குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/அன்பாற்றல்

விக்கிமூலம் இலிருந்து

10. அன்பாற்றல்

அன்பு - இஃது ஒர் உயிர்ப் பண்பு; மனிதகுல வரலாற்றை உயிர்ப்புள்ளதாக்கும். பண்பு, தீமையைத் துடைத் தெறியும் ஆற்றல் மிக்க பண்பு; படைப்பாற்றல் மிக்க பண்பு. இந்த அன்பு தற்சார்பில்லாதது; முற்றாக அயலாரை நோக்கியே செல்லும் பண்பு. இத்தகு அன்பினை உயர் பண்பாகப் பெற்ற மனிதன் வளர்வான்; வாழ்வான். இத்தகு அன்பினை அறிவியற் பார்வையில் திருக்குறள் எடுத்துக் கூறுகிறது.

உயிர்க்குலத்தில் எலும்பு உடைய உயிர்களும் உண்டு; எலும்பு இல்லாத உயிர்களும் உண்டு. எலும்பு இல்லாதன புழு வகையின. கதிரொளியின் ஆற்றலைத் தாங்கும் ஆற்றல் எலும்புள்ள உயிரினங்களுக்கு மிகுதியும் உண்டு. ஒரோ வழி தாங்கிக்கொள்ள இயலாது போனாலும் ஓடிப்போய்ப் பிழைத்தல் இயலும். எலும்புகள் அமைந்த உடல்கள் விரைந்த இயக்கத்திற்குத் துணை செய்வன. எலும்பு இல்லாத புழுக்களுக்குக் கதிரவனின் வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் இல்லை; தப்பித்துச் செல்லவும் உடலமைப்பு இடம் தராது; ஊர்ந்தே செல்ல இயலும். அதனால் எலும்பு இல்லாதவை கதிரவன் வெப்பத்தினால் அழியும் என்பது அறிவியற் சார்ந்த கருத்து.

அதுபோல மானுட வாழ்விற்கு அன்புடையராதல், எலும்புபோல் வலிமையைத் தரும். அன்புடையோர் சமுதாயத்தில் நிகழும் முறைப் பிறழ்வுகளால் அழிந்துவிட மாட்டார்கள். தாங்கி வாழ்விப்பார்கள். தாமும் வாழ்வார்கள்.

கதிரொளியில்-வெப்பத்தில் மாற்றங்கள் இல்லை. கதிரொளி காய்வதில்லை. அதனைத் தாங்கும் ஆற்றலற்றவை அழிகின்றன. அதுபோலச் சமுதாய வரலாறு, ஒரு தன்மைக்காக இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்திற்கு அடிப்படை மானுடத்திற்குரிய அறமேயாகும். அன்பின் ஆற்றலுடையவர் வாழ்கின்றனர். அன்பாற்றலற்றவர்கள் அழிகின்றனர். "ஆற்றலுடைமையே வாழும்" என்பது ஒரு உண்மை.

ஆதலால், வாழும் மானுடத்திற்கு எலும்பனைய அன்பினை அனைவரும் போற்றுமின்!

"என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்"

(77)