் மீது முரணி மோதிய மூவர் பெயர்களும் தெரியாமலே மறைந்து போயின. ஆனால் போர்முறையில் மாண்ட பாரியின் புகழ் இன்றும் நிலவுகிறது.

பெருமன்னன் சேரமான் கணைக்காலிரும்பொறை, தகடூரை ஆண்ட வேளிர்குலத் தலைவன் அதியமானோடு போர் தொடுத்து வெற்றி பெற்றான். அதியமான் இறந்து பட்டான். தகடூர் அழிந்தது! ஆயினும், சேரனின் வெற்றி வாழ்த்தப் பெறவில்லை. அவ்வெற்றி தமிழக மக்களின் நினைவிலும் இல்லை. அதியமானின் புகழ் தகடூர் யாத்திரைக் காவியமாகப் பரிணமித்துள்ளது. அதியமான் “உளதாகும் சாக்காடு” பெற்றான். அவன் புகழ் நிலவுகிறது!

தம்மின் மெலியார்மேல் மறந்தும் பகை கொள்ளற்க! அஃது ஆண்மைக்கு இழுக்கு; புகழினைக் கெடுக்கும்! தம்மொடு மாறுபடும் மெலியாரை மனம் திருத்தி ஓம்புக! வாய்ப்பில்லையாயின் ஒதுங்குக! பகையும் நொதுமலுமின்றி ஒதுக்குக!

தம்மின் வலியார் மீதும் பகை கொள்ளற்க; தம்மின் மெலியார் மீதும் பகை கொள்ளற்க என்றதனால் தம்மை நிகர்த்த வலிமையுடையாரோடு பகை கொள்ளுதல் வரவேற்கப் பெற்றது. தம்மின் வலியாரோடு பகை கொள்ளற்க என்றதனால் கோழைத்தனம் வராதோ என்ற வினா எழலாம். தம்முடைய வலிமையைப் பெருக்கி வளர்த்துக் கொண்டு உரியகாலம் வரும் பொழுது பகை கொள்ளுதல் விலக்கப்படவில்லை.

மாற்றான் வலியைத் தெரிந்து கொள்ளுதலே தம் வலியைப் பெருக்கி வளர்த்துக் கொள்வதற்குத்தான். தம் வலி பெருக்குதல் நாள்தோறும் நாடிச் செய்ய வேண்டிய கடமை. இதில் இடையீடோ, சோர்வோ தலைக்காணின் உள்ள வலிமையும் குன்றும்; தளர்ச்சி வந்தடையும். ஆதலால், மாற்றான் வலியறிந்து உரிய வலிமையைப் பெற முயலுக என்பதே வள்ளுவம் உணர்த்தும் வாழ்வியல் முறை.

தம்மின் வலியாரோடு பகை கொள்ளுதல் தற்கொலைக்குச் சமம். ஆதலின், அதனைத் தவிர்த்திடுக! மனத்தைத் தீமையினின்றும் பாதுகாப்போம்! அவ்வழி வாழ்வாங்கு வாழ்வோம்.

‘வவியார்க்கு மாறேற்றல் ஓம்புக; ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.’

861

‘அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.’

863