குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1/திருக்குறளில் அரசியல் சமூகவியல்

விக்கிமூலம் இலிருந்து

5


[1]திருக்குறளில் அரசியல் சமூகவியல்


மனித குலம் உய்வதற்காக இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவரால் திருக்குறள் இயற்றப் பெற்றது. இன்று திருக்குறள் ஒரு சிறந்த இலக்கியம் என்றே பலர் கருதுகின்றனர். இது உண்மையேயானாலும் திருக்குறள் ஒர் இலக்கியம் மட்டுமல்ல. திருக்குறள் பல்துறை தழுவிய ஒரு முழுநூல். திருக்குறளை இலக்கியமாகக் கருதிப் பாராட்டிக் கொண்டு வந்தாலும் திருக்குறள் ஒரு இலக்கியம் மட்டுமல்ல; அறநூல்; நீதிநூல். ஏன்? அறிவியல் சார்ந்த ஒரு நூல். ஆனால், திருக்குறளை இதுவரையிலும் யாரும் அறிவியல் பார்வையில் பார்க்கவில்லை. திருக்குறள் "இந்திய நீதிநூல்களில் மிகச் சிறந்தது” என்று சர் ஆல்பர்ட் சுவைட்சர் கூறினார். டாக்டர் ஜியூ போப் திருக்குறளைப் படித்து அனுபவித்து ஆங்கில மொழியில் மொழி பெயர்த்தார்.

திருக்குறளைப் போற்றித் திருவள்ளுவ மாலை என்று ஒரு பாராட்டு மாலை எழுந்தது. சங்க கால அறிஞர்கள் திருக்குறளைப் பலபடப் பாராட்டியுள்ளனர். இறையனார் என்பவர் ஒரு புலவர். இறையனாரை மதுரை ஆலவாயண்ணல் என்று கூறுவாரும் உண்டு. திருக்குறள் காலங்கடந்தும் நின்று விளங்கும்; "கற்கக் கற்க என்றும் இன்பம் தரும்” என்ற பொருள்படப் பாராட்டியுள்ளார். சங்ககாலப் புலவர்களுள் கபிலர், பரணர், நக்கீரர் முதலிய பெரும்புலவர்கள் திருக்குறளைப் பாராட்டியுள்ளனர். திருவள்ளுவ மாலையில் திருக்குறளை மிகச் சிறப்பாகப் பாராட்டும் பாடல் மாங்குடி மருதனார் பாடியது.

“ஒதற் கெளிதாய் உணர்தற் கரிதாகி
வேதப் பொருளாய் மிகவிளங்கி - தீதற்றோர்
உள்ளுதோ றுள்ளுதோ துள்ளம் உருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு”

என்பது அப்பாடல். திருக்குறள் இனிய எளிய நடையில் அமைந்தது. உரையாசிரியர் துணையின்றிப் படிக்கக் கூடிய ஒரே நூல் திருக்குறள்தான். எளிமை என்பதால் பொருளாழமில்லாதது என்று கருதுதல் கூடாது. நடை எளிது. உணர்த்தும் பொருள் அரியது.“வேதங்கள் வேதங்கள்” என்று மிகைபடப் பாராட்டுகிறார்களே அந்த வேதங்களின் உட்பொருள் முழுதும் அடங்கியது. “திருக்குறளை இந்திய தேசிய நூலாக்க வேண்டும்” என்ற குரல் நான்கு புறமும் இன்று கேட்கிறது. அப்படியானால் இராமகாதை, மகாபாரதம், பண்டை மறைகள் முதலியவற்றுக்கு அந்தத் தகுதி இல்லையா என்று கேட்கலாம். இவைகள் திருக்குறளுக்கு ஈடான இலக்கியங்களேயல்ல என்று பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியுள்ளார். ஆதலால் இந்திய மொழிகளில் தோன்றியுள்ள நூல்களில் திருக்குறளுக்கு ஈடான ஒன்றில்லை; திருக்குறளுக்கு ஒப்பச் சொல்லக் கூடியதாக இல்லை என்று தெரிய வருகிறது. திருக்குறளுக்குப் பிந்திய நூல்களிலும் திருக்குறள் எடுத்தாளப் பெற்றிருக்கிறது. “செய்ந்நன்றியறிதல்” என்ற அதிகாரத்தைப் புறநானூறு பாராட்டுகிறது.

“செய்தி கொன்றார்க்கு உய்தி இல்லென
அறம் பாடிற்றே”

(34)

என்ற புறநானூற்றுப் பாடலில் திருக்குறள் “அறம்” என்றே பாராட்டப் பெறுகிறது. செய்ந்நன்றியறிதலாகிய இந்த அறம் இன்று மறைந்து வருகிறது. ஆனால் நன்றி கூறல் என்ற சடங்கு மேவி வளர்ந்து வருகிறது. திருவள்ளுவர் நன்றி கூறலை எடுத்துக் கூறவில்லை. ஒரு நல்ல சமுதாய அமைப்பிற்கு நன்றி கூறலும் தேவைப்படாது. ஏன்? மனிதராய்ப் பிறந்தோர் ஒருவருக்கு ஒருவர் கடமைப் பட்டிருக்கின்றோம். ஆதலால், நன்றி கூறும் அவசியம் எழ நியாயமில்லை. நன்றியறிதல் என்பது ஒருவர் சொன்ன - செய்த நல்லதை நினைந்து நினைந்து மகிழ்தலும், அந்த நல்லதை வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டு ஒழுகுதலுமேயாம்.

அப்பரடிகளும் திருக்குறளைத் தமது திருமுறையில் எடுத்தாண்டுள்ளார். திருக்குறளில் இனியவை கூறல் என்ற ஒர் அதிகாரம் இருக்கிறது. அதில்

“இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று”

(100)

என்பது குறள். இதனை அப்பரடிகள், “கணியிருக்கக் காய் கவர்ந்த கள்வ னேனே” என்று கூறுகின்றார். இன்னும் திருக்குறளை மையமாகக் கொண்டு பல நூல்கள் வெளி வந்துள்ளன. அவற்றுள் சிறந்தது முதுமொழி மேல்வைப்பு.

திருக்குறள் உலக மொழிகள் பலவற்றில் ஏறக்குறைய 86. மொழிகளில் மொழி பெயர்க்கப் பெற்றுள்ளது. உலகம் இன்று திருக்குறளைத் தனக்கு உரிமையாக்கிக் கொண்டிருக்கிறது. அதனால்தான் பாரதி,

“வள்ளுவன் தன்னை உலகினுக் கேதந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”

என்று பாராட்டினான்.

திருவள்ளுவர் தந்த திருக்குறள் ஒரு அரசியல் நூல்; சமூகவியல் நூல், திருக்குறளுக்கு முன்பு பல அரசியல், சமூக பொருளாதார நூல்கள் தோன்றியுள்ளன. இவ்வகை நூல்கள் செய்தவர்களில் கன்பூஷியஸ் (கி.மு. 557-478), பிளேட்டோ (கி.மு. 427-347), அரிஸ்டாட்டில் (கி.மு. 384-322), சாணக்கியர் (கி.மு. 323-272) ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். இந்த அரசியல் ஞர்னிகளில் கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர்கள் பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோர். சீன தேசத்தைச் சேர்ந்தவர் கன்பூஷியஸ். இந்தியாவின் வடபுலத்தைச் சேர்ந்தவர் சாணக்கியர். இவர் மெளரிய சாம்ராஜ்யத்தை நிறுவியவர். அரிஸ்டாட்டில் மகா அலெக்ஸாண்டருக்கு ஆசிரியர்.

திருவள்ளுவருக்கு முன்பு தமிழ்நாட்டில் திருக்குறள் போல ஒரு அரசியல் சமூக, பொருளியல் நூல் தோன்றிய தில்லை. ஏன்? உலகில் மற்ற நாடுகளை விடத் தமிழ்நாட்டு மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு வரலாற்றுக் காலந்தொட்டே குறைவுதான்! அந்த நிலை இன்னும் தொடர்வது வருந்தத்தக்கது. திருக்குறளுக்கு முன் உலக அரங்கிலும் இந்திய நாட்டளவிலும் பல அரசியல், சமூக, பொருளாதார நூல்கள் தோன்றியிருந்தாலும் திருக்குறளைப் போல அவை அறந்தழிஇய அரசியல் கூறவில்லை. மக்கள் நலந்தழிஇய அரசியல் சொல்லவில்லை என்பது அறிந்தோர்கூறும் உண்மை. சாணக்கியரின் அர்த்தசாஸ்திரமும் பிளேட் டோவின் குடியரசும் அரசனின் ஆதிபத்தியத்தை அரண் செய்வன. ஆனால் திருக்குறள் மனித உரிமைகளையும் மக்கட் சமுதாய நலன்களையும் காத்து நிற்பது.

திருக்குறள் தனி மனிதன், குடும்பம் முதலியவற்றை மையமாகக் கொண்ட அறத்துப்பாலை முதலாவதாகவும் மக்களை மையமாகக் கொண்ட சமுதாயம், அரசியல், பொருளாதார இயல்புகளைக்கொண்ட பொருட்பாலை இரண்டாவதாகவும் நல்லதொரு சமுதாயத்திற்கு அடிப்படையாக அமையும் காமத்துப்பாலை மூன்றாவதாகவும் கொண்டு விளங்குகிறது. இந்த முறை வைப்பில் அமைத்தவர் திருவள்ளுவரா? அல்லது பின்னேவந்த உரையாசிரியர்களா? என்று ஒரு விவாதம் நடந்து வருகிறது. நாம் அந்த விவாதத்தைப் பற்றி அக்கறை காட்ட விரும்பவில்லை. ஆனால் இலக்கிய அமைவிலும் சரி, சமுதாய அமைப்பு முறையிலும் சரி இப்போதுள்ள அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற முறை வைப்பு சிறந்தது; இயற்கையானது என்பதே நமது கருத்து.

திருவள்ளுவர் நூல் செய்யத் தொடங்கும் முன்பே முப்பாலாகச் செய்யத் திட்டமிட்டிருப்பாரா என்பது நமது ஐயம்; ஆய்வுக்குரிய செய்தி. மற்ற அறிஞர்களைப் போல ‘அறம்’ பற்றியே நூலியற்ற எண்ணியிருப்பார். ஆனால் அறத்துப்பாலின் முடிவில் “ஊழ்” என்ற அதிகாரம் வந்தமைகிறது. இஃது இயல்பும்கூட செய்யும் அறத்தைப் பொறுத்து ஊழ் அமைவதில்லை. அறம் செய்யும் நோக்கத்தைப் பொறுத்தே ஊழ் அமைகிறது. அறம் செய்யும் போது அறத்தைத் தற்சார்பின்றி அறத்திற்காகச் செய்யாமல், சமுதாய மேம்பாட்டிற்காகச் செய்யாமல் பற்றுடன் செய்வது ஊழிற்கு அடிப்படையாகிறது.

அறிவும் சமுதாய உணர்வும் கலந்த நிலையில் செய்யப் பெறும் எந்த ஒரு செயலும் ஊழ் ஆக உருப்பெறாது. ஆக, வாழ்தல் செயல் இயக்கமே! அதுவும் அறவழிப்பட்ட செயல் இயக்கமே! அந்த அறம், அறியாமை காரணமாகவும் சமுதாய அமைப்பின் காரணமாகவும், பொருளியல் குறைபாடுகள் காரணமாகவும் அமைவான அரசு அமையாமையின் காரணமாகவும் ஊழாக உருப்பெறுகிறது. தெப்பம் வெள்ளப் பெருக்கின் வழிப்பட்டுச் செல்லுதல்போல, மனிதன் ஊழின் வழிச் செல்ல லாகாது. ஊழை எதிர்த்துப் போராட வேண்டும். ஆதலால், ஊழை எதிர்த்துப் போராடுவதற்குரிய கருவி, கரணங்களை மனிதனுக்கு அறிமுகப்படுத்தப் பொருட்பாலை இயக்கு கின்றார். ஆயினும், பொருட்பால் இயக்கத்தின் முடிவில் சமுதாயம்-அன்று வாழ்ந்த சமுதாயம்-திருவள்ளுவர் வழித் தடத்தைப் பின்பற்றி வராமையின் காரணமாக மனநிறைவு பெறாத நிலையில் பொருட்பாலைக் கயமை அதிகாரத்தில் முடிக்கின்றார்.

ஆயினும் மனிதத்தின்பால் திருவள்ளுவருக்கு உள்ள ஈடுபாட்டால் புதியதோர் தலைமுறையையாவது தம் வழிக் காண விரும்பி, காமத்துப்பால் செய்கின்றார். சிலர் இதனை இன்பத்துப்பால் என்றும் கூறுவர். ஆரிய மாயைக் கலாச்சாரப் படையெடுப்பிற்குப் பின்தான் “காமம்” என்ற சொல் கொச்சையாயிற்று. சங்க காலத்தில் “காமம்” என்ற சொல் நல்ல பொருளிலேயே வழங்கப்பெற்று வந்துள்ளது.

“காமஞ் சான்ற கடைக்கோட் காலை
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி”

(தொல். நூற்பா. 138)


“காமம் செப்பாது கண்டது மொழிமோ”

(குறுந்தொகை 2)

என்பனவற்றைக் காண்க. காமத்துப்பாலிலும் ஆங்காங்கே அறமும், பொருளும் வலியுறுத்தப்படுகின்றன. அதுமட்டுமின்றிக் காமத்துப்பாலில்தான் திருவள்ளுவர் அமைதியாகப் பேசுகின்றார்; திருவள்ளுவர் வெகுண்டும் நொந்தும் இயற்றிய குறட்பாக்கள் இல்லை. அது மட்டுமல்ல. திருவள்ளுவர், மக்கள் தம்மை அந்நியராகக் கருதுகிறார்கள் போலும் என்றும், நாம் சொன்னதைக் கேட்கவில்லை போலும் என்றும் கருதி மக்களுடன் ஒன்றிய உறவுள்ள பாத்திரங்கள் வாயிலாகப் பேசுகின்றார். சுவையிலும், பொருளிலும், பேசும் பாங்கிலும் காமத்துப்பால் சிறந்து விளங்குகின்றது. கொச்சைத்தனமில்லாமலும் விரசம் வராமலும் காமம் பற்றிக் கூறும் நூல் திருக்குறளன்றி வேறில்லை.

திருக்குறள் இலக்கிய வடிவில் அமைந்ததொரு அறிவியல் நூல். திருக்குறளின் நிலத்தியல், தாவரஇயல், ளவியல், சமூகவியல், அரசியல், பொருளியல் முதலிய பல்வேறு அறிவியல் துறைகளைத் தழுவிய கருத்துக்கள் உண்டு.

“விசும்பின் துளிவிழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது”

(16)

என்ற திருக்குறளில் நிலத்தின் மேற்பரப்பில் உள்ள மண்கண்டம், பசுமைக் கரு தாங்குதற்குரியது என்னும் மண் பாதுகாப்பு அறிவியல் பற்றிக் குறிக்கின்றார். அனிச்சம்பூ பயன்மரம், மருத்து மரம் என்று தாவரவியல் பற்றியும் பேசுகின்றார்.

“இன்னசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்”,

(314)

“கொன்றன்ன இன்ன செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும்”

(109)

என்ற குறட்பாக்கள் மூலம் உளவியல் உணர்த்துகின்றார். அரசியல், பொருளியல் எல்லாரும் அறிந்ததே. ஆதலால் திருக்குறளை அறிவியல் சார்ந்த ஒரு வாழ்வியல் நூலாகக் கருதவேண்டும்.

திருக்குறள் தனி மனிதனில் தொடங்கி, குடும்பித்தை உருவாக்கி, சமூகத்தைக் கண்டு, பின் சமூகத்தை நெறிப்படுத்தும் அரசைப் பற்றிப் பேசுகின்றது. சமூக அமைப்பு உருவாகின்ற போதுதான் ஊர், நகரம், நாடு முதலியன தோன்றுகின்றன. “பல குடும்பங்கள் தோன்றிய பிற்கு அவை ஒன்று கூடித் தினசரித் தேவைகளைத் தேடித் தருவதுடன் நிற்காமல், அதற்கும் மேலான ஒரு பலனை அடையவேண்டும் என்று முயற்சி செய்யுமிடத்துக் கிராமம் உருவாகிறது” என்பது அரிஸ்டாட்டிலின் கருத்து. திருக்குறளில் சமூகம், சாதி என்ற சொற்கள் இல்லை. குலம், குடி என்ற சொற்கள் உள்ளன. குலம் வேறு சாதி வேறு. குலம் ஒழுக்கத்தின் வழி வருவது. “குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிகட்கெல்லாம்” என்பான் கம்பன். “ஒழுக்கம் உடைமை குடிமை” என்பது திருக்குறள். ஆயினும் “உலகம்” என்று பல குறட்பாக்களில் திருவள்ளுவர் கூறுவதால் ச்மூக அமைப்பையும் விட எல்லை கடந்த பெரிய உலக சமுதாயத்தைப் பற்றியே திருவள்ளுவர் சிந்தித்துள்ளார். ஒழுக்கம் என்பதற்குப் புது இலக்கணம் கண்டுள்ளார்.

“உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்”

(140)

என்றார். கள்ளுண்ணாமை முதலிய பல்வேறு ஒழுக்க நெறிகளை - ஒழுகலாறுகளைத் திருவள்ளுவர் கூறினாலும், “உலகத்தோடு ஒட்ட ஒழுகுதலை” வலியுறுத்துகின்றார். மீண்டும்,

“எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு”

(426)

என்றும் வேறோரிடத்தில் கூறுகின்றார். ‘சான்றோரால் எண்ணப்பட வேண்டாதார் கள் உண்க’ - என்றதால் சான்றோருக்கு அளித்த முதன்மை புலனாகிறது.

உலகத்தைத் தழுவிநின்று ஒழுகி உலகத்தவரை நட்பாக்கிக் கொள்வது அழகு என்றும், அங்ங்னம் பெற்ற நட்பை மலர்தலும் குவிதலும் இன்றி ஒருநிலையாகப் பேணுதல் அறிவுடைமைக்கழகு என்றும் திருவள்ளுவ்ர் கூறுகின்றார்.

“உலகந் தழிஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு”.

(425)

ஆதலால் உலகந்தழிஇய நட்புடையராக வாழ்தலைத் திருக்குறள் வலியுறுத்துகிறது.

மானுட வாழ்வு செயல் இயக்கத் தொடர்புடையது. செயலாக்கத்தின் வளர்ச்சி பற்றிக் கூறும் வாழ்க்கை நூல்கள் பல உண்டு. அந்நூல்கள் செயல்களைப் பற்றி என்ன சொல்லியிருந்தாலும் அதைப்பற்றிப் பொருட்படுத்தாமல் உலக நடைமுறையினை அறிந்தே செய்ய வேண்டும் என்று திருவள்ளுவர் ஐயத்திற்கு இடமின்றிக் கூறுகின்றார்.

“செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்”

(637)

என்பது திருக்குறள். அதனால் திருவள்ளுவர் உலகமாகிய சமுதாயத்திற்கு அளித்த மாட்சிமை உணரப்படுகிறது.

திருவள்ளுவர் மாந்த உயிரினத்தில் வேறுபாடே பாராட்டவில்லை; இன்றைய உலக நாடுகள் சபை வலியுறுத்தும் மனித உரிமைகளை அன்றே வலியுறுத்தியுள்ளார். பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட ரூஸோ, “மனிதன் பிறக்கும் பொழுது சுதந்திரமாகப் பிறக்கின்றான். ஆனால் அவன் பிறந்து வளரும் பொழுது நூற்றுக்கணக்கான விலங்குகளை மாட்டிக் கொள்கிறான்” என்று கூறுகிறார். திருவள்ளுவர் பிறப்பின் அடிப்படையில் எல்லாரும் சம உரிமை உடையவர்கள் என்று கூறுகின்றார். ஒரோ வழி செய் தொழிலின் வேற்றுமைகளால் அல்லது அறிவால் திறமையானவர்கள் சிலர் இருந்தாலும் அந்தச் சிறந்த இயல்புகள் எல்லாம் சமூக அமைப்பின் வழி ஒருவருக்குக் கிடைத்த பரிசுகளே யாம். இதனை,

“மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துளது ஆகும் அறிவு”

(454)

என்று கூறி விளக்குகின்றார் திருவள்ளுவர். அதன் காரணமாக, அதாவது சிறப்புத் தகுதிகள் பெற்றிருப்பதன் காரணமாகத் தனித் தகுதிகள் அல்லது உயர்வுகள் கிடையாது என்று மறுக்கின்றார். இஃது ஒரு தீவிரமான தனித் தன்மையுடைய கருத்து. தெருக் கூட்டும் துப்புரவுத் தொழிலாளியும் கோயிலில் பூசை வைப்போனும் ஒத்த உரிமை உடையவர்களே என்பது திருக்குறள் கருத்து. இதனைத்தான் பாரதி,

“சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்
சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்”

என்று பாடினான்;

“சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம்”

என்று தெருக்கூட்டும் பணிக்குப் புகழ் சூட்டுகின்றான்.

குடும்பம், சமூகம், சமுதாயம் என்ற அமைப்புக்கள் தோன்றிய உடனேயே அரசு தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது. ஏனெனில் பலர் கூடி வாழும்பொழுது சிக்கல்கள் தோன்றாமல் இருக்க இயலாது. அது மட்டுமல்ல. சொத்துடைமை வேறு உருவாகிறது. சொத்துடைமை தோன்றிய உடனேயே ஆக்கிரமிப்புகள் நிகழாமல் பாதுகாக்கவும், சொத்துடைமைகளைப் பாதுகாக்கவும் அரசு தோன்றுகிறது. சொத்துடைமையைப் பாதுகாக்கத் தோன்றிய் அரசுகள் இன்றுவரை சொத்துடையவர்களுக்கும் சொத்துக்கும் பாதுகாப்புக் கொடுக்க இயங்கியுள்ளனவேயன்றிச் சாதாரண மக்களைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. இங்கும் அங்குமாகச் சில அரசுகள், சொத்துடைமை பெற்றிருக்கின்ற வர்க்கத்தினருக்கு உழைப்பவர்கள் வேண்டுமே என்ற கவலையில், உடலில் உயிர் தங்கி வாழ்ந்து உழைக்கச் சோறு முதலியன போடுகின்றன. இன்னமும் ஏழைகளின் எண்ணிக்கை கூடுதலாகத்தான் உள்ளது. பலர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர். திருவள்ளுவர் உழைப்பவர் உலகத்தைதொழிலாளர் உலகத்தைப் பாராட்டியவர்; போற்றியவர்.

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்”

(1033)
என்றார். திருக்குறள் உழைத்து வாழ்வதையே வாழ்வு என்று வலியுறுத்துகின்றது.

“பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்
தாள்வினை இன்மை பழி”

(618)

என்பதறிக.

ஊழ்த் தத்துவத்திற்குத் திருவள்ளுவர் உடன்பட்டவர். ஆயினும் ஊழின் வலிமையை-ஊழின் வழியது வாழ்க்கை யமைவு என்பதைத் திருவள்ளுவர் உடன்படவில்லை. ஊழை வெற்றி பெறலாம் என்பதே திருவள்ளுவர் கண்ட முடிவு. இது, தமிழகத்தில் வழி வழியாக வற்புறுத்திக் கொண்டு வந்த ஊழை, மறுத்துக் கூறிய புதுமையாகும்.

     “ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
     தாழாது உஞற்று பவர்”

(620)

இடைவிடாது சோர்வின்றி உழைப்பது உழைப்பு என்று உழைப்பிற்குரிய இலக்கணம் வகுக்கின்றார் திருவள்ளுவர். அது மட்டுமா? உழைப்பில் தவமும் திறமும் நாள்தோறும் குறையாமல் வளர வேண்டும் என்பதைத் தாழாது உஞற்றுதல் என்று கூறியதன் மூலம் விளக்கிக் கூறுகின்றார்.

வாழ்க்கை பொருள்களால் ஆகியது. உடலோடு கூடிய உயிர் வாழ்க்கை வாழ்வதற்குப் பொருள் இன்றியமையாதது. திருவள்ளுவர் கருத்துப்படி பொருள் என்றால் உண்ணும் உணவு, மருந்து முதலிய நுகர்பொருள்களேயாம்.

     “அருள் இல்லார்க்கு அவ்வுலக மில்லை; பொருளில்லார்க்கு
     இவ்வுலகம் இல்லாகி யாங்கு”

(247)

என்றார். இந்த உலகத்தில் உண்பனவும் தின்பனவும் கிடைக்காதவர்கள் வாழ்தல் அரிது. அதுபோலவே யார் மாட்டும் அன்பு காட்டி ஒழுகாதவர் சமுதாயத்தால் விரும்பப்பட மாட்டார்கள். இங்கு “அவ்வுலகம்” என்பதற்கு வீடு பேறு என்ற உரை தவறு. வீடு பேறுபற்றி இரண்டு இடத்தில் - கடவுள் வாழ்த்திலும், துறவு அதிகாரத்திலும் கூறுகிறார்.

“யான்எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்”

(346)

என்று அருளியுள்ளமையை அறிக. திருக்குறளை ஒரு பொருள் முதல் வாத நூல் என்று கூறினும் தவறில்லை. இந்த உலகமும், மானுடமும் கடவுள் படைப்பு என்று திருவள்ளுவர் கூறவில்லை. இந்த உலகிற்கு முதலாக - முதலாவதாக வைத்தெண்ணப்படுபவரே கடவுள் என்பது திருவள்ளுவர் கருத்து. ஆதலால், திருவள்ளுவர்,

“செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்”

(759)

என்று ஆணையிட்டார். திருவள்ளுவர் காலத்தில் வேளாண்மைத் தொழிலும் வாணிகத் தொழிலும் மட்டுமே இருந்தன என்று தெரிகிறது. வேளாண்மைத் தொழில் பற்றிய அறிவியல் சார்ந்த செய்திகள் பல கூறுகின்றார்.

‘செய்க பொருளை’ என்பது வேளாண்மைத் தொழிலைச் செய்து உற்பத்தியைப் பெருக்குக என்பதேயாம். பொருட் செல்வத்தைப் போற்றிப் பாதுகாத்துப் பலருக்கும் கொடுத்து உண்டு வாழ்தல் வேண்டும் என்பது திருவள்ளுவர் கருத்து.

திருவள்ளுவர் காலத்திற்கு முன் ஈதல் - ஏற்றல் செயல்முறைதான் நிலவின. திருவள்ளுவரும் ஈதல் - ஏற்றல் பற்றிக் கூறியுள்ளார். ஆயினும் சங்ககால மரபுகளில் இல்லாத ஒப்புரவுப் பண்பைப் பற்றிப் பேசுகின்றார். ஒப்புரவறிதல் என்பது கூட்டுறவுப் பண்பை ஒத்தது. “கூட்டுறவு, எல்லாரும் எல்லாம் பெறுதலுக்குரிய சோஷலிச சமுதாயத்தின் முதற்படி” என்றான் லெனின். லெனின், கூட்டுறவு இயக்கம் பற்றி நிறைய எழுதியுள்ளான். “இன்று நம் முன்னுள்ள ஒரே பணி கூட்டுறவு இயக்கத்தில் மக்களை அணிதிரளச் செய்வதுதான்” என்று மேலும் கூறினான் மாமேதை லெனின். இன்றோ நம்முடைய நாட்டில் கூட்டுறவுத்துறை அலட்சியப் படுத்தப்படுகிறது. ஒரு குடியரசு நாட்டில் மக்களுக்கு நாட்டுப் பற்றும் பொறுப்புணர்வும் கடமை உணர்ச்சியும் வேண்டும் என்ற அடிப்படையிலேயே ஊராட்சிமன்றங்களையும் கூட்டுறவு இயக்கங்களையும் தோற்றுவித்தனர். இன்றோ எதிரிடையான அணுகுமுறை உள்ளது. ஒப்புரவு நெறி பேணும் சமுதாயத்தில் “எல்லாரும் ஒருவருக்காகவும், ஒருவர் எல்லாருக்காகவும்” என்ற சமுதாய ஒழுகலாறு நிலவும். ஒப்புரவு நெறி நிற்கும் சமுதாயத்தில் எடுத்துக் கொள்ளும் உரிமையும் உண்டு; கொடுக்கும் கடமையும் உண்டு. ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் நலம் செய்து கொள்ளும் பண்பாடு நிறைந்த வாழ்க்கை அது. ஆண்டான் - அடிமை முறைச் சமுதாயத்தில் தோன்றிய நன்றி, கடப்பாடு என்பன ஒப்புரவுச் சமுதாயத்தில் இல்லை. ஆதலால்தான் உள்ளூரில் பழுத்த பயன் மரத்தையும் மருந்து மரத்தையும் திருவள்ளுவர் ஒப்புரவுக்கு உவமைகளாகக் கூறினார்.

“பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்”;

(216)

“மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்”

(217)

என்றார். பிறர் நலத்திற்காகத் தமக்கு வரும் தீங்கினையும் ஏற்றுக்கொண்டு அர்ப்பணிப்புணர்வுடன் உதவிகளைச் செய்தல், மருந்து மரமனைய வாழ்க்கையாகும். ஒப்புரவு வாழ்க்கை மலருமானால் உடைமைகளால் - சொத் துடைமைகளால் வரும் அவலங்களும் சீரழிவுகளும் வரா.

திருவள்ளுவர் நேரிடையாகத் தனிச் சொத்துடைமையைக் கூறினார் என்று கூறப் போதிய சான்று இல்லை. “ஊக்கம் உடைமை” என்றே கூறுகின்றார். அதாவது, உழைக்கும் உணர்வே மூலதனம். ஆதலால் திருவள்ளுவர் பிற உடைமையை ஆதரிக்கவில்லை என்றே தெரிகிறது.

“செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்”

(1039)

என்பது திருக்குறள். நிலத்தை இல்லாளுக்கு ஒப்பிடுகின்றார். இல்லாளை - மனைவியைக் குத்தகைக்கு அல்லது வாடகைக்கு விட இயலாது; விடவும் மாட்டார்கள். ஒரோவழி எவனேனும் ஒருவன் அப்படிச் செய்தால் அவன் கயவன்; கீழ்மகன். ஆதலால் நிலம் உழும் தொழிலாளருக்கே உரிமையுடையதாக இருப்பதைத் திருவள்ளுவர் விரும்புகின்றார். அதுபோலவே சுரண்டும் பொருளாதாரத்தையும் மறுக்கின்றார்.

“சலத்தால் பொருள்செய்து ஏமார்த்தல் பசுமட்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று”

(660)

“தாழ்விலாச் செல்வர்”

(731)

“அழக்கொண்ட எல்லாம் அழப்போம்”

(659)

என்று வரும் திருக்குறள்களும் “பொருட்செல்வம் பூரியார் கண்ணு முள” என்று கூறியுள்ளமையும் அறியத்தக்கன. இந்த உலகத்தில் செல்வம் ஓரிடத்திலும் செல்வத்தைத் திரட்டும் அறிவறிந்த ஆள்வினைத் திறன் வேறோரிடத்திலும் இருப் பதைக் கண்டு திருவள்ளுவர் ஆச்சரியப்படுகிறார்.

“இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு”

(374)
என்றார். அதுமட்டுமா? உழைக்கும் நல்லவன் ஏழ்மையிலும், உழைக்காது வாழும் ஒருவன் ஆக்கத்திலும் இருப்பதைக் கண்டு பொறுக்க முடியாமல் பொது மக்களையும் அரசையும் ஆய்வு செய்யும்படி ஆணையிடுகின்றார்.

“அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்”

(169)

என்பது அந்த ஆணை.

மக்கள் கூட்டமாகக் கூடி வாழத் தலைப்பட்டதனாலும், உற்பத்திகள் தொடங்கப்பெற்றுத் தனியார் சொத்துக்கள் பெருகி வளர்ந்ததாலும், சொத்துக்கள் அடிப்படையில் மோதல் ஏற்படாமல் தனியாரின் சொத்துடைமைகளைப் பாதுகாக்க அரசாங்கத்தை அமைத்தனர். முதல் அரசு, சொத்துடைமை வர்க்கம் அமைத்த அரசேயாம்! அதனால் இன்றுவரை சொத்துடைமை வர்க்கத்துக்குச் சாதகமாகவே அரசுகள் இயங்கி வந்துள்ளன! காலப்போக்கில் அரசுகள் வலிமையுடையன ஆயின. பல அரசுகள் கொடுங்கோல் அரசுகளாகவும் அமைந்தன; சில அரசுகள் மக்கள் நலம் நாடும் அரசுகளாக அமைந்தன. திருவள்ளுவர் நல்லரசைச் செங்கோல் அரசு என்றும் நலம் பயக்காத அரசைக் கொடுங்கோல் அரசு என்றும் குறிப்பிடுகின்றார். கி.பி. 1789முதல் 1799வரை நடந்த பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகும், கி.பி. 1917ஆம் ஆண்டில் நடந்த சோவியத் புரட்சிக்குப் பிற்கும் அரசுகளின் நடவடிக்கைகளில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டது. பிரிட்டனில் பாராளுமன்ற ஆட்சிமுறை கொண்டு வரப்பட்டு அரசனின் அதிகாரம் கட்டுப்படுத்தப்பட்டது. பிரிட்டனின் ஆட்சிமுறை, முடியாட்சி முறை ஜனநாயக ஆட்சிமுறை இரண்டும் இணைந்தது. கிரேக்க நாடு, பிரதிநிதித்துவ ஆட்சிமுறை இருந்த நன்னாடு பொதுவாக உலக வரலாற்றில் மன்னர் ஆட்சியும், ஜனநாயக ஆட்சியும், இரண்டும் கலந்த ஆட்சிமுறைகளும் இருந்து வந்துள்ளன. நாம் இப்போது சில ஆட்சிமுறைகளைப் பார்ப்போம்.

கி.மு. 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சாணக்கியர் அர்த்தசாஸ்திரம் கண்டவர். சிறந்த அரசியல் ஞானி. மெளரிய சாம்ராஜ்யத்தை நிறுவியவர். சாணக்கியரின் அரசியல், பொருளியல் மிகவும் சிறந்தவை. ஆயினும் இவர் கூறும் சிற்றரசியல் பேரரசியல் இரண்டும் குறையுடையனவேயாம். சாணக்கியரின் அரசு, அப்பட்டமான முடியாட்சியேதான்! எனினும், பல கோணங்களில் திருக்குறளுடன் ஒத்திருக்கிறது. சில வேறுபாடுகளும் உண்டு. சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்திலும் அரசனுடைய அதிகாரம் அல்லது அரசு நடைமுறை அமைச்சர்களின் ஆலோசனைப்படியே நடக்க வேண்டும் என்று கூறுகின்றார். அமைச்சரின் உதவி பெற்றுத்தான் அரசு நடைபெறுதல் சாத்தியம். அரசன் மந்திரிகளை நியமித்து அவர்களுடைய அபிப்பிராயத்தைக் கேட்க வேண்டும் என்பது சாணக்கியரின் வாக்கு. அவர் அரசனது அன்றாடப் பணிகளை முறைப்படுத்தித் தந்திருக்கின்றார். இதைத் திருவள்ளுவர் செய்யவில்லை. காரணம் சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் சாத்திரம் மட்டுமல்ல. நடைமுறையும் வகுத்துத் தந்தது. திருக்குறள் அரசியல் சாத்திரம் மட்டுமேயாம்.

ஒரு நாளில்

காலை 6–00 – 7–30 நாட்டினர் வரவு செலவுகளைக் கவனித்தல்
காலை 7–30 – 9–00 மக்களைக் காணல்
காலை 9–30 அரசனின் தனது பணிகளும் நூல்கள்
படித்தலும்
முற்பகல் 10-30 - 12-00 அதிகாரிகளுடன் சேர்ந்து நிர்வாகக்
காரியங்களைக் கவனித்தல்
பகல் 12-00 - 1-30 மந்திரிசபைக் குறிப்புகளைக் கவனித்தல்
-ஒற்றர்களிடம் செய்தியறிதல்
பகல் 1–30 – 3–00 பொழுதுபோக்கு (விருப்பம் - போல்)
பிற்பகல் 3-00 - 4-30 படைகளைப் பார்வையிடல்
பிற்பகல் 4–30 – 6-00 படைத் தலைவர்களுடன் ஆலோசித்தல்
- பின் தனது கடமைகள்
மாலை 6–00 – 7–30 ஒற்றர்களுடன்
இரவு 7–30 – 9–00 தனது கடமைகள்
இரவு 9–00 – 1–30 ஓய்வு
இரவு 1-30 - 3-00 சாத்திரம் படித்தல் மறுநாட் பணி பற்றிச்
சிந்தித்தல்
3-00 - 4-30 ஒற்றர்களுக்கு ஆணையிடுதல்
4–30 புரோகிதர், ஆசாரியர் ஆகியோருடன் பேசுதல்:
ஆஸ்தான வைத்தியன், ஜோசியன் இவர்களைக்
கண்டு கொள்ளல்; மடைப் பள்ளித் தலைவனுடன்
பேசுதல்; பசுவை வலம் வருதல்.

அரசன் எப்போதும் சான்றோர் சேர்க்கையில் இருக்க வேண்டும். அறிவை வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும் என்று கூறுகின்றார். சாணக்கியர் கண்டது. மெளரிய சாம்ராஜ்ய ஏகாதிபத்தியம் என்றாலும் அவர் காலத்திலும் குடி அரசுகள் பல இருந்தன.

சாணக்கியர் அரசனுடைய கடமைகளில் ஒன்றாக நீர்நிலைகளைப் பேணுதலைக் குறிப்பிடுகின்றார்; ஒரு அரசு நிலைத்திருக்க வேண்டுமானால் பொருள் வலிமை பெற்றிருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றார். சாணக்கியர் அரசனுக்குத் தண்டநீதி வழங்கும் உரிமையை வலியுறுத்துகின்றார்.

அரசன் மக்கள் வரியாகக் கொடுக்கும் பணத்தையும் ஈட்டும் பொருளையும் தனது பொருளாகக் கொள்ள வேண்டும். அரசு எக்காரணத்தை முன்னிட்டும் குடிமக்களிடமிருந்து நன்கொடை வாங்கக்கூடாது என்று தடை விதிக்கிறார்.

அடுத்து, நாம் அறிந்து கொள்ளவேண்டிய பெரிய அரசியல் ஞானி பிளேட்டோ. பிளேட்டோ கிரேக்க தேசத்தைச் சேர்ந்தவர். இவர் வாழ்ந்த காலம் கி.மு. 427 கி.மு. 347க்கும் இடைப்பட்ட காலம். பிளேட்டோ கண்ட அரசின் உயிர்நாடி நீதி. திருவள்ளுவருக்கு இது உடன்பாடே. ஆனால் ஆண் - பெண் உறவு, குழந்தைகள் பாதுகாப்பு முதலியவற்றில் பிளேட்டோ முற்றிலும் மாறுபடுகின்றார். குடும்பம் என்ற அடிப்படை பிளேட்டோவின் அரசில் இல்லை. பிளேட்டோவின் ஆட்சி தலைமைக்குத் தகுதியுடையவன் மன்னன்தான் என்பதல்ல.

பிளேட்டோவினாலேயே பாராட்டப் பெற்றவன் அரிஸ்டாட்டில் என்ற அரசியலறிஞன். இவனுடைய காலம் கி.மு. 384 - கி.மு. 322. மகாவீரன் அலெக்ஸாண்டருக்கு ஆசிரியன். அரிஸ்டாட்டில் குடியாட்சியையே விரும்புகின்றான்.

அண்மைக்காலத்தில் (கி.பி. 1818–83) வந்தது மாரக்கியம். மாமுனிவர் காரல்மார்க்ஸ் “மூலதனம்” என்ற ஒர் அரசியல் பெரு நூலை எழுதியுள்ளார். காரல்மார்க்சின் தத்துவம் பொருள் முதல் வாதமாகும். சோஷலிசம், பொதுவுடைமைச் சமுதாயம் முதலியன காரல்மார்க்சின் கொள்கைகள், சமுதாய மாற்றத்திற்குப் புரட்சி தேவை என்பது மார்க்சின் கொள்கை. காரல்மார்க்சின் பொதுவுடைமை அரசின் தொடக்கத்தில், கட்டுப்பாடுகள் அதிகமாக இருக்கும். காலம் செல்லச் செல்ல அரசியலே இல்லாத - ஆட்சிமுறையே இல்லாத சமுதாய அமைப்பு உருவாகும் என்பது மார்க்சின் கருத்து.

திருவள்ளுவர் பொருட்பாலை இறைமாட்சியில் தொடங்குகின்றார்.

படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு

(381)

என்கிறார் திருவள்ளுவர். இதனையே சாணக்கியர் “அங்கங்கள்” என்ற பெயரில் குறிப்பிடுகின்றார். இவ்விருவரின் கருத்துக்களில் சில வேற்றுமைகள் உண்டு. திருவள்ளுவர் அங்கங்கள் ஆறு என்கிறார். சாணக்கியர் அங்கங்கள் ஏழு என்கிறார். திருவள்ளுவர் அரசைப் பற்றிக் கூறுவதால் அரசை ஒர் அங்கமாகக் கூறவில்லை.

திருவள்ளுவர்,

“தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு”

(383)

என்று கூறுகின்றார். ஆனால் சாணக்கியர் தாம் கண்ட அரசனுக்கு ஆறு குணங்கள் வேண்டும் என்கிறார். (1) சந்தி, (2) விக்கிரகம், (3) யானம், (4) ஆதனம் (5) சமாச்சிரயம் (6) துவைதீபாவம். இவற்றை முறையே நட்பாக்கல், பகையாக்கல், மேற்சேறல், இருத்தல், கூட்டல், பிரித்தல் என்று கூறுவார் பரிமேலழகர்.

திருவள்ளுவர் கண்ட ஆட்சி முடியாட்சியே. ஆனாலும் குடியாட்சியில் மக்களுக்குள்ள உரிமைகள் அதில் குறிக்கப்படுகின்றன. முடியாட்சியில் மன்னன் குடிகளைத் தழுவிய அரசு செலுத்த வேண்டும். சர்வாதிகார மனப்பான்மை கூடாது. இதனைக் “கொடுங்கோல்” என்று திருவள்ளுவர் விளக்குகின்றார். அடுத்து அரசை, அரசாட்சியை விமர்சிக்கும் உரிமை மக்களுக்கு வேண்டும். திருவள்ளுவர் இந்த உரிமையை மக்களுக்கு வழங்கியுள்ளார்.

“இடிப்பாரை யில்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானும் கெடும்”

.
(448)

அரசை, குறைகண்டவிடத்து இடித்துக் கூறுவார் இல்லையாயின் அரசு கெடும் என்கிறார். மேலும்

“செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு”

(389)

என்றும் கூறுகின்றார். மக்களின் விமர்சனம் கேட்க முடியாத அளவுக்குச் செவி கைக்கக் கூடியதாக அமையினும் நாடாளும் அரசனுக்குக் கேட்கும் பொறுமை வேண்டும் என்பது கருத்து. நாட்டை முறையாக நெறிமுறை பிறழாமல் அரசன் ஆட்சி செய்யாவிடின் அவன் அரச பதவியை இழக்கக்கூடிய நிலையும் வரும். அதாவது மக்கள் அந்த அரசை அக்ற்றுவார்கள் என்பது கருத்து.

“கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு”

(554)

என்பது திருக்குறள். உலகில் சில நாடுகளில் அரசன் தெய்வத்தின் பிரதிநிதி என்ற நம்பிக்கையிருந்தது. அரசனின் ஆணை தெய்வத்தின் ஆணைபோலக் கருதப் பெற்றது. ஆனால், திருவள்ளுவர்,

“முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்”

(388)

என்று உபசார வழக்காகக் கூறுகிறார். அதாவது மன்னவன் இறையல்லன்; இறை என்று வைக்கப்பெறும் என்பது கருத்து. \

அரசின் அங்கங்கள் பற்றி முன்பு பேசினோம். அரசின் அங்கங்களுள் ஒன்றாக அமைச்சை எடுத்துக் கூறியிருப்புதற்குப் பழந்தமிழக அரசுகளில் ஐம்பெருங்குழு, எண்பேராயம் முதலிய குழுக்கள் இருந்தன என்று வரலாறு கூறும்.

திருவள்ளுவர், நாடாளும் அரசன் காட்சிக்கு எளியனாக இருக்க வேண்டும்; இனிய சொற்கள் கூறுபவனாக இருக்க வேண்டும்; கொடையாளனாக விளங்குதல் வேண்டும் என்று கூறுகின்றார். தமிழ்நாட்டு அரசர்கள் கொடைமடம் மட்டுமே படுவர்; படைமடம் பட மாட்டார்கள் என்று சங்க இலக்கியம் கூறும். அரசன் கருணையுடையவனாக இருக்க வேண்டும். அரசன் தனது குடிகளைப் பாதுகாத்துப் பேணுபவனாக விளங்குதல் வேண்டும்.

“கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி”.

(390)

அரசன் கல்வியிற் சிறந்து அறிவுடையோனாக விளங்க வேண்டும். திருவள்ளுவர் கல்வியை அரசியலில் வைத்ததற்குக் காரணம் இரண்டு. ஒன்று நாடாளும் அரசனுக்குக் கல்வி இன்றியமையாதது என்பது. இதைச் சாணக்கியரும் கூறுகின்றார். இரண்டாவது நாடாளும் அரசன் தனது குடிமக்களைக் கல்வி அறிவில் தேர்ச்சியுடையவர்களாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது. மக்களுக்குக் கல்வி தருவது அரசனின் கடமை; அரசனின் பொறுப்பு.

நாடாளும் அரசன் மற்ற அறிஞர்கள் வாயிலாக ஆட்சித்திறன் நுட்பங்கள் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும். அரசன் ஒரோவழி தவறு செய்யும் சூழல் ஏற்படின் ஒழுக்கமுடையார் மாட்டு அவன் கேட்ட சொல் அவனைத் தவறு செய்யாமல் காப்பாற்றும் என்பது திருக்குறள் கருத்து.

“இழுக்க லுடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்”.

(415)
நாடாளும் அரசனைச் சுற்றிப் பலரும் சூழ்வர். பலரும் பலவும் கூறுவர். அவை யெல்லாவற்றையும் அரசன் கேட்டுத்தான் ஆக வேண்டும்; மறுக்க இயலாது; மறுக்கக் கூடாது. ஆயினும் கேட்டவற்றையெல்லாம் நம்பாமல், கேட்டவற்றையெல்லாம் ஆராய்ந்து அவற்றின் உண்மையை ஓர்ந்துணர வேண்டும். இது அரசனின் பொறுப்பு; கடமை.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”.

(423)

நாடாளும் அரசன் அண்டை அயலிலுள்ள அரசுகளுடன் நட்புப் பேணவேண்டும். அங்ஙனம் கொண்ட நட்பை அளவற்ற நிலையில் மலர்தலும் குவிதலும் இல்லாமல் பேணிப் பாதுகாத்துக் கொள்ளுதல் வேண்டும்.

உலகந் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு.

(425)

“நாடாளும் அரசன் அன்றாடம் உலகத்தின் நடைமுறையைப் புரிந்து கொண்டு அந்த உலக நடைமுறைக்கேற்ப நடந்து கொள்ளவேண்டும்” என்றும் திருவள்ளுவர் அறிவுறுத்துகிறார்.

நாடாளும் அரசன் அரசின் பொருள் வளத்தை நாளும் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும். அரசன் தனது பொருள் வருவாய்க்கு ஒரே வழியை நம்பிக் கொண்டிருத்தலாகாது. புதிய புதிய வழிகளைக் கண்டாக வேண்டும். பழைய வருவாயையும் புதிய வருவாயையும் பிழையின்றி ஈட்டுதல் வேண்டும். அங்ஙனம் ஈட்டிய செல்வத்தை - முதலை மூலதனம் ஆகக்கூடிய அளவுக்குக் காக்க வேண்டும். அச்செல்வத்தைப் பல்வேறு நல்ல காரியங்களுக்கு - மக்களுக்குப் பயன்படும் காரியங்களுக்குச் செலவிட வேண்டும் என்பது திருவள்ளுவர் கண்ட அரசின் பொருளாதாரம்.

“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு”

(385)

நாடாளும் அரசன் குற்றங்களினின்றும் விடுதலை பெறுதல் வேண்டும். இந்தக் கருத்தில் எல்லா அரசியல் ஞானிகளும் ஒத்த கருத்து உடையவர்கள். ஒரோவழி, அரசனுக்குக் காதல் ஏற்படுமாயினும் அந்தக் காதல் அனுபவத்தைக் கூடப் பிறர் அறியாமல் அனுபவிக்க வேண்டும் என்று திருவள்ளுவர் கூறுகின்றார்.

நாடாளும் அரசன் குற்றமற்றவனாக இருப்பின் மக்களும் குற்றமற்றவர்களாக இருப்பார்கள். அரசன் தனது குற்றங்களை நீக்கிக் கொள்ளாமல் மக்களிடத்தில் குற்றங்களைக் காணலும் தண்டித்தலும் ஆகாது, கூடாது என்பது திருவள்ளுவரின் அரசியல் கோட்பாடு. குற்றம் செய்பவர்களுக்குத் தண்டனை கொடுக்கும் உரிமை அரசுக்கு உண்டு. ஆயினும் குற்றம் திருந்துவதற்குத் தண்டனையே தவிர, ஒறுத்துத் துன்பம் தருவதற்கு அல்ல.

“கடிதோச்சி மெல்ல எறிக” என்பார் திருவள்ளுவர். மேலும் “கண்ணிற்கு அணிகலன் கண்ணோட்டம்” என்பார். கண்ணோட்டம் என்பது பழகினவரிடத்தில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் மறுத்தற்கு இயலாமல் மீண்டும் பழகுவது; தொடர்ந்து பழகுவது.

விரிந்து பரந்த நாடாகவும் மக்கள் தொகை கூடுதலாகவும் உள்ள நாட்டையுடைய அரசனுக்கு ஒற்றர் தேவை. திருவள்ளுவரின் அரசு நெறியில் ஒற்றர்நிலை பன்முகப்படுத்தப் பெற்றது. திருவள்ளுவர் அரசியலில் நாட்டுநிலை பற்றி அறிந்து கூறுதலும் ஒற்றன் பணியாம். அதுபோலவே நண்பர்களின் நடைமுறை, பகைவர்களின் நடைமுறை முதலியவற்றையும் அறிந்து அரசனுக்கு அவ்வப்போது தெரிவித்தலும் ஒற்றர்களின் கடமை. அதனால் திருவள்ளுவர் ஒற்றரையும் நீதி நூலையும் அரசனுடைய இரண்டு கண்கள் என்று கூறுகின்றார்.

அரசன் நல்ல நண்பர்களைத் தேர்வு செய்து கொண்டு பழகவேண்டும். நட்பு நன்னடை நல்கும்; உற்றுழி உதவும். மனித வாழ்வின் உறுப்புக்களில் சிறந்த உறுப்பு நட்பேயாம். பழகிய நண்பர்களிடமிருந்து எந்தக் காரணத்தை முன்னிட்டும் பிரியக்கூடாது.

மனிதப் பிறவி கூடி வாழப் பிறந்தது. கூடி வாழ்தலுக்குத் தடையாகிய பகையுணர்வு அறவே கூடாது. பகை, நோய் போன்றது. கூடி வாழும் பண்பை வளர்த்துக் கொள்ள இயலாமல் போனால் பகை என்ற நோயைச் சுமந்து துன்பப்பட்டுச் சாவதைத் தவிர வேறு வழியில்லை. பகையினால், பகையின் வழிப் பொருதலினால் புகழ் வரும் என்பது ஒரு மாயை. பகையில்லாத வழிதான் புகழ் வரும். துன்பமே தரும் பகையை நீக்கின் இன்பத்துள் இன்பம் கிடைக்கும். வலியாரிடம் பகை கொள்ளலாகாது. தம்மின் மெலியாரிடத்தும் பகை கொள்ளலாகாது. பகை வாழ்க்கையையே கெடுத்து விடுகிறது. நன்னெறிவழி ஒழுகும் இயல்பறியான், நல்ல பல செயல்களைச் செய்வதற்குரிய வாய்ப்புக்கள் கிடைத்தாலும் செய்யான், பழிக்கு அஞ்சான், பண்பில்லாதவன் முதலியோர் பகை இனிதேயாம் என்று புறநடை கூறுவார். விளையாட்டாகக்கூடப் பகை கொள்ளக் கூடாது. நாடாளும் அரசன் பகை கொள்ளாமலும் பகை கொள்பவன் தன்னைவிட்டு ஒதுங்காமலும் வைத்திருப்பது நல்லது. பகையில் உட்பகை மிகவும் கொடியது. நிழலில் கிடக்கும் தண்ணீர் குடிக்க நன்றாகத் தான் இருக்கும். ஆனால், பின் நோய் தரும். அதுபோலத்தான் உட்பகையுடையவனின் தொடர்பு நன்மைபோல் காட்டித் தீமை செய்யும். ஆதலால் உட்பகையைத் தவிர்க்க வேண்டும்.

திருவள்ளுவரின் அரசியலில் விவாதத்திற்குரியது பெண் வழிச் சேறல் ஆகாது என்பது. “மனை விழைவார் மாண் பயன் எய்தார்” என்றார்.

“பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து”

(907)

என்றும் கூறுகிறார். இதனால் பெண்ணடிமைத் தனத்தைத் திருவள்ளுவர் ஆதரித்தார் என்பது பொருளன்று. நாடாளும் அரசன் ஆட்சித் திறனுக்குரிய நுட்பங்களும் கல்வியறிவும் இல்லாத மனையாளுக்கு அஞ்சி நடத்தல் கூடாது; அரசியல் நடத்தக் கூடாது என்பது திருவள்ளுவர் கொள்கை. அதுபோலவே வரைவின் மகளிரும். வரைவின் மகளிருக்கு அன்பு கடுகளவும் இல்லை. பணமே அவர்களது குறிக்கோள். அந்தக் காலத்தில் அப்படி ஒரு வடிகால் தேவைப்பட்டிருந்திருக்கும் போலும். அதுபோலவே நாடாளும் அரசன் கள்ளும் குடிக்கக் கூடாது; சூதாடக்கூடாது. பசிக்கு உண்டு, உண்டது செரித்த பிறகு உண்ண வேண்டும். நாடாளும் அரசனுக்கு ஆகாத பழக்கங்களைக் கள்ளுண்ணாமை, சூது எனப் பல அதிகாரங்கள் கூறி விலக்குகின்றார். நாடாளும் அரசன் நன்னெறி நின்றொழுக வேண்டும் என்பது திருவள்ளுவரின் அரசியல் நெறி.

திருவள்ளுவர் பிறப்பினால் உருவான பிற்காலச் சாதிமுறையை ஏற்றுக் கொண்டாரில்லை. ஆயினும் குலம், குடி ஆகியன திருவள்ளுவரால் அங்கீகரிக்கப்படுகின்றன. நாட்டு மக்கள் நல்லவர்களாக இருந்தால்தான் அரசு சீராக இயங்க முடியும். நாட்டின் குடிமக்கள் இயல்பு எப்படி அமைய வேண்டும் என்ற செய்தியைக் குடிமை அதிகாரத்தில் விதித்துக் கூறுகிறார். நாட்டுக் குடிமக்கள் சொல்லும் செயலும் மாறுபடாத நிலையினராக இருத்தல் வேண்டும். பழி பாவங்களுக்கு அஞ்சியவர்களாக இருக்க வேண்டும். பிறரை இகழாமையும் ஈகையும் இன்சொல்லும் உடையவ ராகவும் வறுமையுற்ற பொழுதிலும் பண்பின் தலைப்பிரியாத வராகவும் இருப்பர் சிறந்த குடிமக்கள். நற்குடிப் பிறந்தார் பணிவுடன் விளங்குவர். மானம் என்பது ஒழுகலாறு தொடர்புடையது. ஆனால் இன்றோ பெரு வழக்காக “மானம்” என்பது மற்றவர் மதிக்காமையே என்று பேசப் படுகிறது. நாட்டு மக்கள் ஒழுகலாற்றை உயிர் போலப் பாதுகாக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் கொலையும் கொள்ளையும் இருக்கும். நாடு அல்லற்படும். அதனால் நாட்டு மக்கள் நன்னெறி சார்ந்த ஒழுகலாற்றைப் பேணவேண்டும். அதேபோழ்து பொய்மையான மானம் கருதி ஒரு குடிக்குள் உள்ள ஒற்றுமையைச் சீர்குலைக்கக் கூடாது. உற்றார், உறவினரிடையே பெருமை பாராட்டு தலினால் குடி, கெடும். அதனால்,

“குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்”

(1028)

என்றார் திருவள்ளுவர்.

திருவள்ளுவர் நெறியில் சாதிகள் இல்லை. குடி செயல் வேண்டும்; ஒருவருக்கொருவர் உற்றாராகி, உறவினராகி, மதிப்பு - அவமதிப்புப் பாராமல், பெருமை - சிறுமை பாராமல் தம்மைச் சார்ந்த குடிமக்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

இங்ங்ணம் தாம் பிறந்த குடியின் மேம்பாட்டுக்கு உதவி செய்பவர்களே பெருமைக்குரியவர்கள். உயிர் வாழ்தலுக்குச் சான்று, பிறரால் செய்ய இயலாத காரியங்களைச் செய்தலேயாம். எச்செயலும் செய்யாதிருத்தல் சாவை நிகர்த்தது. திருவள்ளுவர் நெறியில் பிறப்பில் அனைவரும் சமமே. சிறப்புடைய தகுதிகளால் சிறப்பான தொழில்கள் செய்திருந்தாலும் அச்சிறப்புக்காக எந்த ஒரு தனித் தகுதியும் பெறுதற்குரியரல்லர். சாத்திரம் கற்றோராயினும் சந்தி பெருக்குவோராயினும் ஒரு குலத்தவரேயாம்; ஒரே தகுதியுடையவரேயாம். வரலாற்றின் நிற்கத்தக்க அருமை யுடைய செயல்களையே செய்வர் பெரியர். பெரியோருக்குரிய வாய்ப்புக்கள் சிறியோரிடம் வாய்த்துவிடின் மிகவும் தருக்கி நடப்பர். பெருமையுடையவர்கள் மற்றவர் குற்றங்களைக் காணார். கண்டாலும் அதை மறைத்து விடுவர்.

நற்குணங்களில் சிறந்து விளங்குவோர் சான்றோர்கள். செய்யத் தக்கன அறிந்து செய்பவர்கள் சால்புடையவர்கள். தகுதியில்லாதார் மாட்டும் தோல்வியை ஏற்றுக் கொள்ளுதல் சால்பின் இயல்பு. சராசரி மனிதர்கள் தகுதி மிகுதியும் உடைய பெரியோர் மாட்டுத் தோற்பதை வரவேற்பர். தமக்குக் கீழ்ப்பட்டவர்களிடத்திலும் தோல்வியைச் சகித்துக் கொள்வார்கள். இந்த அடிப்படையில்தான் “குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்படவேண்டும்” என்ற பழமொழி பிறந்தது. சான்றாண்மையுடையோர் எல்லாருக்கும் நன்மையே செய்வர். சான்றாண்மையுடையவர்கள் வறுமைக்கு ஆளாகி இருப்பதைக் கண்டு ஒருபொழுதும் நானார். இத்தகு சான்றோர்கள் திருக்குறட் சமுதாயத்தில் பல்கி இருந்தனர் என்பது புலனாகிறது. அதுபோல வறுமையுடையோரும் பலர் இருந்திருக்கிறார்கள்.

பண்பாடு, செயல் அடிப்படையில் வருவது. இன்றளவும் இந்த உலகம் இயங்கி வருதற்குக் காரணம் பண்புடையோர் பலர் வாழ்வதினால்தான்! “பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்” என்பது திருக்குறள். திருவள்ளுவர் ஓர் அதிசயமான செய்தி கூறுகிறார். பகலில் இருள் வந்து சூழ்ந்துவிட்டதாம். யாருக்கு: நெஞ்சில் பகை கொண்டு, கண்டும் காணாமல் நகைத்துப் பேசிக் கலந்துரையாடி மகிழாமல் செல்பவருக்குப் பகலும் இருளாம்.

பண்பில்லாதவனிடத்தில் செல்வம் இருக்காது. ஒரோ வழி விபத்து காரணமாக இருப்பின் நஞ்சு கலந்த பாலாம். அச்செல்வம் நன்றியில் செல்வம். பொருள் ஒரு கருவி, பொருள் ஒரு வாழ்க்கைச் சாதனம்; அவ்வளவுதான். எல்லாமே பொருளால் உண்டாகும் என்று நம்பிப் பொருளை ஈட்டிச் சேமித்து உண்டும் உதவி செய்தும் வாழாதார் செத்த பிறகு என் செய்வர்? ஓர் இளம் பெண், கன்னிப் பெண்; எழில் நலம் மிக்குடையவள்; திருமணமின்றித் தனியே மூத்து முதுமையானது போன்றது அச்செல்வம். நாலு பேரால் நண்ணி அனுபவிக்கப் பெறாத செல்வம், நச்சப்படாத செல்வம் நடுவூருள் பழுத்த நச்சு மரம் ஒத்தது.

திருவள்ளுவர் காட்டும் சமுதாயத்தில் சிறியன சிந்திக்கவும், சின்னத்தனமான காரியங்கள் செய்யவும் நாணுவர். அதாவது வெட்கப்படுவர். உடை, உணவு, இனப் பெருக்கம் எல்லா மக்களுக்கும் பொதுவானவை. சிறப்புடைய மாந்தருக்கு நாணமே பெரிது. நாணமற்றோர் மரப்பாவை யனையர். இது திருக்குறள்.

திருவள்ளுவர் சமுதாயச் சிந்தனையாளர். ஒப்புரவு நெறி நின்று ஒழுகித் தாம் பிறந்த குடியை மேம்பாடு செய்து வளப்படுத்துவதில் நற்குடிப் பிறந்தார் ஈடுபடுவர். பிறந்து வளர்ந்த குடியை மேம்பாடுறச் செய்பவருக்குத் தெய்வமும் துணை செய்யும். தாம் பிறந்த குடியை மேம்பாடுறச் செய்ய விரும்புபவ்ர்கள் "இன்று நன்று, நாளை நன்று" என்று காலம் கடத்தமாட்டார்கள். நாள் பார்த்துக் கடமைகளை ஒத்திப் போடுதல் சோம்பேறித்தனத்தில் கொண்டு போய்விடும். சோம்பேறிகள்தான் சமூகத்தின் மதிப்பு - அவமதிப்பு பார்ப்பார்கள். தாம் பிறந்த குடியை மேம்பாடுறச் செய்பவர்கள் மதிப்பு - அவமதிப்பு பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். தாம் பிறந்த குடியை ஆளாக்குதலே அவர்தம் குறிக்கோள். ஒரே குறிக்கோள்!

“குடிசெய்வார்க் கில்லை பருவம்; மடிசெய்து
மானம் கருதக் கெடும்”

(1028)

என்பது குறள்.

திருக்குறள் காலச் சமுதாய மக்கள் உழவுத் தொழிலிலேயே பெரிதும் ஈடுபட்டிருந்தனர். மக்களியல் கூறி முடித்த திருவள்ளுவர் அடுத்து அவர் செய்த உழவுத் தொழில் பற்றி விரிவாகவே பேசுகின்றார். “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” என்று உழுவோரை உச்சிமீது வைத்துப் பாராட்டுகிறார். திருவள்ளுவர் உழவியல் துறைத் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கினார் என்று புலனாகிறது. தொழிலில் சிறந்தது உழவு. மனிதருள் சிறந்தவர்கள் உழவர்கள். வளம் சேர்ப்பதில் உழவுத் தொழிலே தலையாயது: நன்னெறித் தொடர்புடையது. உழவுத் தொழில் துட்பத்தைத் திருவள்ளுவர் தெளிவாகக் கூறுகிறார். நாள்தோறும் கழனிக்குச் சென்று பயிரைப் பாதுகாக்க வேண்டும் என்ற கடப்பாட்டுணர்வினை,

“செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்”

(1039)

என்று கூறி விளக்குகின்றார். உழவுத் தொழில் கடப்பாடுகளை முறைப்படுத்திக் கூறுவது வியப்பைத் தருகிறது.

“ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு”

(1038)
என்ற திருக்குறள் கூறும் உழவுத் தொழிலின் நெறிமுறைப் பாடுகள் என்றைக்கும் உரியன என்பதை உணர்க. உழவும் ‘தெள்ளு புழுதி’ என்பார்களே அதுபோல அமைய வேண்டும் என்பார் திருவள்ளுவர். அதனால் அந்தக் காலத்திலேயே இருந்த “கோடை உழவை”த் திருவள்ளுவர் அறிமுகப்படுத்தியுள்ளார். நிலமகள் தன்னொடு தொழில் புரிந்தாருக்கு இல்லை என்று சொல்லுவதில்லை; அள்ளிக் கொடுப்பாள். நிலம் இருந்தும் செயற்படாத சோம்பரைக் கண்டு நிலமகள் நகுவாள் என்பதனை,

“இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்”

(1040)

என்ற திருக்குறள் விளக்குகிறது.

இனி, திருவள்ளுவர் சமுதாயத் தீமைகள் சிலவற்றையும் விவரிக்கின்றார். சமுதாயத் தீமைகளில் முதன்மையானது நல்குரவு. நல்குரவு என்றால் வறுமை. அதாவது உண்பன உடுப்பன இன்றித் துன்புறுவது. ஒரு நாட்டில் நல்குரவு நிலவுவது அந்த நாட்டின் வளத்தைக் கெடுக்கும்; ஒழுக்கக் கேடுகளை உருவாக்கும்; பண்பாடுகளைச் சிதைக்கும். அதனால்தான் திருவள்ளுவர்,

“இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது”

(குறள் 1041)

என்றார். வறுமை, இம்மை வாழ்வையும் கெடுக்கும்; மறுமை வாழ்வையும் கெடுக்கும்.

நல்குரவு பற்றித் திருவள்ளுவர் புது இலக்கணம் வகுக்கின்றார். இயல்பாக உள்ள வறுமை வேறு; ஆசை காரணமாக வரும் வறுமை வேறு. அதாவது வாழ்க்கைக்குத் தேவை இல்லாதனவற்றை விரும்பி அது கிடைக்காத நிலையை வறுமை என்று கருதி அழுது புலம்புவாரும் உண்டு. அதுபோலவே, ஒருவகை வறுமையினை வரவேற்கவும் செய்கின்றார். அறஞ்சார்ந்த வறுமையை வரவேற்கின்றார். அதாவது பிறருக்கு வழங்கிய வழி வந்த வறுமையைப் புண்ணியம் சார்ந்த வறுமை என்கிறார். புண்ணியம் சாராத வறுமையைத் தாயும் வேண்டாளாம். நெருப்பிற்குள் துரங்க இயலும், வறுமையுடன் கூடி வாழ்தல் அரிது என்று. வறுமையின் கொடுமையைக் கூறுகின்றார்.

இன்று நமது நாட்டில் வறுமையுற்று வாழ்வோர் 43% இருந்து வருகின்றனர். அதிலும் கிராமப்புற வறுமை கொடியது. கிராமப்புற வறுமையை அகற்ற நமது மாநில, மைய அரசுகள் பல திட்டங்கள் தீட்டின. ஆனால் அந்தத் திட்டங்களைப் பல மக்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை; சிலர் முறைகேடாகப் பயன்படுத்திக் கொண்டனர். கிராமப் புற மக்களின் மனோநிலை - குணாம்சங்கள், பழக்க வழக்கங்கள் மாறினால்தான் கிராமப்புற வறுமை அகலும்! கிராமப்புற மக்களுக்கு வாழ்வியல் சார்ந்த அறிவியல், பொருளியல் அறிமுகப்படுத்தப்படவேண்டும். அது அவ்வளவு எளிதான காரியமல்ல. அவர்கள் “தாங்கள் எல்லாம் தெரிந்தவர்கள்” என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்; எளிதில் கேட்கமாட்டார்கள். ஆனாலும் போராடியாக வேண்டும். இது படித்த மனச்சாட்சியுடையோரின் கடமை.

வறுமைக்குப் பசி பயப்படுமா? வறுமையின் காரணமாக வயிற்றுப் பசி வராதா? உடலில் உயிர் உள்ள வரை பசிப்பிணி யகலாது. வயிற்றில் பசி. வீட்டில் வறுமை! என்ன செய்வான்? பிச்சையெடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. அதனால் ‘நல்குரவு’ அதிகாரத்தைத் தொடர்ந்து ‘இரவு’ அதிகாரம் வைத்தார். இரந்து வாழ்தல் ஒரு வாழ்வா?

“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்”

(1062)

என்றது திருக்குறள். ஆனால் திருவள்ளுவர் இரத்தலையும் முழுமையாக விலக்கிப் பேசாதது ஏன் என்பது ஆய்வுக்குரிய செய்தி. மானுட வாழ்க்கையில் எந்தச் சூழ்நிலையிலும் இரத்தல் வராமல் போகாது என்று எண்ணினாரா? அங்ங்ணமாயின் வறுமை காரணமாக இல்லாமல் பிற காரணங்களுக்காக ஒருவரிடம் கேட்டுப் பெறுதலை இரத்தல் என்று கூறுவானேன்? உதவிக்குள் அதனை அடக்கக் கூடாதா? அறிஞர்கள் ஆராய்க. இரவு அதிகாரத்தில் இரவின் இழிவையே திருவள்ளுவர் கூறவில்லை. அதற்கு மாறாக “ஈவான்ரப் பார்த்து இரக்க!” என்றும் “கரப்பாரிடம் இரக்கம் வேண்டாம்" என்றும் கூறுகின்றார். ஏன்? "இரத்தலும் ஈதலே போலும்" என்றுகூடக் கூறிவிட்டார்.

இரவச்சம் அதிகாரத்தில்தான் இரவின் இழிவு பற்றிப் பேசுகின்றார். இரவச்சம் அதிகாரத்தில்,

"கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்

இரவாமை கோடி யுறும்"
(1061)

என்று கூறுகின்றார். ஆனால் இரவு அதிகாரத்தில்,

"கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின்று

இரப்புமோர் ஏஎர் உடைத்து"
(1053)

என்று கூறுகின்றார். இது என்ன? முன்னுக்குப்பின் முரணா? அல்லது இயல்பாய தேவைகளுக்கு அல்லது அறஞ்சார்ந்த வறுமைக்குத் தந்த விதிவிலக்கா? அறஞ்சார்ந்த வறுமைக்குத் தந்த விதிவிலக்கு அதிகாரமே இரவு.

மக்கட் சமுதாயம் இரந்து வாழும் நிலையில் வாழின், அந்த நாட்டில் அரசு இருந்து என்ன பயன்? கடவுட் கோயில்கள் இருந்து என்ன பயன் திருவள்ளுவருக்குக் கோபமே வருகிறது.

"இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான்"
(1062)

என்று பேசுகிறார்.

திருவள்ளுவர் நல்ல மக்கட் சமுதாயத்தைப் படைத்து உருவாக்கவே திருக்குறள் இயற்றினார். ஆயினும் அவரால் அது முடிந்ததா? முடியவில்லை என்பதே வரலாற்று முடிவு. அதுமட்டுமல்ல, திருக்குறளின் முடிவும் கூட ஏன் எனில், திருக்குறட் பொருட்பாலின் கடைசி அதிகாரம் கயமை. அரசு, நட்பு, பெரியோர், சால்புடையோர் இவ்வளவு பேர் முயன்றும் திருத்த முடியாத கயவர்கள் என்றும் சமுதாயத்தில் இருப்பர் என்று திருவள்ளுவர் நம்புகின்றார். ஆம்! உண்மை! நமது சொந்த அனுபவமும் கூட! நாம் என்னதான் பரிவு காட்டினாலும் குடும்பத்தையே கட்டி வளைத்துச் சோறு போட்டாலும்கூட, ஆயிரம் தடவை புத்திமதி சொன்னாலும்கூட கேட்காமல் குடித்துச் சீரழிபவர்கள் பலர்! சின்னத்தனங்களும் அராஜகங்களும் செய்தல், நன்றி மறத்தல், பிறருடைய பொறுமையை - மன்னிக்கும் மனப்போக்கை அலட்சியமாக - பயந்தாங்கொள்ளித் தனமாக நினைத்தல் ஆகிய தீய பழக்கங்களிலிருந்து மீள முடியாமல் தவிப்பவர் பலர். திருவள்ளுவரே விரக்தியுடன்,

"ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்

போஒம் அளவும்ஒர் நோய்"
(848)

என்று சொல்லக்கூடிய அளவுக்குக் கயவர்கள் வாழ்ந்திருக்கின்றனர்; வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இத்தகு கயவர்கள் "கரும்புபோல் கொல்லவே பயன்படுவர்" என்பது திருவள்ளுவர் கருத்து. கயவர்கள் தம்மைச் சில காசுகளுக்கு விற்றுவிட்டு விவஸ்தையின்றி நன்றிகெட்ட செயல்களைச் செய்வர்.

அண்மைக் காலமாக நமது நாட்டில் இந்தக் கயமைக் கூட்டம் பெருகி வளர்ந்து வருகிறது என்பது உண்மை. கயமைக் கூட்டத்தை அறவே ஒழித்தால்தான் வீட்டில் அமைதி, உலகில் அமைதி. இந்தப் பணி எப்போது நடக்கும்:


  1. ​ காரைக்குடி மெய்யம்மை பதிப்பகம் (இராமசாமி தமிழ்க்கல்லூரி) 13ஆவது ஆண்டு மீனாட்சி ஆச்சி நினைவுச் சொற்பொழிவு 20.2.95