குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10/செப்டம்பர்

விக்கிமூலம் இலிருந்து





செப்டம்பர் 1


இறைவா, கடமை செய்தலாகிய பணியை மேற்கொள்ள முழு ஆற்றல் தா!

இறைவா, எந்தையே! நின் பொன்னடிகள் போற்றி! போற்றி!! இறைவா, நாள்தோறும் எண்ணற்ற நொடிகள் ஓடிக் கழிகின்றன. ஆனால் கடமைகள் முடிந்தபாடில்லை.

ஏதோ இங்கொன்றும் அங்கொன்றுமாக எனக்குக் கிடைத்த வேலையை முழு முயற்சியின்றி, செய்ய இயன்ற வரையில் செய்தலையே, நான், கடமையைச் செய்து விட்டதாக, நினைத்து மன நிறைவு கொள்கின்றேன்.

இறைவா, கோடிக்கணக்கான செங்கற்கள் கொட்டிக் கிடந்தால் அழகு அமைந்த மாளிகையாகாது. அவற்றைக் கொண்டு அழகு மாளிகை அமைக்க வேண்டும். கடமைகளின் தொகுப்பே வாழ்க்கை.

இறைவா, நான் செய்ய வேண்டிய கடமைகளில் சிறியது இல்லை. பெரியது இல்லை. அனைத்துக் கடமைகளுமே என் வாழ்க்கையை வளர்ப்பன; உறுதிப்படுத்துவன. நான் எந்த ஒரு கடமையைப் புறக்கணித்தாலும் என் வாழ்க்கையைப் பாதிக்கும்.

இறைவா, என் உரிமைகள், என் கடமைகளின் வாயிலாகத்தான் என்னை வந்தடைகின்றன. படைக்கட்டுப் பாட்டுணர்வுடன் செய்யப்பெறின், எந்தக் கடமையும் எளிதில் முடியும். கடமைகள் செயற்பாட்டின் வழி உரிமைகள் வந்தமையும்.

இறைவா, எனக்குக் கடமையே தாய்! கற்பகத் தரு! இறைவா, நான் என் கடமைகளைத் தெரிந்து தெளிவுடன் முடிவு செய்வேன்! தராதரமின்றி எல்லாக் கடமைகளையும் பொறுப்புணர்வுடன் நிறைவேற்றுவேன்!

இறைவா, என்னுடைய உரிமைகளுக்குரிய விலையாகிய கடமையைச் செய்தலாகிய பணியை மேற்கொள்ள முழு ஆற்றல் தா! அருள் செய்க! 



செப்டம்பர் 2


உழைப்பின் பயனே கூலியென உணர்த்திய உத்தமனே! போற்றி!

இறைவா, பிட்டினைக் கூலியாகக் கொண்டு மண் சுமந்த மாதேவா! போற்றி! போற்றி! எனக்கு நீ அளிக்கும் கூலி மிக மிகக் குறைவு. இறைவா, நின்னிடம் கூலி போதாதென்று இரக்கின்றேன். இரக்கம் காட்டக்கூடாதா?

இறைவா, என்னை நக்கீரர் ஆக்கிவிடாதே! நான் முழுதாக உழைக்கின்றேன். கூலி கேட்கிறேன். உழைப்பை நிர்ணயிப்பது உழைத்த காலத்தின் அளவைக் கொண்டா? உழைத்த உழைப்பின் அளவைக் கொண்டா? அல்லது உழைப்பின் பயனைக் கொண்டா?

இறைவா, நான் உழைக்கின்றேன்! பயன் கிடைக்கவில்லை! நான் உழைத்தது என்னவோ உண்மை! நல்ல நோக்கத்துடன் நன்றாகத் தேர்ந்து தெளிந்து வகைபட அறிவறிந்த ஆள்வினையுடன், உழைத்தால் அதன் பலன் வராமல் போகாது.

ஏதோ, கடனுக்குக் கழித்தால், கடிகார முள் நோக்கி உழைப்பை நகர்த்தினால் பயன் கிடைக்காது! எனக்கு மிகுதியான கூலி கேட்கும் உரிமையே இல்லை. மன்னித்துக் கொள். இறைவா! நன்றருளிச் செய்தனை !

ஒவ்வொரு பூரணத்துவம் வாய்ந்த உழைப்பிலும் இயற்கையாகவே அதற்குரிய கூலி பொருந்தி அமைந்திருக்கிறது. அது தப்பாமல் கிடைக்கும் என்கிறாய். இறைவா, என்னுடைய உழைப்பைப் பூரணத்துவம் உடையதாகச் செய்ய அருள் பாலித்திடுக!

என் உழைப்பை முழுப்பயனுடையதாகச் செய்ய அருள் பாலித்திடுக! என் உழைப்பின் பயனே எனக்குரிய கூலியின் வாயில்! இறைவா, அருள் செய்க! 



செப்டம்பர் 3


இறைவா, என் மனம் எனக்கு நட்பாக இருக்க அருள் செய்க.


இறைவா, நினைப்பவர் மனம் கோயிலாகக் கொள்ளும் தலைவா! இறைவா, என் மனம் ஓர் அறை. இந்த அறையை நான் பூட்டி வைத்துவிட்டால் என்ன உள்ளே போகும்? கதிரொளி போகாது! காற்று உள் புகாது. இந்த அறையில் நான் எப்படி வாழமுடியும்? வாழ்ந்தாலும் இன்ப வாழ்க்கையாக அமையுமா?

இறைவா, என் மனம் எனும் அறையை நான் பூட்டி வைத்து விட்டேன். எந்தப் புத்தறிவும் என்னிடம் வரா வண்ணம் பூட்டி வைத்து விட்டேன்! பழைமை அல்லது என் பழக்கங்களே சரி என்று முடிவுக்கு வந்து, வளர்ச்சிக்குரிய வாயிலையே அடைத்துவிட்டேன்.

ஞானப் பேரொளி நுழையா வகையில் இருளையே கொள் பொருளாக, அறியாமையையே என் பொருள் எனக் கொண்டுழல்கின்றேன். நல்லவர்கள் நாலுபேருடன் பழகி, கொண்டும், கொடுத்தும் என்மனத்தை வளப்படுத்தாமல் வாழ்கின்றேன்.

இறைவா, இவ்வளவு மோசமான மனத்தில் நீ எப்படி எழுந்தருளியிருக்கிறாய். இறைவா, என் மனம் என் வசமாதல் வேண்டும். எனக்கு ஏன் நூறாயிரம் நட்புகள்.

என் மனம் எனக்கு நட்பாக இருந்தாலே போதும். என் மனம் நேற்றைய நிகழ்வுகள் பற்றிய கவலையைத் தூக்கிச் சுமப்பதைத் தவிர்க்க வேண்டும். என் மனம் நாளைக்கு ஆபத்து வரப்போகிறது என்று இன்றே அழுவானேன்? அழக்கூடாது.

நாளை வரும் ஆபத்தை இன்றைய நன்மனம் நிச்சயமாகச் சந்திக்கும்! வெற்றி கொள்ளும்! இறைவா, என் மனத்தை நன்னட்பாக்க முயற்சி செய்கிறேன்! இறைவா, அருள் பாலித்திடுக! 



செப்டம்பர் 4


இறைவா, என்னை அடிமைக்கு ஆளாக்கும் ஆசைகளிலிருந்து மீட்டு எடுத்தாள்க!

இறைவா, என் தலைவா! நான் உனக்கே ஆட்பட்டேன்! ஆனால் ஆட்கொண்ட நீ கைவிட்டு விட்டனை! என்னை ஐம்பொறிகளுக்கும் போகத்திற்கும் பொய்க்கும் ஒத்தியாகக் கொடுத்து விட்டனை! நான் என்ன பிழை செய்தேன்!

இறைவா, இப்பிறப்பில் யானறி தீவினை யாதொன்றும் செய்திலேன்! எந்தவினை இங்ஙனம் வந்து மூண்டது? இறைவா, எந்த வினை வந்து மூண்டால் என்ன? இப்பிறப்பில் நான் என் தீவினைகளை வெற்றி கொண்டிடத் துணிந்து முயற்சி செய்கின்றேன்! அருள் செய்க!

எய்த்துக் களைத்துப் போகும் போது ஆற்றலாக நின்றருள் செய்திடுக! நான் உனக்கே அடிமை! நான் உனக்கே ஏவல் செய்வேன்! நான் மண்ணில் வாழ்வார் யாருக்கும் குற்றவேல் செய்ய மாட்டேன்! நான் பொய்யில் கிடக்க மாட்டேன்! பொய்யிலாத மெய்யே என் வாழ்க்கையின் இலட்சியம்.

இறைவா, நான் பொய்யிலிருந்து விடுதலை பெற்றாலே அச்சத்திலிருந்து விடுதலை பெற்றுவிடுவேன். இறைவா, நான், அடிமைத் தனத்திலிருந்து மீள அருள் செய்க!

இறைவா, என்னை, அடிமைக்கு ஆளாக்கும் ஆசை களிலிருந்து மீட்டு எடுத்தாள்க! இறைவா, ஆசைகளால் விளையும் பொய்யிலிருந்து விடுதலை தருக. பொய்யிலிருந்து மீண்டு அச்சமிலாத பெரு வாழ்வு வாழ அருள் செய்க!

இறைவா, என் வாழ்க்கையில் துன்பமே தலைக் காட்டாத வண்ணம் வாழ்ந்திட அருள் செய்க! இன்பமே என்றும் சூழ்க! இறைவா, அருள் பாலித்திடுக! 



செப்டம்பர் 5


அன்பு செய்தலே என் வாழ்க்கையின் தொழிலாக அமைய அருள் செய்க!

இறைவா, பெருந்தகையாளனே! நின் பெருந்தகைமைக்கு யாது கைம்மாறு? நான் பெருந்தகையாளனாக விளங்க அருள் செய்க! ஆம், இறைவா! நான் சின்னச் சின்னச் செய்திகள் பற்றி அலட்டிக் கொள்ளக்கூடாது. யார் மாட்டும் அன்பு! இது என் வாழ்க்கையின் தொழிலாக அமைய அருள் செய்க!

இறைவா, எனக்கு ஏன் பகை? என் மீது யார் வேண்டுமானாலும் பகை கொள்ளட்டும். நான் ஏன் பகை கொள்ள வேண்டும். இறைவா, யாருடைய தவறையும் மறக்கும் பெருந்தன்மையை அருள் செய்க!

தீமையை மறத்தல், மன்னித்தல் ஆகிய நற்குணங்களை அருள் செய்க! திறந்த மனம், திறந்த கரம் இவை என்னுடைய வாழ்க்கையின் இயல்புகளாக அமைந்திட அருள் செய்க!

இறைவா, என் சித்தத்தில் இரக்கமும் ஈகையும் இடையறாத இயல்புகளாக நின்று விளங்க அருள் செய்க! இறைவா! நான் பெரிய மனிதனாக வேண்டாம். எளிய தொண்டனாக விளங்க அருள் செய்க!

மற்றவர் மகிழ்ச்சிக்காக நான் துன்புற நேரிட்டாலும் பரவாயில்லை! இறைவா, அருள் செய்க! என் வாழ்க்கை மருந்து மரம் போல அமைந்திட அருள் செய்க!

என் பணி கொள்வோர், என் தலைவர் என்று ஏற்கும் பெற்றியினை அருள் செய்க! பெறற்கரிய பெருந்தகைமையே என் வாழ்வின் குறிக்கோள்! இறைவா, அருள் செய்க! 



செப்டம்பர் 6


இறைவா, எனக்கு இயல்பார்வத்தினை அருள்க!


இறைவா! அண்ணலே! எங்கே என, எனைத்தேடி வந்தருள் செய்யும் தேவே! மண்ணில் புகுந்து மானிடரை ஆட்கொள்ளும் ஐயனே! நீ ஐந்தொழில் நிகழ்த்துகின்றனை! ஏன்? நின் ஐந்தொழில் நிகழ்த்தும் ஆர்வம் இயல்பானது. அதற்கு உந்து சக்தியாக எதுவும் இலலை. பயனார்வமும் இல்லை! அது என் போன்றோரை ஆட் கொண்டருள இயல்பாகத் தோன்றிய ஆர்வம், இரக்கம்!

இறைவா, என் வாழ்க்கையிலும் இயல்பான ஆர்வம் தலைப்படின் நான் உய்வேன்; வாழ்வேன். என்னிடம் இயல்பான ஆர்வம் என்று ஒன்றும் இல்லை. "பிழைக்க வேண்டுமே” என்பதற்காக மனம் இல்லாமல் உழைக்கின்றேன்.

இறைவா, என்னைத் தூண்டித் தூண்டி இயக்க வேண்டியிருக்கிறது. என் வாழ்க்கை கேவலமானது. வெட்கமாக இருக்கிறது. இறைவா, மன்னித்து அருள் செய்க! இனி, என் வாழ்க்கையில் இயல்பான ஆர்வத்துடனேயே, வாழ்தல் வேண்டும். அன்பு செய்ய வேண்டும்.

இறைவா, இயல்பார்வத்தில் தோன்றும் இயல்பூக்கம், அளவற்ற ஆற்றலுடையது. என் வாழ்க்கையில் செயற்கை மூச்சு வேண்டாம்! இயல்பார்வம் நிறைந்த நல்வாழ்க்கையை அருள் செய்க! இயல்பூக்கத்தினை அருளிச் செய்து செய்யாதனவெல்லாம் செய்யும் திறனைத் தந்தருள் செய்க!

இயல்பார்வம் என் வாழ்க்கையின் முதல். இந்த முதலை எனக்கருளிச் செய்யின் என்றும் எப்பொழுதும் ஆட்பட்டிடுவேன்! ஓயாது உழைத்தே வாழ்வேன்! இயல் பார்வம் ஆற்றல் மிக்குடையது! இறைவா, எனக்கு இயல் பார்வத்தினை அருள் செய்க! 



செப்டம்பர் 7


இறைவா, நான் வலிமையுடையோனாக வேண்டும்! அருள்க!

இறைவா, தனக்குவமையில்லாத் தலைவனே! போற்றி! போற்றி! நான் நிலையாக முற்றாக எனக்கு விருப்புடையதாகிய தற்சார்பை அடையவில்லையே? இறைவா, என் வலிமை என்னிடத்திலேயே இருக்கிறது. ஆனால் நானோ புறத்திலேயே தேடிக் கொண்டிருக்கிறேன்.

இறைவா, நான் வாழ என் வலிமை துணை செய்யும்! நான் வெளிப்புறத்தில் தேடும் வலிமைகள் கடைசிவரையில் துணை நில்லா. இறைவா, நான் தனியனாகவே வலிமையுடையோனாக வேண்டும். என் அறிவு வளர்ந்து வலிமை பெற்று விளங்க வேண்டும்.

இறைவா, என் உடல் எஃகினும் வலிமையுடையதாக விளங்க அருள் செய்க! என் மனம் நன்னிலையில் நிலை திரியாது மலையென நிற்கவேண்டும். என் சித்தம் தடுமாறாது தகுதியின் பாற்பட்டொழுகும் நிலையில் இருத்தல் வேண்டும்.

என் புத்தி பேதலித்தல் கூடாது! என் புத்தி துணிவுடையதாக விளங்கவேண்டும். என் செயற்புலன் அகங்காரம் எந்த நிலையிலும் செயற்படுதல் வேண்டும். இறைவா, இங்ஙனம் அருள் செய்க!

நான் என் உடலினை உணவாலும் பயிற்சியாலும் ஒழுக்கத்தாலும் திறனுள்ளதாகப் பேண வேண்டும். நாளும் கற்று, என் அறிவை விரிவாக்கிக் கொள்வேன். என் மனம் என் வசம் இருக்கும். என் புத்தி தடுமாறாது. சிந்தனை ஒரு நிலையானது; என் பொறி, புலன்கள் ஒரு ஆணைவழி நிற்கும்! - இது உறுதி ஐயனே!

என்னை என்காலில் நிற்கச் செய்த கடவுளே! என் வலிமையைக் காத்தருள் செய்க! நான் என் வலிமைக்கு உன்னைத் தேடுவதா? கூடாது. ஆயினும் நீ வெளியே உள்ள பொருள் அல்ல. நீயும் என் அகத்திலிருக்கும் அழியாப் பொருள்! இறைவா, அருள் செய்க! 



செப்டம்பர் 8


இறைவா, நான் மற்றவர் வாழ்வாக அமைய அருள் செய்க!


இறைவா, அறநெறி அண்ணலே! நான் அறநெறியில் நிற்க ஆசைப்படுகிறேன்! ஆனாலும் இயலவில்லை! இறைவா, நன்றருளிச் செய்தாய்! அறநெறி என்பது தர்மங்கள் செய்வதன்று. அறநெறி என்பது ஒரு வாழ்க்கை முறை.

அறநெறியை அடைதல் எளிதன்று. அஃது ஓர் அருமையான முயற்சி! அறநெறி வாழ்க்கைக்கு, முதலில் தியாக உணர்வு வேண்டும். தியாகம் என்பது என்ன? தனக்குத் தேவையானதெல்லாம் மற்றவர் பெற்று வாழ, தன் வாழ்க்கை தடையில்லாதவாறு நடந்து கொள்ளுதல்.

வையம் உண்ண உண்ணுதல், வையம் உடுத்த உடுத்தல், மற்றவர் வாழ்க்கைக்குத் தான் இழக்க வேண்டியதிருப்பின் இழக்கவும், துன்புற வேண்டியிருப்பின் துன்புறவும் தயங்காது ஒருப்படுதல்! தான் அழிய வேண்டிய நிலை வந்தாலும் ஏற்றுக் கொள்ளுதல்! இதுவே தியாகம்!

இறைவா, தியாகம் என் வாழ்க்கையில் எளிதில் வராது! ஆனால், தியாக உணர்வு பெற்றால் வாழமுடியும். நான் தியாகத்தைச் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும். எல்லாரையும் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

சின்னச் சின்னச் செய்திகளிலும் விட்டுக் கொடுக்க வேண்டும். தனியே உண்ணாது கூடி உண்ண வேண்டும். மற்றவர் வேலையில் பங்கேற்க வேண்டும். இறைவா, அருள் செய்க! பழுத்த மரங்களின் தியாகம், என் வாழ்வாகிறது! விளைந்த செந்நெல் கதிர், என் வாழ்வாகிறது! என் தாய் என் வாழ்வானாள்!

நான், மற்றவர் வாழ்வாக அமைய அருள் செய்க! இதுவே தியாகம்! ஓடி ஓடி மற்றவர்க்குற்றது செய்ய அருள் செய்க! தியாகேசா! தியாகம் செய்யக் கற்றுத் தா! 



செப்டம்பர் 9


இறைவா, நான் “கெளரவம்" என்ற பந்தத்திலிருந்து விடுதலை பெற அருள் செய்க!


இறைவா, அடியார்க்கு எளியன் சிற்றம்பலவன் என்று எழுதித் தந்த தலைவா! ஆரூரரை "அடியேன் அடியேன்” என்று கூற வைத்து ஆட்கொண்ட தலைவா! இந்த மானுட உலகத்தில் நான் வாழ்ந்து வருகின்றேன்! சுதந்தரமாகவா? இல்லை, இல்லை! இறைவா, ஏராளமான பந்தங்களுடன்!

மனைவி, மக்கள், வாழ்வு பந்தங்கள் கூட உண்மையில் பந்தங்கள் ஆகா! இறைவா, இவை வளர்ச்சிப் போக்கில் ஆன்ம விடுதலைக்குத் துணை செய்யும் !

ஆனால், நான் மிகவும் விரும்பிப் போற்றுகின்றேனே "கெளரவம்” என்ற ஒன்று! இறைவா, அது பந்தங்களுள் எல்லாம் பெரிய பந்தம் ! தீமைகளுள் எல்லாம் பெரிய தீமை.

இறைவா! நான் கெளரவம் என்ற பந்தத்திற்கு ஆளாகிச் சமுதாயத்தினின்று ஒதுங்குகின்றேன். என்னை உயர்த்திக் கொள்கின்றேன்! கெளரவம் என்ற பெயரால் எளியரிடத்தில் அன்பு காட்டுவதில்லை; பழகுவதில்லை.

கெளரவம் என்ற பெயரால்-வறட்சித் தன்மையால், வீணே அலைகின்றேன். செலவழிக்கின்றேன். இறைவா, ஏன் உன்னிடத்தில்கூட கெளரவத்தின் பெயரால் எளிதில் நான் அடிமையாவதில்லை. நான் தருக்கியே தலையால் நடக்கின்றேன்.

இறைவா, என்ன கொடுமை! அடிக்கொருதரம் என் கெளரவம் என்னாகுமோ என்று பயப்படுகின்றேன். இறைவா, இத்தகைய இழிநிலையில் கெளரவம் என்ற பிரமையில் வீழ்ந்து கிடக்கும் என்னை எடுத்தாள்க!

இறைவா, என்மீது நின் கருணை பொழியவேண்டும். நான் கெளரவம் என்ற அசுர பந்தத்திலிருந்து விடுதலை பெற வேண்டும். யார்க்கும் எளியனாய் வாழ்ந்து தொண்டு செய்ய வேண்டும். இறைவா, அருள்செய்க!



செப்டம்பர் 1


அந்தஸ்து என்ற ஆணவத்தினின்று விடுதலை பெற்று அருள் காட்சியில் திளைத்திட அருள் செய்க!


இறைவா, தாய்ப் பன்றியாகிப் பன்றிக் குட்டிக்குப் பால் கொடுத்த தலைவா! கொற்றாளாகி மண் சுமந்த கோவே! இறைவா, நீ உயிர்களை ஆட்கொள்ளும் திறத்தில் மிகவும் எளிமையாக நடந்து கொள்கின்றனை! தகுதி பார்ப்பதில்லை!

அண்ணலே! நீ அந்தஸ்து பார்ப்பதில்லை! நானோ அந்தஸ்தின் பேரால் இழந்த உறவுகள் எண்ணிக்கையில் அடங்கா. அந்தஸ்து என்ற பெயரால் நான் அடைந்த இழப்புக்கள் பலப்பல!

இறைவா! அந்தஸ்து - தகுதி இவை என்னுடைய உய்திக்குத் தடையாய் உள்ள பந்தங்கள்! இவை என்னைப் பொய்ம்மை நிறைந்த ஒழுக்கத்துக்கு இரையாக்கிக் கெடுத்து விட்டன!

அந்தஸ்து:- இது மிகவும் கொடுமையான பந்தம். அன்பைக் கெடுப்பது. உறவைக் கெடுப்பது. உய்தியைக் கெடுப்பது. இறைவா, என்னை அந்தஸ்து என்ற பேயிலிருந்து காப்பாற்று! நான் யார்க்கும் எளியனாக வாழ அருள் செய்க!

நான் யார்க்கும் தொண்டனாகத் தொண்டாற்ற அருள் செய்க! அந்தஸ்து என்ற பொயம்மையால் நான் கெட்டது போதும்! அந்தஸ்து என்ற பொய்ம்மையைப் போக்கி யாண்டும், யாரிடமிருந்தும் அறிவை இரந்து பெற்றிட அருள் செய்க!

இறைவா, நானும் எளியருக்கு எளியனாக அடைந்து அணைந்து அவர்தம் ஏவலை என் தலைக்கடனாக ஏற்றுச் செய்ய அருள் செய்க! அந்தஸ்து என்ற ஆணவத்தினின்று விடுதலை பெற்று அருட் காட்சியில் தங்கிட தொண்டுலகில் வாழ்ந்திட அருள் செய்க! இறைவா, அருள் செய்க! 



செப்டம்பர் 11


இறைவா, இந்த வாழ்க்கையின் இரகசியம் என்ன? அருள் செய்க!


இறைவா, வான் பழித்து இம்மண் புகுந்த புனிதனே! போற்றி! போற்றி!! என் வாழ்க்கை ஒரு தொடர்கதையாக நீள்கிறது.

இறைவா, என் வாழ்க்கை மயக்க நிலையிலும் ஒரோ வழி தெளிவு நிலையிலும் நகர்த்து கொண்டிருக்கிறது! என் வாழ்க்கை ஒரு போராட்டக் களமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!

அம்மம்ம! எத்தனை வகையான போராட்டங்கள்! ஒன்றோடொன்று ஒவ்வாத பொறிகளுடன் போராட்டங்கள்! மயக்க நிலையில் தீதை நன்றெனத் தழுவி நின்றதால் விளைந்த போராட்டங்கள்! இறைவா, இப்படிச் செல்லும் என் வாழ்க்கையின் முடிவுதான் என்ன?

இறைவா, இவ்வளவு நீண்ட போராட்டங்களுக்குப் பிறகும் நான் இன்னும் என் வாழ்க்கையின் இரகசியத்தை அறிந்தபாடில்லை! உணர்ந்தபாடில்லை! இறைவா, இந்த உலக வாழ்க்கையின் நோக்கம் என்ன? இரகசியம்தான் என்ன? இறைவா, என் வினாவை என் பக்கமே திருப்பி விடுகின்றாயா?

வாழ்வின் இரகசியம் போகம் அன்று! வாழ்க்கையில் நிகழும் அனுபவத்தின் மூலம் கல்வி பெறுவதேயாகும். இறைவா, எனக்கு ஏது அனுபவம்! ஏதோ வெந்ததைத் தின்று விதி வந்தால் சாகின்றேன்! இறைவா, இந்த உலக நிகழ்வுகளைக் கூர்ந்து நோக்கும் உளப் பார்வையை எனக்கு அருள் செய்க!

இறைவா, என் வாழ்க்கைப் போராட்டத்தில் என்னுடைய பணியின் மீது ஒரு சுழற்காற்று வந்து மோதினாலும் நிலைத்து நிற்கும் இயல்பினை அருள் செய்க! மயக்க நிலை வேண்டாம். தெளிவு தந்து அருள் செய்க.



செப்டம்பர் 12


இறைவா, நான் மரணத்திற்கு ஒப்பான சுயநல வாழ்க்கையினின்றும் விலகி அன்பு செய்து வாழ்ந்திட அருள்க!

இறைவா, ஆதியும் அந்தமும் இல்லாத இறைவனே! நான் வாழ்கின்றேன்! ஆம். இறைவா, இதில் உனக்கு என்ன ஐயம்! நான் வாழ்கின்றேன். வேலை செய்கின்றேன்! பொருள் செய்கின்றேன். தொண்டும் செய்கின்றேன்.

இறைவா, என்ன அருளிச் செய்கின்றாய்? இறைவா, நீ அருளிச் செய்வது என் செவிப்புலனைத் தாக்குகிறது! உணர்ச்சி வசப்படுகின்றேன்! இறைவா, என்னை, செத்து விட்டதாக அருளிச் செய்கின்றனையே! நான் பிணமா? ஆம், ஆம்! நான் ஒரு பிணம்! உண்டு நடமாடும் பிணம்! இப்படி அருளிச் செய்கின்றனை!

இறைவா, என்னைப் பழி சொன்னால் போதுமா? என்னைச் சாவிலிருந்து மீட்டருள்க! நின் நெறி பிழையாது வாழ்வேன்! இறைவா, உண்மை! முற்றிலும் உண்மை!

நான் அன்புடையவன்! ஆனால் என் வாழ்க்கை முழுதும் அன்பாக மாறவில்லை! அன்பே, என் வாழ்வை இயக்கும் விதியாகவில்லை! ஆம் உண்மை! என்ன இறைவா! சுயநலம் மரணத்திற்குச் சமம்!

இம்மை, மறுமை இரண்டிலும், சுயநலம் மரணத்திலும் கொடிய துன்பத்தையே தரும். இறைவா, நன்றருளிச் செய்தனை! நலம்புரிவதே வாழ்வு ஆகும். பிறருக்கு நலம் செய்யாது வாழ்தல் சாதலுக்குச் சமம்! இல்லை, சாதலே தான்! இறைவா, நான் சாகாமல் காப்பாற்று!

என் வாழ்க்கை அன்பு ஆகட்டும்! வஞ்சகமின்மை வாழ்க்கையின் நியதியாகட்டும்! பொறுமையுடன் என்னைச் சுற்றி வாழ்வோரின் நலத்திற்காகப் போராடும் இயல்பினைப் பெற்றுள்ளேன். வாழ்த்தியருள்க! வாழ்ந்திட அருள் செய்க! 



செப்டம்பர் 13


என் கால்கள் சொந்த வலிமையில் ஊன்றி நிற்க அருள் செய்க!

இறைவா, நின் திருவடிகள் வாழ்க! வாழ்க! இறைவா, நின் திருவடிகள் மன்னுயிர் காக்கும் தாளாண்மையிலேயே நோன்பாக ஏற்றுள்ள திருவடிகள்! நின் திருவடிகளே உலக இயக்கத்தைச் செய்கின்றன. அடியோங்களைத் தாங்குகின்றன.

இறைவா, என் கால்கள் தாளாண்மையில் முற்றாக ஈடுபட்டால் நல்வாழ்வு கால்கொள்ளும். உடல் நலமும் விளங்கும். இறைவா, என் கால்கள் ஓயாது நடக்கவேண்டும். எங்கு? ஏழைகளின் வீடுகளை நோக்கி நடக்க வேண்டும். நின் திருக்கோயிலைச் சுற்றி வலம் வரவேண்டும்.

வழி வழி கால்கொள்ளக் கூடிய நாகரிகத்தினைப் படைத்திடுதல் வேண்டும். நல் நடைக்கும் என் கால்கள் அரண் செய்யவேண்டும். இறைவா, அருள் செய்க என் கால்களின் வலிமையில் நான் நிற்க வேண்டும்! இறைவா, பொய்க்கால் கூடாது. நான் உழைப்பில் தற்சார்புடையவனாக இருப்பது அவசியம்.

இறைவா, நான் என் வாழ்வினை நடத்தும் தகுதியில் தரத்தில் என் கால்களையே சார்ந்திருத்தல் வேண்டும். இறைவா, என் ஒழுக்கம் வலிமை வாய்ந்தகாக என் சார்பினதாக இடம் பெறுதல் வேண்டும்.

இறைவா, என் கால்கள் நடக்கட்டும். நன்னெறியில் நடக்கட்டும்! இறைவா, என் கால்கள் நின்திருக்கோயிலைச் சுற்றி வலம் வரட்டும்! என் கால்கள் பொருளிட்டத்திற்கும் உழைக்கட்டும். இறைவா, நான் என் கால்களால் ஊன்றி நிற்க அருள் செய்க! 



செப்டம்பர் 14


இறைவா, அன்பெனும் கசிவு கண்டு, காட்டி உதவி செய்க!

இறைவா, கல்லைப் பிசைந்து கனியாக்கும் 'வல்லாளன்' என்று உன்னைப் புகழ்வது பொருந்துமா? இறைவா, என் மனம் கல்லாக இருக்கிறதே! இறைவா, என் மனம் கல்லாக இருந்தால் பரவாயில்லை! கல் வலிமையான பொருள். நின் திருக்கோயில் கட்டுமானத்திற்குக் கல்தானே பயன்படுகிறது!

ஏன் இறைவா? நின்னைக் காண-உறவு கொள்ள உன்னையே கல்லில் தானே சிலையாக வடித்துள்ளோம். இறைவா, என் மனம் இப்படி நல்ல காரியங்களுக்குப் பயன்படுவதில்லையே.

இறைவா, கல் - அதன் நிலையில் பிடிவாதமாக இருப்பதில்லையே. அது பயன்கொள்வார் விருப்பத்திற்கு ஏற்ப வாயிற்படியிலிருந்து உனக்குச் சிலை வடிக்கும் வரை பயன்படுகிறது.

என்னுள் ஏதுமாற்றம்? என்னைப் பயன்படுத்துவோர் யார்? எல்லாம் நானே! எல்லாம் எனக்கே. இறைவா, இத் தகையை கல்மனத்தை நெகிழச் செய்வாயா? அன்பெனும் கசிவு கண்டு காட்டி உதவி செய்க!

இறைவா, நான் அன்பினால் அரற்றி அழவேண்டும். உலகமே என் குடும்பம் ஆக வேண்டும். இறைவா, அருள் செய்க! தன்னலம் மறந்து அனைத்துயிர் நலம் நாடித் தொண்டு செய்ய அருள் செய்க! 



செப்டம்பர் 15


மகிழ்வுடன் வாழ அருள் செய்க!

இறைவா, ஞாலமே! விசும்பே! இவை வந்து போம் காலமே! ஞாலத் தலைவனே! நின் திருவருள் போற்றி! போற்றி!! இறைவா, எனக்கு மகிழ்வும், இன்பமும் தேவை. அருள் செய்க!

நான் என் புத்தியைக் கொண்டு மகிழ்வினைத் தேடித் திரிந்தேன். கண்டனவே களிப்பு இது என் நிலை!

இறைவா, நான் களிப்பை, சுவை நிறைந்த சோற்றில் அடைய முயன்றேன். ஆனால் அதில் அது இல்லை. களிப்பை விரும்பி அணிகலன் ஆடைகளை ஏற்றுக் கொண்டேன்! அவா அடங்கியபாடில்லை. உற்ற காதலில் மூழ்கிப் பார்த்தேன். ஒன்றும் பயன் இல்லை! என்னை ஆட் கொள். ஒன்றுக்கும் உதவாத பொல்லா நாயேனை ஆட்கொண்டருள் செய்க!

நான் இன்பத்தைத் தேடுகின்றேன். ஆனால் இன்பம் இருக்குமிடத்தில் தேடவில்லை! உண்மையான இன்பம் ஆசையில் தோன்றாது. அறிவால் காண இயலாது. இறைவா, எனக்கு ஞானத்தினைக் கொடு. இந்த உலகின் அமைவுகளை - நிகழ்வுகளைத் தெரிந்து தெளியும் ஞானத்தினை அருள் செய்க!

ஞானமுடையோனுக்கே இந்த உலகம். இந்த உலகத்தில் ஞானமுடையோனுக்கே ஆக்கம், இன்பம்! இறைவா, ஞானத்தைத் தந்தருள் செய்க! ஞானம் தெளிவில் பெறுவது. இறைவா, அருள் செய்க! நில்லாதனவற்றை நிலையெனக் கொண்டாடும் பேய்த் தனத்தினின்று மீட்டருள்க.

இந்த உலகின் நடையை மெய் என்று கருதாது ஊடுருவி மெய்ப்பொருள் தேறும் உணர்வினைத் தந்தருள் செய்க! ஞானத்தினால் என்னை ஆட்கொள். வாழ்வித்திடு. மகிழ்வுடன் வாழ்ந்திட அருள் செய்க! 



செப்டம்பர் 16


அருள் வாழ்வினை அருள் செய்க!

இறைவா, நெய், பால், உகந்தாடும் இறைவா! நீ ஏன் நெய், பால் உகந்தாடுகின்றாய்! இறைவா, நன்றருளிச் செய்தனை! நெய், பால், சின்னம் எதன்சின்னம்? அன்பின் சின்னம். அன்பின் பொழிவு. சேவையின் சின்னம்.

மனிதன் உண்ணாதனவாகிய தவிடு, வைக்கோல் இவையே பசுவின் உணவு. சுவையற்ற உணவைத்தின்னும் பசு, எனக்கு அமுதமாகிய பாலைப் பொழிந்து தருகிறது. ஒரு பசு தன் வாழ்நாளில் 24, 960 பேருக்கு ஒரு வேளைக்குத் தேவையான பாலைப் பொழிந்து தந்து வளர்க்கிறது.

ஒரு பசு, தன் தலை முறையில் தான் தன் வழிக்கன்று கள் மூலம் 4, 75, 600 பேருக்கு ஒரு வேளைக்குரிய பாலை வழங்கிக் காப்பாற்றுகிறது! இத்தகைய வாழ்க்கை முறை, பகுத்தறிவு படைத்த மனிதனுக்குக் கைகூடவில்லையே! எனக்குக் கைகூடவில்லையே.

நான், எனக்கே நன்மை தேடி அலைகின்றேனே தவிர என்னால் மற்றவருக்கு என்ன நன்மை என்று ஆராய்வதில்லை. எண்ணுவதில்லை! இறைவா, ஏன் இந்த இழிபிறவி?

என் வாழ்க்கை மற்றவர் வாழ்க்கையின் தேவையாக மாறி வளர்ந்து விட்டால் நான் என் வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். என் வாழ்க்கை தானே நடக்கும்.

அன்பென்ற அமுதம் பொழிந்து தந்து என்னை வாழ்விக்கும் பசுவையே நான் காப்பாற்றுவதில்லையே. இறைவா, என்னை இந்நிலையிலிருந்து எடுத்தாள்க. என் புத்தியினைப் பொருந்துமாறு திருத்துக.

நான் வாழ்தலுக்கு உரிய சாதனம் பிறரை வாழ்வித்தலே என்ற உண்மையை அறிந்து பணி செய்யும் பாங்கினைத் தந்தருள் செய்க! 



செப்டம்பர் 17


வாழும் நெறியில் நிறுத்தியருள்க!

இறைவா, சாவா, மூவா மருந்தே! போற்றி! இறைவா, என் வாழ்க்கை நகர்ந்து கொண்டே இருக்கிறது. என் வாழ்நாள் சுருங்கிக் கொண்டே இருக்கிறது. காலனின் அழைப்புக்குரல் கேட்கிறது.

காலனின் தூதர்கள் அதிவேகமாக முன் கூட்டியே வந்து அமுக்கிப் பிடிக்க முயற்சி செய்து நோய்ப் படுக்கையில் படுக்க வைக்கின்றனர். நான் சாகப் பயப்படுகின்றேன். நான் வாழ ஆசைப்படுகின்றேன்.

இறைவா, ஆசைப்பட்டால் போதுமா! ஆசைகளை நிறைவேற்றுவது முயற்சி அல்லவா? இறைவா, என்னைக் காப்பாற்று! காலனிடமிருந்து காப்பாற்று. இந்த ஒரு தடவை மட்டும் என் சாவைத் தள்ளிப் போடு. சில ஆண்டுகளுக்காவது தள்ளிப்போடு.

இந்த உலகில் எல்லா உயிர்களிடத்தும் நான் அன்பு காட்ட வேண்டும். அவற்றின் துன்பத்தை என் துன்பமாக எடுத்துக் கொண்டு மாற்றிடுதல் வேண்டும். உண்பித்து உண்ணல், மகிழ்வித்து மகிழ்தல், வாழ்வித்து வாழ்தல் இதுவே வாழும் முறைமை. இந்த முறையில் நான் வாழ்ந்திட அருள் செய்க!

என் வாழ்க்கையில் நன்மையே செய்க! தீமைகள் இல்லாத நன்மையை நாடிச் செய்திடும் நன்னெறியில் - வாழும் நெறியில் நிறுத்தி அருள்க. நான் வாழ்தல் வேண்டி நின்னை இரந்தனன்! இறைவா, அருள் செய்க!



செப்டம்பர் 18


வரலாறு எனக்கு ஒரு படிப்பினையாக அமைய அருள் செய்க!

இறைவா, பல்லூழிக்கால வரலாற்றுக்கு உரிமை உடைய நாயகனே! இறைவா, வரலாறும் உன்னைப் போலவே தொன்மையானது. பழமையானது. இந்த வரலாறு நான் படிக்கத் தக்கது இல்லை. படிக்க வேண்டியது, தெரிந்து தெளிய வேண்டிய உண்மைகள் வரலாற்றில் உண்டு.

வரலாறு எனக்குக் கற்றுத் தரும் பிடிப்பினை, எதை எல்லாம் நான் தவிர்க்க வேண்டும் என்பது. இறைவா, வரலாற்று வெள்ளத்தில் நீந்திக் கரையேறியவர்கள் சிலரே; மிகச் சிலரே. ஆனால், இழுத்தெறியப் பட்டவர்களின் எண்ணிக்கை மிகுதி.

இறைவா, வரலாற்றைக் கூர்ந்து நோக்கின் கவிழ்ந்த அரசுகள்-அழிந்த அரசுகள்-கொல்லப்பட்ட அறிஞர்கள் ஆகியோர் தெரிகின்றனர். இறைவா, நான் வரலாறு படித்தால் போதாது. வரலாற்றினை வாழ்க்கையின் படிப்பினையாக ஏற்றுக் கொள்ள அருள் செய்க!

கருணை இல்லாத ஆட்சிகள் ஒழிந்துள்ளன. இரக்க மற்ற அரசுகள் கட்டிய கோட்டைகள் இடிபாடுகளுக்கு ஆளாகியுள்ளன. இறைவா, வரலாற்றைக் கூர்ந்து நோக்கின் அறியாமை, தெளிவின்மை, துணிவின்மை, தனிமுடி கவித்து ஆள்வதற்கெனச் செய்யப்படும் அரசியல் கொலைகள் இன்னோரன்ன தீமைகள் வரலாற்றுப் போக்கில் தள்ள வேண்டியவை.

இறைவா, ஆகாதவற்றைத் தள்ளி ஒதுக்கும் துணிவைத் தா. வரலாற்றின் பயனை வாழ்வுக்கு அருளிச் செய்க. சென்ற கால மனிதர்கள் தோல்வியைத் தழுவியவைகளை அறவே ஒதுக்கிடும் துணிவைத் தா. சென்ற கால வரலாறு எனக்கு ஒரு படிப்பினையாக அமைய அருள் செய்க! 



செப்டம்பர் 19


தப்பெண்ணம் இல்லாது வாழ்ந்திடும் பேற்றினை அருளுக!

இறைவா, என்னை ஆட்கொண்டருள் முடியும் என்ற நம்பிக்கையுடன் என்னைத் தொடரும் தலைவா! என்னை நீ எடுத்தாள முடியுமா? இறைவா, நான் தப்பெண்ணங்களின் வழிப்பட்டு, ஐயப்பட்டு உழல்கிறேன். நான் தப்பெண்ணங்களின் கொள்கலம். அதனால் நான் அகந்தை உணர்வுடன் போட்டியிடுகிறேன்.

இறைவா, "நான் சொல்வதே சரி செய்வதே சரி!” என்ற முடிவுக்கு ஒத்திசையாதவர்கள் எனக்கு வேண்டாதவர்கள் என்று அவர்கள் மீது தப்பெண்ணம் குடிகொண்டு விட்டது. தப்பெண்ணம் உடல் நலத்தைக் கெடுக்கிறது.

என் உடல்நலம், அறிவு, உணர்வுகளை, எல்லாம்கூட தப்பெண்ணம் கெடுத்து விடுகிறது. நண்பர்களைப் பகைவர்களாக்கிவிடுகிறது. ஏன்? மற்றவர் சொல்வதைக் கேட்டது இல்லை என்ற முடிவில் என் மனம் தாழ்ப்பாள் போட்டுக் கொள்கிறது.

இறைவா, நீ தப்பெண்ணங்களுக்கு அப்பாற்பட்டவன். நீ பஸ்மாசுரனைக் கூடத் தப்பாக எண்ணவில்லை. இறைவா, நானோ ஒரு சந்தேகப் பிராணி, தப்பெண்ணங்களே என் முதல். தப்பெண்ணங்களை நான் தற்காப்பு என்று எண்ணுகிறேன். இது தவறு.

இறைவா, நான் நன்றாக எண்ணி நம்பிக்கையோடு நாலுபேருடன் வாழ்ந்தாலே போதும். நான் வெற்றி பெறுவேன் இறைவா, தப்பெண்ணம் இல்லாது வாழ்ந்திடும் பேற்றினை அருள் செய்க! 



செப்டம்பர் 20


எண்ணிய எண்ணியாங்கு எய்தும் விழிப்பு நிலையினை
அருள் செய்க!

இறைவா, நின் அருள் திறத்திற்கு யாதுமோர் குறைவில்லை. நான் வளர்வதற்கு நீ வழங்கியருளிய வாய்ப்புகள் எண்ணில. ஆனால், நான் வாழ்ந்தேனில்லை. உன்னால் ஒன்றும் குறைவில்லை.

நான் வெள்ளத்துள் நா வற்றிச் சாவதைப் போல் செத்துக் கொண்டிருக்கிறேன். மழை பொழிந்தாலும் தளிர்க்க வேண்டியவை மரங்கள் அல்லவோ? வெள்ளப் பெருக்கேயானாலும் அள்ளிக் குடிக்க வேண்டியவை உயிர்களேயன்றோ? கதிரொளி காய்ந்தாலும் காணவேண்டியவை கண்கள் அன்றோ?

இறைவா, நின்னருள் வெள்ளத்திற்கு யாதொரு குறையுமில்லை. இறைவா, நின்னருளைப் பெற்று வாழ்தலுக்கு எனக்கு விழிப்புநிலை தேவை. எப்போதும் ஆயத்த நிலையில் இருத்தல் வேண்டும். நானோ தூங்கி வழிகின்றேன். கண்களை மூடிக்கொண்டே உலகத்தைப் பார்க்கிறேன்.

இறைவா, என் சிறுமையைத் தள்ளி ஆட்கொள்க. எப்போதும் விழிப்புநிலையில் என் உணர்வு இருக்க வேண்டும். எப்போதும் எதையும் சிந்தித்து உடன் முடிவு செய்யும் அறிவு நிலையில் என் உணர்வு இருக்க வேண்டும். எப்போதும் எதையும் எந்தவகை உழைப்பையும் ஏற்றுச் செய்யும் நிலையில் என் உடல்நிலை ஆயத்தமாக இருக்க வேண்டும். இறைவா அருள் செய்க!

விழிப்பு உடையார் வீழ்ச்சி அடையார். ஆயத்த நிலையில் அடையாத ஆக்கங்கள் இல்லை. இறைவா, அருள் செய்க என் உயிர் நிலையில் துடிப்பினை அருள் செய்க! எண்ணிய எண்ணியாங்கு எய்தும் விழிப்பு நிலையினை அருள் செய்க! 



செப்டம்பர் 21


அன்பைப் பொழிந்து அன்புலகமாக்க அருள்க!

இறைவா, என்னுடைய அன்பே ! நின் திருவடிகள் போற்றி! இன்ப விழைவினாலேயே வாழ்க்கை நிகழ்கிறது. எல்லா உயிர்களுக்கும் இன்பமே விழைவு நோக்கம். இன்ப நுகர்வே, இந்த உலக இயக்கத்திற்கு உந்து சக்தி.

இன்ப விழைவினாலேயே அறம் செய்யப் பெறுகிறது. வாழ்க்கையின் பயனே இந்த அன்புதான். இறைவா, இந்த இன்பத்துக்கு முதல் எது? உந்து சக்தி எது? இறைவா, நன்றருளிச் செய்தனை.

இன்பத்திற்கு முதல் அன்பு இன்பத்திற்குக் காரணம் அன்பு. அன்பு தழீஇய வாழ்க்கை இன்பத்தைத் தரும். காரைக்கால் அம்மையார் விழைந்ததும் இன்ப அன்பே. அன்புக்கு வாயில்கள் எண்ணற்றன. உண்டு. இறைவா, நான் அன்பின் வழியில் வாழ்ந்திடும் வழக்கத்தை அருள் செய்க! இறைவா, என் அன்பு ஆற்றலுடையதாக அமைதல் வேண்டும்.

இறைவா, கனிந்த அன்பால்-காரண காரியத்தை ஆய்வு செய்யும் அறிவு அழிதல் வேண்டும். இறைவா ஏன்? உன்னையே நான் அன்பினால் வழிபாடு செய்தல் வேண்டும். இறைவா அருள் செய்க.

நான் அன்பிலே பிறந்தேன். அன்பிலே வாழ்கின்றேன். நான் அன்பை என்னைச் சுற்றி-உலகத்தில் பொழிந்து இந்த வையகத்தை அன்பு உலகமாக்குதல் வேண்டும்.

யாண்டும் அன்பு! யார் மாட்டும் அன்பு! அன்பே இன்பம்! அன்பே ஆற்றல்! அன்பே சிறப்பு! அன்பே குடும்பம்! அன்பே வழி! அன்பின் வழியது என் வாழ்வு. வளம் எல்லாம்! இறைவா, அருள் செய்க! 



செப்டம்பர் 22


தோல்விகளும் வெற்றிகளே என்றுணர்த்திய கருணையே போற்றி!

இறைவா, என்னுடைய சேம நிதியே! நின்னருள் போற்றி! போற்றி! என் வாழ்க்கையில் வெற்றிகள் தேவை. இது என் ஆசை. இறைவா, எனக்கு எடுத்த காரியம் யாவினும் வெற்றியை அருள் செய்க!

இறைவா, என்ன அருளிச் செய்கின்றனை! வெற்றி என்பது ஒன்றும் அவ்வளவு பெருமைக்குரிய தன்று. சில சமயங்களில், பலருக்கு வெற்றி, நல்வாய்ப்பால்கூட வந்து விடலாம்.

என்னை வளர்ப்பது வெற்றிகள் அல்ல. என் தகுதிக்கு அளவுகோல் வெற்றிகள் அல்ல! இல்லையா? இறைவா! மனிதனை வளர்ப்பன தோல்விகளே.

ஒரு வெற்றியை விட ஒரு தோல்வி போற்றத்தக்கது. பெருமைப்படத்தக்கது. வரலாற்றில் நிலைத்து நிற்கக் கூடியது. உலகியல் நெறிப்படி ஏசுபெருமான் தோற்றார். ஆனால், வாழ்வியல் நெறிப்படி வென்றார். இன்றும் மனித உலகத்தை வென்று வாழ்கின்றார்.

என் வாழ்க்கையில் உயர் குறிக்கோளை எடுத்துக் கொள்வேன். என் வாழ்க்கையைப் போர்க்களமாக்கிக் கொள்வேன்; ஓயாது போராடுவேன்.

இந்த நடைப்பயணத்தில் நான் சந்திக்கும் துன்பங்களைக்கண்டு துவண்டு விழுந்துவிடமாட்டேன். சோர்ந்து விடமாட்டேன். என் பயணத்தை இடையில் நிறுத்தவும் மாட்டேன்.

நான் தோல்விகளைச் சந்தித்தாலும், அழுது கலங்க மாட்டேன். அத்தோல்விகளை, வெற்றிப் பயணத்தின் படிக்கற்களாக்கித் தொடர்ந்து நடப்பேன். இறைவா, இது உறுதி. எனக்குத் தோல்விகளும் வெற்றிகளே என்றுணர்த்திய உன் கருணைக்கு நன்றி. போற்றி! போற்றி!! 



செப்டம்பர் 23


இறைவா ஒற்றுமைப் பண்பை வழங்கியருள்க.

இறைவா, களிற்றுரிவை போர்ந்த அண்ணலே! எனக்கு வலிமை தேவை. பலம் தேவை. ஆம், இன்று தேவை! இறைவா, நீயோ சிரிக்கிறாய். எனக்கோ வேதனையாக இருக்கிறது. வெட்கமாக இருக்கிறது. "ஏன் அப்படி?” என்று கேட்கிறாய்.

இறைவா, ஏன் இப்படி நடிக்கின்றாய், ஒன்றும் தெரியாதவன் போல! தலைமுறை, தலைமுறையாக நானும் என் உறவினரும், சுற்றத்தினரும் வறுமையில் வாடி, புலன்கள், பொறிகளை இழந்து வருகின்றோம்.

எத்தனை தலைமுறையாகச் சாதிச் சண்டைகளால் பண்பாடழிந்து வருகின்றோம். நடைபெற்றுள்ள கொலைகள் எத்தனை? இறைவா, போதும், போதும், இந்த நரக வேதனை. எனக்கு வலிமையைத் தா. எங்களுக்கு வலிமையைத் தந்தருள் செய்க!

ஒற்றுமையே வலிமை, வலிமையே ஒற்றுமை. ஆம் எங்களுக்குள் வேற்றுமையில்லை. பிரிவினை இல்லை. எங்களை எந்தச் சக்தியாலும் பிரிக்க இயலாது. இறைவா, ஒற்றுமைப் பண்பை வழங்கியருள்க!

நான் எளியன்! வேறு யாரினும் உயர்ந்தவன் அல்லன்; என் வாழ்க்கை, மற்றவர்களுக்காகவே, மற்றவர் வாழ்க்கையே என் வாழ்க்கை மற்றவர் மகிழ வாழ்தலே என் கடமை. இந்த நிலை எய்திட அருள் செய்க! 



செப்டம்பர் 24


உள்ளதைக் கொண்டு நல்லதைச் செய்து வளர அருள் செய்க!


இறைவா, நரியைப் பரியாக்கிய நாயகனே! என்ன அற்புதம், ஒன்றுக்கும் உதவாத-அழகில்லாத-உபத்திரவம் செய்யக்கூடிய நரிகளைக் குதிரைகளாக்கி நாட்டில் நடமாடச் செய்த வித்தகனே! நீ ஏன் இதைச் செய்தருளினை? மானிட சாதிக்கு ஒரு படிப்பினை தரச் செய்தருளினை!

ஆம். இறைவா! நான் "எனக்கு நல்ல வேலையாகக் கிடைக்க வேண்டும். கைநிறைய ஊதியம் கிடைக்கவேண்டும். சிக்கல் இல்லாத சுலபமான வேலையாக அமைய வேண்டும். சுற்றுப்புறச் சூழ்நிலையெல்லாம் நன்றாக அமையவேண்டும்” - என்றெல்லாம் எண்ணிக் காத்துக் கொண்டிருக்கிறேன். உள்ளதைக் கொண்டு நல்லதைச் செய்து வளர மனம் இல்லை.

இறைவா, நான் எனக்கு வாய்த்ததை வழிமுறையுடன் சிறப்பாகச் செய்கின்றேனா? இதுதான் வினா. எனக்கு வாய்த்த வேலை மோசமான வேலையாக இருக்கலாம். எனக்கு வாய்த்த சூழ்நிலைகள் மோசமாக இருக்கலாம். நான் முயன்றால் எதையும் நல்லதாகச் செய்ய இயலாதா? நின் திருவருள் எனக்குத் துணை செய்யாதா?

இறைவா, அழகை அழகுபடுத்துவதில் என்ன இருக்கிறது? நல்லதை மேலும் நல்லதாக்குவதில் என்ன முயற்சி வேண்டியிருக்கிறது?

இனி நான் நல்ல வேலைக்காக காத்திருக்கமாட்டேன்! எந்தப்பணி கிடைத்ததோ அந்தப் பணியை அது எவ்வளவு மோசமான பணியாக இருந்தாலும் முழு ஊக்கத்துடன் செய்து சிறப்படைவேன்!

இறைவா, கெட்டதை நல்லதாக்குவதே ஆள்வினை. பயனில்லாததைப் பயன்பாடுடையதாக்குவதே முயற்சி. இனி என் வாழக்கை இங்ஙனம் அமைய அருள் செய்க!



செப்டம்பர் 25


ஒருமையுணர்வுடன் உலகியல் நடத்த அருள்க!


இறைவா, "ஆ, வா!" என அருளி ஆண்டு கொண்டருளும் தலைவனே! போற்றி! போற்றி! என் வாழ்க்கையில் வளர்ச்சி, இன்பம், அமைதி இவ்வளவும் அமையவேண்டும்.

மனிதகுல வாழ்வியலை இயக்குவது உலகியல்! ஆதலால் என் வாழ்க்கை சீராக அமையவேண்டுமெனில் நான் உலகியலைத்தான் அணுகவேண்டும். நான் வாழும் உலகியல் செப்பமாக அமைந்தால் என் வாழ்க்கையும் செப்பமாக அமையும்!

இறைவா, உணர்ந்தேன்! உலகியல் செப்பமாக இல்லாமையினால்தான் அறிஞர்களை, அருளாளர்களை இந்தப் "பொருந்தா உலகியல்" கொன்றுவிட்டது!

இந்த உலகியலை ஒருவர் நடத்தக்கூடாது; நடத்த அனுமதிக்கக்கூடாது. பலர் கூடி நடத்த வேண்டும்! அவருள்ளும் ஒரே வகையினராக இருந்தால் வளர்ச்சி இருக்காது! புத்தறிவுக்கு வழியில்லாமற் போய்விடும்! இறைவா, என்னோடு ஒத்தார் பலர் இருந்து நடத்துதல் வேண்டும்.

என் வாழ்க்கையில் பங்கு பெறுபவர்கள் ஒத்தாராக இருந்தால்தான் எனக்கு அவ்வப்பொழுது எடுத்துக்கூற இயலும். நான் வளர வேண்டியவன். உயரவேண்டியவன். ஒத்தாரோடு மட்டுமே உறவானால் உயர்வு இல்லை. ஆதலால், உயர்ந்தாருடனும் கூடி உலகியலை நடத்த வேண்டும். அப்போதுதான் என்நிலை உயரும்.

என் வாழ்க்கையில் அன்பு, இரக்கம் முதலியன ஊற்றெடுத்து என்னை வளர்க்க, தாழ்ந்தாரும் என்னுடன் உலகியலில் பங்கேற்க வேண்டும். நான் எல்லை கடந்த நிலையில் யாரையும் ஒதுக்காமல் ஒதுங்காமல் வளர வேண்டும்.

அன்புக்கும் உறவுக்கும் எல்லையில்லை. ஆதலால், அனைவரும் என்னுடன் சேர்ந்து உலகியல் நடத்தினால் எனக்கு உயர்வு கிடைக்கும். இறைவா, அருள் செய்க! 



செப்டம்பர் 26


இறைவா, நெஞ்சம் தளராதிருக்க அருள் செய்க!

இறைவா, கற்பகமே! நான் என் பிறப்பின் பயனை அடைய வேண்டாமா? என் வாழ்க்கை பூரணத்துவம் அடைய வேண்டாமா?

இறைவா, எனக்கு என்ன குறை என்றா கேட்கிறாய்? இது என்ன கேள்வி: இப்போது என் கையில் பொருள் இல்லை. இந்தக்காலம் நான் ஒன்றுமே செய்ய இயலாத காலமாக இருக்கிறது. இறைவா, ஏன் காமனைக் கனன்று விழித்த பார்வையோடு என்னை நோக்குகிறாய்? நின் சினம் தாங்கும் ஆற்றல் எனக்கில்லை!

இறைவா, நான் ஏதேனும் தவறு செய்தால் மன்னித்துக் கொள்! என் பொல்லாத காலம் கையில் பொருள் இல்லை என்று வாளா இருந்துவிட்டேன். என்னுடைய செயலின்மையைக் காலத்தின் மீது பழியாகப்போட்டு விட்டு நெஞ்சில் தளர்ச்சியைத் தாங்கி நடைப்பிணமாக வாழ்கின்றேன்.

இறைவா, என் இழிநிலையைச் சுட்டிக்காட்டி உணர்த்தியதற்கு நன்றி! ஆயிரம் ஆயிரம் போற்றிகள்! பொருள் இருப்பதல்லவே. அறிவறிந்த ஆள்வினையால் பொருள் படைக்கப்படுவது. இறைவா, நீ செல்வத்தை, இயற்கை உலகத்தில் மறைத்து வைத்து எனக்குத் தந்தருளி உள்ளனை.

என் உழைப்பின்மூலம் அச்செல்வத்தைத் தேடி எடுத்து வாழச் சொல்கிறாய். நானோ அறிவறிந்த ஆள் வினையில் ஈடுபடுவதில்லை. இறைவா, உண்மை உணர்ந்தேன். எந்தச் சூழ்நிலையிலும் நெஞ்சில் தளரேன். இலமென்றுவாளா உறங்கேன்.

காலத்தின் மீது பழிசுமத்த மாட்டேன். என் உழைப்பின் மூலம்தான் காலம் நிலை பெறுகிறது. புகழ்பெறுகிறது. இறைவா, என் உழைப்பால் நான் பொருள் படைத்தவனாக அருள்செய்க! இறைவா, வாழ்வித்திடு! 



செப்டம்பர் 27


இறைவா, உள்ளென்றும் புறமொன்றும் இல்லாத திறந்த மனத்தினை அருள்க!

இறைவா, தூயவெள்ளேறுடையானே! என் மனம் நீ எழுந்தருளும் திருக்கோயிலாக விளங்க வேண்டும். இது என் ஆசை. ஆனால், என் ஆசை எளிதில் நிறைவேறாதுபோல் இருக்கிறதே.

இறைவா, என்மனம் தூய்மையாக இல்லை. வெண்மையாக இல்லை. ஏராளமான செய்திகள் இரகசியம் என்ற பெயரில் அங்கு உள்ளன. அவைகளை மற்றவர் அறிய நான் கூறுவதில்லை.

என்னுடைய வாழ்க்கையில் ஒளிவு, மறைவுகள் அதிகம். இதற்கு ஏதேதோ காரணம் சொல்லி என்னை நானே ஏமாற்றிக் கொள்கின்றேன். இறைவா, நான் என்ன செய்ய? இங்குள்ள சூழ்நிலையில் உண்மை சொன்னால் உலகம் பைத்தியக்காரன் என்ற பட்டம் கட்டிவிடும். வாழத் தெரியாதவன் என்று எள்ளி நகைக்கும். இது இன்று என்னுடைய நிலை.

இறைவா, நீயோ திறந்த மனத்துடன் வாழ்பவர் களையே நேசிக்கிறாய். விரும்பி ஏற்றுக் கொள்கிறாய், எனக்குத் தூய்மையான மனத்தினைத் தந்தருள் செய்க! உள்ளொன்றும், புறமொன்றும் இல்லாத திறந்த மனத்தினை அருள் செய்க!

என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் போல விளங்க அருள் செய்க! கள்ளமற்ற திறந்த மனம், இன்பம் தழீஇய சொற்கள், மனம் திறந்த பேச்சு இவற்றை என் வாழ்க்கையின் நியதிகளாக ஏற்றுக் கொள்ள அருள் செய்க!

இறைவா, திறந்த மனம் உனது அருட் கொடை; நீ விரும்பி நேசிப்பது. இறைவா, திறந்த மனத்தினை அருள் செய்க! 



செப்டம்பர் 28


சிந்தனை நின்தனக்காக்கி வாழ்ந்திட அருள் செய்க!

இறைவா, மந்திரமும் ஆகிய அண்ணலே! "மந்திரம்" என்றால் என்ன? நான் சில சொற்களை முணு முணுக்கின்றேனே! அதுவா, மந்திரம்? இறைவா, நீ அருள் செய்யும் திறப்பாடு வாழ்க!

மந்திரம் எழுத்தில்லை, சொல் இல்லை, சொல்லின் பொருளும் இல்லை! இறைவா, என்ன வியப்பு? இன்று மந்திரம் என்ற பெயராலேயே அன்பு மதம் புரோகித மதமாகிவிட்டது. பணம் செய்யும் தொழிலாக மாறிவிட்டது! எங்கு பார்த்தாலும் காட்டிரைச்சல்.

இறைவா, நீ, மந்திரம் என்பது சிந்தனை என்று உணர்த்தியருளிய திறத்துக்குப் பலகோடி போற்றிகள்! உன்னைப் பற்றிச் சிந்தித்தலே மந்திரம்!

இறைவா, உன்னோடு தொடர்பு கொள்ள வேண்டியது சிந்தனை! என் சிந்தனையை நான் வேண்டிய அளவுக்குத் தூண்டி விட்டுக் கொண்டு சிந்திப்பேன்.

இறைவா, நீ என் சிந்தனையில் தெளிவு கிடைக்க அருள் செய்க! சிந்தனைத் தெளிவில் நீ சிவமாக எழுந்தருளி ஆட்கொண்டருள்க!

இறைவா, நின்னை அடையும் சிந்தனையில் நான் வளர அருள் செய்க! இறைவா, சிந்தனை நின் தனக்கு ஆக்கி வாழ்ந்திட அருள் செய்க! 



செப்டம்பர் 29


ஆற்றலைப் பெருக்கிக் கொள்ள இறைவா, அருள்க!

இறைவா, மனத்துள் நின்று கருத்தை யறிந்து முடிக்கும் தலைவா! துன்பத் தொடக்கே இல்லாத மனித சமுதாயத்தைக் காண வேண்டும். இது என் ஆற்றலை விஞ்சிய குறிக்கோளா? இல்லையே இறைவா!

என் ஆற்றலுக்கு ஏது எல்லை? அளவு? என் ஆற்றல் எல்லையற்றது! அளவற்றது! என் குறிக்கோளை அடைய வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டேன். என்னால் முடியும். என் வாழ்க்கையில் விடா முயற்சியே தேவை.

இறைவா, என்னிடம் முயற்சியே இல்லை. விடா முயற்சி வேண்டும் என்கிறாய். போகாத ஊருக்கு வழி சொல்கிறாயா! இறைவா வேறுவழி இல்லையா? இல்லை. விடா முயற்சியே தேவை. ஒரு நாள் செய்து பல நாள் செய்யாதொழிதல் கூடாது. தொடர்ச்சியே தேவை. நின்று நின்று உழைத்தல் கூடாது. தொடர்ந்து உழைக்க வேண்டும்.

உழைப்பில் ஆற்றலைப் பெருக்கி வளர்க்கும் உயரிய குறிக்கோள் தேவை. அக்குறிக்கோளில் ஆவேசம் தேவை. அறிவு, உணர்வுகளில் அந்த உயரிய குறிக்கோள்கள் அதிட்டித்து நின்று இயக்குதல் வேண்டும்!

இறைவா, நான் ஒரு சுடரே! ஆனால் தூண்டினால் எரியும் சுடர் நான். எந்த விளக்குக்கம் தூண்டுதல் தேவை. இறைவா, என்னைத் துரண்டிவிடு. நான் ஆற்றல் மிக்குடையவனாக வாழ்கின்றேன்! என் ஆற்றல் எரியும் சுடர்! தூண்டி விட்டால் பரிணமித்துச் செயல்படும்.

இறைவா, என் உணர்வு நிலையில் இருக்கும் சமுதாயத்தை அமைக்க முதல் தேவை என் ஆற்றல். என் ஆற்றலை நான் பெருக்கிக் கொள்ள இறைவா, அருள் செய்க. 



செப்டம்பர் 30


என் வாழ்க்கையில் காலந்தவறாமை அமைய அருள் செய்க!

இறைவா, இன்று காலை மெல்லிய தண்ணளிமிக்க காற்று வீசிய காட்டின் சூழ்நிலை, இனிய குயில் இசை எழுப்பியது. எழுந்தேன். ஆம். இறைவா, குயிலின் இசையே என்ன எழுப்பியது.

கடிகாரம், நாட்காட்டி இல்லாத இயற்கை, காலம் தவறுவதில்லை. ஏன், இறைவா? காலந்தவற விடுதல் கூடாதா? ஆம், இறைவா! காலந்தவற விடாநிலையே வாழ்நிலை.

காலம் பொன் போன்றது. காலத்தினாற் செய்வதே பயன்பட்ட வாழ்நிலை பொருள் பொருந்திய வாழ்நிலை, இறைவா, எனக்கு அருள் செய்க!

இறைவா, என்னைச் சுற்றி ஓர் ஒழுங்குபட்ட உலகைக் காண்கிறேன். எங்கும் ஒழுங்கு. முறை பிறழாத நிகழ்வுகள். ஆம், இறைவா, என் வாழ்க்கையிலும் ஒழுங்கும், முறை பிறழாத செம்மையும் வந்தமைய வரம் தருக!

இறைவா, என் வாழ்க்கையில் காலம் தவறாமை அமைய அருள் செய்க! என் வாழ்க்கையில் காலத்தின் அருமையை உணர்ந்து செயலாற்றும் பாங்கினை அருள் செய்க.