குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10/ஆகஸ்டு

விக்கிமூலம் இலிருந்து



ஆகஸ்டு 1



என் உழைப்பில் வாரா எதையும் ஏற்காதிருக்க அருள் செய்க!

இறைவா, காலமெல்லாம் உயிர்க்குலத்திற்காக உழைத்து ஐந்தொழில் நிகழ்த்திடும் அற்புதத் தெய்வமே! உண்ணும் சோறாய், பருகும் நீராய் விளங்கி வாழ்வித்திடும் அண்ணலே! நின் கருணைக்கு அடியேன் செய்யும் கைம்மாறு ஏது?

இறைவா, எல்லாம் உன் செயலே. ஆனால், அன்றும் நீ நஞ்சையே உண்டனை. பல்லூழிக்காலமாக தானாக விரும்பிக் காட்டும் சோற்றினையே பாவனையால் உண்கிறாய். உண்டது போல் பாவனை, அதையும் நீ எனக்கே திருப்பித் தந்து விடுகிறாய்.

உன் அடியவன் என்று பறை சாற்றிக் கொள்ளும் நானோ உழைப்பதற்கே சோம்பல் படுகிறேன். பிறருக்கு இல்லாத எல்லாம் எனக்குத் தேவை. கூடுதல் ஊதியம் தேவை. பிறர் உழைப்பில் வாழும் நிலை இன்று தாவரங்களுக்கு இல்லை, விலங்குகளுக்கு இல்லை. ஆனால் நான் வெட்கம் இல்லாமல் உழைக்காமல் வாழ ஆசைப்படுகிறேன். பிறர் உழைப்பில் வாழ முற்படுகிறேன். இறைவா, என்னை மன்னித்துக் கொள்.

உழைப்பே உலகத்தியற்கை என்று கற்றுத்தந்துள்ளனை. உழைப்பே உடம்பின் ஊழ். உழைத்தலே உடம்பின் இயற்கை நியதி. உழைப்பில் பயன்படுத்திடா உடம்பு நோய்க்கு இரையாகும் என்றுணர்த்திய தலைவா! “உழைத்து உண்பதே உணவு உழைக்காது உண்பது நஞ்சு உழைத்து உண்பதே நேரிய வாழ்க்கை" என்று அறநெறி உணர்த்திய ஆனேறூரும் அண்ணலே! பிறர் உழைப்பில் வாழ்தல் பிறர் பங்கைத் திருடுதல் என்ற தீய செயல்களிலிருந்து எடுத்தாண்ட அண்ணலே! நான் அயராது உழைப்பேன். என் உழைப்பில் வாரா எதையும் நான் ஏற்காதிருக்க அருள் செய்க!



ஆகஸ்டு 2


இறைவா, மரணமிலாப் பெருவாழ்வு வழங்கி அருள்க!

இறைவா, காலனைக் காலால் தடிந்த காலகாலனே, மனிதகுலத்தை மரணபயம் வருத்துகிறது ஏன் இறைவா! நீ, மரணத்தை நிரந்தரமாகவே உயிர்களுக்கு நீக்கி அருள் செய்யக்கூடாதா? காலனுக்கு வேறு ஏதாவது பணிதரக் கூடாதா?

மரணபயத்தைக் காட்டியே இந்த உலகத்தை இயக்குதல் நின்கருணைக்கு அழகா? நீ மட்டும் சாகாமல் இருக்கிறாய்! எங்களுக்கு ஏன் சாவு? இறைவா, என்ன சொல்கிறாய்?

நானும் மரணமிலாப் பெருவாழ்வு வாழலாமா? அப்படியா இறைவா! நான் மரணமிலாப் பெருவாழ்வையே விரும்புகின்றேன்.

இறைவா, மரணமிலாப் பெருவாழ்வை அடையும் நெறிகளை எனக்குக் கற்றுத் தா. எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரிடத்தும் ஒத்து உரிமை பாராட்டி வாழும் இயல்பினை அருளிச் செய்க.

ஆருயிர்களுக்கெல்லாம் அன்பு செய்யும் பெருவாழ்வினை அருள் செய்க! இன்ப துன்பங்களில் சமநிலையில் நிற்கும் பெற்றியினை அருள் செய்க! எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும் என் உடல் உணர்வுகள் சமநிலையில் அமைதி தழுவியதாக விளங்க அருள் செய்க! எந்தச் சூழ்நிலையிலும் என் உடலில் குருதி கொதிநிலை யடையா வண்ணம் அருள் செய்க! இவையனைத்தும் பயக்கும் மரணமிலாப் பெருவாழ்வை வழங்கி அருள்க!



ஆகஸ்டு 3


காணும் காட்சியினைப் பயன் கருதா உழைப்பின்
காட்சியாகக் கண்டு அங்ஙனமே வாழ அருள் செய்க!

இறைவா, சிறியோர் செய்த பிழையெல்லாம் பொறுத்தருளும் பெரியோனே! என் பிழைகள் பொறுத்து ஆள்வதற்கு ஏன் தயக்கம்? நான் எண்ணற்ற பிழைகளைச் செய்கிறேன்; திரும்பத் திரும்பச் செய்கிறேன்.

இறைவா, எனக்குப் படிப்பறிவும் துணையில்லை! பட்டறிவும் கைகொடுக்க மறுக்கிறது, நான் விழுந்து விழுந்து எழுகிறேன். இறைவா, என் செய்ய? நான் ஒரு பேதை!

இறைவா, என் அறிவைத் திருத்து. என்னை அறிவார்ந்த ஆள்வினையில் உய்த்துச் செலுத்து, என் கண்கள் காண்க. காண வேண்டுவனவற்றைக் காண்க! புலன்கள் ஒன்றிய காட்சியை அருள் செய்க! காட்சியைக் கற்றிடும் சாதனமாக ஏற்றிடும் திறனை அருள் செய்க!

"கண்டதைப் படித்தால் பண்டிதனாவான்" என்ற பழமொழி என் வாழ்வில் உண்மையாகட்டும். என்னைச் சுற்றிலும் உள்ள இயற்கையை-இயற்கையின் பொருளடைவு மிக்க செயற்பாட்டை நான் கற்றறிதல் வேண்டும்.

இயற்கையின் அழகில்-இளமையில்-பயன்பாட்டுத் திறனில் நான் கற்றுக் கொள்வனவற்றைக் கற்றுக்கொள்ள அருள் செய்க! மலர்கள் பூத்துக் குலுங்கிய செடிகள் தாயுமானாருக்கு இறைக் காட்சியைத் தந்தன.

நான் இயற்கையை வாழும் காட்சியாக, பயன் கருதா உழைப்பின் காட்சியாகக் கண்டு நாளும் அங்ங்னமே வாழ்ந்திட அருள் செய்க! ஒயாது உழைத்திடும் உழைப்பாளனாக வாழ்ந்திட அருள் செய்க! என் கண் காண்பனவற்றைக் காண்க! எனக்குக் காட்ட வேண்டுவனவற்றைக் காட்டுக. இறைவா அருள் செய்க!



ஆகஸ்டு 4



ஒவ்வொருநாளும் ஒவ்வொரு நொடியும் திட்டமிட்டுப் பணி செய்ய அருள் செய்திடுக!

இறைவா, ஒருநாள் ஒருபொழுதுகூடத் தடையின்றி, இந்த உலகம் ஓயாது இயங்குகிறது. இந்த உலகம், தோன்றிய நாள் தொட்டு இயங்குகிறது சோர்வு இல்லை. மாற்றங்கள் இல்லை. ஒழுங்கமைவும் கெடவில்லை. இறைவா, என்னே நின் அற்புதம்!

நானோ பிறந்து வளரப் பல ஆண்டுகள் எடுத்துக் கொண்டேன்! அப்பொழுது எல்லாம் தந்தை, தாய், மற்றோர் உதவியுடன் நடந்தேன். வாழ்ந்தேன். நானாக வாழத் தொடங்கிய காலத்திலிருந்து ஒரு நாள் கூட முழுதாக உழைத்தேனில்லை. எட்டுமணி நேரம் என்ற வரையறையில் கூட முழுதாக உழைப்பில் காட்டியதில்லை. எத்தனையோ நாள் வேலைக்கு மட்டம் போட்டிருக்கிறேன்.

இறைவா, நான் கடிகாரம் கட்டியுள்ளேன்! ஆனால் மணியைத்தான் அளந்து பார்த்ததில்லை. கடிகாரம் எனக்கு அணி! நான் சோர்வுபட்டு விழும் வீழ்ச்சிகளுக்குக் கணக்கில்லை. நான் இப்படியே வாழ்ந்தால் உருப் பெற மாட்டேன். என்னைக் காப்பாற்றுக.

காலம் போற்றும் உணர்வினைத் தந்தருள்க! வீழ் நாள்படாமல் வாழ்ந்திட அருள் செய்க! என்னோடு பழகுபவர்களின் அன்பைப் பராமரித்திடும் பண்பைக் கற்றுத் தருக! மற்றவர் ஆலோசனை நல்லதுதான். ஆனால், முடிவெடுப்பதில் மற்றவர் குறுக்கீடு கூடாது.

ஒரு நாள் வீழ் நாளாகப் போனால் அதனால் எண்ணற்ற தீய விளைவுகள் விளையும். இறைவா, என்னைக் காப்பாற்றுக! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் நான் திட்டமிட்டுப் பணிகளைச் செய்ய அருள் செய்க!



ஆகஸ்டு 5



நானும் நல்ல தமிழில் உனைப் போற்றி வழிபட அருள் செய்க!

இறைவா, மதுரைத் தமிழ்ச் சங்கத் தலைவா! நீ தமிழை ஆய்வு செய்தாய்! தமிழை வளர்க்கும் பணியில் உன் குடும்பம் முழுதும் ஈடுபட்டது! சங்கத்தில் தமிழ்ப் புலவனாகக் கவியரங்கேறினாய்.

பண் சுமந்த பாடற் பரிசு பெறக் கூலியாளாக மண் சுமந்தாய். காசு நித்தம் நல்கி இச்சை மீதுார நாளும் நற்றமிழ் கேட்டாய். ஏன் இறைவா? இவ்வளவும் தெரிந்தும் உன்னோடு பேச சமஸ்கிருதம் வேண்டுமாம்! இது என்ன நியாயம் ?

இறைவா, நீ முன்பெல்லாம் எளிவந்தருளித் திருவிளையாடல்கள் ஆற்றினை! நல்ல தமிழ் கேட்கலாம் என்றால் நீ விரும்பி முன் நின்றனை. இப்போதெல்லாம் உன்னை எத்தனை தடவை அழைத்தாலும் நீ வருவதில்லை. ஏன்? நீ மகிழ்ந்து பூரிக்கும் தமிழ் கேட்கும் வாய்ப்பினை இழந்த மையால் நீ வருவதில்லையா?

எந்த இடத்தில் எந்த உருவத்தில் நீ எழுந்தருளி ஆருயிர்களுக்கு அருள் வழங்கினையோ, அங்குக்கூட நீ இருக்கிறாயோ, இல்லையோ என்ற ஐயம் எழும் அளவுக்கு நீ மெளனம் சாதிப்பது ஏன்? இறைவா, நான் ஏழை! தமிழை மட்டுமே அறிந்த ஏழைப்பாவலன்! வடமொழி தெரியாது. எனக்கு மேட்டுக் குடியோடும் உறவில்லை. எனக்காக யாரும் பரிந்துரை செய்ய மாட்டார்கள்.

இறைவா, நான் கூறும் தமிழ் என் தமிழல்ல, அப்பரடிகள் அருளிய அருந்தமிழ்! நானும் நல்ல தமிழில் உனைப் போற்றி வழிபட அருள் செய்க! ஊன் கலந்து உயிர் கலந்து நின்னருளில் திளைத்து வழிபடும் வாய்ப்பினை வழங்குக!



ஆகஸ்டு 6

என்னை ஏழைமையிலிருந்து காப்பாற்றுக!

இறைவா, ஏழைபங்காளா! ஏழையேன் முகம் ஏறெடுத்துப் பார்ப்பது யார்? யாரிடம் சென்றாலும் "ஏழை” என்பதற்குரிய முத்திரையுடன்தான் வரவேற்பு. கல்விக் கோயில் முதல் கடவுட் கோயில் வரை காசுகளின் கொட்டம், பணத்தின் ஆட்சி. நான் என்ன செய்ய?

இறைவா, நீ என் வாழ்க்கையில் பங்கேற்க முன் வந்திருக்கிறாய். உண்மையில் என்னை உயர்த்துவது உன் திருவுள்ளமா? அல்லது என்னை உயர்த்துவது போல நடித்து நீ உயரப் போகிறாயா? இறைவா, என் ஏழைப் புத்தி அப்படிக் கேட்கச் சொல்கிறது! நீ இயல்பாகவே உயர்வற உயர்ந்தவன். இறைவா, என்னை ஏற்று, உயர் நிலைக்கு உயர்த்துக! கற்ற அறிஞனாக அவையில் நிறுத்தி உயர்த்துக. நூலறிவும் நுண்ணறிவும் வழங்கி வாழ்க்கையில் உயர்த்துக!

அறிவறிந்த ஆள்வினையில் ஈடுபடுத்தி இணையற்ற வாழ்நிலையில் வாழ்ந்திடச் செய்க! சால்பு நெறியில் நிற்கும் சான்றோனாக்கி அருள் செய்க! பண்பாட்டின் தலைப்பிரியா நெறியில் உயர்த்திடுக. நயத்தக்க நாகரிகத்தில் நிலை நிற்க அருள் செய்க. என்னை ஏழைமையிலிருந்து காப்பாற்றுக.

நான் அறிவுச் செல்வத்தில் வளர்ந்திடத் திருவுள்ளம் பற்றுக. சிந்தையின் நிறைவில் நின்று மகிழ்ந்திடும் பெரு வாழ்வினை அருள் செய்க! நின்னருள் பெற்று நின்று உயர்ந்து வாழ அருள் பாலித்திடுக!



ஆகஸ்டு 7

இறைவா, என் வாழ்க்கை ஊக்கம் நிறைந்த உழைப்பின் வழியில் நடந்திட அருள் செய்க!

இறைவா, வானநாடனே! வழித்துணை மருந்தே! இறைவா, நான் உலகில் மேற்கொள்ளும் பயணத்திற்கு உரிய வழியை அறிந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். எந்த வழி சுருக்கமானது? பயணத்திற்கு எளிதானது? நலமானது? பயமற்றது? என்றெல்லாம் தெரிந்து கொண்டுதான் பயணம் செய்கின்றேன்.

செல்ல வேண்டிய ஊருக்குரிய பாதையை விட்டு விட்டு, வேறு பாதையை நான் தேர்ந்தெடுத்ததே இல்லை. ஐயப்பாட்டால் வழியில் போவாரிடம்-தெரிந்த ஒருவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டுதான் பயணம் தொடர்கிறது. இது ஒரு பிறப்பில் சில ஆண்டுகள் நடக்கும் பயணத்திற்கு.

இறைவா, ஊழிக்காலந் தொட்டு, உயிர்க்குலம் தோன்றிய நாள் முதலாகத் தொடர்ந்து என் பயணம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நெடிய பாதையில் அல்ல, வட்ட வடிவில் அமைந்த வளைவுப் பாதையில் நடந்து கொண்டிருக்கிறேன். நான் பயணம் செய்து சென்று சேர வேண்டிய ஊர் இன்ப ஊர். ஆனால், வளைந்த பாதையில் சென்று பயணத்தைத் தொடங்கி கருவூருக்கே திரும்ப வந்து விடுகின்றேன்! இறைவா, இது என்ன கொடுமை!

அலைந்து எய்த்துப் போய்விட்டேன்! என்னைச் சரியான வழியில் நடத்துக அழைத்துச் செல்க! இறைவா நான் வரும் வழி சரியானதாக அமைந்து விட்டால் போதும்! மற்றெல்லாம் தாமே நடக்கும்; நன்றாக நடக்கும். இறைவா, அருள் செய்க!



ஆகஸ்டு 8

இறைவா, நான் என்னை ஆளும் தன்மை எனக்கு அருள் செய்க!

இறைவா, தனக்குவமை இல்லாத தலைவா! ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நிலை உன் தலைமை.

இறைவா, எனக்கு எங்கே தலைமையின் தத்துவம் புரிகிறது. எனக்குத் தலைமைக்குரிய தகுதிகளைப் பற்றியெல்லாம் கவலையில்லை. நான் தலைவனாக வேண்டும்; அதுவே என் ஆசை!

"மயக்கமற்ற அறிவு; தெளிந்த-துணிவான அறிவு! அறிவறிந்த ஆள்வினைத்திறன், தன்னுடைய பொறிகளின் மீது மேலாண்மை, புலன்களின் மீது விருப்பம் நிறைந்த செயலூக்கம்; விருப்பு - வெறுப்புக்களைக் கடந்த நிலை, உண்மையைச் சாதிக்கும் திறன்; தீமையை எதிர்த்து உறுதியாகப் போராடும் திறன் - இவை எங்கு இருக்கிறதோ அங்குத் தலைமை தானே வந்து சேரும்.

தகுதியுடையவர்களே தலைமைக்குரியர்-இறைவா, என்ன அருளிச் செய்கின்றனை! தலைமைக்குரிய பண்புகள் சிறந்த ஆளுமை உடையவர்களிடமே அமையும். இறைவா, என்னை, நான் ஆளும் தன்மையை எனக்கு அருளிச் செய்க!

என் பொறிகளை எனக்கு நன்மை செய்யும் நெறியில் செலுத்திடும் வல்லமையை - ஆளுமையை அருள் செய்க! என்னுடைய புலன்கள் அழுக்கடையா வண்ணம் காத்துக் கொள்ளும் திறனை அருள் செய்க! என்னுடைய வாழ்நாட்காலம் முழுதையும் என்வசம் நிறுத்தி, ஆளுமையுடன் முழுமையான உழைப்புக்குரியதாக்கிப் பயன் கொள்ளும் வாழ்நிலையினை அருள் செய்க!

என்னுடைய சூழ்நிலையை நான் என்னுடைய நலனுக்கு உகந்ததாக மாற்றிடும் திறனை அருள் செய்க! இறைவா, எனக்கு இப்போது தலைமை வேண்டாம் முதலில் ஆளுமையை அருள் செய்க!



ஆகஸ்டு 9

இறைவா, என்னுடன் உறவு கொள்ள இங்கே எழுந்தருள்க!

இறைவா, ஆண்டவனே! நின்னருள் போற்றி! போற்றி!! இறைவா, நீ இன்று காணப்படும் பொருளாக இல்லை. ஆதலால் இல்லாத பொருளாகவும் ஆகிவிட்டாய். இறைவா, நீ காட்சிப்பொருளாக, சாட்சிப் பொருளாக மாறிவிட்டாய்.

நீயும் முன்போல் இயக்கத்தில் இல்லையோ? உன்னை விரும்பித் தேடிக் காண்போரும் உன்னோடு உறவு வைத்துக் கொள்வோரும் இல்லை. ஏன் இறைவா, இந்த நிலை? எனக்கும் உனக்கும் உள்ள உறவு இன்று, நேற்றுத் தோன்றியதன்றே! நமது உறவு இப்படிப் பலவீனமானதாக இருக்கலாமா? ஏன், இறைவா? நான் விரும்பி அழைக்கவில்லை என்று கூறுகிறாயா? இது அபாண்டமான குற்றச்சாட்டு!

நான் உண்மையைச் சொல்கிறேன். உனக்கு நிறைய பூசைகள் செய்திருக்கிறேன். எண்ணற்ற அருச்சனைகள் செய்திருக்கிறேன். பலநூறு ஆயிரம் உருமந்திரம் ஜபித்திருக்கிறேன். இறைவா, என்ன சிரிக்கிறாய்? இவை உனக்காகாதவை. பொருளற்ற சடங்குகள் என்கிறாயா? இவற்றில் அன்பு இல்லையா? உறவு இல்லையா? ஈடுபாடு இல்லையா? இறைவா, என்னை மன்னித்துக் கொள்.

நான் இனி உன்னோடு உரையாடத் தகுதியுடைய சபதத்தினைச் செய்வேன். உன்னோடு பேசுவேன், உன்னிடம் நெருங்கி உறவாடுவேன். இறைவா, அருள் செய்க! நான் செய்யும் சபதத்தினை ஏற்றருள் செய்க! என்னுடன் உறவு கொள்ள இங்கே எழுந்தருள்க!



ஆகஸ்டு 10

இறைவா, மெய்யன்பு காட்டும் திறன் அருள்க!

இறைவா, மெய்ப் பொருளே! நின்னருள் போற்றி! போற்றி!! இறைவா, பொய்யை நீக்க முயற்சி செய்கின்றேன், முடியவே இல்லை. பொய்! - ஆம், இறைவா, என் வாழ்க்கையே ஒரு பொய்தானே!

அன்பு செய்வேன். இல்லை அன்பு செய்வதாகக் காட்டிக் கொள்வேன். வேலை செய்வேன். இல்லை- வேலை செய்வது போல ஒரு தோற்றத்தை உருவாக்குவேன். இறைவா, பொய்ம்மையில் பிறந்து உழலும் நான் பொய்யை நீக்க வேண்டும். எப் பணிக்கும் முதற்பணி பொய்யை நீக்குதல். அடுத்து அன்பு காட்ட வேண்டும். ஆம், இறைவா! மெய்யன்பு காட்ட வேண்டும்.

அன்பில் பொய்யன்பு, மெய்யன்பு என்ற வேற்றுமை உண்டு. பொய்யன்பு என்பது பயன் கருதிச் செய்யும் அன்பு. இது அன்பன்று! வணிகமாகும். ஆம், இறைவா, தூண்டிலில் புழுவைக் காட்டி மீன் பிடிப்பது போல, இறைவா, பயன் கருதிச் செய்யும் அன்பு, அன்பன்று! எண்ணிய பயன் கிடைக்காது போனால் அன்பு பகையாக மாறிவிடும்.

இறைவா, கனவிலும் நான் பொய்யன்பு செய்யக் கூடாது. நான் என் உள்ளத்தில் மெய்யன்பை வருந்தி அழைத்துக் கொள்ளவே விரும்புகின்றேன். நான் வாழ்தல் வேண்டும். அதற்கு ஒரே வழி அன்பு செய்தல், அதுவும் மெய்யன்பு காட்டுதல்.

இனி நான் மெய்யன்பு காட்டுவேன்! மெய்யன்பு காட்டும் திறனை அருள் செய்க! மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வந்து அடைந்தேன். மெய்யன்பு காட்டும் திறனை அருள் செய்க! இறைவா, அருள் செய்க!



ஆகஸ்டு 11

இறைவா, மண்ணுக்குள் வேரென மறைந்து கிடந்து சாதனை செய்திட அருள் செய்க!

இறைவா, அமரரேறே! கலந்தார் மனங்கவரும் காதலானே! இன்பத்தை விரும்புகின்றேன். ஆனால், நான் அடைவதோ துன்பம்தான். ஆம் இறைவா, மகிழ்வுக்குரிய அறிவு, செல்வம், புகழ், கூட துன்பங்கலந்த இன்பமாகவே அமைந்துள்ளன. என் வாழ்க்கையில் துன்பம் ஒரு தொடர் கதை. ஏன், இறைவா, இந்தத் துன்பத்திலிருந்து எனக்கு விடுதலை இல்லையா? உய்தி இல்லையா?

இறைவா, "துறவாத துன்பத்தைத் துற” என்கிறாய்! நான் துன்பத்தைத் துறக்க எப்பொழுதும் ஆயத்தமாக உள்ளேன். ஆசைப்படுகின்றேன். ஆனால், துன்பத்தின் காரணத்தைத் துறக்க நான் ஆயத்தப்படவில்லை. உண்மை தான். துறவாத துன்பம் எது? அதுதான் ஆணவம் !

ஆணவமே துன்பங்களுக்கு எல்லாம் முதல்! ஆணவம் பொல்லாதது; பெருமை போலக் காட்டித் தீமை செய்வது. எனக்குத் தீமை செய்யும் இந்த ஆணவம் எனக்குத் தெரியாமலே பற்றிக் கொண்டது. எளிதிலும் நீக்க இயலவில்லை. இறைவா, மன்னித்துக் கொள்!

ஆணவத்தின் வாயில்களாகிய "நான்", "எனது” கெட்டால் போதும்! "நாம்”, “நம்முடையது” என்ற கூட்டு வாழ்க்கை மேற்கொண்டால் ஆணவத்தை முற்றாகத் துறக்க இயலும், ஆணவத்தின் ஆற்றலை முற்றாக அடக்கிவிடலாம்! இறைவா, அருள் செய்க!

அடக்கத்தினை அருள் செய்க! யார் மாட்டும் தாழ்வு காட்டும் பண்பினை அருள் செய்க! மண்ணிற்குள் வேரென மறைந்து வாழ்ந்து சாதனைகள் செய்திட அருள் செய்க! துறவாத துன்பத்தையும் துறந்து வாழ அருள் செய்க!



ஆகஸ்டு 12

எத்தனை தடவை கருவூருக்கும் சாவூருக்குமாகச் சுற்றுவது? இறைவா அருள் செய்க!

இறைவா, பிறவா யாக்கைப் பெரியோனே! நீ சாதலுக்கும் பிறத்தலுக்கும் அப்பாற்பட்டவன்! நானோ செத்துப் பிறப்பதையே தொழிலாகக் கொண்டு பிறந்து இறந்து கொண்டிருக்கின்றேன்! ஏன் இறைவா?

என்னைப் பெருநோய்கள் நலியத் துன்புறுத்தற்கு உரியவாகிய இறப்பு, பிறப்பிலிருந்து மீட்கக் கூடாதா? நின் கருணையைப் பெறுதற்கு நான் தகுதியுடையேன் இல்லையா? நீ குடியுள்ள பிறைமதியைவிட நான் என்ன தாழ்ந்தவனா? இறைவா, நின் திருவருள் நோக்கு என்பால் விழவில்லை.

இறைவா, எல்லாம் நியதிகளின்படி நடப்பது என்றா கூறுகிறாய்? நீ, எனக்குத் துணை ! ஆனால் என்னுடைய ஆக்கம் என் இதய வளர்ச்சியில் பொருந்தியிருக்கிறது. "தகுதியுடையோர் பெறுவர். வாழ்வர்” என்ற வாக்கு வாய்மைத் தன்மையுடையது.

இறைவா, நான் என்னைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்! நான் இங்கேயே வாழுங்காலத்திலேயே இந்த உடலுடன் உலாவரும் காலத்திலேயே "நான்” சாகக் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஆம், இறைவா! என் நெஞ்சில் நின் திருநாமம்! என் நாவில் நின் திருநாமம்! என் கால்கள் நின் திருக்கோயில் களின் திருச்சுற்றில்! கைகள் மலர்பறித்திடுதலில்! இன்ன பிற பணிகளால் "எனது இல்லாமல் போய் "நான் செத்துப் போன பிறகு, நின் திருவருள் நோக்கு, என்பால் வீழ்ந்து அவ்விருளை அகற்றி, ஞான ஒளியினை என் அகத்தில் ஏற்றும்!

நான் ஞானம் அறிந்து உணர்ந்து வாழ்ந்தால் சாதலும் இல்லை; பிறத்தலும் இல்லை! இறைவா, என்னைக் காப்பாற்று! எத்தனை தடவை கருவூருக்கும் சாவூருக்குமாகச் சுற்றுவது? இறைவா, அருள் செய்க!



ஆகஸ்டு 13

இறைவா, என்பிழைகளைப் பொறுத்து ஆட்கொள்ளக் கூடாதா? அருள் செய்க!

இறைவா, தேவ, தேவா! நின் திருவடி அடைந்தேன். காப்பாற்றுக! இறைவா, நான் உனக்குத் தொழும்பாய்க் கிடந்து தொண்டு செய்து வருகின்றேன். இறைவா, உன்னை நினைந்தே என் ஆவி கழிந்து வருகிறது. நானும் உன்னை இறைஞ்சி வேண்டும் யாவற்றையும் அருளிச் செய்கின்றாய் இல்லை.

இறைவா, என் மனக் கருத்தறிந்து முடிக்கின்றாய் இல்லை! நானும் இன்று நடக்கும், நாளை நடக்கும், நம் இறைவன் அருள் செய்வார் என்று எண்ணி வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நீயோ அருளிச் செய்கின்றாய் இல்லை. நானோ சாவை நோக்கிப் பயணம் செய்து கொண்டேயிருக்கிறேன்! இப்பிறப்பில் இப்போது அருளிச் செய்யாது போனால் நான் செத்துப் போனபிறகு என்ன செய்யப் போகிறாய்! என்ன செய்து என்ன பயன்?

இறைவா, அடியேனின் விண்ணப்பத்தைத் திருவுள்ளம் பற்றுக! நான் இப்பிறப்பில் அறிந்து செய்த பாவம் ஒன்றும் இல்லை! நான் குணம் பொல்லேன் அல்லேன்! குற்றமும் உடையேன் அல்லேன்! இறைவா, அப்படியே குற்றங்கள் இருந்தாலும் நின் திருவுள்ளம் குணமாகக் கொள்ளக் கூடாதா? என் பிழைகளைப் பொறுத்தாட் கொள்ளக் கூடாதா?

இறைவா, எனக்கு அருளி உதவி செய்வதற்காக என் பிழைகளைப் பொறுத்து நிறை செய்யக்கூடாதா? என் பிழைகளைப் பொறுத்தாட்கொள்க! இப்போதே ஆட்கொள்க!

நானிலம் அறிய ஆட்கொண்டருளுக! இன்ப வாழ்வினை அருள் செய்க! நின் திருவருளில் நலம் மிகுந்திடும் இன்ப வாழ்வினை அருள் செய்க!



ஆகஸ்டு 14

இறைவா, பெரியோர் நட்பை எனக்கருளி இன்பம் சேர்த்திடுக!

இறைவா, அமரர்கள் சூழ இருந்தருளும் இறைவா! நான் தனியனாக உள்ளேன்! என் தனிமை தாங்க முடியாமல் நட்பினை நாடி அலைகின்றேன்! நட்பு சாதாரணமானதா?

இறைவா, என் வாழ்வின் உயர்வும், தாழ்வும், வெற்றியும், தோல்வியும், ஈட்டமும், இழப்பும் நான் பெறும் நட்பில் தான் அமைகின்றன. "ஆமாம் சாமிகள்” நட்பினராய் வந்தமையால் மோசம் வந்து விட்டது என்று பொருள்.

இறைவா, நான் வளர, வாழ்ந்திட எனக்கு நட்பு தேவை. அப்படியானால் நான் பெறக்கூடிய நட்பு என்னிலும் உயர்ந்ததாக இருத்தல் வேண்டும். அதே போழ்து உயர்வு நிலை கருதாது என்னுடன் எளிமையாக வேறுபாடின்றிப் பழகுபவராகவும் அமைதல் வேண்டும்.

நல்ல நட்பு, வாழ்க்கைக்கு இன்றியமையாத உறுப்பு. நட்புள்ள வாழ்க்கையில் துன்பம் குறையும்; துணிவு சிறக்கும்! "பெரியாரோடு நட்பு இனிது” என்று தேவாரம் சிறப்பித்துக் கூறும். பெரியோருடன் எனக்கு நட்புத் தேவை. இறைவா, அருள் செய்க!

கற்றல் கேட்டலுடைய பெரியோருடன் நட்புக் கூட்டியருள்க! சீலத்தில் சிறந்து விளங்குவாருடன் நட்பு இனிதாகச் சேர்த்தருள்க! செயற்கரிய செயல் செய்யும் திறனுடையாருடன் நட்புக் கூட்டியருள்க! நின்னை மறவாத அடியாருடன் நட்புக்காட்டி இணைத்தருள்க! நான் பிழைத்திட இதுவே வழி! நான் இப்பெரியோர் நட்பைப் பேணி பாதுகாத்துக் கொள்கிறேன்!

இறைவா, நீ நட்புக்காட்டி, நட்பினை ஏற்படுத்தித் தந்தருள்க! பெரியோர் நட்பு இனிது! இம்மைக்கும் இனிது! மறுமைக்கும் இனிது! இறைவா, பெரியோர் நட்பினை எனக்கருளி இன்பம் சேர்த்திடுவாயாக! இறைவா, அருள் செய்க!



ஆகஸ்டு 15

இறைவா, என்மீது முழு அதிகாரம் செலுத்தி, முழுச் சுதந்தரம் அடைய அருள்செய்க!

இறைவா, பரிபூரண சுதந்தரம் உடையவனே! எல்லாவற்றையும் வைத்து வாங்கும் அதிகாரமுடைய ஊழி முதல்வனே! போற்றி! போற்றி!! இறைவா, என் வாழ்க்கையில் சுதந்தரத்தின் சுவை இல்லவே இல்லை!

"ஆடுவோம், பள்ளுப்பாடுவோம்! ஆனந்த சுதந்தரம் அடைந்து விட்டோம்” என்று. ஆனால் சுதந்தரம் என்பது இன்னது என்று எனக்கு இதுவரையில் தெரியாது! சத்தியமாகத் தெரியாது! மன்னித்துக் கொள்!

சுதந்தரத்தின் அனுபவம் இல்லை! "அதிகாரச் சுவையையாவது அனுபவித்தது உண்டா?” என்று கேட்கிறாய் இறைவா! ஐயகோ, அதிகாரமா? அப்படியென்றால் என்ன? இறைவா, அதிகாரமும் எனக்குத் தெரியாது! ஆனால், இறைவா, சில சமயங்களில் சில உத்தரவுகள் போடுவேன்! சிலர் மீது கோபிப்பேன்! இதற்கெல்லாம் அப்படியொன்றும் விளைவுகள் இருந்து விடுவதில்லை.

இறைவா, ஒருவன் முழு அதிகாரம் உடையவனாக இருந்தால் முழுச் சுதந்தரத்தை அனுபவிப்பான்! இறைவா, நன்றருளிச் செய்தனை! முழு அதிகாரம்! என் பொறிகள், புலன்கள், பழைய பழக்கங்கள், மரபுகள், சமூக நிர்பந்தங்கள் ஆகியவற்றிலிருந்து என் ஆன்மா முழுச் சுதந்தரத்தை அடைதல் வேண்டும்.

இந்த முழுச்சுதந்தரம் எனக்குக் கிடைத்த பிறகு எனக்கு முழு அதிகாரம் கிடைக்கும்! முழு அதிகாரமும் முழுச் சுதந்தரமும் இணை! ஒன்றேயொன்று பிரிக்க இயலாதவை. அப்படியா, இறைவா!

நான் இன்றுமுதல் என் வாழ்க்கையில் அனுசரிக்க முயலுகின்றேன்! நான் முழுச்சுதந்தரம் வழங்குவேன்! இறைவா, அருள் செய்க!



ஆகஸ்டு 16


இறைவா, ஞானமே நின் திருவடிகள் போற்றி! போற்றி!!

இறைவா, என் ஆன்மாவை விழித்தெழும்படி செய்து அருள்க! சுயநலச் சிந்தனையில்லாத தனிப்பெருவாழ்வினை அருள் செய்க! பிறருக்கு நலம் புரிவதில் உறுதியினைத் தந்தருள் செய்க.

இறைவா, என் பணிக்கு முதல் தேவை மனிதர்! இரண்டாவது தேவை பணம்! இறைவா, என் நாடு விடுதலை பெற்று ஆண்டுகள் பல ஆகிவிட்டன! ஆனால் நாட்டுமக்கள் இன்னமும் விழிப்படையவில்லை.

மக்கள் பரம ஏழைகள். அவர்கள் இருக்கும் இடம் தேடிச் சென்று கல்வியை, ஞானத்தை, வாழுங்கலையைக் கற்றுத்தரவேண்டும். இது என் ஆசை! இதனை முழுதாக முடித்தால் இந்தியாவின் ஆன்மா விழித்தெழும். ஆவேசம் அடுத்த நொடியிலேயே கொள்ளும். இந்தியாவைப்பற்றியுள்ள வறுமை அகலும், இழிவு நீங்கும்.

இறைவா, இந்த நற்பணியைச் செய்யும் உறுதியைத் தந்தருள் செய்க! பல தடவை முயன்றாயிற்று! மக்கள் வந்த பாடில்லை! இறைவா, உன் அடிச்சுவட்டில் நான் அவர்களுடைய வீடுகளுக்குச் சென்றாக வேண்டும். அவர்களின் நிலையை உயர்த்தியாக வேண்டும். இதுவே, என் பணி! இறைவா, இந்த நாட்டின் இது ஐயம்!

இந்த நாட்டில் கல்வி முதல் கடவுள் வரை பணமே ஆட்சி செய்கிறது. பணம் மட்டுமே ஆட்சி செய்யும் இந்த உலகத்தில் இது சாத்தியமில்லை!

இறைவா, எனக்குரிய மனிதரைத்தேடி நான் கண்டிட அருள் செய்க! இறைவா, எனக்குப் பணம் தருவாரையும் காணோம்! நானே என் செலவுக்குரிய பணத்தையும் தேடிட அருள் செய்க! இந்த நாட்டின் ஏழை பாமர மக்களை உயர்த்தும் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈடுபட அருள் செய்க!



ஆகஸ்டு 17

இறைவா, என் மனம் எனக்கு உற்ற துணையாக இருக்க நயந்தருள் செய்க!

இறைவா, மனத்தகத்தானாக, தலைமேலானாக இருந்தருளும் இறைவா! என் மனத்தில் நீ இருக்கிறாயா? நான் தேடிப்பார்த்தேனே! நீ இல்லையே! என் மனத்தில் உன்னைத் தவிர மற்றதெல்லாம் குவிந்திருக்கின்றன.

அம்மம்ம! மாநகராட்சிக்குப்பைத் தொட்டியை விட மோசமான குப்பைகள் என் மனத்தில் குவிந்துள்ளன. என் மனம் எங்கெங்கோ சுற்றுகிறது; எதை எதையோ எடுத்துக் கொண்டு வருகிறது! என் மனம் எளிதில் பற்றிக் கொணர்ந்த செய்திகள் எதுவாலும் எனக்கு யாதொரு பயனும் இல்லை! இறைவா என் மனம் உலைப்பானையில் நின்று திளைத்தாடும் ஆமைபோல் களிக்கிறது!

திருந்து நல் அமரர்களுக்குத் தலைவா! என்னையும் திருத்தி ஆட்கொள்க! மனம் போகும் போக்கில் நான் செல்லாமல் இருக்க அருள் செய்க! என் மனத்தின் மீது மேலானை தந்து அருள் செய்க! மனத்துக்கண் மாசிலனாக வாழ்ந்திட அருள் செய்க!

மனதிற்கு விஷயங்களைக் கொண்டு சேர்க்கும் பொறிகள் விஷத்தோடு இல்லாதபடி அருள் செய்க! மனம் நன்றே நினைத்திட அருள் செய்க! என் மனம் அன்பிலே கரைந்து தூய்மை நிலை எய்திட அருள் செய்க! என் மனம் கவலையிலிருந்து மீள்க! என் மனம் ஊக்கத்துடன் பணிகளில் ஈடுபட அருள்க!

பணியில் இன்பம் காணும் பண்பை என் மனம் அடைந்திடுக! என் மனம் நல்லறத்தையே நாடும்படி அருள் செய்க! என் மனம் எனக்கு உற்ற துணையாக இருக்க தயந்தருள் செய்க! இறைவா, அருள் செய்க!



ஆகஸ்டு 18

இறைவா! உழைக்கும் தவத்தினில் ஆற்றுப்படுத்தி நலத்துடன் வாழ அருள் செய்க!

இறைவா, நீ எனக்கு அருமையாக அருள் பாலித்த உடலை நலத்தோடு பேண வேண்டும். தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். நல்லவகையில் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். உடல் நலம் பேணலும் கடமையே!

இறைவா, நல்ல காற்று சுவாசிக்க வேண்டும். நல்ல தண்ணீர் குடிக்க வேண்டும். காய்கனிகளை உண்ண வேண்டும். இறைவா, இவையெல்லாவற்றையும் எனக்கருள் செய்க! உடம்பை இகழ்தல், நோய்க்காளாக்குதல் உனக்கு விரோதமான செயல்.

உடலைப் போற்றி வளர்த்தால்தான் உயிர் வளரும்! உயிர் வளர்ந்தால்தான் உணர்வு வளரும்! உணர்வில்தான் ஒழுக்கம் வளரும் ! ஒழுக்கத்தில்தான் உயிர் அன்பு தலைப்படும்! அப்பொழுதுதான் நீ என் உடலை இடமாகக் கொண்டு எழுந்தருள்வாய்!

இறைவா, இது என் உடம்பன்று, உனது திருக்கோயில். நான் புலர் காலையில் எழுந்தும், கதிரொளியில் தோய்ந்தும், காற்றில் களித்தும், புனலில் குளித்தும் இயற்கையோடிசைந்து வாழ்தல் தவம்! வாழ்வாங்கு வாழ்தல் அறம்!

இறைவா, நல்ல உடல், உழைப்பை நாடுகிறது, அவாவுகிறது! உழைத்தால் உடம்பு நன்றாக விளங்குகிறது. உடலுக்கு நோய் உழைக்காமையே!

இறைவா, உடல் வருந்த உழைத்தலே உடலுக்குப் பாதுகாப்பு. உடம்பு வலிமையுறுதலே பயனுறுதலுக்கு வழி. உடல் சோம்பலில் சுகம் கண்டால் இயற்கை தண்டனை தருகிறது. ஆம், நோயினைத் தருகிறது.

இறைவா, உடலின் நலனுக்கு அருள் செய்க! உடல் வருந்த உழைக்கும் தவத்தில் ஆற்றுப்படுத்தி, சுவையான, பயனுள்ள உணவுகளை வழங்குக. நல்ல உறக்கத்தினைத் தந்து நன்றாக வாழ அருள் செய்க!



ஆகஸ்டு 19

இறைவா, என் உள்ளத்தில் ஞான ஒளிவிளக்கை ஏற்றுக!

இறைவா, நேற்று நன்றாக வாழ அருள் புரிந்தனை. நன்றிப் பெருக்கு நிறைந்த போற்றுதல்கள் ஆயிரம், ஆயிரம் உனக்கு இறைவா, இன்றும் வாழ அருள் செய்க!

இறைவா, நீ தாய்! சேயாகிய என் தேவை உனக்குத் தெரியாதா? அதை நீயே அருள் செய்க! இறைவா. இன்று நீ பாராமுகமாக இருப்பது ஏன்? நான் பாவி என்பதனாலா? தாயாக விளங்கும் நீ என்னைப் பாவி என்று புறக்கணிக்கலாமா?

இறைவா நீ புறக்கணித்தால் வேறு யார் எனக்குத் துணை? நானா பாவம் செய்கிறேன்! நீ, கொடுத்த ஊன் பொதி உடல் தானே பாவத்தைத் தூண்டுகிறது! என் உடல் அதன் தேவைகளையே நாடுகிறது!

என் உடலுக்குத் தியாகமோ, அர்ப்பணிப்பு உணர்வோ இல்லை! இறைவா. உடலைத் திருத்து! என் உடலைச் சமூக உழைப்பில் ஈடுபட அருள் செய்! எளிதில் நெகிழ்ந்து கொடுக்கக்கூடிய உருக்கத்தினைத் தா! என் உள்ளத்தில் ஞான ஒளிவிளக்கை ஏற்றுக! நின் அருளின்பத் தேனை - உலப்பிலா ஆனந்தத்தை வழங்குக.

இறைவா, ஒரு வேண்டுகோள்! நீ என் கூடவே வர வேண்டும்! ஆம் இறைவா, நான் எங்கு போனாலும் நீ வர வேண்டும். நான் வாழ்க்கையில் வழுக்கி விழுந்து விடாமல் என்னைத் தொடர்ந்து வந்து காப்பாற்ற வேண்டும்! தவறி விழுந்துவிட்டால் தூக்க வேண்டும்.

இறைவா, நீயே என் செல்வம்! நீ பெருங்கருணையுடன் என் உடலிடத்தில் எழுந்தருளி அருள் செய்கின்றனை. இறைவா, ஆயிரம், ஆயிரம் போற்றிகள்!



ஆகஸ்டு 20

இறைவா, நின்னை மறவா வரம் தந்தருள் செய்க!

இறைவா, நினைப்பும் மறப்பும் இல்லாத தலைவனே! நின் கருணைக்கு ஆயிரம் ஆயிரம் போற்றிகள்! இறைவா, உன்னை நினைந்தபடியே நான் வாழ ஆசைப்படுகிறேன். நான் மறந்தாலும் என்நா, நின் நாமத்தை மறக்காது.

என்னுடைய இடர்கள் நிறைந்த வாழ்க்கைப் பாதையில் நான் தளர்ந்தொழிந்தாலும் உன்னை ஒரு பொழுதும் மறக்க ஒருப்படேன். வழுக்கி வீழ்ந்தாலும் நின் திருநாமம் மறக்க மாட்டேன். உன்னை நினைந்தே என் ஆவி கழியும்.

இறைவா, ஆயினும் என் வாழ்க்கை அலைகடல் எனக் கொப்புளிக்கிறது! ஆர்ப்பரிக்கிறது! ஆயிரம் ஆயிரம் வேலைகள், ஏராளமான பணிகள்! செய்து முடிக்க வேண்டிய பணிகளுக்குரிய காலம் இல்லை. இருக்கும் காலமும் பொய்யாய். கனவாய், பழங்கதையாய்க் கரைந்து கொண்டிருக்கிறது!

இறைவா, இன்று எனக்கு ஏராளமான வேலைகள் உள்ளன. இறைவா, எனக்குள்ள பணிகளின் நெருக்கடி உனக்குத் தெரிந்ததே. ஆதலால், நான் பணிக் களத்தில் நின்று செய்ய வேண்டியிருக்கிறது. இந்தப் பணிகளின் நெருக்கடி காரணமாகவும் உன்னை ஒரு பொழுதும் மறக்கமாட்டேன்.

இறைவா, என்னையும் அறியாத சூழ்நிலையில் உன்னை நினைக்க நான் மறந்துவிட்டால் என்னை மன்னித்து விடு! நீ என்னை மறக்காதே! நீ என்னை மறப்பது முறையன்று, நீ, நினையும் ஆற்றல் இல்லாத புல், பூண்டு, பறவைகள், விலங்குகளுக்கு எல்லாம் அருளிச் செய்கின்றனை !

இறைவா, என்னை நீ மறத்தல் கூடாது! இதுவே என் வேண்டுகோள், பிரார்த்தனை. என்னை உன் நினைவில் இருத்தி அருள் செய்க. நின்னை மறவாத வரம் தந்தருள் செய்க!



ஆகஸ்டு 21

இறைவா! துன்பத் தொடக்கில்லாத இன்ப வாழ்க்கை அருள்க!

இறைவா, பாவநாசா! என் பாவத்தை எப்போது நாசமாக்கி அருள் செய்வாய். இறைவா, பாவனைக்கும், பாவத்திற்கும் உறவு இருக்கும் போல் தெரிகிறதே. ஆம், இறைவா, 'பாவம்' என்பது நன்மையையும் சுகத்தையும் பாவனை செய்து அதுபோலக் காட்டுகிறதே. ஒரு பொய்த் தோற்றம். இதில்தானே நான் ஏமாந்து போகிறேன்.

இறைவா, பாவம் என்பது பாவமாகவே - துக்கமாகவே தோற்றமளித்து என்னை ஆட்படுத்துவதில்லை. பாவம், தொடக்கத்தில் நன்மையாகத் தெரிகிறது, இன்பமாகத் தெரிகிறது! சுகமாகத் தெரிகிறது! பின் விளைவு துன்பமாக இருக்கிறது.

இறைவா, விளக்கொளி, விட்டிலுக்கு விருந்தாகத்தான் தெரிகிறது! தூண்டில் வாய்ப் புழு மீனுக்கு உணவாகத்தான் தெரிகிறது! இளஞ்சூடுடைய நீர் ஆமைக்கு இதமாகத்தான் இருக்கிறது! சொறி சிரங்குடையானுக்குச் சொறிதல் சுகம் தான்! ஆனால், இவற்றின் பின் விளைவு என்ன?

இறைவா, தன்னலம் தொடக்கத்தில் நன்மையாகத் தான் தெரியும்! பதவி சுகம் தொடக்கத்தில் அற்புதம்! அதிகாரச் சுவை தொடக்கத்தில் அபாரம்! ஆனால் இந்தச் சுகங்களிடையே சிக்கி, தேனில் விழுந்த ஈப்போல் ஆனேன்.

இறைவா, துன்பக் கலப்பில்லாத அந்தமில் இன்பமே எனக்குத் தேவை! துன்பத் தொடக்கிலாத இன்பமே என் வாழ்க்கையில் இலட்சியம். இறைவா, அருள் செய்க!



ஆகஸ்டு 22

இடர்களைக் கடந்து என் குறிக்கோளை அடைந்திட அருள்க!

இறைவா! அற்புதங்கள் இயற்றிடும் அண்ணலே! இறைவா! நீ, எத்தனையோ அற்புதங்களைச் செய்து வழங்கியிருக்கிறாய். இறைவா, என் வாழ்க்கைக்குரிய மூலங்கள் அனைத்தையும் நீயே வழங்கியிருக்கிறாய். அவற்றைப் பயன்படுத்திச் சிறப்போடு வாழ்தல் என் கடமை !

இறைவா, சிறப்பாக வாழும் முயற்சியில் மனித குலம் பலநூறு ஆயிரம் ஆண்டுகளாக முயன்று வருகிறது. ஆனால், கிடைத்த பலனோ மிகக் குறைவு.

இறைவா, இந்த உலகில் துன்பத்தைத் தொலைத்தல் இயலாது. பகையை அறவே மாற்றுதல் இயலாது. போர் ஒடுக்கம் நடக்கவே நடக்காது.

இறைவா, மானுடத்தின் வெற்றி நடவாத ஒன்று! என் வாழ்க்கையின் நிலை இதுதான். கொடுத்து வைத்தது அவ்வளவுதான். பிறப்பு எனும் சுழல் வட்டத்தில் சுழன்று வர வேண்டியதுதானா? வேறு வழியில்லையா? இறைவா, அருள் கூர்ந்து இன்னும் ஒரு தடவை அருளிச் செய்க!

இறைவா! இடர் வேறு, இயலாமை வேறு! ஆம் உண்மைதான். நான் என்னுடைய முயற்சிகளில் காணும் இடர்களைக் கண்டு, மலைத்து, இது ஆகாது என்று வாளா இருந்து விடுகிறேன். இது தவறு. இப்பொழுதுதான் வாழ்க்கையின் உண்மை புரிகிறது!

இறைவா, என் பணி சார்ந்த வாழ்க்கையில் இனி இடர்களைக் கண்டு கலங்கா மனம் அருள் செய்க இடர்களைதுன்பங்களைக் கடந்து சென்று, என் குறிக்கோளை நான் அடைய அருள் செய்க! என்னால் இயலாதது என்று ஒன்று இல்லை. இன்பமே எந்நாளும் துன்பமில்லை: இறைவா, அருள் செய்க!



ஆகஸ்டு 23

அன்பே சிவமாக அமர்ந்து ஞானத்தவம் இயற்றும் நிலையினை அருள்க!

இறைவா, அன்பே உருவாக அமர்ந்துள்ள அண்ணலே! இறைவா, நான் வேண்டுவது அருள் செய்க. பொன் வேண்டேன். புகழ் வேண்டேன். இறைவா, சில மணித் துளிகள் தனித்து வாழ்ந்திட அருள் செய்க!

இறைவா, நின்னருளின் மாட்சியைக் காட்டும் இயற்கை எழிலின் மடியில் தவழ்ந்து நின்னை அனுபவிக்கும் ஆரா அனுபவத்தினை அருள் செய்க: இறைவா, நான் வேண்டுவது வீடு அன்று! இறவா அன்பே !

அன்பினிலே என் உயிர் கரைந்து விட வேண்டும். அந்த அன்புக் கரைசலில் உன்னை நான் அமுதமெனக் கண்டு அனுபவிக்க வேண்டும். இறைவா, என் உள்ளத்தில் என் வாழ்வைப் புனிதமாக்கும் ஒரு துளி அன்பினை அருள் செய்க!

என் வாழ்க்கை பட்ட மரமாகி விடுமோ என்ற கவலை அரித்து அழிக்கிறது: யாதுமோர் குறைவில்லை! ஆனாலும் என் இதயத்தில் வற்றாத ஊற்றாக அன்பு வேண்டும்.

இந்த வையகத்தை அன்பால் வளர்த்துப் பேண வேண்டும். "அன்பே அன்பே" என்றழுதழுது அரற்றிடுதல் வேண்டும், இறைவா, அருள் செய்க! இந்த அன்பில் இந்த வையகத்தை நனைத்து, பகைக் காளான்களை அகற்றிட அருள் செய்க! அன்பால் என் ஆன்மா பூரித்துப் பொலிவுடையதாகிட அருள் செய்க!

என்னை வருத்தும் ஆணவ வெப்பம் தணித்திடுக. இறைவா, ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த என்னுடைய அன்பே அருள் செய்க. அன்பே சிவமாக அமர்ந்து ஞானத்தவம் இயற்றும் இன்ப நிலையினை அருள் செய்க!



ஆகஸ்டு 24

இறைவா, என் இயக்கம் பயன்பாட்டு நிலையில் அமைய இன்னருள் புரிக!

இறைவா, ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே! போற்றி, போற்றி, இறைவா. நீ பெரியோய்! அதே போழ்து எளியோனாகவும் விளங்குகின்றாய்!

இறைவா, பொருளில் பெரியது எது? சிறியது எது? தங்கம் விலைமதிப்புள்ள பொருள்தான். உப்பு, விலை குறைவான பொருள்தான். ஆனால் பயன்பாட்டில் உப்பே சிறந்தது! உப்பு இன்றி வாழ்தல் இயலாது.

இறைவா, நான் தோற்றத்தை-மதிப்பை வைத்துப் பொருளின் தரத்தை நிர்ணயிக்க இயலாது. இறைவா, எல்லாப் பொருளும் பயன்பாட்டுக்கு உரியனவேயாம். இவைகளில் நான் யாதொன்றையும் அலட்சியப்படுத்தக் கூடாது.

வேலைகளில் சிறிய வேலை, பெரிய வேலை ஏது! பயன்பாட்டு நிலையே அளவுகோல்! இறைவா, அருள் செய்க! எல்லாப் பொருள்களையும் பாதுகாப்பாக வைத்துப் போற்றிப் பயன்கொள்ளும் பாங்கினை அருள் செய்க!

இறைவா, எந்த ஒரு பணியும் அதனதன் நிலையில் சிறப்பானதே, பயனுடையதே என்று கருதிச் செயற்படும் வாழ்க்கைப் போக்கினையே அருள் செய்க: இறைவா, அருமை என்பது மதிப்பைப் பொருத்ததன்று. பயன்பாட்டு நிலையே!

இறைவா, நானும்கூட பெரிய நிலையில் இருப்பது முக்கியமல்ல. நான் எளியனாக, பயன்பாட்டு நிலையின் வாழ்க்கையை நடத்தும் இயல்பினை ஏற்று வாழ்ந்திட அருள் செய்க! உலகத்தின் இயக்கம் பயன்பாட்டிலேயே இருக்கிறது. இறைவா, அருள் செய்க!



ஆகஸ்டு 25

இறைவா, ஒழுங்கினைக் கடைப்பிடிக்க அருள் செய்க!

இறைவா, "ஒழுங்குபடச் செய்க! ஒழுங்கு படவாழ்க!” என்று அறிவுறுத்துகிறாய். என்னால் முடியவில்லையே! பல ரோடு கூடிவாழ்கின்றேன். அவர்களின் உறவுகள் என்னிடம் ஏராளமான பாதிப்புகளை உண்டாக்குகின்றன; தர்க்கங் களைச் செய்கின்றன! இறைவா, இதனால் நான் விரும்புகின்ற ஒழுக்கத்தில், ஒழுங்கில் நிற்க முடியவில்லை.

இறைவா, ஒழுங்கு இருந்தால் போதுமா? ஒழுக்கமும் வேண்டாமா? இறைவா, என்ன சிரிக்கிறாய்! இரண்டும் ஒன்றேதானா? பொறிகளால் ஒழுகப்படுவது ஒழுங்கு - செயல்முறைகளில் காணப்பெறுவது ஒழுங்கு! புலன்களால் ஒழுகப் பெறுவது ஒழுக்கம்! இவ்விரண்டும் தேவை!

ஏன், இறைவா, ஒழுங்கு, ஒழுக்கம் இவற்றில் எது முதல்? எது எதற்கு ஆதாரம்: ஒழுங்கு-ஒழுக்கத்தினைப் பிரித்து முதனிலைப் படுத்த முடியாது! அப்படியா, இறைவா? ஆதார நிலையும் அப்படித்தானா?

புலன்களில் - மனதில் - உயிரில் நின்றியங்கும் ஒழுக்கங்கள் புறத்தே ஒழுங்குகளாக இயங்குகின்றன! இறைவா, புறத்தே பொறிவழி வாழ்க்கையில் ஒழுங்குகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஒழுக்கத்தினை வளர்த்துக் கொள்ளலாம்; பாதுகாத்துக் கொள்ளலாம்.

ஏன் இறைவா? ஒழுக்கம் இல்லாதவர்கள் நிலை என்ன? இறைவா, ஒழுக்கம் இல்லாதவர்கள் ஒழுங்குகளைக் கடைப்பிடித்தால் அவ்வழி ஒழுக்கமும் வந்தமையும். இறைவா, நீ வசமாக மாட்டிக் கொண்டாய்! இறைவா, ஒழுங்கு, ஒழுக்கத்தைத் தரும், வளர்க்கும் பாதுகாக்கும்!

இறைவா, நான் ஒழுங்காக வாழ - கடமைகளைச் செய்ய அருள் செய்க! இறைவா! இதுவே நியதி! விதி! அருள் செய்க!



ஆகஸ்டு 26

இறைவா, அமைதி தழுவிய மனம்! உறுதியான மனம்! தெளிவான தீர்மானம்! இவற்றை அருள்க !

இறைவா, மனக்கவலை தீர்க்கும் மருந்தே! நின் அருள் திறத்திற்குப் போற்றி! போற்றி!! இறைவா. கவலை, எனது வாழ்க்கையை அரித்து அழித்துக் கொண்டிருக்கிறது. ஓயாத நச்சரிப்பு!

இறைவா, கவலை போக என்ன செய்வது? இறைவா, ஏன் மெளனம் சாதிக்கிறாய்? இறைவா, என்ன? என்ன? மெளனம்தான் பதிலா? பாடமா? இறைவா, நன்றருளிச் செய்தனை!

கவலைகளை மூட்டை கட்டி ஓரிடத்தில் வைக்க வேண்டும். முதலில் அமைதியாக இருத்தல் வேண்டும். பர பரப்பு, அவசரம், கவலை இவைகளிலிருந்து மனம் விடுதலை பெற்றுவிட்டதா? நல்லது, அமைதி தழுவிய மனம் வந்து விட்டதா? உற்றுக் கவனித்துக் கொள்.

மனநிலையில் பரிபூரண அமைதி கிடைத்தவுடன் சிந்தனை செய்யத் தொடங்கு! கவலைக்குக் காரணமாகிய சிக்கல்களை, சிக்கல்களுக்குரிய காரண காரியங்களை ஆய்வு செய்க!

சிக்கல் தோன்றுவதற்குக் காரணமாயமைந்தவைகளை முதலில் நீக்குக! இதனால் சிக்கல்கள் உடன் மேலாண் மைக்குக் கட்டுப்பட்டு, மேலும் வளர்வது தடைப்பட்டுப் போகும்! சிக்கல்கள் மேலும் வளர்வதற்குரிய சூழ்நிலைகளை இழப்பதின் மூலமே வலிவு இழந்து போகிறது. பின் சிக்கல்களுக்கு எளிதில் தீர்வு காணலாம்! சிறப்புடன் வாழலாம்!

இறைவா, இன்றோடு தொலைத்தேன் என் மனக் கவலையை! நச்சரிப்புகளை விட்டொழித்தேன்! இறைவா! அமைதி தழுவிய மனம்! உறுதியான மனம்! தெளிவான தீர்மானம்! இறைவா, அருள் செய்க!



ஆகஸ்டு 27

இறைவா, திரிபுபடாத அன்பை நின் திருவடிகளில் அர்ப்பணிக்க அருள் செய்க!

இறைவா, பேராளா! எம்பெருமானே போற்றி! போற்றி!! நான் நின் சந்நிதிக்கு நாள் தோறும் வருகின்றேன். உன்னை மனமுருகி அழைக்கிறேன். ஆயினும் பலன் ஏதும் கிட்டவில்லை. இறைவா, என் வஞ்சனை ஆறு வற்றிய பிறகல்லவா பக்திப் புனல் பாயும்.

ஆம் இறைவா! நான் ஒரு மனிதனல்லன்! இரு வேறு நிலையினை ஏற்கும் மனிதனாக ஒரே போழ்து விளங்குகின்றேன். ஆம் இறைவா! எதிலும் இரட்டை மனப்பான்மை, நான் எந்த ஒன்றுக்கும் உண்மையாக, நிலைப் பற்றாக விளங்குவதில்லை. அது மட்டுமா? வஞ்சனையையே பாற் சோறு போலக் கருதுபவன். இறைவா, இது மட்டுமா? நான் எதையும் பயன் கருதியே செய்வேன்.

இறைவா, நின் சந்நிதிக்கு வந்து நின்னைத் தொழுவது கூடத் தன்னலப் பற்றோடுதான்! நின் திருவருள் நலம் போற்றிய கண்ணப்பர் போல் நின்னைக் கருதியேயன்று. நின் நலம் கருதியதன்று! இறைவா என்னை மன்னித்தருள் செய்க!

என்னை வஞ்சனையிலிருந்து மீட்டு எடுத்தருள் செய்க! நான் எங்கும் எப்போதும் ஒரு நிலையினையே கடைப்பிடித்து ஒழுகும்படி அருள் செய்க! இறைவா, என் வாழ் நாள் முழுவதும் மற்ற உயிரினத்துக்குரிய நன்மைகளை நாடிச் செய்திடும் நல்வாழ்க்கையை அருள் செய்க!

இறைவா, நீ எனக்கு நன்றருளுதல் வேண்டும். நீ நன்றே செய்தாலும் சரி பிழையே செய்தாலும் சரி! நான் இனி உன்னிடத்தில் வேறு குறிக்கோள் இல்லாத தூய அன்பையே காட்டுவேன்.

இறைவா, திரிபு படாத அன்பை நின் திருவடிகளில் அர்ப்பணிக்க அருள் செய்க! நின் அடியார் குறிப்பையே கடமையாகக் கொண்டு வாழ்ந்திட அருள் செய்க! இறைவா, அருள் செய்க!



ஆகஸ்டு 28

அன்றாடம் தோன்றும் இடர்களை அன்றாடம் நீக்கிக் கொள்ளும் இயல்பினை இறைவா, அருள்க!

இறைவா, மனக்கவலை தீர்க்கும் மாமருந்தே! இறைவா, நான் என் வாழ்க்கைப் போக்கில் தோன்றும் சங்கடங்களை உடனுக்குடன் சரிசெய்து கொள்ளவேண்டும்.

என் வாழ்க்கையில் துன்பங்கள் தோன்றாமல் இல்லை. எண்ணற்ற இடர்ப்பாடுகள்; தொல்லைகள்; துன்பங்கள்! இறைவா, இவை என்னால் உணரத்தக்கன. ஆனால், என் வாழ்க்கையில் ஒரு அசாதாரணமான அலட்சியப் போக்கு! நாளை சரியாகப் போய்விடும் என்ற பொயம்மை தழுவிய மனப் போக்கு.

இறைவா, உண்மையில் நிகழ்வது என்ன? என்னுடைய சிறு சிறு சங்கடங்கள் வளர்ந்து பெரிய இடர்களாக வளர்ந்து விட்டன. என்னையே எடுத்துச் சாப்பிடும் இடர்களாக வளர்ந்து விட்டன. இந்தச் சூழ்நிலையில் அழுகிறேன்! இறைவா, நன்றருளிச் செய்தனை.

ஒரு பெரிய யானையை - இடர்ப்பாட்டில் சிக்கிக் கொண்ட யானையை. ஒரு சாதாரண உயிர்கூட வருத்த முடியும். இறைவா, என் வாழ்க்கையில் அன்றாடம் தோன்றும் இடர்களை அன்றாடம் நீக்கிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவேன். அன்றாடம் வாழ்க்கையில் புத்துணர்ச்சியிருந்தால் இடர்களை - தளர்வுகளைத் தாங்கிக் கடத்தி விடுவேன்.

எப்போதும் என்னுடைய வாழ்க்கையில் அசைவிலா ஊக்கம் கொண்டு ஓயாது உழைக்க அருள் செய்க! துன்பம் தொடரா நிலையைக் காண்பேன்! எந்நாளும் துன்பமில்லை என்பேன்! இறைவா, அருள் செய்க! வெற்றி பொருந்திய வாழ்க்கையை அமைப்பேன்! இறைவா அருள் செய்க!



ஆகஸ்டு 29

காலங்கடந்து விடுகிறது என்ற உணர்வினைத் தந்து கடமைகளில் செலுத்துக இறைவா!

இறைவா, நீண்ட இடைவெளிக்குப்பின் உன்னை அழைக்கின்றேன். ஆம், இறைவா, இடையில் உன்னை நினைக்கவில்லை. ஆனாலும் மறந்தேனில்லை. இறைவா, நீ தான் காலங்களைக் கடந்தவனாயிற்றே? நீ, இதைப்பற்றிக் கவலைப் படுகிறாயா?

இறைவா, நீ காலத்தைப் பற்றிக் கவலைப்படுகிறாய். ஆம், எங்களுக்காக ஆம் இறைவா, கால தேவதை நிற்க மறுக்கிறாள். நானோ ஒத்திப்போடும் சுபாவமுடையவனாகின்றேன். இறைவா, நீ எல்லையற்ற கருணையுடைய வனாயிற்றே! நீ ஏன் எனக்குத் தாராளமாக வாழ்நாளைத் தரக்கூடாது?

இறைவா, என்ன சொல்கிறாய்! அளவிடற்கரிய காலம் தருவதில் உனக்கு ஆட்சேபணை இல்லையா? என்ன இறைவா, "ஆனால்..” என்கிறாய்! காலத்தைத் தள்ளுபவர்கள், கடமையைக் கடத்துபவர்கள், என்றும் எவ்வளவு நாள் கொடுத்தாலும் செய்ய மாட்டார்கள்.

இன்று, இப்பொழுது வாழாதவர்கள் நாளை, நாளை மறு நாள் வாழ்வார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? எப்போதும் "இன்று", "நாளை" என்பவர்கள் என்றுமே செய்யார்கள்.

இறைவா, நீ எங்களைக் காலக்கெடு என்னும் கத்தரிக்கோலில் நெருக்கி வாழச் செய்வது எங்கள் நன்மைக்கேயாம். ஆம், இறைவா! காலம் கடந்து விடுகிறது என்ற அறிவார்ந்த உணர்வை எனக்குத் தந்து கடமைகளில் செலுத்துக! வாழ்வித்திடுக! 



ஆகஸ்டு 30

இறைவா, மனம் நல்லதாக அமைய அருள்க!

இறைவா, ஏன், மனம் என்ற ஒன்றினைத் தந்தனை? இந்த மனம் என்னோடு ஒத்துழைப்பதே இல்லை.

மனம் நாலு புறமும் சுற்றி அலைகிறது; கண்ட கண்ட செய்திகளை எல்லாம் கொண்டுவந்து சேர்க்கிறது. இதனால் நான் உணர்ச்சி வசப்படுகிறேன். ஆத்திரம் வருகிறது. கோபம் வருகிறது. ஏன், பகைமை கொண்டும் விடுகின்றேன்.

இறைவா, முதலில் என்னை இந்த மனத்தினிடமிருந்து விடுதலை செய். அல்லது மனத்துக்கு நான் சொன்னபடி நடக்குமாறு புத்திமதி கூறு! இறைவா, என்ன சொல்கிறாய்! மனம், அதற்கென்று இயல்பு அற்றது.

நான் பழக்குவதைப் பொறுத்து மனம் பழகுகிறது. இறைவா, நான் என் மனத்தை அடக்க வேண்டும். ஆம் இறைவா, மனதிற்கு ஓயாது நல்ல வேலைகள் கொடுத்தால் அது ஒழுங்காக இருக்கும்! சொன்னபடி கேட்கும்.

என் மனம் ஓயாது நல்ல எண்ணங்களை எண்ணும்படி அருள்க! நல்ல கலைஞானங்களைப் பயின்றிட அருள்க! அன்பு செய்யும் பழக்கத்தில் ஈடுபட அருள்க! அப்புறம் பார். மனம் நல்லதாக அமையும்.

மனம் ஒரு குதிரை போன்றது! இந்த மனத்தை அறிவு, காலம் என்ற இரு பட்டையுடைய கடிவாளம் போட்ட குதிரைகளைப் போலாக்கிடுக! இறைவா, மனம் நல்லதாக அமைய அருள் செய்க!



ஆகஸ்டு 31

கடமைகளை இப்போதே செய்யும் மனப்பாங்கினை அருள்க.

இறைவா, காலகாலனே! இந்த வியத்தகு உலகத்தின் நிகழ்வுகளைக் கால நியதிகளின்படி இயக்குபவனே இறைவா, நீ பெரியோன்! ஆற்றல் மிக்குடையோன். ஆயினும் காலங் கடத்துவதில்லை.

இறைவா, உரிய காலங்களில் உரிய கடமைகள் நிகழ்கின்றன! இறைவா, என்ன அற்புதம்! நானோ இன்று நாளை என்று எத்தனை நாள்களைக் கடத்துகின்றேன். ஆம் இறைவா, நான் இன்று வாழ ஆசைப்படுவதில்லை! நாளைக்கு வாழ்வதாக எண்ணம்; திட்டம்.

இறைவா, நான் ஒரு சோம்பேறி. சோம்பேறி இன்று எதுவும் செய்ய மாட்டான். நாளை என்று இன்றைய கடமையை ஒத்திப் போடுவான். நாளை வேறு புதிய கடமைகள் வந்து நிற்கும். நிறையச் செய்ய வேண்டியிருக்கும். சோம்பலுடையார்க்குக் காலம் ஒரு வழுக்குப் பாறை.

இறைவா, இன்று நாளை வருமா? இன்று நான் ஒன்று செய்து பயன் பெற்றால் பயன் கூடுதல் அல்லவா? இறைவா, உண்மை உணர்ந்தேன். இனி என் வாழ்க்கையில் சோம்பல் தலைகாட்டாதிருக்க அருள் செய்க!

"நாளை" என்பது வரையறையில்லாத ஓர் எல்லை. நாளை, நாளை என்றே ஆண்டுக் கணக்கில் ஓடிவிடும்! ஆன்மவளர்ச்சி கெடும். ஆக்கம் கெடும். இறைவா, இன்றே எனது நாள்! நாளை என்னுடையதல்ல.

இறைவா, என் கடமைகளை இன்றே, இப்பொழுதே செய்யும் மனப்பாங்கினை அருள் செய்க! இன்றே செய்க! இப்பொழுதே செய்க. இதுவே என் நிலை. இறைவா, கடமைகளை உடனே செய்ய, அருள் செய்க.