குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-4/வாக்காளர்களுக்கு வள்ளுவரின் அறிவுரைகள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

6
வாக்காளர்களுக்கு வள்ளுவரின் அறிவுரைகள்

மனித சமுதாயத்தில் சொத்துரிமை பற்றிய கருத்து தோன்றிய காலத்திலிருந்து அரசியல் சிந்தனை, ஆட்சி முறை, ஆட்சிக்குரிய விதிமுறைகள் முதலியன தோன்றி வளர்ந்து வந்துள்ளன. இவை காலத்திற்குக் காலம் படிமுறையில் வளர்ந்து வந்துள்ளன. ஆட்சிமுறை, கூட்டாட்சியில் தொடங்கித் தனிமனித ஆட்சிக்குமாறி மீண்டும் கூட்டாட்சிக்கு-மக்களாட்சி முறைக்கு மாறி வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

இன்றைய உலகில் பெரும்பான்மையான நாடுகள் சுதந்தரத் தன்மையுடைய தன்னாட்சி முறையில் இயங்குகின்றன. மக்களாட்சி முறையில் இயங்கும் நாடுகள் பலப்பல. அவற்றுள் நமது நாடும் ஒன்று. 1947ஆம் ஆண்டு அடிமைத் தளையிலிருந்து மீண்ட இந்தியாவில் இப்போது மக்களாட்சி முறை நடைபெறுகிறது. ஆம்; இந்தியா இன்று குடியரசு நாடு. நமது இந்திய நாட்டில் பிறந்தவர்கள் 21 வயதை அடைந்த அனைவரும் சாதி, இன, சமய, பொருளாதார ஏற்றத் தாழ்வு எந்தவகை வேறுபாடுமின்றி அரசியலில் பங்கு பெறும்

தி.IV.18. உரிமையுடையவர்கள். அவர்களுக்கு ஆள்பவர்களைத் தேர்ந்தெடுக்க உரிமையுண்டு. அவர்களில் எவரும் ஆள்பவராகவும் வர முடியும். குடியுரிமை என்பதை ஒரு தகுதி-உரிமை-கடமை என்றெல்லாம் கூறலாம்.

திருவள்ளுவர் சிறந்த ஓர் அரசியலறிஞர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், அரசியலும் ஆட்சியியலும் வளர்ச்சியடையாதிருந்த காலத்தில் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் சிறந்த அரசியலை மானுட உலகத்திற்கு அறிமுகப்படுத்தியது. திருக்குறள் தோன்றிய காலத்தில் மன்னராட்சி முறையே நிலவியது. ஆனால், திருக்குறள் முதல் முதலாக மக்களைத் தழுவிய குடியாட்சி முறையை அறிமுகப் படுத்துகிறது.

‘குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.’

(544)

இந்தத் திருக்குறளுக்குச் செவ்விதாகப் பொருள் கொள்ளாவிடில் பிழைகள் நேரிட வாய்ப்பிருக்கிறது. அஃதாவது குடிகளைத் தழுவிய அரசு என்றால் குடிகளினுடைய ஆசைகளைத் தழுவிய அரசு என்று பொருள் கொண்டு- குடிகளுக்குத் தீங்கு செய்து விடக்கூடாது. பிரெஞ்சு மொழீயில் "Gentleman Corruption to the poor" என்று ஒரு பழமொழி உண்டு. அஃதாவது இலவசம், தானம், தருமம் என்பதெல்லாம் பணக்காரர்கள் ஏழைகளுக்குக் கொடுக்கும் இலஞ்சம் ஆகும். இங்ஙனம் வழங்கப் பெறும் இலஞ்சம் காலப் போக்கில் மனிதனைத் தற்சார்பு இல்லாதவனாக்கி வெறும் பிழைப்பு அஃதாவது நாய்ப் பிழைப்புக்காரனாக ஆக்கிவிடும். எனவே, குடிகளின் நலனைத் தழுவிய அரசு அமைதல் வேண்டும். திருவள்ளுவர் காலத்திலும் மக்கள் நலனுக்கு மாறான அரசுகள் இருந்தன. கொடுங்கோன்மையும் நடந்தது. இதனை விலக்கிச் செங்கோல் செலுத்தும் அரசைக் காண்பதே திருக்குறளின் குறிக்கோள்.

இன்று நமது நாட்டில் நடப்பது குடியாட்சி. ஆட்சியாளர்கள் வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப் பெறுகிறார்கள். வாக்காளர்களின் அரசியல் அறிவுத் தகுதிக்கேற்ப ஆட்சி அமையும். ஆதலால், வாக்காளர்களுக்கு அரசியல் அறிவும் தெளிவும் தேவை. இவ்வகையில் நமது நாட்டின் வாக்காளர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டும் நூல் திருக்குறள் ஆகும்.

மனிதன் நாட்டுக்குச் சொத்து. இதுதான் உண்மை. ஆனால் இன்றுள்ள நிலை வேறு. இன்று நாம் நமது நாட்டை நம் சொத்தாக நினைக்கின்றோம். அதனால் நம்மால் நாட்டுக்கு எட்டுனையும் பயன் இல்லை. நாட்டைச் சுரண்டுகின்றோம். நாடு வறுமையிலும், உள்நாட்டு - வெளி நாட்டுக் கடன்களிலும் மூழ்கித் தவிக்கிறது. இன்றைய சூழ்நிலையில், ரூ. 2,24,180 கோடி கடன் இருப்பதாக அறிகிறோம். நமது நாடு சுரண்டப்படுதலையும் நாட்டின் பொருளாதாரச் சீரழிவுகளையும் கடன் சுமைகளையும் நமது வாக்காளர்கள் அறிதல் வேண்டும்; உணர்தல் வேண்டும். நாம் அனைவரும் இந்த நாட்டினுடைய சொத்து. ஆதலால், நாட்டைப் பொருளாதாரச் சீரழிவிலிருந்து மீட்க வேண்டும். மேலும் இந்த நாட்டை வளம் கொழிக்கும் நாடாக மாற்ற வேண்டும். இந்தப் பணியைச் செய்து முடிக்கக்கூடிய ஆட்சியை அமைக்க வேண்டும் என்றெல்லாம்-நாள்தோறும் எண்ண வேண்டும். வாக்களிப்பதற்கு முன் ஒருமுறைக்கு மூன்று முறை எண்ண வேண்டும். நம்முடைய இலட்சியமாக உள்ள நாட்டினை அமைக்கக்கூடிய திறனாளர்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும். திருக்குறள் காட்டும் நாடாக நமது நாடு அமையவேண்டும்.

நம்முடைய நாடு எப்படி அமையவேண்டும்? நமது நாட்டில் வெறும் சோற்றுக்குப் பஞ்சம். மக்கள் பசியால் வருந்துதல் கூடாது. உயிர் இயக்கம் உணவினாலாயது. "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்" என்றமை உணர்க. பசி வந்திடின் எல்லாவிதமான ஆக்கமும் கெடும்; அவலங்கள் அடுக்கடுக்காக வரும். அதனால், நாட்டின் இயற்கை வளமும் பயனற்றுப் போகும்; மனித வளமும் பயனற்றுப் போகும்.

‘நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.’

(1045)

பசித் துன்பம் இல்லாத நாடே நாடு. மற்றவையெல்லாம் நாடல்ல; காடே. இன்று தமது நாடு எப்படி இருக்கிறது? வறுமைக் கோட்டிற்குக் கீழ் 27.1 கோடி மக்கள் வாழ்கிறார்கள். வறுமைக்கோடு என்பதன் பொருள் என்ன? ஒரு வேளை கூட வயிறார உண்ண முடியாதவர்கள் என்பதாகும். தமது நாட்டில் 17 விழுக்காட்டுக் குழந்தைகளுக்குத்தான் நல்ல சத்துணவு கிடைக்கிறது. இந்த அவலம் தொடரக்கூடாது.

பசிக்கு அடுத்தது பிணி. மனித குலத்திற்குப் பகையாக விளங்கும் பிணிகள் ஒன்றா இரண்டா? பலப்பல! நோய், இயற்கையா? இல்லை, இல்லை. செயற்கை! ஆம்! மானுடம் வாழ்வாங்கு வாழாத போது-வாழ இயலாத போது நோய் வருகிறது. தூய்மையான நல்ல காற்று, குடிக்க நல்ல தண்ணீர், சமநிலைச் சத்துள்ள உணவு ஆகியன கிடைத்துவிட்டால் நோயே வாராமல் வாழலாம். நோயற்ற வாழ்வுக்கு முதல் தேவை, காற்று. தூய்மையான காற்று தேவை. மானுடத்திற்குப் பயன்படும் உயிர்க் காற்றை நல்கி உதவும் இயல்புடைய மரங்கள் அடர்ந்து நிற்கும் காடுகள் உள்ள நாடாக விளங்க வேண்டும். மாசுபடாத காற்றுக் கிடைக்கும் நாடாக விளங்க வேண்டும். ஆலைப்புகை, புழுதி, தூசிகள் முதலியன காற்றோடு கலக்காத பாதுகாப்பு உள்ள நாடாக அமையவேண்டும். இன்று நம்முடைய நாட்டில் காற்று மாசுபடுத்தப்பட்டுள்ளது; மிகவும் மாசுபடுத்தப்பட்டுள்ளது. நாள்தோறும் மேலும் மேலும் மாசுறுகிறது. காற்றுக்கேடு செய்யும் தீமை முற்றாகத் தடுக்கப் பெறவில்லை. மரங்களும் போதிய அளவு இல்லை. இருந்தவையும் வெட்டப் பட்டுவிட்டன. தூய காற்று வழங்கும் நாடாக நமது நாடு அமையவேண்டும். அடுத்து, வாழ்க்கைக்குத் தேவை குடிதண்ணீர். நாள்தோறும் நாலு குவளை நல்ல தண்ணீர் நாலு காதத்திற்குப் பிணியை விரட்டும். குடிப்பதற்கு ஊற்று நீரே நல்லது. அஃதாவது பாதுகாக்கப் பெற்ற கிணற்று நீர் நல்லது. இத்துறையில் நமது நாடு எவ்வளவோ பணி செய்திருக்கிறது. ஆனாலும் இன்னமும் பற்றாக்குறைதான்.

அடுத்தது உணவு. உணவு கிடைத்தால் மட்டும் போதாது. நல்ல உணவு - சமநிலைச் சத்துணவு கிடைக்க வேண்டும். காய்கள், கனிகள், பால் மற்றும் எல்லாவகையான உணவுப் பண்டங்களும் தாராளமாகக் கிடைக்க வேண்டும். ஒவ்வொருவரும் சராசரித் தேவையான 2400 கலோரி ஆற்றல் கிடைக்கக்கூடிய அளவு உண்டால் நல்லது. அங்ஙனம் நமது நாட்டில் இப்போது கிடைப்பதில்லை. கிடைத்தாலும் உண்ணும் பழக்கம் வரவில்லை . நமது உணவுப் பழக்கம் மாற வேண்டும். அதற்கு உரியவாறு நாட்டில் உணவு வசதிகள் அமையவேண்டும். சராசரி மனிதனும் சீரான உணவு வசதியைப் பெறத்தக்க வகையில் வருவாய் வரவேண்டும். விலைகளும் கட்டுப்படியானதாக அமைய வேண்டும்.

குடிமக்களின் வருவாய்க்கும் அவர்கள் வாங்கி நுகரக் கூடிய உணவுப் பொருள்களின் விலைக்குமிடையே இன்றுள்ள இடைவெளி மிகவும் கூடுதல். நுகர்பொருள்கள் கட்டுபடியான விலையில் மக்களுக்குக் கிடைக்க வேண்டும். மக்கள் நுகர் பொருள்களின் விலைகளை அரசு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரப் புழக்கத்தின் காரணமாக உற்பத்திச் செலவு கூடி, விலை கூடவேண்டிய அவசியம் ஏற்பட்டால் மக்களின் வருவாய் உயர்வுக்கும் உரிய ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். அதற்கு வாய்ப்பில்லாது போனால் குறைந்த வருவாய் உள்ளவர்களுக்குக் கூடுதல் விலைப்படியை வழங்க வேண்டும்.

நல்ல உணவினால் மட்டும் பிணியே வாராமல் போகாது. கெட்ட பழக்கங்கள் காரணமாக நோய் வரும். கள், போதைப் பொருள்கள், பொருந்தா உணவுகள், பகல் நள்ளிரவுக் காட்சிகள் முதலியன தவிர்க்கப்பெறுதல் வேண்டும். இவை நாட்டில் எளிதாகவோ மலிவாகவோ கிடைத்தல் கூடாது. நமக்கு இன்று தேவை, பிணியில்லா மக்கள் வாழுகின்ற நாடு!

மானுட வாழ்வு, முயற்சிகள் நிறைந்த வாழ்வாக அமையவேண்டும். அம்முயற்சிகளும் ஆக்கவழியிலான முயற்சிகளாக அமையவேண்டும். அங்ஙனம் அமைய ஒரு நாடு பகைவர்களின் அச்சுறுத்தலிலிருந்து மீட்கப் பட்டிருக்க வேண்டும். அதாவது பகை இருத்தல் கூடாது. அண்டை நாடுகளுடனும் உலக நாடுகளுடனும் நல்ல வண்ணம் உறவு அமைய வேண்டும். நமது நாட்டின் நிலைக்குப் பாகிஸ்தான் ஒன்றே போதும்! உலகெங்கணும் படைக்கலத்தளங்கள் அமைக்கும் அமெரிக்காவைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? நாம் நடுநிலைக் கொள்கை-அணி சேராக் கொள்கை என்றெல்லாம் ஏற்றுக் கொண்டிருந்தாலும் இந்த நாடுகள் நம்மிடம் பகைமை காட்டாமல் இல்லை. அதன் காரணமாக ஏழை நாடாகிய நம்முடைய நாட்டின் வரவு செலவுத் திட்டத்திலும் படைப்பெருக்கத்திற்கு ரூ.13,000 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டியிருக்கிறது. எண்ணற்றவர்கள் படைத்துறையில் பணி செய்கின்றனர். இவையெல்லாம் அவசியமானவைதாமா? இவற்றைத் தவிர்க்க நாம் தயாராக இருந்தாலும் நம்மிடம் பகை பாராட்டும் நாடுகள் உடன்பட்டு வருவதில்லை. ஆயினும் சமாதானமும் அமைதியும் தழுவிய நாடாக அமைதல் வேண்டும் என்ற உணர்வை இழத்தலாகாது.

நமது நாடு பசி, பிணி, செறுபகை ஆகியவற்றிலிருந்து விடுதலை பெற்று விளங்கும் நாடாக அமைதல் வேண்டும். இது பொதுவான தன்மை. அதாவது நாடு தழுவிய கொள்கை.

நமது நாட்டின் மனித ஆற்றல் அளப்பரியது. ஆனால் மனித ஆற்றலை முறையாக வளர்த்துப் பயன்பெறவில்லை. அறிவுத் திறனும் செயல்திறனும் உடைய மக்களை நாம் நமது கல்விச் சாலைகளில் உருவாக்க வேண்டும். இதற்குக் கல்வி நிலையங்கள், நூலகம், அறிவியல், ஆய்வகம் (Science Laboratory), தொழில் பயிலுதற்குரிய தொழிலகம் முதலியன அமைத்திடுதல் வேண்டும். ஆரம்பப் பாடசாலைகளில் தரமான கல்வி தர வேண்டும். ஆரம்பப் பாட சாலைகளில் ஆசிரியர்-மாணவர் விகிதாசாரம் 1:35 என்றே அமைய வேண்டும்.

தமிழ்நாட்டில் மொழிச் சிக்கல் தீர்ந்தபாடில்லை. அரசியல் கட்சிகள் மொழிச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதில் காலங்கடத்துகின்றன. மொழிப் பிரச்சனையை உணர்ச்சி நிலையில் அணுகுதல் பிழை என்பதை உணரவேண்டும். தமிழ் நாட்டில் அனைத்து மட்டத்திலும் துறைதோறும் தமிழே பயிற்று மொழியாக அமைதல் வேண்டும். தமிழே எல்லாத் துறைகளிலும் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும். ஆட்சியிலும் கல்வியிலும் மட்டுமல்லாமல் - வாணிபம், தொழில், கோயில் வழிபாடு, இசை போன்ற அனைத்தும் தமிழிலேயே நடைபெற வேண்டும்.

ஆங்கிலம் ஒரு மொழியாக மட்டும் வகுப்பில் கற்பிக்கப்பெறுதல் வேண்டும். மற்றும் மாணவர்கள் விரும்பிக் கற்கக்கூடிய நிலையில் விருப்பப்பாடமாக ஒன்பதாவது வகுப்பிலிருந்து இந்தி மொழி, உருசிய மொழி, சமஸ்கிருத மொழி ஆகியன கற்பிக்கப் பெறலாம். இம்மொழிகளின் பயிற்சி எழுத, படிக்கத் தெரியுமளவுக்கேயாம்.

ஆங்கிலம் மூலமே கற்பிக்கும் பள்ளிகள் தமிழ் நாட்டில் கூடவே கூடா. தமிழகத்தின் அனைத்து மாணவர்களும் ஒரே மாதிரியான கல்வியைப் பெற வேண்டும். இன்று கல்வித் துறையில் நிலவும் இரண்டு ஜாதி முறை அகற்றப்பட்டாக வேண்டும்.

நம் நாட்டில் பிறந்து வளர்ந்து வாழும் குடிமக்கள், முறைமன்றங்களில் தாம் தொடுக்கும் வழக்குகளிலும் தமக்கு எதிராகத் தொடுக்கப்படும் வழக்குகளிலும் என்ன வாதிடப்படுகின்ற தென்பதே புரியாமல், ஊமையர்களாகவும் செவிடர்களாகவும் நிற்கும் அவலநிலை இன்னும் முற்றிலும் தீர்ந்தபாடில்லை. காரணம் இன்று முறைமன்றங்களில் தமிழில் வழக்காடுதல் இல்லை; தமிழில் ஆணைகள் இடப்படுவதில்லை. இந்த இழிநிலையை உடனடியாக நாம் நீக்க வேண்டும். தமிழ் நாட்டில் உள்ள எல்லா முறை மன்றங்களிலும் இனி தமிழ் மொழியில்தான் வழக்கு விசாரனை நடைபெறல் வேண்டும். தமிழ் மொழியில் மட்டுமே ஆணைகள் பிறப்பிக்கவேண்டும்.

அடுத்து, குடிமக்களிடத்தில் நிலவ வேண்டிய நல்லியல்புகள் சில உண்டு.

‘பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு.’

(735)

அதாவது, நாட்டு மக்களிடையில் குழு மனப்பான்மை வளரக்கூடாது. சாதிகளின் பெயராலும் மதங்களின் காரணமாகவும் அரசியல் ஆதிக்கப் போட்டிகளின் காரணமாகவும் பல குழுக்கள் தோன்றுகின்றன. அங்ஙனம் தோன்றாமல் தவிர்ப்பது இன்றியமையாக் கடமை. இன்று நாட்டின் நிலை என்ன? எங்கும் குழுக்கள் அமைந்துள்ளன. இந்தக் குழு மனப்பான்மையால் ஒருவரை ஒருவர் முன்னேற விடாமல் தடை செய்து கொண்டிருக்கின்றனர். இந்தப் பல்குழு மனப்பான்மை மாறினாலே நமது நாடு உருப்படும். பல்குழுக்களின் அமைப்பு அந்த அளவோடு நின்று விடுவதில்லை. கண்டால் சிரித்துப் பேசிக் கொள்வர். ஆனால், உட்பகை இருக்கும். இந்த உட்பகையின் காரணமாகப் பலவீனங்களுக்கு வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம் கலகம் செய்வர்; ஒருவரை ஒருவர் அடித்துக் கொலை செய்து கொள்வர். இதனால் நாட்டில் உருப்படியான எந்தக் காரியமும் நடக்காது. வெறும் போலீசு அரசே நடக்கும். சிறைச் சாலைகள் நிரம்பி வழியும். இங்ஙனம் விளங்குவது நாடல்ல. நாட்டில் பலகுழுக்கள், குழுக்கள் வழிப்பட்ட கலகங்கள் என்றால் நாட்டில் எப்படி அமைதி நிலவும்? பொழுது விடிந்து பொழுது போனால் கலகங்களை அடக்குவதிலேயே அரசின் ஆற்றல் முழுதும் செலவாகும். அரசு, அதன் பணியைச் செய்ய இயலாது. அதன் காரணமாக வளம் பொருந்திய நாடாக அமைக்கும் முயற்சியில் நாடு பின் தங்கி விடும். இன்று நமது நாட்டின் நிலை, எங்கும் குழுக்கள். வெளிப்படையாக நிலவும் சாதி, மத, இன, அரசியல் வேறுபாட்டுப் பிரிவினைகள் ஒருபுறம். ஓரணிக்குள்ளேயே புறத்தே தோன்றாது அகத்தே முரணிய சிந்தையுடன் கூடிய குழுக்கள் எண்ணற்றவை. இவை பெருங்கேடு விளைவிப்பன. ஒரு நாட்டிற்கு வேண்டாதன என்று திருவள்ளுவர் கூறிய கருத்துக்கள் இவை.

இனி, ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்று திருவள்ளுவர் கூறுகின்றார். எதிர்மறையில் கூறியதையே உடன்பாட்டிலும் கூறலாம். திருவள்ளுவர் பிணியின்மையை மட்டும் எதிர் மறையாலும் கூறுகின்றார்; உடன்பாட்டாலும் கூறுகின்றார். ஆம்! நோயற்ற வாழ்வுதானே ஒப்பற்ற செல்வம்! அடுத்து, செல்வம் கொழிக்கும் நாடாக அமைய வேண்டும். செல்வம் சில நாடுகளில் இயற்கையாகவே அமையும். நமது நாட்டில் இயற்கை வளம் உண்டு. ஆனால் நமது நாட்டின் இயற்கை வளத்தை நாம் முற்றாக இன்னமும் அனுபவத்திற்குக் கொண்டு வரவில்லை. செல்வம் என்று பொதுவாகக் கூறியதால் அனைத்துச் செல்வங்களும் அடங்கும். செல்வம் படைக்கப்படுவதே. அதனால்தான் திருக்குறள், "செய்க பொருளை" என்று கூறியது. நாட்டின் அரசு, செல்வச் செழிப்பிற்குத் திட்டமிட்டு, அத்திட்டங்களை நிறைவேற்றும் பொறுப்பை மக்களிடம் தந்து ஓயாது மக்களை உயிர்ப்புடன் இயக்கிக் கொண்டேயிருக்க வேண்டும்; செல்வ வளம் வருதலுக்குரிய வாயில்கள் புதியன புதியனவாகக் காணப்பெறுதல் வேண்டும். இதனைத் திருவள்ளுவர்,

‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.’

(385)

என்று கூறுவார். செல்வத்தை ஈட்டவேண்டும். ஈட்டிய செல்வம் தொகுக்கப் பெறுதல் வேண்டும். செல்வம் தொகுக்கப் பெற்றால்தான் அது மூலதன வடிவத்தைப் பெற்றுத் திரும்பவும் செல்வ உற்பத்திக்குரிய முதலீடாக அமையும் தகுதியைப் பெறும். இங்ஙனம் உருப்பெறும் மூலதனம்தான் திட்டங்களுக்குரிய முதலீடாக அமைய முடியும். அங்ஙணமின்றிக் கருவூலத்திற்குச் செல்வம் வருவதற்குமுன்பே கண்டபடி திட்டமில்லாத செலவுகளைச் செய்தால் செல்வம் சேராது. நமது நாட்டில் இயல்பாகத் திட்டம் இல்லாத செலவுகள் அதிகம். தனி மனித வாழ்க்கையிலிருந்து நாட்டு வாழ்க்கை நிலை வளர திட்டமில்லாத செலவுகள் மிகுதி என்பதை மறந்துவிடக் கூடாது. இந்த முறை கூடாது. அறவே தவிர்க்கப் பெறுதல் வேண்டும். அவசியமாயின் திட்டமில்லாத செலவுகள் 10 முதல் 20 விழுக்காடு வரை வரலாம். செல்வம் தொகுக்கப் பெற்ற பின்பு நாட்டின் வளர்ச்சிக்கு-மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்குத் திட்டமிட்டுச் செலவு செய்ய வேண்டும். செல்வம் வளர்ந்து நுகர்பொருள்கள் சந்தைக்கு வரத் தொடங்கிய நிலையில் அந்த நுகர்பொருள்கள் எல்லா மக்களுக்கும் கிடைக்கும்படி செய்யவேண்டும். நமது நாட்டில் பலர், நல்ல சத்துணவு வகைகளை நுகர்ந்தறியாதவர்கள். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் நாடாக அமைய வேண்டும். யாரானாலும் அதிகாரத்தாலும் பணத்தாலும் பெறும் சலுகைகளை அறவே நீக்க வேண்டும்.

வாழ்க்கை யென்பது துன்பமானதன்று. பொதிசுமையுமன்று. வாழ்க்கை இன்புறு நலன்கள் கூடியதாக மக்களுக்குக் கிடைத்து, மக்கள் களிப்பாக இன்பமாக வாழ்தல் வேண்டும். இன்புறு நலன்கள் என்று கூறின் அவை ஒன்றா? இரண்டா? பலப்பல; அவை உலக அரங்கில் நாளும் வளர்ந்து வருகின்றன. இவையனைத்தையும் மக்கள் ஆர்ந்து அனுபவிக்கும் நாடே நல்ல நாடு.

அடுத்து, பாதுகாப்பு நிறைந்த நாடாகவும் இருக்க வேண்டும். எங்கே பாதுகாப்பு இல்லையோ, அங்கே உற்பத்தி இல்லை; செல்வம் இல்லை; இன்பம் இல்லை; கடைசியாக ஆட்சியும் இல்லை என்றாகி விடும். நாட்டு மக்களுக்கு அரசு வழங்கவேண்டிய பாதுகாப்பைப் பற்றிச் சேக்கிழார் கூறுவதை அறிந்து கொள்ளுதல் நலம்.

‘மாநிலம்கா வலனாவான் மன்னுயிர்காக் கும்காலைத்
தான்தனுக் கிடையூறு தன்னால்தன் பரிசனத்தால்
ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர்தம்மால்
ஆனபயம் ஐந்தும்தீர்த் தறம்காப்பான் அல்லனோ?’

என்பது சேக்கிழார் வாக்கு.

நாட்டை ஆள்பவர்களால், அவர்களுடைய ஆட்சியால் மக்களுக்குத் துன்பம் வருதல் கூடாது. ஆட்சியால் மக்களுக்கு நேரிடக்கூடிய துன்பத்தில் தலையாயது பயம். பயத்திற்கு மக்கள் இரையாகக் கூடாது. தாய்ப்பசுவினைக் கன்று அணைந்து செல்லுமாப் போல் மக்கள், ஆட்சியை அணைந்து செல்ல வேண்டும். ஆட்சியினரால் துன்பம் வருவது ஒருபுறம் இருக்க, அவர்களுடைய படை, பரிவாரங்களால் துன்பம் வரக்கூடாது. இன்று நம்முடைய நாட்டில் இத்தகு துன்பம் மிகுதியாக இருப்பதை நடைமுறையில் அனுபவிக்கிறோம். ஏன்? தன் எதிரியை ஒழித்துக்கட்டவே அரசியல் கட்சிகளில் சேர்கிறார்கள். ஒருவர், தன் பகைவரைக் கூட எளிதாகப் பழிவாங்கக் கூடிய வாய்ப்பு நாட்டில் அமைதல் கூடாது. அத்தகைய பழிவாங்கும் செயல் நிகழாதவாறு அரசு பாதுகாப்பு வழங்கவேண்டும். கள்வரால் வரும் துன்பம் அறவே கூடாது. இன்று கள்வர் எங்கு இல்லை! மற்றும் கொடிய விலங்குகளாலும் நச்சுயிர்களாலும் கூட ஆபத்து வராமல் பாதுகாப்பு வழங்கப் பெறுதல் வேண்டும். இத்தகைய பாதுகாப்பு நிறைந்த நாடே நல்ல நாடு.

அடுத்து, திருவள்ளுவர் தள்ளா விளைநிலம் உள்ள நாட்டை வரவேற்கிறார். நிலம் பொதுவே. நிலம், தள்ளா விளையுளாக மாறவேண்டுமானால் அங்கு நல்ல அறிவறிந்த ஆள்வினையுடைவர்கள், உற்பத்தி சார்ந்த உழைப்புடையவர்கள் வாழ்தல் வேண்டும். தள்ளா விளையுளை முறையாகப் பயன்படுத்தி, பயன்கொண்டு வையகம் பயனுற வாழ்வோரே தக்கார். ஒரு நாட்டில் செல்வர்கள் வாழ்வார்கள். அந்தச் செல்வர்கள் தாழ்விலாச் செல்வர்களாக விளங்குதல் வேண்டும். வஞ்சனையான வழிகளில் பொருள் செய்வோரும், பிறர் அழக் கொள்பவர்களும், பிறர் பங்கைத் திருடுபவர்களும் சமுதாய விரோதிகள். தாமே உழைத்துப் பொருளீட்டுபவர்கள் தாழ்விலாச் செல்வர்கள். இங்ஙனம் ஒரு நாடு சிறந்து விளங்குதலுக்குரிய இயல்பினைத் திருவள்ளுவர் நமக்கு எடுத்துக் காட்டியுள்ளார்.

‘தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.’

(731)

இத்தகு நாடாக நமது நாட்டை நாம் உருவாக்க வேண்டும்.

மக்கள் வாழ்வின் அனைத்துத் துறைகளையும் இன்று இறுக்கிக் கொண்டுள்ள அதிகாரச் செல்வாக்கு, பணச்செல்வாக்கு ஆகியவற்றின் பிடி விடுபட்டு, எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கை வழியில் ஆட்சி அமைவதற்குரிய எல்லா முயற்சிகளிலும் மக்கள் ஈடுபடவேண்டும்.

மீண்டும் தொகுத்து இக்கால வழக்கியல் வார்த்தைகளில் ஒரு நாடு எப்படி இருக்கவேண்டும் என்பதைப் பார்ப்போம்.

1. நாட்டை வளப்படுத்தி வாழக்கூடிய- நாட்டுக்குச் சொத்தாக இருக்கக்கூடிய குடிமக்கள் வேண்டும்.

2. பல குழுக்களாகப் பிரித்து உட்பகையை வளர்த்துக்கொண்டு நல்லாட்சிக்கு இடையூறு செய்யும் மக்கள் கூடாது. சாதி, மதம், கட்சிகள் பெயரால் சண்டையிட்டுக் கொள்ளாத மக்களாக இருத்தல் வேண்டும். அதாவது, சாதிகள் வளரக் கூடாது. பொது வாழ்க்கையில் மதங்கள் தலையிடக் கூடாது. (இந்தத் தீமையை அரசியல் கட்சிகள் நேரிடையாகவோ மறைமுகமாகவோ வளர்க்கக் கூடாது.)

3. மக்கள் நுகர்வுக்குரிய உணவு, உடை முதலியவற்றின் விலை கட்டுப்படுத்தப் பெறுதல் வேண்டும்.

4. வறுமை இருக்கக் கூடாது. தனி ஒருவர் வருவாய், வாழ்க்கைக்கு ஏற்றதாக அமையவேண்டும். (தனி ஒருவர் வருவாய் பற்றிய இன்றுள்ள கணக்கு முறை தவறானது. அதாவது கோடீசுவரனையும் கூழுக்கு அழுபவனையும் ஓரணியில் நிறுத்திச் சராசரி பார்க்கக்கூடாது.)

5. வேலை வாய்ப்பு வேண்டும். அதாவது உழைப்பதற்கு உரிமையும் வாய்ப்பும் வேண்டும். வேலைக்கு உத்தரவாதம் தருதல் வேண்டும். வேலை தரும் வரை அரசு, ஒரு வாழ்நிலைப்படி தரவேண்டும்.

6. நல்ல சுகாதார, மருத்துவ வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் மக்களின் சராசரி வாழ்நாளைக் கூட்டுதல் வேண்டும்.

7. கற்க இயலும் அளவுக்குக் கல்வி கற்கும் உரிமை அனைவருக்கும் வேண்டும். எந்த நிலையிலும் கல்வி இலவசமாகவே வழங்கப் பெறுதல் வேண்டும்.

8. சமாதான்மும் அமைதியும் தழுவிய வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

இத்தகு வாழ்க்கை வசதி நிறைந்த நாட்டை உருவாக்குவது நமது கடமை. நாட்டுப் பணியில் ஈடுபட எல்லாருக்கும் இயலாது. ஆதலால், நாம் இவற்றை நிறைவேற்றக்கூடிய பிரிதிநிதிகளைத் தேர்வு செய்து அவர்களிடம் நாட்டு ஆட்சியை ஒப்படைக்க வேண்டும்.

நல்லாட்சியை அமைக்க மக்களுக்கு உரிமை வழங்குவதே வாக்குச் சீட்டு. இந்த வாக்குச் சீட்டு ஆற்றல் மிக்கது; புனிதமானது. நாம் ஒவ்வொருவரும் 21 வயது நிறைந்தவுடனேயே வாக்காளராகப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இது நமது கடமை. தலையாய உரிமையும் கூட. அதுமட்டுமல்ல, வாக்காளரும் ஒரு வகையில் ஒரு பதவியுடையவர் என்று கூடக் கூறலாம்.

நமது நாட்டில் கட்சி ஆட்சி நடைமுறைதான் இருக்கிறது. ஆதலால் தனி ஒருவர் தேர்தலில் கணிப்புக்குரியவர் அல்லர். கட்சியின் அமைப்பு, கட்சியின் கொள்கை, கட்சியின் தலைமை, கட்சியின் சென்ற கால வரலாறு ஆகியனவே கவனத்திற்குரியன; ஆய்வுக்குரியன. அதோடு இந்தக் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகள் ஆய்வுக்குரியன. நாம் தேர்ந்தெடுப்பவர்கள் ஆட்சியாளர் களாக வருபவர்கள். அவர்களுக்கு என்ன தகுதி வேண்டும்? சிறந்த செயல்களைச் செய்வதற்குரிய திறமை வேண்டும். மக்கள் நலனுக்குரியவற்றை நாடிச் செய்யும் அறிவும் தெளிவும் வேண்டும்; உறுதியும் வேண்டும். மக்கள் விரும்புவதைச் செய்து மலிவான விளம்பரத்திற்காகவும் தொடர்ந்து அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் மக்களின் அறிவு பூர்வமில்லாத ஆசாபாசங்களுக்கு இரையாகிக் கெடுதல் செய்யக் கூடாது. சிறந்த பணிகளைச் செய்வதற்குரிய கருவிகளைத் தேடி அமைத்துக் கொள்ளும் திறமை வேண்டும். திறமை மட்டும் போதாது. காலமறிந்தும் செய்ய வேண்டும். அதாவது, ஆட்சியில் அமர்பவர்கள் நோய்க்கு மருந்துபோடும் திறமையுள்ளவர்களாக இருந்தால் போதாது. நோயின் காரணத்தையே மாற்றும் செயல் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதற்குரிய அகக் கருவிகளாகிய அறிவு, திறன் ஆகியன பெற்றிருக்க வேண்டும். புறக்கருவிகளாக விளங்கக்கூடிய தக்காரைத் துணையாகப் பெறுதல் வேண்டும். எல்லாவற்றையும் உரிய காலத்தில் செய்தல் வேண்டும்.

நாட்டை வளப்படுத்தும் முயற்சியில் ஈடுபடும் பொழுதும், நல்லாட்சி நடத்தும் பொழுதும் சில தனி நபர்கள் பாதிக்கப்படலாம். அவர்கள் பெரியவர்களாகவும் கூட இருக்கலாம். ஆயினும் தயக்கம் கூடாது. நாட்டின் நலனுடன் சம்பந்தப்பட்ட காரிய சாதனையே குறிக்கோளாக அமைதல் வேண்டும். அடுத்த தேர்தலிலும் தொடர்ந்து அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதும் குறிக்கோள்களாக இருக்கக் கூடாது. அதனால் எதிர்ப்புக்கு அஞ்சாது எடுத்த பணியைச் செய்து முடிக்கவேண்டும். நாள்தோறும் ஆட்சியியலுக்குரிய அரசியல், குடிமக்களியல், தொழிலியல், பொருளியல், நிதியியல் நூல்களைக் கற்றறிதல் வேண்டும். நாட்டு மக்களின் உள்ளத்து இயல்புகளையும், மனப் போக்குகளையும் நாள்தோறும் கற்றறிதல் வேண்டும். தொடங்கிய பணியைச் செய்து முடிக்கும் திறனுடைய ஆளுமை வேண்டும்.

அடுத்து, ஆள்பவர்களுக்குத் தமது கட்சி இயற்றும் செயல்முறைகளில் மக்களை ஒத்துழைக்கும்படி செய்து கொள்வதற்குரிய சொல்லாற்றல் இருக்க வேண்டும். ஆளுமைத்திறன் வேண்டும். நன்றாற்றும் பொழுது எதிர்ப்படக்கூடிய இடர்ப்பாடுகளைத் தாங்கிக் கொள்ளவும் தொடர்ந்து செயற்படக்கூடிய ஆற்றலும் உளப்பாங்கும் தேவை. செய்யும் பணிகளில் தூய்மை வேண்டும். திருக்குறளில் நேரிடையாகக் கையூட்டு (இலஞ்சம்) பேசப்படவில்லை. ஆனாலும் திருக்குறள், கையூட்டைப் பற்றியும் பேசுகிறது. நாடாளும் பொறுப்பினை ஏற்றுக் கொண்ட அமைச்சர்களுக்கு வறுமை வந்துற்றபோதும் அவர்கள் பழிக்கப்படுவனவற்றைச் செய்யக்கூடாது என்று கூறுகிறது.

‘ஈன்றாள் பசிகாண்பா னாயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.’

(656)

‘பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.’

(657)

‘கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.’

(658)

ஆகிய குறள்கள் கையூட்டைப் பற்றியனவேயாம். நாடாள்வோரின் தாய்க்குப் பசி என்றால் வறுமை என்பதுதானே பெறப்படுகிறது. ஈன்ற தாயின் பசி நீக்க இழிவாயின செய்யக் கூடாது என்றால் கையூட்டு வாங்கக் கூடாது. நாட்டின் நிதியை-மக்களின் நிதியைத் தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்பது தானே பொருள்! பழியுடன் கூடியதாகிய கையூட்டு, கள்ளக் கணக்கு முதலியவற்றால் வரும் ஆக்கத்தைவிட, நாட்டை ஆள்பவர்களுக்கு வரும் வறுமையே நல்லது என்று கூறியதனாலும் அரசைப் பயன்படுத்தி, நாட்டை ஆளும் பொறுப்பிலிருப்பவர்கள் பொருள் சேர்ப்பதை விலக்குகிறது திருக்குறள்.

மற்றும், நீதி நூலோர் ஆகாது என்று கூறிய கள், சூது முதலியவற்றால் பொருளீட்டல், ஆளப்படும் மக்களிடத்தில் அச்சத்தினையும் ஆசையையும் காட்டிப் பொருளீட்டல்-அதாவது பரிசுச் சீட்டுக்கள் மூலம் பொருளீட்டல் முதலியன தவறு என்று திருக்குறள் கூறுகின்றது. ஏன், ஆள்பவர்-ஆளப்படுபவர்களிடம் இரந்து கேட்டு வாங்குதலையும் கூட ஆகாது என்று திருக்குறள் மறுக்கிறது. இரப்பவர் ஆட்சியாளர். அவர் கையில் வேல் இருக்கிறது. அதனால் அது இரத்தல் போலத் தோன்றினாலும் மறைமுகமான கையூட்டேயாகும். இல்லை இது கொள்ளையாகக் கருதப்படும். அரசிடம் ஆளப்படுபவர்கள்-மக்கள் இரந்து உயிர் வாழ்தல் கூடாது-ஆகாது என்பதையும் இந்தக் குறள் வலியுறுத்துகிறது. ஆகவே தகுதியுடையவர்களை ஆள்பவர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

சாதி, மதம், உறவினர் என்ற அடிப்படையில் வாக்களிப்பது நல்ல மரபன்று; நன்மையும் பயவாது; தீமையே வளரும். வாக்களிப்பில் பணம் விளையாடக் கூடாது; வாக்கு விற்கப்படுதல் கூடாது. தேர்தலில் வாக்குகளை வழங்குவதில் பணத்தின் செல்வாக்கு, ஆதிக்கம் செலுத்துமானால் எப்போதும் நல்லாட்சியே வாராது. அடுத்து கூட்டங்களைக் கூட்டிக் காட்டி பிரமிக்க வைத்து இவர்களே வெல்வார்கள் என்ற முடிவை எடுத்துக் கொள்ளச் செய்து தேர்தலில் வெற்றி பெற முயல்பவர்களுக்கு வாக்காளர்கள் வாக்களிக்கின்ற அறியாமை அகல வேண்டும். அதோடு கவர்ச்சி முதலியவற்றினாலும் வாக்குகள் வாங்குவதற்கு முயலக்கூடாது. வாக்காளர்கள் அறிவார்ந்த முறையில் சிந்தித்துத் தெளிவான முடிவை எடுத்துக் கொண்டு வாக்களித்தல் வேண்டும். இத்தகு அறிவார்ந்த செயல்முறைக்கு அரசியல் கட்சிகள் துணை செய்ய வேண்டும்.

தி.IV.19

‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.’

(517)

என்ற திருக்குறளின்படி நாட்டின் நலிவை நீக்கி, நல்வளந்தர, மொழி வளர, கல்வி-அறிவு பெருகி வளர, ஆள்வினையும் தொழில் வினையும் பெருகி வளரத் தக்க வகையில் எந்தக் கட்சியால் ஆட்சி செய்ய இயலுமோ அந்தக் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும். இது வாக்காளர்கள் கடமை.