உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/வாழும் மானிடத்திற்கு அழகு?

விக்கிமூலம் இலிருந்து

94. வாழும் மானிடத்திற்கு அழகு?

இனிய செல்வ,

மனிதன் ஏன் பிறந்தான்? படைப்பாளியாக விளங்கவேதான்! "வினையே ஆடவர்க்கு உயிரே!” என்று சங்க இலக்கியம் கூறும். மனிதன் தன்னுடைய வளர்ச்சி, வாய்ப்புக்கள், சூழலுக்கேற்ப பணிகளைச் செய்கிறான். அது அவனுடைய கடமை. ஒருவன் 24 மணி நேரம் உயிர் வாழ எத்தனை கோடி மனிதர்களும் உயிர்களும் உழைக்கின்றனர். அதுபோல இன்னும் உழைத்துக் கொடுப்பது கடமை. வாழ்வுவழிக் கடமை. இனிய செல்வ, மின்னியலில் ஒரு தத்துவம் உண்டு. அதாவது குறைவான மின்சாரத்தை அளவாகப் பெருக்கிக் கொடுக்கும் ஒரு கருவி உண்டு. இனிய செல்வ, அதுபோலச் சமுதாயத்திடம் மனிதன் தான் வாழ்வதற்குக் கொஞ்சமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் தான் எடுத்துக் கொண்டதைப் போலப் பலமடங்கு திருப்பிக் கொடுக்க வேண்டும். இது உலக நியதி. மனிதனை விட மற்ற எல்லா உயிர்களும் இந்த நியதியைப் பின்பற்றுகின்றன. தாவரங்கள், விலங்குகள் எல்லாமே மனிதனிடமிருந்து பெற்றுக் கொள்வது குறைவு. இயற்கையிலிருந்து பெற்றுக் கொள்வதும் குறைவு. ஆனால் திரும்பக் கொடுப்பதோ ஏராளம். இனிய செல்வ, அதுமட்டுமா? இவன் தரங்குறைந்தவைகளையே தனக்கு உபயோகமில்லாதவைகளையே தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் தருகின்றான். ஆனால் அவைகளோ மனிதனுக்குத் தரமான நுகர் பொருள்களாக, சுவைபடு பொருள்களாகத் தருகின்றன, ஆயினும் ஆரவாரம் செய்வதில்லை. விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை. தாவர உலகத்தில், விலங்குகள் உலகத்தில், பறவைகள் உலகத்தில் பஞ்சமும் இல்லை. பண்டமும் இல்லை; பட்டினியும் இல்லை.

இனிய செல்வ, மனிதனோ பேராசைக்காரன். இந்த உலகத்தையே அவன் சுரண்டுகிறான். இந்த உலகத்தில் உள்ள பொருள்கள் கணக்கற்றவை. உலகம் முழுதும் வயிறார உண்டும் மிஞ்சும். ஆனால் நடைமுறையில் காண்பது பற்றாக்குறை. ஏன்? மனிதனின் பேராசையே காரணம், அவன் சுரண்டுகிறான்; சுருட்டுகின்றான். அதனால் உலகத்தில் இல்லாமை இருக்கிறது. எடுத்துக்கொள்ள விரும்பும் அளவுக்கு உழைக்கவும் மறுக்கிறான். அன்று பதவிகளும் பணிகளும் தொண்டாற்றம் முறையிலேயே அமைந்திருந்தன. நன்றி பெறமாட்டார்கள்; எதிர்பார்க்கவும் மாட்டார்கள். அப்பரடிகள் "என் கடன் பணிசெய்து கிடப்பதே" என்றார். சராசரி மனிதனுக்கே இது கடமை. பிறப்பொழுக்கம், வாய்ப்புக்கள் காரணமாகப் பதவிகளில் அமர்பவர்கள். பணி செய்யும் பொறுப்புடையவர்களின் பணி. இவர்களிடம் சமுதாயத்தின் எதிர்பார்ப்பு அதிகம் உண்டு. இனிய செல்வ, சமுதாயத்தின் எதிர்ப்பார்ப்புகளை உயர்நிலை எய்திய மனிதர்கள் செய்யக் கடமைப் பட்டிருக்கிறார்கள். அங்ஙணம் செய்யும்போது அப்பரடிகள் கூறியதைப்போல் அடக்கமாகச் செய்யக் கடமைப் பட்டிருக்கிறார்கள்.

திருவள்ளுவர், நாடாளும் மன்னன் தன்னை வியந்து கொள்ளக்கூடாது, "பணியுமாம் என்றும் பெருமை” என்பது போல இருக்கவேண்டும் என்றார். விண்ணளந்து காட்டி வானை மறைக்கும் கோயில்களின் அடிக்கற்கள் மறைந்து கிடக்கின்றன. வண்ண வண்ண மலர்களையும் இனிய சுவையுடைய கனிகளையும் தரும் மரங்களின் வேர்கள் மண்ணிற்குள் மறைந்து கிடக்கின்றன. ஏ! மனிதனே! நீ என்ன செய்துவிட்டாய்! ஏன் புகழ்வேட்டை ஆடுகிறாய்! உடன் நிற்கும் கூலிப் பட்டாளம் புகழ்வதும் புகழாமா? என்று உளதாகும் சாக்காடு கிடைக்கிறதோ அதுதான் புகழ். தன்னை வியத்தலும், பிறர் வியக்குமாறு செய்து கொள்ளுதலும் நன்றல்ல; புகழல்ல; வாழ்வு நெறியுமல்ல. அடக்கம், பணிவு, கைம்மாறு வேண்டா கடப்பாடு-இவையெல்லாம் வாழும் மானிடத்திற்கு அழகு! அதனால் தான் திருவள்ளுவர்,

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை

(439)

என்றார். இனிய செல்வ, அடுத்து எழுதுகின்றோம்.

இன்ப அன்பு

அடிகளார்