குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/ஆன்மாவின் உணவு!
மனிதன் பிறப்பதில்லை; மனிதன் உருவாக்கப்படுகின்றான். இதுவே அறிவியல் உண்மை. மனிதனை உருவாக்குவதில் கல்வி வகிக்கும் பாத்திரம் மிகமிகப் பெரியது. கல்வியின் இலட்சியமே மனிதனை உருவாக்குவதுதான்! அதனால் மனிதனை உருவாக்கும் கல்வியிலும் விழுமியது இல்லை.
மனிதனின் பொறி, புலன்களைப் பயனுடையனவாக்கி வாழ்க்கையை வளர்த்து விளக்கமுறச் செய்வது கல்வியே! மனிதன் அளப்பரிய ஆற்றலுடையவன். மனிதனின் ஆற்றல் கல்வியின் மூலமே இனங்காணப் பெற்றுச் செயலாக்கத்திற்குப் பயன்படு நிலைக்குக் கொணரப் படுகிறது! ஏன் கல்வியே ஆன்மாவின் சிறந்த உணவு.
திருக்குறள் ‘கற்க!' என்று பேசுகிறது. ஆம்! கல்வி கற்பது மனிதர்களின் பழக்கமும் வழக்கமும் ஆகவேண்டும். கற்றல் பலவகை. அவற்றுள் எளிமையானது, முதன்மையானது தன்னைச் சுற்றியிருக்கும் உலகத்தைக் கூர்ந்து நோக்குவதன் மூலம் கற்பது.
"கண்டதைப் படித்தால் பண்டிதன் ஆவான்" என்பது பழமொழி. கண்டது=கண்ணால் கண்ட இயற்கைக் காட்சி களையே கற்பது. இங்ஙனம் கற்ற பாடங்களிலேயே ஐசக் நியூட்டனின் ‘புவி ஈர்ப்பு ஆற்றல்’ கண்டுணரப் பெற்றது என்பதறிக.
அடுத்து அவரவர் சொந்த வாழ்க்கையின் பட்டறிவு வழி பெறும் கல்வி அறிவு. இந்தக் கல்வி தனி முயற்சியில்லாமல் வாழ்க்கையின் வழியிலேயே கற்கப் பெறுவது வாழ்க்கையில் ஏற்படும் வெற்றிதோல்விகள் நம்பிக்கையுடனும் நல்லெண்ணத்துடனும் ஒட்டி உறவாடி வாழ வேண்டிய இடத்தில் முரண்பாடுகள் தோன்றுதல், நம்பிக்கையின்மை வளர்தல் ஆகியன வாழ்வியலுக்கு நல்லவையல்ல.
மனிதர்களிடையில் மன முறிவுகள் தோன்றுவதும் அவ்வழி மனித உறவுகள் பாதிக்கப்படுவதும் ஏற்க இயலாத ஒன்று. அன்றாடம் வாழ்ந்த வாழ்க்கைப் பாங்கைத் திறனாய்வு செய்து திறனாய்வு வழி வாழ்நிலைகளை அறிந்து கடைப்பிடித்தல் சிறந்த கல்வி.
மூன்றாவது, நூல்களைக் கற்பதன் மூலம் பெறும் அறிவு. இந்தக் கல்வி முறை தான் இன்று பரவலாகப் பின்பற்றப்படுகிறது. மக்கள் மத்தியில் நடைமுறையில் இருப்பதும் இந்தக் கல்வியே! இந்தக் கல்வியை மக்கள் பெறுவதற்காக நாடு செலவழிக்கும் காலமும் பணமும் அளவிடற்கரியது.
ஆயினும் போதிய பயன் இல்லை; ஏன்? கல்வி முறையே காரணம். இன்றைய கல்வியில் சிந்தனைக்கு வாய்ப்பில்லை; செயலுக்குரிய வாய்ப்பு மிக மிகக் குறைவு. கல்வி கற்றதனால் எந்த ஒரு தனித்தகுதியும் வந்தடைந்ததாக இல்லை. ஏன்? கற்கும் ஆர்வம் கூட இல்லை.
திருக்குறள் ‘கற்க’ என்று கூறுகின்றது. ஆம்! கற்பது - இடையீடில்லாது தொடர்ந்து கற்பது மனிதனின் கடமை. ஏன் கற்க வேண்டும்? மனிதன் அளப்பரிய ஆற்றலுடையவன். அவன் எண்ணிய செயல்களைச் செய்ய முடியும். ஆயினும் அவனுடைய அகநிலைக் குற்றங்களாகிய அச்சத்திலிருந்து விடுதலை பெற்றால்தான் கற்கும் கல்வி பயன்தரும். “கசடறக் கற்பவை கற்க” (391) என்றது திருக்குறள். “கசடு"- மனக்குற்றங்கள். மனக்குற்றங்களை நீக்கும் மருந்து கருத்துக்கள் தாம். கருத்துக்கள் பெரும்பாலும் நூல்கள் வாயிலாகவே கிடைக்கும். கற்க வேண்டிய நூல்களைத் தேடிக்கற்ற பிறகு அக்கருத்துக்கள் வழி நடந்து அக்கருத்துக்களுக்கு உரிமை புடையராதல் வேண்டும்.