குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/நல்வாழ்க்கையின் இரட்டை நாடிகள்

விக்கிமூலம் இலிருந்து

13. நல்வாழ்க்கையின் இரட்டை நாடிகள்


இன்பம் மனிதனால் உருவாக்கப் பெற்று அவனே துய்த்து மகிழும் ஒர் உணர்வு. இந்த இன்பம் என்பது அணுகும் வகையால் மனிதனுக்கு மனிதன் மாறும். ஒரு மனிதனுடைய வாழ்நாள்களிலே கூட பருவத்திற்குப் பருவம் மாறும். ஒரோ வழி சூழ்நிலைகளுக்கு ஏற்பவும் மாறக்கூடும். அப்படியானால் இன்பம் நிலையான ஒன்றில்லையா? இன்பம் நிலையான ஒன்றுதான். எங்கும் எப்பொழுதும் எல்லாருக்கும் இன்பமாக இருக்கின்ற ஒன்றே இன்பம். மற்றவை எல்லாம் துன்பம்.

ஆனால் மானுடம் தற்சார்பிலே பழகிப் பழகி, துன்பந்தழீஇய இன்பத்தையே இன்பம் என்று கருதுகிறது. இன்பம் போலக் காட்டித் துன்பம் தரும் இவற்றிற்காகவே மானிடர் போராடுகின்றனர். இன்பம் சமூக நலத்தில் உருவாவது; தோழமையில் வளர்வது; காதலில் நிலைப்பது. எல்லாவற்றிற்கும் அடிப்படை சமூக நலம். நம் ஒவ்வொரு வருடைய உள்ள நலமும் உடல் நலமும் கூட சமூக நலத்தினையே அடிப்படையாகக் கொள்வது.

ஆன்மாவின் உறுப்புக்களான மனம், புத்தி, சித்தம், அகத்துறுப்புக்கள், பிரிக்கப்படாத உறுப்புகள் அகத்து உறுப்புக்களே. இவைகளே அறியும் கருவிகள், அறிவுக் கருவிகளுமாம். மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியன உடலுக்கு வாய்த்த பொறிகள். இப்பொறிகள் செயலுக்குரியன. அறிவும் செயலும் நிகழும் களம் சமூகம், தானே! ஆதலால் சமூகத்தையும் தனது வாழ்நிலையின் உறுப்பாக எண்ணவேண்டும். உறுப்பாக மட்டுமல்ல. சமூகநலனே இன்பத்தின் ஊற்றுக்களன் என்று கருதி சமூக நலனைப் பேணி வளர்க்க வேண்டும். சமூகத்துடன் பிணக்கிலாத நிலையைப் பராமரிக்க வேண்டும்; நெஞ்சு நெகிழத்தக்க உறவு நிலைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

சமூக நலன் எப்போது கெடுகிறது? ஏன் கெடுகிறது? அன்பின்மையின் காரணமாக சமூகத்திலிருந்து தனி மனிதன் அந்நியப் படுத்தப்படுகிறான். அந்நியமான நிலை நன்றன்று. அன்பு அடக்கத்தினைத்தரும். வளர்ந்த அறிவு அடக்கத்தைத் தரும். அன்பின்மையும் அறிவின்மையும் தனி மனிதனைத் தற்சார்புடையவனாக்கி அகந்தைக்காரனாக வளர்த்து விடுகிறது. அறியாமையின் முகட்டில் வாழ்பவர்கள் அகந்தையே வடிவமாக வாழ்வர். இவர்கள் யார் மாட்டும் அடக்கத்தைப் பேணார். பணிவு என்பதே இவர்கள் வாழ்க்கை அகராதியில் இல்லை. ஆர்ப்பரவம் செய்வர். எல்லாரையும் இழித்தும் பழித்தும் பேசுவர். இத்தகு வாழ்க்கைப் போக்கு சமூக நலனைக்கெடுக்கிறது. உள்ளமும் கெட்டு உடலும் கெட்டு நாட்டின் நிலை இரங்கத் தக்க தாகிறது.

நல்வாழ்க்கைக்கு அடக்கம் தேவை, பணிவு தேவை. யார் மாட்டும் அடக்கம் தேவை, பணிவு தேவை. அடக்கமும் பணிவும் இருந்தால் இனிய சொற்களே பிறக்கும். ஒருவர் வாழ்க்கையில் அவர் வழங்கும் இனிய சொற்கள் தரும் பயன் அளப்பரியது. இனிய சொற்களால் பாராட்டுவதின் மூலமும் எண்ணற்ற காரியங்களைச் சாதிக்கலாம். மானுடத்தின் இயற்கையமைப்பு இன்சொல் வழங்குவதேயாம். ஆனால் முயன்று குருதியைச் சூடேற்றிக் கொண்டு மூச்சுக் காற்றினை நிறையச் செலவழித்துக் கடுஞ்சொற்களை - பிறருக்கும் தனக்கும் இன்னாதன விளைவிக்கும் சொற்களைக் கூறுகின்றனர்.

இனிமை பயவாத இன்னாத கடுஞ் சொற்களைக் கூறின் இரத்தக் கொதிப்பு நோய் வருகிறது; மூச்சுக் காற்று அதிகம் செலவாவதால் மூப்புத் தன்மை இளமையிலேயே வந்து விடுகிறது; மற்றவர்களுடைய பகையே வளர்கிறது; காரியக் கேட்டினைச் செய்கிறது. அது மட்டுமல்ல வன் சொல் திருட்டுத்தன்மையுடையது என்பது வள்ளுவத்தின் கருத்து. எப்படி வன்சொல் திருடு? விலங்கினத்திடமிருந்து கவர்ந்து கொண்ட விலங்கியல் தன்மையின் விளைவு வன்சொல். அதனால் வன்சொல் திருடு ஆகும். இனிய சொல் அன்பினை இருபாலும் ஊற்றெடுக்கச் செய்கிறது; தோழமையை வளர்க்கிறது. வாழ்க்கைப் பணியில் ஆற்றல் மிக்க ஒத்துழைப்பை நல்குகிறது. ஆதலால் பணிவும் இன் சொல்லும் வெற்றி பொருந்திய நல்வாழ்க்கையின் இரட்டை நாடிகள். ஒன்றின்றில் பிறிதொன்று இல்லை. இன்சொல்லை என்றும், எங்கும் வழங்கி வாழ்வித்து வாழ்வோமாக!

"பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற"

(95)