குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12/மெய்கண்டார் விழா முதன்மையுரை

விக்கிமூலம் இலிருந்து


24 மெய்கண்டார் விழா முதன்மையுரை


இந்திய வரலாற்றில் தத்துவ விசாரனை என்பது மிகத் தொன்மைக் காலத்திலிருந்தே வரும் ஓர் அறிவியல் பயிற்சி. தத்துவ சோதனை, தத்துவமசி என்ற வழக்குகள் இந்திய நாட்டின் வரலாற்றொடு இணைந்தவை. தத்துவம் என்றால் உள்பொருள் எனப்படும். உள்பொருள்களை, அவற்றின் உள்ளிட்டை, பரிணாமத்தை, பயன்பாட்டை உய்த்தறிந்து உணர்தல்தான் தத்துவ சோதனை. தமிழ்நாடு தத்துவத் துறையில் மெய்ப்பொருளறிவில் சிறந்திருந்தது. இந்திய மெய்ப் பொருள் நெறிகளில் எல்லாம் தமிழகத்தின் சித்தாந்தநெறி விழுமியது. ஐயங்களின்று நீங்கியது; நம்பிக்கைக்குரியது; வாழ்க்கைக்கிசைந்தது.

தமிழொடு பிறந்து வளர்ந்த நெறி சித்தாந்த நெறி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் மெய்கண்டார் இந்தச் சித்தாந்தச் சிவநெறி, மற்ற நெறிகளிலும் எவ்வாறு விழுமியது என்று அளவைகளால் நிலைநிறுத்தினார். ஆதலால், மெய்கண்டார் சைவ சித்தாந்தச் செந்நெறியைக் கண்டவர் அல்லர். மெய்கண்டார் சைவ சிந்ததாந்தத்தை சிவஞான போதம் என்ற ஞான நூல்வழி கட்டமைப்புச் செய்தார்.

ஏனைய சமயங்களுக்கும் சைவத்திற்கும் உள்ள ஒரே வேறுபாடு சைவத்தில் எளிதில் ஊடுருவல் செய்ய இயலாது என்பதுதான். சிந்தையில் தெளிந்த ஞானிகளால் காணப் பெற்றது சிந்தாந்த சைவம். மூன்று பொருள்கள் என்றும் உள்ளவை. இந்த மூன்றாவன: இறை, உயிர், தளை என்பன. இந்த மூன்றனுள் இறையை இந்தியச் சமயங்கள் பலவும் உலகச் சமயங்களும் ஏற்றுக் கொள்ளும். ஆனால் சிந்தாந்தம் இறையின் இருப்பு, தொழில் முதலியவற்றை ஐயத்திற்கிடமின்றி விளக்குகிறது. இறை - கடவுள் ஒன்றே ஒன்றுதான். கடவுள் ஒருவரே. அவருக்கு உருவமில்லை. உருவம் இல்லாமலும் இல்லை. அவருக்கு ஊர் பெயர் கிடையாது. அதேபோழ்து ஊர், பெயர் இல்லாமலும் இல்லை, இயல்பாகக் கடவுளுக்கு உருவம் இல்லை. ஆட்கொண்டருள் செய்தலுக்காகக் கடவுள் அருவுருவ, உருவத்திருமேனிகளை எடுக்கின்றான். கடவுள் வரம்பிலாற்றல் உடையவன். ஆதலால், அவனால் எந்த உருவத்தையும் தன்னுடைய இயல்பாகிய பூரணத்துவத்திற்கு யாதொரு குறையும் வராமல் எடுக்க இயலும். கடவுள் மனம், வாக்குகளைக் கடந்தவர். ஆயினும் ஆன்மாக்களின் நலன் கருதி ஆன்மாக்கள் நடத்தும் வாழ்க்கையில் வழிநடைத் துணையாகப் பருவங்களில் பருவங்களுக்கிசைந்த பாத்திரப் பண்பில் நின்றருளிச் செய்யும் தனித்துணையாம் தன்மையை,

அப்பன்நீ அம்மைநீ அன்புடைய மாமனு மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ ஒருகுலமும்
சுற்றமும் ஓரூரும்நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ துணையாய்
என்நெஞ்சம் துறப்பிப்பாய் நீ
இப்பொன்நீ இம்மணி நீ இம்முத்து நீ! இறைவன்நீ
ஏறூர்ந்த செல்வன் நீயே!

என்று அப்பரடிகள் அருளிச் செய்துள்ளமையால் அறிக.

முப்பொருள்களுள் அடுத்து இருப்பது ஆன்மா - உயிர். இந்தியத் தத்துவ ஞானங்களில் எல்லாம் சித்தாந்தச் செந்நெறியின் ‘ஆன்மா’க் கொள்கை தெளிவானது. ஆன்மாக்கள் பல; பலப்பல; ஆன்மாக்கள் படைக்கப்பட்டன அல்ல. ஆன்மாக்களுக்கு - உயிர்களுக்குத் தோற்றமும் இல்லை; அழிவும் இல்லை; ஆன்மாக்கள் கடவுளைப் போலவே என்றும் உள்ளவை. “என்று நீ அன்று நான்” என்பார் தாயுமானவர். ஆன்மாக்கள் என்றும் உள்ளவை யென்றால் இறைவனுக்கும் ஆன்மாவுக்கும் என்ன உறவு? கடவுளுக்குப் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில்கள் ஏன்? இந்த ஐந்து தொழில்கள் யாரை முன்னிட்டு நிகழ்த்தப் பெறுகின்றன? கடவுள் ஆன்மாவின் வாழ்க்கைப் பயணம் தோறும் தேவைக்கேற்ப உறவுவைத்து ஆட்கொண்டருள்கின்றான். ஆன்மாக்கள் அறிவும் செயலும் முடங்கி ஆணவத்தினுடன் அறியாமையில் கட்டுண்டு கிடக்கும்போது தாயிற்சிறந்த தயாவுடன் உயிர்களுக்கு நுண்ணுடலையும், அறியாமை நீக்கத்திற்குரிய வாழ்நிலையில் - வாழ்ந்திட, துய்ப்பன துய்த்து உய்யுமாறு உய்தி பெறுதலுக்குரிய உடம்பினையும் பொருத்தல் படைப்பு. அறியாமை நீங்கும் காலம்வரை, பொருத்திய நுண்ணுடலை உயிர் தாங்கிப் பயன்பெறச் செய்தல் - பாதுகாத்தல். அறியாமைக்கு அரண் செய்யும் துரிசுகளை அழித்தல், உயிர் அதன் பழைய நிலையை உணராது மறைத்து வைத்தல், வாழ்க்கையில் வாழ்க்கையின் போகத்தில் ஆன்மாக்களுக்கு விருப்பத்தை உண்டாக்குதலும் மறைத்தல். ஆன்மாக்களை - உயிர்களை முற்றாக அறியாமையினின்றும் மீட்டு முழுமையுறச் செய்து இன்ப அன்பில் நிலைபெறச் செய்தல் அருளுதல். ஆன்மாக்களுக்கு கடவுள் வாழ்க்கையில் ஆண்டவன் அடிமையில்லை. உடையார் - இல்லார் இல்லை. பேதமில்லை. இதுவே உண்மையான சமயம். சித்தாந்தச் சமயம்.

பிற்காலத்தில் சமயநெறிகள் தடம்புரண்டு உடைமை, பணம் ஆகியவற்றின் தடத்தில் நடந்து சுரண்டும் சமுதாயத்திற்கு அனுசரணையாக இருந்து வேற்றுமைகளை வளர்த்து இந்தப் புவிக்கோளை இரத்தத்தால் கழுவி நகரத்தைப் படைத்த கொடுமைகளையும் மறந்து விடுவதற்கில்லை.

ஆயினும் இன்னமும் மனிதம் வளர, நம் நாட்டின் சமய ஞானம் துணை செய்யும், துணை செய்யவேண்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த நம்பிக்கை வெற்றிபெற சிந்தனையாளர்கள், செயல் வல்லுநர்கள் துணை செய்யவேண்டும்.

இந்த வாழ்க்கை அழுவதற்காக அல்ல. சென்ற காலத்தில் அழுதது போதும். சென்ற காலத்திலிருந்து விடுதலை பெறவேண்டும். முன்னே தோன்றிய பழைமையைப் பின்னர்ப் புதுமையாக்கி வாழ்க்கையைப் பயனுடைய தாக்கப் பயன்படுத்துதல் வேண்டும். உயிர்கள் குறைவிலாது வாழ்வதற்குரியனவாகச் செய்தாக வேண்டும். மாந்தரிடத்தில் தோழமைப் பண்பை வளர்க்க வேண்டும். இதனை இன்றைய சமயம் செய்தால் எதிர்காலம் உண்டு.