குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/உலகத்தோடு ஒட்டி ஒழுகுதல்

விக்கிமூலம் இலிருந்து

92. உலகத்தோடு ஒட்டி ஒழுகுதல்

இனிய செல்வ, மனிதன் சார்ந்து வாழ வேண்டிய கட்டாயத்திற்கு உரியவன்; ஆளானவன்! எந்த ஒரு மனிதராலும் தனித்து வாழ இயலாது. ஒரோவழி இயன்றால் அந்த வாழ்க்கையில் மனிதம் மிளிராது; விலங்கியலே மேம்பட்டு விளங்கும்; பயனும் இருக்காது; பிழைப்பு நடந்தாலும் அது வாழ்தல் ஆகாது. இனிய செல்வ, வாழ்தலுக்குச் சமூகம் தேவை. சமூகம் தழுவிய உலகந்தழுவிய வாழ்க்கையைத்தான் வள்ளுவம் காட்டுகிறது. "உலகத்தோடு ஒட்ட ஒழுகல்" என்றே கூறுகிறது. ஒழுக்கத்தில் சிறந்தது உலகத்தோடு ஒட்டி ஒழுகுதல், உலகத்தோடு ஒட்டி ஒழுகுதல் எளிதான காரியமா? இல்லை, ஒருபோதும் இல்லை! கடினம் தான்! அந்தக் கடினமான முயற்சியைத்தான் மேற்கொள்ள வேண்டும். இடுக்கான வழியில் செல்வதே வாழ்வு என்று விவிலியம் கூறுகிறது.

மானுடம் ஒரு குலமாக வளர, அமைய என்ன செய்ய வேண்டும்? நல்லமுறையில் விளம்பரம் செய்து கூட்டத்தைக் கூட்டிவிடலாமே! ஆனால், கூடி வாழமாட்டார்களே! "இரண்டு மனிதர்களை ஒரு அறையில் போட்டுப் பூட்டி விட்டு சிலமணி நேரம் கழித்துத் திறந்து பார்த்தால் அந்த அறைக்குள் பிணங்கள் தான் கிடைக்கும்" என்றொரு துணுக்கு படித்ததாக நினைவு. மனிதன் சார்ந்து வாழ, கூடி வாழ எத்தகைய பண்புகள் தேவை? இன்று ஏராளமான மக்கள் கடவுளை வழிபடுகிறார்கள்! ஆனால், கடவுள் நெறியில் நிற்பதில்லை; ஒழுகுவதில்லை. வேண்டுதலும் வேண்டாமையும் இல்லாதவன் கடவுள்! அப்படியானால் இன்று கடவுள் நம்பிக்கை உடையவர்கள் வழிபடுகிறவர்களிடம் வேண்டுதல், வேண்டாமையாகிய இயல்புகள் - குணங்கள் இருக்கக்கூடாது அல்லவா? இன்று எங்குப் பார்த்தாலும் மிகமிக உயர்ந்த இடத்திலிருந்து கிராமம் வரை வேண்டுவோர் வேண்டாதோர் என்ற அணி மனப்பான்மை பெருகி வளர்ந்து வருகிறது. மிக உயர்ந்த ஜனநாயக மரபில் எதிர்க் கட்சிகள் இருக்கும்; இருக்கவேண்டும். ஆனால் இன்று நம்முடைய நாட்டில் எதிர்க் கட்சிகள் இல்லை. எதிரிக் கட்சிகள்தான் இருக்கின்றன. எங்குப் பார்த்தாலும் பிரிவினை உணர்ச்சிகள்!

மனித இயற்கை ‘வேண்டும்’ ‘வேண்டாம்’ என்ற குண இயல்புகள் இருப்பது. ஆனால், அவை தம்முடன் வாழ்பவர்களுடன் ஒத்து இருக்கின்றனவா என்று ஆய்வு செய்து ஏற்றுக் கொள்ளவோ, தள்ளவோ தவறிவிடின் சமூகம் தோன்றாது; சமூகம் உருக்கொள்ளாது: தனிமனிதனுக்குப் பாதுகாப்பும் உத்திரவாதமும் இருக்காது. காலம் செல்லச் செல்ல மனிதன், பிறிதொரு மனிதனிடத்திலிருந்து அந்நியப்பட்டுப்போவான். அந்நியப்பட்ட நிலையில் சந்தேகம், பயம், அச்சம், உட்பகை, வன்மம் முதலிய தீய குணங்களுக்கு மனிதன் அடிமையாகி விடுவான். அதனாலேயே கடவுள் கூட மற்றவர்கள் விரும்பியதைத் தனக்கு எதிராக அமையும் என்று தெரிந்து அருளிச்செய்கிறான். பத்மாசூரன் கதை, சூரபதுமன் கதை எடுத்துக்காட்டுக்கள்! இனிய செல்வ, பத்மாசூரனும் சூரபதுமனும் சமூகப் பகைவர்களாக மாறின போதுதான் கடவுள் ஒறுக்கின்றார்! இனிய செல்வ, ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வேண்டுதல்களையும் வேண்டாமைகளையும் ஓர் எல்லைக்குள் கட்டுப்படுத்திக் கொண்டால் அல்லது சமுதாய நலன் என்ற ஆதார சுருதிக்கு முரணாமல் அமைத்துக்கொண்டால் நல்லது. சமூகமும் வளரும், வாழும்!

இனிய செல்வ, இன்று எங்கு நோக்கினும் நிர்வானமான சுயநலம்! விளம்பர ஆசை பண ஆசை! இவையெல்லாமாகச் சேர்ந்து இன்று மனித குலத்தின் பண்பாட்டை அரிமானம் செய்து வருகிறது. இந்தப் போராட்டத்திலிருந்து இந்தியாவை - இந்தியர்களை - தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும். பத்திரிகை உலகம், திரைப்பட உலகம் இவ்விரண்டும் மானுடம் பண்பாட்டுச்சியில் ஏறுவதற்குப் பயன்படும் ஏணிகள்! ஆனால் இன்று இவை மனித குலத்தின் நாகரிகத்திற்குப் பள்ளங்களைத் தோண்டிக் கொண்டிருக்கின்றன! தரமான நூல்களைப் படிக்கும் போக்கு மக்களிடத்தில் வளர வேண்டும். மேடைகள், இசை அரங்குகள், பொழுதுபோக்கு மையங்களாக மாறக்கூடாது. இசை, கிளர்ச்சியை உண்டு பண்ணவேண்டும். ‘இசை ஒரு பொழுது போக்கு சாதனம் அல்ல!’ என்று அண்மையில் கங்கை அமரன் கூறியதை நினைவுகூர்வோமாக!

இனிய செல்வ, கருத்து வேற்றுமைகள் எழுவது இயற்கை. அவை பரிமாற்றம் செய்து கொள்ளப்பெற்று ஒத்த கருத்து உருவாதல் வேண்டும். இனிய செல்வ, அதுவும் இயலாது போனால் கருத்து வேற்றுமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு மன முறிவுக்கு இடம் கொடுக்காமல், உள்ளம் ஊனப்படாமல் பழகவேண்டும். பழகும் பாங்கில் ஒத்த கருத்து உருவாகலாம். அல்லது கருத்து வேற்றுமைகள் மறந்தே போகலாம். இனிய செல்வ, இத்தகு பண்புகளுடைய மனிதர்களைக் தேடினாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இனிய செல்வ, நம்முடைய ஆளுநர் - முதல்வர் மோதல்களைப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. பெருந்தகைமை என்ற பண்பை இனிமேல் காணாமலே போய்விடுவோமோ என்ற அச்சம் மேலிடுகிறது. இனிய செல்வ, ஒழுக்கம் என்றால் என்ன? அதிலும் ஆன்மீக ஒழுக்கம் என்றால் என்ன? அன்றாட வாழ்க்கையில் சில நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பது மட்டும் ஒழுக்கமா என்ன? இவை ஒழுங்குகள்! ஒழுக்கம் என்பது உயிர் சார்ந்தது. உயிரியல் பண்புகளே ஒழுக்கம். அவற்றினுள்ளும் தலையாயது ‘வேண்டுதல் - வேண்டாமை’ அரசனிடமிருந்து மக்கள் விடுதலை பெற்றுக் கடவுள் நெறிக்குச் சென்றது வரலாற்றுத் தொடக்கமே. அரசன் வேண்டுதல் வேண்டாமையின் பாற்பட்டு நன்மையும் தீமையும் செய்ததால்தான் வேண்டுதல் வேண்டாமை இல்லாத கடவுளைத் தேடினர்; கண்டுபிடித்தனர். ஆனாலும் கறை படிந்த மனிதர்கள் அந்தக் கடவுளையும் இப்போது விட்ட பாடில்லை. கடவுளை, மதங்களுக்கும் சுரண்டல் பொருளாதாரத் தத்துவவாதிகளுக்கும் இரையாக்கி விட்டனர். இனிய செல்வ, கடவுளுக்கு ஈசுவரன் என்று ஒரு பேர் உண்டு. ஆனால், நமது மக்கள் கோடி பணம் தொகுத்து விட்டாலே ஈசுவரன் பட்டம் கொடுத்து, கோடீசுவரர் ஆக்கிவிடுவர்! இனிய செல்வ, மனித குலத்திற்கு நிலையான தீர்வு வேண்டுதல் - வேண்டாமை அற்ற மனித சமூகத்தைக் காண்பதிலேயே இருக்கிறது.

இன்று உலகப் போக்கினைப் பார்த்தால் கொஞ்சம் நம்பிக்கை உண்டாகிறது. அணு ஆயுத உற்பத்தியைக் குறைத்திருக்கிறார்கள். செய்து குவித்த அணு ஆயுதங்களைக் கடலில் கொட்டியிருக்கிறார்கள். ஆனாலும் உலகின் வீதிகளில் என்ன நடக்கின்றது? நமது நாடு எந்தத் திசையில் சென்று கொண்டிருக்கிறது? இது ‘வீரப்பன்’களின் ராஜ்யமாக வல்லவா உருப்பெற்றுக் கொண்டு வருகிறது. இங்கே ஒரு வீரப்பன் என்று நினைக்காதீர்கள்! தெருவுதோறும் ஊர்தோறும் ‘வீரப்பன்’கள் தோன்றுகிறார்கள்! தோன்றிக் கொண்டிருக்கிறார்கள்! ஆயினும் என்ன செய்வது? திசை தவறிப் போய்க் கொண்டிருக்கிற சமுதாயத்தை வள்ளுவர் வழியில் மடை மாற்ற செய்ய இயலும், கடின முயற்சி தேவை. வெற்றி தோல்வியைப் பற்றிக் கருதாமல் போராடிப் பார்ப்போம். மனிதகுல வரலாறு தனது தலைவிதியைத் தானே நிர்ணயித்துக் கொள்ளட்டும்! வரலாறு தேக்கமின்றி நடைபோடப் புவியை நடத்துவோம்! காலம் விடை சொல்லும்! அடுத்த மடலில் எழுதுகின்றோம்!
இன்ப அன்பு
அடிகளார்