குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10/ஜூலை

விக்கிமூலம் இலிருந்து





ஜூலை 1


இறைவா, சிறந்த கடமைகள் செய்வதில் ஈடுபடுத்தி
ஆட்கொள்க!


இறைவா, இடர்களையும் ஏந்தலே! போற்றி! போற்றி!! இறைவா, என்னை மன்னித்துக் கொள். ஒரு சாதாரண ஆன்மாவாகிய என்னை ஆட்கொண்டால் என்ன? எண்ணியன முடித்துத் தந்தால் என்ன?

இறைவா, ஓரளவு நான் நல்லவனே. இறைவா உன்னை வேண்டுவது எனது நலன் மட்டும் அல்லவே! மற்றவர் நலன் நோக்கிச் செய்யும் பணிகளில்கூட தடங்கல்கள்! தன்னார்வமுடைய தோழர்களைக் காணோம். நீயோ துணை செய்ய மறுக்கிறாய். இறைவா, ஏன் இந்தச் சோதனை.

நான் ஒரு சாமான்யன், ஆரூரர், திருவாதவூரர், திருநாவுக்கரசர் ஆகியோரின் நெஞ்சத்தைப்போன்ற நெஞ்சம் பெறும் பாக்கியம் பெற்றேனில்லை! நீ அவர்களிடத்தில் நிகழ்த்திய சோதனைகளுக்கு அவர்கள் ஆளானது போல் நான் ஆளாக இயலாது. இறைவா, நன்றருளிச் செய்தனை.

என்னுடன் ஆன்மா வலிமை பெற வேண்டும். ஆற்றல்களைப் பெறவேண்டும். குறிக்கோளில் நிலை கொண்டு வாழ்ந்திடல் வேண்டும். ஆம், இவை அனைத்தும் எனக்குத் தேவைதான். இறைவா, சிறந்த காரியங்கள் செய்வதன் மூலமே ஆன்மா பூரணத்துவம் அடைகிறது.

சிறந்த காரியங்களை-விடா முயற்சியுடன் செய்வதன் மூலமே ஆன்மா ஆற்றல் பெறுகிறது. சிறந்த செயல் செய்யும் முயற்சியில் ஏற்படும் இடர்களைத் தாண்டுவதன் மூலமே ஆன்மா வலிமை பெறுகிறது. சிறந்த முயற்சியில் ஆன்மா ஈடுபடும்பொழுது பெறும் இன்ப துன்பங்களில் காட்டும் சமநிலையிலேயே ஆன்மா தூய்மை பெறுகிறது. இறைவா, அறிந்து கொண்டேன். இடர்களும், வாழ்த்துக்கள் என்று வரவேற்கத்தக்கன. இறைவா, சிறந்த செயல்களைச் செய்வதில் ஈடுபடுத்தி ஆட்கொள்க! 

ஜூலை 2


இறைவா, சாவா வாழ்வினை வழங்கி யருள்செய்க!

இறைவா, எல்லா உலகமும் ஆனாய் நீயே, நின் திருவருள் போற்றி! போற்றி!! இறைவா, நான் இறக்க அச்சப்படவில்லை. என்றோ ஒரு நாள் இறக்க வேண்டியது தானே! ஆனால் இறைவா, நான் சாவதற்குக் கூச்சப்படுகின்றேன்.

இறைவா, என்னைச் சாவிலிருந்து காப்பாற்று. இருந்தும் இல்லாமல் இருப்பது; நான் வாழ்ந்தும் பயன் படா நிலையில் வாழ்வது; நான் உண்டும் உணர்விலாப் பிண்டமாய் வாழ்வது; உண்டு, உடுத்து, உறங்கி வாளா வாழ்வது இவை சாவு நிலைகள். இறைவா, இத்தகைய சாவிலிருந்து என்னை மீட்டுக்கொள்ள ஓய்விலாது உழைத்திடும் பேற்றினை அருள் செய்க! ஆன்மநேய ஒருமைப்பாட்டு உணர்வினை வழங்கியருள் செய்க!

வாழ்க்கை விரிவு நோக்கியது. விரிந்து கொண்டு செல்வதே உயிர்ப்புள்ள வாழ்க்கை. அதிலும் ஓயாது விரிந்து கொண்டிருப்பதே வாழ்க்கையின் உயிர்ப்பு நிலை, வாழ்நிலை!

இறைவா, எல்லைகள், வேலிகள் இவை அறியாமையின் படைப்புகள். ஆணவத்தின் அடையாளங்கள். இறைவா, என் வாழ்க்கை எல்லைகளைக் கடந்ததாக விரிவடைய வேண்டும்.

என் அன்புக்கு எல்லை இருத்தல் கூடாது. நான் உழைத்து உறவு கொள்ளும் உலகம் விரிவுடையதாக அமைய வேண்டும். குறுகியது எதுவும் சாவு. தன்னைப் பற்றியே சிந்திப்பவன் பேய். இந்த இழிநிலை வேண்டாம்.

என் வாழ்க்கை ஓயாது விரிவடைய அருள் செய்க! எந்நாட்டவரும் என் சகோதரர். அனைத்துயிரும் என் உறவு. இப்படியே எண்ணி, வாழ்ந்து பணி செய்திடப் பணித்திடுக. சாவா வாழ்வினை வழங்கியருள் செய்க! 

ஜூலை 3


இறைவா, விவாதங்களில் ஈடுபடாது காரியத்திலேயே
கண்ணாக இருப்பேன், அருள் செய்க!

இறைவா, பித்தனே, மோனத் தவமிருக்கும் உத்தமனே. ஏசினும் ஏத்தினும் ஏற்றருள் செய்யும் அருளாள, என் மனம் மெளனத்தை நாட அருள் செய்யக்கூடாதா?

என் செயலடங்கி, அறிவடங்கி, உணர்வடங்கி உன் திருவடிகளில் உற்று அமர்ந்து தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எந்நாள்? ஆலமர் செல்வா, சொல்லாமல் சொல்லும் இறைவா, நின் காட்சியே எனக்கு ஆசிரியன். நீ வாய் திறந்து சொல்லாதது ஏன்? வாய் திறந்தால் அது நில்லாது தொடரும். விவாதமாகி விடும்.

அறிவாளி பேசக்கூடாது என்ற நின் அருள் மொழியின் பொருள் புரிகிறது. இறைவா, நன்றருளிச் செய்தனை. என் பகைவர் எவ்வழியைத் தேர்ந்தெடுத்தும் எனக்குத் தீமை செய்யலாம். வாழ்த்தியும் தீமை செய்யலாம்.

வாழ்த்துப் பெற்றதன் மூலம் தகுதியடைந்து விட்டோம் என்ற முனைப்பில், முயற்சிகள் முடங்கி வாளா வாழ்தலாகிய தீமை நிகழும். நன்மை செய்தல் போலத் தீமை இழைத்தல் இது. அநியாயமாகக் கிண்டல் செய்வது, வினாக்கள் தொடுப்பது, விடைகள் கூறினால் விவாதமாக்குவது - இவைகள் மூலம் வாழ்கையைப் பாழாக்குதல்! இறைவா நல்ல அறிவுரை.

இனி, நான் பேசுவதில் முன்நிற்க மாட்டேன். கற்பேன், கேட்பேன். கிண்டல், கேலிகள் பற்றி அலட்டிக் கொள்ள மாட்டேன். ஆத்திரப்படவும் மாட்டேன். விதண்டாவாதமான வினாக்களுக்கு விடை சொல்ல மாட்டேன். விவாதங்களில் ஈடுபட மாட்டேன். காரியத்திலேயே கண்ணாக இருப்பேன். இறைவா, இப்படியே வாழ எனக்கு அருள் செய்க!

ஜூலை 4


இறைவா, எனக்குச் சலுகை வேண்டாம். உறுதியுடன் ஒழுக அருள் செய்க!


இறைவா, நினைப்பு மாத்திரையில் உலகத்தை இயக்கும் தலைவனே. நின் ஆற்றலுக்கு ஆயிரம் ஆயிரம் போற்றிகள். இறைவா, செய்யும் பணியில் வெற்றி பெற வேண்டும். அடுத்து நின்னருள் பெற்றுய்யும் இன்ப அன்பு வேண்டும்.

அன்பும், வெற்றியும் பெறுவதே வாழ்க்கையின் குறிக்கோள். இவற்றை அடைய எனக்குப் பணம் தேவை, அள்ளித்தருக. இறைவா, என்ன சிரிக்கிறாய்? சதுப்பு நிலத்தில் மாளிகை கட்ட இயலுமா? நிற்குமா? களர் நிலத்தில் பயிர் வளருமா? இறைவா, இது என்ன கேள்வி கேட்கிறாய்?

சதுப்பு நிலத்தில் மாளிகை நில்லாது; களர் நிலத்தில் பயிர் வளராது. இறைவா, அதுபோலச் சலுகைகளால், உறுதியும் திண்மையும் இழந்துள்ள மனத்தை உடையார் எந்தக் குறிக்கோளையும் அடைய இயலாது.

என்னுடைய குறிக்கோள் நிறைவேற, பணம் முதல் தேவையில்லை. இரண்டாவது தேவைதான். முதல் தேவை உறுதியான - தீர்மானமுடைய மனம் வேண்டும். தீர்மானத்தை நிறைவேற்ற சரியான விதிமுறைகள் வகுக்கப் பெறுதல் வேண்டும்.

குறிக்கோளுடைய வாழ்க்கைக்குத் தீர்மானமும் விதி முறைகளும் எல்லாவற்றையும் விட முக்கியமானவை. இறைவா, வலிமையான மனம், தெளிவும் உறுதியும் மிக்க புத்தி, ஊசலாடாத சிந்தனை-இவற்றை அருள் செய்க! என்னிடம் தெளிவான தீர்மானங்கள் உண்டு. ஆயினும் உறுதியான கடைப்பிடி இல்லை.

இறைவா, உறுதியான கடைப்பிடியில் நிற்கும் இயல்பினை அருள் செய்க! எனக்குச் சலுகை வேண்டாம். வாழும் நெறி அருள் செய்க!

ஜூலை 5


ஒவ்வொரு நாளையும் ஊதியம் தேடும் நாளாக ஆக்கி
அருள் செய்க!

இறைவா, முப்புரம் எரித்த அண்ணலே, சாவு வரத்தான் செய்கிறது. ஒரு மரத்தினின்று பழுத்த மட்டை வீழ்கிறது - இது செத்த பிணம்! பழுத்துக் கொண்டுள்ள மட்டை - இது சாம்பிணம்! இளமட்டை - இது நாளைய பிணம். இது நியதி.

ஆனால், இந்த மரண நிலைகள் என்னை விழிப்படையச் செய்யவில்லை. சில சமயங்களில் பயமடைச் செய்திருக்கின்றன. அதாவது, நாமும் செத்துவிடுவோம் என்ற பயமே! அது கூட அந்தப் பொழுதில்தான். அடுத்த நொடி வழக்கம் போல ஊதியமிலா வெற்று வாழ்க்கை உள்ளிடில்லாச் சுரைக்குடுக்கை போல வாழ்க்கை வறிதே கழிகிறது.

இறைவா, என்னைக் காப்பாற்று. எனக்கும் சாவு வரும் என்பதை உணர்த்து. மரணக் கடிவாயிலில் நிற்கும் ஓர் உயிரே நான் என்பதை உணரச் செய். நாளை எனக்குரியதில்லை. அது யாருக்கும் எதற்கும் உரிமையாகலாம். இன்றைய நாள் நான் வாழும்நாள். என்னிடத்தில் பூரண உரிமையோடிருக்கும் நாள்.

இன்றைய நாளை முழுமையாகப் பயன்படுத்துதல் என் முதற்கடமை. அறிவைத் தேடுதல், ஆள்வினையியற்றல், பொருள் செய்தல், அன்பு காட்டுதல், தொண்டு செய்தல் - இவைகளை நாளை என்று ஒத்திப்போடாமல் இன்றே செய்யும் பாங்கினைத் தா.

இன்றைய நாளை, நான் வாழும் நாளாக, ஊதியம் தேடும் நாளாக ஆக்கி அருள் செய்க! உயிருக்கு ஊதியம் தேடிவிட்டால் செத்தாலும் கவலை இல்லை. இறைவா, அருள் செய்க!

ஜூலை 6


இறைவா, என் வேலையின் நோக்கம் வையகம் பயனுற
வாழ்வதே. அருள் செய்க!

இறைவா, உயிர்களை ஆட்கொண்டருளும் அண்ணலே, ஐந்தொழில் நிகழ்த்துகிறாய். உனது ஐந்தொழிலின் நோக்கம் உயிர்களை ஆட்கொள்வது.

நானும் தொழில் செய்கின்றேன். வேலை செய்கின்றேன். "என் வேலையை நான் ஏன் செய்கின்றேன்! எதற்காகச் செய்கின்றேன்?" இந்த வினாக்களுக்கு விடை சொல்லத் தெரியாது.

இன்று நான் ஏன் தொழில் செய்கின்றேன்? வேலை செய்கின்றேன்? - பிழைப்பு நடத்த, பொருள் செய்ய, என்று சொல்லத் தோன்றும். ஆனால், ஒரு வேலையின் நோக்கம் "பிழை"ப்பாக இருத்தல் இயலாது; இருக்கக் கூடாது.

வேலையின் நோக்கம் கூலியில்லை. 'பிழைப்பு' இல்லை அப்படியிருந்தால் இந்தப் பரந்த உலகத்தில் வளம் குறையும். சிறப்பு வராது. அப்படியானால் இறைவா, என் வேலையின் நோக்கம்?

உயிர்க் குலத்திற்கெல்லாம் வாழ்வு அளித்தல் வேண்டும். மானிட சாதியை வறுமையிலிருந்து மீட்டு எடுத்தல், மனித குலத்தின் பெரும்பகையாகிய அறியாமையை அகற்றுதல், மனித குலப்பிரிவினைகளான சாதி, குல, இனச் சண்டைகளை அறவே அகற்றுதல், ஒரு குலம் உருவாக்குதல், ஒப்புரவு நெறி தழைக்கச் செய்தல், எல்லாரும் இன்புற்றிருக்க நினைத்து உழைத்தல் - இவை என் வேலையின் நோக்கமாகிட வேண்டும்.

இறைவா, நான் தொழில் புரியவேண்டும். வேலை செய்யவேண்டும். என் வேலையின் மூலம் நாட்டு மக்கள் பயனுற வேண்டும்! என் வாழ்க்கையின்- வேலையின் நோக்கம் - வையகம் பயனுற வாழ்தலே என்று கொண்டுள்ளேன். இறைவா அருள் செய்க!

ஜூலை 7


உலகத்தோடு ஒட்ட ஒழுகி வாழ்ந்திட அருள்செய்க!

இறைவா, கருணை நிறைந்த கடவுளே, போற்றி! போற்றி!! இறைவா, நான் இந்த உலகில் வாழ்கிறேன். நான் பலரோடு வாழ்கிறேன்.

ஆனால், என்னோடு யாரும் ஒத்துவர மறுக்கிறார்கள்; ஒத்து வருவதில்லை. நான் என்ன செய்ய? இறைவா, என்ன அருளிச் செய்கின்றனை? நான்தான் ஒத்துப்போக வேண்டுமா? உலக்தோடு ஒட்ட ஒழுகுதல், நல்லது! இன்றைய உலகம் என்பது வல்லாங்கு வாழ்பவர்கள் உலகமாக அன்றோ இருக்கிறது!

இந்த உலகத்திற்கு நியாயத்தைப் பற்றிய கவலை இல்லை. பண்பாடு பற்றியும் கவலை இல்லை. ஏன் - என்ன செய்ய வேண்டும் என்ற கவலையே கூட இல்லை. இறைவா, இவர்களுடன் எப்படி ஒத்துப்போவது? இறைவா, நன்றருளிச் செய்தனை. தற்காப்பு உணர்வுடன் ஒத்துப் போகச் சொல்கின்றாய்! அவர்களோடு பழக வேண்டும்! ஆனால், கலந்துவிடக்கூடாது. எதிர்மறையாக அணுகுதல் எதிர் விளைவுகளையே உண்டாக்கும். உடன்பாட்டு அணுகு முறையில் தீமை மாறாது போனாலும் கட்டுக் கடங்கி நிலவும். அதுவே, ஒரு பாதுகாப்பு இல்லையா? இறைவா, மிகவும் நல்ல ஆலோசனை.

நல்லன எண்ண வேண்டும், நல்லன செய்ய வேண்டும். நல்லாருடன் இணங்கி இருத்தல் வேண்டும். இறைவா, இப்படியே அருள் செய்க! நின் திருவருளால் நல்லவனாகவே வாழ்வேன். போற்றி! போற்றி!!

ஜூலை 8


கொம்பினைச் சார்ந்த கொடிபோல், உன்னைச் சார்ந்து
வாழ்ந்திட அருள் செய்க!

இறைவா, தமியேன் புகலிடமே, புண்ணியமே. நான் அலமருகின்றேன். என் அகநிலையிலும் தாக்குதல், புற நிலையிலும் தாக்குதல். நான் உய்யுமாறு என்ன?

இறைவா, என்னோடு ஒத்துவராத ஐவரைக் கூட்டு வைத்தாய். அவர்கள், வலிய நின்று போராடுகின்றனர். உவப்பன கொடுத்தனுப்ப முயன்றாலும் அவர்கள் என் ஆற்றலை விஞ்சிக் கேட்கின்றனர்.

புழுவை எறும்பு அரித்தொழிப்பது போல, என்னைப் புலன்கள் அரித்தொழிக்கின்றன. நாள்தோறும் வெம்பி வெம்பிச் சாகின்றேன். நான் இறப்பதற்கு அஞ்சவில்லை. ஆனால், செத்துப் போகக் கூடாது.

என்னைச் சுற்றிப் பணத் திமிங்கலங்களின் நடமாட்டம். நான் என்ன செய்வேன். பற்றிப் படரக் கொம்பில்லாத ஒரு கொடி காற்றில் அலமந்து சுழல்கிறது. அற்று விழும் நிலையில் சுற்றுகிறது. இறைவா, நானும் அங்ஙனே. உன்னையே நான் கொழுகொம்பாகப் பற்றி நிற்க முனைகின்றேன்.

இறைவா உன்னை எனக்கு அளிக்காமல் எங்கோ ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறாய். நான் உன்னைக் கண்டும் கண்டிலேன். நான் படும் துன்பம் இனி எற்க இயலாது. பட்டது போதும் என்னைக் காப்பாற்று.

நான் அன்பால் பூத்துச் செயல்களால் காயாகி, ஒப்புரவால் கனியாகிச் செழித்து வாழ்ந்திட அருள் செய்க! இறைவா, என்னை ஒதுக்கி வைத்திடாதே! என்னை ஆட்கொள்வதற்குரிய பத்திரம் நின்னிடம் உள்ளது. கொம்பினைச் சார்ந்த கொடிபோல என் வாழ்வு செழித்து வளர்ந்து அன்பு மணம் கமழ அருள் செய்க!

ஜூலை 9


எனக்கு நின்னருள் தேவை! ஆண்டருள் செய்க!

அத்தா, அடியேனுக்கு அருள் பாலித்த அண்ணலே! நின் அருள் நோக்கில் ஆட்கொள்ளும் ஐயனே! நின் திருக்கருணை போற்றி! போற்றி!! இறைவா, நான் ஒரு நெறிப்படாதவன். பித்தனாகப் பல நெறிகளிலும் சென்று சென்று உழல்கின்றேன்.

நான் கற்றுணர்ந்தவனுமல்லன், படிப்பினைகளால் உணர்ந்தவனும் அல்லன்; யாதும் உணராதவன். இறைவா, யாதொரு பயனும் இன்றி உழன்று கொண்டிருக்கின்றேன். பேயனையேன். நாயனையேன். நான் நிறையப் பிழை செய்தேன்; செய்து கொண்டிருக்கிறேன்.

நான் செய்த குற்றங்கள் ஒன்று இரண்டல்ல; பல குற்றங்கள். இறைவா, என்னை ஒறுத்திட மாட்டாய் என்ற உறுதியான எண்ணம் இருக்கிறது. நீ சால அன்புடையவன். அதனால் ஒறுத்திட மாட்டாய். இது என் நம்பிக்கை. அதுவே நான் உன்னிடம் இரந்து கேட்பது.

இறைவா, நான் செய்த-செய்யும் குற்றங்களைத் திருவுள்ளத்தில் கொள்ள வேண்டாம். என் குற்றங்களுக்குத் தீர்வு காண இயலாது. ஆதலால், இறைவா, எனக்கு உறுதி-உய்தி குற்றங்களுக்குத் தீர்வு காண்பதன்று. என் குற்றங்களை நீ பொறுத்தருளல் வேண்டும்.

இறைவா, என்னை என் பிழைகளைப் பொறுத்தருள் செய்க! இனி நான் ஒரு நெறியில் மனம் வைத்தொழுகுவேன். உணர வேண்டியவற்றை உணர்ந்து நடப்பேன், ஒழுகுவேன். பயனுள்ளவாறு நின் வழியில் வாழ்வேன். பகடுபோல் - ஏறு போல் உழைத்து வாழ்வேன். இறைவா, எனக்கு நின்னருள் தேவை. ஆண்டருள் செய்க!

ஜூலை 10


இறைவா, அவரவர் பணியை அவரவர் செய்ய அருள் செய்க!

இறைவா, சிந்தித்து எழுவார்க்கு நெல்லிக்கனியே. நின் திருவருள் போற்றி! போற்றி!! இறைவா, இந்த மனித குலத்தில் எத்தனை பிரிவுகள். எங்கள் பிரிவுகளுக்கு உன்னையே ஆளாக்கி ஆயிரம் பேர் வைத்து விட்டோமே. ஏன் இந்த நிலை?

ஒருமையுடன் நினது திருவடி நினைக்க வேண்டும். நான் எப்போது ஒருமையுடன் நினது திருவடி நினைப்பது? இன்றுள்ள சூழ்நிலையில் எனக்கு இந்தநிலை எய்துமா? இறைவா, நீ ஒருவனே, உன் அடியோங்களான நாங்கள் ஒரு குடியினர் இல்லையா? ஆம், நாங்கள், அனைவரும் ஒருகுடி. நீயும் எங்கள் குடியில் ஓர் உறுப்பினன்.

இறைவா, எனக்குள்ள கடமைகள் உனக்கும் உண்டு. குடி வழிப்பட்ட எல்லாக் கடமைகளும் செய்ய வேண்டிய நிலையில் உள்ளாய். நானும் அங்ஙனே தலைமுறை தலை முறையாக வருகின்றேன். ஆயினும் பிரிவினை எண்ண்ம் போகவில்லை. என் மனத்தில் மிகவும் வேரூன்றிப் போன தீமையாக அது இருக்கிறது.

நான் பிறந்து விட்டவன். பயனுற வேண்டுமல்லவா. என்னை எடுத்தாள்க! நீயும்நானும் ஒரு குடியைச் சார்ந்தவர்கள். உன்னைத் தலைவனாகப் பெற்றுள்ள நாங்கள் பேறு பெற்றவர்கள்.

இறைவா, என்னை எடுத்தாள்க! "நான்" இனி இல்லை. இறைவா, நம் குடி வளரப் பணிகள் செய்திடவா. எனக்கும் பணி கொடுத்து ஆளாக்கிவிடுக!

இறைவா, நாம் அனைவரும் ஒரு குடி போட்டி வேண்டாம். அவரவர் பணிகளை அவரவர் செய்ய அருள் செய்க!

ஜூலை 11


குறிக்கோள் நிறைவேற, நீயும் துணை செய்யவேண்டும்.

இறைவா, எந்தை ஈசனே! இன்று நான் பிறந்த நாள். உண்டு, உடுத்து வாழ்ந்திருக்கிறேன். வேறு என்ன செய்தேன்! யாதொன்றும் உருப்படியாகச் செய்யவில்லை.

இறைவா, அறுபான்மும்மை நாயன்மார்கள் குறிக்கோளில் ஒன்றியிருந்தார்கள், உறுதியாக இருந்தார்கள். தங்கள் குறிக்கோளுக்காகத் தங்களையே அர்ப்பணித்துக் கொண்டார்கள்.

இறைவா, எனக்கு ஏது குறிக்கோள்? சில எண்ணங்கள் உண்டு. இவைகளைக் குறிக்கோளாக ஏற்றுக் கொண்டேனில்லை. ஆதலால், இங்கொன்றும், அங்கொன்றுமாகக் காரியங்கள் நடக்கின்றன. அவை அர்ப்பணிப்பு உணர்விலும் நிகழவில்லை. செய்ய வேண்டுமே என்பதற்காகச் செய்கின்றேன். அதனால் எனது எண்ணங்கள் குறிக்கோள்களாக மாறவில்லை.

என்னிடம் குறிக்கோள்களுக்குரிய உறுதியான செயற்பாடும் இல்லை. ஆதலால் வாழ்க்கை பயனற்றுப் போயிற்று. என்னை மன்னித்துவிடு, இனிமேல் காரியங்கள் செய்கின்றேன். இது வழக்கம்போல் தரும் உறுதியன்று. முன்பு எனக்கு என் எல்லை தெரியவில்லை.

இப்போது எனது வாழும் எல்லை தெரிகிறது! ஆதலால் செயல்களில் அழுத்தம் பிறந்திருக்கிறது. எதையும் விழிப்புணர்வுடன் அணுகுகின்றேன். செய்கின்றேன். திட்டமிடும் குறிக்கோளை நிச்சயமாக அடைவேன்.

ஆனால் ஒரே ஒரு வேண்டுகோள். நீயும் துணை செய்ய வேண்டும். கடமைகளின் முனைப்பில் நின்னை மறந்தாலும் நீ என்னை மறக்கக்கூடாது இறைவா, அருள் செய்க!

ஜூலை 12


இறைவா, நோயின்றி வாழ அருள் செய்க!


இறைவா, மூலநோய் தீர்க்கும் முதல்வா! நோயில்லா வையகம் அருளக் கூடாதா? இறைவா, எனக்கு நோய் என்றால் பயம். ஆம். நோய் என்னோடு மட்டும் நிற்பதன்று. என்னைச் சார்ந்தாரையும் தொற்றுகிறது. ஆதலால் நோயற்ற வாழ்க்கையை நான் விரும்புகிறேன்.

இறைவா. உன்னிடம் இரந்து கேட்கிறேன். கழுபிணியில்லா பாக்கையை அருளிச் செய்க! நோயற்ற வாழ்க்கையை அருள் செய்க! நோய்க்கு மருந்து வேண்டாம், நோய்க்குரிய காரணங்களையே மாற்றுக.

இறைவா, பெரும்புலர் காலை எழுதல், கதிரவன் ஒளியில் தோய்தல், மெல்லென வீசும் பூங்காற்றில் குளித்தல், உழைப்பின் கொள்கலமாகிய உடலினை உழைப்பில் வருத்துதல், குளிர் புனலில் மூழ்கித் திளைத்தாடுதல் இவைகள் வாழ்க்கையின் பயன்களாகட்டும்.

உடலுக்கிசைந்தது உண்ணுதல்; மிதமாக உண்ணுதல், நறுநீர் குடித்தல், உயிர்க்காற்றினை முறையாக உயிர்த்தல், இவற்றில் கவனமாக இருத்தல், உடலியக்கத்துக்குரிய குருதி ஓட்டத்தினை இயக்கும் இதயத்தினை உறுதிப்படுத்தும்.

இதயத்தினை அன்பினில் நனைத்தல், சமநிலைப் பேணுதல் - இவை என் இயல்பாக அமைய ஒழுகுதல், நின் திருநாமம் எண்ணுதல், பொறிகளின் வசமாகாமல் நின் திருவருள் வசமாதல், நின் திருவருளை நினைந்து நினைந்து ஒழுகுதல் இவையாவும் வேண்டும்.

நின் திருவருளையே நாடுதல், நின்னையன்றிப் பிறி தொருவர் உண்டென நம்பாமை, அவர்பின் செல்லாமை ஆகியன என் நிறை நலமிக்க ஒழுக்கங்களாக விளக்கமுற அமைய அருள் செய்க! இங்கனம் என் வாழ்க்கையை அமைத்து நோயின்றி வாழ அருள் செய்க! 

ஜூலை 13


விருப்பு - வெறுப்புகளை விட்டகல முயற்சி செய்கிறேன். இறைவா, அருள் செய்க!

இறைவா, இரும்பு மனத்தோனை ஈர்த்து ஆட்கொண்ட அண்ணலே, நின் கருணைக்குப் போற்றி! போற்றி!! இறைவா, நின் திருவருள் நோக்கும் பூரணமாக என்பால் இல்லை. நான் உனக்குத் தேவையில்லை என்ற திருவுள்ளம் போலும்!

இறைவா, அன்று ஆட்கொண்டருளி உடன் போந்த உண்மையை இந்த வையகம் மறக்குமா? அல்லது நான்தான் மறக்க விடுவேனா? தெருவில் போய் நின்று கொண்டு உன் அடியான் என்று சொல்லியே உன்னைப் பழி வாங்குவேன்.

என் தலைவனே, என் வேண்டுதல் முழுவதையும் அருள் செய்க! காலங்கடத்தாது அருள் செய்க! இறைவா, உன்னால் ஒன்றும் குறையில்லையா? நான் துருப்பிடித்த இரும்பு போல் ஆகிவிட்டேனா? அதனால் உன் ஆற்றல் என்னை ஈர்த்தாள இயலவில்லையா? அதுவும் உண்மை தான். துருப்பிடித்த இரும்பைக் காந்தம் ஈர்க்காது, அதுபோல என் மனம் விருப்பு வெறுப்பு இவைகளால் பற்றப்பட்டிருக்கிறது. வெற்றி-தோல்வி, இலாபம்-நட்டம் இவைகளால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். என் மனம் மத்திடை அகப்பட்ட தயிர்போல அலமருகிறது.

நீ காமனைக் கடிந்தவன் அல்லவா? என் காமங்களையும் கடிந்து ஆளக்கூடாதா? இறைவா, காமனைக் கடிந்தது, காமத்தைக் கடந்தவர்களிடம் காமன் காமத்தைத் தூண்ட முயற்சி செய்ததற்காக! முதலில் இயல்பாகக் காமத்தைக் கடக்க வேண்டாமா? ஆதலால், நீ ஒன்றும் செய்ய இயலாதா?

இறைவா, விருப்பு-வெறுப்புகளை விட்டகல முயற்சி செய்கிறேன். துணை செய்க! இலாபம்-நட்டம் ஆகியன என்னைப் பாதிக்காமல் தற்காத்துக் கொள்கிறேன். இறைவா, அருள் செய்க!

ஜூலை 14


இறைவா, நான் என்றும் குழந்தைபோலவே வாழ


இறைவா, பாலனாகித் தொட்டிலின்பத்தைத் துய்த்த தலைவா! நான் மனிதனாகி விட்டேனே. என் பொல்லாத காலம் என்னை வளர்த்துப் பொல்லாதனவெல்லாம் கற்றுக் கொடுத்து, என் வாழ்வியலைக் கரடு முரடாக்கி விட்டதே. இனி நான் என்ன செய்ய.

மீண்டும் அந்தக் கள்ளமற்ற, கணக்குகளைக் கடந்த குழந்தைப் பருவம் கிடைக்குமா? இயற்கையின் மறுபிறப்பு குழந்தை நிலை, இயற்கை எவ்வளவு கவர்ச்சியாக இருக்கிறது. மகிழ்ச்சியைத் தருகிறது.

இயற்கை இசை போன்றவர்களே சிறுவர்கள்! குழல் போல இசைப்பார்கள். யாழினைப்போல் இசைப்பார்கள். அவர்தம் மழலைச் சொல் சிந்தைக்கின்பம்; செவிக்கின்பம். இறைவா, என் குழந்தைக் காலம் ஓடிவிளையாடிச் சிறுவனாக வாழ்ந்த இளமைக்காலம் திரும்பக் கிடைக்குமா?

இறைவா, பருவங்கள் காரணமாகச் சிறுவர்-முதியோர் என்று கொள்ள வேண்டியதில்லை. எந்த வயதிலும் குழந்தையைப் போல வாழலாம். இறைவா, அந்தக் குறு குறுத்த பார்வை கிடைக்குமா? இன்ப மகிழ்வை அள்ளிப் பொழியும் சிரிப்பு வருமா? அது இனி கற்பனை. கள்ளமில்லாத நெஞ்சிலேயே, குளிர்ந்த பார்வை. உள் நோக்கம் இல்லாத இதயம் உள்ள இடத்திலேயே கள்ளமற்ற சிரிப்பு மலரும்.

இறைவா, நான் மீண்டும் குழந்தையாகிட அருள் செய்க! அல்லது குழந்தைத்தனமாகிய கள்ளமற்ற நிலை-கணக்கு வழக்கு அணுகாத வாழ்க்கை, கள்ளமற்ற பார்வை, அன்பினைப் பொழியும் இதயம், இறைநலம் சார்ந்த சிரிப்பு இவைகளை நீ அருளிச் செய்தால் நல்லது. நான் என்றும் குழந்தை மனத்துடன் வாழ அருள் செய்க!

ஜூலை 15


இறைவா, ஊழினை வெற்றிபெற்று வாழும் பெரு வாழ்வினை அருள் செய்க!


இறைவா, ஊழி முதல்வா, நானோ ஊழின் முதல்வனாக நின்றுழல்கின்றேன். இந்த ஊழினிடமிருந்து எனக்கு விடுதலையில்லையா? இறைவா, விடுதலை எடுத்துக் கொள்வதே ஒழிய, ஒருவர் கொடுத்துப் பெறுவதன்று.

ஊழினின்றும் நான் எளிதில் விடுதலை பெறலாமா? முடியும். நான் நினைக்கின்ற நினைப்புக்கள், எண்ணங்கள், நினைப்போடு-நோக்கத்தோடு செய்யும் செயல்கள்-இவைகளைப் பற்றிய நினைவுகள் மிக்க அழுத்தமாய்ப் பதிந்து விடுகின்றன. இப்பதிவுகள் எளிதில் நீக்க இயலாதன.

நினைவுப் பதிவுகளே புற உலகத்தில் எனக்குப் பழக்கங்களாக வருகின்றன. பின் சில நாட்களில் வழக்கங்களாக அமைகின்றன. இப்பதிவுகளே ஊழ். நினைவின் பதிவுகளே பழக்கங்களாகின்றன. வழக்கங்களாகின்றன. நான் பழக்கங்களின் வழியே செல்பவன். பழக்கம் தவிரப் பழகுதலே ஊழின் ஆற்றலை அடக்கும் வழி.

நான் இனி நிறைய காரியங்களைச் செய்வேன். நான் செய்யும் செயல்களுக்கு உள் நோக்கத்தை எடுத்துக் கொள்ள மாட்டேன். அதாவது தன்னல நயப்புடைய - பிறருக்குத் தீங்கு செய்யக்கூடிய உள் நோக்கத்தை எடுத்துக் கொள்ள மாட்டேன். இது உறுதி.

இறைவா, எனக்கு, பணி செய்யும் உள்ளத்தினைத் தந்தருள் செய்க! நினைவாற்றலை நன்மைக்கே பயன்படுத்தும் திறனை அருள் செய்க! நன்றல்லது அன்றே மறந்து விடும் பேருள்ளத்தினைத் தந்தருள் செய்க! பிறர் செய்த நன்மையை என்றும் நினைந்து வாழும் பேற்றினைத் தந்தருள் செய்க!

நான் செய்த நன்றியை எண்ணிப் பெருமிதம் கொள்ளாதவாறு உடன் மறந்துவிடும் தகைமையை அருள் செய்க! நான் ஊழை வென்றுவிடுவேன். இறைவா, ஊழினை வெற்றி பெற்று வாழும் பெரு வாழ்வினை அருள் செய்க!

ஜூலை 16


இறைவா, கதிரவனின் ஆற்றல் முழுதும் பயன்படுத்திட அருள் செய்க!


இறைவா, தீயாயிருந்து இவ்வுலகை இயக்கிடும் அண்ணலே, ஐம்பூதங்களில் தீயாகி நின்றருள்வோனே, எரியில் எழுந்தருளும் இறைவனே. எரிசக்தியே, உலக இயக்கத்திற்கு முதல்-மையமாகிய எரிசக்தி இல்லாது போனால் எதுவும் நடக்காது. இதுவே உலகியல்!

எரியாற்றல் பல்வேறு நிலையினதாக இருக்கின்றது. உலகில் உள்ள ஒவ்வொரு பொருளினும் எரியாற்றல் இருக்கிறது. அளவிற் கூடுதல்-குறைவு அவ்வளவுதான். இறைவா, உன்னைப் போலவே எரி ஆற்றல்களும் தொன்மையானவை. எரி ஆற்றல்களை நான் படைக்க முடியாது; அவை உன் படைப்பு இல்லை, அவையே நீ! ஆனால் ஒரு எரி ஆற்றலைப் பிறிதொரு வகை ஆற்றலாக மாற்றி இயக்கலாம். இறைவா, எரியாகி நின்று இந்த உலகை இயக்கிடும் தலைவனே. எனக்கு வாய்த்துள்ள எரிசக்தி போதாது இன்னும் நிறைய வேண்டும்.

இந்த உலகில் எரிபொருள் பஞ்சமே வாராதவாறு பேணிக் காத்திடுக. இறைவா, ஞாலம் திரிதரு கதிரவனின் எரி ஆற்றல் முழுவதையும் நான் பயன்படுத்தும் நெறியினைத் தந்தருள் செய்க!

கதிரவனின் ஆற்றல் முழுதும் நான் பயன்படுத்திட அருள் செய்க! கதிரொளி-என் கண்ணிற்கு அணி, கதிரொளி, எனக்கும் புற உலகுக்கும் இணைப்புண்டாக்கும் சாதனம். கதிரொளியின் ஆற்றல் எனக்கு உணவு, உணர்வு. இறைவா, அருள் செய்க!

ஜூலை 17


நெஞ்சே! இறைவன் நாமத்தை என்னோடு சேர்ந்து கூறுக!

இறைவா, எம்பெருமானே, கற்பகமே போற்றி! போற்றி!! என் வாழ்நாள் ஓடிக்கொண்டே இருக்கிறது. இப்போது "வாழ்நாள் கடந்ததே-சாவு வரப்போகிறதே" என்ற கவலை எனக்கில்லை. மீண்டும் பிறப்பதற்குரிய வித்துக்களைச் சுமந்து கொண்டு சாகக்கூடாது. இதுதான் என் கவலை.

சென்ற காலத்தில் செய்த பிழைகளையெல்லாம் பொறுத்தருளும்படி வேண்டுகிறேன். இறைவா, நீ பொறுத்தருள்வாய். ஆனால், இனி நான் வருங் காலத்தில் பிழைகள் செய்யாமல் வாழ்தல் வேண்டுமே. என் நெஞ்சு என்னோடு உடன்பட்டு நிற்பதில்லை.

என் நெஞ்சினை நான் முயன்று புகழ்ந்து கூறி "நன்னெஞ்சே" என்று இரந்தும் கேட்டு விட்டேன். என் நெஞ்சு என்னோடு நிற்பதில்லை. இறைவா, மீண்டும் மீண்டும் உன் சந்நிதியில் வந்து உன்னைச் சாட்சியாக வைக்கிறேன். நெஞ்சே, நன்னெஞ்சே. சாநாளும் வாழ்நாளும் எல்லை கடந்தவையல்ல; எல்லைக்குட்பட்டவை. இந்தக் கால எல்லைக்குள் உய்யுமாறு அறிதல் வேண்டும்; உய்திக்கு உரியன செய்தல் வேண்டும்.

நன்றுடையானை எண்ணி எண்ணி நன்றாக வேண்டும். "பாவ நாசனே" என்று அழைத்திடுதல் வேண்டும். இறைவனைப் பலநூறு நாமங்கள் கூறிப் போற்றிட வேண்டும்.

நான் சொல்வதைக் கேள் என் நெஞ்சே என்னோடு ஒத்துழைத்தால் நீ உய்தி பெறலாம்; என் அருமை நெஞ்சே, உன்னை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன், இறைவன் நாமத்தை என்னோடு சேர்ந்துக் கூறுக. உனக்குக் கோடி புண்ணியம்.

நான் என் மனத்தினிடம் சொல்லி விட்டேன், என்மீது குற்றமில்லை. இறைவா, என் நெஞ்சத்தைத் திருத்துக. இறைவா அருள் செய்க!

ஜூலை 18


இறைவா, வாழ்க்கையின் அடிநிலை அறமாகிய இரக்க
உணர்வை எனக்கு அருள்க!

இறைவா, அறம் கண்ட அண்ணலே, போற்றி! போற்றி!! நான் மூலையில் கிடந்தேன்; அறியாமையின் இரும்புப் பிடியில் சிக்கி, நொய்ம்மை அடைந்து அழிந்து கொண்டிருந்தேன். இறைவா, நீ என்பால் இரக்கம் காட்டி ஆட்கொண்டருளி இந்த வாழ்க்கையை தந்தாய்.

என்றன் கருமேனி கழிக்கத் திருமேனி கொண்டருளிய தலைவா, நானும் உய்திபெற ஆசைப் படுகின்றேன். ஆனால் உய்திக்குரிய நெறிகளில் நாட்டம் இல்லை. ஏன்? பொய்ம்மையையாவது தொலைக்கின்றேனா. இல்லை, மனத்தில், வாக்கில், செயலில் பொய்ம்மை புரளுகிறது.

இறைவா, பொய்ம்மை எப்போது போகும்? எந்த ஒரு தீமையும் தானே போகாது, அகலாது. அந்தத் தீமை வகித்திருக்கும் இடத்தை, ஆக்கிரமித்துக் கொள்ள ஒரு நன்மை தேவை. நன்மையின் பிரவேசமே தீமையை அகற்றும்.

இறைவா, அறத்தில் எல்லாம் சிறந்த அறம் இரக்கம் காட்டுதல். இரக்கம் உயர்பண்பு நெறி. எல்லாச் சமயங்களாலும் ஏற்றுக்கொள்ளப் பெற்ற நெறி. இரக்கப்பட்டவர்களுக்குப் பரமண்டலத்து இன்பம் உறுதி என்பது அருள் வாக்கு.

இரக்கம் என்ற உயர்குணம் வந்தமைந்த வழி அனைத்து நலன்களும் வந்தமையும். அதனால் இரக்கம் அடிநிலை அறம். இறைவா, இந்த இரக்க உணர்வு எளிதில் எனக்குக் கைகூடுவதில்லை. இறைவா நின்னருள் பெறாதார்க்கு இரக்கமும் வராது போலும். இறைவா, என்பால் இரக்கம் காட்டி அருள்க.

எவ்வுயிர்க்கும் அன்பு செய்யும் நன் நெஞ்சாக என் நெஞ்சைப் பயிற்றுக. மற்ற உயிர்கள்படும் துன்பம் கண்டு துடித்து மாற்றிடும் இரக்க உள்ளத்தினை அருள் செய்க! இறைவனே இரங்கியருள்க!

ஜூலை 19


என் எல்லைக்குள் தகுதி மிகுதியுடையோனாக வாழ்ந்திட அருள் செய்க!

எந்நாட்டவர்க்கும் இறைவா, போற்றி! இறைவா, நீ எல்லை கடந்தவன். காலத்தைக் கடந்தவன். ஆயினும் ஒழுங்கமைவை-விதிகளைக் கடந்தவன் அல்லன்.

நான் செய்யும் வழிபாட்டினால் நான் பக்குவம் அடைகின்றேன். அவ்வழி தகுதி பெறுகின்றேன். நீயும் ஆட்கொண்டருள்கின்றாய். வழிபாடு என்பது ஆன்மாவிற்கு வளர்ச்சியை முதிர்ச்சியைத் தரும் சாதனமாகும்.

ஆன்ம முதிர்ச்சியே இறைவன் திருவருளைக் கூட்டுவிக்கும். இறைவா, இந்த வளர்ச்சிப் போக்குகள் வாழ்க்கையில் அமையவில்லையே. வாழும் மனித குலத்திற்கு விருப்பம் உள்ள ஓர் உயிராக நான் வளர வேண்டுமே. நான் இங்கே பகை மூட்டத்தில் கிடந்து புழுங்குகின்றேன். போட்டியின் பெயரால் அழுக்காறு மூட்டையைத் தூக்கிச் சுமக்கின்றேன். எல்லாவற்றிலும் எல்லை கடக்கின்றேன்.

எனக்குள்ள அறிவின் எல்லை என்ன என்றறியாமல் சிறந்த விஞ்ஞானிகளின் எல்லையை நான் ஆக்கிரமித்து விஞ்ஞானம் மனித சமூகத்திற்கு அழிவைத் தந்தது என்று பழி சுமத்தி, பழைய மெளடீகத்தனத்தை நான் பரப்புவதா? நான் யார்?

உழைக்காமல் உட்கார்ந்து சாப்பிடும் இயல்புடைய நான், உழைப்பாளர் உலகாகிய பொதுமையின் மீது பழி சுமத்துவதா? என் எல்லை சமயம், சமுதாயம். இந்த எல்லைகளைக் கடந்து அரசியல்வாதியின் எல்லைக்குள் நுழைந்து அரசியல்வாதியை விமர்சனம் செய்வதா?

இறைவா, நான் என் எல்லையைக் கடத்தல் பிழை என்பதை உணர்கிறேன்! என்னைத் திருத்து. நான் என் எல்லையில் சிறப்புறச் செய்யும் ஆற்றலை அருள் செய்க! இறைவா, என் எல்லையினுள் தகுதி மிகுதியுடையோனாக வாழ்ந்திட அருள் செய்க!

ஜூலை 20


இறைவா, நான் வேண்டுவதும் நின் தேவையாக அமைய அருள் செய்க!

இறைவா, பாராக-பாரினது பயனாக உள்ள எம் தலைவா! உன்னை மனத்துள் கருத்தறிந்து முடிப்பாய் என்று எல்லாரும் போற்றுகின்றனர். வேண்டுவார் வேண்டுவதை எல்லாம் வழங்கியருளும் பேரருளாளன் என்று ஏத்திப் பரவுகின்றனர். இந்தச் செய்திகள் கேட்டு நானும் நின் சந்நிதி வந்து அடைந்தேன்.

இறைவா, என் தேவைகளை யெல்லாம் நாள்தோறும் உன்னிடத்தில் கூறி, இரந்து கேட்கின்றனன். ஆனால், ஒன்று கூடக் கைகூடவில்லை! இறைவா, என் வாழ்க்கை பொய்யாய், கனவாய், பழங்கதையாய் முடியும் நிலையில் தள்ளப் பட்டுள்ளதே.

இறைவா, நான் உனக்கு ஆகேன் என்று கொண்டு புறத்தே தள்ளத் திருவுள்ளமா? நீ என்னைத் துடைத்துத் துரத் தள்ளினும் போகேன், அருள் செய்க! இறைவா, என்ன அருளிச் செய்கின்றனை! வரிசையறிந்து அருளுதல் மரபென்கிறாய்.

தகுதியுடையோரே தகுதிகளையும், சிறப்புகளையும் பெறுவர். உள்ளவர்களுக்கு மேலும் கொடுக்கப்பெறும் என்கிறாய் ! உள்ளவர்களுக்கே மேலும் தருவது என்ன நியாயம்? என்னைக் காப்பாற்று. தகுதியுடையாருக்கே பெற்றவற்றின் அருமை தெரியும். பேணிப்பயன் காண்பர்! என்கிறாய்.

இறைவா, மெய்யடியார் வேண்டுவதையே வேண்டி அருள் செய்வாய் நின் அருள் பெற முழுதும் தகுதி, மெய்யடியாராதல்.

இறைவா, இன்றுமுதல் என் பொய்ம்மை களைந்து, மெய்ம்மை தழுவிய வாழ்க்கை நடத்த எனக்கு அருள் செய்க! நான் வேண்டுவன வெல்லாம் ஒருங்கு தந்து ஆட்கொள்க. இறைவா, நான் வேண்டுவதும் நின் தேவையாக அமைய அருள் செய்க.

ஜூலை 21


பெருகு நிலையே எனது குறிக்கோளாக அமைய அருள் செய்க!

இறைவா, பெருந்தகையே, பெறற்கரிய மாணிக்கமே போற்றி! போற்றி!! என்னைச் சுற்றி உலகம் இருக்கிறது, உயர்திணை உலகம், அஃறிணை உலகம் என்று! இந்தப் பரந்த உலகின் உண்மையை உணர்ந்து, உய்திக்கு உரியன தேர்ந்து, வாழ்க்கைக்குரிய மெய்ப்பொருளைக் கண்டு நான் வாழ வேண்டும்.

அஃறிணை உலகத்தின் இயல் கண்டு தேர்ந்து தெளிதல் எளிது ஐயனே. இந்த உயர்திணை உலகம் இருக்கிறதே, அங்கு உண்மை காணல் அரிது. ஆயினும், வாழ்க்கைத் தொடக்கத்திலேயே உண்மை முழுதும் வெளிப்படாது. கண்டன கொண்டு காணாதன காணுதல் வாழ்வுமுறை. பெற்ற அறிவு கொண்டு பெறாத அறிவினைப் பெற முயற்சி செய்தல். பெறுதல் இதுவே வாழ்க்கையின் பரிணாம வளர்ச்சி.

வாழ்க்கை, மாற்றங்களுக்குரியது, வளர்ச்சிக்குரியது. இவை இயல்பூக்கமாகவே நிகழும். ஆயினும் விழிப்பு நிலையில் இருந்து குறிக்கோள் வழிப்படுத்துதல் வேண்டும் இறைவா, அருள் செய்க!

நான் கிணற்றுத் தவளை ஆகிவிடக்கூடாது. பீங்கான் தொட்டியில் வளரும் மீனாகிவிடக் கூடாது. நான் கண்டனவே காட்சி, பெற்றதே அறிவு, கொண்டதே கொள்கை என்று அமைந்துவிடக் கூடாது. மேலும் மேலும் தேடிப்பெற முயற்சி செய்தல் வேண்டும். வளத்தைப் பெருக்கி வாழ்க்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

வையத்தின் வாழ்நிலை, என்றும் பெருக்கத்திற்குரியது. பெருகு நிலையே எனது குறிக்கோளாக அமைய அருள் செய்க! என்னுடைய ஞானம் தேடும் பெருகிய வாழ்வில் உற்றமர்ந்து துணை செய்க! இறைவா, அருள் செய்க!

ஜூலை 22


அன்பால் அனைத்துலகும் இணைந்து வாழ்ந்திட அருள் செய்க!

இறைவா, சிறியோர் செய்த பிழையெல்லாம் பொறுத்தருளும் பெரியோய்! இன்று நான் யாரிடத்தும் அன்பைக் காட்டத் தயங்குகின்றேன். அல்லது அன்பைப் பெயரளவில் போலியாகக் காட்டுகிறேன். அல்லது அன்பு காட்டுதல் என்ற பெயரில் அன்பை விலை பேசுகிறேன்.

இறைவா, அன்புகாட்டக் காரண காரியங்களைத் தேடுகிறேன். ஏதோ, எப்போதோ தவிர்க்க முடியாத போதுதான் நிர்ப்பந்தச் சூழ்நிலையில் அன்பு காட்டுகிறேன். இதனை அன்பு என்று சொல்லலாமா? சொல்லக் கூடாது! இதுவும் ஒரு வகையான சூதே.

யாதொரு குறிக்கோளுமின்றி இயற்கையாக அன்பு செய்தலே அன்பு, அன்பு காட்டக் காரணம் அவசியம் இல்லை. அன்பு காட்ட வேண்டுமா வேண்டாமா என்று அறிவு ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. படைப் பின் இலட்சியமே அன்பு செய்தல்தான்.

அன்பு இல்லாத இடத்தில் குறைகள் தோன்றும். குற்றங்கள் தெரியும், அன்பின்மையே குறை, - குற்றங்களுக்குக் காரணம். அன்பின்மை, பகைமையைத் தோற்றுவிக்கும், வளர்க்கும். அன்பு காட்டக் குற்றங்குறைகள் தடையாக அமையா; அமைய இயலா, ஒருவர் எனக்குத் துன்பம் செய்தாலும் தாங்கிப் பொறுத்துக் கொண்டு மாற்ற வேண்டும். அதற்காக எதிர்ப்பகை காட்டுதல் நன்றன்று.

இறைவா, எனக்கு அன்பு செய்யும் உள்ளத்தினைத் தா, அன்பு செய்வதை இயல்பூக்கமாக்கு தொடர்ந்து அறிவார்ந்த நிலையில் அன்பைப் பேணி வளர்க்கவும், பாதுகாத்துக் கொள்ளவும் கற்றுக் கொடு. அன்பால் அனைத்துலகும் இணைந்து வாழ்ந்திட அருள் செய்க!

ஜூலை 23


வேற்றுமைகளை, பரந்த மனப்பான்மையுடன் அங்கீகரிக்கும் மனப்பக்குவத்தை அருள்க!

இறைவா, சோதியனே! துன்னிருளே! நின் இயல் போற்றி! போற்றி!! ஒளி, இருள், உண்மை, இன்மை, இவை உலகத்தியற்கை! இவ்வேறுபாடுகள் தவிர்க்க இயலாதன; என்றும் உலகம் ஒரே அச்சாக இருந்ததில்லை; இருக்கப் போவதும் இல்லை.

இறைவா, எனது உடலிலேயே விலை மதிக்கமுடியாத உயிரும் இருக்கிறது. உயிருக்கு உயிராக நீயும் இருக்கிறாய். அதே உடம்பில் அழுக்கும் மலங்களும் இருக்கத்தான் செய்கின்றன. நான் மூக்கைப் பிடித்துக் கொண்டு உடம்பைக் காலி செய்து விட்டேனா அல்லது நீதான் ஓடிவிட்டாயா?

உலகத்தில் ஏராளமான வேற்றுமைகள் உள்ளன. இந்த வேறுபாடுகள்தாம் நுகர்வுக்கு இனிமையாக உள்ளன. இவ்வேறுபாடுகள்தாம் உலக இயக்கத்திற்கு உந்து சக்திகளாக இருந்து வந்துள்ளன; இருந்து வருகின்றன. இங்ஙனம் வேற்றுமைகளுக்கிடையே வாழும் நான் என்னளவில் மட்டும் வேற்றுமைகளைச் சீரணித்துக் கொள்ள மறுக்கிறேன்.

கருத்து வேற்றுமைகள், கொள்கை. கோட்பாட்டு வேற்றுமைகள் - இவைகளையெல்லாம் நான் ஏற்றுக் கொள்ள மறுக்கிறேன். இந்த வேற்றுமைகளுக்கு இசைந்தே - இணைந்தே வாழ முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.

இறைவா, இந்த அடாத வழியிலிருந்து திருப்பி அழைத்துக் கொள். வேற்றுமைகளைப் பரந்த மனப்பான்மையுடன் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை அருள் செய்க! வேற்றுமைகளின் காரணமாகப் பகை கொள்ளாத பேருள்ளத்தினை வழங்கிடுக. வேற்றுமைகள் பிரிவினைகளாகி விடாதவாறு காத்தருள் செய்க!

ஒன்றாக வாழ்தல், நன்றாக வாழ்தலுக்கு அடிப்படை என்ற உன் உபதேசத்தை உயிர்க் கொள்கையாக ஏற்பேன்; வாழ்வேன், அருள் செய்க! 

ஜூலை 24

யார்மாட்டும் கருணை காட்டிட அருள் செய்க!

இறைவா, கருணைக் கடலே, எனக்கு இதயம் என்ற ஒன்றைத் தந்தருளினை. ஏன்? இதயம் உடல் முழுதுக்கும் குருதி, ஓட்டத்தை முறைப்படுத்திப் பாய்ச்சுகிறது! இதயம் வாழ்க்கையின் மையம். உடல், உயிர், இதயம், குருதியோட்டம், வாழ்தல் இவற்றின் நோக்கந்தான் என்ன? பயன்தான் என்ன? வறிதே தின்று வாளா சாதல் அல்லவே.

இந்த உலகில் ஒவ்வொரு சிறுபொருளும் பயன்படுகிறது. ஏன், கழிவுப் பொருள்கள் கூட மீண்டும் படைக்கும் உரமாகின்றன. நான் ஏன்? என் இதயம் எதற்கு இறைவா? கருணை பொழிவதற்காக இதயம்!

இன்று என்னிடம் ஏது கருணை? கருணைக் கிழங்கு தான் இருக்கிறது. இறைவா, மன்னித்துக் கொள். "நான்", "எனது” என்ற பாசக் கயிறுகள் வலிமை பெற்றவை. அவை என் இதயத்தை நெகிழவிடாமல் இறுகப் பிணைந்துள்ளன. இறைவா, போதும் போதாதற்குப் பணம் வேறு. "இலாபம்" என்ற ஆசை என் இதயத்தைக் கல்லாக்கிவிட்டது.

இறைவா, நீதான் கல்லைப் பிசைந்து கனியாக்கும் வல்லாளனாயிற்றே. என் பாசக் கட்டறுத்து என் இதயத்தை விடுதலை செய். எனக்குள்ள பணத்தாசை எல்லை கடந்த இலாப நோக்கத்தால் பேய் உருக்கொண்டு விட்டது. இந்தப் பேயின் கொட்டத்தை அடக்கு. நான் மனிதன்.

மனுதனுக்கு இதயம் வழங்கப் பெற்றதே கருணை பொழியத்தான். இறைவா, இது எனக்குத் தெரிந்ததே. ஆனாலும் இயலவில்லை. என் இதயத்தைக் கருணை பொழியும் இதயமாக மாற்றியருள்க! எங்கும் கருணை, எப்பொழுதும் கருணை, யார் மாட்டும் கருணை, இறைவா, அருள் செய்க. 

ஜூலை 25



பலருடன் கூடிப் பூத்துக் குலுங்கும் பொலிவுடைய வாழ்க்கையை அருள் செய்க!

இறைவா, நின்னைக் கண்டும் கண்டிலேன். என்ன கண் மாயமே. நான் காண்பன, உறவு கொள்வன அனைத்தும் மெல்ல மெல்லத்தான் கரைந்தொழிகின்றன. திடீர் என்று எதுவும் நடந்து விடுவதில்லை!

நட்பு அரும்பி மெல்ல மெல்ல வளர்கிறது. அங்ஙனமில்லாது திடீர் என்று தோன்றும் நட்பு. திடீர் என்றே போய் விடுகிறது. நட்பில் பிரிவு கூட மெல்ல மெல்லத்தான் வற்றிப் பிரிந்து விடுகிறது.

ஆதலால் உறவில், நட்பில் நெருக்கத்தையும் பராமரித்துக் கொண்டு வரவேண்டும். இடைவெளி ஏற்பட்டால் ஆபத்துதான். பகையே இல்லாதிருந்தாலும், திரும்பப் போய்ச் சேர நாணம், கூச்சம் எல்லாம் வந்துவிடும்.

இறைவா, நான் பழகிய ஒவ்வொருவரிடத்தும் தலை நாள் பழக்கம் போலவே பழக விரும்புகிறேன். ஆனால் என்னால் இயலவில்லை. மன்னித்துக் கொள். நான் இனி எல்லாரிடமும் கொண்டுள்ள உறவுகளைப் பராமரித்துப் பேணுகிறேன். அடிக்கடி சந்திக்கிறேன். உறவு கலந்து உண்டு பழகி மகிழ்வூட்டுகிறேன், மகிழ்கிறேன்.

மற்றவர்கள் மனநிறைவு கொள்ளும் அளவு, அவர்களைப் பாராட்டுகிறேன். அடிக்கடி சந்திக்க வேண்டிய அவசியமில்லையானாலும் சந்திக்கிறேன். பழகியோரைக் காண்பதும், உறவுகளை வளர்த்துக் கொள்வதும்கூட வாழ்க்கையில் ஒரு நீங்காக் கடமை. இறைவா, இவ்வகையே வாழ்ந்திட அருள் செய்க!

என் இதயத்தில் வற்றாத, அன்பு ஊற்று வேண்டும். அருள் செய்க. என் இதயத்தில் நம்பிக்கை என்ற ஒளி விளக்கு அணையாமல் எரிய வேண்டும். பலருடன் கூடிப் பூத்துக் குலுங்கும் பொலிவுடைய வாழ்க்கையை எனக்கு அருள் செய்க!



ஜூலை 26



நான் அறியாமையிலிருந்து முற்றாக விடுதலை பெற அருள் செய்க!

இறைவா, சூரனைத் தடிந்தாட் கொண்டருளிய தலைவா, சூரன் யார்? வேல் எது? சூரனைத் தடிந்த வரலாற்றின் பொருள் என்ன? இறைவா, எனக்கருள் செய்க! சூரன், அறியாமையின் உருவம், புல்லறிவாண்மையின் சின்னம். அறியாமையின் விளைவு அகந்தை. அதனால் “நானே எல்லாம்” - என்ற ஆர்ப்பாட்டம்.

அறியாமையை, அகந்தையை அகற்றுவது அறிவு; நிறை அறிவு; பேரறிவு! அதுவே ஞானம்! இறைவா அறிவு, நிறை அறிவு, பேரறிவு, ஞானம் இவையெல்லாம் என் வாழ்க்கையில் வந்து பொருந்த அருள் செய்க! அறியாமைக் கலப்பில்லாத அறிவே அறிவு!

ஒன்று தெரியும் பிறிதொன்று தெரியாது என்ற நிலை கல்லாமை. அறிவு முயற்சி இன்மை; ஒன்றைப் பிறிதொன்றாக அறிதல் அறியாமை. நன்றைத் தீது என்றும், தீதை நன்று என்றும் முறை பிறழ அறிதல் அறியாமை. நான் அறியாமையிலிருந்து முற்றாக விடுதலை பெற அருள் செய்க!

அறிவு வளர்ச்சியைக் கெடுக்கும் அகந்தையை, அறவே அகற்றி, யாவர்க்கும் தாழ்வாக நடந்திடும் பெற்றியினை அருள் செய்க! தாழ்தல்-தாழ்ந்து போதல் அறிவை வளர்க்கும்; ஆக்கத்தினைத் தரும்.

இறைவா, எனக்குத் தாழ்வெனும் தன்மை அணியாகட்டும். கற்றல், கேட்டல், உற்றறிதல் ஆகிய அறிவு முயற்சி களில் சோர்விலாது ஈடுபட அருள் செய்க!

தெரிய வேண்டியன தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை அருள் செய்க! தெளிய வேண்டியன தெளிந்து கொள்ள அருள் செய்க! வாழ்க்கைக்கு உறுதியென, நோன்பெனக், கொள்வன கொண்டு வாழ்ந்திட அருள் செய்க!



ஜூலை 27

ஒப்புரவு வாழ்க்கைக்கு உதவும் கூட்டு வாழ்க்கையே எனக்குத் தேவை!

இறைவா, சூரனைத் தடிந்து அருள் செய்த தலைவா! அன்று ஒரு சூரன் இருந்தான். எளிதில் தடிந்தாட் கொண்டனை. இன்றோ, எண்ணற்ற சூரர்கள். இறைவா, ஏன் இந்த அவலம்? “நான்” என்ற முனைப்பு அகன்றபாடில்லை!

நானோ பலவீனமானவன். எனது வெற்றி பொருந்திய வாழ்வுக்குக் கூட்டாளிகள் பலர் வழங்கப்படுகின்றனர்! ஆனால் கூட்டாளிகள் எளிதில் கூடுவதில்லை. கூடுகிறார்கள், கலைகிறார்கள்! ஏன், இறைவா? “நான்” என்ற அகந்தையை இழந்த தூய சமூக வாழ்க்கையை அருள் செய்.

இறைவா! "நான்” திணிந்த இருள் வழிப்பட்ட ஆணவத்தின் விளைவு. ஒப்புரவு வாழ்க்கைக்கு உதவும் கூட்டு வாழ்க்கையே எனக்குத் தேவை. "நான் வேண்டாம். என்னுடைய பெயர் சாகட்டும். "நான்" அற்ற நிலையில்தான் திருவடி ஞானம் தலைப்படுகிறது.

திருவடி ஞானத்தை எனக்கு அருள் செய்க! "நான்”, "எனது” அற்ற சமுதாயப் பெரு வெளியில் பலரோடும் நட்பும் உறவும் கொண்டு வாழ்ந்திட அருள் செய்க. இனி நான் சமூகத்தின் ஓர் உறுப்பு. இதுவே என் விருப்பம். இறைவா, அருள் செய்க.



ஜூலை 28



இறைவா, எய்ப்பினில் வைப்பாக இருந்து வாழ்வித்து அருள் செய்க!

இறைவா, நரகொடு சுவர்க்கம் நானிலம் புகினும் புக்குநின்றருளும் என் தலைவா! நின் திருவடிகள் போற்றி! போற்றி!! இறைவா, நீ என் வாழ்க்கைக்குத் துணை! என் மனத்துள் கருத்துருக் கொண்டருள்வாய்! இது உண்மை இறைவா. ஆனால், எனக்கு நாணம் மேலிடுகிறது.

என் தலைவனே! நான் ஒரு அறிவு ஜீவி. நானும் செயல்கள் செய்வேன். எனக்கும் பொறி புலன்கள், அறிவுக் கருவிகள், செயற்பாட்டுக்குரிய கருவிகள் உள்ளன. நான் என்ன சோற்றுப் பாவையா? நான் உண்டு உடுத்து மாள்வதா? பலநூறுகோடி உயிர்களைப் பயந்த வண்ணம் காக்கும் கடம் பூண்ட நின் உழைப்பிலேயே நான் வாழ்வதா? ஐயகோ, வெட்கமாக இருக்கிறது. என்னைப் பொறுத்துக் கொள்!

நான் என்ன செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றேன்! உன்னிடமும் என்னைப் பணிகொள்ளும் வகை கேட்டறிந்து கொள்கிறேன்! நான் சிந்திக்கிறேன். நான் செய்கிறேன். நான் உழைக்கிறேன்.

இறைவா, நான் எனக்காகவும் இந்தப் பரந்த மானுட சாதிக்காகவும் உழைக்கிறேன். உழைத்தே உண்பது என்று உறுதி கொள்கிறேன். நின் திருவுளம் மகிழப் பல அற்புதப் படைப்புகளைச் செய்கிறேன்.

இறைவா, ஒரே ஒரு வேண்டுகோள்! என்ன இருந்தாலும் நான் ஒரு சிற்றுயிர்! என் பணியில் நான் சோர்ந்தால்-எய்த்துக் களைத்துப் போனால் நீ வந்து துணை செய்! நீ எனக்கு வழக்கமாக நுகரும் நிதிபோல் அல்லாது சேமநிநிதியாக இருந்தருள் செய்க! நீ எனக்கு எய்ப்பினில் வைப்பாக இருந்து வாழ்வித்தருள் செய்க!



ஜூலை 29

இறைவா, என்னைச் சுற்றியுள்ள படையொடு போராட ஞானவாள் அருள்க!

இறைவா, பெருங்கருணையாளனே! இன்று உனது கருணையாட்சியைக் காட்டியருள்க! உனது கருணை காட்டும் நெறியை நானும் அடியொற்றி நடைபயிலும் பெற்றியை அருளிச் செய்க! இன்று எங்கும் "ஞான சூன்யம்"! அதனால் படுகொலைகள் நிகழ்கின்றன. கொலை பயிலுதல் வாழ்க்கையன்று.

வாளெடுத்தவன் வாளாலேயே மடிவான். இது நியதி! இறைவா, எனக்குக் கருணை பொழியும் இதயத்தினை வழங்கி அருள்க! வாழ்க்கையின் பேறாகிய ஞானமே எனக்குத் தேவை. என்னைச் சுற்றி வளைத்துத் தாக்கும் பொறிகளை, புலன்களை நான் அடக்கியாண்டு வெற்றி பெற வேண்டும்.

நன்றில் - தீதில் நடுக்கமுறும் சவலை மனத்தினை வலிமைப்படுத்திடுதல் வேண்டும். பாசத்தால் மிகுதியும் தாக்குண்டு வழுக்கி வீழும் நான் உன்னுடைய கருணையால் எழுந்து, என்றுமே வீழாமல் நடக்க வேண்டும். அருள் செய்க! ஞானத்தின் திருவுருவே! என் வாழ்வு உய்தி பெற அருள் செய்க!

தூய அறிவினனே! என் அறிவை விரிவு செய்து தூய்மை செய்திடுக! அறியாமைக் கலப்பில்லா அறிவினைத் தந்தருள் செய்க! பிறப்புறுக்கும் ஞானத்தினை வழங்கியருள்க! என்னைச் சுற்றியுள்ள படையொடு போராட எனக்கும் வாள் வேண்டும், படை வேண்டும்.

நான் விரும்பும் வாள் ஞானவாள்! ஞானமே, இம்மையில் என்னை வளர்க்கும்; வாழ்விக்கும். ஞானமே, ஞாலத்தை வெல்லும். ஞானமே நின்னைத்தரும், ஞானமே இன்ப அன்பினை வழங்கும். இறைவா அருள் செய்க!



ஜுலை 30


நினைக்கண்டறியும் அறிவினைத் தந்தருள் செய்க!

இறைவா, மெய் கண்டதேவன் கண்டுணர்த்திய மெய்ப்பொருளே! "மெய்" என்ற சொல் இன்று அதன் அற்புதப் பொருளை உணர்த்தும் வகையில் வழங்கப் பெறவில்லை. மெய்-உடம்பு, மெய் - மெய்யெழுத்து என்பனவே நான் அறிந்து வைத்துள்ள செய்தி.

மெய்கண்டார் கண்டு காட்டிய மெய்யை நான் உணர்தல் வேண்டும். இறைவா, உணர்த்தியருள்க. அல்லது உணர்த்தக்கூடிய ஆசிரியனைக் காட்டியருள் செய்க. இறைவா, உனக்குப் பொய்ம்மையாகச் சிலர் சேர்த்த பெருமையை மெய்கண்டசிவம் பறித்துவிட்டார், ஆம் இறைவா. நீ என்னைப் படைக்கவில்லை. உயிர்க் குலத்தை நீ படைக்கவில்லை.

இறைவா, நீ என்னைப் படைத்த தலைவனாக இருப்பின் என் குறைகளுக்கு நீயே பொறுப்பு. நான் பொறுப்பற்றவனாகி மனம் போன போக்கில் வாழ்வேன். இறைவா, இல்லை இல்லை! நீ என்னைப் படைக்கவில்லை என்ற உண்மையை உணர்ந்து கொண்டேன்.

நானே என் வாழ்க்கைக்குப் பொறுப்பு. எனக்கு வாய்த்திடும் நன்றும் தீதும் பிறர்தர வாரா என்ற தெளிவினைத் தந்தருள் செய்க! நான் என்றும் உள்பொருள். என் பிறப்பு என்பது உலகொடு உறவு கொள்வது. உறவைத் துண்டித்துக் கொள்வது இறப்பு, அவ்வளவு நான்!

நான் என்றும் உள்ளவன் என்று உணர்த்திய உத்தமனே, வினைகள் செய்யும் வாய்ப்புகளை வழங்குக! வினைப்பயன் வந்து சாராமே துலாக்கோல் போல் வாழ்ந்திட அருள் செய்க! அறியாமையை அகற்றி அருள் செய்க! நின்னைக் கண்டறியும் அறிவினைத் தந்தருள் செய்க! 

ஜூலை 31



இறைவா, இந்த உடலினை அடக்கி ஆண்டிடும் ஆற்றலினை அருள்செய்க!

இறைவா, ஞானத்தைத் தேட, ஆன்மா பூரணத்துவம் அடைய எனக்கு உடலைக் கருவியாகத் தந்தனை. நானே உயிர். நான் உன் மகவு. எனக்கு உடைமையே உடல். எனக்கு ஒரு கருவியே இந்த உடல்.

ஆனால், இன்று என்னைக் காணோம். என் ஆத்மாவைக் காணோம்? ஏதோ ஒரு சுட்டுப் பொருளாக நான் பயன்படுகிறேன். எனக்கு இங்கு என்ன அதிகாரம் இருக்கிறது? ஒன்றும் இல்லை! இறைவா, என் உடல் என்மீது அதிகாரம் செய்கிறது. என்னை அதற்கு இரை தேடுவதிலேயே ஈடுபடுத்துகிறது. என் உடலின் களிப்புக்கும் மகிழ்ச்சிக்குமே நான் உழைத்து எய்த்துப்போனேன்.

ஆனால், இந்த உடல் ஒரு நொடிப் பொழுது கூட என் நலன் நாடுவதில்லை. எனக்கு உரிய அறிவினைத் தேடும் முயற்சியில் துணை நிற்பதில்லை. நல்ல நூல்களைக் கற்கவே இடம் கொடுப்பதில்லை. ஏன்? ஏன் தந்தையாகிய உன்னை நினைந்து தொழக்கூட இந்த உடல் அனுமதிப்பதில்லை. உயிர்க்கு ஊதியமாகிய தொண்டினை - பிறர் நலம் கருதும் தொண்டினைச் செய்ய அனுமதிப்பதில்லை.

இறைவா, இந்த உடலை அடக்கி ஆண்டிடும் ஆற்றலினைத் தருக. நானும் நல்ல நூல்களைக் கற்றிடும் பேற்றினை அருள் செய்க! உன்னை நினைந்து நினைந்து தொழுது மகிழும் வரத்தினைத் தந்தருள் செய்க! பிறர்க்கு அன்பு செய்து அவர்தம் வாழ்வுக்குத் தெண்டு செய்யும் தூய வாழ்வினை அருள் செய்க!